Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைக் குதிரை – 75

on January 3, 2025

 
241218-Thanthai-Chelva-e1735881915604.jp

Photo, TAMIL GUARDIAN

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் அது நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பல வழக்குகள். மேலும் வழக்குகள் தொடரப்படக்கூடும் என்றே தெரிகிறது. குறிப்பாக மத்திய செயற்குழுவை முடக்குமளவுக்கு நிலைமை வளர்ச்சியடைந்துள்ளது.

கட்சியின் முக்கியஸ்தர்களான அரியநேத்திரன், கே.வி.தவராஜா, சசிகலா ரவிராஜ், சரவணபவன்  உள்ளிட்ட பலர் தகுதிநிலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிவமோகன் இடைநிறுத்தப்பட்டுள்ளார். அடுத்த கட்டமாக தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரித்தவர்கள் மீதும் மல்ரிபெரல் தாக்குதல் நிகழ்த்தப்படக்கூடும்.

இந்தக் காய் வெட்டும் களையெடுப்பும் நிற்கப்போவதில்லை. மேலும் உற்சாகமாகத் தொடரக்கூடிய வாய்ப்புகளே அதிகமுண்டு.

அணி இரண்டாகினால், பிளவும் பிரிவும் காய் வெட்டும் களையெடுப்பும் சாதாரணமாகி விடும். அதற்கான நியாயங்களும் நியாயப்படுத்தல்களும் தானாகவே உருவாகிக் கொள்ளும்.

கடந்த வாரம் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியாவில் நடந்தபோது கட்சியின் ஒரு தரப்பினர், மத்திய செயற்குழுவை நோக்கிக் கேள்விகளை எழுப்பிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பதாதைகளை கூட்டம் நடந்த மண்டபத்தின் வாசலில் கட்டி, மத்திய குழுவை வரவேற்றிருந்தனர்.

இது கட்சியின் உள் நிலைமையை, அதனுடைய உள் விரிசல்களை மேலும் தெளிவாக விளக்குகிறது. அடுத்து வரப்போகிற உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தலில் இந்த விரிசல் மேலும் வலுப்பெறவே வாய்ப்புண்டு.

இந்த நிலைமையை மேலும் வளரவிடாமல், சீராக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் மாவை சேனாதிராஜாவைத் தூக்கி விட்டு, பதில் தலைவராக சீ.வி.கே. சிவஞானத்தை நிறுத்தியுள்ளது கட்சி.

மாவையின் தலைமைக் காலத்தில்தான் கட்சி, மிக மோசமான அளவுக்கு உள்வெடிப்புகளை – சீரழிவுகளைக் கண்டது. அவரை நீக்கி விட்டுச் சிவஞானத்தை நியமித்திருப்பதன் மூலம் அந்த வெடிப்புகளை ஒட்டிச் சீராக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், அது சிரமான காரியம்.

அதைப் பற்றிக் கீழே பார்க்கலாம்.

இப்பொழுது தலைமைப் பதவியிலிருந்து கழற்றி விடப்பட்ட சேனாதிராஜாவுக்குப் பெருந்தலைவர், அரசியல் குழுத் தலைவர் என்றெல்லாம் ஒரு அலங்காரத் தலைப்பாகையைக் கட்டி விட்டிருக்கிறார்கள். சம்பந்தன் இருந்தபோது அவருக்கு இத்தகையதொரு மதிப்பு வாய்ந்த இடமளிக்கப்பட்டிருந்தது உண்மையே. சேனாதிராஜாவுக்கும் அத்தகைய இடமளிக்கப்பட்டுள்ளது என்று இதற்கான நியாயம் சொல்லப்படுகிறது.

சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட இடமும் மதிப்பும் சேனாதிராஜாவுக்குக் கிடைக்கப்போவதில்லை. அதை யாரும் வழங்கப்போவதுமில்லை. மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய அரசியல் வெற்றிகளைச் சாதிக்க முடியாதுவிட்டாலும், கட்சியைப் பொறுத்தவரையில் சிறுதுரும்பையும் இரும்பாக்கக் கூடிய வல்லமை (கெட்டித்தனம்) சம்பந்தனுக்கிருந்தது. இரும்பையும் சிறுதுரும்பாக்கும் ஆளே சேனாதிராஜா. ஆகவே, சேனாதிராஜா இனிச் செல்லாக் காசாக்கப்பட்ட ராஜாவாகவே இருக்கப்போகிறார்.

ஆகவே இப்படிச் சமாளிப்புகள், குழிவெட்டுதல்கள், சீரழிவுகளோடுதான் கட்சி பயணிக்க வேண்டியுள்ளது. அறுவைச் சிகிச்சை செய்து தன்னைச் சீராக்கிக் கொள்வதற்கு அது இன்னும் தயாராகவில்லை. அதைச் செய்வதற்கு அதனால் முடியாது. தமிழரசுக் கட்சியின் குணாம்சமே – இயல்பே – வரலாறே – இதுதான். பழைய குப்பை, கூழங்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வது. தேவையற்ற எதையும் வெளியே தூக்கிப்போடுவதில்லை. அதைக் கூட்டித் துப்புரவு செய்வதற்கு அது ஒருபோதுமே முன்வருவதில்லை.

கட்சியின் தளர்வை மட்டுமல்ல, அதனுடைய அரசியற் கொள்கை, அதற்கான நடைமுறைகள் போன்றவற்றைக் கூட அது புத்தாக்கம் செய்வதில்லை. சமகால நிலவரங்கள் என்ன என்றே கட்சிக்குத் தெரியாது. கட்சிக்குத் தெரியாது என்றால், அதிலே உள்ளவர்களுக்கு இதைப்பற்றிப் புரியாது. அதற்கு அவர்கள் முயற்சிப்பதுமல்ல. அப்படி யாராவது சற்று விலகலாக, புதிய சூழலுக்கமையச் சிந்திக்க முற்பட்டால், அவர்களைத் துரோகிகளாகச் சித்தரித்து, தங்களுடைய நிலைமைக்குக் கீழிறக்கி விடுவார்கள்.

என்பதால்தான் அவர்கள் 1960, 70களின் அரசியலைத் தூக்கிகொண்டு நிற்கிறது தமிழரசுக் கட்சி. காலங்கடந்த அரசியலை, தோற்றுப்போன அரசியலை, சாத்தியப்படுத்தவே முடியாத அரசியலைக் காவிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பலவீனத்தினால்தான் தமிழரசுக் கட்சியால், அது முன்மொழிந்த சமஸ்டியை 75 ஆண்டுகளாகப் பெற முடியாமலுள்ளது. இதைக்குறித்து அது ஒருபோமே தனக்குள் கேள்வியைக் கேட்டுக் கொண்டதில்லை. அரசாங்கம் தம்மை ஏமாற்றிவிட்டது என்று சொல்லிச் சமாளித்துக் கொள்கிறது. அப்படியென்றால், 75 ஆண்டுகளாக தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை தமிழரசுக் கட்சி பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறது அல்லவா!

