Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 (புருஜோத்தமன் தங்கமயில்)

 

itak%2024.jpg


இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘தனித்து’ தன்னுடைய வீட்டுச் சின்னத்தில் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் களம் காண்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, ரணில் அரசாங்கத்தினால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றிருந்தால், அது தமிழரசுக் கட்சியின் தனிப் பயணத்தின், மீள்வருகையாக பதிவாகியிருக்கும். இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை வெற்றியடைய வைத்து, தங்களின் தனியாவர்த்தனத்துக்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்று அந்தக் கட்சியின் முடிவெடுக்கும் தலைமை நம்புகின்றது. குறைந்தது எட்டு பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவது கட்சியின் எதிர்பார்ப்பு; அதிகபட்சம் 12 ஆசனங்கள். இந்த எண்ணிக்கையைவிட குறைவான ஆசனங்களை தமிழரசுக் கட்சி பெறுமானால், அதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும், இப்போது கட்சியின் நிழல் தலைவராக செயற்படும் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கவேண்டி வரும். அது, அவருக்கு கட்சிக்குள் பெரும் நெருக்கடியை வழங்கி, அவரின் அரசியல் வாழ்வின் முடிவுரையை எழுதும் சூழலை ஏற்படுத்தலாம். 

தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் நாற்பதுக்கும் அதிகப்படியான வாக்குகளினால், சிவஞானம் சிறீதரனிடம் தோல்வியடைந்த சுமந்திரன் இன்றைக்கு கட்சிக்குள் அதியுச்ச அதிகாரங்களோடு இருக்கிறார். அது, மறைந்த சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவராகவோ, கூட்டமைப்பின் தலைவராகவோ கொண்டிராத அதிகாரத்தின் அளவைத் தாண்டியது. சுமந்திரனைக் கேளாமல் எதுவும் கட்சிக்குள் நடைபெறாது என்ற நிலை இன்றைக்கு வந்துவிட்டது. அதுவும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தோடு, சுமந்திரனுக்கு கட்சிக்குள் இருந்த நெருக்கடிகள் எல்லாமும், அவரின் எதிரிகளாலேயே இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. கட்சிக்குள் அவரை எதிரியாக நினைத்துக் கொண்டிருந்தவர்களே, அவரிடம் கட்சியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியிருக்கிறார்கள். கட்சியின் வட்டாரக் கிளை தொடங்கி, கட்சியின் இறுதி முடிவு வரை சுமந்திரனின் இணக்கம், தலையீடு இன்றி எடுக்கப்படுவதில்லை என்ற கட்டம் வந்துவிட்டது. 

