Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னென்ன?

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மூன்று இடங்கள் மாத்திரமே இருந்ததால், புதிய சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் இருந்தது.

இந்நிலையில், தான் ஜனாதிபதியாக பதவியேற்ற அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 25ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது.

இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.

இந்தத் தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்.

இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள் தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன.

இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத்தில் குறைந்தது 113 இடங்களை பெறும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியமைக்கும். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அமலான பிறகு, ஜனாதிபதி அங்கம் வகிக்கும் கட்சியே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது. சில சந்தர்ப்பங்களில் வேறொரு கட்சி அதிக இடங்களைப் பெற்ற வரலாறும் இருக்கின்றது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப்படம்  

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குசீட்டில், கட்சிகளின் பெயர்களும் அவற்றின் சின்னங்களும் இடம்பெற்றிருக்கும். சுயேச்சையாகப் போட்டியிடுபவர்கள், ஒரு தேர்தல் மாவட்டத்தில் எத்தனை இடங்கள் இருக்கின்றனவோ, அத்தனை பேராக இணைந்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடலாம். ஒவ்வொரு சுயேச்சைக் குழுவுக்கும் சின்னங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

இதற்குக் கீழே, ஒரு தேர்தல் மாவட்டத்தில் எத்தனை ஆசனங்கள் இருக்கின்றனவோ அத்தனை எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். உதாரணமாக, வன்னி மாவட்டத்தில் 9 இடங்கள் எனில், 1 முதல் 9 வரையிலான எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு வேட்பாளரைக் குறிக்கும். ஒவ்வொரு வாக்காளரும் மூன்று பேருக்கு விருப்ப வாக்களிக்க முடியும்.

முதலில் வாக்காளர் தனக்கு வழங்கப்பட்ட வாக்குச் சீட்டில், விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு முன்பாக தேர்வுசெய்வதற்கான குறியிட வேண்டும். அதன் பின்னர் வாக்குச் சீட்டின் கீழ் பகுதியிலுள்ள இலக்கங்களில், தான் விரும்பும் வேட்பாளருக்கான இலக்கத்தின் மீது விருப்பக் குறி இட வேண்டும்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஒரு வாக்காளர் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களை தேர்வுசெய்யலாம்.

கட்சி எதையும் தேர்வுசெய்யாமல், வெறுமனே வேட்பாளர்களுக்கான எண்களை மட்டும் தேர்வுசெய்தால் அந்த வாக்கு செல்லாத வாக்காகக் கருதப்படும்.

ஆனால், கட்சியை மட்டும் தேர்வு செய்து, வேட்பாளர்கள் யாரையும் தேர்வுசெய்யாமல் இருந்தால், அந்த வாக்கு கட்சிக்கான வாக்காக கருதப்படும்.

ஒரு கட்சியைத் தேர்வுசெய்வதற்குப் பதிலாக 2 - 3 கட்சிகளைத் தேர்வுசெய்தாலோ, வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது மூன்று பேருக்கு அதிகமாகவோ தேர்வு செய்தாலோ அந்த வாக்கு செல்லாத வாக்காக கருதப்படும்.

தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்காளர்கள் காலை ஏழு மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குகளைச் செலுத்தலாம்.

 

வாக்கு எண்ணிக்கை

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குப் பெட்டிகள் மாவட்ட ரீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

முதலில் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் எண்ணப்படும். அதற்குப் பிறகு, பிற வாக்கு சீட்டுக்களை எண்ணும் பணிகள் துவங்கும். அடுத்த நாள் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.

சமீப காலங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே, இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இலங்கையின் பிரதான கட்சிகளைத் தவிர்த்து, மற்றொரு கட்சியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் நோக்குடன் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி களத்தில் நிற்கிறது.

எனினும், தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை வழங்கக்கூடாது என்ற நோக்கில், பிரதான எதிர்கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

இலங்கையின் நாடாளுமன்றம்

காலனியாதிக்கக் காலத்துக்கு முன்பாக இலங்கை ஒரு முடியாட்சி நாடாக இருந்தது. அதன் பின்னர் போர்த்துக்கீசியர், ஹாலந்து நாட்டவர், ஆங்கிலேயர் ஆகியோரது ஆதிக்கத்தின் கீழ், நிர்வாக மற்றும் அரசாங்க மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கடற்கரையோரங்களில் இருந்த ஹாலந்து குடியேற்றங்களும் அதனைத் தொடர்ந்து கண்டி ராச்சியமும் 1815ஆம் ஆண்டில் பிரிட்டனின் ஆட்சியின் கீழ்வந்தது.

