Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவளைக் கொன்றவர்கள் - அகரமுதல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவளைக் கொன்றவர்கள்

அகரமுதல்வன்

main-qimg-eafc5ccf49889600adadd22128e78c

1

ண்டைய எகிப்திய மக்கள் பூனைகளை வணங்கினர் என்கிற வரலாற்றை இயக்கப்பொறுப்பாளர் ஒருவரின் மூலம் அறிந்துகொண்டேன். நிர்வாக மோசடிக் குற்றச்சாட்டில் தண்டனைக்காலம் முடிவடைந்து வெளியே வந்திருந்த அந்த பொறுப்பாளர் பூனைகள் இரண்டினை வளர்க்கத் தொடங்கியிருந்தார். அதன் நிமித்தம் எழுந்த உரையாடலில்தான் எகிப்தில் பூனைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தெய்வ அந்தஸ்து குறித்தெல்லாம் கதைத்தோம். அந்தச் சந்திப்பிற்கு பிறகு பூனைகள் மீதும் ஒரு மரியாதை. எகிப்தியர்களின் கடவுளாவது எங்களை இந்த யுத்தத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்று பூனைகளைப் பார்த்து கும்பிடவெல்லாம் தோன்றியது. ஆனால் எந்தக்கடவுளாலும் காப்பாற்றமுடியாதென்கிற உண்மையை அதே பொறுப்பாளர் சொல்லி அனுப்பியதும் நினைவுக்கு வந்துபோனது.

பூனைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஒத்துவராது. என்னுடைய தம்பிக்கு இழுப்பு நோய் இருந்ததினால் பூனை வளர்ப்பை அம்மா அறவே மறுத்துவந்தாள். அதிலும் “ஒரு பூனை முடியை உதிர்த்தால் ஆயிரம் பிராமாணர்களைக் கொன்ற பாவம்” என்பாள். அவளுக்கிருந்த வைரவர் நம்பிக்கையில் வீட்டில் ஐந்து நாய்கள் வளர்க்கப்பட்டு வந்தனர். தனிச்சமையல், தனித்தட்டு என்று வீட்டில் எவருக்கும் வாய்க்காத வாழ்க்கை, நாய்களுக்கு வாய்த்தன.

பூனைகளின் எகிப்திய வரலாற்றை அம்மாவிற்கு சொன்னேன். அவள் அந்தப் பொறுப்பாளர் மீது நொந்தாள். தொடர்ந்து ”புலி, பூனையை வளர்த்து போர்க்களம் தா” என்று சனத்தை கேட்கப்போகுது போல என்றாள். அம்மாவிற்கு இப்படியான தேசத்துரோக பகிடிகள் எப்போதாவது தோன்றும் அதனை வீட்டிற்கு வருகிற போராளிகளிடமும் சொல்லிச்சிரிப்பாள். அவர்கள் புலிக்கு பூனை வேண்டாம் புலிதான் வேண்டுமென்று சிரிப்பார்கள்.

நான் புலம்பெயர்ந்து வசித்துவரும் நாட்டில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக பூனை இறைச்சிகளை கலப்படம் செய்வதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எனக்கு அந்தப் பொறுப்பாளர் சொன்ன வரலாற்றை யாரிடமாவது சொல்லவேண்டுமென்று தோன்றியது. திருவான்மியூரில் வசித்துவரும் இன்னொரு அகதிக்கு தொடர்பு கொண்டேன். அவர் எந்தநாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் குடிமகனாகும் பாக்கியம் பெற்றவர். கிளிநொச்சியில் உள்ள சாராயக்கடையில் அதிக வருமானத்தை ஏற்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர். புலிகள் இயக்கத்தின் அனுதாபி. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இறுதிக்கட்ட பேரழிவின் பின்னரான காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் தற்போது தேறிவருகிறார். குடிப்பதை சற்றுக்காலமாக குறைத்திருக்கிறார். அவருக்கு அழைத்தேன், எடுக்கவில்லை. நீண்ட யோசனைக்கு பின்னர் பூனையைப் பற்றி கதைக்க சரியான ஆள் நளாயினி என்றே தோன்றியது. அவளைத் தொடர்புகொண்டேன். எடுத்ததும் அழுது கொண்டே கதைத்தாள்.

