Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத உணர்வுகளுக்கு அப்பால் கலாசார வடிவமாக இராமாயண இலக்கியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணம்.. மதம் சார்ந்த சித்தாந்தத்தோடு இந்திய உபகண்டத்தில் இனங்காட்டப்பட்டு.. மத உணர்வூட்டப்பட்டு.. மத எதிர்ப்புக்கும் மத வெறிக்கும் இடையில் கிடந்து அதன் தொன்மை தொலைத்து நிற்கச் செய்யப்படுகிறது. ஆனால் உலக அரங்கில் அந்த காவிய இலக்கிய இருப்பு நயம் என்பது தென் கிழக்கு ஆசியா வரை.. பல்லின கலாசாரங்கள் சார்ந்து வாழுகின்றது என்பதற்கு இந்தோனிசியாவில் ( உலகின் பெரிய இஸ்லாமிய நாடு) ஆடப்படும் சடாயு என்றும் இராமாயண பாத்திர நடனங்கள் சான்று பகர்ந்து நிற்கின்றன.

தென்னிந்தியாவிலேயே அது வட இந்திய மத புராணமாக இனங்காட்டப்பட்டு.. சில சக்திகளின் அரைகுறை விளக்கங்களுக்கு இலக்காகி.. சமூகத்தில் தவறான எண்ண ஓட்டங்களை விதைக்கவும் இலக்கியத்துக்கு அப்பால் அதை அரசியலாக்கவும் விளைகின்றனர்.

--------------------

வீர ரசம் பொங்கும் ஜடாயு நடனம்: இந்தோனேசியாவிலிருந்து

ராமாயணம் பற்றி யூ-ட்யூபில் தேடிக் கொண்டிருக்கையில் கிடைத்தது இந்த இந்தோனேசியாவின் பாரம்பரிய நடனம் (பாலி / ஜாவா பகுதிகளைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்).

Edited by nedukkalapoovan

இராமயணம் = இராமன் (அரசன்?) இராவணனை (அரசன்?) கொன்றான் = அரசு இயல் = அரசியல்? :unsure:

பதிவுக்கு நன்றி நெடுக்ஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவின் நோக்கம் இலக்கியமென்பது எவ்வகையில் ஆரிய - திராவிட சாயப்பூச்சுக்களாலும்.. மத இட்டுக்கட்டுகைகளாலும்.. சாதிய இட்டுக்கட்டுகளாலும்..அதன் இலக்கியத்தன்மை புறக்கணிக்கப்பட்டு.. மொழி கையாளல் திறன் புறக்கணிக்கப்பட்டு.. ஒதுக்கப்படவும் அரசியல் மயமாக்கப்படவும் பயன்படுகிறது என்பதைத்தான்.

எனது இந்தப் பார்வையைப் போல.. பேராசிரியர் கைலாசபதி அவர்கள் எழுதிய இலக்கிய விமர்சனம் ஒன்றுக்கான இந்தக் குறிப்பில் அவரும் அதை உணர்ந்து தெளிவுறக் காட்டியுள்ளத்தைக் காணலாம்.. நன்றிகள் பேராசிரியர் அவர்களே..! நீங்கள் காலத்தால் அழியாத ஒரு அறிஞர் என்பதை இனங்காட்டி விட்டுள்ளீர்கள். அதுவும் புகலிடந்தில் இருந்து கொண்டு.. *** எமது மொழி இலக்கியங்களை மொழியியல்.. இலக்கிய வகையியல்.. அறிந்து.. பாதுகாக்க வேண்டிய நிலையை உணர்த்த உங்களை மேற்கோள் காட்டுவதில் நான் பெருமையடைகின்றேன். பேராசியர் கைலாசபதி அவர்கள் யாழ் பல்கலைக்கழத்தின் துணை வேந்தராக இருந்தவர். இன்று அவர் எம்முடன் இல்லை.

-------------------------

"இவ்விடத்திலே வேறு சில முயற்சிகளையும் குறிப்பிடுதல் பொருத்தமாயிருக்கும். தமிழில் விமர்சனக் கலையைத் தன்னுணர்வோடு முதன் முதலிற் கையாண்ட வ.வே.சு.ஐயர் தமது கம்பராமாயண ஆய்வு நூலில், கம்பனையும் பிற காவிய கர்த்தாக்கள் சிலரையும் ஒப்பிட்டுள்ளார். .... மர், வெர்.ல், மில்டன் ஆகியோர் ஐயரது கவனத்திற்குள் அகப்பட்டவர்கள்.

ஐயாரின் முயற்சி பல நோக்குடையதாக விருந்தது. ஒப்பியலின் அடிப்படையில் கம்பனைத் தூக்கி நிறுத்துவது மாத்திரமன்றி, 'காவிய சமத்காரத்தைப் பற்றி வி.தாரமாக விவரித்துள்ள' மேனாட்டுத் திறனாய்வாளரைத் தமிழ் நாட்டு வாசகருக்கு அறிமுகப்படுத்துவதும். அவரது நோக்கமாகத் தொரிகிறது. இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது, ஐயரது பெருமுயற்சியின் நிறைகுறைகளைப் புற நிலையில் வைத்து ஆராய வாய்ப்பிருக்கிறது. விடுதலைக்கு வீரத்துடன் உழைத்த தீவிரவாதியான ஐயர் விமர்சனத்திலும் தீவிரவாதியாகத் தான் இருந்தார். ராமாயணத்தை, "கம்பநாட்டாழ்வார் எழுதிய திவ்ய கிரந்தம்" என வருணிக்கும் ஐயர், கம்பனைப் புகழும் போது அவனை உலகின் தலையாய காவியகர்த்தா என்றே கூறுகிறார்.

"கம்பனுடைய ராமாயணமானது மற்ற கவிகள் எழுதிய ராம சரிதைகளையும் தமிழில் எழுதப்பட்ட இதர காவியங்களிற் பெரும்பாலான வற்றையும் கூட 'வெயிலிடைத் தந்த விளக்கொளிபோல் ஆக்கிவிட்டது. இது மாத்திரமல்ல. கம்ப ராமாயணமானது கம்பர் எழுதிய லியாதையும், விர்க்கிலியன் எழுதிய ஏனயிதையும், மில்டனுடைய சுவர்க்க ந.டம் என்ற காவியத்தையும், வியா. பாரதத்தையும் தனக்கே முதனூலாக இருந்த வால்மீகி ராமாயணத்தையும் கூட, பெருங்காப்பிய லட்சணத்தின் அம்சங்களுள் அனேகமாய் எல்லாவற்றிலும் வென்றுவிட்டது என்று சொல்லுவோம்."

இக்கூற்று அழுத்தந் திருத்தமாகக் கம்பனை அரியாசனத்தில் ஏற்றுந் தகைமையது என்பதில் ஐயமில்லை. எந்தவிதமான தயக்கமுமின்றித் தமது முடிவைக் கூறி விடுகின்றார் ஐயர். எமக்கு மகிழ்ச்சிதரும் முடிபாக இருப்பினும், ஐயரது சுதேச பக்தி வரம்பு கடந்திருக்குமோ என்ற எண்ணம் இக்கூற்றைப் படிக்கும்பொழுது எனக்கு ஏற்படுவதுண்டு. ஆனால், ஐயர் எடுத்து க்காட்டும் சான்றுகள் அவ்வையத்தைப் போக்கவல்லன. எனினும், இவ்விடத்தில் ஒரு வி.யத்தைக் கூறலாம். ஐயர் இவ்வாறு எழுதியது போலவே அவரது உற்ற நண்பனான பாரதியும்,

"யாமறிந்த புலவாரிலே கம்பனைப் போல்

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை"