மட்டுமல்ல, தமிழரசுக் கட்சி தொடங்கப்பட்டபோது ஈழத்தமிழர்களிருந்த சமூக – அரசியற் பலம் இப்போதில்லை. இப்பொழுது மிகப் பாதகமான நிலையிலேயே ஈழத்தமிழ்ச்சமூகம் உள்ளது. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஆள் எண்ணிக்கை ரீதியிலும் பலவீனமான நிலையில்தான் ஈழத்தமிழர்கள் உள்ளனர். பல லட்சம் பேர் மண்ணை விட்டுப்போய் விட்டனர். இன்னும் போய்க்கொண்டிருக்கின்றனர். ஆகவே, இதற்கான பொறுப்பை தமிழரசுக் கட்சி ஏற்க வேண்டும்.

அந்தப் பொறுப்பேற்றல் என்பது, தமிழரசுக் கட்சியினுடைய பொறுப்புக் கூறலில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். அந்தப் பொறுப்புக் கூறுதல் என்பது, அது ‘தமிழர்களுக்குத் தமிழரசு – தனியரசு‘ என்று உருவாக்கப்பட்ட எண்ணக் கருவிலிருந்து தொடர்ந்து வந்த விளைவுகளுக்கானது என்ற அடிப்படையில் அமையும். இதற்கு அதுவும் (தமிழரசுக் கட்சி) அதனுடைய ஆதரவாளர்களும் தம்மைச் சுயவிமர்சனம் செய்து கொள்வது அவசியம். அத்துடன், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தைப் பற்றிய தயக்கமின்றிய அரசியல் ஆய்வுக்குத் தயாராக வேண்டும்.

சரியாகச் சொன்னால், இது அரசியற் குற்றமாகும். இந்தக் குற்றத்துக்கு என்ன பதில்? என்ன தண்டனை? ஆகவே, பொறுப்புக் கூறுதல் அவசியமாகும்.

அதைச் செய்யாத வரையில் தமிழரசுக் கட்சியினால் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், அரசியல் பயணத்தால் மீள முடியாது. சேனாதிராஜாவுக்குப் பதிலாகச் சிவஞானத்தை மாற்றினாலென்ன, சிறிதரனை நியமித்தாலென்ன, எதுவும் புதிதாக நிகழாது.

மோதகத்துக்கும் கொழுக்கட்டைக்கும் ஏதாவது வித்தியாமிருக்கா? அப்படித்தான் இதுவும். அதே பழைய புண்ணும் சீழுமாகத்தான் நிலைமையிருக்கும்.

இந்த நிலையில்தான் புதிய – பதில் – தலைவரான சி.வி.கே. சிவஞானத்தை வைத்துக் கொண்டு கட்சியை முன்னகர்த்தலாம் என்று கட்சி யோசிக்கப்படுகிறது. இதையிட்டுச் சிரிப்பதை விட வேறு என்னதான் செய்ய முடியும்? இது தமிழ்ச் சமூகம் துயரப்பட வேண்டிய இடமாகும்.

சிவஞானமோ  சுமந்திரனை ஆதரிப்பவர். சுமந்திரன் வழிமுறையில் சிந்திப்பவர். ஆகவே, கட்சிக்குள் சுமந்திரனின் செல்வாக்கு நீடிக்கவும் பலமடையவுமே வாய்ப்புண்டு. இதை உறுதிப்படுத்துவதைப்போலவே, ‘தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக சுமந்திரனே இருப்பார்’ என்று சிவஞானம் சொல்லியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். மட்டுமல்ல, சுமந்திரன் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால், ‘அவர் இனிக் குரல்தர வல்லவரல்ல. அவருடைய சிறகுகள் அறுக்கப்பட்டு விட்டன. அவருடைய பற்கள் பிடுங்கப்பட்டாயிற்று’ என்றொரு தோற்றப்பாட்டை உருவாக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீநேசன் ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தியிருந்தார். அதற்குப் பதிலடியாக, சிவஞானத்தின் இந்த அறிவிப்புள்ளது.

ஸ்ரீநேசன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் சிறிதரனின் ஆதரவாளர்கள் – அணியினர். என்றாலும் இந்த அணியினர்  இப்பொழுது பின்தள்ளப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திலும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் சிறிதரன், ஸ்ரீநேசன் போன்றவர்கள் தாம் பலமானவர்களாகக் கருதலாம். அது எந்தளவுக்கு  ‘நிரூபிக்கப்படும் பலமாக இருக்கும்’ என்பதை எதிர்வரும் காலம்தான் தீர்மானிக்க முடியும்.

இப்போதைய சூழலில் சிவஞானம், சாணக்கியன், சுமந்திரன் ஆகியோரே முன்னிலையைக் கொண்டுள்ளனர். அரசியலாற்றல், தொடர்பாடல், அறிமுகம், குறைந்தபட்சம் யதார்த்தமாகச் சிந்தித்தல், ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கை போன்றவற்றைப் புரிந்து கொண்டு நடக்கும் அணி இதுதான்.

எதிரணிக்கு இதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது.

நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற அணியின் பேச்சாளர் ஸ்ரீநேசன் என்றெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும் சாணக்கியனோடும் சிவஞானத்தோடும் இணைநிலைப் பயணியாக சுமந்திரனே களமாடக் கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. தேர்தலுக்குப் பின்னர் நான்கு ஐந்து அரசியற் சந்திப்புகளை சுமந்திரன் + சாணக்கியன் அணி சாத்தியப்படுத்தியுள்ளது. இது மேலும் தொடரும்.

இந்தப் பலத்தினால்தான் கடந்த மாதம் நடந்த இன்னொரு மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மாவையைத் தலைவராக ஏற்கத் தேவையில்லை என்று துணிகரமாக சாணக்கியன் அணி சொன்னது. இல்லை, அவரை வைத்தே கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற சிவமோகன் அணி இப்பொழுது வெளித்தள்ளப்பட்டுள்ளது.

உள்ளே இப்படி ஏராளம் கசப்புகளும் இடைவெளிகளும் உள்ளபோதும் வெளியே பேசும்போது தமிழரசுக் கட்சிதான் தமிழர்களுடைய பேராதரவைப் பெற்ற ஒரே கட்சி என்ற பெருமிதங்களை அதனுடைய உறுப்பினர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இதற்கு வாய்ப்பாக கடந்த (2024 நவம்பரில்) நாடாளுமன்றத் தேர்தலில் ஏனைய தமிழ்க் கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தமிழரசுக் கட்சியே வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு எட்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் அது மூன்றாவது செல்வாக்குள்ள – அதிக உறுப்பினர்களைக் கொண்ட – கட்சியாக உள்ளது.