“லாராவுக்கு உடம்பு சுகமில்லை. ரெண்டு நாளாய் ஒண்டையும் சாப்பிட மாட்டேன் என்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை, அவளுக்கு ஒன்று நடந்தால் என்னால தாங்கமுடியாது”.

நளாயினி நீங்கள் அழுகிறத நிப்பாட்டுங்கோ, இப்ப ஏன் அழுகிறியள். பூனைக்குச் சுகமில்லாட்டி அது தானாய் சரியாகும். ஆனால் நீங்கள் அழுது உங்களுக்கு ஒன்றானால் ஆர் வந்து பார்ப்பினம்” என்று கேட்டேன். அந்தப்பக்கத்தில் அழுகை நின்று போனது. அவளொரு இதய நோயாளி என்பதை அதிகமாக அவளுக்கு நினைவுபடுத்துவது நான்தான். அவள் வளர்க்கும் பூனையைப் பூனை என்று சொன்னாலே கோபப்பட்டு விடுவாள். ”லாரா” என்று சொல்லுங்கோ என்று கெஞ்சுவாள்.

“செய்தி பார்த்தனியலா? ஆட்டிறைச்சிகுள்ள பூனை இறைச்சியை மிக்ஸ் பண்றாங்களாம், உங்கட லாராவ கவனமாய் பார்த்துக்கொள்ளுங்கோ” நகைக்கும் தொனியில் சொன்னேன்.

“போடா விசரா… உனக்கு எப்ப பார்த்தாலும் என்ர லாரா தான் கண்னுக்க குத்தும்” என்று சொல்லிக்கொண்டு தொடர்பை துண்டித்துவிட்டாள்.

2

நளாயினி போராளியாக இருந்தவள். இப்போது திருச்சியில் வசித்துவருகிறாள். கடந்த காலத்தின் அதிர்வுகளால் இதயம் பலவீனமாகியிருந்தது. துணைக்கு யாருமில்லை. நோயாளியாக மருத்துவமனையில் கிடந்த பொழுது அவளைப் பராமரிக்கவே ஆட்கள் இல்லாதிருந்தனர். இறந்தும் போகலாம் – மீளவும் வாய்ப்பிருக்கிறது என மருத்துவர்கள் சொன்னதும் எனக்குள் கிலி தொற்றிக்கொண்டது. நேராத கோவிலில்லை. மதுரை மீனாட்சி அம்மனையும் சமயபுரம் மாரியம்மனையும் வேண்டிக்கொண்டேன். நல்லூர் முருகனை திருச்சியில் இருந்தே பிரார்த்தித்தேன். எப்படியாவது அவள் உயிர் பிழைக்கவேண்டுமென உள்ளுக்குள் வருந்தி அழுதேன். மூன்று நாட்கள் கழித்து மருத்துவர்களின் நீண்ட போராட்டத்திற்கு பயன் கிடைத்தது. நளாயினி அபாயக் கட்டத்திலிருந்து மீண்டிருந்தாள். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்ததன் பின்னரும் அவளுக்கு ஓய்வு தேவைப்பட்டது. நேரத்திற்கு நேரம் மாத்திரையை மட்டும் விழுங்கிக்கொண்டு பட்டினி கிடந்தாள்.

சமைப்பதற்கு கூட இயலாமல் அவளை ஆக்கியிருந்தது. படுக்கையறையிலிருந்து மெது மெதுவாக எழும்பி சமையல் கட்டிற்கு வருவதற்கே நெஞ்சில் ரணம் படரும். பெரும்பாலும் எல்லா மரக்கறிகளையும் ஒன்றாகப்போட்டு குழைசோற்றை சமைப்பாள். அவள் பார்த்துவந்த வேலையை தொடரமுடியாத காரணத்தினால் மருந்துகளுக்கும் பணமில்லாமல் போயிருந்தது. புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் சிலரின் கூட்டு முயற்சியினால் அவளுக்கு வழங்கப்பட்ட ஒரு தொகை இந்திய ரூபாய்கள் பெரிய உதவியாக இருந்தன. ஆனாலும் அந்த உதவி தொடர்ச்சியாக கிடைக்கவில்லை. அவளுக்கு வழங்கப்பட்ட தொகைய விடவும் அதிகமான எண்ணிக்கையிலான இணையத்தளங்களில் அந்தச் செய்தி வெளியானது.