என்று உரத்துப் பாடினான். இதனைப் பார்க்குமிடத்து மொழிப் பற்றும் தேசப்பற்றும் ஓரளவுக்கு இவர்களை உயர்வு நவிற்சியில் ஊக்குவித்துள்ளன எனக் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் ஐயர் நுண்ணுணர்வும் நூலறிவும் சாலப் பெற்ற விமர்சகர்; அவ்வறிவுப் பயிற்சி காரணமாக ஒருபாற் கோடாத சமநோக்குக் கைவரப் பெற்றவர். ஆயினும் அந்நியராட்சியை எதிர்த்து நின்ற அறிஞர் பலரைப் போல இந்தியப் பாரம்பாரியத்தின் பெருமையை உலகறியச் செய்தல் வேண்டுமென்ற அவா அவருக்குமிருந்தது. தம்மை ஆண்ட ஆங்கிலேயரையும் அவர் போன்ற பிற ஐரோப்பியரையும் விட, தாம் பெருமை மிக்க கலை, லக்கிய, தத்துவ பாரம்பாரியத்துக்கு வாரிசுகள் என்று காட்டுவதில் ஏறத்தாழ எல்லா இந்திய அறிஞரும் ஈடுபட்டிருந்தனர். திலகர், ரா.வாடே, ரானடே, ஐயா.வால், பண்டர்கார், பாஓகி, கேட்கர், முதலிய வரலாற்றாசிரியரைக் கவனித்தால் இவ்வுண்மை தெற்றெனப் புலனாகும். மேனாட்டார் மிகவும் சிலாகித்துப் பேசிய குடியரசு முறை பண்டைக்கால இந்தியாவில்- புத்தர் பிறந்த காலத்திற்கு முன்னதாக, சிறப்புற்று விளங்கியது என்று வாதிட்டார் கே.பி. ஐய.வால். அவரைப் போலவே பிறரும் வெவ்வேறு துறைகளில் புராதன இந்தியரின் பெருமை பேசினர். மேனாட்டார் கான்ற் என்பவரைச் சிறந்த தத்துவ வாதியாகக் கொண்டாடினால், அவரினும் சங்கரர் சிறப்பு மிக்கவர் எனவும், அதுபோலவே சேக்பியரினும் காளிதாசனும் கம்பனும் மேம்பட்டவர்கள் எனவும் இப்பேரறிஞர்கள் வாதம் புரிந்தனர்.

"கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்

காளிதாசன் கவிதைபு னைந்ததும்

உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்

ஓர்ந்த ளந்தோர் பா.கரன் மாட்சியும்

நம்ப ருத்திற லோடொரு பாணினி

ஞால மீதில் லக்கணங் கண்டதும்

இம்பர் வாழ்வின் இறுதி கண் டுண்மையின்

இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்

தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்"

என்ற சுயசரிதையில் பாரதி பாடும்போது, இவர்களின் குரலையே கேட்கிறோம். கம்பனை உலக மகாகவி என ஐயர் கூறியதைப் பின்பற்றி வேறு சிலரும் அவ்வாறு கூறி வந்துள்ளனர். ஆனால் ஒப்பியலின் பண்பும் பயனும் எது சிறந்தது எனத் தீர்ப்பளிப்பது மட்டும் அல்ல. ஒப்புமைககான காரணிகளைக் கண்டறிவதும், ஒப்புமைகள் தோன்றக் காரணமாயிருந்த பகைப்புலத்தை விளங்கிக்கொள்வதும், இலக்கியங்களைப் படைக்கும் கர்த்தர்களுக்கும் சூழலுக்குமுள்ள பர.பரத் தொடர்பினை அறிந்து கொள்வதும் ஒப்பியலின் பண்புகளாம். ஐயர் அவற்றை அதிகம் கவனித்ததாகத் தெரியவில்லை. அந்தளவுக்கு அவரது ஒப்புநோக்குக் குறைபாடுடையதே.

மேனாட்டு இலக்கியங்களிலுஞ் சிறந்தவை இந்திய இலக்கியங்கள் என்று பலர் காட்ட முயன்றதைப் போலவே வட மொழிலக்கியங்களிலுஞ் சிறந்தன தமிழிலக்கியங்கள் என்று நிறுவப் பலர் முயன்று வந்துள்ளனர். ஆரியர்-திராவிடர் பிரச்சினையின் வெளிப்பாடாகத் தோன்றும் இப்போதைக்கு இரு சாராரையும் பாதித்துப் போதித்துள்ளது. சாதியினடிப்படையிலும் சமயப் பிரிவினடிப்படையிலும் மொழியடிப்படையிலும் பெருமை பேசும் இப்போக்கு, இலக்கிய மதிப்பீட்டைப் பெருமளவு மலினப்படுத்தியுள்ளது. கம்பராமாயணத்தையும் பொறுத்தளவில் ஆரியர்-திராவிடர் பூசலானது. வான்மீகி-கம்பன் போட்டியாக உருவெடுத்துள்ளது. இதனால் இன்றுவரை நிதானமான ஒப்பியல் ஆய்வு நடப்பதற்குத் தடைகள் இருந்து வருகின்றன. .பா.வே. மாணிக்கநாயக்கர் எழுதிய "கம்பன் புளுகும் வான்மீகி வாய்மையும்", வெ.ப. சுப்பிரமணிய முதலியார் எழுதிய 'ராமாயண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்' என்பன போன்ற நூல்கள் ராமாயண ஆய்வு திசை தவறிய தன்மையைக் காட்டுகின்றன. இந்நோக்க நிலையினடிப்படையிலேயே "திராவிடனான இராவணனது" பெருமையை உணர்த்தும் 'ராவண காவியம்' எழுந்தது. இதனாசிரியர் புலவர் குழந்தை.

இத்தகைய விபாரீதப் போக்குகளையெல்லாம் பார்க்கும்போது, வ.வே.சு.ஐயர் முதற்றர விமர்சகராக மாத்திரமின்றி, ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடியாகவும் திகழ்வதன் காரணத்தை உணரலாம். இராமாயணத்தை மட்டுமல்லாது பிற இலக்கியங்களைச் சுவைத்தபோதும், ஐயரவர்கள் தமது ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி காரணமாக ஒப்புநோக்கில் ஈடுபட்டார். தமிழிலே ஏதேனுமொன்றைப் படிக்கும்பொழுது, அதற்கு நிகரான பிறமொழிச் செல்வங்கள் அவருக்கு நினைவிலே தோன்றின. நாம் மேலே கூறியவாறு விவரமாக அவற்றை அவர் ஒப்பு நோக்கினாரல்லர். ஆயினும் ஒப்புநோக்க முனைந்தமையொன்றே அவரது பரந்து விரிந்த பார்வையைக் காட்டுவதாயுள்ளது. பூர்வ வரலாற்று முறை, சாதிச் சூழ்ச்சி முறை என்ற நோக்கங்களுடன் ராமாயணத்தைக் கற்பவர் மலிந்த சூழலிலே, உளநூல் முறையையும் சிற்ப முறையையும் துணைக் கொண்டு அக்காப்பியத்தை ஆய்ந்து சுவைத்த ஐயர் தனிச்சிறப்புடையவரே. கம்பனைத் தவிர, பிற தமிழ்க் கவிஞரை ஒப்பியலின் அடிப்படையில் ஐயர் நோக்கிய விதத்திற்கு எடுத்துக்காட்டாக நவீன மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டு இரண்டாம் பதிப்பிற்கு (1920) அவர் எழுதிய முன்னுரையிற் சில பகுதிகளைக் குறிப்பிடலாம்:"

ஆதாரம்:

ஒப்பியல் இலக்கியம்:

கலாநிதி. க. கைலாசபதி M. A., Ph.D.

http://www.thamizham.net/web050807/oppiyal.htm

மற்றும் எழுத்துரு மாற்ற உதவி:... சுரதா (யாழ்) அவர்களின் பொங்குதமிழ் எழுத்துரு மாற்றி.

*** கள உறவுகளைச் சீண்டும் விதமான வசனம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது - இணையவன்

Edited by இணையவன்

நெடுக்காலபோவான் சொல்வது போல், ராமர் மத உணர்வுகளுக்கு அப்பால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டவர் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன.

மதங்களைச் சாராது தத்துவம் சார்ந்து உருவான பௌத்தத்தின் வழியில் ராமன் கதை உருவாக்கப்பட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.

புத்தரின் அவதாரமாக ராமன் பழைய கதைகளில் சொல்லப்படுகிறார்.

"தசரத சாதகம்" என்ற கதையை இங்கே யாழ் களத்தில் நாரதர் இணைத்திருக்கிறார்.