அப்படியானால் எத்தகைய முடிவுக்கு மக்கள் வர முடியும்?

கட்சியின் அரசியற் கொள்கை – அரசியல் நிலைப்பாடு பழையது. சாத்தியக் குறைவானது. தோற்றுப்போனது. கட்சிக்குள் அணிமோதல், அதன் விளைவான குழிபறிப்புகள், வழக்குகள் என்றெல்லாம் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து தமிழரசுக் கட்சியைத்தானே மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். அதற்குத்தானே ஆதரவு கிடைத்துள்ளது? என்ற கேள்வி இந்த இடத்தில் எழும்.

இதற்கான வரலாற்றுக் காரணங்களையும் சமகால நிலவரங்களையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

தமிழரசுக் கட்சி வெற்றியடைந்திருப்பதையும் அதுவே நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருப்பதையும் அதை மக்கள் அங்கீகரித்திருப்பதையும் ஒரு அரசியல் வெற்றியாக நாம் கொள்ள முடியாது. இதையும் விடப் பெரிய வெற்றிகளை 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியும், 2005, 2015 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெற்றிருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகக் கூட இருந்திருக்கிறது. அதனால் என்ன பயன் தமிழ் மக்களுக்குக் கிடைத்தது? தமிழ் மக்களுடைய எந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது?

ஆனால், கட்சி, தன்னை வெற்றியடைந்த தரப்பாகத்தான் காட்டிக் கொள்ள முற்படும்.  அது கட்சியினுடைய தேவையாகும். கட்சிக்கு வெளியே, அரசியலைப் பகுத்துப் பார்க்க விரும்புவோருக்கும் உண்மையை அறிய வேண்டியவர்களுக்கும் கட்சியின் கருதுகோளைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கவும் கூடாது.

வரலாறு இதுதான். உண்மை இதுதான்.

1972 இல் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாகச் செயலிழப்புக்குப் போனது. அதற்கு முன்பே, அதனுடைய இயலாமைக் குறித்துத்  தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பகிரங்கமாகச் சொல்லி விட்டார் – ‘‘தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்‘‘ என்று.

அதற்குப் பிறகு, அடுத்த நிலையிலிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அதை தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவமாற்றம் செய்தார். அதற்காக அவர் எதிரணியாக இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸோடு – ஜீ.ஜீ. பொன்னம்பலத்தோடு கூட்டுச் சேர்ந்தார். காங்கிரசும் அப்பெழுது படுக்கையிலேயே கிடந்தது. ஆகவே, இரண்டும் இணைந்து 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் புதிய லேபிளில் வெற்றியைப் பெற்றது. ஆனாலும் கூட்டணியினால் தொடர்ந்து அரசியல் அரங்கில் நின்று பிடிக்க முடியவில்லை. அதனுடைய கொழும்பு மைய அரசியலும் நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைக் கோட்பாடுகளும் அதனை வெளிறச் செய்தன.

1977 க்குப் பிறகு எழுச்சியடைந்த ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியை முற்றாகவே நிராகரித்தன. அதனோடு இலங்கை தமிழரசுக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸூம் தமிழ்ப் பிராந்தியத்தை விட்டே வெளியேற வேண்டியேற்பட்டது.

அதாவது, 1977 இல் அமிர்தலிங்கத்தினால் தமிழரசுக் கட்சியை மீளுயிர்ப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் தோற்றது. இறுதியில் 1989 இல் அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் விடுதலைப் புலிகளால் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னொரு தலைவரான சிவசிதம்பரம் காயங்களோடு மயிரிழையில் தப்பினார்.

தமிழ் அரசியற் தலைவர்கள் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதன் அரசியற் சேதியை தமிழ் மக்கள் கவனத்திலெடுத்துப்பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை அந்தக் கொலைகளின் அரசியற் சரி – தவறுகளைப் பற்றி இங்கே பேசவில்லை. அது தனியாகப் பேசப்பட வேண்டியது. ஆனால், அன்று தமிழ்ப் பிரதேசத்தை விட்டுக் கொழும்பிலும் இந்தியாவிலுமே தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை தளமிட்டிருந்தன என்பதைக் கவனிக்க வேண்டும்.

2000 இல் புலிகள் – இலங்கை அரசுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையோடு விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட மறைமுகமான சர்வதேச நெருக்குவாரம், தவிர்க்க முடியாமல் ஏனைய அரசியற் தரப்புகளோடு உடன்பாட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை உருவாக்கியது. அதற்காக எதிர்த்தரப்பிலிருந்த – ஒரு காலத்தில் புறமொதுக்கியிருந்த – அரசியற் கட்சிகளைத் தூசி தட்டி எடுக்க வைத்தது.

இந்த அரசியற் சூழல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாய்ப்பைக் கொடுத்தது. ஜனநாயக வழிமுறையிலான தேர்தலொன்றில் புலிகள் தமக்குள்ள ஆதரவை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு புலிகள் முன்வந்தனர். முதற்தடவை அது சாத்தியமாகினாலும் தொடர்ந்து ஆனந்தசங்கரி அதற்கு ஒத்துழைக்கவில்லை. அப்பொழுது கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் ஆனந்தசங்கரியே இருந்தார். ஆனந்தசங்கரியின் உணர்ச்சிவசப்பட்ட போக்கு, அந்த வாய்ப்பை தமிழரசுக் கட்சியின் அடையாளத்தோடிருந்த சம்பந்தனுக்குக் கிடைத்தது. சம்மந்தன் அதைப் பயன்படுத்திக் கொண்டார்.

சம்மந்தனுக்கு  விடுதலைப்பு லிகளுடன் முழுமையான உடன்பாடு இல்லாது விட்டாலும் முரண்பட்டுக் கொள்ளாமல் சமரச அரசியலை மேற்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டார். அதன் விளைவாகவே இப்பொழுது தமிழரசுக் கட்சி இன்றைய வளர்ச்சி நிலையை – மீளுயிர்ப்பு நிலையை எட்டியது. ஆகவே, இன்றைய தமிழரசுக் கட்சி, சம்பந்தனுக்கே நன்றி சொல்ல வேண்டும். சம்பந்தனுக்கே கடமைப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் செல்வநாயகத்துக்கு அடுத்த நிலைப் பாத்திரம் சம்பந்தனுக்கே உண்டு.

சம்பந்தனுடைய காலத்தில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக இயங்க வேண்டியிருந்தது. முதற்காலட்டத்தில் விடுதலைப் புலிகளோடு நிபந்தனையற்ற அனுசரித்தலை அது செய்தது. அதைச் சம்பந்தன் செய்தார். அதாவது புலிகளிடம் பணிந்திருந்தார்.