நளாயினிக்கு உடம்பு சுகமாகி மீண்டு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு மேலாகின. திருச்சியில் வசித்து வரும் இன்னொரு ஈழத்தமிழ் குடும்பம் அவளுக்கு கொஞ்சம் உதவியாக இருந்த போதிலும் யாருக்கும் கஷ்டத்தை வழங்கிவிடக் கூடாது என்பதால் எதனையும் வலிந்து கேட்கமாட்டாள். எப்போதாவது அவர்கள் தோசையும் சம்பலும் கொண்டு வந்து கொடுப்பார்கள். ஆனால் இந்தச் சாப்பாடு தாருங்கள் என்று அவள் கேட்கவில்லை. இப்போதும் இரவு நேரங்களில் மூச்சுத்திணறுவதாக சொல்லிக்கொள்வாள். ஒவ்வொரு நாள் காலையிலும் அழைத்துக் கதைப்பதை ஒரு கடமையாக கொண்டுள்ளேன். சில காலைகளில் அவளே தொடர்பு கொண்டு “உயிரோடு இருக்கிறேன் சேர்” என்று சொல்லிவிட்டு சிரிப்பதும் நடக்கும்.

“ஆயுதங்களுக்கு நான் என்றுமே அஞ்சியதில்லை. ஆனால் இந்தத் தனிமையை என்னால் சகிக்கமுடியவில்லை. வெந்து வெந்து விரியும் என்னை பதைபதைப்புக்குள் புதைக்கிறது. யாருக்கும் வேண்டாத என்னை ஏன், தனிமை துரத்துகிறது. நிரை நிரையாக அடுக்கப்பட்ட பிணங்களின் நினைவுகளாயினும் பரவாயில்லை. இந்தப் பொழுதில் மூண்டெழும்பும் தனிமைக்குத் தான் முகங்கொடுக்க முடியவில்லை”  என்று என்னிடம் அழுது குழறினாள்.

ஒரு பறவையைப் போல வாழ்க்கை காணாமல் போயிற்று. யாரிடம் முறையிடுவது. என்ன ஆறுதலிருக்கிறது. அந்தரிப்பான காலத்தில் எதற்கும் கதியில்லை என்று சமாதானம் சொன்னேன்.

மாசத்தில் இரண்டு தடவைகளாவது நளாயினியைப் பார்ப்பதற்காக திருச்சிக்கு சென்று வருவேன். அவளைப் பார்த்துவிட்டு திரும்புகையில் மனத்திடை விரியும் அரூபமான பாரம் ஆறாத ஆறாய் பெருக்கெடுத்து ஓடும். அந்த ஆற்றில் அன்றைக்கு அலைந்து அலைந்து அற்றுப்போகும் கேவலாக அழுதுகொண்டே பேருந்தில் ஏறினேன். நளாயினிக்கு திருமணம் செய்யவேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

அவளுடைய புகைப்படங்களை நிறையத் திருமணத்தரகர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

வளசரவாக்கத்தில் இருக்கும் பிரபலத் திருமணத்தரகர் யோகநாதனிடம் நளாயினியின் புகைப்படத்தையும் குறிப்பையும் கொடுத்தேன். வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டுமென்று சொன்னேன். பெம்பிளை என்ன ஆக்கள்,“வெ”னாவோ? அல்லது வேறையோ என்று கேட்டார். இந்த இழிவின் இரைச்சலை பொறுத்துக்கொண்டு அவா “போராளி” கடைசிநாள் மட்டும் சண்டை பிடிச்ச ஆள். நீங்கள் இதை மட்டும் சொல்லுங்கோ என்றேன். யோகநாதன் யாழ்ப்பாண வைதீகவாதி. இந்தத் தொழிலில் கறாரான ஆள். நிறையப்பேருக்கு திருமணத்தை முற்றாக்கி வைத்த ராசியான புரோக்கர். யோகநாதன் மூலமாக நளாயினிக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்து திருமணம் நடுக்குமென நம்பினேன். அது நடந்தால் பழனி கோவிலுக்கு மொட்டை அடிப்பதாக நல்லூர் முருகனிடம் நேர்த்தி வைத்துக்கொண்டேன்.

