Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Tamil-candidate.jpg

புருஜோத்தமன் தங்கமயில்

நீண்ட நெடிய தேடுதல்களுக்குப் பின்னராக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (அரியம்) அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் பதவி வகித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராவார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் கடந்த வியாழக்கிழமை பொதுக் கட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அரியநேத்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த அறிவிப்பு வெளியானதும், சமூக ஊடகங்களில் யாழ். மையவாதிகளினால் கிழக்கில் இருந்து இன்னொரு பலியாடு களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னும் சிலர், ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ திரைப்படத்தில் முரளி – வடிவேலு கூட்டு போண்டா மணியை மணமகனாக அலங்கரித்து முன்னிறுத்தும் படத்தை வெளியிட்டு, அரியநேத்திரனின் அறிமுகத்தோடு ஒப்பிட்டு நையாண்டி செய்திருந்தார்கள்.

தமிழ்த் தேசியப் பற்றாளராகவும், ஊடகவியலாளராகவும் இருந்த அரியம், தேர்தல் அரசியலுக்கு விடுதலைப் புலிகளின் அனுசரணையோடு வந்தவர். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் நேரடியாக வெற்றிபெறாத போதிலும், கிங்ஸ்லி இராசநாயகம், தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்ததும், அந்த இடத்துக்கு கூட்டமைப்பினால் நிரப்பப்பட்டவர். அதிலிருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அதுவும், மட்டக்களப்பில் கருணா – பிள்ளையான் குழுவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர், தமிழ்த் தேசிய அரசியல்வாதியாக நின்றவர். இறுதிப் போர் வெற்றிக்குப் பின்னரான காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து கொண்டிருந்த போது, “போனா வருவீரோ, வந்தா இருப்பீரோ...” என்று தன்னுடைய பாராளுமன்ற உரையொன்றில் அரியம் பாடிய தமிழ்த் திரைப்படப் பாடலொன்று மிகப் பிரபலமானது. ஆனால், அவர், 2015க்குப் பின்னரான காலத்தில் அரசியல் அதிகார பதவிகளை இழந்தார். தற்போது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் என்ற அளவில் மாத்திரமே இருக்கிறார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் இன்று கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அரியத்தின் மத்திய குழு உறுப்பினர் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு உண்டு. 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட்டு, தமிழ் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அதன்மூலம் சர்வதேசத்துக்கு செய்தி சொல்லப்பட வேண்டும் என்பது, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரின் எதிர்பார்ப்பு. அதற்காக அவர்கள் வேட்பாளர் ஒருவரை கண்டடைவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். பொதுக் கட்டமைப்பினரை ஆதரித்த பலரும், வேட்பாளராக மாறுவதற்கு தயாராக இல்லை. ஏன், பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சிகளே தயாராக இல்லை. அதிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோ தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி, ஜனாதிபதி வேட்பாளராவதில் இருந்து ஒழித்து ஓடினார்கள். இன்னொரு பக்கம், தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகளை வழங்கவும் தயாராக இல்லை. இதனால், பொதுக் கட்டமைப்பினர் மீதான நெருக்கடி அதிகரித்தது. அவர்களுக்கு முன்னால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேடுவதுதான் இறுதி வழியென்ற நிலை உருவானது. அத்தோடு, தங்களின் சொல் பேச்சை மாத்திரம் கேட்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்ற வரையறையும் இருந்தது. அதனால்தான், வேட்பாளராக அரியம் தெரிவாகும் நிலை வந்தது. 

