கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1
🏡 பாகம் 01 – வெல்வின் கார்டன் சிட்டியில் ஏற்பட்ட முதல் ஆரவாரமும் ஆச்சரியமும்
காலைக் கதிரவன் மெதுவாக எழுந்து, வெல்வின் கார்டன் சிட்டியின் [Welwyn Garden City] வீதிகளைத் தங்க நிற ஒளியால் அலங்கரித்தது. ஐந்து வயதிற்கும் சற்று குறைவான 'நிலன்', அரை உறக்கத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு, கார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் தாத்தா ஏன் அவர்களை காரில் கூட்டிக் கொண்டு போகிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. குட்டி 'ஆரின்' தனது குழந்தை இருக்கையில் பாதி தூக்கத்தில் இருந்தான்; ஆனால் மூத்த அண்ணன் 'திரேன்' மகிழ்ச்சியுடன் துள்ளிக் கொண்டிருந்தான்.
உறக்கம் கலந்த குரலில், ஆர்வத்துடன், “தாத்தா, நாம் எங்கே போறோம்?” என நிலன் கேட்டான்.
“என் சிறிய ஆராய்ச்சியாளனே, அதை நீயே விரைவில் பார்ப்பாய்” என்று தாத்தா சிரித்தபடி “இது ஒரு பெரிய ஆச்சரியம்!” என்று சொன்னார்.
வெல்வின் கார்டன் சிட்டியின் தெருக்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட புதர்கள், அழகாக சுத்தமான வீடுகளுடன், ஒரு குழந்தைப் புத்தகக் கதையைப் போல் தோன்றின. பறவைகள் கீதம் பாட, மர இலைகள் மெதுவாக அசைந்தன. தாத்தா மெதுவாக காரை ஓட்டிச் சென்றார். வழியில், அங்கு காணப்பட்ட சிறிய, அழகான விவரங்களையும் மற்றும் மனதில் தோன்றிய சிறு சிறு விடயங்களையும் சுட்டிக்காட்டினார் – ஒரு தோட்டத்தில், சோம்பேறித்தனமாக கால்களைக் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு பூனை, ஒரு வேலியுடன், அனாதரவாக சாய்ந்து நின்ற சிவப்பு மிதிவண்டி, மற்றும் நடைபாதையில் குறுக்கே வேகமாகச் செல்லும் ஒரு சிறிய அணில் போன்றவற்றைப் பார்த்துக் கொண்டு சென்றனர்.
தாத்தா கூட்டிக் கொண்டு போன இடத்தை அடைந்ததும் நிலனின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. "இது... ஒரு பூங்காவா?" அவன் தன் இருக்கையில் இருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு கிசுகிசுத்தான்.
“ஆம், ஆனால் இது சாதாரண பூங்கா அல்ல,” என்று தாத்தா கார் கதவைத் திறந்தார்.
குழந்தைகள் கற்களால் ஆன ஒரு பாதையில் ஒன்றாகப் பாய்ந்து ஓடினர். அங்கு உயரமான வேலிகளுக்குப் பின்னால் ஒரு இரகசிய தோட்டம் மறைந்திருந்தது. சிவப்பு, மஞ்சள், ஊதா நிற மலர்கள் வானவில் போல் மலர்ந்திருந்தன. லாவெண்டர் [lavender] மற்றும் ரோஜாக்களின் வாசனை காற்றை நிரப்பியது.
திடீரென்று, ஒரு மென்மையான சிரிப்பு நிலனின் கவனத்தை ஈர்த்தது. “Welcome to Adventure Grove” ["சாகச தோப்புக்கு வருக"] என்று ஒரு சிறிய மர பலகையில் எழுதப்பட்டிருந்தது. அது அவர்களை புன்னகையுடன் பேசி வரவேற்றது. அதன் பின் சிறிய பாதைகள், பாலங்கள், ஓடைகள், விலங்குகளின் சிற்பங்கள் — எல்லாம் சேர்ந்து ஒரு கற்பனை உலகம் போல விரிந்து பரவி இருந்தது.
