Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேட்டிமைவாதமா?

jeyamohanDecember 26, 2023

jeya.jpgஅன்புள்ள ஜெ

உங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் சொல் ’மேட்டிமைவாதம்’ என்பது. அதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் என்னைப்போன்ற சாமானியர்களுக்கே இந்தப்பிரச்சினை உள்ளது. சமூகத்தையோ அல்லது சுற்றியிருக்கும் நண்பர்களையோ எதாவது குறைசொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்கிறார்கள். வரும் ஜனவரி 1 அன்று மெரினாவில் குடித்துவிட்டு பைக் ஓட்டி கூச்சல்போட திட்டம்போட்டு பட்ஜெட் போடுகிறார்கள். அது ஒரு வகை கேனத்தனம் என்று சொன்னால் உடனே மேட்டிமைவாதம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்பவர்கள் ஒன்றரை லட்சம் ரூ கொடுத்து ஐஃபோன் வாங்குபவர்கள். முப்பதாயிரம் ரூபாய்க்கு ஷூ வாங்குபவர்கள். ஆனால் ஒரு புத்தகத்தை கையில் வைத்திருந்தால் மேட்டிமைவாதம் என்கிறார்கள். ஆலோசனை சொல்ல வருகிறார்கள். இவர்களைப்பற்றி உங்களுக்குச் சலிப்பாக இல்லையா?

பிரதீப்ராஜ்

அன்புள்ள பிரதீப்,

அண்மையில் பலபேர் இதைச்சுட்டி ‘ஆலோசனைகள்’ ‘வழிகாட்டுதல்கள்’ எழுதியிருந்தனர். இங்கே சமூகவலைத்தளங்களில் பேசப்படும் ஒவ்வொன்றும் நான் அவர்களைப் பற்றி என்ன சொல்கிறேனோ அதற்கான நேரடியான சான்றுகள்.

இலக்கியம், கலை என்பது குறித்த எந்த அறிதலுமற்ற ஒரு சூழல் இங்கே இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். அவற்றின் இடம் பற்றி, இலக்கியவாதிகள் அல்லது கலைஞர்களின் வாழ்க்கை பற்றி அடிப்படைப் புரிதல்கூட இல்லாத பாமரத்தனம். பாமரர்களாக இருக்கிறோம் என்பதுகூட தெரியாது, பாமரராக இருப்பதில் பெருமையும் உள்ளது. அந்த பாமரத்தனத்தையே எதிர்வினைகளாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் எதையும் நிரூபிக்கவே வேண்டியதில்லை. எழுதினால்போதும்,  நம் பொதுப்புத்தியினரின் எதிர்வினைகளே நான் சொன்னவற்றுக்கான நிரூபணங்களாக எழுந்து வரும்.

அண்மையில் சாகித்ய அக்காதமி விருது குறித்து ஒரு பேச்சு உருவானது. அதில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். ‘வெறும் ரெண்டு லட்சம் ரூபாய். அதுக்கு இவ்ளவு சண்டை’ இதுதான் பாமரத்தனம் என்பது. இவர்களுக்கு நோபல் பரிசுகூட அதிலுள்ள தொகை மட்டுமே. இவர்களுக்கு இவ்வுலகில் தெரிந்த ஒரே ‘மதிப்பு’ என்பது பணம், அதன் விளைவான அதிகாரம் மட்டுமே. இப்படி பேசுபவர்களில் பலர் நம் சூழலில் அளிக்கப்படும் ‘உயர்’கல்வி கற்றவர்கள். பலர் பொறுப்பான பணிகளில் இருப்பவர்கள். இலக்கியம் வாசிக்கும் நாம் இவர்களைத்தான் எதிர்கொள்கிறோம். இந்தப் புரிதல் நம்மிடம் இருக்கவேண்டும்.

(சுந்தர ராமசாமி எழுதினார். மேரி க்யூரி நோபல் பரிசு பெற்றபோது ‘என்ன பிரைஸ் வாங்கினா என்ன, அறுத்துக்கட்டுற சாதிதானே?’ என்று ஓர் ஐயர் சொன்னாராம். அந்தக்கால பொதுப்புத்தி. இப்போது பேசும் விதம் மட்டுமே மாறியிருக்கிறது. மனநிலை அதேதான்)

இச்சூழலை வேறு எப்படி எதிர்கொள்ளமுடியும்? அவர்களுக்கு கலையிலக்கியம், சிந்தனை, தத்துவம் எதுவும் எளியமுறையில்கூட அறிமுகமில்லை. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு இங்கே பிரச்சாரம் செய்யப்படும் மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்கள் அறிந்தவை. கட்சியரசியல், நுகர்வுப்பொருட்கள் , கேளிக்கை. அவை அவர்கள் அறிந்துகொண்டவை அல்ல, அவர்களின் மூளைக்குள் திணிக்கப்பட்டவை. வேறு எதையும் அறியும் ஆர்வமோ, அறிவுத்திறனோ இல்லை.

அதேசமயம் அறியாமை அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கை உள்ளது. ஒரு பத்தி எழுதவோ ஒரு பக்கம் படிக்கவோ தெரியாதவர்கள் எழுத்தாளர்களுக்கு ஆலோசனை சொல்வதை, வழிகாட்டுவதை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். அந்த வெட்கமற்ற கீழ்மையை சந்திப்பது எப்படி என்பது கலையிலக்கியங்களில், அறிவியக்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகப்பெரிய சவால்.

இதை என்னிடம் சொல்லாதவர்களே இல்லை. அண்மையில் ஒருவர், இசைத்துறையில் வளர்ந்து வருபவர், சொல்லிச்சொல்லி வருந்தினார். அவருடைய கனவு, முயற்சி எதுவுமே நம் சூழலுக்கு ஒரு பொருட்டல்ல. இசையென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் சொல்லும் ‘வாழ்க்கை ஆலோசனை’கள்தான் தன் மிகப்பெரிய பிரச்சினை என்றார்.

‘யாரைப்பாத்தாலும் பயமா இருக்கு சார்’ என்றார். ’நான் ஜனங்களை ஃபேஸ் பண்றதே இல்லை…பொழைக்கிற வழியப்பாருன்னு ஆரம்பிச்சிருவாங்க’

நான் அவரிடம் ’ஜெயகாந்தன் சொன்னதுதான் ஒரே வழி’ என்றேன். ‘அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்வது’ ஓவியர்கள், கலைஞர்கள் அனைவரும் இங்கே சந்திக்கும் சிக்கல் இது.

இதே சிக்கல் இங்கே சமூகப்பணியாளர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு பிரச்சினையே இரண்டுவகை ஆலோசனைகள்தான். ஒன்று, சமூகப்பணியை எல்லாம் நிறுத்திவிட்டு எப்படி நல்ல  உலகியல்வாழ்க்கையை வாழ்வது என்னும் ஆலோசனை. இரண்டு,  சமூகப்பணி என்றால் என்னவென்றே தெரியாத கும்பல்கள் சமூகப்பணியை எப்படிச் செய்வது என்று அளிக்கும் ஆலோசனைகள்.

ஆச்சரியமென்னவென்றால், இங்கே ஏதேனும் துறையில் ஆய்வுசெய்பவர்களுக்கேகூட இன்று இப்பிரச்சினை உள்ளது. அறிவியலிலோ பிற துறைகளொலோ முனைவர் பட்டம் பெற முப்பது வயது கடந்துவிடும். ‘தம்பி என்ன செய்றீங்க? ஏதாவது வேலைக்கு போலாம்ல? இந்தக்காலத்திலே ரிசர்ச்சுக்கெல்லாம் என்ன மதிப்பு? நம்ம பையன் இப்பவே ஒரு லெச்சம் சம்பாரிக்கிறான்’ என்ற வார்த்தைதான் நாலாபக்கமிருந்தும் வரும். அந்த ’ஒரு லட்சம் வாங்கும் வெற்றிபெற்ற இளைஞன்’ ஆப்பிள் கணிப்பொறியை நோண்டியபடி ‘லைஃப்ல ஜாலியா இருக்கணும் புரோ’ என்பான். ஆய்வுமாணவன் கூனிக்குறுகி புன்னகைக்கவேண்டும்.

சமூகப்பணியாளர் இந்த ஆலோசனைக் கும்பலை ஓர் எளிய பணிவுப்பாவனையில் கடந்து செல்வார். கூடவே மனதுக்குள் சிரித்துக் கொள்வார். “ஆமாங்ணா..அப்டியே செய்றேங்ணா’ என அவர்கள் பவ்யமாகச் சொல்வதைக் கண்டு நானும் கூட நின்றே சிரித்திருக்கிறேன். ஆய்வு செய்பவர்கூட இவ்வகையில் இவர்களை கடந்து செல்லலாம். அறிவியக்கவாதி கடந்து செல்லமுடியாது. ஏனென்றால் அவன் உரையாடியே ஆகவேண்டியவன். அவன் என்ன நிலைபாடு எடுக்கவேண்டும்?

அதைத்தான் நான் சொல்கிறேன், ’நிமிர்வு’. நிமிர்வினூடாக அன்றி இந்த கும்பலைச் சமாளிக்க முடியாது. நிமிர்வு சற்றுக் குறைந்தால்கூட உங்கள் தன்னம்பிக்கையை அழித்து , உங்களை மீளாச்சோர்வில் தள்ளி, செயலற்றவர்கள் ஆக்கிவிடுவார்கள். அல்லது உங்களை எரிச்சலூட்டி எரிச்சலூட்டி எதிர்மறை மனநிலை கொண்டவர்கள் ஆக்கிவிடுவார்கள். இரண்டுமே அறிவியக்கச் செயல்பாடுகளுக்கு எதிரான உளநிலைகள்.

இந்த அற்பர்களின் பாவனைகள் ஏராளமானவை. ‘சமூகத்துக்கு பயனுள்ள மக்கள் பிரச்சினைகளை எழுதணும் சார்’ என்பது தொடக்கம். (சமூகத்திற்கு மிகமிகப் பயனுள்ளவராக வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர் என்பது அவருடைய தோரணை). அந்தப்பேச்சு அப்படியே நீண்டால் ‘எழுதி என்ன ஆகப்போகுது? யார் சார் இப்பலாம் படிக்கிறாங்க? ஒரு நாலுபேருக்கு நல்லது செய்தா அதனாலே பிரயோசனம் உண்டு’ என்ற இடத்துக்கு வந்துசேரும். (அப்படி நாலுபேருக்கு அவர் என்ன செய்கிறார் என்று கேட்கக்கூடாது. அவர் செய்வது முகநூலில் அரசியல், சாதிச்சண்டை ’சவுண்டு’ விடுவதுதான்)

அடுத்தது ‘எழுதுறது எல்லாம் சரிதான், நல்ல மனுசனா இருக்கணும் சார்’ (அதாவது அதைச் சொல்பவர் ஒரு அதிதூயோன்) அதன் முதிர்வு நிலை ‘யாரும் எதுவும் செஞ்சு ஒண்ணும் ஆகப்போறதில்லை. எல்லா பேரும் திருடன் சார்” . முத்தாய்ப்பு வரி “நாம நம்ம பொழைப்பப் பாப்பம்” ஆக, என்னைப்போல நீயும் வெந்ததைத் தின்று, விடியலில் அதை கழித்து, ஊடகம் ஊட்டுவதை மூளைக்குள் தேக்கி, அவற்றை பேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் ரீல்ஸிலும் அதைக் கழித்து வைத்து வாழ் என்பது சாராம்சம்.

இந்தக் கும்பலில் இருந்து முடிந்தவரை விலகி, தனித்து நிலைகொண்டாலொழிய இங்கே எந்தத்துறையிலும் எதையும் செய்துவிடமுடியாது. அதற்கான வழி என்பது தன்னைப் பற்றிய பெருமிதம். தன் செயல்பற்றிய நம்பிக்கை. தான் காலத்தின் குழந்தை என்னும் புரிதல். சமூகப்பெருக்கில் ஒருவனல்ல, அதை நடத்திச்செல்லும் சிலரில் ஒருவன் என்னும் தற்தெளிவு. அதையே நிமிர்வு என்று சொல்கிறேன்.

அதை ஏன் மேட்டிமைவாதம் என்கிறார்கள்? ஏனென்றால் அது இந்தப் பாமரர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவர்களை விமர்சனமும் செய்கிறது. ஆகவே வேறு வழியே இல்லை. பாமரன் எதையேனும் சொல்லி அறிவியக்கத்தை, கலையை நிராகரித்தே ஆகவேண்டும். மூர்க்கமான நிராகரிப்பு, அல்லது கேலிதான் அவன் அறிந்த வழிகள். அதற்கு அவன் கண்டடையும் சில நிரந்தரமான வரிகள் உண்டு. பழைய ஆட்கள் ‘இதனால் பணலாபம் உண்டா’ என்பார்கள். அதே மனநிலை கொண்டவர்கள் சமூகவலைத்தளங்களில் ‘இதனாலே சமூகத்துக்கு என்ன பயன்?’ என்பார்கள். இரண்டும் ஒரே கேள்விதான்.

எந்த பாமரனுக்கும் ஒன்று உள்ளூரத் தெரியும், அவன் வாழ்க்கை சாதாரணமானது, சாதாரணமான அந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல அவனுக்கு அறிவாற்றலோ துணிவோ இல்லை. ஆனால் அந்த பாமர வாழ்க்கை அவனுக்குச் சலிப்பையும் அளிக்கும். அவனுக்குத் தெரியும், அறிவியக்கத்திலோ கலையிலக்கியத்திலோ வாழ்பவர்களின் வாழ்க்கை பெரியது என்று. ஆகவேதான் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் பாமரனை தாழ்வுணர்ச்சி அடையச்செய்கிறான். அந்த தாழ்வுணர்ச்சியே எரிச்சலை மூட்டுகிறது பாமரனுக்கு.

அறிவியக்கவாதி அல்லது கலைஞன் ஒன்றுமே செய்யவேண்டாம், சும்மா இருந்தாலே பாமரனை அவன் கூச்சம் கொள்ளச் செய்வான். ஆகவே பாமரனால் இகழப்படுவான். அதை அறிவியக்கவாதி அல்லது கலைஞன் எதிர்கொண்டே ஆகவேண்டும். நான் சொல்வது எழுத்தாளனையோ, கலைஞனையோ, ஆய்வாளனையோ, சமூகப்பணியாளனையோ மட்டும் அல்ல. நம் சூழலில் சாதாரணமாகப் புத்தகம் படிப்பவன், ஒரு நல்ல சினிமாவை தேடிப்பார்ப்பவன் கூட இதைச் சந்தித்தே ஆகவேண்டும். அதற்கான வழியே நிமிர்வு.

ஆக, நான் மிகமிக திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். நான் முன்வைப்பது ஒருவகை மேட்டிமைவாதத்தையே. இன்று நம் சூழலில் ஓர் அறிவியக்கவாதி அல்லது கலைஞன் நிலைகொள்ள அந்த மேட்டிமையுணர்வு இன்றியமையாதது. இன்று தமிழில் எத்தனை வசைகளைப் பெற்றுக்கொண்டாலும் பாமரனை அவன் பாமரன் என்று சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். அது ஒரு சமூகக் கடமை.

அதற்குப் பதிலாக ஜனநாயகம், மனிதசமத்துவம் என்றெல்லாம் பசப்புவார்கள் அதே பாமரர். ஜனநாயகமும் மனிதசமத்துவமும் உரிமைகளில் மட்டுமே. தகுதியில் அல்ல என்று சொல்லியாகவேண்டும். ஒரு சிறுபகுதியினரேனும் தாங்கள் பாமரர்களாகவே இந்த சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறோம் என உணர்ந்தால், ஏதேனும் வகையில் மெலே செல்லமுயன்றால் அதுவே நம் சாதனை.

சென்ற முப்பதாண்டுகளாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிவருவது கலையிலக்கியமும், சிந்தனையும் , சமூகப்பணியும்தான் ஒரு சூழலில் முதன்மையான செயல்பாடுகள் என. பிற பணிகள் அனைத்துக்கும் மேலாக அவற்றுக்கு ஓர் இடம் உண்டு என.  அந்த மதிப்பும், அவற்றின் மீதான நம்பிக்கையும் கொண்ட சமூகங்களே வென்று வாழும். அந்த நம்பிக்கையும் மதிப்பும் நம் சமூகத்தில் இன்றில்லை, அவை உருவாக வேண்டும் என. நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அதையே எழுதியிருக்கிறேன்.

இங்கே ஏதேனும் ஒரு தருணம் அமைந்தால் உடனடியாக அறிவியக்கவாதியை கும்பலாகக் கூடி வசைபாடி கும்மியடித்து மகிழ எத்தனைபேர் கூடுகிறார்கள் என்று பாருங்கள். எனக்கு எதிராக அப்படி கூடுவதற்கு என் நிமிர்வும், என் கருத்துக்களும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள் என்றால்; மிகப்பணிவான, அரசியலே பேசாத, அன்பையே முன்வைக்கும் அறிவியக்கவாதிகள்கூட தருணம் கிடைத்தால் இதே கும்பலால் இதே போல கும்பல்கூடி வசைபாடப்பட்டிருப்பதை எப்படி விளக்குவீர்கள்? இங்கே வசைபாடப்பட அறிவியக்கச் செயல்பாடு ஒன்றே போதும், வேறொன்றும் தேவையில்லை.

நம் சூழலில் கலைஞனிடம், அல்லது அறிவியக்கவாதியிடம் ஒருபோதும் தாழ்வும் பணிவும் அமையலாகாது எனறு நான் வலியுறுத்துகிறேன். ஏனென்றால் இங்கே மிக எளிய உலகியல்வெற்றி அமைந்தவர்கள்கூட ஒருவகை மிதப்புத் தோரணையுடன் கலைஞனையும் அறிவியக்கவாதியையும் அணுகும் மனநிலை ஓங்கியுள்ளது. பரிவுடன் பார்ப்பார்கள். தட்டிக்கொடுப்பார்கள். தமிழின் தலைசிறந்த கவிஞனிடம் ‘ஏதாவது வேலைக்குப் போகலாம்ல?’ என்று கெத்தாகக் கேட்ட கார்ப்பரேட் குமாஸ்தாவை கண்டு உண்மையிலேயே குமட்டலெடுத்திருக்கிறது எனக்கு.