வேட்பாளர் தெரிவில் இறுதியாக அரியத்தோடு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இன்னொரு மத்திய குழு உறுப்பினரின் பெயரும் சம்பந்தப்பட்டவரின் அனுமதியோடு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராக ஒருபோதும் பதவி வகித்தவர் இல்லை என்பதால், அவர் போட்டியிடுவதானால் கட்சியொன்று அவசியம். ஆனால், பொதுக் கட்டமைப்பின் கட்சிகள் எவையும், தங்களது கட்சியை வழங்க முன்வராத நிலையில், சம்பந்தப்பட்டவர் தெரிவாகும் வாய்ப்பும் அற்றுப்போனது. அதனால்தான், அரியம் ஜனாதிபதி வேட்பாளரானார். அவரும் இல்லையென்றால், பொதுக் கட்டமைப்பினர், எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேடிச் சென்றிருக்க வேண்டி வந்திருக்கும். அவர் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். ஆனால், அந்த நெருக்கடி நிலையை, அரியம் பொதுக் கட்டமைப்பினருக்கு, குறிப்பாக அந்தக் கட்டமைப்பிலுள்ள அரசியல் பத்தியாளர்களுக்கு வழங்கவில்லை. அந்த வகையில் பத்தியாளர்களுக்கு அரியம் பாக்கியம் செய்திருக்கிறார். 

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி மீது தமிழ் மக்கள் பெருமளவில் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். அந்த அதிருப்தியைக் கழைந்து, நம்பிக்கையின் பக்கம் நகர்த்தி, தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு தமிழ் மக்களை ஒன்று திரட்டுதல் என்பது அவசியமானது. அதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இல்லை. ஆனால், அந்தக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் தரப்பினர், அதற்கான அர்ப்பணிப்பை முழுவதுமாக வழங்க வேண்டும். அதற்கு மாறாக, ‘வேண்டா வெறுப்பாக பிள்ளையைப் பெற்று, அதற்கு காண்டாமிருகம் என்று பெயர் வைத்தது’ போல, நடந்து கொள்ள முடியாது. பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சிகளின் நிலைப்பாடுகளைப் பார்க்கும் போது, அப்படித்தான் தோன்றுகின்றது. ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ என்ற அடையாளத்தோடு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கட்டமைப்பினர் வேட்பாளராக முன்னிறுத்தும் போது, அதற்கான முக்கியத்துவத்தை வழங்கியாக வேண்டும். அவரின் அறிமுகம், பொதுக் கட்டமைப்பின் அனைத்துத் தரப்பினதும் பங்களிப்போடு, பெரும் சமூக – ஊடக கவனம் பெறும் அளவுக்கு பிரச்சார உத்திகளோடு முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரியத்தின் அறிமுகத்தின் போது, பொதுக் கட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிற கட்சிகளான ரெலோ, புளொட், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது. வெளிநாட்டு தூதுவராலயங்கள், உள்ளக -அயலக பாதுகாப்புப் பிரதானிகள், இராஜதந்திரிகள் என்று எந்த தரப்பு அழைத்தாலும் எந்தவித கேள்வியும் இன்றி, ஓடோடிப்போய் சந்தித்து விட்டு வரும், இந்தக் கட்சிகளின் தலைவர்கள், தாங்கள் முன்னிறுத்தும் வேட்பாளர் அறிமுகத்தை பாராளுமன்ற அமர்வுகளைக் காட்டி புறக்கணித்தமை அபத்ததத்தின் உச்சம். அது, போக்கிடமின்றி அமைந்த கூட்டின் பங்காளிகள் தாங்கள் என்ற அவர்களின் எண்ண ஓட்டத்தை மக்களிடம் வெளிப்படுத்தியது. அரியம் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் உடல்மொழி, அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை தீர்க்கமாக வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்கவில்லை. அவர்கள், மனதளவில் சோர்ந்து போய் இருப்பதை, முகங்கள் அப்பட்டமாக காட்டின. அதிலும், உடல்மொழி, பேச்சாளர்களின் மனோ நிலை தொடர்பில் எல்லாம் கடந்த காலங்களில் பகுத்தாய்ந்து எழுதிய பத்தியாளர்களின் முகங்களே பெரும் சோர்வாக காணப்பட்டன. அந்த முகங்களில், ஒரு மாதிரியாக ஒருவரை வேட்பாளராக அறிமுகப்படுத்தியாகிவிட்டது என்ற ரேகைகள் படர்ந்திருந்தன. அதனைத் தாண்டி எந்த நம்பிக்கையையும் விதைக்கும் உணர்வுகள் யாரிடத்திலும் இருக்கவில்லை. 