இரண்டாவது காலட்டத்தில், கூட்டமைப்பில் இணைந்திருந்த முன்னாள் இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, காங்கிரஸைத் தனக்குக் கீழே வைத்திருந்தார் சம்பந்தன். அவற்றின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்தார். அதற்கு வாய்ப்பாக அவருக்குத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பயன்படுத்தி வந்தமை இருந்தது. இதுதான் சம்பந்தனின் திறன். பணிய வேண்டிய இடத்தில் பணிவதும், நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்வதும்.

இதை உடைத்து தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படுத்தவதற்கு அல்லது சமனிலைப்படுத்துவதற்கு ,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும்” என்று பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவை அழுத்தம் கொடுத்தன. அதற்கு முன்பு அகில இலங்கைத்  தமிழ்க் காங்கிரஸ் நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால், சம்பந்தன் அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. இதனால் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. “சம்பந்தனுடைய பிடிவாதத்தினால் கூட்டமைப்பு உடைகிறது – தமிழரின் பலம் சிதைகிறது” என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் பலமாக முன்வைக்கப்பட்டது. சம்பந்தன் கிறங்கவேயில்லை.

மட்டுமல்ல, கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் கையை அவர் மேலுயர்த்தியே வைத்திருந்தார். இதனால் ஏனைய பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவை கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாகவே நின்றன. இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறியது. அப்போதும் சம்பந்தன் எந்த விட்டுக் கொடுப்புக்கும் செல்லவில்லை. பதிலாக தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டார்.

இது சம்பந்தன் மீதான விமர்சனங்களை மேலும் கடுமையாக்கியது. கூடவே சம்பந்தனுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சுமந்திரனையும் எதிர்நிலையில் நோக்க வைத்தது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சம்பந்தனும் சுமந்திரனும் உடைத்து விட்டனர். தமிழர்களுடைய பலத்தைச் சிதைத்து விட்டனர். தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்து விட்டனர் என்ற விதமாக. இப்போதும் அந்த விமர்சனம் உண்டு.

ஆனால், தமிழரசுக் கட்சியின் பலத்திலும் செல்வாக்கிலும்தான் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவை உயிர்வாழ்கின்றன எனச் சம்பந்தனும் சுமந்திரனும் மதிப்பிட்டனர். அதையே இன்று வரலாறு நிரூபித்துள்ளது. சம்மந்தன் காலமாகி விட்டார். சுமந்திரன் வெற்றியடைவில்லை. ஆனாலும், தமிழரசுக் கட்சியின் முகமாக சுமந்திரனே உள்ளார். சிங்கள மக்களுக்கும் தென்னிலங்கைக்கும் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் தமிழரசுக் கட்சியென்றால் அது சுமந்திரனின் கட்சியென்றே தெரியும். இதைப் புரிந்துகொண்டபடியால்தான் கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்று சிவஞானம் சொன்னது.

இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. காங்கிரசுக்கு ஒரு ஆசனம். ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் புளொட்டும் அவுட். ரெலோவுக்கு அரும்பொட்டில் ஒரு சிறு வாய்ப்பு.

இன்றைய தமிழ்த் தேசியவாத அரசியலை தமிழரசுக் கட்சியோடும் ஏனைய தமிழ்த் தேசியவாதக் கட்சிகளோடும் மதிப்பிட்டால், தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் வெற்றியடைந்துள்ளன. அப்படியென்றால், இந்த மூத்த கட்சிகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனரா? அவற்றின் தவறுகள், போதாமைகளுக்கு மத்தியிலும் அந்தக் கட்சிகளின் அரசியல்தான் தமிழ் மக்களுடைய அரசியலா? என்ற கேள்வி எழும். இது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

சுருக்கமாகப் பார்த்தால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அரசியற் போதாமைகளிலிருந்து (1950 இல்) உருவாகியதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். தமிழரசுக் கட்சியின் போதாமையிலிருந்து உருவாகியதே (1972) தமிழர் விடுதலைக் கூட்டணி. அதனுடைய போதாமையிலிருந்தே உருவாகியவையே (1970 களின் பிற்பகுதி) ஈழ விடுதலை இயக்கங்கள். அவற்றின் போதாமைகளிலிருந்து உருவாகியதே (2001) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இப்படியெல்லாம் நிகழ்ந்து வந்த வரலாற்று வளர்ச்சி, இப்பொழுது திரும்பி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிடமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடமும் சென்றிருக்கிறது என்றால், தமிழர்களின் அரசியலும் பின்னோக்கிச் சென்றுள்ளது என்றே அர்த்தமாகும்.

நிச்சயமாக.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுப்போன அரசியற் சித்தாந்தத்துக்கு இன்னும் தமிழ் சனங்களிடம் மதிப்பிருக்கிறது – செல்வாக்கிருக்கிறது என்றால், இதை வேறு எப்படிச் சொல்வது?

தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் 1970 கள் வரையில் பிராந்திய அரசியலையே மேற்கொண்டன. பிராந்திய அரசியல் அதிகாரத்தையே கோரின. இப்பொழுதும் அவற்றின் நிலைப்பாடு அதுதான். ஆனால், அவற்றின் பெயரோ ‘அகில இலங்கை’ என்ற அடையாளத்தையும் எண்ணக் கருவையும் சுட்டுவதாகும். அதாவது முழு இலங்கைக்குள் தீர்வு என்ற அடையாளத்தை.

“ஒரு நாடு இரு தேசம்” என்று கூறும் தமிழ்க் காங்கிரஸ் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்) ‘அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி’யின் உத்தியோக பூர்வமான தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். அப்படித்தான் ‘இலங்கைத் தமிழரசுக் கட்சி’க் காரர்களும். இவர்கள் கொழும்பில் (மையத்தில்) உறவும் வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் எதிர்ப்புமாக தோற்றம் காட்டுவர்.

இந்த அடையாள முரணே அவற்றின் அரசியல் முரணுமாகும்.

இதனால்தான் அவற்றின் அரசியல் கடந்த காலத்தில் தோற்றுப் போனது. அதாவது, வடக்குக் கிழக்கில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிராந்திய அரசியலை – தமிழ்த் தேசிய அரசியலை – பிரிவினைவாத அரசியலைத் தீவிரமாகக் கொதி நிலையில் பேசுவது. நடைமுறையில் கொழும்பு மையத்தோடு உறவைப் பேணுவது. இந்த இரட்டை நிலைப்பாடே அவற்றின் அரசியற் தோல்வியாகும். ஆனால், இந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெற்றியடைந்து கொண்டேயிருப்பர். மக்கள் தோற்றுக் கொண்டிருப்பர்.