இவர்கள் ஓர் எழுத்தாளன் வறுமையில் இருந்தால் உள்ளூர மகிழ்வார்கள். மனதுக்குள் நல்லவேளை நானெல்லாம் வேலைக்கு வந்துவிட்டேன் என நினைத்துக்கொண்டு வெளியே அடாடா என்பார்கள். கலைஞர்களும் எழுத்தாளர்களும் உலகியலில் துன்புற்று தோல்வியுற்றால் இவர்களுக்குள் ஒரு நிறைவு உருவாகிறது. கலைஞன் இவர்களுக்கு அளிக்கும் தாழ்வுணர்ச்சியின் எரிச்சல் சற்றுக் குளிர்கிறது. அந்த கலைஞனை அவன் உலகியலில் தோல்வியடைந்து இறக்கும்போது ஆகா அடடா என்று கொண்டாடுவார்கள். அப்படியே மறந்தும் விடுவார்கள்.

எண்ணிப்பாருங்கள், பிரான்ஸிஸ் கிருபா சாவின்போது இங்கே என்னென்ன பேசப்பட்டது என்று. அவரை சுட்டிக்காட்டி பிறரை வசைபாடினார்கள். ஆனால் இன்று அவரை இவர்கள் எவராவது பேசுகிறார்களா? பிரான்ஸிஸ் கிருபா இன்றும் நமக்குத்தான் முக்கியம். நாம்தான் அவருடைய கலைவெற்றியையும் கலைச்சிதறல்களையும் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு அவர் ஓர் அடையாளம். கலைஞன் எனும் நிலை ஒரு தோல்வி என்றும், தாங்கள் வென்றவர்கள் என்றும் சொல்லிக்கொள்ள ஒரு சான்று, அவ்வளவுதான். ‘அசல் கலைஞன்யா’ என்பார்கள். அடுத்த கணமே  ‘குடிச்சே அழிஞ்சான்யா’ என்பார்கள். கலைஞன் என்றால் அழியவேண்டியயவன் என தங்களுக்கே சொல்லிக்கொள்ள அவன் ஒரு முகம், அதற்கப்பால் ஒன்றுமில்லை.

இந்த பாமரர்களின் மனநிலைதான் ஒரு கலைஞன் உலகியலில் கொஞ்சம் வென்றால் உடனே வசைபாடச் செய்கிறது. அவனுடைய வெற்றியையோ நிமிர்வையோ கண்டால் எரிய வைக்கிறது. ஏனென்றால் அவன் இவர்கள் தாங்கள் அடைந்துவிட்டதாக எண்ணும் ஒரே வெற்றியைக்கூட இவர்களுக்கு அளிக்காமல் இவர்களைவிட மேலே அங்கும் சென்று நின்றிருக்கிறான். அதை அவர்களால் தாள முடிவதில்லை. அவர்களுக்கு முன் கலைஞனின் வெற்றியை, அவன் வாழ்வின் தீவிரத்தை நாம் முன்வைப்பதென்பது ஓர் அறிவார்ந்த அறைகூவல். உலகியலில் நாலுகாசு சேர்த்தவனின் வெற்று மேட்டிமைத்தனம் அல்ல இது.

இங்கே ஒருவர் இன்னொருவரைச் சந்தித்ததுமே தன் பொருளியல்நிலையைத்தான் தன்னடையாளமாகச் சொல்கிறார் என்பதை கவனியுங்கள். தன் பணி, தன் தொடர்புகள் இரண்டையும் சொல்வார். அவற்றை அடைந்தவர் தன்னை ‘வெற்றியடைந்தவர்’ என நினைத்துக்கொள்கிறார். அதை வெற்றி என ஒருபோதும் கலைஞன், அறிவியக்கவாதி ஒப்புக்கொள்ளக்கூடாது. அந்தப் பாமரன் அப்படி நம்ப அனுமதிக்கக்கூடாது. அவன் முன் பணிவதென்பது அவன் அப்படி நம்ப வழியமைப்பதே. அது அறிவியக்கத்துக்கும் கலைக்கும் இழைக்கப்படும் துரோகம். ஆகவே சென்ற தலைமுறை எழுத்தாளர் சிலரின் மிகைப்பணிவு, தன்னிரக்கப் பாவனை ஆகியவற்றைக் கண்டும் எனக்கு அதே குமட்டல் உண்டு.

அந்த உலகியலாளர் முன் நிமிர்ந்து நின்று ’நான் கலைஞன், நான் அறிவியக்கவாதி’ என்று சொல்லி கூடவே ’நான் இச்சமூகத்தில் மிக வெற்றிகரமானவன், உங்களை விட தீவிரமானதும் அதேசமயம் வெற்றிகரமானதுமான வாழ்க்கையை வாழ்பவன்’ என்று சொல்பவனே இன்றைய சூழலுக்குத் தேவையானவன். அவன் இந்தச் சமூகத்திற்கான மிகமிக அடிப்படையான ஒரு செய்தியைச் சொல்கிறான். இன்றைய அற்பர்களின் எல்லா வசைகளையும் வாங்கிக்கொண்டு அவன் நாளைய தலைமுறைக்காக அந்தப்பணியைச் செய்தாகவேண்டும்

நாம் நீண்டகாலம் பஞ்சத்தில் உழன்ற ஒரு சமூகம். சென்ற தலைமுறை வரை உணவுக்கே போராடிய சமூகம். நம்மில் பெரும்பாலானவர்கள் கீழ்நடுத்தர, அடித்தளத்தில் இருந்து சென்ற ஒரு தலைமுறைக் காலத்தில் மேலெழுந்து வந்தவர்கள். இன்று நாம் அடிப்படை வறுமையை கடந்துவிட்டோம். சாப்பாட்டைப் பற்றி பதற்றப்படும் நிலையில் நம்மில் பெரும்பாலானவர்கள் இல்லை. இனி நாம் வெல்லவேண்டியது அறிவுத்தளத்தில், கலையில். இன்று தொழில், வணிகம் ஆகியவற்றுக்கு இணையாகவே கலையிலும் அறிவுத்தளத்திலும் நாம் முன்னகர்ந்தாகவேண்டும். நம் அடுத்த தலைமுறையினர் அதில் சாதித்தாகவேண்டும். அதற்கு நாம் நம் மூதாதையரின் பல உளநிலைகளை கடந்துசென்றாகவேண்டும்.

நம் மூதாதையர் நம்மிடம் அடிப்படையான ஒரு வருமானத்தில் நிலைகொள்ளும்படி கற்பித்தனர். ‘செட்டில்’ ஆவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தனர். நிலைகொண்டுவிட்டால் நிம்மதி அடைந்தனர். பொருளியல்நிலை தவிர எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நமக்குக் கற்பித்தனர். பொருளியல் நிலையை அடைந்ததுமே முழுநிறைவு கொள்ள பயிற்றுவித்தனர். கலை, இலக்கியம், ஆய்வு என அறிவார்ந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்றும் அது மனிதனை தோல்வியடையச்செய்யும் என்றும் நம்பினர்.  இனியேனும் நாம் அந்த மனநிலையை கடந்தேயாகவேண்டும். இல்லையேல் நம் சமூகம் வெறும் நுகர்வுக்கூட்டமாகச் சுருங்கிவிடும். வெற்றுக்களியாட்டுகளில் வீணாகி அழியும். அதன் இறுதிநிலை என்பது ‘காஸினோ’க்கள்தான். இன்றே அதன் தடையங்களைக் காண்கிறோம். நீங்கள் சொல்லும் புத்தாண்டுக்கொண்டாட்டம் எல்லாம் அதன் வெளிப்பாடுகளே.

பொருளியல்செயல்பாடு முக்கியம்தான். அதுவே மைய ஓட்டம் . ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியினரேனும் கலை, இலக்கியம், அறிவுச்செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். மொத்தச் சமூகத்திற்கும் அச்செயல்பாடுகள் மேல் மதிப்பு உருவானாலொழிய அது நிகழாது. அந்த மதிப்பை அறிவுச்செயல்பாடுகளில், கலையிலக்கியங்களில் ஈடுபட்டுள்ள நாம் இன்று உருவாக்கவேண்டும். ஆகவே கலைஞனை, அறிவியக்கவாதியை பொதுச் சமூகம் குனிந்து பார்க்கலாகாது. நம் மேல் இரக்கமும் , ஊக்குவிப்பும் காட்டலாகாது. நம்மை நிமிர்ந்து பார்க்கவேண்டும். வியக்கவேண்டும். கலைஞனும் இலக்கியவாதியும் இரவலனாக இருந்த காலம் முடிந்துவிட்டது. அவன் கொடுப்பவனாக திகழ்ந்தாகவேண்டும்.

அவ்வாறு இலக்கியவாதி வெளிப்படும்போது உருவாகும் பொறாமை, கசப்பு, புகைச்சல், வசைபாடல் எல்லாம் நல்லதே. அவையெல்லாம்கூட பாமரர்களின் பாராட்டுதான். அவர்களின் பரிவும் கனிவும் மட்டும் உருவாகக்கூடாது. அவ்வாறு உருவானால் அடுத்த தலைமுறையில்கூட கலையிலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகள் மேல் சமூகமதிப்பு உருவாகாது.

நான் நன்கு அறிந்த ஒன்றுண்டு. தமிழில் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்கள் இல்லத்தில் ஒரு புத்தகம்கூட வைத்துக்கொண்டதில்லை. தங்கள் குழந்தைகள் ஒரு புத்தகம்கூட வாசிக்க அனுமதித்ததில்லை. தங்கள் வாரிசுகள் முறையாகப் படித்து, ‘நல்ல வேலைக்கு’ சென்று விடவேண்டும் என்று அல்லும் பகலும் அப்படைப்பாளிகள் முயன்றனர். வாரிசுகள் அவ்வாறு வேலைக்குச் சென்றபின் அதை அப்படைப்பாளிகள் தங்கள் வெற்றியாக , வாழ்நாள் சாதனையாகச் சொல்லிக்கொண்டே இருப்பதை கண்டிருக்கிறேன். ‘நம்மைப்போல நம்ம பிள்ளை இருந்திரக்கூடாது’ என்று என்னிடம் சொன்ன பல எழுத்தாளர்களை நான் அறிவேன். அப்படியென்றால் அவர்களுக்கு உண்மையில் இலக்கியம், அறிவியக்கம் பற்றிய மதிப்புதான் என்ன? அவர்கள் சமூகத்துக்கு அளிக்கும் செய்திதான் என்ன? அவர்கள் இந்தச் சமூகத்தின் மொண்ணைத்தனத்தால் அவ்வளவு புண்பட்டார்கள் என கொள்வதா?

நான் எதை நம்பினேனோ அதையே என் குடும்பத்திற்கு அளித்தேன். இலக்கியத்தை, அறிவுச்செயல்பாட்டை. அதுதான் பெருமைக்குரியது என எண்ணினேன். அதன் பொருட்டு எனக்கு வந்து குவிந்த அறிவுரைகள், குழந்தை வளர்ப்பு வழிமுறைகள் நான் எழுதிய நூல்களின் வரிகளை விட மிகுதி. ஆனால்  என் வாரிசுகள் வேறெந்நிலைக்குச் சென்றாலும் ஏமாற்றமே அடைந்திருப்பேன். என் வாரிசுகளை இளமையிலேயே அதைச் சொல்லித்தான் வளர்த்தேன். இன்று அதன் பொருட்டு பெருமிதம் கொள்கிறேன். என் குடும்பமே அறிவுச்செயல்பாட்டில் ஈடுபாடுகொண்டிருப்பதை ஓர் இழிவென கேலி செய்து எழுதப்பட்ட நாலைந்து குறிப்புகள் என் கண்ணுக்குப் பட்டன. இந்த பாமரர் நடுவே நான் நிமிர்வை மட்டுமே முன்வைக்க முடியும் இல்லையா?

அறிவியக்கச் செயல்பாடு, கலைச்செயல்பாடு உடனடியான வெற்றிகளை அளிப்பது அல்ல. அதற்கு நீண்டகாலத் தவம் தேவைப்படுகிறது. உறுதியான குறைந்தபட்ச வெற்றிக்கும் வாய்ப்பில்லை. அதில் எவ்வளவோ தற்செயல்கள் செயல்படுகின்றன. ஆய்வுகளுக்கும் இதுவே பொருந்தும். ஆனால் ஒரு சமூகத்தில் ஒரு சிறு பகுதியினரேனும் அவற்றுக்கு தங்கள் குழந்தைகளை துணிந்து அனுப்பவேண்டும். அவர்களுடன் நின்றிருக்கவேண்டும். சூழல் அளிக்கும் அழுத்தத்தை தாக்குப்பிடிக்க வேண்டும். படித்து வேலைக்குப்போய் சம்பாதிப்பது மட்டும் வெற்றி அல்ல என்றும் அறிவுச்செயல்பாடு மேலும் பெரிய வெற்றி என்று அவர்கள் நம்பவேண்டும். அவர்கள் பிறரிடம் அதைச் சொல்லவேண்டும். அந்த மனநிலையை இன்று நாம் உருவாக்கியாகவேண்டும்.

அண்மையில் மிகச்செல்வந்தரான ஓர் இளைஞரிடம் பேசினேன். அவர் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என குடும்பமும் சூழலும் சொல்வதாகச் சொன்னார். அவர் அறிவியக்க ஈடுபாடும், அதற்கான கூர்மையும் கொண்டவர். அவர் ஏன் சம்பாதிக்கவேண்டும் என்று நான் கேட்டேன். அவர் ஏன் தன் அகம் விழையும் அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடலாகாது? அவர் எவ்வளவு பெரும்பணிகளை ஆற்றமுடியும் . அவருக்கான நேரம் அவரிடமுள்ளது. அவருக்குத்தேவையான அடிப்படை முதலீடு  கையிலுள்ளது.

ஆனால் சம்பாதிக்காவிட்டால் சமூக மதிப்பு இருக்காது என குடும்பம் நினைப்பதாகச் சொன்னார். ’சம்பாதிப்பதை மட்டுமே மதிப்பெனக் கருதும் பாமரர்கள் எல்லா வற்கத்திலுமுண்டு. அவர்களின் மதிப்பை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். ‘தாகூர் என்ன சம்பாதித்தார்?’ என்று கேட்டபோது அவர் திகைத்து அமர்ந்திருந்தார்.

உலகமெங்கும் மகத்தான அறிவியக்கவாதிகள் பலர் செல்வந்தக் குடியில் பிறந்து அதையே நல்வாய்ப்பென பயன்படுத்திக்கொண்டவர்கள். நவீன ஐரோப்பாவை உருவாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களே. பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் அறிவியக்கமே முதன்மையான சமூகச்செயல்பாடு என்ற பொதுமனநிலை உருவானது. எந்த அளவு செல்வமும் பதவியும் இருந்தாலும் ஒரு நல்லநூலை எழுதாவிட்டால், ஓர் அறிவியல்கண்டுபிடிப்பில் ஈடுபடாவிட்டால் எங்கும் மதிப்பில்லை என்னும் சூழல் முந்நூறண்டுக்காலம் ஐரோப்பாவில் இருந்தது. அதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைய உலகம் ஐரோப்பிய மறுமலர்ச்சியால் உருவாகி வந்த ஒன்று.

மிகச்சிலருக்கேனும் தங்கள் வாரிசுகள் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாகவும் ஆவது பெருமைக்குரியதே என நம்மால் காட்டமுடிந்தால் நம் வரலாற்றுப்பணியை ஆற்றுகிறோம். கலைஞர்களை, அறிஞர்களை, ஆய்வாளர்களை மதிப்புடன் நிமிர்ந்து பார்க்கும் ஒரு சூழலை அடுத்த தலைமுறையிலேலும் நாம் உருவாக்க முடிந்தால் நாம் வென்றோம். இன்று பாமரர்கள் பொறாமையால் எரிவதுகூட அதற்கான ஒரு தொடக்கமே.

ஜெ

https://www.jeyamohan.in/194617/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேட்டிமைவாதம் என்னும் சொல்…

jeyamohanDecember 27, 2023

m4-1024x768.jpg

மேட்டிமைவாதமா?

மேட்டிமைவாதம் என்னும் சொல்லை வேறுபல தமிழ்ச்சொற்களைப்போல ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து, குத்துமதிப்பாக, எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். ஒரு சொல் கிடைத்தால் அதைப்பற்றி மேற்கொண்டு சிந்திப்பதில்லை, அதையே எங்கும் எதற்கும் பயன்படுத்தி சூழலை மலினப்படுத்துகிறோம்.

தமிழில் அச்சொல்லை elitism என்ற ஆங்கிலச்சொல்லுக்கு மொழியாக்கமாக ஆரம்பகால இடதுசாரிகள் பயன்படுத்தினர். அச்சொல்லின் தொடக்கப் பொருள் என்பது ‘தகுதி கொண்ட உயர்வட்டத்தினரின் இயல்பு’ என்பது. அதன் பழையகால நேர்ப்பொருள் ’உயர்குடிப் பிறந்த, உயர்பதவிகொண்ட, அதன் விளைவாகவே உயர்கல்வி கொண்டவர்களின் ரசனையும், வாழ்க்கைமுறையும்’ என்பது. அது மார்க்ஸியர்கள் எதிர்த்த கருத்துநிலை. ஆகவே அதை மேட்டிமைவாதம் என மொழியாக்கம் செய்தனர்.

ஆனால் கலைகளில், இலக்கியத்தில் எலைட்டிசம் என்னும் சொல் மேலும் மேலும் விரிவடைந்து நுட்பமான பல பொருட்களைக் கொண்டதாக ஆகியது. இலக்கியத் திறனாய்வில் அது பின்னர் அதுவரையிலான மிகச்சிறந்த மரபை ஓர் அளவுகோலாக முன்வைத்தலை குறித்தது. ஒரு சூழலில் இலக்கியத்திலும் கலைகளிலும் மிகச்சிறந்த தேர்ச்சிபெற்றவர்களின் உள்வட்டத்தைக் குறிக்க பயன்பட்டது. class எனும் சொல்லுக்குச் சமானமான சொல்லாக அது மாறியது.

இலக்கியவிமர்சனத்தில், குறிப்பாக பிரிட்டிஷ் இலக்கிய விமர்சனத்தில், எலைட்டிசம் என்பது எதிர்மறைப்பண்பு கொண்டது அல்ல. அது ஒரு ஆதாரமான கருத்துநிலை மட்டுமே . எந்தச்சூழலிலும் அது அடிப்படையானது, தவிர்க்கமுடியாதது. ஒரு சூழலில் எலைட்டிசம் இல்லாமலாவது என்பது மரபும் தரமும் இல்லாமல் ஆவதுதான். கபிலனும் கம்பனும் எழுதிய மொழி தமிழ் என ஒருவன் உணர்வது மேட்டிமைவாதம் அல்ல. இன்று எழுதும் கவிஞனிடம் அவன் அந்த தொடர்ச்சியையும் அதற்குரிய தரத்தையும் எதிர்பாப்பதும் மேட்டிமைவாதம் அல்ல. அப்படி ஓர் அளவுகோல் இல்லாத இலக்கிய – பண்பாட்டுச்சூழல் இருக்க முடியாது.