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் யாவும் சுமந்திரனின் இணக்கத்தோடுதான் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அவர், யார் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரிக்க நினைத்தாரோ, அவருக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருக்கின்றது. அதில், சிறீதரனும் விதிவிலக்கல்ல. சிறீதரனை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளராக அறிவிப்பதற்கு சுமந்திரன் எதிர்ப்பினை வெளியிட்டார் என்பது வெளியில் அறிவிக்கப்பட்டாலும், அதன் நேரடி உண்மை அதற்கு மாறானது. சிறீதரன், ‘சங்கு’ சின்னத்திற்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 20,000 வாக்குகளை கிளிநொச்சியில் பெற்றார். அது தனிப்பட்ட ரீதியில் அவரின் தோல்விதான்.  ஆனால், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான வாக்குகளில் சிறீதரனை வெளித்தள்ளுவதன் மூலம் 20,000 வாக்குகள் இழக்கப்படுவதை சுமந்திரன் விரும்பவில்லை. அதனால்தான், அவர் நியமனக்குழுக் கூட்டத்தில் சிறீதரனை எதிர்ப்பதாக கூறினாலும், பெரும்பான்மையினரின் விருப்பத்தின் பேரில், அவரை வேட்பாளராக முன்னிறுத்துவதாக காட்டிக் கொண்டார். அது சிறீதரனுக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கூடத் தெரியும். நியமனக் குழுவில் இருந்த பதினொரு பேரில், எட்டுப் பேர் சுமந்திரன் அணியினர் என்று கொள்ளலாம். அதில், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, சிறீதரன், சண்முகம் குகதாசன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தவிர்ந்து சுமந்திரனோடு சேர்த்து ஏழு பேர் அவரின் நிலைப்பாட்டுக்கு மாறாக எந்த முடிவுக்கும் ஆதரவினை வழங்கமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. சிறீதரனை வெளித்தள்ள வேண்டுமாக இருந்தால், அதனை சுமந்திரன் இலகுவாக செய்திருப்பார். அதனை அவர் உள்ளூர விரும்பவில்லை. அதற்கு இன்னொரு எளிய தேர்தல் கணக்கொன்றும் இருந்தது. அதாவது, சுமந்திரனால் வேட்பாளர் நியமனம் நிராகரிக்கப்பட்ட சசிகலா ரவிராஜ், கே.வி.தவராசா, ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்களோடு வெளித்தள்ளப்பட்டு சிறீதரனும் இணைந்திருந்தால், அது தமிழரசுக் கட்சிக்கான வாக்கு வங்கியில் யாழ்ப்பாணத்தில் பெரும் இடறலை ஏற்படுத்தியிருக்கும். அதனை தவிர்ப்பதற்கு சிறீதரனை கட்சிக்குள் வைத்திருப்பது அவசியமானது. அதன்போக்கில் சுமந்திரன், ‘இந்த விடயத்தில்’ நின்று நிதானித்து(!) இயங்கியிருக்கிறார். கட்சித் தலைவரான மாவை, தன்னுடைய நிலைப்பாடுகளை நியமனக்குழுவுக்குள் சொல்ல முடியாத பொம்மையாக நின்றார். அவர், பரிந்துரைத்த யாரையும் வேட்பாளராக அறிவிக்கும் நிலையில், சுமந்திரன் இல்லை. அதனால்தான், அவர் வெறுப்படைந்து கட்சியின் தலைமைப் பதவியை துறப்பதாக ஊடகங்களில் அறிவித்தார். மாவை, பதவியைத் துறந்தாரா இல்லையா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஏனெனில், அவரின் பதவி துறப்புக்கான கடிதம், பதில் செயலாளருக்கு இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்குள் ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு என்கிற பெயரில் சுமந்திரனால், வேட்பாளர் நியமனம் மறுக்கப்பட்டவர்கள் சிலர் இணைந்து சுயேட்சைக்குழுவாக போட்டியிடுகிறார்கள். அதில், ஒரு எதிர்பார்க்காத வரவு, பசுமை இயக்கத்தின் பொ.ஐங்கரநேசன் மட்டுமே. அவர், தன்னுடைய கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யும் நடைமுறைகளின் போக்கில், இந்தத் தேர்தலை அணுகுவதாக தெரிகின்றது. ஏனெனில், அவரின் தேசிய பசுமை இயக்கத்தின் அடையாளமாக மாம்பழத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்.  தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம், தேசிய பசுமை இயக்கத்தை தனிக்கட்சியாக அங்கீகாரம் கோரும் நோக்கம் அவரிடம் இருக்கலாம். அதுதான், மாம்பழச் சின்னம் கோரலுக்கான பின்னணியும் கூட. 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், கட்சியின் முடிவுக்கு எதிராக நின்று ஊடகங்களில் கருத்துரைத்தார்கள் என்ற பெயரில் இளைஞர் அணியின் தலைவராக இருந்த சிவகரன் உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்கள். அப்போது, சிவகரன் ஜனநாயக தமிழரசுக் கட்சியினர் என்று தன்னையும் தன் சார்ந்தவர்களையும் அடையாளப்படுத்தி வந்தார். அவ்வாறான சூழலில், ஜனநாயக தமிழரசுக் கட்சி அடையாளத்தை, தவராசா, சரவணபவன் குழுவினர் எடுத்துக் கொண்டால், ஊடக வெளிப்படுத்தலில் சிக்க வேண்டி வரும் என்கிற நிலையில், அவர்கள் ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு என்ற நாமகாரணத்துக்குள் சென்றிருக்கலாம். பசுமை இயக்கத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பதன் மூலம், கூட்டமைப்பு என்ற விடயத்தையும் அவர்கள் தர்க்க ரீதியாக நியாயப்படுத்த முயன்றிருக்கலாம். இன்றைக்கு ஜனநாயக தமிழரசு நாமம் சூடிய குழுவினர், ஏற்கனவே ‘இளைஞர் அலை’ என்கிற பெயரில் கடந்த காலத்தில் குழு அமைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அது, சுமந்திரன் எதிர்ப்பு அணிக்குள் இருந்து நிழலாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் பெரும்பாலோனோர், இப்போது ஜனநாயக தமிழரசு சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழுவினரின் வருகை, யாழ் தேர்தல் களத்தில் யாருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று நோக்கினால், தமிழரசுக் கட்சிக்கு சில ஆயிரம் வாக்குகளை இழக்கப்பண்ணலாம். குறிப்பாக, தீவக (மக்கள்) மற்றும் வட்டுக்கோட்டைத் தொகுதி வாக்குகளில் சேதாரங்களை ஏற்படுத்தலாம். அதனால், சுமந்திரனுக்கு பெரிய பின்னடைவுகள் ஏற்படும் என்று கருத வேண்டியதில்லை. ஏனெனில், இந்தச் சுயேட்சைக்குழு களம் காணாது இருந்திருந்தால், அவர்களின் ஆதரவாளர்கள் தமிழரசுக்கு வாக்களித்திருப்பார்கள். அத்தோடு, விருப்பு வாக்கினை சிறீதரனுக்கு வழங்கியிருப்பார்கள். ஆனால், இப்போது, இவர்களின் தனி சுயேட்சைக்குழுப்  பயணம், சிறீதரனின் விருப்பு வாக்குகளில் ஒரு சில ஆயிரங்களையாவது குறைக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர்கள் ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்ட பின்னணியில், சிலரை வெளிப்படையாக வெளியே தள்ளும் நோக்கம் இருந்தது. அதில் முக்கியமானவர் சசிகலா ரவிராஜ். அவர், கடந்த தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு சுமந்திரன் காரணம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அனுதாபத்தைத் தேடிக் கொண்டவர். அவ்வாறான நிலையில், சசிகலாவை அனுமதிக்கக் கூடாது என்பதில் சுமந்திரன் உறுதியாக நின்றார். அதன்மூலம், அவர் தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தியொன்றை ஒருசில நாட்களிலேயே சொல்லியதாகவும் நம்புகிறார். அதாவது, சசிகலா, கொள்கை கோட்பாட்டு ரீதியான  அரசியல்வாதியல்ல. அவர் பதவிகளுக்கான நபர். அதற்காக அவர் யாருடனும் கூட்டுச் சேர்வதற்கு தயாராவார். அப்படிப்பட்ட ஒருவருக்கான அனுதாபம் தேவையற்றது என்பது, அது. இப்போது, சசிகலா, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர். அவர் ‘சங்கு’ச் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்கிறார். அதுவும், தமிழ்ப் பொது வேட்பாளரின் சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் அபகரித்துவிட்டதாக, தமிழ் மக்கள் பொதுச்சபையே, குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிற நிலையில், அந்த அணியில் சசிகலா இணைத்திருக்கிறார். அதனால், அவர் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார். சிலவேளை, அவர் சிலநாட்கள் காலம் தாழ்த்தி, ஜனநாயக தமிழரசு என்று அடையாளப்படுத்தும் சுயேட்சை அணியோடு இணைந்திருந்தால், அவர் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருந்த அனுதாபம், வாக்குகளாக மாறியிருக்கும். இப்போது, அதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு.