புலிகள் இருந்தபோது இவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி, தம்மை மீண்டும் மீள்நிலைப்படுத்திக் கொண்டன இவை இரண்டும். அதனால்தான் இரண்டு கட்சிகளும் இப்போதும் உயிர்வாழ்கின்றன.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுச்சியடைந்திருக்க வேண்டிய ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, ஈரோஸ், என்.எல்.எவ்.ரி போன்றவற்றின் அரசியல் பலவீனமும் இதற்கு அப்பாலான புதிய அரசியற் தரப்புகளுடைய இயலாமைகளும் தமிழரசுக் கட்சியையும் தமிழ்க் காங்கிரஸையும் உயிரூட்டி, வளர்த்துக் கொண்டேயிருக்கிறது.

ஒரு காலம் இந்தக் கட்சிகளால் பயனே இல்லை. இந்தக் கட்சிகள் மக்களுக்குத் துரோகமிழைத்து விட்டன. இவற்றின் தலைவர்களை விட்டு வைக்கவே கூடாது என்று கடும்போக்கைப் பின்பற்றிய விடுதலைப் புலிகளும் ஏனைய இயக்கங்களும் பின்னர் இந்தக் கட்சிகளுடன் சமரசத்துக்குச் சென்றது வரலாற்றின் விசித்திரமும் சோகமுமாகும்.

இதில் இன்னும் சில படிகள் முன்னே சென்று தமிழரசுக் கட்சியே கதி என்ற நிலைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவை தள்ளப்பட்டுள்ளமை இன்னொரு துயரமாகும்.

இந்த வரலாற்றுப் பின்னணியில், விழுந்தும் சிதைந்தும் எழுந்து நிற்பது தமிழரசுக் கட்சியே. உண்மையில் இது தமிழ் மக்களின் இயலாமையும் தோல்வியும் பின்னடைவுமேயாகும். இந்தத் தோல்வியே அவர்களை போருக்கு முந்திய 1970 களில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.

அப்படியென்றால், சமகாலச் சூழலுக்கு வருவதற்கு தமிழ் மக்கள் 55 ஆண்டுகாலம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். அதற்கிடையில் தாண்டவேண்டிய தடைகள் ஏராளம். அந்தத் தடைகளைத் தாண்டுவதற்கு இந்த ஓட்டைப் படகுகளும் உக்கிப்போன ஏணியும் பயன்தராது. ஆட்களை மாற்றுவதாலோ, அடையாளத்தை மாற்றுவதாலோ பயனில்லை. பொருத்தமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துச் சாத்தியப்படுத்துவதே பயனுடையதாகும். அது ஒரு போராட்டத்துக்குரிய வித்து.

Karunakaran-e1717046995835.jpg?resize=11கருணாகரன்
 

 

https://maatram.org/articles/11895

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களுடைய அரசியல் வெற்றிகளைச் சாதிக்க முடியாதுவிட்டாலும், கட்சியைப் பொறுத்தவரையில் சிறுதுரும்பையும் இரும்பாக்கக் கூடிய வல்லமை (கெட்டித்தனம்) சம்பந்தனுக்கிருந்தது.

சிரிப்பதை தவிர வேறொன்றுமில்லை. எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே வட்டத்தை சுற்றி, மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு ஓடி, மீண்டும் தாங்களே ஏக பிரதிநிதிகள் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டு வந்து, மக்களை தொடர்ந்து ஏமாற்றியதும், சக உறுப்பினர்களை தனது வயதை வைத்து சர்வாதிகாரிபோல் நடந்ததும், ஒரு குழப்பியை சட்ட மேதை என்று கட்சிக்குள் புகுத்தி அதன் அடாவடியை எல்லாம் கண்டும் காணாமல் விட்டதும்,     தனது காலத்திற்கப்பால் அந்தக்கட்சி நிலைத்து நிற்க முன்னோக்கு இல்லாமல் செயற்பட்டதையும் தவிர அவர் சாதித்தது என்ன? குறைந்தது நீதி நிஞாயம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு ஆள். ஆளுக்கொரு நீதி, சட்டம். குரங்கின் கைப்பூமாலை போன்று சுமந்திரன் கையில் கொடுத்துவிட்டு அவரை அடக்கமுடியாமல் மௌனமானார்.

11 hours ago, கிருபன் said:

புதிய – பதில் – தலைவரான சி.வி.கே. சிவஞானத்தை வைத்துக் கொண்டு கட்சியை முன்னகர்த்தலாம் என்று கட்சி யோசிக்கப்படுகிறது. இதையிட்டுச் சிரிப்பதை விட வேறு என்னதான் செய்ய முடியும்? இது தமிழ்ச் சமூகம் துயரப்பட வேண்டிய இடமாகும்.

 

11 hours ago, கிருபன் said:

தமிழரசுக் கட்சியின் முகமாக சுமந்திரனே உள்ளார். சிங்கள மக்களுக்கும் தென்னிலங்கைக்கும் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் தமிழரசுக் கட்சியென்றால் அது சுமந்திரனின் கட்சியென்றே தெரியும். இதைப் புரிந்துகொண்டபடியால்தான் கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்று சிவஞானம் சொன்னது.

முன்னுக்கு பின் முரணான கருத்து. அதைவிட, சிவஞானம் பதவி பறிபோகிறதென்றால் தூற்றுவார், கிடைக்கிறதென்றால் மீண்டும் அதே வாயால்போற்றுவார். இந்த இரண்டுமூன்று நாள் இடைவெளியில்  அவரது இரண்டு முகத்தையும் பார்த்துவிட்டோம்.

11 hours ago, கிருபன் said:

தமிழரசுக் கட்சியின் முகமாக சுமந்திரனே உள்ளார். சிங்கள மக்களுக்கும் தென்னிலங்கைக்கும் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் தமிழரசுக் கட்சியென்றால் அது சுமந்திரனின் கட்சியென்றே தெரியும். இதைப் புரிந்துகொண்டபடியால்தான் கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்று சிவஞானம் சொன்னது.

அவர் தமிழரசுக்கட்சியை கூறு போட்டவர் அவர். தன் மக்கள் சார்பாக எங்கேயும் எதையும் பேசிப்பெறவில்லை. மக்களாலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களாலும் நிராகரிக்கப்பட்டவர். குறித்த கட்சியை நடைபெறாமல் நிறுத்தி, இடையூறு விளைவித்துக்கொண்டிருப்பவர். பதவிகளை நிஞாயத்துக்கப்பால் கைப்பற்றி மற்றவர்களை புறந்தள்ளுகிறார். இவர் பக்கம் நிற்பவர்கள் நிஞாய வாதிகளோ, அறநெறி சார்ந்தவர்களோ, பகுத்தறிவு உள்ளவர்களோ இல்லை. பதவிக்காகவும் பணத்துக்காகவும் அலைபவர்கள். தன்னிச்சையாக முடிவெடுத்து கட்சியை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதன் பலனை வெகு விரைவில் அறுப்பார்கள். மக்கள் பிரதிநிதி மக்களால் தெரிவுசெய்வயப்பட்டவர். அவர்களுக்கு என்ன தேவை என்று தெரியாதவரை சிங்களம் தெரிந்தாலென்ன, சர்வதேசம் தெரிந்தாலென்ன? அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். மக்களுக்காக எதுவும் செய்யாதவர்.  எப்படி சொன்னாலும் சிலருக்கு யதார்த்தம் புரிவதில்லை. உளறிக்கொண்டு இருப்பார்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பெறுமானமும்         இல்லாத தமிழரசு!
 