“எனக்கொரு பூனை வாங்கித் தாவன்” என்று நளாயினி முகநூலில் தகவல் அனுப்பியிருந்தாள். அதனைப் படித்ததும் கதைக்கவில்லை, நேரம் இரவு ஒருமணியாக இருந்தது. காலையில் எழுந்ததும் அவளே அழைத்து “உயிரோடு இருக்கிறேன் சேர்” என்று சொல்லிவிட்டு “பூனை வாங்கித் தா” என்று கேட்டாள். இதென்ன திடீரென பூனை ஆசை என்று கேட்டேன். வன்னியில் இருக்கும் போது இயக்க முகாமில் தானொரு பூனையை வளர்த்து வந்ததாகவும் அந்தப் பூனை இப்போது தனது கனவில் வருவதாகவும் சொன்னாள். நான் இடைமறித்தேன். கனவில் வரும் பூனை வன்னிப்பூனை தான் என்பதை எப்படி உறுதியாக சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன்.

“அவள் மியாவ் மியாவ் என்று கத்தாமல் எனது பெயரைச் சொல்லி அழைத்தாள். நீ நம்பமாட்டாய். மஞ்சளும் வெள்ளையும் கலந்த நிறத்திலிருந்த பூனையை நான் தூக்கிவளர்த்தேன். பிறந்து சிலநாட்களே ஆன அந்தப்பூனையை கிளிநொச்சியில் இருந்த அரசியல் பிரிவினரின் முகாமிலிருந்து என்னுடைய முகாமிற்கு தூக்கிக்கொண்டு போய் முதலில் அதற்கு பெயர் சூட்டினேன். இசைநிலா. வீரச்சாவடைந்த எனது நெருக்கமான தோழியின் பெயரை பூனைக்கு சூட்டியதும் பொறுப்பாளர் என்னை நொந்துகொண்டார். ஆனாலும் நான் இசைநிலா என்றே அழைத்தேன். என்னுடைய தலையணையில் நித்திரையாகவும் என்னுடைய கோப்பையில் உண்ணவும் அது பழக்கமான நாள் வரைக்கும் சிறிய உருண்டைகளாக சோற்றை தீத்திவிட்டேன். என்னை “பூனை விசரி” என ஏனைய சிலபோராளிகள் தமக்குள் கிசுகிசுக்குமளவிற்கு நெருக்கமாகியிருந்தோம். அவளுடைய எந்த மியாவ்வில் என்னுடைய பெயர் இருக்கிறதென என்னால் கண்டுபிடிக்க முடியும். நேற்றைக்கு கனவில் சொன்ன மியாவ்-இல் நானிருந்தேன். என்னுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி அழைத்துக்கொண்டே இருந்தாள் இசைநிலா. நான் சண்டைக்கும் போகும் போது அவளை இன்னொரு பிள்ளையிடம் கொடுத்துவிட்டு போனேன். அவளும் எனக்குப் பின்னரான அணியோடு வேறொரு களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தாள். அள்ளுண்டு போன கனவினைப் போல நாம் தொலைத்தவை ஏராளம். சவப்பெட்டிகள் இல்லாமல் மனிதர்கள் புதையுண்ட நிலத்தில் பூனைகளும் இறந்து நாறின. பசுக்களும் சிதைந்தன. நாய்களும் புழுத்தன. ஆயுதங்களின் ஊளை எல்லாவற்றையும் தின்று செரித்துவிட்டது” என்றாள்.  அதன்பின்னர் எங்களுக்குள் உருவான அமைதி எங்கிருந்து தொய்ந்து இறங்கியது என்று தெரியவில்லை.  மீண்டும் கேட்டாள்.

“நீ எனக்கொரு பூனை வாங்கித் தா”.

நான் சரியென்று சொல்லி தொடர்பை துண்டித்தேன்.