“தாத்தா! பாருங்க!” என்று திரேன் கத்தினான். தோட்டத்தின் மையத்தில் உள்ள ஒரு சிறிய கோட்டையை சுட்டிக்காட்டினான். அதில் கோபுரங்களும், காற்றில் பறக்கும் சிறிய கொடிகளும் இருந்தன. "நாம் உள்ளே போகலாமா?” என்று கேட்டான்.
"நிச்சயமாக!" என்று தாத்தா பதிலளித்தார்.
அங்கு தான் முதல் அதிசயமான அனுபவம் அவர்களுக்கு ஆரம்பமானது. குழந்தைகள் வளைந்து நெளிந்து ஓடி, மறைந்திருக்கும் மூலைகளைக் கண்டுபிடித்தனர்: வாத்துக் குஞ்சுகள் மிதக்கும் ஒரு சிறிய குளம், ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்திருந்து எட்டிப்பார்க்கும் ஒரு செதுக்கப்பட்ட மர நரி சிற்பம், மற்றும் அவர்களுக்காகவே செய்யப்பட்டதாகத் தோன்றும் ஒரு வில்லோ மரத்தின் [அலரி மரம் or காற்றாடி வகை மரம் / willow tree] கீழ் மறைந்திருக்கும் ஒரு ஊஞ்சல் என பலவற்றை மூலை முடுக்குகளில் கண்டு பிடித்தனர்.
எப்போதும் ஆர்வமுள்ள நிலன், ஒரு மலர் படுக்கையின் அருகே ஏதோ மின்னுவதைக் கவனித்தான். மண்டியிட்டு [குனிந்து] அவன் பார்த்த பொழுது, வண்ணமயமான கூழாங்கற்களால் [colorful pebbles] அமைக்கப்பட்ட சிறிய ரகசிய பாதை ஒன்றைக் கண்டான். "புதையல் வேட்டை!" என்று அவன் கூச்சலிட்டான். தாத்தா சிரித்துக்கொண்டே ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறிய கூடையைக் கொடுத்தார். அவர்கள் கூழாங்கற்களைச் சேகரிக்கத் தொடங்கினர். அப்பொழுது அங்கே, அந்த ரகசிய பாதையில், ஒவ்வொரு முறையும் ஒரு பட்டாம்பூச்சி கலைந்து பறந்து செல்லும்போதும் அல்லது ஒரு பறவை கலைந்து குரல் கொடுக்கும் போதும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார்கள்.
சிறிது நேரத்தில் அவர்கள் பசுமையான புல்வெளியில் அமர்ந்தனர். தாத்தா ஒரு சாப்பாட்டு கூடையை திறந்தார். அதில் சாண்ட்விச் [sandwich], பழங்கள், பிஸ்கட்டுகள் [Biscuits] என பல சிற்றுண்டிகள் இருந்தன. தாத்தா சிரித்தபடியே, “இது என் சிறிய சாகச வீரர்களுக்கான காலை விருந்து,” என்றார்.
நிலன் ஒரு ஸ்ட்ராபெர்ரி [strawberry] எடுத்து, அதன் இனிப்பை ருசித்தான். திரேன் "புதையல் வேட்டையின்" [“Treasure Hunt”] வெற்றியை பெருமையுடன் எல்லோருக்கும் விவரிக்க, குட்டி ஆரின் தாத்தாவின் மடியில் கைத்தட்டி கைத்தட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.