தமிழரின் தாகத்தை தீர்க்க, அரசாங்கத்திடம் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை சலுகைகளாக – இலஞ்சமாக பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் எல்லாம், தமிழ்த் தேசிய அரசியலை தற்போது ஆக்கிரமித்திருக்கிறார்கள். தமிழரின் தாகம் என்பதை, தண்ணீர் தாகம் என்று உணர்ந்து கொண்டாலாவது பரவாயில்லை. அரசியல் புரிதல் இல்லை என்று அவர்களை மன்னித்து புறந்தள்ளி விடலாம். ஆனால், தமிழரின் தாகத்தை, சாராய – கசிப்பு தாகம் என்று உணர்ந்து செயற்படுபவர்களை, தமிழ்ச் சமூகம் எச்சரிக்கையோடு அணுக வேண்டும். இப்படியான அறமற்றவர்களும், சமூக விரோத சிந்தனைக்காரர்களும் தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்திருக்கும் போது, தமிழ் மக்கள் அரசியலில் நம்பிக்கை இழப்பது இயல்பானது. அதனை, மாற்றியமைத்து, தமிழ்த் தேசிய அரசியலை நம்பிக்கையின் பக்கத்திற்கு நகர்த்துதல் என்பது, மிகப்பெரிய செயற்திட்டங்கள், அர்ப்பணிப்புக்கள் சார்ந்தது. அது பதவி, பகட்டு, பணம், இலஞ்சம், ஊழல், சலுகை சார் நிலைகளுக்கு அப்பாலானது. ஆனால், தற்போதுள்ள அரசியலில் இவைகளைக் கடந்தவர்கள் என்று பெரிதாக யாரையும் அடையாளம் காண முடியாது. முள்ளிவாய்க்காலிலும், மாவீரர் நாட்களிலும் தீபமேற்றிவிட்டால் போதும், தமிழ் மக்களின் மண்டையில் மிளகாய் அரைக்கலாம் என்பது, பல அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. ஆனால், அவர்களின் தென் இலங்கை அரசாங்கங்கள், கட்சிகளுடனான நெருக்கம் என்பது, மிகமோசமான அளவில் இருக்கின்றது. அது, தனிப்பட்ட ரீதியானது என்றால் பிரச்சினையில்லை. ஆனால், அது, தமிழ் மக்களை பலிகடாவாக்கும் போக்கிலானது. அப்படியானவர்களின் கரங்கள், தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் முன்னிறுத்தம் மற்றும் தெரிவிலும் முக்கிய தாக்கம் செலுத்துகின்றதா என்ற சந்தேகம் உண்டு. 

இறுதி மோதல் காலத்தில் ராஜபக்ஷக்களோடு நெருக்கமாக இருந்த தமிழ் வர்த்தகர் ஒருவர், இப்போது யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை நடத்துவதன் மூலம், தமிழ்த் தேசியக் கட்சிகளையும் தலைவர்களையும் தன்னுடைய கைப்பாவையாக கையாள நினைக்கிறார். அதற்கு இணங்காதவர்களை நாளும் பொழுதும் விமர்சிப்பதுதான் அவரது வேலையாக இருக்கின்றது. அவரின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் இருந்தது. அவர் மீதான விமர்சனம் பொது வெளியில் எழுந்ததும், பொதுக் கட்டமைப்பில் இருந்து அவர் ஒதுங்கிக் கொண்டது போல, காட்டிக் கொண்டார். ஆனாலும் அவரது பிரதிநிதியாக பத்தியாளர் ஒருவர் பொதுக் கட்டமைப்புக்குள் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர்களின் தெரிவும் அரியமாக இருந்திருக்கின்றது. அதற்கான காரணமாக, கேள்விகளைக் கேட்காத ஒருவராக அரியம் இருப்பார் என்பதுதான் ஒற்றை வாதம். 