எலைட்டிசம் என்பது எங்கே எதிர்மறைப் பண்பு கொண்டதாக ஆகிறது? ஜனநாயகத்தில் மக்களின் உரிமைகள் நிகர் என்பது அடிப்படை நெறி. அங்கே ஒரு வட்டத்திற்கு கூடுதல் உரிமைகள் உண்டு என்று பேசப்படுமென்றால் அங்கே எலைட்டிசம் எதிர்மறையான சொல். அதாவது, எங்கே உரிமைகள் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் எலைட்டிசம் எதிர்மறையானதே. மானுடர் அனைவரும் உரிமைகள் விஷயத்தில் சமமானவர்கள் , தகுதிகள் மற்றும் பொறுப்புகளில் அப்படி அல்ல.

ஆனால் இன்றைய உலகம் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் எலைட்டிசத்தை முழுமையாக ஏற்கிறது. பணமிருந்தால் நீங்கள் விமானநிலையத்தில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. எலைட் கிளாஸ் என்றே அந்த அமைப்புக்குப் பெயர் இருக்கும். நீதிமன்றத்தில்கூட உங்களுக்கு தனி உபசரிப்புதான். செல்வத்தால், பதவியால், பிறப்புசார்ந்த பின்புலத்தால் உரிமைகளில் ஒருவர் முன்னுரிமை கோரினால் அந்த எலைட்டிசம் கண்டனத்திற்குரியது- ஆனால் அதை இங்கே நாம் இயல்பாக ஏற்க பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம். நமக்கு எந்த அரசியல்வாதி மீதும், எந்த செல்வந்தர் மீதும் புகார்களே கிடையாது. நம்முடைய குறி முழுக்க நம்மில் ஒருவர் அறிவுத்திறனாலோ சாதனையாலோ சற்று மேலானவர் என்று அறியப்பட்டால் அவரை தாக்கி அழிப்பதில்தான்.

ஓர் அறிவார்ந்த சூழலில், அறிவுத் தகுதியால் மேலிடத்தில் இருப்பவர்களின் தரப்பு ஒன்று எலைட்டிசம் என்னும் சொல்லால் குறிப்பிடப்பட்டதுண்டு. இன்று அச்சொல்லை பரவலாக பயன்படுத்துவதில்லை, வேறு அரசியல் சரிநிலை கொண்ட சொற்கள் வந்துவிட்டன. உதாரணமாக, பல அறிவுத்துறைகளில் peer circle என்னும் சொல் புழக்கத்திலுள்ளது. அதை மேட்டிமைவாதம் என்று மொழியாக்கம் செய்வதைப்போல அபத்தம் வேறில்லை. ஒரு துறையில் பயிற்சியும் தேர்ச்சியும் சாதனையும் கொண்டவர்களும் பிறரும் ஒன்றல்ல. பயிற்சியும் தேர்ச்சியும் சாதனையும் கொண்டவர்களின் கருத்தும் பிறர் கருத்தும் சமானம் அல்ல.

அறிவுத்துறைகளில் அதில் பயிற்சியற்றவர்களின் எக்கருத்துக்கும் எந்த மதிப்பும் இல்லை. அப்படி ஒரு நிலை உண்டு என்றால் அங்கே அறிவுச்செயல்பாடே இல்லை என்றே பொருள். சமூகவலைத்தளங்கள் உருவான பின் எவரும் எங்கும் எதைப்பற்றியும் கருத்துசொல்லலாம் என்னும் நிலை உள்ளது. அவர்கள் ஒரு துறையின் சாதனையாளரை ஒன்றுமே தெரிந்துகொள்ளாமல் விமர்சனமும் ஏளனமும் வசையும் புரிகிறார்கள். ஆனால் அந்த பாமரரின் கருத்தை அந்த சாதனையாளர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றால் அவரை மேட்டிமைவாதி என்று முத்திரை குத்துகிறார்கள். கொஞ்சம் சிந்திப்பவர்களாவது இந்த மாபெரும் அசட்டுத்தனம் பற்றிய புரிதல் கொண்டிருக்கவேண்டும்.

இலக்கியத்தில் , சிந்தனையில் எலைட்டிசம் என்பது பலசமயம் மரபு, தரமதிப்பீடு என்னும் இரண்டு அடிப்படைகளை முன்வைப்பதாகவே அமைகிறது. இன்று ஒருவர் தமிழில் சிறுகதை எழுதினால் அவர் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், ஜானகிராமன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் என நீளும் ஒரு மரபின் தொடர்ச்சியாக ஆகிறார். அந்த மரபு உருவாக்கிய அளவீடுகளை அவர் முன்னெடுக்கவேண்டும், கடக்கவேண்டும். அந்த எதிர்பார்ப்பை முன்வைப்பவர் ஒரு ’எலைட்’ தான். உலகம் முழுக்க சென்ற இருநூறாண்டுகளில் சிறுகதை என்னும் கலைவடிவம் பெற்ற வெற்றிகளை அறிந்த ஒருவர் சிறுகதை எழுதுபவரில் அந்த அளவீட்டை போட்டுப்பார்க்கிறார், எதிர்பார்க்கிறார். அவரும் ’எலைட்’ தான். அந்த எதிர்பார்ப்பு வழியாகவே இலக்கிய விமர்சனம் செயல்படுகிறது. அதன் வழியாகவே மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன.

அப்படி அல்ல என்று சொல்வோம் என்றால் எழுதப்படும் எல்லாமே இலக்கியம்தான் என ஆகும். அப்படி ஒரு பார்வை இருப்பதை சிறுகதை எழுதும் எவருமே ஏற்கப்போவதில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் இருக்கும் படிநிலை என ஒன்றை அவர்களே மதிப்பிட்டு வைத்திருப்பார்கள்.  அதற்கு கீழே என அவர் நினைக்கும் ஒருவரிடம் அவரை ஒப்பிட்டு இருவரும் ஒன்றே என்று சொல்லிப்பாருங்கள் தெரியும், கொந்தளித்துவிடுவார். ரசனை என்பதே மதிப்பீடும் ஒப்பீடும் மட்டுமே. மேலான கலையை, இலக்கியத்தை அறிந்து அதை முன்வைத்துக்கொண்டே இருப்பவர் கலையையும் இலக்கியத்தையும் முன்னெடுக்கும் சக்தி. அது வ.வே.சு.ஐயரோ, பாரதியோ, புதுமைப்பித்தனோ, க.நா.சுவோ, சி.சு செல்லப்பாவோ, வேதசகாயகுமாரோ எவராயினும்.

அவ்வாறு அறிவார்ந்த தகுதிகொண்டவர்கள் ஒரு வட்டம். ஒவ்வொரு தலைமுறையிலும் அப்படி ஒரு வட்டம் உருவாகி வந்திருக்கும். ஒவ்வொரு துறையிலும் அப்படி ஒரு வட்டம் திரண்டிருக்கும். அதற்கு ஓர் அறிவார்ந்த ஆற்றல் இருக்கும். சாதியால், செல்வத்தால் உருவாகும் வட்டம் அல்ல அது. திறனால், சாதனையால் உருவாவது. அதை எதிர்க்கவேண்டுமென்றால் அதற்கு எதிரான இன்னொரு அறிவார்ந்த வட்டத்தை உருவாக்குவது மட்டுமே ஒரே வழி. அதற்கு மாறாக அந்த அறிவார்ந்த வட்டத்தையே ஒருவர் மேட்டிமைவாதம் என சொல்வாரென்றால் அவருக்கு அறிவியக்கமே அறிமுகமில்லை என்று பொருள்.

சிந்தனைக் களத்திலும் இன்னொருவகை எலைட்டிசம் உண்டு. ஒரு சிந்தனையாளன் தன் சூழலைப்பற்றிய விமர்சனத்தில் இருந்தே தொடங்குகிறான். தான் காணும் சமகாலச் சூழலில் அவன் கொள்ளும் முரண்பாடு, ஒவ்வாமை, எதிர்ப்பு ஆகியவையே அவனை சிந்தனைசெய்ய வைக்கின்றன. சமூகவிமர்சனம் இல்லாமல் இலக்கியம் இல்லை. தத்துவம் இல்லை. சமூகப்பணியும் நிகழ்வதில்லை. முரண்பாடு, ஒவ்வாமை, எதிர்ப்பு எனும் மூன்றும் ஒருவன் சமூகத்தில் இருந்து விலகி சற்றேனும் அன்னியமாகும்போதே உருவாகின்றன. ‘மக்களோடு மக்களாக’ இருப்பவனுக்கு அவை உருவாவதில்லை. அவனுக்கு எந்தச் சிக்கலும் தென்படுவதில்லை. எந்தக்குறைபாடும் சமூகக்குறைபாடாகத் தோன்றுவதுமில்லை.

சிந்தனையாளன் சமூகத்தின் ஒரு பகுதியாக நின்றே சமூகத்தை அறிகிறான், சமூகத்தைவிட மேலெழுந்து நின்றே அதை விமர்சனம் செய்கிறான். ஆகவே எந்தச் சிந்தனையாளனுக்கும் ஒரு ’எலைட்’ தன்மை இருந்தே தீரும். அவன் சமூகத்தின் சராசரியின் ஒருபகுதியாக இருக்கமுடியாது. சமூகத்தின் பொதுச்சிந்தனைகள், பொது உணர்வுநிலைகளில் அவனும் கரைந்திருக்க முடியாது. அவன் ஒரு படி மேல்தான். அதனால்தான் அவனுக்கு அந்தப்பார்வை அமைகிறது .உரிமையால் அல்ல, அறிவால் உருவாவது அது. அந்த அறிவையே அவன் முன்வைக்கிறான்.

அந்த விமர்சனத்தால் சமூகச் சராசரியாகத் திகழ்பவர்கள் எரிச்சல் கொள்வார்கள், எதிர்ப்பார்கள்.  அது இயல்பு. ஆனால் அதற்காக ஓட்டுப்பிடிக்கும் அரசியல்வாதிகள் போல கலைஞன், சிந்தனையாளன், இலக்கியவாதி சமூகத்தை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. அப்படி ஒருவன் விமர்சனம் செய்யாமலிருந்தால் அவன் வெறும் பசப்புவாதி. அந்த விமர்சனத்தால் விமர்சனத்துக்குள்ளாகிறவர்கள் புண்படுவது இன்றுநேற்றல்ல, சாக்ரடீஸ் காலம் முதல் நிகழ்வது. கபிலர் காலம் முதல் நிகழ்வது. சாக்ரடீஸ் நஞ்சூட்டப்பட்டார். கபிலர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.

அந்த விமர்சனத்தால் புண்படும் பாமரர்கள் தங்கள் பாமரத்தனத்தால் கண்டடைந்து பயன்படுத்தும் சொல்லாக இன்று ‘மேட்டிமைவாதம்’ எனும் சொல் ஆகியுள்ளது. அதாவது உரிமைகளில் மேட்டிமை பேசுபவர்களை இயல்பாக ஏற்கும் நமது பாமரர்கள் அறிவால் மேன்மை கொண்டிருப்பவர்களை ஏற்காமல் எகிறுகிறார்கள். இதுவே நம் சூழல்.

இச்சூழலில் ஓர் அறிவியக்கவாதி தன் மேல்நிலையை தானே உணர்ந்திருக்க வேண்டும். ஆம், இந்த இடத்தில் நான் ஒருபடி மேல்தான், ஆகவேதான் இதைச் சொல்கிறேன் என சொல்லும் நிமிர்வு அவனுக்குத் தேவை. அவனை மேட்டிமைவாதி என பாமரர் சொல்லும்போது அவன் கூசவேண்டியதில்லை. அது பாமரரின் புரியாமையின் விளைவான எரிச்சல் மட்டுமே என்று அவன் புரிந்துகொள்ளவேண்டும். அந்த நிமிர்வும் நம்பிக்கையும் இல்லை என்றால் அவன் காலப்போக்கில் சிந்தனையை இழப்பான். அவனுடைய விமர்சனம் மழுங்கும். அவன் இலக்கியத்தில் செயலற்றவனாக ஆவான்.

இன்னொன்றுமுண்டு, வாசகர்களாக அறிமுகமாகும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையில் நான் இதைச் சொல்கிறேன். ஓர் அறிவியக்கவாதி நினைத்தால்கூட பாமரர்களுடன் இணைந்து அவர்களில் ஒருவராக இருக்க முடியாது. நடிக்கலாம், நடிப்பு சலிப்பையே ஊட்டும். இங்கே ஒரு குடிகாரர் குடியின் பொருட்டு நாணமடைவதில்லை. ஒரு தீனிப்பைத்தியம் அதன்பொருட்டு கூச்சமடைவதில்லை. ஆனால் ஒரு புத்தகம் படிப்பவன் அதன்பொருட்டு கூச்சமடைந்து புத்தகத்தை ஒளித்து வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது என்றால் அது வெறுமே இந்த சூழலின் தேக்கநிலை மட்டுமல்ல. அந்த இலக்கிய வாசகனின் ஆளுமைக் குறைபாடும்கூடத்தான் . அவனுக்கு தன் செயல்பற்றி தனக்கே ஒன்றும் தெரியவில்லை. தன்மேலேயே நம்பிக்கை இல்லை. அறிவியக்கம் மீது நம்பிக்கை இல்லை.

அப்படியென்றால் எளியோரை இகழவேண்டுமா, அன்னியப்படுத்திக்கொள்ள வேண்டுமா? இதை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். பாமரர்களின் பாமரத்தனத்தைச் சுட்டிக்காட்டுவது என்பது அவர்களை மக்கள் என்றவகையில் இகழ்வதல்ல, அங்கே அந்த பாமரத்தனம்தான் இகழப்படுகிறது. பாமரத்தனம் சுட்டிக்காட்டப்படுவது என்பது மேட்டிமைத்தனத்தால் அல்ல, அதை வென்று அச்சமூகம் மேலே செல்லவேண்டும் என்னும் அறிவார்ந்த விழைவால்தான். அறியாமையையே அறிஞன் எதிர்கொள்ளவேண்டும். அறியாமையைக் கொண்டாடும் அறிஞன் இருக்கவியலாது. ஆகவே இடித்துரைத்தலும் கடிந்துரைத்தலும் இல்லாமல் சிந்தனையாளன் செயல்படவே இயலாது.

எந்தச் சிந்தனையாளனும் மக்களை வெறுப்பதில்லை. சமூகத்தை வெறுப்பதில்லை. மக்கள்மேலும் சமூகம் மேலும் கொண்ட ஈடுபாட்டல்தான் அது மேம்படவேண்டும் என அவன் தன் வாழ்க்கையை அதற்காகச் செலவிடுகிறான். தன்னலமே உருவான மக்கள் நடுவே அவன் அனைத்தையும் அதன் பொருட்டு இழக்கச் சித்தமாக இருக்கிறான். அவன் மக்ககளில் ஒருவனாக உணர்ந்துதான் அவர்களை அறிகிறான். மக்களில் இருந்து மேலே நின்று விமர்சிக்கிறான். எந்த நல்ல எழுத்தாளனையும் கவனியுங்கள், அவன் எளிய சாமானிய மனிதர்களையே மிகுந்த உயிர்ப்புடன் எழுதியிருப்பான். அது பேரன்பால்தான். ஆனால் அவன் அவர்களைக் கூர்ந்து கவனித்திருப்பான். அந்த கவனம் நிகழ்வது அவன் அவர்களை கொஞ்சம் விலகிநின்று பார்ப்பதனால்தான்.

மேட்டிமைவாதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் உண்மையில் மேட்டிமை நோக்கு கொண்டவர்கள், ஆனால் அறிவார்ந்த பாமரர்கள், அவர்களுக்கு அறிவுசார்ந்த மேல்நிலை கொண்டவர்களைக் காண்கையில் உருவாரும் எரிச்சலையே அப்படி வெளிப்படுத்துகிறார்கள். மெய்யாகவே அச்சொல்லை பயன்படுத்துபவர்கள் இடதுசாரிகள். அவர்கள் மேட்டிமைவாதம் என்னும் சொல்லை ஓர் அரசியல்சொல்லாக கையாள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் தாங்கள் மக்களில் ஒருவரல்ல என்னும் தெளிவு எப்போதுமிருக்கும். மக்களுக்கு தலைமைதாங்குபவர்களாக, வழிகாட்டுபவர்களாக, மக்களின் மனசாட்சியாக மட்டுமே அவர்கள் தங்களை எண்ணியிருப்பார்கள். அந்த மேட்டிமையுணர்வால்தான் அவர்கள் போராடுகிறார்கள், தியாகம் செய்கிறார்கள்.

நம் சூழல் செல்வத்தின் மேட்டிமையை, அதிகாரத்தின் மேட்டிமையை இயல்பாக ஏற்றுக்கொள்வது. அதை அடைய ஒவ்வொருவரும் முட்டிமோதுவது. ஆனால் அறிவின் மேட்டிமையை அது ஏற்பதில்லை. அறிவின் மேட்டிமையை, கலையின் மேட்டிமையை அது குனிந்து நோக்குகிறது. இன்று ஒவ்வொரு அறிவுஜீவியும் கலைஞனும் அறிவின் மேட்டிமையை அந்த பாமரப்பெருஞ்சூழலுக்கு முன் ஆணித்தரமாக முன்வைத்தாக வேண்டும்.
 

https://www.jeyamohan.in/194622/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள், பாமரர் எனும் சொற்கள்.

December 28, 2023

public.jpeg

தமிழ்ச்சூழலில் சில புனிதச் சொற்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மக்கள். அச்சொல்லுக்கு நிகராக காலப்போக்கில் உருவாக்கப்பட்ட இன்னொரு சொல் பாமரர்.  இங்கே கலை, கல்வி, அறிவு, தரம், மேன்மை என்று எதைச் சொன்னாலும் அதற்கு தானியங்கிப் பதிலாக வந்து நிற்பது ‘மக்கள்’ ‘பாமரர்’ என்னும் இரண்டு சொற்கள்தான்.

அவை முன்வைக்கப்பட்டுவிட்டால் அதன்பின் எதிர்ப்பேச்சே பேசக்கூடாது. பேசுபவர் மக்கள்விரோதி, சுரண்டல்காரர், ஆதிக்கவாதி என நூறு முத்திரைகளுக்கு ஆளாகிவிடுவார். எந்த துடிப்பான புதிய சிந்தனையாளனையும் அச்சொற்கள் பொதுவெளியில் பம்ம வைப்பதைப் பார்க்கிறோம். அச்சொற்களை பயன்படுத்தும் கும்பலுக்கு அவை வெறும் சொற்கள்தான் என்றும், அவர்களின் வாழ்க்கைக்கும் நம்பிக்கைகளுக்கும் அச்சொற்கள் அளிக்கும் பொருளுடன் தொடர்பே இல்லை என்றும் தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அவை மந்திரவாதியின் கோல் போன்றவை.