ஆனால் அவர்களுக்கு இன்னும் ஒரு அதிசயம் [ஆச்சரியம்] காத்திருந்தது. தாத்தா குழந்தைகளை ஒரு மறைக்கப்பட்ட மூலையில், ஒரு சிறிய மர மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு திரைக்குப் பின்னால் இருந்து, ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி தொடங்கியது - பேசும் விலங்குகள் மற்றும் மாயாஜால சாகசங்கள் பல அங்கு நிறைந்து இருந்தது. ஒவ்வொரு காட்சியும் அவற்றின் பெயர்களைச் சேர்த்து கவனமாக விபரமாக கொடுத்தது. ஒரு பொம்மை டிராகன் [a puppet dragon], அங்கே நிலனை வணங்கிய பொழுது, நிலன் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டான். கூச்ச சுபாவமுள்ள குட்டி ஆரின் கூட தனது தாத்தாவின் கைகளிலிருந்து சிரித்தான்.
நேரம் செல்லச் செல்ல, கதிரவன் மேலே மேலே ஏறினான். குழந்தைகள் கதிரவனின் வெப்பத்தை, ஒரு வெதுவெதுப்பான அரவணைப்பை, உணர்ந்து, அதில் மகிழ்ச்சியிலும் அன்பிலும் மூழ்கினர் — உண்மையில் சூரிய ஒளியிலிருந்து மட்டுமல்ல, கண்டுபிடிப்பின் சிலிர்ப்பாலும், குடும்பத்தின் ஆறுதலாலும், அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் காலையில் அனுபவித்த மாயாஜாலத்தாலும் மூழ்கி இருந்தனர். தாத்தா, சிரித்துக் கொண்டே, இவை தான் வாழ்க்கையின் உண்மையான செல்வம் என எண்ணினார்.
சாகச தோப்பை விட்டு, வீட்டிற்குத் திரும்பும்போது, குழந்தைகள் சோர்வாக இருந்தனர், ஆனால் மகிழ்ச்சியாக இருந்தனர், அவர்களின் மனம் அரண்மனைகள், ரகசிய பாதைகள் மற்றும் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களால் நிறைந்திருந்தது. "நன்றி தாத்தா," நிலன் மெதுவாக தனது இருக்கையில் சாய்ந்து அரைத்தூக்கத்தில் கூறினான். “இது என் வாழ்நாள் சிறந்த அதிசயம்." தாத்தா என்றான், சோம்பல் முறித்தபடி.
தாத்தா மனம் நிறைந்த புன்னகையுடன் கூறினார். "சாகசம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, குழந்தைகளே. அது தொடரவேண்டும் என்றால், அடுத்த வாரம் தொடங்கும், உங்கள் கோடை விடுமுறை வரை காத்திருங்கள்." என்றார்.
இரகசிய தோட்டத்தையும் சிரிப்பின் எதிரொலிகளையும் ஒருபுறம் தள்ளி விட்டுவிட்டு, அவர்களின் அற்புதமான பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்குத் தயாராக கார் வீடு நோக்கி மெதுவாகச் சென்றது.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பாகம்: 02 தொடரும்
துளி/DROP: 1978 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1
https://www.facebook.com/groups/978753388866632/posts/33171634115818475/?
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 2
🏡பாகம் 02 – வெல்வின் கார்டன் சிட்டியில் மீண்டும் ஒரு ஆச்சரியம்
அது ஒரு ஒளிமிகுந்த, தென்றல் காற்று வீசிய சனிக்கிழமை காலை. மேகங்கள் கூட மகிழ்ச்சியாகத் தெரிந்த ஒரு காலைப் பொழுதாக வெல்வின் கார்டன் சிட்டி [Welwyn Garden City] இருந்தது.
மார்பு சிவந்த சிறுபறவைகளான ராபின் [Robins] தோட்ட வேலியில் இருந்து பாட, தபால்காரர் விசில் அடிக்க, வீட்டிற்குள், மூன்று சிறுவர்கள் ஏற்கனவே ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் [இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டமாகும் / Hertfordshire] உள்ள அனைத்து பறவைகளையும் விட அதிக சத்தம் எழுப்பிக் கொண்டு, அவர்களது கோடை விடுமுறையின் முதல் நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
மூத்த பேரனும் மற்றும் பத்துவயது நிரம்பிய திரேன் ஒரு அறிவியல் பணியில் [scientific mission] தன்பாட்டில் விளையாடிக்கொண்டு இருந்தான். ஆர்சனல் கால்பந்து கிளப்பின் [Arsenal F.C] அதிதீவீர ஆதரவாளனான அவன், கையில் ஒரு டார்ச்சுடன் [torch] சோபாவின் கீழ் ஊர்ந்து சென்று, கிசுகிசுத்தான். “காணாமல் போன கால்பந்து இந்தக் காட்டில் எங்காவது ஒளிந்து கொண்டிருக்க வேண்டும்!” என்று காட்டில் தேடுவது போல பாசாங்கு செய்தான்.