அரியம், தற்போது செல்வாக்குள்ள அரசியல்வாதியல்ல. தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு குழப்பத்தில், அவர் சிவஞானம் சிறீதரனுக்காக இயங்கியவர். அதன்மூலம் அண்மைய நாட்களில் சற்று ஊடகக் கவனம் பெற்றவர். மற்றப்படி, அவரினால் தேர்தல் – வாக்கு அரசியலில் தற்போது தாக்கம் செலுத்த முடிவதில்லை. மட்டக்களப்பிலேயே அவரினால் சில ஆயிரம் வாக்குகளைக்கூட பெற முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படிப்பட்ட ஒருவரை, வடக்கு கிழக்கு பூராவும் பொது வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது எவ்வளவு தூரம் அனுகூலமானது என்பது, பொதுக் கட்டமைப்பின் பத்தியாளர்களுக்குத்தான் வெளிச்சம். ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பொது வாக்கெடுப்பாக கருதி செயற்பட வேண்டும் என்ற அறிவித்தலை விடுத்துக் கொண்டு களத்துக்கு வந்த அரசியல் பத்தியாளர்கள், தற்போது பிரிந்துள்ள தமிழ் வாக்குகளை ஒன்றாக திரட்டுவதுதான் இலக்கு என்று தங்களின் கோரிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டு விட்டார்கள். ஆனாலும், அவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வல்லமை அரியத்திடம் இல்லாத போது, அவரை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது எதனை நோக்கிய அரசியல்?

வேட்பாளர் அறிமுக நிகழ்விலேயே கலந்து கொள்ளாத பொதுக் கட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், அரியத்துக்காக வாக்குச் சேகரிப்பை மனப்பூர்வமாக முன்னெடுப்பார்களா என்பது பிரதான கேள்வி. அரசியல் கட்சிகள், தொண்டர்களின் பங்களிப்பு இல்லாமல், பத்தியாளர்கள் சிலர் மாத்திரம் தமிழ் வாக்குகளை திரட்டும் வல்லமையோடு இருக்கிறார்களா என்றால், அதற்கு வாய்ப்புக்களே இல்லை. ஏனெனில், அந்தப் பத்தியாளர்களில் பலர், செம்மணி வளைவைத் தாண்டியே வெளியில் வராதவர்கள். அப்படியான நிலையில், கடந்த காலங்களில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டமைக்கு மாற்றீடான தெரிவாக மாத்திரமே அரியம் இருக்கப் போகின்றார். மற்றப்படி, அவரை பொதுக்கட்டமைப்பினரின் ஜனாதிபதி தேர்தலுக்கான பலியாடாகவே தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் காண்கிறார்கள். அதனை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும்.

-காலைமுரசு பத்திரிகையில் ஆகஸ்ட் 11, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/08/blog-post_11.html

அரியம் சாதாரண பலியாடு இல்லை, மொட்டைக் கத்தி கொண்டு காத்திருந்த கூட்டத்தில் தன் தலையை அறுக்க கொடுத்திருக்கும் முட்டாள்தனமான ஆடு.

கிழக்கில் ஒரு சில ஆயிரம் பேருக்காகவது இவரை பெயரளவில் தெரிந்து இருக்கும், ஆனால் வடக்கில் இவரை யார் என்றே பெரும்பாலானோருக்கு தெரியாது.

செப்ரம் 21 இன் பின் தமிழ் தேசிய தேசியம் மேலும் மேலும் சந்தி சிரிக்க போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

அரியம் சாதாரண பலியாடு இல்லை, மொட்டைக் கத்தி கொண்டு காத்திருந்த கூட்டத்தில் தன் தலையை அறுக்க கொடுத்திருக்கும் முட்டாள்தனமான ஆடு.

கிழக்கில் ஒரு சில ஆயிரம் பேருக்காகவது இவரை பெயரளவில் தெரிந்து இருக்கும், ஆனால் வடக்கில் இவரை யார் என்றே பெரும்பாலானோருக்கு தெரியாது.