எந்தப் பெறுமானமும்   இல்லாத தமிழரசு!

— கருணாகரன் —

‘தமிழ்த்தேசியக் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே மக்களிடத்தில் பேராதரவு உண்டு. அதனால்தான் அது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கிருப்பதால்தான், அதனோடு இணைந்து கொள்வதற்கு ஏனைய கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன‘ என்ற கருத்து  அல்லது அவ்வாறான அபிப்பிராயம் சிலரிடத்திலே காணப்படுகிறது. அல்லது அவ்வாறான ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்வதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். இந்தப் பெருமிதம் தமிழரசுக் கட்சிக்கும் உண்டு. அந்தப் பெருமிதத்திலேயே அது குளிர்காய்கிறது. இதை வளர்த்துத் தன்னை அது நிலைப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. 

இப்படிச் சொல்லப்படுவதைப் போல அல்லது இவ்வாறு கருதுவதைப் போல தமிழரசுக் கட்சிக்கு மக்களிடத்திலே உண்மையாகவே செல்வாக்குண்டா? 

இல்லை.  நிச்சயமாக இல்லை. அப்படிச் செல்வாக்கைப் பெறுவதற்கு அது தன்னுடைய அரசியல் வரலாற்றில் எந்தப் பெறுமானங்களையும் உருவாக்கவில்லை. அதிலும் 1970 க்குப் பிறகு, தமிழரசுக் கட்சிக்கு அரசியலே இருக்கவில்லை. அது தன்னுடைய நிறைவேறாத கனவுடன் 1970 களில் மரித்தது. ஆனால், அது போட்ட விதையை – தமிழரசுக் கனவை – தனிநாட்டுக்கான அபிலாஷையை – மக்களும் இளைய தலைமுறையினரும் தொடர்ந்தனர். அதற்காக அவர்கள் மிகப் பெரிய விலைகளைக் கொடுத்தனர். தமிழரசுக் கட்சி அதில் சிறிய அளவுக்குக் கூடப் பங்களிப்புச் செய்யவில்லை. 

2004 இல் விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்காக தமிழரசுக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே, அது மீளுயிர்ப்படைந்தது. அது கூட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் உணர்ச்சி வசப்பட்ட – அவசர அரசியல் முடிவுகளால்தான் வாய்த்தது. புலிகளுக்கும் ஆனந்தசங்கரிக்கும் இடையில் உருவான முரண்பாடுகளால் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இல்லையென்றால், இப்போது தமிழரசுக் கட்சி வரலாற்றில் மறைந்தே போயிருக்கும். ஏனென்றால், தன்னை மீளுயிர்ப்புச் செய்யக் கூடிய அரசியற் திறனோ, சிந்தனைப் பலமோ, அர்ப்பணிப்பு அணியோ, கட்டமைப்பு விருத்தியோ 1970 க்குப் பின், தமிழரசுக் கட்சிக்க்கு இருக்கவில்லை. அது தமிழர் விடுதலைக் கூட்டணியில் கரைந்து போயிருந்தது.

ஆனால் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் நிலை அப்படியல்ல. அது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஐக்கியமாகியிருந்தாலும் கூடிய விரைவில் அதிலிருந்து விலகித் தன்னை நிலைநிறுத்த முயற்சித்தது. குமார் பொன்னம்பலம் அதனுடைய அடையாளமாக இருந்தார். அப்படித் தமிழரசுக் கட்சி எந்தச் சுவட்டையும் தனித்துக் காட்டவுமில்லை, கொண்டிருக்கவுமில்லை.

‘அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும். எதிர்பாராத மாற்றங்களும் நிகழ்ச்சிகளும் நடக்கும். அப்படி உருவாகும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே அரசியல் வெற்றியாகும்‘ என்று இதற்கு யாரும் வியாக்கியானம் செய்யக் கூடும். இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், அப்படிக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு 2004 இல் தன்னை மீளுயிர்ப்புச் செய்த தமிழரசுக் கட்சியின் இரண்டாம் கட்டப் பங்களிப்பு என்னவாக இருந்தது –  இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். அதிலும் இறுதிப்போர்க்காலத்தில் தமிழரசுக் கட்சியின் அடையாளத்தோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் தலைமை தாங்கிய திரு. இராஜவரோதயம் சம்பந்தன், திரு. சேனாதிராஜா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் இதற்குப் பதிலளிக்கும் வரலாற்றுப் பொறுப்புடையோர். குறைந்த பட்சம் அந்தப் போரை, போரில் நடந்த பேரழிவை வன்மையாக எதிர்ப்பதற்கான குறியீட்டளவிலான முயற்சிகளைக் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்கவில்லை. இந்த வரலாற்றுப் பழி அதற்கு நிரந்தரமாகவே உண்டு. 

இறுதிப்போரின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வழிநடத்திக் கொண்டிருந்தது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன் – மாவை அணிதான். அந்த வழிநடத்தலும் தலைமைத்துவமும்  தவறானது, உறுதியற்றது, அரச சார்பானது என்ற எதிர்ப்பை வெளிப்படுத்தியே கஜேந்திரகுமார், பத்மினி சிதம்பரநாதன், ஜெயானந்தமூர்த்தி,  கஜேந்திரன் உள்ளிட்ட அணி வெளியேறியது. 

2009 க்குப் பின்னர் முற்று முழுதாக தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்தின் கீழேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இயங்கியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் பங்கேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ மற்றும் புளொட் போன்றவை தமக்கான சமநிலையைக் கோரியபோதும் அதைத் தமிழரசுக் கட்சி வழங்கவில்லை. கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஏனைய கட்சிகளின் கோரிக்கையையும் சம்பந்தனும் தமிழரசுக் கட்சியும் நிராகரித்தனர். அதையெல்லாம் பிடிவாதமாகவே மறுத்தார் சம்பந்தன். சம்பந்தன் மட்டும்தான் மறுத்தார் என்றில்லை. ஒட்டுமொத்தத் தமிழரசுக் கட்சியினரும் சம்பந்தனுடைய நிலைப்பாட்டை ஆதரித்தே நின்றனர். மட்டுமல்ல, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மூலம் அரசியல் அரங்கில் நுழைந்த சிவஞானம் சிறிதரன், சி. சிவமோகன், துரைராசா ரவிகரன், ஐங்கரநேசன் போன்றோரை உறிஞ்சித் தன்வசப்படுத்தியது தமிழரசுக் கட்சி. 