3

உள்ளூர் நண்பரொருவரிடம் பூனை வாங்கவேண்டுமென்று சொன்னேன். நடுத்தரமான விலையில் இருந்தால் போதுமென்றேன். நானும் நண்பரும் பூனைகளை விற்பனை செய்யும் வீடொன்றிற்கு சென்றோம். அங்கே நிறைய வகையான நாய்களும், பூனைகளும் இருந்தன. அந்த வீட்டில் எப்படி மனிதர்கள் வசிக்கிறார்கள் என்ற குழப்பம் வேறு. விலங்குகளின் நெடில் நாற்றம். ஒரு வகை நாய் குரைக்கையில் அதன் எச்சில் எம்மை நோக்கி பறக்கிறது. அவர் வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு போய் கூண்டிற்குள்ளிருக்கும் பூனைகளை காண்பித்தார். ஒவ்வொரு பூனைக்கும் ஆயிரக்கணக்கில் விலை இருந்தது. அடுத்தவாரத்தில் வருகிறோம் என சொல்லிவிட்டு வெளியேறினோம். உங்களுக்கு ஒரு நாட்டுப் பூனைக்குட்டியை கொண்டு வந்து சேர்க்கிறேன் என நண்பர் குடுத்த உத்தரவாதம் எந்தப்பிசகும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. அதனை திருச்சிக்கு சென்று நளாயினியிடம் கொடுத்தேன். இந்தப் பெண்பூனை சாம்பல் நிறத்தில் இருந்தது. புருவங்களில் மெல்லிய துளியில் வெள்ளைநிறமிருந்தது. அவள் அந்தப்பூனையை தனது மடியில் போட்டுவைத்துக் கொண்டு “லாரா” என்று அழைத்தாள். இதென்ன பெயர் லாரா என்று கேட்டதும், மால்கம் எக்ஸின் தோழி ஒருத்தியின் பெயர் என்றாள். புரோக்கர்மாரிடம் புகைப்படமும் குறிப்பும் கொடுத்ததன் பிறகு ஏதேனும் தகவல் வந்ததா என்று கேட்டாள். இதுவரை எதுவுமில்லை ஆனால் கண்டிப்பாக வருமென்று சொன்னேன். நளாயினி அதனைப் பொருட்படுத்தாமல் பூனையைத் தடவிக்குடுத்தாள். கண்கள் கலங்கினாள். கண்ணீரை துடைத்துக்கொண்டு பூனையைப் போல மியாவ் என்றாள். அத்தனை சின்னஞ்சிறிய லாரா உடனடியாக மியாவ் என்று கத்தி நளாயினியின் முகத்தை தனது நகம் வளராத கைகளால் தடவத்தொடங்கிற்று.

புரோக்கர் யோகநாதனிடம் இருந்து தொடர்பு வந்தது. எடுத்துக் கதைத்தேன்.

“தம்பி சுவிஸ்ல இருக்கிற ஒரு முல்லைத்தீவு பெடியனோட குறிப்பு நீங்கள் தந்ததுக்கு பொருந்துது. கேக்கிறன் எண்டு குறை நினைக்கவேண்டாம். இந்தப் பிள்ளை என்ன ஆக்கள் என்று சொன்னியள் என்றால் எனக்கு வசதியாய் இருக்கும். நீங்கள் போராளி, இயக்கம், தியாகி, தேசத்துரோகி, மாமனிதர், தோழர் இப்பிடி என்னத்த சொன்னாலும் கலியாண விஷயத்தில் சாதி முக்கியமாயிருக்கு, வெளிநாட்டில இருக்கிறவன் அதைத்தான் கேக்கிறான். நான் என்ன செய்யட்டும். என்னைக் கோபிக்காத தம்பி ” என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.

நளாயினி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். லாரா தனது வாலை அசைத்தவாறு பாலினை குடித்துக்கொண்டிருந்தாள். நளாயினிக்குச் சொல்லாமலே சென்னைக்கு வந்தேன். அவள் அழைத்தும் எடுத்துக் கதைக்க இயலவில்லை. அவமானம் அழுத்தி உரசிக்கொண்டிருந்தது. மூச்சு இறுகியது. போராளிக்கும் சாதி வேண்டுமென்கிற அந்தக் குரலை ஒரு துப்பாக்கி விசையினால் சம்ஹாரம் செய்யவேண்டுமாற் போலிருந்தது. அந்த மனநோயாளிகளை பின்மண்டையில் சம்மட்டியால் அடிக்கவேண்டுமென்று நெஞ்சம் கொதித்தது.