செப்ரம் 21 இன் பின் தமிழ் தேசிய தேசியம் மேலும் மேலும் சந்தி சிரிக்க போகுது.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரின் இந்தச் செயற்பாடு உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு மாற்றீடாக தங்களை பரீட்சித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடே 

இந்த சனாதிபதித் தேர்தலில் அரியநேந்திரன் தமிழர்களின் கணிசமான வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் தமிழ்த் தேசிய பொதுக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக அடுத்தடுத்த தேர்தலில் TNA க்கு பதிலீடாக போட்யியிடும்  வாய்ப்புகள் அதிகம். 

அதற்கான ஒரு Test drive ஆகத்தான் இந்த சனாதிபதித் தேர்தலை இவர்களின் பின்னின்று இயக்குபவர்கள் பார்க்கிறார்கள். 

அதற்கான ஆளம் பார்க்கும் முயற்சிதான் இந்த சனாதிபதித் தேர்தல். 

2 hours ago, Kapithan said:

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரின் இந்தச் செயற்பாடு உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு மாற்றீடாக தங்களை பரீட்சித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடே 

இந்த சனாதிபதித் தேர்தலில் அரியநேந்திரன் தமிழர்களின் கணிசமான வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் தமிழ்த் தேசிய பொதுக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக அடுத்தடுத்த தேர்தலில் TNA க்கு பதிலீடாக போட்யியிடும்  வாய்ப்புகள் அதிகம். 

அதற்கான ஒரு Test drive ஆகத்தான் இந்த சனாதிபதித் தேர்தலை இவர்களின் பின்னின்று இயக்குபவர்கள் பார்க்கிறார்கள். 

அதற்கான ஆளம் பார்க்கும் முயற்சிதான் இந்த சனாதிபதித் தேர்தல். 

நான் அப்படி பார்க்கவில்லை. இவர்கள் இவ்வாறான Test drive ஒன்றை திட்டமிட்டு செயல்படும் அளவுக்கு திறமையானவர்கள் அல்ல. அப்படி இருந்திருந்தால் இந்த கட்சிகளில் இருந்து சிறிதரன் அல்லது கட்சி ஒன்றின் தலைவராவது போட்டியிட்டு இருப்பர்.

சேடம் இழுக்கும் குதிரைகளாக இந்த தமிழ் தேசிய கட்சிகள் இன்று உள்ளன. அவற்றின் இறுதி அவலக் குரலாகவே இம் முயற்சி.

தாமும் நாசமாகி, தாயக தமிழர்களின் தமிழ் தேசிய உணர்வை கேலிக்குள்ளாக்கும் செயலே இது.

செப் 21 இப் பின் இவர்களை தேட வேண்டி வரும்.

காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலஙாவின் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தியது தமிழர் அரசியலின் வரலாற்றுப்பிழை.

அனைத்து தமிழர் அரசியல் கட்சிகளும் ஒன்று சேராது இப்படியான முடிவை எட்டியது, பொது வேட்பாளர் ஓரிரு பத்து விகித வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் தமிழர் அரசியல் செய்வோரது நிலைப்பாட்டை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என அனைவரும் கூறும்நிலைக்குத் தள்ளப்படுவர்.

இந்தியா, ரணிலை பதவியில் வரவிடாது இராஜபக்சவுக்குப் பதுலாக அனுரகுமாரவைக் கொண்டுவர நினைக்கிறது, ஆனால் அனுர குமார ஒருபக்கம் சீன ஆதரவுநிலையை உடையவர் எனிலும் அனுரகுமாரவை எதிர்காலத்தில் சரிக்கட்டலாம் எனநினைக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Elugnajiru said:

சிறீலஙாவின் அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தியது தமிழர் அரசியலின் வரலாற்றுப்பிழை.

அனைத்து தமிழர் அரசியல் கட்சிகளும் ஒன்று சேராது இப்படியான முடிவை எட்டியது, பொது வேட்பாளர் ஓரிரு பத்து விகித வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் தமிழர் அரசியல் செய்வோரது நிலைப்பாட்டை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என அனைவரும் கூறும்நிலைக்குத் தள்ளப்படுவர்.