கடந்த காலத்தில், சிறீதரனுக்காக களம் ஆடிய யாருக்காகவும் அவரினால் ஆதரவாக நிற்க முடியவில்லை. தனக்கான ஆசனத்துக்காகவே சிறீதரன் போராடி வேண்டியிருந்த நிலையில், மற்றவர்களுக்காக அவரினால் போராட கோருவதில் தர்க்க நியாயம் இல்லைத்தான். மட்டக்களப்பில், சிறீதரனின் ஆதரவாளராக அறியப்பட்ட, பொது வேட்பாளர் விடயத்தில் சேர்ந்து ‘சங்கு’ நாதம் எழுப்பிய சிறீநேசனுக்கான, வேட்பாளர்  நியமனமே, சுமந்திரன் – சாணக்கியன் இணையினால்தான் இறுதி செய்யப்பட்டது. இறுதிநாட்களில் சிறீநேசன், சாணக்கியனோடு இணக்கமான மனநிலையை வெளிப்படுத்தத் தலைப்பட்டார். அவர், ஊடக சந்திப்பை நடத்தி, சங்குக் கூட்டணியை விமர்சிக்கவும் செய்தார். தமிழரசுதான் தாய்வீடு, வீடுதான் சின்னம் என்றெல்லாம் அவர் சொல்ல வேண்டி வந்தது. அதன்மூலம், அவர் பொது வெளியில், தன்னை தாழ்த்திக் கொண்டு, வேட்பாளராவதற்கான நிலைகளைச் செய்து முடித்தார். அதனால், அவர் நியமனம் பெற்றார். 