நேராக யோகநாதனை சந்தித்தேன்.

நான் என்ன செய்வது தம்பி யாரென்றாலும் சாதி கேட்பார்கள் என்று ஒரே பதிலாக சொல்லிமுடித்தார்.

“நான் சொன்னான் தானே, போராளியா இருந்த என்னை மாதிரிப் பிள்ளையளை கலியாணம் செய்ய ஆர் தான் முன்னுக்கு வருவினம். வெளிநாட்டில நானும் இயக்கமென்று சொல்லி புகலிடக்கோரிக்கையை முன்வைத்து எல்லா வசதிகளையும் பெற்றுக்கொண்டு எல்லாரும் அவரவர் சுகவாழ்க்கை வாழுவினம். எல்லாரும் இயக்கத்தோட துவக்குக்குத் தான் பயந்துபோய் நடிச்சவே. இப்ப எல்லா வெறியும் தலைநீட்டி படமெடுக்குது. நீ இனிமேல் எனக்கு கலியாணம் பார்க்கிறதை கைவிடு. இரந்து பெறுகிற எதையும் என்னால ஏற்கமுடியாது” என்றாள் நளாயினி.

நிலத்தில் விதைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் வெட்கித்தலை குனிந்து பூமிக்குள் இன்னும் ஆழமாக உட்சென்று தமது உடல்களை மறைத்துக் கொள்ளும் ரூபம் எனக்குள் தோன்றி நிலைத்து மெதுமெதுவாய் மறைந்தது.

தமிழனின் தாகம் சாதியே தடாகம் என்று கூக்கிரலிட்டு கூவினேன்.

4

தொலைக்காட்சியில் பூனை இறைச்சிக் கடையை நடத்திவரும் சிலரை காவல்துறை கைதுசெய்திருக்கும் செய்திகள் ஓடிய வண்ணமிருந்தன. கோபத்தில் தொடர்பினை துண்டித்த நளாயினி மீண்டும் அழைத்தாள். மன்னித்துக்கொள் நீ லாராவைப் பற்றி இப்படிச் சொன்னதால் கோபித்து விட்டேன் என்றாள். அதெல்லாம் பரவாயில்லை. உங்களுக்கு இந்தப் பூனை பற்றிய வரலாறு தெரியுமா? அதனைச் சொல்லத்தான் உண்மையிலேயே எடுத்தேன்.

பூனை பற்றிய வரலாறா? எந்தப் பூனை பற்றியது?

பூனை இனம் பற்றிய ஒரு வரலாறு.

இல்லையே என்ன?

பண்டைய எகிப்தியர்கள் பூனையை தெய்வமாக கருதினராம். பெண்ணின் உடலோடு பூனையின் தலைகொண்ட உருவத்தினை அவர்கள் வழிபட்டு இருக்கிறார்கள். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பூனைகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் எகிப்தில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பூனைகளுக்கு தனிமை தான் பிடிக்குமென்றும் சொல்கிறார்கள். வன்னியில ஒரு பூனையை தூக்கி வளர்த்த புலிக்கு பூனையோட இந்த வரலாறு தெரியாமலிருப்பது ஆச்சரியம் என்றேன். அந்தப் பகிடியை விளங்கிக்கொண்டு நளாயினி சிரித்தாள். பிறகு நிறைய விடயங்களைப் பற்றி கதைத்து முடித்துவிட்டு தொடர்பை துண்டித்தோம். அடுத்தநாள் காலையில் எழுந்ததும் நளாயினியின் முகநூலில் இப்படியொரு பதிவைப் பார்த்தேன்.