இது கூட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கை மட்டுமல்ல, அரசியல் நாகரீகமற்ற செயலும் கூட. அப்படியிருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகப் பொறுத்திருந்தது. அந்த விட்டுக் கொடுப்பையும் பெருந்தன்மையையும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பலவீமாக தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டது. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் வெளியேறிய பின், ரெலோவையும் புளொட்டையும் தன்னுடைய இரண்டு கால்களுக்கிடையிலும் தமிழரசுக்கட்சி வைத்துக் கொண்டது. இதற்குச் சம்மதமில்லை என்றால் கூட்டமைப்பை விட்டு வெளியேறலாம் என்று சம்பந்தன் வெளிப்படையாகவே – மிரட்டலாகவே – சொன்னார். 

இப்படித்தான் தமிழரசுக் கட்சி தன்னுடைய இரண்டாம் கட்ட வளர்ச்சியை – 2004 க்குப் பிறகான இன்றைய நிலையை –  சூதான முறையில் எட்டியது. இதில் எங்கே கண்ணியமும் அறமும் உண்டு? 

‘அரசியலில் அறமும் கண்ணியமும் கிடையாது. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும் தந்திரங்களைக் கைக்கொள்வதும் வென்று முன்செல்வதும் நிலைநிறுத்துவதுமே அடிப்படை‘ என்று இதற்கும் யாரும் வியாக்கியானம் சொல்லலாம்.  

கட்சியை வளர்த்துக் கொள்வதற்காக தன்னோடு இணைந்து நின்ற தரப்புகளையே உறிஞ்சித் தோற்கடிக்கத் தெரிந்த தமிழரசுக் கட்சிக்கு – கட்சியினருக்கு – எதிர்த்தரப்பாக அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கான தேவைகளையோ உரிமைகளையோ பெற முடியவில்லை. குறைந்த பட்சம் அரசாங்கத்துக்கு சிறிய அளவிலேனும் நெருக்கடியை உருவாக்க முடியவில்லை. பிராந்திய சக்தியாகிய இந்தியாவைத் தமிழருக்குச் சாதகமாக்கவில்லை. சர்வதேச சமூகத்தை வென்றெடுக்க முடியவில்லை. 

ஆனால், அதற்கான வாய்ப்புகளிருந்தன. 2009 க்குப் பிறகான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இடத்தை – அதற்கு மக்களும் சர்வதேச சமூகமும் வழங்கிய மதிப்பை – ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உலகின் அத்தனை தலைவர்களோடும் சம்பந்தன் கைகுலுக்கியிருக்கிறார். படமெடுத்திருக்கிறார். ஒரு தடவை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். ஒரு காலகட்டம் (2015 – 2020 வரை) அரசாங்கத்தோடு இணக்கமான உறவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இருந்திருக்கிறது. 

இப்படியெல்லாம் அருமையான வாய்ப்புகளிருந்தும் தமிழரசுக் கட்சியோ, சம்பந்தன் அணியோ தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த நன்மைகள் என்ன? தமிழரின் அரசியலில் உருவாக்கிய  பெறுமதிகள் என்ன? 

இவ்வளவுக்கும் 2009 க்குப் பிறகான ஈழத் தமிழரின் அரசியலில் தமிழரசுக் கட்சியே தலைமை தாங்கியிருக்கிறது. ஆகவேதான் தமிழரசுக் கட்சியிடம் நாம் கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. 2009 க்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகால அரசியலில் எந்த நல் விளைவையும்  உருவாக்காமல் விட்டதற்கும் நன்மை எதையும் தமிழர்கள் பெற முடியாமற் போனதற்கும், தமிழரசுக் கட்சியே பொறுப்பு. அதை அது நேர்மையாக ஏற்க வேண்டும். 

இப்பொழுது இந்தக் கட்டுரையின் தொடக்கப்பகுதிக்கே வரலாம். 

தமிழரசுக் கட்சியின் முதற்கட்டத்திலும் அது தோல்வியையை சந்தித்தது. இரண்டாம் கட்டத்திலும் அது தோல்வியே கண்டிருக்கிறது. ஆம், அது  தன்னுடைய அரசியல் வரலாற்றில் எந்தப் பெறுமானங்களையும் உருவாக்கவில்லை.

அப்படி அது ஏதாவது வரலாற்றுப் பெறுமதிகளை உருவாக்கியிருந்தால், தமிழரசுக் கட்சியோ, அதனுடைய வலுவான ஆதரவாளர்களோ, அரசியலைப் பற்றிய சுயாதீன மதிப்பீட்டாளர்களோ ஆதாரங்களை முன்வைத்து வாதிடலாம், மறுத்துரைக்கலாம். 

இப்படியிருந்தும் மக்கள் அதற்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள். அதையே ஆதரித்திருக்கிறார்கள். அதுவே வெற்றியடைந்திருக்கிறது என்றால், தமிழரசுக் கட்சியையும் விட ஏனைய தரப்புகள் மோசமாகியுள்ளன என்றே அர்த்தமாகும். என்றபடியால்தான் அருச்சுனா இராமநாதன் போன்ற தன்னிலைகள் எழுச்சியடைந்ததும் வெற்றிபெற்றதும். மறுபக்கத்தில் தேசிய மக்கள்  சக்தி வெற்றியடைந்ததுமாகும். 

இறுதியாக ஒன்றைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கலாம். தமிழரசுக் கட்சியின் அரசியல் வெற்றி தற்காலிகமானதே. பதிலாக இன்னொரு சக்தி எழுந்தே தீரும். 

வரலாறு ஒருபோதும் நேர்கோட்டில் செல்வதில்லை. 

 

https://arangamnews.com/?p=11654

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2025 at 09:36, கிருபன் said:

சுமந்திரன் வெற்றியடைவில்லை. ஆனாலும், தமிழரசுக் கட்சியின் முகமாக சுமந்திரனே உள்ளார். சிங்கள மக்களுக்கும் தென்னிலங்கைக்கும் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் தமிழரசுக் கட்சியென்றால் அது சுமந்திரனின் கட்சியென்றே தெரியும். இதைப் புரிந்துகொண்டபடியால்தான் கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்று சிவஞானம் சொன்னது.