இப்போது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்து வேட்பாளர்களில் சிறீதரன், தந்தை செல்வாவின் பேரன் இளங்கோவன் தவிர்த்து ஏனைய ஏழு பேரும் சுமந்திரன் அணியினர் என்று கொள்ளலாம். அது, அவரின் வெற்றியை இலகுபடுத்தலாம். இப்போது சுமந்திரன் எதிர்ப்பு அணியினர் தமிழரசுக் கட்சிக்குள் அமுங்கிப் போய்விட்டார்கள். இன்னும் சிலரோ வெளியேறிவிட்டார்கள். குறிப்பாக, யாழ்ப்பாணத்துக்குள் சிலர் வெளியேறிவிட்டார்கள். ஏனைய மாவட்டங்களில் அந்த நிலை இல்லை. தமிழரசு ஓரணியில் நிற்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில், சொந்தக் கட்சிக்காரர்களில் அநேகர் தன்னைத் தோற்கடிக்கும் முனைப்புக்களில் முழுவதுமாக ஈடுபட்டிருக்க, அதனைச் சமாளிப்பதே, சுமந்திரனுக்கு பெரும் வேலையாகிப் போனது. ஆனால், இம்முறை அதற்கான வாய்ப்புக்களை அவர் வெட்டிக் குறைத்திருக்கிறார். இனி, தமிழரசுக்குள் இருந்து கொண்டு இந்தத் தேர்தலில் சுமந்திரன் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யும் துணிவு யாருக்கும் இருக்காது. ஏற்கனவே, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சங்குக்கு வாக்குக் கேட்டவர்களின் பரிதாப நிலை, அதற்கான அண்மைய படிப்பினையாக அமையும். அதனால், கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை, மாற்றுக் கட்சிகளை எதிர்கொள்வது மாத்திரமே சுமந்திரனுக்கான வேலையாக இருக்கும். அதனை, தன்னால் இலகுவாக சமாளிக்க முடியும் என்று அவர் நம்புகிறார். ஏனெனில், தேர்தல் மேடைகளில், தன்னை யார் குறிவைத்து தாக்கினாலும், அவர்களை ‘ஆயுதக் குழுக்கள், ஒட்டுக் குழுக்கள், சங்குத் திருடர்கள், சாராயக்கடை முகவர்கள் மற்றும் பதவி வெறியர்கள்’ என்று சொல்லிவிட்டு அவர் கடப்பார். அந்தப் பதிலடி, யாழ்ப்பாணத்தைத் தாண்டி வடக்குக் கிழக்கில் முழுவதுமாக எடுபடும். அதுபோக, யாழ்ப்பாணத்துக்கு வெளியில், வன்னி, திருகோணமலை, அம்பாறை இறுதியாக மட்டக்களப்பு என்று நான்கு தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த வாக்களிப்பு நடைபெறவில்லை என்றால், அது ஏனைய சமூகத்தினரின் – இனத்தினரின் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்தும். அப்படியான கட்டத்தில், தமிழ் மக்களிடம் தமிழரசுக் கட்சியை நோக்கிய ஒருங்கிணைவுக் கோசம், பிரதான தேர்தல் பிரச்சாரமாக எழும். அதனை, தமிழரசுக் கட்சி பெரும்பாலும் அறுவடையும் செய்யும். 

சாராயக்கடை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள் விடயம் தமிழ் தேர்தல் களத்தில் முக்கியமானது. விக்னேஸ்வரனும், சாள்ஸ் நிர்மலநாதனும் அதில் ஆதாரங்களோடு மாட்டிக் கொண்டுவிட்டார்கள். அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற சிலர், தமிழ்த் தேசிய அரசியலில் இம்முறையும் வேட்பாளர்களாக இருப்பதான சந்தேகம் உண்டு. சிலவேளை, அவை ஆதாரங்களோடு வெளியாகும் பட்சத்தில், அதன் பலனையும் தமிழரசுக் கட்சி கணிசமாக அறுவடை செய்யும். ஏனெனில், ஆரம்பம் முதலே, தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியினர் என்று அறியப்பட்ட தரப்பினர், சாராய அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களை வெளிப்படுத்தும் நிலைப்பாட்டோடு இருந்தார்கள். அப்படியானால், இந்த சாராய அனுமதிப்பத்திர விடயத்தில் அவர்களின் கை சுத்தம் என்பது அர்த்தம். அப்படியான நிலையில், அந்த விபரங்கள்,  அநுர அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்பட்டாலும், அது சுமந்திரனுக்கு வலுச்சேர்க்கும். 