5

நேற்றைக்கு ஒரு நண்பனிடம் கதைத்துக்கொண்டிருந்தேன். பூனைகள் பற்றிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டான். எந்தப் பூனைகள் பற்றி என்றேன். பூனை இனம் பற்றியது என்றான். பண்டைய எகிப்தில் பூனைகள் தெய்வங்களாக வழிபடப்பட்டிருப்பதாகவும், வீட்டில் பூனைகள் இறந்தால் ஆண்கள் தங்கள் புருவத்தை மழித்து, துக்கம் அனுசரித்தனர் எனவும் வரலாற்றைச் சொன்னான். தமிழீழ போராளியாக இருந்ததைப் பார்க்கிலும் ஒரு எகிப்திய பூனையாக ஆகியிருக்கலாம் என இந்தப் பிறவியை கடிந்தேன். அல்லற்பட்டு இரத்தச்சேற்றில் நின்று களமாடி போராடியவர்களை திருமணம் செய்துகொள்ள சாதி கேட்கும் வீரவரலாற்றின் புலம்பெயர் கொடிகளுக்கு திசையற்ற திசையிருந்து கண்ணீரால் சபிக்கிறேன். நீங்கள் நூற்றாண்டுக்கும் நூற்றாண்டு அகதியாகவே அலைவீர்! உங்கள் புருவங்களை மழித்து துக்கம் அனுசரியுங்கள். உங்கள் இழிமனத்தை பூமிக்கும் தெரியாதபடி எரியூட்டி புதையுங்கள். இல்லையேல் எஞ்சியிருக்கும் ஒருபிடி மண்ணுமற்று போய்விடுவோம்.

நான் இக்கணத்திலிருந்து பண்டைய எகிப்திய பூனை.

6

லாரா – இசைநிலாவைப் போல மியாவ்களில் நளாயினியை அழைத்துக்கொண்டே இருந்தாள். எந்த மியாவ்களுக்கும் கண்விழிக்க முடியாதபடி அவள் படுக்கையில் கிடந்தாள். தத்தளிக்கும் தீராத பாடலைப் போல முற்றுப்பெற்றாள். அவள் இறுதி மூச்சின் சொல் வரலாற்றில் கலந்துவிட்டது.

போர்த்துவதற்கு கொடியுமில்லை. வான்நோக்கி பாய தோட்டாக்களும் இல்லை. மேனியில் போட்டு அழ ஒருபிடி சொந்தமண்ணும் இல்லை.

வெட்கமாயிருக்கிறது நளா!

வீரவணக்கம்.
 

https://akaramuthalvan.com/?p=171

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் நளாயினி😒

  • கருத்துக்கள உறவுகள்

நளாயினி திருமணமாகாமலே இறந்தும் போனாள் நல்லாயிருக்கு கதை........!  👍

நன்றி கிருபன்.......!

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2023 at 16:31, கிருபன் said:

நான் என்ன செய்வது தம்பி யாரென்றாலும் சாதி கேட்பார்கள் என்று ஒரே பதிலாக சொல்லிமுடித்தார்.

“நான் சொன்னான் தானே, போராளியா இருந்த என்னை மாதிரிப் பிள்ளையளை கலியாணம் செய்ய ஆர் தான் முன்னுக்கு வருவினம். வெளிநாட்டில நானும் இயக்கமென்று சொல்லி புகலிடக்கோரிக்கையை முன்வைத்து எல்லா வசதிகளையும் பெற்றுக்கொண்டு எல்லாரும் அவரவர் சுகவாழ்க்கை வாழுவினம். எல்லாரும் இயக்கத்தோட துவக்குக்குத் தான் பயந்துபோய் நடிச்சவே. இப்ப எல்லா வெறியும் தலைநீட்டி படமெடுக்குது. நீ இனிமேல் எனக்கு கலியாணம் பார்க்கிறதை கைவிடு. இரந்து பெறுகிற எதையும் என்னால ஏற்கமுடியாது” என்றாள் நளாயினி.

இணைப்புக்கு நன்றி,
இன்னும் எத்தனை நளாயினிகள் இருக்கிறார்களோ..... சில பகுதிகள் மனவலியேற்றபடுத்தும் உண்மை. இந்த இனத்துக்காகவா...

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்தில் இருந்தாலும் அவர்களும் தமிழர் தானே!...தமிழர்கள் என்றால் சாதி தானே ...பேசாமல் தன்ட சாதியை சொல்லி கல்யாணம் கட்டாமல் அநியாயமாய் இறந்து போய் விட்டார் ...இயக்கம் இருக்கும் வரை சனம் பயத்தில் சாதி பார்ப்பதை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள் 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.