இந்தியா, ரணிலை பதவியில் வரவிடாது இராஜபக்சவுக்குப் பதுலாக அனுரகுமாரவைக் கொண்டுவர நினைக்கிறது, ஆனால் அனுர குமார ஒருபக்கம் சீன ஆதரவுநிலையை உடையவர் எனிலும் அனுரகுமாரவை எதிர்காலத்தில் சரிக்கட்டலாம் எனநினைக்கிறது. 

ஆம்

தமிழர்கள் ஒற்றுமைப்பட்டால் பாக்கியம்.  

இல்லாவிட்டால் பலியாடு.

தவறு எம்மிடம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நாமலை வெல்லவைக்கும் வேலை இது.. தமிழர்களின் வாக்குகள் ராஜபக்ச பரம்பரைக்கு ஒரு போதும் போகாது என்பது தெரிந்து அந்த வாக்குகள் வெல்லக்கூடிய மற்றைய பிரதான போட்டியாளர்கள் யாருக்கும் போகக்கூடாது என்று திட்டமிட்டு மகிந்த குருப்பால் வழிகாட்டப்பட்டு சம்பந்தி விக்கினேஸ்வரன் ஊடாக வாக்கைப்பிரிக்க அரங்கேற்றப்பட்டிருக்கும் அரசியல் நாடகம் இது.. மறுபடியும் இனழிப்பு வாதி இலங்கையை பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டுசென்ற மகிந்தகுடும்பத்தை ஆட்சியில் அமத்த பட்டாளி மக்கள் கட்சி அய்ந்து வருடத்துக்கு ஒரு முறை மாம்பழம் அறுவடை செய்து பெட்டி வாங்கி பலகோடி சம்பாதிப்பதுபோல் மகிந்த குடும்பத்திடம் மிகப்பெரிய அளவில் பெட்டி வாங்கிக்கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பொதுவேட்பாளர் நாடகம்.. 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவேட்பாளர் என்பது தமிழினத்தை அலைக்களிக்கும் அல்லது ஏமாற்றும் தந்திர முயற்சி. ஆனால் ஏற்கனவே இந்தியக் கைக்கூலிகள் தமது எஜமான விசுவாசத்தைக் காட்டப் போட்டிபோட்டுச் செயற்படுகிறார்கள் என்பது வெளிப்படையானது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர்கள் இன்று ஏதோ ஒருவகையில் சரி,பிழைகளுக்கப்பால் அணிபிரிந்து நிற்பது என்பது(ஒரு குறிப்பிட்ட தொகையினர் தவிர) புதிய நாகரிகமாக மாறிவிட்டதோ என்று எண்ணுமளவுக்கே நிலமைகள் உள்ளன. இதிலே பாவம் இந்த அரியம். இலங்கை அதிபர் தேர்தலில் இதுதான் முதல் முறையா தமிழர் ஒருவர் கேட்பது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் சிங்களத்தாற் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் 1982இல் அவர்கள் கேட்டார்தானே. 3வீத வாக்குகளைப் பெற்றபோதும் அது பெரிய அளவிற் பேசுபொருளாகவில்லை. அதேபோன்று திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கேட்டபோதும் அது பெரிய அளவிற் பேசுபொருளாகவில்லை. ஏன் தற்போது இவளவுதூரம் பேசுபொருளாகியுள்ளது. பின்வரும் கரணியங்களா?
1.தமிழினம் அரசியல் முதிர்ச்சியடைந்துவிட்டது
2.சிங்களத் தலைவருக்கு வாக்களித்துச் சலுகைகளைப் பெறலாம்.
3.சிங்களத் தலைமைகளோடு வீணான பகைமையை உருவாக்கும்.
4.வெல்லமுடியாத தேர்தலில் ஏன் போட்டியிடுவான்.
5.வெல்லக் கூடிய ஒருவரோடு இணக்க அரசியல் செய்யலாம். 
                               இப்படி இன்னும் பலவும் இருக்கலாம்.

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி
 

Edited by nochchi
பிழைதிருத்தம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.