ஐந்து வயது நிலன், ஒரு துணிச்சலான விண்வெளி வீரனாகத் தன்னை தயார் படுத்திக் கொண்டு, தலைக்கவசத்திற்குப் பதிலாக ஒரு பாத்திரத்தை தலையில் கவிழ்த்து போட்டுக் கொண்டு, ஒரு துணி துவைக்கும் கூடையில் அமர்ந்து, அதை விண்வெளி நோக்கி போகும் ராக்கெட் கப்பலாக கற்பனை செய்து, பெருமையாகக் சத்தம் போட்டு, “மூன்று… இரண்டு… ஒன்று… புறப்படு நிலா நோக்கி!” என்று கூவினான்.
இதற்கிடையில், ஒரு வயதான குட்டி ஆரின், தாத்தாவின் பழைய கம்பள சாக்ஸை [old woolly sock] கண்டு பிடித்து, அதைக் கடித்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.
இந்த மகிழ்ச்சிகரமான பேரப்பிள்ளைகளின் குறும்புகளுக்கு நடுவில், தாத்தா 'கந்தையா தில்லை' அமைதியாக தனது காலை தேநீரைப் பருகிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியும் பெருமையும் கலந்த புன்னகையுடன் பேரப்பிள்ளைகளின் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த போது, அவரது கண்ணாடிகள் கூட மூக்கின் நுனி வரை நழுவி சென்று எட்டிப்பார்த்தது.
வாழ்க்கை அவருக்கு பல சாகசங்களைக் கொடுத்திருந்தாலும், இந்த மூன்று சிறு புயல்களே அவருக்கு மிகப் பிரியமானவையாக இன்று இருந்தது
“சரி என் சிறு சூறாவளிகளே,” என்று தாத்தா தேநீர் அருந்தியதும் மெல்லக் கூறி, “அனைவரும் தயாராகுங்கள் — நாம் இனி உடுப்புகளை அடுக்கி, பயணப்பெட்டிகளை [suitcases] தயார் செய்ய வேண்டும்" என்றார்
மூன்று பேரப்பிள்ளைகளின் தலைகளும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்தில் மேலெழுந்தன.
“உடுப்பு அடுக்குதல்?” — திரேன் ஆவலாக, தன் கண்களை அகல விரித்துக்கொண்டு தாத்தாவிடம் கேட்டான்.
“வீடு மாறப் போகிறோமா?” — நிலன் தன் கூடையில் இருந்து குதித்து எழும்பினான்.
“பா-பா!” [“Baa-ba!”] என்று ஆரின் கத்தினான் — தன்னுடைய பால் எங்கே என்று?
தாத்தா சிரித்தார்.
“இல்லை இல்லை, நாம் வீடு மாறவில்லை — பயணம் போகப் போகிறோம்! நான் ஒரு அற்புதமான இடத்துக்கு ஆச்சரியமான சாகசத்தைத் திட்டமிட்டுள்ளேன், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் [ஆச்சரியம் / surprise] ஆக" என்றார். வெப்பமாய் வெளிச்சமாய் இருக்கும் ஒரு நாட்டுக்கு, அங்கே நீங்கள் கடித்து சுவைத்து உண்ண நிறைய கூக்கீஸ்களும் ["பிஸ்கட்" அல்லது "இனிப்பு அப்பம்" / cookies] இருக்கும்!”