அச்சொற்கள் உருவான வரலாற்றை, அவை அடைந்த பொருள்மாற்றங்களை சற்றேனும் உணர்ந்துகொள்ளாமல் அவற்றை பயன்படுத்துபவர்களை எதிர்கொள்ள முடியாது.

மக்கள் என்னும் சொல்லை முன்வைத்தவர்கள் தொடக்ககால ஜனநாயகவாதிகள். அதை புனிதப்படுத்தியவர்கள்  இடதுசாரிகள். மக்கள் என்ற சொல்லை பாமரர் என்ற சொல்லுக்குச் சமானமானதாக  இழுத்துச்சென்றவர்கள் தேர்தல்கள அரசியல்வாதிகள்.

*

ஜனநாயகவாதிகள் மக்கள் என்னும் சொல்லை உருவாக்கி, முதன்மைப்படுத்திய செயல் என்பது உலகச் சிந்தனைச் சூழலில் ஒரு முக்கியமான நிகழ்வு. அதுவே நவீன ஜனநாயகத்தின் தொடக்கம். இன்றைய விழுமியங்கள் அனைத்தும் அங்கே தொடங்கியவைதான். இதை நாம் பதினேழு- பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியல் வரலாற்றுப் பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும்.

அன்று உலகமெங்கும் மன்னராட்சி நிலவியது. மன்னரின் அதிகாரமென்பது இனம், ஆசாரம் ஆகிய இரண்டு அடிப்படைகளில் மரபு வழியாக நிறுவப்பட்டதாக இருந்தது. அரசருக்கு இணையாகவோ, அதைவிட மேலாகவோ மதத்தின் அதிகாரம் இருந்தது.  அந்த அதிகாரம் நம்பிக்கைகளாலும், அந்நம்பிக்கைகளை உருவாக்கிய தொன்மங்களாலும் ஆனதாக இருந்தது. அந்த இரு அதிகாரங்களிலும் மக்களின் பங்களிப்பு ஏதுமில்லை. மக்கள் ஆளப்படுபவர்கள் மட்டுமே. உழைப்பவர்கள், வரிகொடுப்பவர்கள், சேவகம் செய்பவர்கள், ராணுவமாக போர்களில் ஈடுபட்டு கொல்பவர்கள், கொல்லப்படுபவர்கள்.

மன்னர், மதம் என்னும் இரு அதிகார மரபுகளுக்கு எதிராக பொதுமக்களின் நலனை முன்வைத்தனர் ஜனநாயகத்துக்காகச் சிந்தனைசெய்த முன்னோடிகள். ஓர் அரசு நிலைகொள்வது மக்களின் நலனுக்காகவே இருக்கவேண்டும். ஒரு மதம் நிலைகொள்வது மக்களின் மீட்சிக்காகவே இருக்கவேண்டும். அதிகாரம் மக்களுக்கு எதிரானது என்றால் அது தேவையற்றது, அழிவுத்தன்மை கொண்டது, ஆகவே அழியவேண்டியது. மக்களுக்கு என்ன வகையான அரசு வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

அந்தச் சிந்தனை மிகமிக மெலிதாக முளைத்து ,பல்வேறு சிந்தனையாளர்கள் வழியாக வளர்ந்து, பல்வேறு அரசியல்போராட்டங்கள் வழியாக உருத்திரண்டு வந்த ஒன்று. அதன் தொடக்கம் Magna Carta போன்று அரசரின் வரம்பில்லா அதிகாரத்திற்கு எதிராக உருவான தொடக்ககால அரசியல் எதிர்ப்புகள். அதன்பின் பிரபுக்களின் அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்புகள், மதகுருக்களின் ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்புகள் உருவாயின. போர்களும் பஞ்சங்களும் அந்த எதிர்ப்புணர்வை வளர்த்தன. அந்த சிறு கிளர்ச்சிகள் நிகழ்ந்து அவற்றின் வழியாக மக்கள் தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அடைந்தனர். அரசர், மதகுரு ஆகியவர்கள் மேலிருந்த அடிமைத்தனமான பற்றில் இருந்து வெளியே வந்தனர்.

மெல்ல மெல்ல மக்களுக்கே அதிகாரம் என்னும் அந்த புதியசிந்தனை ஒரு பேரலையாக ஐரோப்பாவை ஆட்கொண்டது. பிரிட்டனில் ஜனநாயகத்திற்கான  பிரெஞ்சுப்புரட்சி, அமெரிக்கப்புரட்சி இரண்டும் அதன் முதன்மை விளைவுகள். அங்கிருந்து உலகம் முழுக்க ஜனநாயகம் என்னும் கருதுகோள் சென்று சேர்ந்தது. ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் இருந்தே மார்க்ஸிய சிந்தனை உருவானது. ருஷ்யப்புரட்சியாக உருத்திரண்டது. இடதுசாரி சிந்தனைகளாக உலகமெங்கும் பரவியது.

தொடக்ககாலத்தில் ஜனநாயகத்துக்கான குரல்கள் எழுந்தபோது அதை எதிர்த்த தரப்பினர் மூன்று வகைப்பட்டவர்கள். இனம், குலம் ஆகியவற்றை முன்வைத்தவர்கள் ஒரு பிரிவினர். அவர்கள் அதிகாரத்தைக் கையாள்வதற்கு அதற்கான குடிப்பிறப்பு மரபு இருந்தாகவேண்டும் என்று நம்பினர். ‘தூய குருதிமரபு’ என்னும் சொல்லாட்சி அவர்களுடையது.

மத அதிகாரத்தை முன்வைத்தவர்கள் இரண்டாம் வகையினர். அவர்கள் அதிகாரத்தைக் கையாள இறையருளும் அதற்கான தகுதியும் இருக்கவேண்டும் என்றனர். புனிதமான அதிகாரம் என்னும் சொல்லாட்சி அவர்களுடையது.

மூன்றாம்தரப்பினர் சிறுபான்மையினர். அவர்கள் அறிவதிகாரத்தை முன்வைத்தனர்.கற்றவர்கள், அறிவுத்தகுதி கொண்டவர்களே அதிகாரத்தைக் கையாள வல்லமைகொண்டவர்கள் என்று அவர்கள் வாதிட்டனர். ‘அறிவின் அதிகாரம்’ என்னும் சொல்லாட்சி அவர்களுடையது.

ஜனநாயகம் என்று நாம் சொல்லும் இன்றைய அமைப்பிலேயே இந்த மூன்று எதிர்த்தரப்புகளுக்கும் இடம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இம்மூன்று சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டுதான் ஜனநாயகம் உருவாகி வந்துள்ளது.

பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மன்னராட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனைசொல்லவும் கட்டுப்படுத்தவும் பிரபுக்களின் அவை ஒன்று அமைந்தது. மன்னரின் வரம்பில்லா அதிகாரம் அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதே ஒருவகை ஜனநாயக முன்நகர்வுதான்.  அதன்பின் பிரபுக்கள் அவைக்கு ஒரு படி குறைவானதாக மக்களவை உருவாகி வந்தது. காலப்போக்கில் மக்களவையின் அதிகாரம் அதிகரித்தபடியே வந்தது. அதுதான் ஜனநாயகம் வளர்ந்த விதம்.

ஆனால் இன்றும்கூட நமது பாராளுமன்ற  மேல்சபை என்பது மேலே சொன்ன மக்களதிகாரத்திற்கு எதிரான  மூன்று தரப்பினருக்கும் ஆட்சியதிகாரத்தில் இடமளிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதைக் காணலாம். முன்பு சட்டமன்றத்திலேயே மேல்சபைகள் இருந்தன. தேர்தலையே சந்திக்காமல் மேல்சபை வழியாகவே அமைச்சரானவர்கள், பிரதமரானவர்கள் நமக்கு எப்போதும் உண்டு.

அரசியலமைப்புச் சட்ட விவாதங்களில் பி.ஆர்.அம்பேத்கர் இந்த வினாக்களை விரிவாக எதிர்கொண்டிருக்கிறார். மேல்சபை இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையை முதன்மை அதிகாரம் கொண்டதாக அவர் தலைமையிலான அரசியல் சாசனக்குழு அமைத்தது. லோக் சபா அல்லது மக்கள் அவை என்னும் சொல்லே முக்கியமான ஒன்று.

மேலே சொன்ன மூன்று எதிர்தரப்பினருக்கும் தொடக்க கால ஜனநாயகவாதிகள் பதில் சொன்னபோதுதான் ‘மக்கள்’ என்னும் கருத்துருவை உறுதியாக நிலைநாட்டினர். plebeian என்ற சொல்லில் இருந்து public என்ற சொல் நோக்கிய நகர்வு என அதை சுருக்கமாகச் சொல்லலாம். பிளீபியன் என்ற சொல் பண்டைய கிரேக்கத்தில் அதிகாரத்தில் பங்கில்லாத சமூக உறுப்பினரைச் சொல்ல பயன்படுத்தப்பட்டது. பப்ளிக் என்ற சொல் அரசின்மேல் கூட்டாக அதிகாரம் கொண்ட மக்கள் திரளை சுட்ட பயன்படலாயிற்று.

பிறப்பின் வழியான அதிகாரம், மத அதிகாரம் ஆகியவற்றை மிக எளிதில் ஜனநாயகவாதிகள் விவாதத்தில் தோற்கடித்தனர். அறிவின் அதிகாரம் என்னும் கருத்துரு அத்தனை எளிதாக வெல்லப்படத்தக்கது அல்ல. அத்தரப்பு இன்றும் வலுவானதே. இன்றும்கூட உலகமெங்கும் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் இயல்பான விசையாக இருப்பது அறிவதிகாரமே. வெவ்வேறு வகைகளில் அந்த அறிவதிகாரம் செயல்படுகிறது. உதாரணமாக தொழில்நுட்ப நிபுணர்களின் அதிகாரம், உயர்நிர்வாகிகளின் அதிகாரம், வணிகக்குழுக்களின் அதிகாரம், ஊடகங்களின் அதிகாரம். இவை ஒன்றாகத் திரண்டு இன்றைய மக்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகின்றன, பலசமயம் அவையே முன்னோங்கி நிற்கின்றன.

அறிவதிகாரம் உருவாக்கிய கேள்விகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட விவாதத்தின்போதும் எழுந்து வந்தன. படிப்பறிவே இல்லாத, பழங்குடி மனநிலைகள் கொண்ட, பிற்பட்ட நிலையில் தேங்கி நின்றிருக்கும் சாமானிய மக்களிடம் அரசதிகாரத்தை அளிக்கலாமா? நேரடியாகவே அம்பேத்கரிடம் கேட்கப்பட்டது, சாதிவெறி மிக்க இந்தியச் சமூகத்திடம் அதிகாரத்தை அளித்தால் இந்தியா என்றாவது சாதியை ஒழிக்கமுடியுமா?

அதற்கான பதிலாகவே ‘மக்கள்’ என்னும் திரள் அடையாளம் முன்வைக்கப்பட்டது. அதாவது தனிமனிதர்களாக மக்கள் படிப்பறிவற்றவர்களாக இருக்கலாம். சிந்தனைத்திறன் அற்றவர்களாக இருக்கலாம். சுயநலமிகளாகவும், பேராசைக்காரர்களாகவும் இருக்கலாம். மூடநம்பிக்கை கொண்டவர்களாகவும், தேங்கிப்போன வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால் ‘மக்கள்’ என்னும் கூட்டான சக்தி எப்போதும் வாழவும் முன்னேறவும்தான் விரும்புகிறது என்றனர் ஜனநாயகவாதிகள்.

மக்கள் தான் சமூகம், அவர்கள்தான் வரலாறு.  சமூகம் தன்னை முன்னேற்றிக்கொள்ளவே துடிக்கிறது.வரலாறு முன்னேறவே முயல்கிறது. ஆகவே மக்களுக்கு எது வேண்டும் என அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும். அந்த உரிமை அவர்களுக்குண்டு என ஜனநாயகவாதிகள் வாதிட்டனர். மக்களிடம் அவர்களின் தேவை என்ன என்பது உள்ளது. அவர்கள் எங்கே செல்லவேண்டும் என்பது உள்ளது. அதற்கு வாய்ப்பளிப்பதே ஜனநாயகம் செய்யவேண்டியது. அது எப்படியானாலும் முன்னோக்கிய நகர்வாகவே அமையும் என்றனர். 

மக்களிடம் வரலாற்றின் இயங்குவிசை உள்ளுறையாக உள்ளது என்று ஹெகல் முதலிய இலட்சியவாதிகள் நம்பினர். மார்க்ஸ் அந்நம்பிக்கையை ஹெகலிடமிருந்து பெற்றுக்கொண்டார். மக்களிடம் புனிதமான, மகத்தான ஏதோ ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையை மிகுந்த நெகிழ்வுடன் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இலட்சியவாத எழுத்துக்கள் சித்தரித்தன. புரட்சியாளர்கள் அதை நம்பி உள்ளக்கிளர்ச்சி அடைந்தனர்.

ஆனால் மக்கள் என்றால் யார்? ஒருவர் கல்விகற்றார் என்றால், சிந்தனை செய்தார் என்றால் அவருக்கென ஒரு தனித்தன்மை உருவாகி வந்துவிடுகிறது. அவருடைய களங்கமின்மை இல்லாமலாகிவிடுகிறது. அப்படியென்றால் கல்வியும் சிந்தனையும் இல்லாத ஒருவரே மக்களின் சரியான பிரதிநிதியாக இருக்க முடியும். மக்கள் என்பது பாமரர்களின் ஒட்டுமொத்தம்தான் என்னும் எண்ணம் அவ்வாறாக உருவானது.

விளைவாக படித்தவர்கள், சிந்தனைசெய்பவர்களிடம் இல்லாத பல உயர்பண்புகள் பாமரரிடம் இருக்கின்றன என இலக்கியங்கள் பேச ஆரம்பித்தன. அந்த உயர்பண்புகள் என்பவை மக்கள் என்னும் பொதுவான கருத்துருவின் பண்புநலன்கள்தான். அவைதான் கலாச்சாரம் என்பதன் அடிப்படை அலகுகள். கருணை, அறவுணர்வு, தோழமை என பல உயர்விழுமியங்களாக அவை சித்தரிக்கப்பட்டன. தொடக்ககால மனிதாபிமான இலக்கியத்தின் முக்கியமான பேசுபொருள் என்பது ‘பாமரர்களில் வெளிப்படும் உயர்பண்புகள்’ தான்.

பாமரரை புனிதப்படுத்தும் இந்த கண்ணோட்டத்தை ஜனநாயகத்தை முன்வைத்த அரசியலாளர் ஒருவகை தத்துவக் கொள்கையாகவே முன்வைக்கலாயினர். பின்னர் மார்க்ஸியர்கள் அதை மறுக்கமுடியாத கோட்பாடாக நம்பிப் பேசலாயினர். அது ஒரு பார்வை மட்டுமே என சொல்பவர்கள் மக்கள் விரோதிகள் ஆயினர்.அவர்கள் மேல் மேட்டிமைவாதி என்னும் முத்திரை குத்தப்பட்டது.

மேட்டிமை முத்திரை ஒருதொடக்கம். அது கடைசியில் அழித்தொழிக்கப்படவேண்டிய சமூகவிரோதி என்ற எல்லைவரை சென்று சேரும். பத்தொன்பதாம் நூற்றாண்டு மார்க்ஸிய அரசுகளால் வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட, கொல்லப்பட்ட கலைஞர்கள் மற்று அறிஞர்கள் அத்தனைபேருக்கும் மேட்டிமைவாதி, மக்கள் விரோதி என்னும் முத்திரைகள்தான் குத்தப்பட்டன.

முந்தைய மன்னர் மற்றும் பிரபுக்களின் ஆட்சியிலும், மதகுருக்களின் ஆட்சியிலும் பாமரர் முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டு சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அவர்கள் வெறும் மானுடக்குப்பைகளாக போர்க்களங்களில் கொன்று ஒழிக்கப்பட்டனர். பஞ்சங்களில் செத்துக்குவிந்தனர். அவர்களை வரலாற்றில் கொண்டுவந்து நிறுத்தியவர்கள் ஜனநாயகவாதிகளும் பின்னர் மார்க்ஸியர்களும்தான். வரலாறு சாமானியர்களுக்குரியது என்றும் சமூகம் என்றால் அவர்களே என்றும் நிறுவியவர்கள் ஜனநாயகவாதிகளும் மார்க்ஸியர்களும்தான்.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு வரை வரிகட்டாதவர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை வந்தது மேலும் பல ஆண்டுகள் கழித்துத்தான்.இலக்கியத்தில் ஒரு பாமரன் கதைநாயகனாக ஆவது ஜனநாயக சிந்தனைகள் திரண்டு, அவற்றின் அடிப்படையில் நவீன இலக்கியம் உருவாகி வந்தபின்னர்தான். தகழி சிவசங்கரப்பிள்ளையின் தோட்டியின் மகன் நாவலில் ஒரு துப்புரவுத்தொழிலாளர் கதைநாயகன் என்பதை அறிந்து இடதுசாரிகளே திடுக்கிட்டதை, வியந்ததை அதை மொழியாக்கம் செய்த சுந்தர ராமசாமி பதிவுசெய்துள்ளார்.

அத்தகைய சூழலில் மக்கள் என்பது அனைத்துப் பாமரர்களையும் உள்ளடக்கியதுதான் என்னும் சிந்தனை மிகமிக முற்போக்கானது. ஒவ்வொரு பாமரனையும் கருத்தில்கொள்கையிலேயே ஓர் அரசு நலம்நாடும் அரசாக இருக்க முடியும் என்னும் எண்ணம் அரசியலில் ஒரு புரட்சி.  பாமரனின் அதிகாரத்தை முன்வைத்த சிந்தனைகள் மிகமிக முற்போக்கானவை. மிகப்புரட்சிகரமானவை.

ஜனநாயகத்தில் மிகமிக ஆற்றல்கொண்ட கலைச்சொல்லாக மக்கள் என்பது ஆனது இவ்வாறுதான். மக்கள் என்ற அச்சொல்லை அதன்பின் இடதுசாரிகள் ஒரு ஆயுதமாக ஆக்கிக்கொண்டார்கள்.  

(மேலும்)
 

https://www.jeyamohan.in/195297/

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.மோ வின் இந்தத் தொடர் காலத்திற்கு உகந்தது! "அறிவலட்சியம் கொண்டவன் தெனாவெட்டாகத் திரிய, வாசிப்பவனும், விடயம் தேடியறிபவனும் நாணிக்கோணி  நிற்க வேண்டிய காலம் இது" என சில இடங்களில் முன்னர் எழுதியிருக்கிறேன்.