அதில் ராமன் வாழ்க்கையின் நிலையாமையை சொல்லும் ஒரு உயர்வான பாத்திரத்தில் வருகிறான். தசரதனின் இறப்பை காலம் கடந்த பழங்கள் மரத்தில் இருந்து வீழ்வதற்கு ஒப்பிட்டு ராமன் தன்னுடைய சகோதரர்களான பரதனுக்கும், சீதைக்கும் உணர்த்துவார். அதில் சீதை ராமனின் சகோதரியாகத்தான் சொல்லப்படுகிறார்.

இந்தக் கதையில் ராவணனும் இல்லை, அனுமனும் இல்லை, எந்த மதமும் இல்லை.

ஆனால் உயர்ந்த இந்தியத் தத்துவங்களில் இருந்து பலவற்றை களவாடிய பார்ப்பனியம் ராமாயணத்தையும் களவாடி விட்டது.

மகாபாரதம், இராமாயணம் போன்றவைகள் புத்தருக்கு பிற்பட்ட காலத்தில் உருவானவை என்று சில ஆய்வாளர்கள் நம்புவது இங்கு குறிப்பிடத்தக்கது.

பௌத்தத்தில் இருந்து ராமாரை எடுத்துக் கொண்ட பார்ப்பனியம் அதோடு விட்டிருந்தால் பறவாயில்லை. ஆனால் தம்முடைய எதிரிகளாக இருந்து அனைவரையும் அந்தக் கதைக்குள் இழிவான முறையில் இணைத்து தமது குரோதத்தை வெளிப்படுத்தியது. அதனால்தான் இத்தனை பிரச்சனையும்.

இல்லையென்றால் இராமாயணம் மதம் கடந்து ஒரு சித்தாந்த வடிவமாக அனைவராலும் போற்றப்பட்டிருக்கும்.

புறநானூற்றிலும் சரி அகநானூற்றிலும் சரி ஸ்ரீ ராமகாதை குறிப்பிடப்படுகிறது. இன்று பிரச்சனைக்கு உள்ளாகியுள்ள பகுதிக்கு அருகே அமைந்த பாண்டியர்களுக்குரிய பழமையான கோடிக்கரையில் ஸ்ரீ ராமபிரான் ஒரு படர்ந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இராணுவ ஆலோசனை நடத்துகிறார். அப்போது பறவைகள் ஒலி அதிகமாக ஒலிக்கவே ஸ்ரீ ராமன் அவற்றினை அமைதியாக இருக்க சொல்கிறார். பறவைகளும் ஸ்ரீ ராமன் சொல்லுக்கு கட்டுப்படுகின்றன.மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் எழுதிய இப்பாடல் சொல்கிறது:

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல் வீழ் ஆலம் போல - அகம்(70:13-16)

ஆம்! சங்க இலக்கியம் ஸ்ரீ இராமபிரானை போரில் வெல்லும் ஸ்ரீ இராமன் எனமட்டும் புகழவில்லை ஸ்ரீ இராமன் கூறும் வார்த்தை 'அருமறை' என்றே சொல்கிறது. தமிழரின் வீரத்துக்கு இலக்கிய ஆவணமாக திகழும் புறநானூற்றில் ஸ்ரீ இராமபிரான் 'கடுந்தெறல் இராமன்' என ஊன் போதி பசுங்குடையார் (புறம் 70:15) பாடியிருக்கிறார்.

நன்றி தேவப்பிரியா.

உங்கள் தமிழ் இலக்கிய அறிவை யாழ்களத்தில் அடிக்கடி வந்து பகிர்ந்து கொள்ள வேண்டும்

தேவபிரியா நீங்கள் மேலே வெட்டி ஒட்டிய துண்டை எங்கிருந்து பெற்றீர்கள் என்று தெரியும், முழுக் கட்டிரையையும் வெட்டி ஒட்டி அந்த இணைப்பையும் வழங்கிவுடுங்கள்.உங்கள் தமிழ் அறிவைப் பாராட்டுபவர்கள் அந்தக் கட்டுரையை எழுதிய பதிவரைப் பாராட்டடும் அத்தோடு அந்தப்பதிவின் முழு நோக்கத்தையும் தெரிந்து கொள்ளட்டும்.

நண்பர்களே,

வணக்கம்.

தேவபிரியா நீங்கள் மேலே வெட்டி ஒட்டிய துண்டை எங்கிருந்து பெற்றீர்கள் என்று தெரியும், முழுக் கட்டிரையையும் வெட்டி ஒட்டி அந்த இணைப்பையும் வழங்கிவுடுங்கள்.உங்கள் தமிழ் அறிவைப் பாராட்டுபவர்கள் அந்தக் கட்டுரையை எழுதிய பதிவரைப் பாராட்டடும் அத்தோடு அந்தப்பதிவின் முழு நோக்கத்தையும் தெரிந்து கொள்ளட்டும்.

நண்பர் நாரதரே, மிக நிச்சயமாய் எனக்கு ஒரளவு சங்க இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் உண்டு.

நீங்கள் இராம்.கி கட்டுரையை பதித்தபோதெ எனக்கு நான் இந்த அகநானுறு பாடல் மனதில் எழும்பியது. நேரம் வரும்போது பதித்தேன்.

நான் இப்போது பிரிதொரு கட்டுரையை உங்களுக்காகவும் எல்லோருக்காகவும் பதிக்கிறேன்.

தமிழர் திருமகன் இராமன் ஜடாயு

இராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில, தமிழ் இதழ்களும், ஊடகங்களும் முதல்வரின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. ஊட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் “புண்படுத்தாதே புண்படுத்தாதே, இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தாதே”, “மமதை பிடித்த கருணாநிதியே, மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள்” என்ற கோஷங்கள் எழுந்து விண்ணை முட்டின. பாஜக, மதிமுக, தேமுதிக, சரத்குமாருடைய புதிய கட்சி இவையும் முதல்வரின் அருவருக்கத் தக்க பேச்சைக் கண்டிருத்திருக்கின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள, இந்து உணர்வுகளை ஓரளவு மதிப்பவை என்று எண்ணப் பட்ட பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், கூட்டணி (அ)தர்மம் கருதியோ என்னவோ, முதல்வரின் இந்த அப்பட்டமான இந்து விரோதப் போக்கைக் கண்டிக்காமல் இருந்து பெரும் தவறிழைக்கின்றன.

இந்த சூழலில், அறிவுலகத்தால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு விட்ட, வெறுப்பியலில் திளைத்த பழைய ஆரிய-திராவிட இனவாதத்தை உயிர்ப்பித்து, இந்தப் பிரசினையை விமரிசிக்கும் விஷமத் தனமான போக்கும் ஊடாகத் தென்படுகிறது. “ராமர் வழிபாடு என்பது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று. தெற்கே ராமரை ஆரிய மன்னர் என்று தான் தமிழர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்” என்ற அப்பட்டமான பொய்யை என்.டி.டி.வி, சி.என்.என் ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் சென்னை நிருபர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு என்.டி.டி.வி கலந்துரையாடலில் இந்த அபாண்டத்தைக் கேட்கச் சகியாத பேராசிரியர் நந்திதா கிருஷ்ணா நடுவில் பாய்ந்து, “என்ன கதைக்கிறார் உங்க நிருபர், தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் ராமர், அனுமார் கோயில்கள் இருக்கிறதே கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று வெடிக்கும் நிலைமை ஏற்பட்டது.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (வன்னிய சத்திரியர் என்று தமிழக மக்களில் பெரும்பாலர் கருதும்) இராமர் “பிராமணர் அல்லாதவர்களான, தமிழர்களின் பார்வையில்” மிக எதிர்மறையாகவே எப்போதும் கருதப் படுவதாக, பழைய திராவிட இயக்க அபத்தங்களை ஆங்கில இதழ்களில் மறுசுழற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் [1]. இவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல இந்த வார ஜூனியர் விகடனில் திருமாவளவன் 'சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனை’ போற்றுவதாகத் தெரிவிக்கிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த தமிழின் ஒப்புயர்வற்ற இலக்கியமான கம்பராமாயணம் ஒன்று போதாதா, இராமன் தமிழர் போற்றும் தெய்வம் என்று நிறுவுவதற்கு? தமிழர் சமயத்தின் இரு கண்கள் சைவமும், வைணவமும். அதில் ஒன்றான வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களும் தெய்வமாக இராமனைப் போற்றுகிறார்களே, அது போதாதா? ஆனால் விதி வலியது. ஈவேரா காலத்திலிருந்து, அப்பேர்ப்பட்ட கம்பனுக்கே ஆரியஅடிவருடி, மனுவாதி போன்ற முத்திரைகள் இந்த அறிவீனர்களால் குத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆழ்வார்கள் எம்மாத்திரம்?