ஹோல்புறூக் - கெமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிறைவேற்றுப் பேரவையும் சட்டவாக்கப் பேரவையும் உருவாக்கப்பட்டன. காலனித்துவ இலங்கையின் முதலாவது சட்டவாக்க சபைகள் 1833ஆம் ஆண்டு ஆளுநர் சர் ராபர்ட் ஹோட்டன் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நிறைவேற்றுப் பேரவையும் சட்டவாக்கப் பேரவையும் கொழும்பு காலி முகத்திடலில் கடலை நோக்கி அமைந்துள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு மாற்றப்படும் வரை தற்போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இயங்கும் கோடன் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடத்தில்தான் கூட்டப்பட்டன.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இலங்கை நாடாளுமன்ற கட்டடம்

தற்போது பழைய நாடாளுமன்றக் கட்டடம் என அழைக்கப்படும் கட்டடம் 1930ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி அப்போதைய மகா தேசாதிபதி சர் ஹேபட் ஸ்டான்லி என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.

1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயிலுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்படும்வரை சட்டமன்றம் இக்கட்டிடத்தில்தான் நடைபெற்றது.

இதற்கிடையில், 1944ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக் குழுவினரால் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி அறிமுகப் படுத்தப்பட்டது.

நாடாளுமன்றம், மகாராணியையும் (மகா தேசாதிபதியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்) செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டு சபைகளையும் கொண்டிருந்தது.

பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் இருந்தனர். செனட் சபையில் 30 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 15 பேர் பிரதிநிதிகள் சபையினரால் தேர்வுசெய்யப்பட, 15 பேர் மகா தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். 1971ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி செனட் சபை இல்லாமலாக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தின் பெயர் அரசியலமைப்பு திருத்தங்களின் மூலம் பலமுறை பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டது:

1. 1833- 1931 சட்டவாக்கப் பேரவை (49 உறுப்பினர்கள்)

2. 1931-1947 ராஜ்ய சபை (61 உறுப்பினர்கள்)

3. 1947-1972 பிரதிநிதிகள் சபை (முதலில் 101 உறுப்பினர்களும் 1960க்குப் பிறகு 157 உறுப்பினர்களும் இருந்தனர்)

4. 1972-1978 தேசிய அரசுப் பேரவை (168 உறுப்பினர்கள்)

5. 1978 - இப்போதுவரை நாடாளுமன்றம் (225 உறுப்பினர்கள்).

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2693.jpg

 

large.IMG_7598.jpeg.c125a535e533d644b582

இலங்கை மக்களில் வாக்குப் போடத்  தெரியாதவர்கள்... யாழ்ப்பாணத்தானும், வவுனியானும்தான்.
சென்ற ஜனாதிபதி தேர்தலில்... யாழ்ப்பாணத்தில்...25,353 (விகிதம்: 6.39) வாக்குகளும், 
வவுனியாவில் 9,381 (விகிதம்: 4.14) வாக்குகளும் பிழையாக வாக்களித்து, நிராகரிக்கப் பட்டுள்ளன. 😎

அத்துடன்... சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பதாக நினைத்துக் கொண்டு யாழ்ப்பாண மண்ணையே தெரியாத  பியதாச என்ற ஒருவருக்கு 6074 + 3240 = 9,314  வாக்குகள் போட்ட   கொடுமையும், 
ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும்  வித்தியாசம் தெரியாத மக்களும் யாழ்ப்பாணத்தில்தான் வசிக்கின்றார்கள். 😂
முதலில் இவர்களுக்கு... தேர்தலில் வாக்களிப்பது எப்படி? என்று "ரியூசன்"  கொடுக்க வேண்டும். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