இதனை வாசிக்க வேண்டியோர் வாசிக்கப் போவதில்லை என்பது தான் பிரச்சினை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2024 at 20:02, Justin said:

இதனை வாசிக்க வேண்டியோர் வாசிக்கப் போவதில்லை என்பது தான் பிரச்சினை!

😁

அந்தத் தைரியத்தில்தான் ஆசான் மினக்கெட்டு எழுதுகின்றார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள், பாமரர்- இன்று

December 29, 2023

people-1024x697.webp

 

அறிவியக்கத்தில் செயல்படுவதில் ஓர் அடிப்படையான சிக்கல் உள்ளது. அதை ஒவ்வொரு நாளும் நடைமுறையில் நாம் சந்தித்தாலும் தெளிவாக உணர்ந்திருப்பதில்லை.

நேற்றைய அறிவியக்கம் அதன் முழு ஆற்றலுடன் சில கருத்துக்களை விவாதித்து சமூகமனதில் நிறுவுகிறது. இன்றைய சமூகத்தில் சிந்தனையின் அடித்தளமாகவே அவை மாறிவிட்டிருக்கும். ஆனால் இன்றைய அறிவியக்கம் அக்கருத்துக்களின் போதாமையை உணர்ந்து முன்னகரும். அவற்றை வளர்க்கவும், மாற்றியமைக்கவும் முயலும். அப்போது அந்த முன்னகர்வுக்கு முதல் தடை என பெருகி முன்வந்து நிற்பவை சென்றகால அறிவியக்கம் உருவாக்கிய சிந்தனைகளாகவே இருக்கும்.

அரசியல்சரிநிலை‘கள் என நாம் இன்று சொல்பவை எல்லாம் நேற்று சமூகத்தைச் சீண்டிய, கொந்தளிக்கச் செய்த புதிய சிந்தனைகளாக முன்வைக்கப்பட்டவை. கடும் எதிர்ப்பைச் சந்தித்தவை. மெல்லமெல்ல தங்களை நிறுவிக்கொண்டவை. இன்று அவை பொதுமக்களில் ஓரளவு சிந்திப்பவர்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவற்றை கடந்து செல்வதே பெரும் மீறல் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை மீறி அச்சிந்தனைகளைக் கடந்துசென்றே ஆகவேண்டும்.

‘மக்கள்’ என்னும் சொல்லின் புனிதமும் அவ்வாறாக ஒரு வகை அரசியல்சரிநிலையாக நிலைகொண்டுவிட்டது. பாமரர்களின் ‘களங்கமற்ற விழுமியங்கள்’ என்பதும் அவ்வாறே.

‘மக்கள்’ என்னும் கருத்துருவம் மானுட சிந்தனையில் பதினேழாம் நூற்றாண்டு முதல் உருவாகி வந்தது ஒரு மகத்தான முன்னகர்வு என்பதில் ஐயமில்லை. நாம் இன்று காணும் அரசியல், சமூகவியல் சூழலை உருவாக்கிய அடிப்படைச் சிந்தனையே அதுதான். ஜனநாயகம், மனிதாபிமானம், மானுட சமத்துவம், சமூகநீதி, தனிமனித உரிமை ஆகிய கொள்கைகள் எல்லாமே அதன் விளைகனிகள்தான்.

மக்கள் என்றால் என்ன? அவர்களிடம் அதிகாரம் எப்படி நிலைகொள்ள முடியும்? மிகச்சாமானியன் எப்படி அதிகாரத்தை கையாளக்கூடும்?  பதினெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இந்த வினாக்களுக்கு விடையாக முக்கியமான நூல் ஒன்றையேனும் எழுதியிருப்பார்கள்.ஜான் ரஸ்கினின் Unto This Last ரூஸோவின் The Social Contract ஆகியவை அவ்வகையில் மகத்தான மானுட ஆவணங்களாகக் கருதப்படும் நூல்கள்.

அந்த அறிவியக்கம் கீழ்க்கண்ட கருத்துக்களை நிலைநாட்டியது. மக்கள் என்னும் கூட்டான சக்தியின் உள்ளக்கிடக்கையை ஒட்டியே அரசுகள் அமையவேண்டும், சட்டங்கள் அமையவேண்டும், ஒழுக்கங்களும் அறங்களும் அமையவேண்டும். மக்களின் முடிவே அறுதியானது. அந்த எண்ணம் சென்ற இரு நூற்றாண்டுகளில் வலுத்தபடியே வந்தது. ஓர் அரசியலாளர் மக்களின் உள்ளக்கிடக்கையை அறியும் ஆற்றல் கொண்டவராக இருக்கவேண்டும்.ஓர் ஆட்சியாளர் மக்களின் உள்ளக்கிடக்கையை நிறைவேற்றுபவராக திகழவேண்டும். ஒரு மக்கள்தலைவர் என்பவர் மக்களின் உள்ளக்கிடக்கையை சரியாக பிரதிநிதித்துவம் செய்பவராக அமையவேண்டும்.

இன்னொரு பக்கம், ஒரு தத்துவசிந்தனையாளன் மக்களின் கூட்டான உள்ளக்கிடக்கையை நோக்கிப் பேசி அதை கட்டமைப்பபவனாகத் திகழவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஒரு சமூகசீர்திருத்தவாதி மக்களின் கூட்டான உள்ளக்கிடக்கையை ஊடுருவி அதை மாற்றியமைப்பவனாக வேண்டும். எல்லா சிந்தனைகளும் மக்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. எல்லா கலைகளும் மக்களை நோக்கியே முன்வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் அறிபவர்கள், எல்லாவற்றையும் மதிப்பிடுபவர்கள், எல்லாவற்றையும் ஏற்பவர்கள் அல்லது மறுப்பவர்கள் மக்களே என்று கூறப்பட்டது.

ஜனநாயகம் என்னும் நவீன அரசுவடிவம் நிலைகொள்ள மக்கள் என்னும் இந்தக் கருத்துருவம் மிகப்பெரிய பங்கு வகித்தது. ஆட்சியாளர்களின் கோணத்தில் வரலாற்றையும் தேசத்தையும் நிலத்தையும் சமூகத்தையும் பண்பாட்டையும் எல்லாம் மக்கள்த்திரளாக பார்க்க அது வழியமைத்தது. தனிமனிதர்களின் கோணத்தில் ஒவ்வொருவரும் தங்களை மக்கள் என்ற பேருருவ அமைப்பின் ஒரு துளியாக உணர வழியமைத்தது. தாங்கள் எவ்வளவு சாமானியராயினும் மக்கள் என்ற அமைப்பின் ஒரு பகுதி என்னும் நிலையில் உரிமைகளைக் கோரவும், போராடவும் ஆற்றல்கொண்டவர்கள் என்ற எண்ணத்தை அது ஒவ்வொருவரிடமும் உருவாக்கியது. இந்த இருமுனை நம்பிக்கையே ஜனநாயகத்தின் ஆதாரம்.

உலகமெங்கும் ஜனநாயக இயக்கங்கள் உருவாயின. ஜனநாயக அரசுகள் உருவாயின. அவை மக்கள் என்னும் கருத்துருவை வளர்த்துக்கொண்டே சென்றன. முன்பு தமிழில் நாம் இன்று சொல்லும் பொருளில் மக்கள் என்னும் சொல்லே இல்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். மக்கள் என்னும் சொல் மைந்தர்கள் என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்ட ஒன்று. குறிப்பிட்ட ஒரு திரளைச் சொல்ல மாக்கள் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டது.

சென்ற நூறாண்டுகளில் மக்கள் என்னும் அச்சொல் எப்படியெல்லாம் திரண்டு பொருள்கொண்டிருக்கிறது என்று பாருங்கள். ‘பெருமக்கள்’ என்னும் சொல் முன்பு சான்றோரை குறிக்க பயன்பட்டது. இன்று அது அனைத்து மக்களையும் குறிக்கிறது. அரசியல்கட்சிகளின் பெயர்களில் மக்கள் உள்ளது. வணிகநிறுவனங்களின் பெயர்களில் மக்கள் உள்ளது. மக்கள் திலகம், மக்கள் செல்வன், மக்கள் நீதி மையம், மக்கள் டிவி…

எல்லா அரசியல்பேருரைகளும் எல்லா விளம்பரங்களும் மக்கள் மக்கள் என்றே பேசுகின்றன.  மக்களால் ஏற்கப்பட்டுவிட்டால் அதன்பின் விவாதத்திற்கே இடமில்லை. அது உண்மை, அது சரியானது, அது தேவையானது, அது மாறாதது. ‘மக்கள் ஏற்றுக்கொண்டாயிற்று, அதற்குமேல் என்ன?’ என்ற பேச்சு நம் காதில் விழாத நாளே இல்லை. ஓர் ஊழல் அரசியல்வாதி தேர்தலில் வென்றுவிட்டால் உடனே அந்த வரி வந்து நிற்கிறது, ‘மக்களே சொல்லிவிட்டார்கள்’

ஜனநாயகம் உருவானபோது கூடவே உருவான வேறு இரு அமைப்புகள் ஜனநாயகத்தில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தின. ஒன்று, பொதுக்கல்வி. இரண்டு, பொது ஊடகம். இரண்டுமே நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்தன. பள்ளிக்கல்வி அல்லது பொதுக்கல்வி அமைப்பு அனைவருக்கும் சமானமான கல்வியை அளித்து சமானமான மனநிலைகள் கொண்ட மக்களை உருவாக்கியது. இது மக்கள் என்னும் கருத்துருவை வலிமைப்படுத்திய அம்சம். ஜனநாயகத்தின் ஆற்றலின் அடிப்படையும்கூட.

நவீனக்கல்வி வழியாக உருவான ‘எழுத்தறிந்த’ சமூகம் நவீன ஊடகங்களை உருவாக்கியது. அச்சு ஊடகம் முதலில். பின்னர் வானொலி, சினிமா, தொலைக்காட்சி போன்ற பிற மின்னூடகங்கள். தொடக்கத்தில் மிகச்சில காலம் மட்டுமே ஊடகங்கள் செய்திகளை பரப்பவேண்டும் என்னும் நோக்கம் கொண்டிருந்தன. அறிஞர்களும் சமூகசீர்திருத்தவாதிகளும் அரசியலாளர்களும் அவற்றை தொடங்கி நடத்தினர். மிக விரைவிலேயே செய்தி என்பது ஒரு விற்பனைப்பொருள் என ஆயிற்று. ஊடகம் என்பது ஒரு பெருந்தொழிலாக மாறியது.

ஊடகம் பெருந்தொழிலாக ஆனதுமே ‘விளம்பரம்’ என்னும் புதிய ஒரு நிகழ்வு அறிமுகமாகியது. அது பொருளியலின் முக்கியமான கூறாக மாறியது.  மக்களின் கருத்தை திட்டமிட்டு உருவாக்கமுடியும் என்பது கண்டறியப்பட்டது. மக்களை ஊடகங்கள் வழியாக திரட்டமுடியும், நுகர்வோராகவும் தொண்டர்களாகவும் கட்டமைக்கமுடியும் என்று நிறுவப்பட்டது. மக்கள் என்னும் சொல்லை கற்பனாவாத நெகிழ்வுடன் சொன்ன ஜனநாயக முன்னோடிகள் எவருக்குமே தெரியாத ஒரு சரித்திர முன்னகர்வு இது. இன்றைய மக்கள் என்பவர்கள் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட திரள். உள்ளும், புறமும்.

ஜனநாயக அரசுகள் உருவாகி ஒரு தலைமுறைக்குள்ளாகவே அவற்றின் தொடக்க காலகட்டத்தில் இருந்த இலட்சியவாதம் இல்லாமலாகியது. அவையும் அதிகார அரசியலாடல் கொண்டவையாக மாறின. மன்னராட்சிக்காலத்தில் அதிகாரம் போர்கள் வழியாக வந்தது. இனப்போர்கள், தேசியப்போர்கள், மதப்போர்கள். ஜனநாயகத்தில் வென்றெடுக்கப்படவேண்டியவர்கள் மக்கள் என ஆகியது. ஆகவே எல்லா போர்களும் மக்களை வெல்வதற்கானவை ஆக மாறின. போர்கள் ஊடகங்களில் நிகழலாயின.

மக்களைக் கவர்பவர்களுக்கு அதிகாரம், செல்வம் எல்லாமே அமைந்தன. புகழ் என்பது நேரடியாகவே பணமாகவும் அதிகாரமாகவும் மாறியது இன்றைய ஜனநாயக யுகத்தில்தான். எண்ணிப்பாருங்கள் எத்தனை மகத்தான கவிஞனாக இருந்தாலும் கம்பன் ஆட்சியாளனோ செல்வந்தனோ ஆகமுடியாது. மாபெரும் கலைஞர்களாக இருந்தாலும் ஆட்சியாளர்களின் கருணைக்கொடைகளை நம்பியே மன்னராட்சிக்காலத்தில் வாழமுடியும். நவீன ஊடகம் உருவானதுமே புகழ்பெற்ற கலைஞர்கள் மன்னர்களுக்குரிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர். தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டில் உணவு உண்டார் என்பதும் அதனால் சீண்டப்பட்ட அக்கால உயர்குடிகளின் சீற்றமே அவருடைய அழிவுக்கு வழிவகுத்தது என்பதும் வரலாறு.  

அவ்வாறாக மக்கள் என்பது ஒருவகை நவீன தெய்வமாக ஆகியது. அதை வழிபடவேண்டும், கேள்வி கேட்காமல் பணியவேண்டும், அதற்கு படையலிடவேண்டும், அதை புகழ்ந்து துதித்துக்கொண்டே இருக்கவேண்டும். அதன் அருள்பெற்றவர்கள் அனைத்தையும் அடைவார்கள். பணம் ,புகழ் ,அதிகாரம் எல்லாமே அதன் கடைக்கண் பட்டால் வந்துசேரும். அது அனைத்துக் கல்யாணகுணங்களும் கொண்டது. அதன்மேல் சிறு விமர்சனம் வைத்தால்கூட அவன் அழிக்கப்படவேண்டிய எதிரி.

மக்கள் என்னும் கருத்துருவை கடவுளின் இடத்துக்கு கொண்டுசென்றவர்கள் இடதுசாரிகள். அவர்கள் கடவுளை மறுத்து அங்கே மக்கள் என்னும் கருத்துருவை வைத்தனர். லெனின் முதலான இடதுசாரிகளின் எழுத்துக்களை வாசித்தால் முன்பு மதவாதிகள் கடவுளின் பெயரை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்களோ அப்படியே மக்கள் என்னும் பெயரை இவர்கள் பயன்படுத்துவதைக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரை அனைத்து அதிகாரமும் மக்களுக்குரியது. அனைத்துச் செல்வங்களும் மக்களுக்குரியவை. அனைத்து அறங்களும் மக்களால் முடிவெடுக்கப்படுபவை. மக்களின் எதிரிகள் அழித்தொழிக்கப்படவேண்டியவர்கள்.

ஆனால் மக்கள் என்பது கண்கூடான ஒன்று அல்ல, அது ஒரு கருத்துருவம். ஆகவே மக்களின்பொருட்டு மக்களின் பிரதிநிதிகளாகிய ‘நாங்கள்’ எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் செய்பவை எல்லாம் உண்மையில் மக்களால் மக்களுக்காகச் செய்யப்படுபவைதான். எங்களை எதிர்ப்பவர்கள் மக்களை எதிர்க்கிறார்கள். அவர்களை மக்களின்பொருட்டு நாங்கள் அழிக்கிறோம். இன்றும் அதைத்தான் உலகமெங்கும் இடதுசாரி சர்வாதிகாரிகள் எல்லாமே சொல்கிறார்கள்.

இந்த மக்கள் என்னும் கருத்துரு அதன் வரலாற்றுப் பாத்திரத்தை வகித்துவிட்டு, அதன் நன்மைகளை எல்லாம் அளித்துவிட்டு, அதன் தீமைகளை வெளிக்காட்டும் காலகட்டம் வந்துவிட்டது என்று ஜனநாயக யுகம் உருவாகும் தொடக்ககாலத்திலேயே சிந்தனையாளர்கள் சொன்னார்கள்

இயல்பாக திரண்டு உருவான ஒரு திரளை மக்கள் என உருவகித்தனர் முன்னோடியான ஜனநாயகச் சிந்தனையாளர்கள். நவீன அரசியலில் அந்த மக்கள்த்திரள் ஊடகவல்லமையால், ஆதிக்க நோக்குடன் செயற்கையாக கட்டமைக்கப்பட முடியும் என்னும் நிலை உருவானது. மக்களிடமிருந்து அதிகாரத்தை பெறுவதற்கு பதிலாக மக்களையே அதிகாரத்திற்கு ஏற்ப வடிவமைக்க முடியும் என நிரூபிக்கப்பட்டது.

மக்கள் என்னும் கருத்துருவின் எதிர்மறைக்கூறுகளை முதன்மையாக வெளிக்காட்டியது ஃபாஸிசமும் நாஸிஸமும்தான். இனம், மொழி, மதம் போன்ற அடையாளங்களைக் கொண்டு மக்களை மிக எளிதாகத் திரட்டமுடியும் என அவை காட்டின. மிகப்பெரிய அழிவுச்சக்தியாக அந்த மக்கள் அதிகாரத்தை மாற்றமுடியும் என்று நிரூபித்தன.

வரலாற்றில் மன்னராட்சியும், மதஆட்சியும் நிகழ்த்திய அழிவை விட அதிகமான பேரழிவை முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின், போல்பாட் உள்ளிட்ட நவீன சர்வாதிகாரிகள் உருவாக்கிய மக்கள்அதிகாரம் நிகழ்த்திக்காட்டியது. அவர்களெல்லாம் மக்களின் ஏற்பு வழியாக அதிகாரத்தை அடைந்தவர்கள்தான்.

இந்த விவாதத்தில் மிகமுக்கியமான நூல், நான் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து மேற்கோள் காட்டிவரும் நூல், வில்ஹெல்ம் ரீஹ் எழுதிய The Mass Psychology of Fascism. ஒரு தனிமனிதனின் சராசரி அறிவுத்தரம் அவனைப்போன்றவர்கள் ஒன்றாகி ஒரு திரளாக ஆகும்போது மிகமிகக் குறைகிறது என அந்நூல் வாதிடுகிறது. அதாவது நூறு புத்திசாலிகள் ஒரு  கூட்டமாக ஆனால் முட்டாள்தனமான ஒரு கும்பல்தான் உருவாகும். அதிலுள்ள ஒவ்வொரு புத்திசாலியும் கும்பலாக செயல்படும்போது முட்டாளாகவே இருப்பான்.