ஆதாரமில்லாத இத்தகைய உளறல்கள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பரப்பப் படுவதால், உண்மையை உரக்க உரைப்பது மிக அவசியமாகிறது, ‘’புலிநகக் கொன்றை’ ஆசிரியரும், மார்க்சிய சார்புடையவராகக் கருதப் படும் அறிஞருமான பி.ஏ.கிருஷ்ணன் ‘பயனியர்’ இதழில் எழுதியுள்ள “Karunanidhi wrong, Ram an ancient Tamil icon” என்ற அருமையான ஆங்கிலக் கட்டுரையில் [2] சங்க இலக்கியம் தொட்டு பண்டைத் தமிழரின் போற்றுதலுக்குரிய தெய்வமாக இராமன் இருந்து வந்ததற்கான ஆதாரங்களை அளிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள “சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி” என்ற பதிவில் [3] “கடுந்தெறல் இராமன்”, “வெல்போர் இராமன்” என்று இராமன் சங்கப் பாடல்களில் போற்றப் படுவதையும், சமண முனிவரான இளங்கோவடிகள் தனது காப்பியத்தில் திருமாலின் அவதாரமாக இராமனைப் பாடுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.

சங்ககால பாமர மக்களின் வழக்கிலே கூட இராமாயணம் என்ற இதிகாசம் போற்றுதலுக்குரிய காவியமாக மட்டுமன்றி, உவமைகளைச் சுட்டும்போது கூட பண்டு நிகழ்ந்த சான்றுகளாய்க் கையாளும் வண்ணம் அமைந்திருப்பதை இந்த இரு கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. வேறு சிலவற்றைப் பார்ப்போம்.

மணிமேகலையில் இராமாயணம்:

கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்

அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு

இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்

பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)

காயசண்டிகை கூறினாள் - “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.

இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன - ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.

இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!

"மீட்சி என்பது "இராமன் வென்றான்" என

மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்

உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்

கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்"

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

இந்த வரிகளில் “மாட்சி இல் இராவணன்” என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.

சைவத் திருமுறைகளில் இராமாயணம்:

சைவம் தழைக்கப் பாடிய சமயக் குரவர்களது பாடல்களிலும் இராமாயணம் இருக்கிறது.

திருநாவுக்கரசர் இராமன் கட்டிய சேதுபந்தனத்தைக் குறிப்பிடும் பாடல் -

"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்

சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்

பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற

போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ”

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவலம்புறப்பதிகம்)

திருஇராமேச்சுரம் என்று வழங்கும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடிய பதிகங்களில் சில பாடல்கள் -

"பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து

கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த

சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்

தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே

[சிலையினான் - வில்லை உடைய இராமன்]

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்

புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்

செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்

தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே"

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவிராமேச்சுரப் பதிகம்)

தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி

ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சுரத்தாரை

[தேவியை வவ்விய - சீதையைக் கவர்ந்து சென்ற]

(திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை, 101-10)

இந்த அனைத்துப் பாடல்களும், தருமத்தின் நாயகனான இராமனைத் திருமாலின் அவதாரமாகவே போற்றுகின்றன. சிவபக்தன் ஆயினும் அதர்ம வழியில் சென்ற இராவணனையும், அவன் கூட்டத்தாரையும் கொடிய அரக்கர் என்றே பல்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன.

இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்

இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே”

(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்)

என்றே சம்பந்தர் பாடுவார்.

மேலும், இடர்கள் களையப் பாடிய கோளறு பதிகத்தில் ‘ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா’ என்கையில் இராவணனை தீய சக்தியின் குறியீடாகவும், இடராகவும் உருவகித்து, அத்தகைய தீமைகளும் அணுகாதிருக்கும் என்று சம்பந்தர் உரைக்கிறார்.

சைவத் திருமுறைகள் இப்படி இருக்கையில், தங்களை சைவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர், நாத்திகவாத, தமிழ்ப் பண்பாட்டையே இழித்துரைக்கின்ற ஈவேராத் தனமான திராவிட சித்தரிப்புக்களின் வழியே இராமாயணத்தை நோக்க முற்படுவதை காலத்தின் கோலம் என்றும் நகைமுரண் என்றும் தான் கூறவேண்டும்.

திருப்புகழில் ராமாயணம்:

முருக பக்தி மரபில் முதன்மை பெறும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரிநாதரின் எல்லா நூல்களிலும் இராமபிரானைப் பற்றி நூற்றுக் கணக்கான குறிப்புகள் உள்ளன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது பல இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளில் இவற்றை எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

கம்பனும், வால்மீகியும், ஏனையோரும் குறிப்பிடாதவற்றையும் அருணகிரியார் தமது பாடல்களில் சொல்லியுள்ளார். உதாரணமாக, கோசலை ராமனைக் கொஞ்சும் அழகு -

“எந்தை வருக ரகுநா யகவருக

மைந்த வருக மகனே யினிவருக

என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை

யுண்க வருக மலர்சூ டிடவருக

என்று பா¢வி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்”

(“தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

இதற்கு வாரியார் சுவாமிகள் விளக்கம் கூறுகையில் “குடும்பத்தை வாழ்விப்பவன் மகன். தன் சுற்றம், குலம், நாடு எல்லாவற்றையும் வாழ்விப்பன் மைந்தன், அதனால் இந்த இரண்டு பெயர்களையுமே கூறி கோசலை இராமரை அழைக்கிறாள்” என்று அழகாகக் குறிப்பிடுவார்.

இன்னொரு பாடலில், சானகியை அபகரித்துச் சென்ற இராவணனை “திருட்டு ராக்கதன்” என்றே குறிப்பிடுகிறார்.

“சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்

திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து

சயத்த யோத்தியில் வருபவ னா¢திரு ...... மருமகப் பா¢வோனே”

(‘பழிப்பர் வாழ்த்துவர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்)

இராமபக்திக்கு உரமூட்டிய தமிழகம்:

“வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று புகழ்பெற்ற நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று இராமபிரானுக்கு வைணவ மரபில் மிக உயர்ந்த இடத்தை அளித்திருக்கின்றார்.

கண்ணனைக் குழந்தையாக வரித்து வழிபடும் மரபு பிரசித்தமானது. இராமனைக் குழந்தையாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடிய முதல் பக்தர் குலசேகராழ்வார் தான்.

“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்

கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!”

என்று தொடங்கி ராமாயணம் முழுவதையும் சொல்லித் தாலாட்டுகிறார் ஆழ்வார். இதன் நீட்சியாகவே நந்தலாலா போன்று “ராம லாலா” என்று குழந்தை ராமனின் உருவமும், வழிபாடும் உருவாயிற்று. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இஷ்டதெய்வமாகக் குழந்தை ராமனை ஆராதித்திருக்கிறார். அயோத்தி ராமஜன்மஸ்தானம் கோயிலில் இருப்பதும் இந்தக் குழந்தைத் திருவுருவம் தான்.

தென் தமிழ் நாட்டிலிருந்து காசிக்குச் சென்று அங்கே சைவ மடம் அமைத்த குமரகுருபரர் கம்பனின் ராமாயணத்தை அங்கே பிரசாரம் செய்ததாகவும், துளசிதாசர் அதைக் கேள்வியுற்றதனாலேயே தமது ராமசரித்மானஸ் என்ற புகழ்பெற்ற ஹிந்தி ராமாயண நூலில் கம்பனின் ராமகாதைப் படி சில இடங்களை அமைத்திருப்பதாகவும் ஒரு வழக்கு உள்ளதாக காசி மடத்துடன் தொடர்புடைய நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இன்று பாரதம் முழுவதும் வழங்கும் எல்லா ராமாயணக் கதையாடல்களிலும் சிறப்பிடம் பெறும் ‘அணில் இராமருக்கு பாலம் கட்ட உதவிய” பிரசங்கம், தமிழகத்தில் உயிர்த்ததே ஆகும் என்றும் இது பற்றிய முதல் இலக்கியக் குறிப்பு கீழ்க்கண்ட திவ்வியப் பிரபந்த பாசுரம் தான் என்றும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஒரு ஆங்கிலப் பதிவு [4] குறிப்பிடுகிறது -

“குரங்குகள் மலையைத் தூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடி

தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்”

(தொண்டரடிப் பொடியாழ்வார், திருமாலை 27)

ராமனுடைய முதன்மையான பெயராகிய புருஷோத்தமன் (புருஷ+உத்தமன்) என்பதன் தமிழ் வடிவமே பெருமாள் (பெரும்+ஆள்). வைணவர்கள் அனைவரும் கடவுளைக் குறிக்கையில் சொல்லும் முதன்மையான திருநாமம் ‘பெருமாள்’ என்பது தான்!

தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-ஆன்மிக விடுதலைக் குரலாக எழுந்த அவதார புருஷர் அய்யா வைகுண்டர் இராமாயண வாசிப்பை தம்முடைய பக்தர்களுக்கு கட்டாயமாக்கினார். அதற்காகவே அருள் நூலில் இராம சரிதை இடம் பெற செய்து இரண்டாம் நாள் திருஏடு வாசிப்பு இராவண வதமாக அமைத்தார். கலிகால சாதியம், வெள்ளையர் காலனியாதிக்கம் மற்றும் மதமாற்ற கொடுமைகளாக உருவாகி வந்திருக்கும் இராவணன் என்ற தீய சக்தி அய்யாவின் அன்பு வழி இயக்கத்தால் அழிக்கப்படும் என்பதும் அதற்காக அனுமனைப் போன்ற தொண்டர்கள் தோன்றி தெய்வீகப் பணி செய்வார்கள் என்பதும் இன்றுவரை அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இப்படி இராமகாதை மற்றும் இராமபக்தியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் தமிழகம் பெரும் பங்கு ஆற்றி வந்திருக்கிறது.

கலைகள் போற்றும் காகுத்தன்:

10-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன் ஆகிய மூர்த்திகளின் அழகு கொஞ்சும் செப்புத் திருமேனிகள் திருவாரூருக்கு அருகில் உள்ள பருத்தியூர் என்னும் ஊரில் கண்டெடுக்கப் பட்டவை.

ஒய்யாரமாக வில்லைப் பிடித்திருக்கும் ராமனின் கம்பீர வடிவமானது நடராஜ வடிவம் புகழ்பெறத் தொடங்கியிருந்த காலம் முதலே தமிழக சிற்பிகளின் உள்ளத்தை ஆட்கொண்டது இவை என்று உணர்த்துகின்றன.

தஞ்சைத் தரணியில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், இன்றளவும் பல கச்சேரி மேடைகளிலும் இடம் பெறும் இராமநாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசலக் கவிராயர் ஆகியோர் தென்னகத்தின் தலைசிறந்த ராமபக்தர்களில் அடங்குவர்.

தெருக்கூத்து, பாவைக்கூத்து, வில்லுப் பாட்டு முதலிய கலைவடிவங்கள் உருவாகும்போது அவற்றின் முதல் கூறுபொருளாக அமைந்தவை ராமாயண, மகாபாரத கதைகள் தான்.

எனவே, செவ்வியல் இலக்கியம் மட்டுமின்றி, சிற்பம், நடனம், இசை, நாடகம், நாட்டுப் புறக் கலைகள் ஆகிய பல்வேறு தமிழகக் கலைகளிலும் இராமனும், சீதையும் அவர்கள் சரிதமும் வெகுகாலம் தொட்டு நீக்கமற நிறைந்திருக்கின்றன.

தமிழர் திருமகன் இராமன்:

திராவிட இயக்கம் சார்ந்த சில தமிழ் ஆர்வலர்களாலும் மதிக்கப் படும் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் ராம காதையை ஆரிய-திராவிட நோக்கில் பார்த்தது என்பது ஒரு குறுகிய காலத்திற்கு தமிழ்ச் சமுதாயத்தில் உண்டான, துரதிர்ஷ்டவசமான போக்கு என்றும் இது அந்த மாபெரும் இதிகாசத்தின் அடிப்படைகள் பற்றிய தவறான புரிதல் ஆகும் என்றும் குறிப்பிடுகிறார். [5]

“..I find it very sad that anyone would want to burn Kamban's Ramayana. Kamban was, simply, the greatest poet India has produced and one greatest poets of the world. He is demonstrably greater than Kalidasa. Unfortunately, for a short period it became fashionable to read his epic in cultural terms -- Aryan vs. Dravidian. This, in my view, is a misreading of the fundamental premise of the epic: the opposition between two views of life, one epitomized by Rama, the other by Ravana. What makes Kamban so great is that he presents both views in extremely convincing and beautiful terms -- Ravana is the greatest of all kings and symbolizes this world, ama symbolizes another dimension. And don't forget, Ravana is a Brahmin.”

திராவிட இயக்கத்தினர் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற தொனியில் வெறியூட்டி வந்தபோது, தென் தமிழகத்தில் அதை முன்னின்று எதிர்த்தவர் இஸ்லாமியரான சதாவதானி செய்குத் தம்பி பாவலர். கம்பர் அடிப்பொடி சா.கணேசன் இராமாயணம் என்ற மாபெரும் பொக்கிஷத்தைக் காக்க கம்பன் கழகம் தொடங்கியதன் பின் வந்த காலகட்டங்களில் இராமகாதையில் தோய்ந்து அதைப் பற்றியே தன் வாழ்நாளின் இறுதிவரை பேசியும் எழுதியும் வந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில்.

எனவே சங்ககாலத் தமிழர் தொடங்கி, சைவ, வைணவ, சமண, பௌத்த தமிழர் வரை அனைவரும் இராமனைத் “தலைவன், திருமகன், திருமால், பெருமாள், தெய்வம்” என்றே கூறி வந்திருக்கின்றனர். இராவணனை “அரக்கன், திருட்டு ராக்கதன்” என்று அழைத்திருக்கின்றனரே அன்றி திராவிட மன்னன் என்றோ, வீரன் என்றோ, மதிப்பிற்குரியவன் என்றோ கூட எந்த மானமுள்ள தமிழனும் குறிப்பிடவில்லை.

'செக்குலர்' சங்கப்புலவனும், தமிழின் அனைத்து சமயப் பெருந்தகைகளும் ஏற்றுக் கொள்ளாத ஓர் அரக்கனை இங்கே தமிழ்ப் பாதுகாவலர்களாகக் கூறிக் கொள்ளும் பொய்ப்பிண்டங்கள் தங்கள் பிரதிநிதியாகச் சித்தரிப்பதும், இராமபிரானை இழித்துரைப்பதும் காலத்தின் கொடுமையன்றி வேறென்ன!

(பி.கு: இதில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை அளித்த திரு, ஹரி கிருஷ்ணன் மற்றும் பெயர் குறிப்பிடப் பட விரும்பாத இன்னொரு தமிழறிஞர் இவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்).

http://jataayu.blogspot.com/

சுட்டிகள்:

[1]http://timesofindia.indiatimes.com/Opinion/LEADER_ARTICLE_We_Do_Things_Differently/articleshow/2395923.cms

[2] http://www.dailypioneer.com/columnist1.asp...amp;validit=yes

[3] http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html

[4] http://arvindneela.blogspot.com/2007/09/ro...ndards-and.html

[5] http://www.infitt.org/tscii/archives/msg00310.html

--------------------------------------------------------------------------------//

தேவப்ரியா

தேவப்பிரியா,

நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை.யாழ்க் கள விதிகளின் படி இன்னொரு இடத்தில் இடப்பட்ட ஒரு பதிவை அல்லது பதிவில் இருந்து ஒரு பகுதியை இங்கே இடுவதாயின் அதன் இணைப்பை நீங்கள் இங்கே இணைக்க வேண்டும்.

இன்னொருவர் எழுதியதை உங்களது என இங்கே படி எடுத்துப் போடுவது மற்றவர்களை ஏமாற்றும் செயல், மோசடி.ஆகவே நீங்கள் படி எடுத்துப்போட்டது எங்கிருந்து பெறப்பட்டது என்பதைத் தெளிவாகக் கூறுங்கள்.