சிவஞானம் யார் இதை சொல்வதற்கு? இந்தப் பதவிக்காக சுமந்திரனை தூற்றியவரும், அது கிடைத்தவுடன் வாயை அடக்கியவருந்தான் சிவஞானம்! தான் அந்தபதவிக்கு பொருத்தமானவரா என்று கூட யோசிக்க முடியவில்லை அவரால். தலைவர் பதவியாகட்டும் செயலாளர் பதவியாகட்டும் பெயர் இவர்களுடையது, அதிகாரம் சுமந்திரனின் கையில்த்தான் இருக்கும். அவர்களுக்கு, அது பரவாயில்லை, தங்கள் பெயர் இருந்தால் போதுமென்றிருப்பவர்கள். அண்மையில் கூட சுமந்திரன் சொன்னார். கட்சியில் சிறிதரன் பதவியை பற்றி ஊடகவியலாளர் கேள்வி கேட்டபோது, நான் சிறிதரனுக்கு தூரவே இருந்தேன், கட்சியில் முடிவெடுத்தார்கள், அதை வெளியிட அவர்களுக்கு முதுகெலும்பில்லை அதை சொல்வதற்கு, நான் பேச்சாளராக இருப்பதால் நான் அறிவித்தேன் என்றார். சரி, முதுகெலும்புள்ளவருக்கு, சரி பிழை தெரியாதா அல்லது அது பிழை என்று சொல்ல அவருக்கு முதுகெலும்பு இல்லையா? அப்போ அந்தப் பதவியிலிருந்து ஏன் இன்னும் விலக மாட்டேனென அடம்பிடிக்கிறார்? அவருக்கு தெரியும். கட்சிக்கு எதிரான தனது செயற்பாடுகளுக்கு எதிராக அன்று சம்பந்தனோ, வேறெவரோ நடவடிக்கை எடுத்திருந்தால்; சுமந்திரன் என்றொருவரை யாரும் நினைத்துப்பார்த்துக்கூட இருக்க மாட்டார் இன்று, அதே நேரம் தான் செய்தது கட்சிக்கு எதிராக வேண்டுமென்றே செயற்பட்டேன் என்பதும் தெரியும். அதனால் தனக்கு எதிராக வரக்கூடியவர்களை, தனது தன்னிச்சையான செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை விரட்டி விட வேண்டும் என்கிற ஒரே கொள்கையில் செயற்படுகிறார். அதே நேரம், சிங்களம் காலால் இட்ட பணியை, தான் தலையில் வைத்து கொண்டாடிய படியாலே எந்த அரசு ஆட்சிக்கு வந்தபோதும் தனக்கென்று ஒரு ஆசனத்தை, மரியாதையை, கட்சியை கடந்து பெற முடிந்தது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். ஆகவேதான் தனக்கு பிரதமமந்திரி பதவியேற்க அழைப்பு வருமென அறிவித்து காத்திருந்தார். அது கைகூடவில்லையாயினும் மனந்தளராமல் குறுக்கு வழிகளை கையாண்டு கொண்டு நம்பிக்கையோடு இருக்கிறார். இந்த அனுபவத்தில், தன்னை கேள்வி கேட்கத்துணியாத, விமர்ச்சிக்காத, தான் இட்ட கட்டளையை தலையால் செய்யக்கூடிய, பதவி மட்டும் போதுமென்று அலைகிற கூட்டத்தை தன்னோடு சேர்த்துக்கொண்டால், தனது பதவிக்கு ஆபத்தில்லை என நினைக்கிறார். அப்படி ஏதும் வந்தாலும் கூட, அவர்களுக்கு முடிவு எடுக்கவோ, அறிவிக்கவோ முதுகெலும்பில்லை, நான் பேச்சாளராக இருப்பதால் அவர்களின் முடிவை அறிவித்தேன் என்று தப்பிக்கொள்வார். ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சி மக்களின் நல்மதிப்பை பெற்றிருந்தது உண்மை. காரணம் பெயர், வேறு தெரிவுகளும் மக்களுக்கு இருக்கவில்லை. இருபத்திரண்டு ஆசனங்களை பெற்ற கட்சி இன்று, எத்தனை பெற்றிருக்கிறது? விழுந்தவன் மீசையில மண் ஒட்டேல என்பதுபோல், நாம் தான் வெற்றி என்கிறார்கள்,தம் தனிப்பட்ட நிராகரிப்பை மறைத்து. ஒரு காலத்தில் வேறு கட்சியில் தோற்றவர்கள் தமிழரசில் சேர்ந்து வெற்றியீட்டி பின் வெளியேறி தோற்ற வரலாறுமுண்டு. வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டால்; எந்த அடாவடியும் பண்ணி விட்டு பாதுகாப்பாக ஒளிந்து கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. இன்று அப்படியில்லை. வீட்டுக்குள் புகுந்திருப்பதெல்லாம் கரு நாகங்கள் என்பது மக்களுக்கு தெரியும். இன்று மக்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றன. இளம் செயற்திறனுள்ள உறுப்பினர்கள் இருக்கிறார்கள், தங்களோடு நின்று, தங்களுக்காக, பிரச்சனைகளுக்காக பேசுபவர்களை தெரிந்துகொள்கிறார்கள். இனிமேல் தமிழரசு என்பது அவர்களுக்கு தேவையில்லை. அதனால் தாம் பட்ட கஸ்ரங்கள், இழப்புகள், தனிமை, கையறுநிலை, துரோகம் எல்லாம் அனுபவித்து விட்டார்கள். அது இனிமேல் தமக்கு உதவாது என்பதும் தெரியும். மக்கள் பலபேர் இவர்களை விட்டு விலகிவிட்டார்கள். அதற்கு காரணம்; சுயநலமிக்க, முன்னோக்கு இல்லாமல், பதவிக்கு அலையும் நபர்கள். ஆகவே இன்னொரு தேர்தல் வரும் சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சியை மக்கள் ஏற்கப்போவதில்லை. இதே சாணக்கியன், இதே தேர்தல் தொகுதியில், சிங்கள கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின் இங்கு உள்ளீர்க்கப்பட்டு, முதல் தேர்தலில் தூஷணப்பிக்கரை அழைத்து, வலிந்து ஒரு நாடகம் நடத்தி, அப்பாவி மக்களை பயங்காட்டி வென்றார். அந்த காணொளியை பாத்தாலே அப்பட்டமாக தெரிகிறது. இந்தமுறை இவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி முரளிதரன் போன்றவர்களுக்கான விசாரணை இவரது வெற்றியை நிர்ணயித்தது. அதற்கு அனுரா வேண்டுமென்றே இதை ஆரம்பித்ததும் காரணம். இல்லையென்றால், சந்திரகாந்தன் சிறையிலிருக்கும்போதே வெற்றியடைய வைக்கப்பட்டவர். அதை மறந்து சாணக்கியன் ஆட வெளிக்கிட்டால், தமிழரசுக்கட்சியையே மக்கள் நிராகரிப்பார்கள். எதற்கும் அடக்கி வாசிப்பது நல்லது. நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான், மற்றவர்களை அடக்கவும், விமர்சிக்கவும் தொடங்கி எல்லாவற்றுக்கும் தானே காரணம் என்று அடுத்த சுமந்திரனாக அடக்கியாள வெளிக்கிட்டால், வெகு சீக்கிரம் பாடம் படிப்பார்.            

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.