பெருந்திரள் என்பது உணர்ச்சிகளால் ஆனது என்றார் ரீஹ். எதிர்மறை உணர்ச்சிகளே மேலும் வலுவானவை.எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும்தான் மக்களை ஒருங்கிணையச் செய்கிறது. ஒரு எதிரியை சுட்டிக்காட்டி, அதன் மேல் வெறுப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்யும் ஒருவர் மிக எளிதாக மக்களின்மேல் முற்றதிகாரத்தை அடையமுடியும். ஹிட்லரும் முஸோலினியும் அழிந்தாலும் இன்று உலகமெங்கும் அரசியல்வாதிகளின் அரசியல்நடவடிக்கை என்பதே எதிரிகளை சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்கி அதிகாரத்தை வெல்வதாகவே உள்ளது.

சிந்தனைகள் பெருந்திரளைச் சென்றடைவது மிக அரிது. அடையாளங்களும், குறியீடுகளும், ஆசாரங்களும், உணர்ச்சிக் கூச்சல்களுமே பெருந்திரளைச் சென்றடைகின்றன. தர்க்கபூர்வமாக நிறுவப்படுவனவற்றை விட திரும்பத் திரும்பச் சொல்லப்படுபவையே மக்களால் ஏற்கப்படுகின்றன. மக்கள் அறிவாளிகளை விட தங்களைப்போன்ற அறிவுத்தரம் கொண்ட ஒருவரையே நம்பி ஏற்று கொண்டாடுகிறார்கள். திரள் பெரிதாகும்தோறும் அவர்கள் ஏற்றுக்கொள்பவர்களின் அறிவுத்திறன் குறைகிறது.

இந்தச் சிந்தனைகள் முன்னர் ஜனநாயகத்தின் முன்னோடிச் சிந்தனையாளர்கள் மக்கள் என்னும் கருத்துரு பற்றி என்னென்ன சொன்னார்களோ அவற்றுக்கு நேர் எதிரானவை என்பதைக் காணலாம்.

வில்ஹெல்ம் ரீஹின் நூல் வெளிவந்து நூறாண்டுகளாகப்போகிறது. இன்றைய வணிக உலகின் விளம்பரக்கொள்கைகள் அனைத்துமே வில்ஹெல்ம் ரீஹ் கண்டுசொன்ன அடிப்படைகளை ஒட்டியே வடிவமைக்கப்படுகின்றன என்பது கண்கூடு. மக்களின் சிந்தனைகளை வடிவமைப்பவை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் திட்டமிட்டு செய்யப்படும் பிரச்சாரங்கள்தானே ஒழிய முன்னோடிச் சிந்தனைகள் அல்ல. மக்களை பிரச்சாரம் வழியாக தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும்படி செய்யமுடியும் என்பதற்கு வரலாறெங்கணும் உதாரணங்கள் உள்ளன.

அந்தப் பிரச்சாரங்கள் மூன்று நிலைகள் கொண்டவை. ஒன்று, விரிவான களஆய்வு வழியாக மக்களின் மனநிலையும் தேவைகளும் கண்டடையப்படுகின்றன. இரண்டாவதாக, நிபுணர்களால் மக்களிடம் கொண்டுசெல்லப்படவேண்டிய கருத்துக்களும் அவற்றை கொண்டுசெல்லும் வழிமுறைகளும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. மூன்று மிகப்பெரிய பொருட்செலவில் அக்கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. மக்கள் சிந்தனை செய்வதற்குள்ளாகவே அக்கருத்துக்கள் மக்களின் மனதுக்குள் ஆழமாக நிறுவப்படுகின்றன.

கட்சியரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று தளங்களில் இன்றைய மக்கள் இடைவிடாமல் பிரச்சாரத்திற்கு இரையாகிறார்கள். சிந்திக்கவே விடாமல் அவர்கள் முற்றுகையிடப்படுகிறார்கள். அவர்களின் தெரிவுகள், ரசனைகள் எல்லாமே அரசியல்கட்சிகள், வணிக விளம்பரங்கள், கேளிக்கையூடகங்கள் ஆகிய மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன. உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். மேலே சொன்ன மூன்றை மட்டும்தான். வேறெதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்கள், கவனிக்க அவர்களால் இயலாது. ஒரு சொல்கூட உள்ளே செல்ல வழி கிடையாது. அவர்கள் ஒருவகை இயந்திரங்கள்போல  உள்ளிருக்கும் மென்பொருளில் பொறிக்கப்பட்டுள்ள ஆணைக்குக் கட்டுப்பட்டு இயங்குபவர்கள்.

இன்றைய சூழலில் மக்கள் என்னும் சொல்லுக்கு என்னதான் பொருள்? மக்கள் என்ற சொல்மீது ஏற்றப்பட்டுள்ள பழைய நெகிழ்வுகள், புனிதங்கள் ஆகியவற்றுக்கு என்னதான் மதிப்பு?

(மேலும்)

 

https://www.jeyamohan.in/195304/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எனும் திரளை எதிர்கொள்வது…

jeyamohanDecember 30, 2023

mass.jpeg

 

இன்று என்னை வந்து சந்திக்கும் இளைஞர்களில் பாதிப்பேர் புலம்புவது புத்தகம் வாசிப்பவர்களாக, சிந்திப்பவர்களாக அவர்கள் இருப்பதனாலேயே சந்திக்கநேரும் இழிவுபடுத்தல்கள், கேலிகிண்டல்கள், புறக்கணிப்புகள் பற்றி. எல்லா புதியவாசகர் சந்திப்புகளிலும் குறைந்தது ஒரு மணிநேரம் இந்த கேள்விக்கான பதிலாக நீண்ட பதில் சொல்லியிருக்கிறேன்.

புத்தகம் வாசிக்கும் ஓர் இளைஞர் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட நண்பர்களிடம் பேசாதவராக இருக்கலாம். நண்பர்கள் சொல்லும் எதையுமே மறுத்து விவாதிக்காதவராக இருக்கலாம். நண்பர்கள் விரும்புவது போலவே இருப்பவராக இருக்கலாம். ஆனாலும் கேலி கிண்டல்களில் இருந்து தப்ப முடியாது. நட்பான கேலி கிண்டல் அல்ல. வஞ்சமும் காழ்ப்பும் கொண்டவை. நேரடியான இழிவுபடுத்தல்கள். பொதுவெளிச்சிறுமைகள். இந்த இழிவுபடுத்தல்களில் சேர்ந்துகொண்டு மிகமிக மகிழ்ந்து கொண்டாடுபவர்கள் இளம்பெண்கள். 

நான் அந்த அறிவியக்க இளைஞரிடம் அவருடைய ஆளுமையை வடிவமைத்துக் கொள்வது பற்றித்தான் பேசுவேன். ஒருவன் நாள் முழுக்க பரோட்டா பற்றிப் பேசினால் அது கேலிக்குரியதாவதில்லை. அதற்கு ரசிகர்கள் உருவாவார்கள். அரைமணி நேரம் வாசித்த புத்தகம் பற்றிப் பேசினால் காழ்ப்பும் கீழ்மைப்படுத்தலும் வருகிறது. எனில் பிரச்சினை எங்குள்ளது? நம் சமூகத்தின் பாமரத்தனமே பிரச்சினை.

அப்பிரச்சினையை எப்படி ஒரு தனிமனிதர் தீர்க்கமுடியும்? அப்பாமரர்களை எதிர்கொள்வது, அவர்கள் நடுவே தன் ஆளுமையை பாதுகாத்துக்கொள்வது பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அவர் தன்னை பாமரர்களில் ஒருவராக ஆக்கிக்கொள்ளவே முடியாது. அவர் என்ன நடித்தாலும் அவர் பாமரர் அல்ல என்று பாமரர்களுக்கு தெரியும். அவர் தன்னை வரையறைசெய்துகொள்ளவேண்டும். தன் இடத்தை தானே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

பரோட்டாவை பற்றி இரவுபகலாகப் பேசுபவனுக்கு வெட்கமில்லை, புத்தகம் படிப்பவனுக்கு புத்தகத்தை வெளியே காட்ட வெட்கமாக இருக்கிறது என்றால் பிரச்சினை அவனிடமே. அவன் அறிவியக்கம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ளவேண்டும். அதன் ஒரு பகுதியாக இருப்பதன் பெருமிதத்தை அடையவேண்டும். அவனுக்கு அந்த நிமிர்வு இருக்குமென்றால் பாமரர்களின் கேலியும் கிண்டலும் அவனைச் சீண்டாது. அவர்கள்மேல் பரிதாபமே உருவாகும். பலநாடுகளில் அறிவியக்கவாதியை முச்சந்திகளில் அடிக்கிறார்கள். இங்கே வசைபாடி கிண்டல்செய்கிறார்கள், அவ்வளவுதானே? மிக வசதியான இடத்தில் அல்லவா நாம் இருந்துகொண்டிருக்கிறோம்?

மக்கள், பாமரர் என்னும் கருத்துருவின் இரண்டு நிலைகள் வரலாற்றில் உள்ளதை கண்டோம். மன்னராட்சிக்காலங்களில் சாமானியர்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாத சூழலில் ஜனநாயகக் கொள்கைகளை உருவாக்கிய முன்னோடிகள் மக்கள் என்னும் கருத்துருவை உருவாக்கி நிலைநாட்டினர். மக்களில் மிகமிக அடிநிலையினர்கூட உட்படுவார்கள் என்னும் பொருளில் பாமரர்களும் மக்களே என்றனர்.அதை மிகைப்படுத்திக்கொண்ட இடதுசாரிகள் மக்கள் என்றால் பாமரர் மட்டுமே என்று வரையறை செய்தனர்.பாமரர்களை போற்றித்துதிக்கும் சிந்தனைகள் உருவாயின.

ஜனநாயகம் உருவாகி, மக்கள் அதிகாரத்தை அளிக்கும் சக்தியாக ஆனபோது மக்களை துதிபாடலாயினர் அரசியல்வாதிகள். மக்களின் விருப்பப்படி எல்லாமே நடைபெறவேண்டும் என்று பேசலாயினர். மக்கள் என்பது ஒரு தெய்வம் போல ஆக்கப்பட்டது. பின்னர் மெல்லமெல்ல மக்களை தங்கள் விருப்பப்படி வடிவமைக்கலாயினர். மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிகாரங்களை அடைந்தனர். வரலாற்றில் நிகழ்ந்த பேரழிவுகளுக்கெல்லாம் மக்கள் என்னும் பெருந்திரளில் இருந்து உருவான  ஆதரவு காரணமாக அமைந்தது.

இந்த இருநிலைகளுக்குப் பின் உருவானது இன்றைய சூழல். இன்று மக்கள் என நாம் சொல்வது எவரை? அரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று மாபெரும் அமைப்புகளின் பிரம்மாண்டமான பிரச்சார வல்லமையால் கட்டமைக்கப்பட்ட கூட்டான ஒரு  தொகுப்புமனத்தைத்தான் நாம் மக்கள் என்கிறோம். அது தானாக ஒன்று திரண்டது அல்ல. அதிகார நோக்குடன், வணிக நோக்குடன் ஒன்று திரட்டப்பட்டது. சென்றகால ஜனநாயகச் சிந்தனையாளர்கள் மக்கள் எனும்போது அடைந்த நெகிழ்வுக்கெல்லாம் இன்று பொருளே இல்லை.

இன்று முன்பிலாத ஒன்று உருவாகியுள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்புகூட ‘சாமானியர்’ எனப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு தங்களை நேரடியாக வெளிப்படுத்த ஊடகம் இருக்கவில்லை. ஏதாவது கணக்கெடுப்பில், கருத்துப்பதிவில் அவர்களின் குரல்  தற்செயலாக பதிவானால்தான் உண்டு. இன்று மின்னூடகம், சமூகவலைத்தளம் அவர்களுக்கு ஊடகத்தை அளிக்கிறது. இது உண்மையில் ஒரு பெரும்புரட்சி.

இது நிகழ்ந்தபோது இதை ‘மாபெரும் ஜனநாயக வெளி’ என்றும் ‘சாமானிய மக்களுக்கு வரலாற்றில் முதல்முறையாகக் குரல் கிடைத்துள்ளது’ என்றும் புளகாங்கிதம் கொண்டவர்கள் உண்டு. அவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகள். அப்போதே அதற்கு எதிராக நான் என் அவநம்பிக்கையை எழுதினேன். ஏனென்றால் ஏற்கனவே எது ‘மக்கள்’நடுவே பேசப்பட்டதோ அதுவே அந்த ஊடகங்களிலும் திரண்டு வரும் என நான் நினைத்தேன். அன்றே மக்கள் எதிர்மறைவிசைகளால் இயக்கப்படுவது கண்கூடாக இருந்தது.

இன்று ஐயமற நிரூபிக்கப்பட்ட ஒன்று உண்டென்றால் அவ்வாறு மின்னூடகம் வழியாக உருவாகிவந்த சாமானியனுக்கான இடம் எந்தவகையிலும் ஜனநாயகத்துக்கு உதவவில்லை என்பதே. அது பாமரத்தனம் ஒருங்குதிரண்டு ஒரு பெரும்வல்லமையாக ஆகவே வழியமைத்தது. இன்று அறிவுச்செயல்பாடுகளின் மிகப்பெரிய எதிர்விசையாக அது உலகமெங்கும் மாறியுள்ளது. அதைப்பற்றி மிகமிக விரிவான ஆய்வுகள் வந்துள்ளன.

இரு முனைகளில் இது நிகழ்ந்தது. ஒருமுனையில் சாமானியர்கள் தங்கள் அறிவை அந்த ஊடகம் வழியாக பகிர்ந்து கொண்டதை விட, தங்கள் உரிமைக்குரல்களை பதிவு செய்ததை விட, பலநூறு மடங்கு கூடுதலாக தங்கள் காழ்ப்புகளையும் அச்சங்களையும் பேராசைகளையும்தான் பதிவுசெய்தனர். அவை மிகப்பெரிய அளவில் ஒருங்கு திரண்டன.ஒற்றைப் பேரமைப்பாக ஆகி ராட்சத வல்லமை கொண்டன.

இன்னொரு முனையில் சாமானியர்களின் அந்த வெளிப்பாடுகளை கண்காணிக்கவும், திரட்டவும் அதிகார அமைப்புகளுக்கும் வணிக அமைப்புகளுக்கும் வாய்ப்பு அமைந்தது.அவற்றின் வழியாக அவர்கள் மிக எளிதாக சாமானியர்களை கட்டுப்படுத்தினர். அவர்களின் கருத்துக்களையும் ரசனையையும் வடிவமைத்தனர்.

உலகமெங்கும் மின்னணு- சமூகவலைத்தள ஊடகங்கள் வலுப்பெற்ற பின்னர் உரிமைப்போர்கள் வலுப்பெறவில்லை. மாறாக இனவாத, மொழிவாத, மதவாத, தேசியவாத வெறிகள்தான் வலுப்பெற்றன. அவற்றை முன்வைக்கும் கட்சிகள் ஆட்சிகளைப் பிடித்தன. அந்தப்போக்கு மேலும் வலுப்பெற்று வருகிறது. இன்று ஓரு வெறிக்கு மாற்றாக இன்னொரு வெறியைத்தான் முன்வைக்கவேண்டும் என்னும் அளவுக்கே உலக அரசியல் உள்ளது. மதவெறிக்குப் பதிலாக இனவெறி. தேசியவெறிக்குப் பதிலாக வட்டாரவெறி.

எந்த ஒரு புதிய ஊடகவடிவம் வந்தாலும் அதில் ‘மக்கள்’ எதை வெளிப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள். தங்கள் காம-குரோத-மோகங்ங்களைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். அரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகியவை அவர்கள் மண்டைக்குள் எதை செலுத்துகின்றனவோ அவற்றையே இன்னும் கீழிறங்கி திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.

மக்கள் நேரடியாக தெரிவுசெய்யும்போது எதை விரும்பி ஆதரிக்கிறார்கள்? இன்றைய சமூக ஊடகங்களில், மின்னூடகங்களில் கெட்டவார்த்தைகளாகப் பொழியும் ஒருவருக்கு இருக்கும் கவனத்தில் நூறில் ஒரு பங்கு ஒரு மக்கள் பணியாளருக்கு இல்லை என நாம் அறிவோம். அபத்தமான சதிக்கோட்பாடுகளையும் வெறுப்புகளையும் கக்கும் ஒரு அரைவேக்காடுக்கு இருக்கும் வரவேற்புக்கு ஆயிரத்தில் ஒரு பங்கு ஓரு மெய்யான அறிஞனுக்கு அமைவதில்லை.

ஆர்வமூட்டும் ஒன்று இன்று உருவாகியுள்ளது. ஏதேனும் ஒருவகையில் கவனத்தை ஈர்த்துவிட்டால் அக்கவன ஈர்ப்பே ஒருவருக்கு முக்கியத்துவத்தை உருவாக்கி அவருடைய சொற்களுக்கு மதிப்பை உருவாக்குகிறது. ஆகவேதான் வசைபாடிகள் புகழ்பெறுகிறார்கள். கோமாளிகள் மேலும் புகழ்பெறுகிறார்கள். அவர்கள் ‘செல்வாக்குநர்’ (இன்ஃப்ளூயன்ஸர்) எனப்படுகிறார்கள். அவர்கள் உண்மையாகவே சமூகத்தின்மேல் செல்வாக்கு செலுத்துகிறார்கள்

இன்றும் ஒருவர் ‘மக்களுக்குத் தெரியும்’ ‘மக்களின் எண்ணம் புனிதமானது’ ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் என்றால் ஒன்று அவர் சென்றகாலத்திலேயே நின்றுவிட்ட பித்துக்குளி. அல்லது மிகச்சாமர்த்தியமான அயோக்கியர்.

இன்று மக்கள் மீதான கடுமையான விமர்சனத்தில் இருந்தே எந்த அறிவுஜீவியும் தொடங்க முடியும். முதலில் இங்கே ‘அரசியல்- நுகர்வு – கேளிக்கை’ ஆகிய மூன்றும் உருவாக்கும் பிரச்சாரங்களை  நிராகரித்து தனக்கான சிந்தனையை தன் வாசிப்பின் வழியாக, விவாதங்கள் வழியாக ஓர் அறிவுச்செயல்பாட்டாளன் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அந்த நிராகரிப்பு வழியாகவே அவன் மக்களிடமிருந்து விலகிவிடுவான். மக்கள் பேசும் எதையும் பேசாதவனாகவும் மக்கள் விரும்பும் எதையும் விரும்பாதவனாகவும் ஆகிவிடுவான். தன்னை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வான். அதன்பொருட்டு மக்களால் இகழவும் வெறுக்கவும்படுவான்.