யாழ்க்கள நிர்வாகத்தின் கவனத்திற்கு ,

தேவபிரியா என்பவர் அரவிந்தன் நீலகண்டனின் பதிவில் இருந்தே மேற் சொன்ன பகுதியை படி எடுத்து தனது கருத்தைப்போல இங்கு போட்டிருகிறார்.கள விதிகளை மீறியதன் பொருட்டு இவருக்கு எச்சரிக்கை வழங்கப்பட வேண்டும்.இவர் இது போல் முன்னரும் பல இடங்களில் மோசடியாக தமிழ் மணத்தில் தடை செய்யப்பட்ட அரவிந்தன் நீலகண்டனின் பதிவுகளில் இருந்து இங்கு படி எடுத்துப் போட்டுள்ளார்.

//புறநானூற்றிலும் சரி அகநானூற்றிலும் சரி ஸ்ரீ ராமகாதை குறிப்பிடப்படுகிறது. இன்று பிரச்சனைக்கு உள்ளாகியுள்ள பகுதிக்கு அருகே அமைந்த பாண்டியர்களுக்குரிய பழமையான கோடிக்கரையில் ஸ்ரீ ராமபிரான் ஒரு படர்ந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து இராணுவ ஆலோசனை நடத்துகிறார். அப்போது பறவைகள் ஒலி அதிகமாக ஒலிக்கவே ஸ்ரீ ராமன் அவற்றினை அமைதியாக இருக்க சொல்கிறார். பறவைகளும் ஸ்ரீ ராமன் சொல்லுக்கு கட்டுப்படுகின்றன.மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் எழுதிய இப்பாடல் சொல்கிறது:

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரு பௌவம் இரங்கும் முன்துறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல் வீழ் ஆலம் போல - அகம்(70:13-16) //

சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி...

http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html

பல புரட்டுத் தனமான மோசடிகளைச் செய்து தமிழ் மணத்தில் இருந்து விலகிய அரவிந்தன் நீலகண்டனின் மேற் கொண்ட பதிவுக்கு அய்யா இராம கி அவர்கள் தனது பதிவில் தகுந்த விளக்கங்களை எழுதி உள்ளார்.தேவப்பிரியா முதற் கொண்டு அரவிந்தன் நீலகண்டன் வரை இந்துவாவாதிகள் எல்லோருமே மோசடியானவர்கள் போல் .இப்படியான மோசடியானவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல இங்கே ஒரு சில பேர் வரிந்து கட்டிக் கொண்டு, வெக்கக்கேடான விடயம். :rolleyes:

அடுத்தது அகம் 70 இல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலில் இராமன் திருவணைக் கரைக்கு வந்து இருந்ததாய் ஒரு செய்தியைப் பார்ப்போம். தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:

கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென

இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்

குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி

கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்

நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே

அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்

பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே

வதுவை கூடிய பின்றை, புகுவது

பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்

கானலம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்

வென்வேற் கவுரியர் தொல்முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை

வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த

பல்வீழ் ஆலம் போல

ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு:70:5-17)

இந்தப் பாடலில் வரும் பரதவர் என்ற இனக் குழுவினர் தொடக்க காலத்தில் சோழநாட்டுக் கடற்கரையிலேயே இருந்தவர். (என் இடுகையின் முதற்பகுதியில் இளஞ்சேட்சென்னி பரதவரை வெற்றி கொண்ட செய்தியைக் குறிப்பிட்டு இருப்பேன்.) பாண்டிய நாட்டில் பரதவர் அவ்வளவாக விரிந்து இருந்தது இல்லை. பாக்கம் என்று முடியும் நெய்தல் ஊர்ப் பெயர் சோழநாட்டிலும், பின்னால் அதனின்றும் விலகிய தொண்டை நாட்டிலுமே உள்ள பெயராகும். பாண்டிய நாட்டில் இது போன்ற பெயர்கள் மிகவும் அரிது. ஞாழல், புன்னை ஆகிய மரங்கள் விரவிய கானலம் பெருந்துறை (காடு பின்புலமாக இருக்கும் பெருந்துறை) என்ற குறிப்பு கோடிக்கரையையே உணர்த்துகின்றது. இன்றும் இங்கு ஞாழலும், புன்னையும் நிறைந்து கிடக்கின்றன. கோடிக்கரைக் காடு என்றுதான் இந்தப் பக்கம் சொல்லுகிறார்கள். இது போன்ற விவரிப்பு இராமேசுவரத்துக்கோ, இராமநாதபுரத்துக்கோ ஒத்து வராது. அவை பாலை நிலத்தின் கூறுகள் என்பது அங்கே வசிக்கிறவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது போகத் தொல்முது கோடி என்பது ஆதி சேது என்ற குறிப்பையும் உணர்த்துகிறது.

அதையும் மீறி வென்வேல் கவுரியர் என்று பாண்டியரைச் சுட்டுவதால் பாண்டிநாட்டுத் தலத்தைக் குறிக்க முடியுமா என்றால் "சற்றுப் பொறுங்கள்" என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு தொண்டி, மீமிசல் எனக் கிழக்குக் கடற்கரை ஊர்களைக் கடந்து முத்துப் பேட்டை வரை போனால் கோடிக்கரை வந்துவிடும். இந்த ஊர்களுக்கு உட்பரப்பில் இருக்கும் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆவுடையார் கோயில் ஆகிய ஊர்கள் எல்லாம் ஒரு காலத்தில் முத்தூர்க் கூற்றத்திற்கு அண்மையும் சேர்ந்தவையுமே. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைக்கும் இருக்கும் இந்தப் பகுதிகள் காலம் காலமாய் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே பந்தாடப் பட்ட பகுதிகள். இம்மென்றால் சோழன் பாண்டியனிடமிருந்து இவற்றைப் பிடுங்கிக் கொள்ளுவான்; இல்லையென்றால் சோழனிடமிருந்து பாண்டியன் பிடுங்கிக் கொள்ளுவான். கடைசிக் கடற்கோளில் தன் நாடு கணிசமாகக் குறைந்ததால் சோழனிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பாண்டியன் பறித்துக் கொண்ட கதை கலித்தொகை 104.4 ல் கீழ்வருமாறு சொல்லப்படும்.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்

மெலிவு ௾ன்றி, மேல்சென்று, மேவார் நாடு ௾டம்பட

புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

இந்த இரு கூற்றங்களின் பெயரை உரையாசிரியர் வழியாகவே நாம் அறிகிறோம். தவிர மணிவாசகர் காலத்தில் பரி வாங்கப் போகும் திருப்பெருந்துறையும் (ஆவுடையார் கோயிலும்) இந்தக் கூற்றத்தில் தான் உள்ளது. (பரிவாங்கிய போது இது பாண்டியர் கூற்றமாகவே இருந்திருக்கிறது.) இன்றும் கூட இந்தப் பகுதிகளில் சோழ, பாண்டிய நாடுகளின் இரண்டு பக்கத் தாக்கங்களின் மிச்சம் கணிசமாகவே இருக்கிறது. அதனால், கோடிக்கரை ஓரோர் சமயம் பாண்டியரின் ஆட்சிக்கு வந்ததில் வியப்பு இல்லை. (அகம் 70 ஆம் பாடல் தனுக்கோடியைக் குறிக்கிறது என்று சொல்லுவாரும் உண்டு. என்னால் மேலே சொன்ன காரணங்களுக்காக ஏற்க முடியவில்லை.)

இனி அகம் 70 ஆம் பாடலில், வரும் செய்தியைப் பார்ப்போம். தோழி சொல்லுகிறாள்: (இங்கே அட்லாண்டா பெ.சந்திரசேகரனின் சொற்களை அப்படியே பயனாக்கி "கோடிக்கரை" என்று ஊர்ப்பெயரை மட்டும் மாற்றித் தருகிறேன். அவர் தனுக்கோடி என்ற கருத்தாளர்.)

"உன்னைத் திருமணம் செய்துகொள்ளுமுன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு]; வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான கோடிக்கரையில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!" என்றாள்.

ஆலமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை இராமன் கையுயர்த்தி ஒலி எழுக்காமல் இருக்கச் செய்தது கம்பனில் கிடையாது; வான்மீகியிலும் கிடையாது. இப்படி ஒரு செய்தி கோடிக்கரையில் சொல்லப் படுவதில் இருந்தே, கடைச் சங்க காலத்திலேயே இன்றைய இலங்கைக்கும் இராம காதையில் சொல்லப்படும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிதல் குழப்பம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்று அறியலாம். ஆனாலும் ஒருசிலர் இராமர் சேது என்று தங்களுக்குத் தோன்றியபடி கற்பனை வாதம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

"இராவணன் ஆண்ட ௾லங்கை எது?" என்ற தலைப்பில் சைவசித்தாந்த வெளியீட்டுக் கழகத்தின் செந்தமிழ்ச் செல்வி இதழில் "சிலம்பு 23" (volume 23) ல் மயிலை. சீனி வேங்கடசாமியார் மற்ற ஆய்வாளர்களின் முடிவுகளைத் தெரிவித்திருப்பார். ஏகப்பட்ட வட இந்திய ஆய்வாளர்கள் இராவணனின் இலங்கையை இன்றைய சத்திஸ்கர், ஜார்க்கண்ட் பகுதியில் ஒரு ஏரிக்கு நடுவில் காட்டுவார்கள். தவிர இன்றைய இலங்கையின் மகாவம்சத்தில் பழஞ்செய்தியாக, தொன்மக் கதையாகக் கூட, இராவணன், இலங்கை என்னும் பெயர்கள் கூறப்படவில்லை.

இனி அடுத்து இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் நடுவே பாம்பன் வாய்க்கால் ஏற்பட்டது பற்றிப் பார்க்கலாம். இதை நான் சொல்லுவதைக் காட்டிலும், இராமநாத சுவாமி கோவில் கும்பாபிசேக மலர் 1975ல் "இராமேசுவரத் தீவு" என்னும் தலைப்பில் மயிலையார் எழுதிய ஒரு கட்டுரையை அப்படியே தட்டச்சித் தருகிறேன்.

------------------------------

இராமேசுவரம் என்னும் இச்சிறு தீவு முற்காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்த ஒரு நிலமாக இருந்து பிறகு சிறு தீவாக மாறிற்று என்னும் வரலாறு பலருக்குத் தெரியாது. இச்செய்தி பலருக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இராமேசுவரம் தீவும் இராமநாதபுரமும் ஒரு காலத்தில் இணைந்திருந்தன என்பது உண்மை.

தென்னிந்தியாவின் கடற்கரை ஓரங்கள் எக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. கடற்கோள்களினாலும், கடல் அரிப்பினாலும் நமது நாட்டுக் கடற்கரைப் பக்கங்களில் எத்தனையோ மாற்றங்கள் நெடுங் காலமாக நடந்துள்ளன. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பாண்டிய நாட்டுக்கு அருகில் இருக்கிற இலங்கைத் தீவு முன்னொரு காலத்தில், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலமாக இருந்தது. இந்தப் பெரிய நிலப்பரப்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கடற்கோளினாலும், கடல் அரிப்பினாலும் சிறிது சிறிதாகச் சிதைந்து போய்க் கடைசியில் தனித் தீவாகப் பிரிந்து போய், பிற்காலத்தில் இலங்கைத் தீவாக மாறிப் போயிற்று. நில ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் இந்த வரலாற்றுச் செய்தியைக் கூறுகிறார்கள். இலங்கை, தனித் தீவாகப் பிரிந்து போன பிறகுங் கூட, கொழும்புக்குத் தெற்கேயுள்ள கடலோரங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதி நிலங்கள் கடலில் முழுகிப் போயுள்ளன என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது.

கன்னியாகுமரி இப்போது தமிழகத்தின் தெற்கெல்லையாக அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒரு நிலப்பரப்பு தமிழகத்தோடு இணைந்திருந்தது. அந்த நிலப்பரப்பு ஏறத்தாழ இரண்டு மாவட்டங்கள் (ஜில்லாக்கள்) அளவு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த நிலப்பரப்பு பிற்காலத்தில் கடற்பெருக்கினாலும், கடல் அரிப்பினாலும், பையப் பைய கடலில் மூழுகிப் போய்விட்டது. அந்த நிலப்பரப்பு முதல்தடவை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஒரு பகுதி மறைந்து போய் எஞ்சியிருந்த இன்னொரு பகுதி நிலம் மற்றுமொரு கடற்பெருக்கினால் மறைந்து போயிற்று, இந்த வரலாற்றுச் செய்தியைச் சிலப்பதிகாரமும், கலித்தொகையும் கூறுகின்றன. இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரமும், கடற்கோளினால் முழுகிப் போன இந்த நிலங்களைக் கூறுகிறது.

திருப்பதி என்னும் திருவேங்கடமலையை எல்லோரும் அறிவார்கள். வேங்கடமலையைச் சூழ்ந்திருக்கும் நாடுகளுக்கு வேங்கடக் கோட்டம் என்பது பழைய பெயர். இந்த வேங்கடக் கோட்டத்துக்குக் கிழக்கே கடற்கரையோரமாகப் பவத்திரிக் கோட்டம் என்னும் ஒரு நிலப்பரப்பு இருந்தது. பவத்திரிக் கோட்டம் ஒரு ஜில்லா (மாவட்டம்) அளவுள்ள நிலம். இந்தப் பவத்திரி நாட்டை 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நக்கீரர் அகநானூறு 340ம் செய்யுளில் கூறுகிறார். இந்தப் பவத்திரிக் கோட்டம் கி.பி.11ம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் போயிற்று. கடலில் முழுகிப் போன பவத்திரிக் கோட்டம் இப்போது திருவேற்காடு ஏரி (பழவேற்காடு ஏரி - இராம.கி) என்று பெயர் பெற்று பெரும் நீர்ப்பரப்பாக இருக்கிறது. பவத்திரிக் கோட்டம் இருந்ததையும், அது கடலில் முழுகிப் போனதையும் பிற்காலத்துச் சோழ அரசர்களின் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பவத்திரிக் கோட்டத்தில் இருந்த ஊர்களில் ஒன்று காகந்தி என்பது. "கடல்கொண்ட காகந்தி" என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. நெடுங்காலமாகத் தொண்டைநாடின் கடற்கரையொரமாக இருந்த பவத்திரிக் கோட்டம் கடலில் முழுகிப் போய் இப்போது திருவேற்காடு ஏரியாய் மாறிப் போய்விட்டது. இந்த ஏரியின் தென்பகுதி இப்போது தமிழக அரசாட்சிக்கு உட்பட்டும், வடபகுதி ஆந்திர அரசுக்கு உட்பட்டும் இருக்கின்றன. (ஸ்ரீஹரிக் கோட்டா என்று இன்று சொல்லப்படும் விண்வெளி ஏவுகணைத் தளத்தின் பெயரில் பின்னுள்ள "கோட்டா" இந்தக் கோட்டமாய் இருக்க வாய்ப்பு உண்டு. ஸ்ரீஹரி என்னும் திரிவு எப்படி வந்தது, பவத்திரிக்கும் அதற்கும் உள்ள ஓசைத் தொடர்பு என்ன, என்று இன்னும் அறிந்தேன் இல்லை; தேடுகிறேன் - ௾ராம.கி)

தமிழகத்தின் தெற்கே பாண்டிநாட்டிலே கிழக்குக் கடற்கரையையடுத்து கொற்கைக்குடாக் கடல் இருந்தது. கொற்கைக் குடாக் கடல் நிலத்தில் புகுந்து உள்கடலாக அமைந்திருந்தது. கொற்கைக் குடாக் கடலின் மேற்கே கொற்கைப் பட்டினம் இருந்தது. இது துறைமுகப் பட்டினமாகவும் முத்துக் குளிக்கும் இடமாகவும் இருந்தது. கொற்கை நகரத்தைப் பற்றிச் சங்கப் பாடல்கள் சிறப்பாகக் கூறுகின்றன. தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. கடற்கரையில் இருந்து ஐந்து மைல் தூரம் உள்புகுந்து உள்நாட்டுக் கடலாக இருந்த கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் ஏறத்தாழ 10 ஆம் நூற்றாண்டில் மண்மூடி மறைந்து போய்விட்டது. கடற்கரைப் பக்கமாகக் கடல் அலைகள் மணலைக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் ஒரு புறத்தைத் தூர்த்து விட்டன. தாமிரபரணி ஆறு மணலை அடித்துக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் இன்னொரு புறத்தைத் தூர்த்துவிட்டது. இவ்வாறு இருபுறமும் மணல் தூர்ந்து கொற்கைக் குடாக்கடல் அடியோடு மறைந்து போய் இப்போது அது இருந்த இடம் நிலமாக மாறிவிட்டது. தாமிரபரணி ஆறும் இடம் மாறிவிட்டது. இவ்வாறு கடற்கரையோரங்களில் கடல் அரிப்பினாலும், கடல்பெருக்கினாலும் பல இடம் கடல்மாறிப் போனதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். (மாமல்ல புரத்திற்கு அருகில் ஏற்பட்ட மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். - இராம.கி.)