“கூக்கீஸா?” என்று நிலனின் கண்கள் ஒளிர்ந்தன. “அது பாட்டியின் சமையலறையா?” என்று கேட்டான்.
“அதையும் விட சிறந்தது,” என்று தாத்தா கண் சிமிட்டினார்.
“மணல் தங்கமாக ஒளிவிடும் இடம், கோபுரங்கள் மேகங்களைத் தொடும் இடம், கடலும் நகரத்தைக் கட்டி அணைக்கும் இடம்!” என்று கூறிவிட்டு" சொல்லுங்கள் பார்ப்பம் என்றார்.
திரேன் முதலில் கத்தினான், “துபாய்?”. தாத்தா பெருமையாகத் தலைஅசைத்தார்.
“ஆம், துபாய் தான் — நம்முடைய அடுத்த குடும்ப சாகசம்!” என்றார்.
ஒரு கணம் திகைப்பூட்டும் அமைதி நிலவியது, அதைத் தொடர்ந்து அடுத்த கணமே வீடே குலுங்கும் அளவுக்கு சத்தம் கேட்டது!
அந்த அலறலில், வேலியில் அமர்ந்து இருந்த ராபின் பறவைகள் பயம் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றன. திரேன் உலக வரைபடத்தை எடுக்க ஓடினான். நிலன் துள்ளிக் குதித்து, “துபாய்! துபாய்! துபாய்!” என்று ஏதேதோ சொல்லி சொல்லி கோஷமிட்டான். ஆரினும் தன் சிறு கைகளால்த் தட்டியபடி தாத்தாவின் முழங்காலில் முத்தம் கொடுத்து மகிழ்ந்தான்.
“இப்போ எல்லோரும் உங்கள் உங்கள் பயணப் பெட்டியை அடுக்க ஆரம்பியுங்கள்,” என்று தாத்தா மகிழ்ச்சியுடன் கட்டளை இட்டார்.
“ திரேன், உன் எக்ஸ்ப்ளோரர் தொப்பியை [ஆய்வுப்பயணத் தொப்பி / explorer hat] எடுத்து வா. நிலன், உன் பாத்திரத் தொப்பியை வீட்டிலேயே விட்டுவிட்டு வா — இல்லை யென்றால் விமான நிலையத்திலே, உன்னைச் சமையல் காரன் [குக் / chef] என நினைப்பார்கள்! ஆரின், நீ உன் புன்னகையை மறக்காமல் எடுத்துக்கொண்டு வா, அழாமல் மகிழ்வாக இருக்க.” என்று தாத்தா எல்லோருக்கும் அன்பான வேண்டுகோள் வழங்கினார்.
நேரம் செல்லச் செல்ல சாளரத்தின் [யன்னல்] திரைச்சீலைகள் வழியாக சூரிய ஒளி வீட்டுக்குள் பரவின. விமான நிலையம் போகும் நேரம் நெருங்குகிறது என்பதை இது நினைவூட்டியது. வெல்வின் கார்டன் சிட்டியில் உள்ள அவர்களின் வீடு இதனால், உற்சாகத்தால் சலசலத்தது.
விமான நிலையத்திற்குப் புறப்படத் தயாராகும் இந்த வேளையில், சூட்கேஸ்கள் (சக்கரங்களுடன்) இழுக்கப்பட அல்லது தள்ளப்பட தொடங்கின. சாக்ஸ் [காலுறை / socks] மீண்டும் காணாமல் போயின, தாத்தா தனக்குள் மெதுவாகச் சிரித்தார்.
"இன்னொரு சாகசம் தொடங்குகிறது - இந்த முறை, என் மூன்று சிறிய ஹீரோக்களுடன் [கதாநாயகர்களுடன்]." என்று தாத்தா பெருமையுடன் அறிவித்தார் 🌞
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பாகம்: 03 தொடரும்
துளி/DROP: 1984 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 2]
https://www.facebook.com/groups/978753388866632/posts/33216229664692253/?
By
kandiah Thillaivinayagalingam ·