அடுத்தபடியாக அவன் மக்களை விமர்சனம் செய்தே ஆக்வேண்டும். இன்று எந்த ஒரு உண்மையான சிந்தனையும் மக்களின் மீதான விமர்சனமாகவே இருக்க முடியும். மக்களின் ரசனையை, அவர்களின் பொதுவான புரிதல்களை விரிவாக நிராகரிதேயாகவேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்பவன் ‘அரசியல்- நுகர்வு- கேளிக்கை’ ஆகிய அமைப்புகளுடன் இணைந்திருப்பவன் மட்டுமே. அவனுக்கு அதில் லாபங்கள் இருக்கலாம். அவன் சிந்தனையாளன் அல்ல, வணிகன்.

இன்று மக்களை அணுகவேண்டிய முறை என்பது பழைய மார்க்ஸியர்கள் போல பக்தனாக இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு கைகூப்பி கண்ணீர்மல்கி நிற்பது அல்ல.மக்கள் என நம் முன் நிற்பது ‘கள்ளம் கபடமற்ற மக்கள் தன்னியல்பாக திரண்டு உருவான அமைப்பு’ அல்ல. அது அதிகார சக்திகளாலும் வணிக சக்திகளாலும் கட்டமைக்கப்பட்டதும், காழ்ப்புகள் பேராசைகள் ஆகியவற்றாலானதுமான ஓர் அமைப்பு என்னும் புரிதல் நமக்கு வேண்டும்.

அந்த அமைப்புக்குள் ஓர் அறிவியக்கவாதி ஏற்பவை, மதிப்பவை ஏராளமாக உண்டு. நீண்ட வாழ்க்கைத்தொடர்ச்சி வழியாக கற்கப்பட்ட அனுப அறிதல்கள் முதன்மையாக முக்கியமானவை.  மொழியினூடாகவும் கலை வழியாகவும் திரண்டு வந்த ஆழ்படிமங்கள் மேலும் முக்கியமானவை. அவை மக்களே அறியாமல் மக்கள் அறிந்த மெய்மைகள். தங்கம் மண்ணுடன் கலந்திருப்பதுபோல அவை ஆசாரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுடன் கலந்தே காணப்படும். அவற்றை பிரித்தறியும் நுண்ணுணர்வு அறிவியக்கவாதிக்கு இருந்தாகவேண்டும்.

எந்த இலக்கியத்திற்கும் வேர்நிலம் என்பது மக்கள்தான். ஆகவே இலக்கியவாதி மக்கள்மேல் பெரும்காதல் கொண்டவனாகவே இருப்பான். மக்களை அவன் கவனித்துக்கொண்டே இருப்பான். மக்களிடமிருந்து வாழ்க்கைக்கூறுகளையும் ஆழ்படிமங்களையும் எடுத்து இலக்கியமாக்குவான். மக்களிடமிருந்து எடுத்தவற்றை மறு ஆக்கம் செய்து மக்களுக்கே அளிப்பதுதான் கலை, இலக்கியம், சிந்தனை எல்லாமே.

அதாவது மக்கள் என்றால் இரண்டு அடுக்குகள் கொண்ட ஓர் அமைப்பு. திரண்டு நம் முன் நின்றிருக்கும் மக்கள் என்னும் கூட்டம் வெறும் கூச்சல்களால் ஆனது. அரசியல்வாதிகளாலும் வணிகர்களாலும் உருவாக்கப்பட்ட வெற்றுத்திரள். அதனிடம் நாம் உரையாட ஒன்றுமில்லை, அறியவும் ஒன்றுமில்லை. அதன் குரல்களுக்கு நம் வகையில் எந்த மதிப்பும் இல்லை. அதேசமயம் அதன் அடியில், அதுவே அறியாத ஓர் அடுக்கில் ஒவ்வொரு துளியிலும் நாம் அறியும் அறிவு, கலை என சில உள்ளது. அந்த வேறுபடுத்தும் பார்வை நமக்குத்தேவை.

ஓர் இலக்கியவாதி, ஓர் அறிவியக்கவாதி பேசுவதும் மக்களின் அந்த அறியப்படாத நுண்வடிவை நோக்கியே. நான் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன். இங்கே சமூகவலைத்தளங்களிலும் மின்னூடகங்களிலும் கூச்சலிடும் பெருங்கும்பல் அவற்றை வாசிக்கும் என எந்த எண்ணமும் எனக்கில்லை. வாசிக்கவே கூடாது என்னும் எண்ணமே உள்ளது. ஆனால் மக்கள் என்னும் அத்திரளுக்குள்தான் என் வாசகர்களும் உள்ளனர். அவர்களைத்தான் நான் அறிவியக்கம் நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கிறேன்.

இலக்கியம், கலை, சிந்தனை ஆகியவை மக்கள் என்ற ஒட்டுமொத்த திரளிடம் பேசுவதில்லை. தனித்தனியாக மனிதர்களிடம்தான் பேசுகின்றன. அந்த தனிமனிதர்களும் மக்கள் எனும் திரளில் உறுப்புதான். ஆனால் வாசிக்க, கலையை ரசிக்க, சிந்திக்க ஆரம்பித்ததுமே அவர் தனித்துவிடுகிறார். அந்த உரையாடல் நிகழ்வது அவருக்குள் உள்ள ஆழ்மனதுக்கும் கலைஞனின், எழுத்தாளனின் ஆழ்மனதுக்கும்தான். ஒருவகையில் அது மக்களில் ஒரு துளி மக்களில் இன்னொரு துளியுடன் உரையாடுவதுதான். மக்களின் ஆழ்மனம் தனக்குள் உரையாடிக்கொள்வதுதான்.

இன்று ஒரு சமூகப்பணியாளன் மக்களைப் பார்க்கவேண்டிய கோணமும் இதுவே. அவன் மக்கள் என இன்று திரண்டிருக்கும் இந்த அமைப்பின் ஒரு பகுதி அல்ல. அந்த அமைப்பின் ஏற்புக்காக அவன் பணியாற்ற முடியாது. மக்கள் என்னும் அந்த அமைப்பின் சுயநலமும் ஏமாற்றுத்தனமும் அவனுக்கு முன் வந்து நின்றுகொண்டேதான் இருக்கும். அவன் பணியாற்றவேண்டியது அந்த மக்களில் இருக்கும் தனிமனிதர்களுக்காக. அந்த மக்களில் உறையும் ஒரு தொடர்ச்சியின் நலனுக்காக.

ஆகவே கலைஞனும் எழுத்தாளனும் மக்கள்பணியாளனும் மக்கள் பற்றிய எந்த கற்பனாவாத நெகிழ்வையும் கொண்டிருக்க முடியாது. பொதுவாக அத்தகைய நெகிழ்வுகளை கொண்டிருப்பவர்கள் எந்த வகையிலும் களப்பணி ஆற்றாத , மக்களை சந்திக்கவே வாய்ப்பற்ற போலி இலட்சியவாதிகள் மட்டுமே.  அதேசமயம் அவன் மக்கள் மேல் கசப்பையும் கொண்டிருக்க மாட்டான். ஏனென்றால் மக்கள் எனும் அந்த திரள்தான் அவன் செயல்பாட்டுக்கே அடிப்படை. அவனுக்கு ஞானத்தையும் கற்பனையையும் அள்ளி தருபவர்கள்.

மக்கள்மேல் பெரும் பற்றுடன் மட்டுமே இலக்கியவாதி எழுத முடியும். சமூகப்பணியாளன் செயல்பட முடியும். ஆனால் மக்களின் விருப்பப்படி எழுத்தாளன் எழுத கூடாது. மக்கள் சொன்னபடி செயல்பட்டால் சமூகப்பணியாளன் ஊழலை மட்டுமே செய்ய முடியும். நோயாளியை கேட்டு, அவன் விருப்பப்படி மருத்துவன் செயல்பட முடியாது. எல்லாமே மக்கள் விருப்படி செய்பவன் மக்களை பயன்படுத்திக்கொள்ளும் அரசியலாளனும் வணிகனும் மட்டுமே. மக்களின் நலனுக்காக எழுதுபவன்

இன்று ஒரு அறிவியக்கவாதி அல்லது சமூகப்பணியாளன் மக்களைப் பற்றி விமர்சனம் செய்தால் உடனே எதிரில் வந்து சவால்விடுவது அரசியல்வாதிகளாலும் வணிகர்களாலும் திரட்டப்பட்ட கும்பல்தான். ‘மக்களைக் குறை சொல்கிறாயா?” என கூச்சலிடுவார்கள். அவர்களை திரட்டி வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் கூடவே வந்து தொடைதட்டுவார்கள். அந்த சலம்பல்களை நாம் செவிகொடுக்கலாகாது. “டேய், போடா. எனக்கு உண்மையான மக்கள் என்றால் யார் என்று தெரியும்’ என்று நாம் பதிலுரைக்கவேண்டும்.

(மேலும்)

 

https://www.jeyamohan.in/195317/

  • கருத்துக்கள உறவுகள்

இக் கட்டுரையில் முதலாவது படித்து விட்டேன் ஒரு கேள்விக்கு மிகச்சரியான ஒரு பதில் .....நல்லா இருக்கு கிருபன் தொடருங்கள்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாமரரை எதிர்கொள்வது…

jeyamohanDecember 31, 2023

Public-Opinion-1024x600-1.jpeg

 

பாமரர் என்று நாம் மொழியாக்கம் செய்து பயன்படுத்தும் சொல் கடைக்கோடிக் குடிமகன் என்னும் பொருளில் மேலைநாட்டு ஜனநாயக விவாதங்களில் பயன்படுத்தப்பட்டது. ஜான் ரஸ்கினின் Unto This Lastஎன்னும் நூலில் இருந்து உருவான கருதுகோள் அது. அரசு என்பது கடைக்கோடி மனிதனுக்கும் நலம்புரிவதாக, அவனையும் கருத்தில்கொள்வதாக அமையவேண்டும் என அன்றைய ஜனநாயகவாதிகள் சொன்னார்கள்.

அது ஓர் உயர்ந்த சிந்தனை. ஜனநாயகத்தின் அடிப்படைக் கருதுகோள். ஒரு குடிமகன் படிக்காதவனாக, பண்படாதவனாக, தன் உரிமைகள் என்ன என்பதையே அறியாதவனாக இருக்கலாம். அப்போதும் ஜனநாயகம் அவனை ஒதுக்கிவிடக்கூடாது. அவனுக்காகவும் அது நிலைகொள்ளவேண்டும். அவனுக்கும் உரிமைகளில்  எந்த பாகுபாடும் இருக்கலாகாது.

அதற்கு அடுத்த படியில் இடதுசாரிகள் பாமரர்களை கற்பனாவாத நெகிழ்வுடன் மகிமைப்படுத்தலானார்கள். படித்தவர்கள் படித்த படிப்பென்பது நிலவுடைமைச் சமூகத்தின் கல்வி. அல்லது முதலாளித்துவச் சமூகத்தின் கல்வி. அக்கல்வியால் அவர்கள் கறைபட்டவர்கள். பாமரர் அந்த கறையேதும் இல்லாத தூய குடிமகன். மக்கள் என்பவர்கள் உண்மையில் பாமரர்களே என அவர்கள் வாதிட்டனர். அந்தப் பாமரர்களை வழிநடத்தவேண்டியவர்கள் புரட்சிக்கல்வி கற்றவர்களாகிய தாங்கள் என்றனர். (மார்க்ஸியர்களான மாவோ சே துங்கும் போல்பாட்டும் பாமரர் அல்லாதவர்களை கொன்று குவித்து சமூகத்தை தூய்மைப்படுத்தியதும் உண்டு)

பாமரரை புனிதப்படுத்துதல் என்பது இடதுசாரிச் சிந்தனையின் ஒரு பகுதியாக நம் இலக்கியங்களில் ஊடுருவியது. தொடக்ககால எழுத்துக்களின் மையக்கருவே பாமரர்களில் வெளிப்படும் உயர்பண்புகளை விதந்தோதுவதுதான். ஆரம்பத்தில் அது விந்தையான ஒரு புதியசிந்தனையாக இருந்தது. பின்னர் ஏற்பு பெற்றது. பின்பு அரசியல்சரிநிலையாக ஆகியது. இன்று பாமரன் என்றாலே நல்லவன், பண்பானவன் என்று சொல்லவேண்டும் என்பது ஒரு அறிவுத்தளக் கெடுபிடி. பாமரனை கொண்டாடவேண்டுமே ஒழிய விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள்.

பாமரனை கொண்டாடும் இந்த மனநிலை முன்னர் மதங்களில் இருந்தது. இந்தியப் பக்தி இயக்கம் பாமரர்களை கொண்டாடுவதை காணலாம். அறிஞர்களுக்கு காணக்கிடைக்காத கடவுள் மூர்க்கமான பக்தி கொண்ட பாமரனுக்கு அருள்கிறார் என பக்திக்கதைகள் சொல்கின்றன. கிறிஸ்தவ மரபிலும் கல்வி சாத்தானுடன் தொடர்புபடுத்தப்பட்டது, கல்லாமை நேரடியாக ஏசுவுக்கு அணுக்கமானதாக கொண்டுசெல்லும் என்று சொல்லப்பட்டது. ஏசு பாவிகளை மீட்கவே வந்தார் என்னும் நம்பிக்கையானது அவ்வாறு மீட்டமைக்கப்பட்டது.

கிறிஸ்தவம் , பக்தி இயக்கத்தின் சைவ வைணவப் பெருமதங்கள் முதலியவை பாமரரைக் கொண்டாடுவதன் வழியாக பாமரரைக் கவர்ந்து பெரிய அமைப்புகளாக மாறின. அதையே பின்னர் இடதுசாரி புரட்சிகர அமைப்புகள் செய்தன. அவையும் பாமரரை புகழ்ந்து பாமரரை ஒருங்குதிரட்டி ஆற்றல்கொண்டவையாக ஆயின. அந்த வழியையே இன்று அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். அவர்கள் பாமரரை புகழ்வது பாமரர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே.

ஓர் அறிவியக்கவாதி ஒருபோதும் பாமரரைப் புகழமுடியாது. அது அவன் செயல்படும் அறிவியக்கத்தையே அவன் நிராகரிப்பது போன்றது. மானுடகுலம் உருவானபோதே தோன்றி இன்று வரை நீடிக்கும் மானுட அறிவு என்னும் மாபெரும் சக்தியை மறுப்பது போன்றது. மனிதகுலம் பிற உயிர்களில் இருந்து வேறுபட்டிருப்பது அந்த அறிவியக்கத்தால்தான்.  மனிதகுலம் உருவாக்கியுள்ள சமூக அமைப்புகள், நம்பிக்கைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், கலைப்படைப்புகள் அனைத்தும் அதன் அறிவியக்கத்தின் உருவாக்கங்கள்தான்.

பாமரர் என்றால் யார்? ‘சமூகத்தில் நிகழும் அறிவியக்கத்துடன் எவ்வகையிலும் பிரக்ஞைபூர்வமாக தொடர்பு கொள்ளாத ஒருவர்’ என பொதுவாக வரையறை செய்யலாம். அந்த அறிவியக்கத்துடன் இருவகையில் தொடர்புகொள்ள முடியும். அதை அறிந்துகொள்ளுதல், அதில் பங்களித்தல். இரண்டையுமே செய்யாதவர் பாமரர்.

அப்படி, அறிவியக்கத்துடன் தொடர்பே அற்றவர்கள் உண்டா என்று கேட்கலாம்.அறிவியக்கத்தால் தொடப்படாத ஓர் மானுட உயிர் பூமியில் இருக்க முடியாது. ஏனென்றால் ஆசாரங்கள், வாழ்க்கைமுறைகள், மதம், அறிவியல் எல்லாமே அறிவியக்கத்தால் உருவானவைதான். கல்வி எதுவானாலும் அறிவியக்க அறிமுகம்தான். ஆனால் பாமரர் என்பவர் அறிவியக்கம் பற்றி அறியாமல், தனக்கு புகட்டப்பட்டதை மட்டும் அறிந்திருப்பார். தன் உயிர்வாழ்தலுக்குத் தேவையானவற்றை மட்டும் கற்றிருப்பார். அதற்குமேல் அக்கறையே அற்றவராக இருப்பார். அத்தகையோரை நாம் அன்றாடம் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம்.

அத்தகைய பாமரர்கள் பயனற்றவர்கள் என்றோ, அவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் என்றோ எந்த அறிவியக்கவாதியும் சொல்ல மாட்டான். அறிவியக்கம் பாமரர்களுக்கு எதிரானது அல்ல. பாமரர்களுக்கும் அவர்களுக்குரிய சமூகப்பங்களிப்பு உண்டு. அவர்கள் அறிவியக்கத்தின் ஆராய்ச்சிக்குரிய மூலப்பொருட்கள், அறிவியக்கத்தின் பேசுபொருட்கள் மட்டுமே. அவர்கள் சமூகத்தின் பகுதியினர் என்பதனால் அறிவியக்கம் அவர்களின் நலனையும் கருத்தில்கொண்டே செயல்படமுடியும்.

ஆனால் அறிவியக்கத்தின் பார்வையில் அவர்களின் கருத்துக்கள் பொருட்படுத்தப்படவேண்டியவை அல்ல. அவர்களை அறிவியக்கம் ஒரு தரப்பாகக் கொள்ளாது. அவர்கள் அறிவியக்கம் மீது கொண்டுள்ள அச்சம், இளக்காரம் ஆகியவை எதிர்கொள்ளப்படவேண்டிய எதிர்மறை விசைகள். அவர்களிடமிருந்து அறிவியக்கம் பாதுகாக்கப்படவேண்டும்.

இன்று, சமூகவலைத்தளச் சூழலில் பாமரர்களுக்கு ஊடகம் அமைந்துள்ளது. அவர்களின் கருத்துக்கள் திரண்டு ஆற்றல் கொண்டவை ஆகியுள்ளன. இன்று அந்த பாமரர் அறிவியக்கத்தை அழிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகத் திரண்டுள்ளனர். அந்த புரிதல் அறிவியக்கத்தில் செயல்படுபவர்களுக்குத் தேவை. சென்ற காலகட்டத்தில் ஜனநாயகத்தை முன்வைத்த அறிவியக்கவாதிகளும் இடதுசாரிகளும் பாமரர் பற்றி கொண்டிருந்த கற்பனாவாத நெகிழ்வுடன் இன்று அவர்களை அணுகுவது அறிவியக்கத்தின் அழிவுக்கே வழிவகுக்கும்.