செங்குத்தாக பிளவுபட்டிருந்தாக கடந்த ஒரு வருட காலமாக தெரிந்த தமிழரசுக் கட்சி, இப்போது கிட்டத்தட்ட ஓரணிக்குள் வந்துவிட்டது. சுமந்திரன் தனிப்பட்ட ரீதியில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வென்று, கட்சி தனித்து எட்டு ஆசனங்களைத் தாண்டிவிட்டால், இனி அவர் தமிழரசின் ஏக தலைமையாக மாறுவார். அது, அந்தக் கட்சியின் ஜனநாயக அம்சங்களை சிலவேளை, கேள்விக்குள்ளாக்கலாம். இன்னொரு கட்டத்தில் கூட்டுத் தலைமைக்கான ஜனநாயக வாதத்தின் பக்கத்தில் தமிழ்த் தரப்பு ஒருபோதும் நின்றதில்லை என்ற சாட்சிகளின் போக்கில், ஒற்றைத் தலைமைக்கான தேடலை அது இறுதி செய்யலாம். அதனை சுமந்திரன் அடைந்தால், சிலவேளை தமிழரசுக் கட்சி புதிய பாய்ச்சல் பெறலாம். அதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஏனெனில், அவருக்கு எதிரான பக்கத்தில் இருப்பவர்கள் ஒன்றிணையவோ, ஆளுமையோடு போட்டிக் களத்தினைக் கையாளவே தெரியாமல் தடுமாறுகிறார்கள். அதனால்தான், சுமந்திரனின் வெற்றிகள் இலகுவாக்கப்பட்டு அவரிடம் சேர்கின்றன. அதனை, இறுதிக் காலத்தில் மறைந்த சம்பந்தன் தெளிவாக உணர்ந்தும் வைத்திருந்தார். அதுதான், அவர், தலைமைப் பதவிக்கான போட்டியை தவிர்ப்பதற்கும், சிறீதரனிடம் அதனை வழங்க நினைத்ததற்கும் காரணம். இந்தத் தேர்தலில் சுமந்திரன் தோல்வியடைந்தால், அவர் தேசியப்பட்டியல் என்ற மாற்று வழிகளைத் தேட மாட்டார் என்று நம்புகிறேன். அப்படி நாடினால், அது அவரின் படுதோல்வியாக முடியும். அது, அவரை, இன்று இருக்கும் நிலையில் இருந்து தூக்கித் தூர வீசும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மாத்திரமல்ல, இந்தப் பொதுத் தேர்தலும் வடக்கு – கிழக்கில்  சுமந்திரனின் தனிப்பட்ட வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கட்டங்களுக்குள் சுருங்கிவிட்டது. அது ஆரோக்கியமான அரசியலுக்கான செய்தி அல்ல. 

-காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 13, 2024 வெளியான பத்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

462775808_557860450247794_87750146893066

பழமொழி:  அற்பனுக்கு பவுசு வந்தால்... அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். 😂
புதுமொழி:
  அற்பனுக்கு பவுசு வந்தால்... "அல்லக்கையை" குடை பிடிக்கச்  சொல்வான்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த புருசோத்மன் தங்கமயில் சுமத்திரனின் சொம்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், கட்சியின் முடிவுக்கு எதிராக நின்று ஊடகங்களில் கருத்துரைத்தார்கள் என்ற பெயரில் இளைஞர் அணியின் தலைவராக இருந்த சிவகரன் உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்கள்.

ஆளுக்கொரு நீதி உள்ள வீடு நிலைக்காது.

"சமன்  செய்து  சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க்கணி."

தமிழரசை உரிமை கோரும் சுமந்திரனும் சான்றோனல்ல, அவருக்கு வக்காலத்து வாங்கும் இந்த மூத்தவரும் சான்றோனால்ல. தலைவனுக்குரிய தகுதியுமிதுவல்ல, அதை சுட்டிக்காட்டும் தகுதியும் இவருக்கில்லை. 