அத்துடன்... சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பதாக நினைத்துக் கொண்டு யாழ்ப்பாண மண்ணையே தெரியாத  பியதாச என்ற ஒருவருக்கு 6074 + 3240 = 9,314  வாக்குகள் போட்ட   கொடுமையும், 
ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும்  வித்தியாசம் தெரியாத மக்களும் யாழ்ப்பாணத்தில்தான் வசிக்கின்றார்கள். 😂
முதலில் இவர்களுக்கு... தேர்தலில் வாக்களிப்பது எப்படி? என்று "ரியூசன்"  கொடுக்க வேண்டும். 🤣

இந்த தேர்தலில் வடகிழக்கில் 3௦௦ பேர் போட்டியிடுகிறார்கள் என்று யுறுப் புளுகி என்று அரைக்குது உண்மயா ?

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும்  வித்தியாசம் தெரியாத மக்களும் யாழ்ப்பாணத்தில்தான் வசிக்கின்றார்கள். 😂

உலகிலேயே அறிவு கூடிய மனிதர்கள் அவர்கள் தான்    ஏனென்றால் எதிர்காலத்தில் நடக்க போவதை. முன்கூட்டியே அறியும்’ ஆற்றல் உடையவர்கள்   

வரும் காலத்தில்   ரெலிபோனில்   கணக்கு பார்க்கலாம் 

கல்குலேட்டரில்  தொலைபேசலாம். 

எனவே… இரண்டுமே ஒன்று தான்   🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

இந்த தேர்தலில் வடகிழக்கில் 3௦௦ பேர் போட்டியிடுகிறார்கள் என்று யுறுப் புளுகி என்று அரைக்குது உண்மயா ?

அதுக்கு அந்தளவுக்கு அறிவு இருக்கோ தெரியாது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

இந்த தேர்தலில் வடகிழக்கில் 3௦௦ பேர் போட்டியிடுகிறார்கள் என்று யுறுப் புளுகி என்று அரைக்குது உண்மயா ?

கூட அண்ணை!

திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன.

யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர்.

 

இலங்கை முழுவதுமான வேட்பாளர் விபரத்திற்கு கீழுள்ள வீரகேசரி இணைப்பைப் பாருங்கள்.

https://www.virakesari.lk/article/196141

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

கூட அண்ணை!

திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன.

யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர்.

 

இலங்கை முழுவதுமான வேட்பாளர் விபரத்திற்கு கீழுள்ள வீரகேசரி இணைப்பைப் பாருங்கள்.

https://www.virakesari.lk/article/196141

அட கோவாலு இவ்வளவு வெள்ளந்தியா இருக்கேன் கடவுளே வந்தாலும் வடகிழக்கை இனி யாரும்..........................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத் தேர்தல் வாக்களிக்கும் முறையும் வாக்கு எண்ணும் பணியும்!

ந.ஜெயகாந்தன்

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு தயார்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் 14ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அதற்கான தேர்தல் நடத்தப்படுவதாலும், வழமையை விட அதிகளவான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களை சேர்ந்த பெருமளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதாலும் மற்றும் சிரேஷ்ட அரசியல்வாதிகள் பலர் போட்டியிடாத தேர்தலாகவும் இருப்பதாலும் இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமையவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானியை வெளியிட்டதுடன், நவம்பர் 14ஆம் திகதி அதற்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்த வர்த்தமானியூடாக அறிவித்தார்.

இதற்கமைய பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையில் நடைபெற்றது.

இந்தக் காலப்பகுதியில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 764 குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன், அவற்றில் 74 குழுக்களின் வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.

இதற்கமைய 690 குழுக்கள் தேர்தல் களத்தில் போட்டியிட தகுதி பெற்றன. இந்த குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேல் மாகாணம்

கொழும்பு மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 19 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 966 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,765,351 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 17 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 902 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் . தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யவதற்காக 1,881,129 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

464803481_948586423977318_2218426056858422375_n.jpg

களுத்துறை மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 13 சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 392 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,024,244 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 12 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,191,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 184 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 429,991 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 11 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 308 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 605,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தென் மாகாணம்

காலி மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 5 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 264 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 903,163 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 220 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 686,175 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் , 9 சுயேட்சைக்குழுக்களின் 250 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 520,940 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் , 21 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 396 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 593,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 27 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 459 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 306,081 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 22 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 392 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் , 42 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 640 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 217 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வட மேல் மாகாணம்