பாமரர் என்ற சொல்லை இரண்டு வகைகளில் மேலும் பகுத்து விரித்துக்கொள்ள வேண்டியுள்ளது. துறைசார் பாமரர்கள் இன்று உண்டு. ஏனென்றால் இன்று எல்லா அறிவுத்துறைகளும் பிரம்மாண்டமாக பெருகி வளர்ந்து தனி உலகங்களாக மாறிவிட்டிருக்கின்றன. முறையான பயிற்சியின்றி எந்த அறிவுத்துறைக்குள்ளும் நுழைய முடியாது. ஆகவே ஒரு துறை அறிஞர் இன்னொரு துறையில் பாமரர் ஆக இருக்க முடியும். முன்புபோல எல்லாத்துறைகளிலும் ஓர் அறிதல் இன்று இயல்வது இல்லை.

நான் கணிதம் அல்லது கணிப்பொறியியல் போன்ற ஏராளமான துறைகளில் பாமரனே. அங்கே சென்று என் கருத்துக்களைச் சொல்ல மாட்டேன். எனக்கு புரியாதவை என்பதனால் அவற்றை இகழ மாட்டேன். எனக்கு என்ன தெரியும், எங்கு நான் கருத்து சொல்லலாம் என்று தெரிந்திருப்பதே இன்று ஓருவனின் அடிப்படைத் தகுதி. அது இல்லாதவர் பாமரர். ஒரு துறையில் நீங்கள் எந்நிலையில் நின்று கருத்து சொல்கிறீர்கள் என்பதை நீங்களே வரையறை செய்துகொள்ளவேண்டும். உதாரணமாக நான் பங்குச்சந்தையில் வெறும் எளிய முதலீட்டாளனாக மட்டுமே எதையேனும் சொல்லமுடியும். நிபுணனாக அல்ல.

ஆனால் இன்று சமூகவலைத்தளச் சூழலில் கணிப்பொறியியலில் உயர்தகுதி கொண்ட ஒருவர் மருத்துவத்தில் புகுந்து கருத்துச் சொல்வது சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. ஒரு கணித நிபுணர் தொல்லியல் தேவையற்றது என இகழ்வதை கண்டுள்ளேன். அவர்கள் அந்ததந்த களங்களில் பாமரர்களே.

இன்னொரு வகை பாமரர்களை ‘படித்த பாமரர்’ என்று சொல்லலாம். இன்று கல்வி பரவலாக ஆகியுள்ளது. தொழில் வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஊடகம் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. ஆகவே ஏராளமானவர்களுக்கு தங்கள் துறைகளின் தேர்ச்சி உண்டு. செய்திகளை தெரிந்தும் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களும் ஒருவகை பாமரர்களாக இருக்கக்கூடும்.

ஒருவர் இன்றுள்ள ‘அரசியல்- நுகர்வு- கேளிக்கை’ என்ற மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் மூளைக்குள் திணிக்கப்பட்டவற்றை மட்டுமே அறிந்து, அவற்றை மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர் என்றால் அவர் படித்த பாமரரே. தனக்குரிய சுயமான தேடலுடன், தனக்குரிய களத்தில் படித்தும் அறிந்தும் முன்செல்லாதவர் அனைவருமே பாமரர்கள்தான். ஏதேனும் ஒருவகையில் மெய்யான அறிவியக்கத்துடன் தொடர்புகொண்டிராதவர் பொதுக்களத்தில் என்ன அறிந்திருந்தாலும் பாமரரே.இந்நூற்றாண்டு உருவாக்கிய ஒருவகை நவீனப்பாமரர்கள் இவர்கள்.

இப்படி ஒரு கூட்டம் இருக்கிறது என்பதை அறிவியக்கத்தில் செயல்படுபவர் உணர்ந்தாகவேண்டும். இவர்களை நாம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். இவர்களிடம் ஏமாந்துகொண்டே இருக்கிறோம். ‘படிச்சவனா தெரியறான் சார், ஆனா….’ என்று அடிக்கடி நாம் சொல்ல நேர்கிறது. ஆனால் அவர்களை நம்மால் வரையறை செய்துகொள்ள முடிவதில்லை. அதனால் பல இடர்கள் நம் சிந்தனையிலேயே உருவாகின்றன.

என் இளம் நண்பர் ஒருவர் சொன்னார். ‘எம்.பி.பி.எஸ் படிச்சிருக்கான் சார். ஆனா அரசியல் கட்சிக்கு அடியாள் மாதிரி மூர்க்கமாப் பேசிட்டிருக்கான்… கல்லத்தூக்கி வீசுற தொண்டனைவிட கேவலமா இருக்கான்’.  இங்கே ஒரு பாமரர் ஒரு பட்டம் வைத்திருப்பதுதான் குழப்பத்தை உருவாக்குகிறது. பாமரர்களின் இயல்பு அவர்களுக்கு புகட்டப்பட்டவற்றில் அப்படியே மூழ்கிவிடுவது. அதன் விளைவாக அரசியல், மதம், இனவாதம், மொழிவாதம், தனிநபர் வழிபாடு போன்றவற்றில் கண்மூடித்தனமாக இருப்பது. சில அடிப்படை நம்பிக்கைகளை வெறியுடன் சொல்லிக்கொண்டிருப்பது.

இன்னொரு நண்பர் புதியவாசகர் சந்திப்பின்போது சொன்னார். ‘நல்ல படிச்சிருக்காங்க. அரசியல் சினிமா எல்லாம் பேசுறாங்க. ஆனா உங்கள ஒருத்தன் அடிச்சப்ப புளிச்சமாவுன்னு சொல்லி இளிப்பான் போட்டுட்டு இருந்தாங்க. இப்பவும் எங்க போனாலும் அதைச் சொல்லி ஒரு இளிப்பான் போடுறாங்க…இவங்களை எப்டிசார் எடுத்துக்கிடுறது?’ அதேதான் இங்கும் பிரச்சினை. பாமரர்கள், அறிவியக்கத் தொடர்பே அற்றவர்கள். ஆனால் கூடவே இங்கே மூன்று களங்களில் பிரச்சாரம் செய்யப்படும் பொதுவான கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத்தான் படித்த பாமரர் என வரையறை செய்கிறோம்

இதை எழுதும் இன்று இரண்டுபேரை சந்தித்தேன். பிராமணச் சாதியில், மிக உயர்ந்த பொருளியல் சூழல் கொண்ட குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் மிகப்பெரிய கல்வி கற்று மிகமிக வெற்றிகரமாகத் தொழில் செய்து வருபவர் ஒருவர். ஒரு மணி நேரம் அவர் பேசினார். நூறாண்டுகளுக்கு முன் ஓர் அக்ரஹாரத்தில் கல்வியறிவே அற்ற ஒருவர் என்னென்ன பேசுவாரோ அதையேதான் நிறைய ஆங்கிலம் கலந்து ஒருவகை மழலையில் சொல்லிக்கொண்டிருந்தார். ஆசாரமூடத்தனம், மதமூடத்தனம், சாதிப்பெருமிதம், அதன் விளைவான அரசியல் மூர்க்கம். கூடவே எல்லாவற்றுக்கும் அபத்தமான அறிவியல் விளக்கம்.

நான் ஒரு வார்த்தை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். புன்னகையுடன் கைகுலுக்கி நான் அவருக்கு அளிக்கவேண்டிய செக்கை அளித்துக்கொண்டு கிளம்பினேன். திரும்பும் வழியில் என்னுடன் வந்த இன்னொருவர் ‘என்ன சார் பேசாமலிருக்கீங்க?’ என்றார். அவரும் மிகச்செல்வந்த குடியில் பிறந்தவர். நிர்வாகவியலில் உயர்கல்வி கற்றவர், தொழிலதிபர். அவர் பேச ஆரம்பித்தார். பிராமணர்கள் பற்றி இங்கே சொல்லப்படும் எல்லா அபத்தமான காழ்ப்புக் கருத்துக்களையும் வரிசையாகச் சொன்னார். அவரும் எல்லாவற்றுக்கும் அறிவியல் விளக்கமும் சொன்னார். பெரியார், அண்ணா பற்றிய எல்லா பொய்க்கதைகளையும் வரிசையாகச் சொன்னார். இன்னொரு வகை பாமரர். இங்கும் நான் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன். இவர் எனக்கு பெரிய தொகையை தந்தவர். ஆகவே இரண்டு மடங்கு புன்னகை புரிந்தேன்.

இந்தவகைப் பாமரர்கள் சூழ வாழும் சூழல் இன்று அறிவியக்கவாதிக்கு அமைகிறது. நண்பர்கள், தொழிலில் உடனிருப்பவர்கள், ரயிலில் சந்திப்பவர்கள். இவர்களை கடந்துசெல்லும் பொறுமை இன்றியமையாதது. சமூகவலைத்தளங்களில் இவர்களே திரண்டு ‘கருத்துத்தூண்’ மாறியிருக்கையில் நாம் இவர்களின்மேல் சென்று முட்டிக்கொள்ளக்கூடாது. ‘கருத்துமூட்டம்’ ஆக இவர்கள் திரண்டிருக்கையில் நாம் மூச்சுத்திணறலாகாது. இவர்களை கடந்து நம் சிந்தனையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பாமரரை கையாளத் தெரியாமல் இந்நூற்றாண்டில் இனி எவரும் சிந்தனைக் களத்தில் செயல்பட முடியாது. அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தவேண்டியதில்லை. ஆனால் தேவையானபோது சொல்லியே ஆகவேண்டும், பாமரர் என்பவர் பாமரரே. பாமரராக இருப்பதில் பெருமை ஏதுமில்லை. பாமரர் என்பது புனிதமான ஒரு நிலை அல்ல. பாமரரை எந்த வகையிலும அறிவியக்கவாதி நிறைவுசெய்யவேண்டிய தேவை இல்லை.

அறிவியக்கவாதி பாமரரை நிமிர்வால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். தன்னுடைய அறிவுத்தகுதி பற்றியும் அறிவியக்கத்தில் தன் பங்களிப்பு பற்றியும் மானுடச் சிந்தனை வரலாற்றில் ஒரு துளியாகவேனும் தனக்கு ஒரு இருப்பு உண்டு என்பது குறித்தும் அவன் பெருமிதம் கொண்டிருக்கவேண்டும். அதை பாமரர் மேட்டிமைவாதம் என்பார்கள். அப்படியென்றால் அப்படியே வைத்துக்கொள், நீ பாமரன், என்றேனும் நீ மேலெழுந்து வந்தாலொழிய உன்னிடம் எனக்கு உரையாடல் இல்லை என்றே அறிவியக்கவாதி பதில் சொல்லவேண்டும்.

அந்த நிமிர்வால் பாமரர் சீண்டப்படுவார்கள். கூச்சலிடுவார்கள். கூட்டாக சூழ்ந்துகொண்டு ஏளனமும் வசையும் பொழிவார்கள். ஆனால் அவர்களில் மிகச்சிலருக்கு தாங்கள் மெய்யாகவே பாமரர் என்று தெரியவரக்கூடும். அந்த தன்னுணர்வால் அவர்கள் அறிவியக்கம் நோக்கி வரக்கூடும். அந்த மிகச்சிலருக்காக பாமரரை நோக்கி நீ பாமரன் என்று சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டும்.

(நிறைவு)

 

https://www.jeyamohan.in/195323/

அருமையான கட்டுரை.

முன்னர் தலைப்பை மோடி மையவாதம் என்று விளங்கிக் கொண்டு கடந்து சென்ற்விட்டேன்.

இன்னொரு தடவை ஆறுதலாக வாசிக்கத் தூண்டுகிறது.

கிருபன் தனியே வெட்டி ஒட்டாமல் முழுமையாக வாசித்துள்ளீர்கள் என்பதைக் கட்டுரையை வாசிக்கும்போது உணர முடிகிறது😁

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதத்தில் மிகமுக்கியமான நூல், நான் முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து மேற்கோள் காட்டிவரும் நூல், வில்ஹெல்ம் ரீஹ் எழுதிய The Mass Psychology of Fascism. ஒரு தனிமனிதனின் சராசரி அறிவுத்தரம் அவனைப்போன்றவர்கள் ஒன்றாகி ஒரு திரளாக ஆகும்போது மிகமிகக் குறைகிறது என அந்நூல் வாதிடுகிறது. அதாவது நூறு புத்திசாலிகள் ஒரு  கூட்டமாக ஆனால் முட்டாள்தனமான ஒரு கும்பல்தான் உருவாகும். அதிலுள்ள ஒவ்வொரு புத்திசாலியும் கும்பலாக செயல்படும்போது முட்டாளாகவே இருப்பான்.

பெருந்திரள் என்பது உணர்ச்சிகளால் ஆனது என்றார் ரீஹ். எதிர்மறை உணர்ச்சிகளே மேலும் வலுவானவை.எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும்தான் மக்களை ஒருங்கிணையச் செய்கிறது. ஒரு எதிரியை சுட்டிக்காட்டி, அதன் மேல் வெறுப்பை உருவாக்கி பிரச்சாரம் செய்யும் ஒருவர் மிக எளிதாக மக்களின்மேல் முற்றதிகாரத்தை அடையமுடியும். ஹிட்லரும் முஸோலினியும் அழிந்தாலும் இன்று உலகமெங்கும் அரசியல்வாதிகளின் அரசியல்நடவடிக்கை என்பதே எதிரிகளை சுட்டிக்காட்டி வெறுப்பை உருவாக்கி அதிகாரத்தை வெல்வதாகவே உள்ளது.

கட்சியரசியல், நுகர்வு, கேளிக்கை ஆகிய மூன்று தளங்களில் இன்றைய மக்கள் இடைவிடாமல் பிரச்சாரத்திற்கு இரையாகிறார்கள். சிந்திக்கவே விடாமல் அவர்கள் முற்றுகையிடப்படுகிறார்கள். அவர்களின் தெரிவுகள், ரசனைகள் எல்லாமே அரசியல்கட்சிகள், வணிக விளம்பரங்கள், கேளிக்கையூடகங்கள் ஆகிய மூன்று மாபெரும் பிரச்சார அமைப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன. உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். மேலே சொன்ன மூன்றை மட்டும்தான். வேறெதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்கள், கவனிக்க அவர்களால் இயலாது. ஒரு சொல்கூட உள்ளே செல்ல வழி கிடையாது. அவர்கள் ஒருவகை இயந்திரங்கள்போல  உள்ளிருக்கும் மென்பொருளில் பொறிக்கப்பட்டுள்ள ஆணைக்குக் கட்டுப்பட்டு இயங்குபவர்கள்.

             

இவை முற்றிலும் உண்மையானதே.......நாம் விரும்பியோ விரும்பாமலோ அதற்குள்ளேயே சுழன்று கொண்டு இருக்கின்றோம்.......தனிமனித கொள்கைகளில் தளர்வடைந்து விடுகின்றோம்......! 

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு வார்த்தை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். புன்னகையுடன் கைகுலுக்கி நான் அவருக்கு அளிக்கவேண்டிய செக்கை அளித்துக்கொண்டு கிளம்பினேன். திரும்பும் வழியில் என்னுடன் வந்த இன்னொருவர் ‘என்ன சார் பேசாமலிருக்கீங்க?’ என்றார். அவரும் மிகச்செல்வந்த குடியில் பிறந்தவர். நிர்வாகவியலில் உயர்கல்வி கற்றவர், தொழிலதிபர். அவர் பேச ஆரம்பித்தார். பிராமணர்கள் பற்றி இங்கே சொல்லப்படும் எல்லா அபத்தமான காழ்ப்புக் கருத்துக்களையும் வரிசையாகச் சொன்னார். அவரும் எல்லாவற்றுக்கும் அறிவியல் விளக்கமும் சொன்னார். பெரியார், அண்ணா பற்றிய எல்லா பொய்க்கதைகளையும் வரிசையாகச் சொன்னார். இன்னொரு வகை பாமரர். இங்கும் நான் புன்னகையுடன் அமர்ந்திருந்தேன். இவர் எனக்கு பெரிய தொகையை தந்தவர். ஆகவே இரண்டு மடங்கு புன்னகை புரிந்தேன்.....!

 

இந்த இடத்தில் எனக்கு ஒரு குழப்பம் இருக்கின்றது......இவ்வளவு தெளிவுடன் இருக்கும் ஜெயமோகனும் சில கொள்கைகளை சமரசம் செய்வதற்கு தனக்கென ஒரு விலையை நிர்ணயம் செய்திருக்கின்றாரோ என்று....... மற்றும்படி கட்டுரை நன்றாகத்தான் இருக்கின்றது.........!  👍

நன்றி கிருபன்......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

இவ்வளவு தெளிவுடன் இருக்கும் ஜெயமோகனும் சில கொள்கைகளை சமரசம் செய்வதற்கு தனக்கென ஒரு விலையை நிர்ணயம் செய்திருக்கின்றாரோ என்று.......

உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கின்றது, அறம் உட்பட!

ஆனால் ஆசான் படித்த பாமரர்கள் முன்னால், அந்தப் பாமரர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாக இருப்பது hopeless என்று அவர் நினைப்பதால் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெமோவின் தீவிர இந்திய தேசியவாதத்துடன் உடன்பாடு இல்லை.

ஆனால்,சிக்கலான, அரூபமான விடயங்களை தெளிவாக தமிழில் வடிக்கும் அவரின் எழுத்துத் திறன் அவருக்கேயுரித்தானது. இந்தத் தொடர் சிறந்த உதாரணம்.

இந்த "சேர்டிபிகேட்/படிப்பு சான்றிதழ் கொண்ட பாமரர்கள்" பலரை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அண்மையில் பொறியியலாளர்கள் சிலர் இருந்த குழுவில் விருந்தொன்றில் உரையாடிக் கொண்டிருந்தோம். நெட்பிளிக்ஸ் தொடர்கள், திரைப்படங்கள் பற்றிப் பேச்சுத் திரும்பியது. அதில் The Manifest என்ற ஒரு தொடர், காணாமல் போய் சில ஆண்டுகள் கடந்து திரும்பி வந்த ஒரு விமானத்தைப் பற்றியது - முற்றிலும் கற்பனைத் தொடர். "இப்படியான ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்தது, அமெரிக்க அரசு வெளியே வராமல் அமுக்கி விட்டது" என்று ஒரு பொறியியலாளர் உறுதியாக வாதிட்டார். யூ ரியூபில் யாரோ விட்ட வெடியை, பௌதீகவியலின் விதிகளைப் படித்து, பரீட்சை எழுதிப் பாஸ் செய்து, அமெரிக்காவில் பொறியியலாளராக இருக்கும் ஒருவர் நம்பியதை ஆச்சரியத்தோடு கடந்து சென்றேன். இது தான் இன்றைய நிலை😎!   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.