இராமேசுவரம் ஒரு காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்திருந்ததென்றும், அது பிற்காலத்தில் தீவாகப் பிரிந்து தாய்நாட்டில் இருந்து பிரிந்து போய்விட்டதென்றும் கூறுகிறோம். அதனை விளக்குவோம். இராமேசுரம் இராமநாதபுரத்துடன் இணைந்திருந்த காலத்தில் இராமேசுவரக் கோயிலில் இருந்து இராமலிங்கப் பெருமானை இராமநாதபுரத்துக்கு எழுந்தருளிவித்து ஒரு வாரம் தங்கிப் பிறகு மீண்டும் இராமேசுவரத்துக்குக் கொண்டு போவது வழக்கமாய் இருந்தது. இவ்வாறு இராமேசுவரம் தீவாக மாறுவதற்கு முன்பு வரையில் இது நடந்து வந்தது. தீவாக மாறிப் போனபிறகு இராமேசுவரர் இராமநாதபுரத்துக்கு எழுந்தருளுவது நின்றுவிட்டது. ஏறத்தாழ கி.பி.12ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட சிங்கள அரசன் தமிழ்நாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்ய வந்தபோது, அவனுடைய சேனையைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டுவந்து இராமேசுவரத்தில் இறங்கிப் பிறகு அந்தச் சேனையை இராமநாதபுரத்துக்கு அழைத்து வந்தான் என்று சுல்லவம்சம் (=சூளவம்சம் - இராம.கி) என்னும் இலங்கைநூல் கூறுகிறது. இதனாலும் இராமநாதபுரமும் இராமேசுவரமும் முற்காலத்தில் ஒன்றாக இணைந்திருந்தன என்பதை அறிகிறோம்.

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுர வட்டத்தில் போர்ச்சுகீசியர் வந்து கப்பல் வணிகம் செய்தார்கள். அக்காலத்தில் பெரும் புயலடித்துக் கடல் கொந்தளித்துக் கடலில் நீண்டுகிடந்த இராமேசுவரத்தைத் தீவாகப் பிரித்துவிட்டதும், கடல்நீர், சிறு கால்வாய் போலப் பாய்ந்து இராமநாதபுரத்தையும், இராமேசுவரத்தையும் பிரித்துவிட்டது. சிலகாலம் வரையில் இந்தச் சிறு கால்வாயைக் கடந்து இராமநாதபுரத்துக்குப் போக்குவரத்து இருந்தது. பிறகு இந்தக் குறுகலான கால்வாயில் கடல்நீர் புகுந்து அதை அகலமாக்கி விட்டது. அப்போது போர்த்துகீசிய வாணிகர் தங்களுடைய வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக இந்தக் கால்வாயை ஆழமாகவும் அகலமாகவும் செய்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான வராகன்களைச் செலவு செய்தார்கள்.

புயல் அடித்து காற்று மழையினாலும் கடல் கொந்தளிப்பினாலும் இயற்கையாக உடைப்புண்ட இராமேசுவரம் பிறகு பையப் பைய உடைப்பு அகலமாகிக் கால்வாய் ஆகிவிட்டது. அந்தக் கால்வாயை போர்த்துகீசிய வாணிகர் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக அகலமும் ஆழமுமாகச் செய்து விட்டனர், இவ்வாறு இராமேசுவரம் தனித்தீவாகப் பிரிந்து போயிற்று. இராமநாதபுரத்துக்கும், இராமேசுவரத்துக்கும் உள்ள கால்வாய் இப்போது பாம்பன் கால்வாய் என்று பெயர் கூறப்படுகிறது. இராமேசுவரமும், இராமநாதபுரமும் முன்னொரு காலத்தில் இணைந்து ஒரே நிலமாக இருந்தது என்பதைப் பிற்காலத்தவர் மறந்து விட்டார்கள்.

----------------------------------

இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் இடையில் பாம்பன் கால்வாயை போர்த்துகீசியர் வெட்டிய போதும், பின்னால் ஆங்கிலேயர்கள் அதை அகலப் படுத்திய போதும், இராமர் சேது என்று சொல்லி அதை நிறுத்த ஆட்கள் இல்லை. இன்றோ, சேதுக் கால்வாய் வெட்டுவதை நிறுத்துவதற்கு இராமனைக் காரணம் காட்டுகிறார்கள்.

இனி ஆதி சேதுவுக்கும், இப்பொழுது பேசப்படும் இராமர் சேதுவுக்கும் இடையிலான நிலம் கடற்கோளில் அழிந்த செய்தியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

அன்புடன்,

இராம.கி.

http://valavu.blogspot.com/2007/10/5.html

வணக்கம் நண்பர்களே,

இராமர் பற்றி சங்க இலக்கியத்தில் உள்ள குறிப்புகளை நான் இங்கே தர முயன்றேன்.

நான் திண்ணை தளத்தில் ஜடாயு அவர்கள் கட்டுரை படித்தேன், அதில் தொடுப்பு என உள்ளதை நான் இறக்கம் செய்தேன்.

புறநானுறில் உள்ளதை இராம்.கி அவர்கள் வலைப்பூவிலிருந்து நண்பர் நாரதர் தந்திருந்தார். உடனே எனக்கு இந்த அகநானுறு பாடலும் அதே போலே கலித்தொகையில் இராவணன் - தசமுகன் என்ற இயர்பெயரினின்று மாறிய புரானக் கதை உவமையாக கவிஞர் தந்ததும் நினைவிற்கு வந்தது.

என் எண்ணம் இத்திரியில் அரசியல் தேவையில்லை. எனவே நான் அகநானுறு பாடலும் அதன் பொருளும் மட்டும் தந்தென். அரசியல் தேவையில்லை என தொடுப்பு தரவில்லை. அரவி.நீலகண்டன் எடுத்த பொருள் இலக்கிய நெறியில் சரியே.

ஜடாயு அவர்கள் கட்டுரை பதித்த போது அதில் அரவி.நீலகண்டன் தொடுப்பு உள்ளது.தொடுப்பு தரப்பட்டுள்ளது. அரவி.நீலகண்டன் பற்றி நண்பர் நாரதர் கூறியவை என்னை பொருத்தவரை அவசியமில்லை. தமிழகத்தில் அவ்வப்போது எழும் அரசியல் நிலைமைகளில் வலைதளங்களின் செயல்பாடுகள் ஏற்கும்படியில்லை.

நண்பர் நாரதர் அதில் வருத்தம் கொண்டுள்ளார். என் செயல் தவறு எனில் வருத்தங்கள், அனைவருக்கும்.

இப்போது கலித்தொகை கூறும் ராமாயண கதை காண்போம்.

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை

எடுக்கல்செல்லாது உழப்பவன் போல 5

உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்

கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை

நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்

கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்: கலித்தொகை 38:1-8

புலவர் கபிலர் யானை தன் கொம்புகள் வேன்கை மரத்தில் குத்தியதை பின் எடுக்க முடியாமல் தவித்ததை - இமயமலையை வில்லாக வளைத்து (முப்புரம் எரித்த) சடையுடைய சிவபெருமான் தன் மனைவி உமையோடு அமர்ந்து இருந்தபோது 10 தலை கொண்ட இராவணன் இமயமலை கீழ் கையிட்டு தூக்கிடமுயல சிவன் அழுத்த அல்லல் உற்றாதற்கு உவமையாக தந்துள்ளார்.

தமிழ் மக்களிடம் இராமாயணம் மிகுதியாக பரவிஉள்ளதைக் காட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.