குருநாகல் மாவட்டத்தில் 15 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் , 10 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 396 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,417,226 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 15 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 429 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 663,673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வட மத்திய மாகாணம்

அனுராதபுரம் மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 9 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 312 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 741,862 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பொலனறுவை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள் , 2 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 120 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 351,302 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 5 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 240 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 705,772 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் , 3 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 135 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 399,166 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினப்புரி மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக 18 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 350 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 923,736 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 14 அரசியல் கட்சிகள் , 4 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 216 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 709,622 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

225 ஆசனங்களை கொண்ட பாரராளுமன்றத்திற்கு இந்த குழுக்களின் வேட்பாளர்களில் இருந்து 196 பேரே தெரிவு செய்யப்படவுள்ளனர்.

விகிதாசார தேர்தல் முறை

1978 ம் ஆண்டு அரசியலமைப்பானது அதற்கு முன்பிருந்த தேர்தல் தொகுதி முறைமைக்கும் தேர்தல் மாவட்டங்களுக்கும் அடிப்படை மாற்றமொன்றை அறிமுகம் செய்தது. முந்திய முறைமையானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட, தனிப்பட்ட வேட்பாளர்களுடன் அல்லது சுயேச்சை வேட்பாளர்களுடன் தேர்தல் தொகுதிகளையும் கொண்டமைந்திருந்தது. குறிப்பிட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். இம் முறையானது 1978ம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பிட்ட 22 தேர்தல் மாவட்டங்களிலுமான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையாக மாற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 98(8) உறுப்புரைக்கமைய ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையின் நிர்ணயம் தேர்தல் ஆணையாளரால் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தமாகக் குறித்த தேர்தல் மாவட்டங்களின் வாக்களிப்பின் அடிப்படையில் 196 உறுப்பினர்கள் அனுப்பப்படுகின்றனர். அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தம் அறிமுகம் செய்த, 99 (அ) உறுப்புரை, குறிப்பிட்ட அரசியல் கட்சிகளால் அல்லது சுயேச்சை வேட்பாளர்களால் தேசிய மட்டத்தில் (தேசியப்பட்டியல்) பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட ஏற்பாடு செய்கிறது.

இவ்வாறு ஒரே தேர்தலிலேயே நாம் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் ஒரு விகிதாசார முறைமையைக் கொண்டிருக்கிறோம்.

வாக்களிப்பு முறை

வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளருக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலாவதாக, வாக்காளர் தாம் விரும்பும் கட்சி அல்லது சுயேச்சை குழுவின் சின்னத்துக்கு அருகிலுள்ள கட்டத்தில் புள்ளடியிட்டு வாக்கைப் பதிவுசெய்ய வேண்டும்.

பின்னர் அதே வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில், தாம் ஆதரித்த கட்சி அல்லது சுயேச்சைக்கு சார்பில் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் தாம் விரும்பும் வேட்பாளர்கள் மூவருக்கு விருப்பு வாக்கை அளிக்க முடியும். அந்த வேட்பாளர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள விருப்பு வாக்கு இலக்கத்திற்கு மேலே புள்ளடிகளை இட்டு விருப்பு வாக்குகளை பதிவு செய்யலாம்.
இதேவேளை ஒரு வேட்பாளருக்கோ அல்லது இரண்டு வேட்பாளர்களுக்கோ தமது விருப்பு வாக்கை பதிவு செய்யவும் முடியும். எனினும் எவருக்கும் தனது விருப்ப வாக்கை செலுத்தாமலும் விடலாம்.

ஆனால் ஒன்றுக்கு மேட்ட கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்களுக்கு புள்ளடி இடுதல் அல்லது ஏதேனும் கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கான கட்டத்தில் புள்ளடி இன்றி வேறு அடையாளங்களை இடுதல் தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறான வாக்குகள் செல்லுபடியற்ற வாக்காக கருதப்படும்.