மொத்தத்தில் தமிழரிடம் வாக்கு கேட்க எந்தக்கட்சிக்கும் தகுதியுமில்லை, அவர்கள் மக்களுக்கு எதையும் செய்வதற்காக தேர்தல் களமாடவுமில்லை. மக்களை வைத்து, ஒருவரை  ஒருவர் வீழ்த்தி வீரவசனம் பேசுவதற்கே முற்படுகின்றனர். அதன் முன்னோட்டந்தான் தேர்தல் மேடைபேச்சு. சுமந்திரன் அனுராவிடம் ஓட்டமாய் ஓடி, மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடுங்கள் அவர்களை தகுதியிறக்க வேண்டும் என்று கோரினார். ஏன்? சமுதாயத்தின் மேல் அவ்வளவு அக்கறையா? அதுவும் தேர்தல் வந்ததாலா? ஏற்கெனவே இந்த அக்கறையை காட்டினாரா? இவர் அநாகரிகமாக எதிர் வேட்பாளர்களை மேடையில் சேறு பூசி தன் வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காக. எழுபத்தாறு வருடங்களாக வீட்டை உரிமை கொண்டாடியவர்கள், அந்த வீட்டை அவர்களுக்கு அளித்து அழகு பார்த்த மக்களை நடுவீதியில் விட்டு வேடிக்கை பார்த்தவர்கள் இவர்களல்லவா? அந்த வீட்டை நேற்று வந்த சுமந்திரன் என்கிற கறையான் அரித்து குடிச்சுவராக்கி அதிலிருந்தவர்களை வெளியே துரத்தியதைவிட வேறெதை சுமந்திரன் சாதித்தார்? இவர்களின் செயலற்ற தன்மையையும், ஏமாற்றும் தன்மையையும் பயன்படுத்தி இன்று எத்தனை கட்சிகள் நுழைந்து விட்டன? அத்தனையும் வீட்டுக்காரரின் சாதனையல்லவா? இவர் ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாமல் தாங்கள் வீதிக்கு வந்து நின்று மக்களுக்கு எதை சாதிக்கப்போகிறார்கள்? கதைக்க வேண்டிய நேரத்தில் கதைக்காமல், நமக்கென்ன வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கிறோமென மற்றவர்களை துரத்தும் போது மௌனமாக இருந்ததன் விளைவு; இன்று அவர்களுக்கு வந்துவிட்டது. கடந்த உள்ளூராட்சி தேர்தல் என நினைக்கிறன் மாவையர், மக்கள் தங்களைத்தான் ஆதரித்தார்கள் என்று பெருமிதமாக பேசினார். இன்று தலைகுனிந்து நிற்கிறார். இந்த நிலை ஒவ்வொருவருக்கும் வரும். கழுதை தேய்ந்து கட் டெறும்பு ஆன நிலையிலும் வீம்பு பேசுதுகள். அவர்கள் சாதித்ததுமில்லை ,சாதிக்க இவர்களால் ஒன்றுமில்லை. அதனால் தேர்தல் மேடையில் வாக்குறுதிகளை விட சேறடிக்கும் கேவலமான பேச்சுக்கள் மலிந்திருக்கின்றன. இதற்கு மற்றக்கட்சிகள் செய்ய வேண்டியவை, இந்த கோமாளியை விமர்சிப்பதை தவிர்த்து, மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அறிவியுங்கள், அதை செயற்படுத்துங்கள். இவர் கையூட்டு பெற்று மேடைகளில் சிங்களத்தை புகழ்ந்து சாதிக்க இனிமேல் உள்ள அரசு இவரை பயன்படுத்தாது. அந்த தேவையுமில்லை அவர்களுக்கு. ஆகவே மக்களாணையை நயவஞ்சகமாய் பெற்று, அரியாசனம் ஏற துடிக்கிறார். இவர் எங்கே வைக்கப்படுவார் என்பது முன்பே அறிமுகத்தில் இருந்து தெரிகிறது. எல்லா சிங்களத்துக்கும் காட்டிக்கொடுக்கும்  அடிமைகள் தேவையில்லை. இருந்தவர்தான்  இருந்தார் இந்தக்கூத்தையும் பார்த்து வீட்டை மூடிய நிம்மதியுடன் கண்ணை மூடியிருக்கலாம். பாதியில் விட்டிட்டு போட்டார். 

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.