அதேபோன்று கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கு புள்ளடியிட்டு, மூன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு விரும்பு வாக்குகளுக்கான புள்ளடி இட்டிருந்தால் வாக்கு எண்ணப்படும் போது கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கு வழங்கிய வாக்கு எண்ணப்பட்டாலும் வேட்பாளர்களின் விரும்பு வாக்கு எண்ணப்படும் போது அந்த எண்ணிக்கையில் அது சேர்க்கப்படாது.

வாக்கு எண்ணப்படும் முறை

வாக்களிப்புகள் முடிந்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

இதன்போது முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கான போனஸ் ஆசனம் வழங்கப்படும்.

பின்னர் செல்லுபடியான வாக்குகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். இதனால் அவ்வாறான கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் சார்பில் எவருக்கும் பாராளுமன்றம் செல்ல முடியாது.
இதையடுத்து 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் மொத்த வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். மீதமிருக்கும் வாக்குகளே உறுப்பினர்களைத் தேர்தெடுக்க செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்படும்.

இதேவேளை இந்த கணக்கீட்டின் பின்னர் குறித்த மாவட்டத்துக்காக மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற கட்சிக்கான போனஸ் ஆசனத்தை ஓதுக்கிய பின்னர் வரும் ஆசன எண்ணிக்கையால் செல்லுபடியான வாக்குகள் வகுக்கப்படும்.
இதன்போது கிடைக்கும் எண்ணிக்கையே அந்த மாவட்டத்தில் ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய தேவையான வாக்காகக் கருதப்படும். இவ்வேளையில் ஒரு உறுப்பினரைத் தேர்வுசெய்ய தேவைப்படும் வாக்குகளைப் பெறாத கட்சி விலக்கப்படும்.

பின்னர் ஆசனத்திற்கு தகுதியுடைய கட்சிகள் மற்றும் சுயேச்சைசக் குழுக்கள் பெற்ற வாக்குகளை அடிப்படையாக்க கொண்டு குறிப்பிட்ட கட்சி அல்லது சுயேச்சைக்குழு பெற்ற மொத்த வாக்குகள் ஒரு ஆசனத்திற்கான எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களுக்கான ஆசன ங்கள் ஒதுக்கப்பட்டுக் கொண்டே வரப்படும். இன்னும் அந்தத் தேர்தல் மாவட்டத்திற்கான ஆசனம் எஞ்சியிருக்குமாயின் ஆசனத்திற்கான தகுதியுடைய கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் மீதமுள்ள வாக்குகளின் அடிப்படையில் கூடுதல் வாக்குகளை பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக்குழுவுக்கு அது ஒதுக்கீடு செய்யப்படும்.

விருப்பு வாக்கு எண்ணல்

இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு எவ்வளவு ஆசனங்கள் என்று முடிவான பின்னர், அந்தக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் சார்பில் விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் என்று எண்ணப்படும்.

அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கீழாக கூடுதலான வாக்குகளை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்படுவர்.

இதன்படி 196 பேர் மாவட்ட ரீதியில் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படுவர்.

தேசியப் பட்டியல் தெரிவு முறை

இதேவேளை எஞ்சிய 29ஆசனங்களுக்கும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நாடு முழுவதும் பெற்றுள்ள வாக்கு விகிதாசாரங்களுக்கு ஏற்ப பகிரப்படும். குறித்த கட்சி அல்லது சுயேச்சைக்குழு நாடு முழுவதும் பெற்ற வாக்குகள் நாடு முழுவதும் செல்லுபடியான வாக்குகளால் வகுக்கப்பட்டு வரும் எண்ணிக்கை 29ஆல் பெருக்கப்பட்டு வரும் எண்ணிக்கை (கட்சி அல்லது சுயேச்சைக்குழு நாடு முழுவதும் பெற்ற மொத்த வாக்குகள் /தேர்தலில் அளிக்கப்பட மொத்த வாக்குகள் X 29) கிட்டிய முழு எண்ணிற்கு மட்டம் தட்டப்படும் போது கிடைக்கும் தொகை அந்தக் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்குரிய தேசியப் பட்டியல் ஆசனங்களின் எண்ணிக்கையாகும்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை அந்தந்த கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு பாராளுமன்றத்திற்கு தேவையான 225 உறுப்பினர்களும் தெரிவாகிய பின்னர் அவர்கள் தொடர்பான விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்படும்.

https://thinakkural.lk/article/311959

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.