Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
03 FEB, 2025 | 04:49 PM
image

யுஎஸ்எயிட் சீர்செய்ய முடியாத நிலைiயைஅடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர் எலொன் மஸ்க் அதனை மூடுவதற்கான நடவடிக்கைகளில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் நேரலை விவாதமொன்றை நடத்தியுள்ள மஸ்க் யுஎஸ்எயிட் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் நீண்டநேரம் ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதனை மூடவேண்டும் என்பதை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

யுஎஸ்எயிட் என்பது ஒரு புழு உள்ள அப்பிள் இல்லை பல புழுக்கள் காணப்படும் பொருள் என தெரிவித்துள்ள எலொன்மஸ்க்  நீங்கள் அதனை முற்றாக இல்லாமல் செய்யவேண்டும், அது சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது நாங்கள் யுஎஸ்எயிட்டினை மூடுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யுஎஸ்எயிட் அமைப்பின் இரண்டு சிரேஸ்ட அதிகாரிகளை டிரம்ப் நிர்வாகம் விடுப்பில் அனுப்பியுள்ளது.

https://www.virakesari.lk/article/205720

  • கருத்துக்கள உறவுகள்

USAIDஐ முடக்கும் பணிகள் நடப்பதாக எலோன் மஸ்க் அறிவிப்பு!

அமெரிக்க வெளிநாட்டு உதவி நிறுவனமான USAID ஐ மூடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூட்டாட்சி அரசாங்கத்தை சுருக்குவதற்கான முயற்சிக்கு தலைமை தாங்கும் பில்லியனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை (03) எக்ஸ் தளத்தினூடான ஒரு சமூக ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசுவாமி மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோனி எர்ன்ஸ்ட் மற்றும் மைக் லீ ஆகியோர் அடங்கிய உரையாடலின் போது, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலையத்தினை (USAID ) மூடுவதற்கு தாங்கள் செயல்படுவதாக மஸ்க் கூறினார்.

இந்த முகவர் நிலையம் புனரமைப்பு செய்யப்பட முடியாதது என்றும், இது மூடப்பட வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புவதாகவும் பில்லியனர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ரொய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியின் படி, ட்ரம்ப் நிர்வாகம் USAID இல் இரண்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகளை வார இறுதியில் வெளியேற்றியது.

மஸ்கின் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) பிரதிநிதிகள் USAID கட்டிடத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு அணுகலைப் பெறுவதை அதிகாரிகள் தடுக்க முயன்ற பின்னர் இந்த வெளியேற்றம் அமைந்திருந்தது.

2023 இல் அமெரிக்கா கிட்டத்தட்ட 180 நாடுகளுக்கு விநியோகித்த 72 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவியில் பாதிக்கு மேல் USAID நிர்வகிக்கிறது.

மோதல் மண்டலங்களில் உள்ள பெண்களின் ஆரோக்கியம் முதல் சுத்தமான தண்ணீர், எச்ஐவி/எய்ட்ஸ் சிகிச்சைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணிகள் வரை இதன் மூலமாக அமெரிக்கா வழங்கியது.

இது 2024 இல் ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட அனைத்து மனிதாபிமான உதவிகளில் 42% ஐ வழங்கியது.

USAID இன் இணையதளம் சனிக்கிழமையன்று ஆஃப்லைனில் (அணுக முடியாது) இருப்பதாகத் குறிப்பிடப்பட்டது மற்றும் சில பயனர்கள் ஞாயிற்றுக்கிழமை அதை அணுக முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

USAID நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.

ட்ரம்ப் தனது “அமெரிக்கா முதல்” கொள்கையின் ஒரு பகுதியாக பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை உலகளாவிய முடக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது ஏற்கனவே உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்புகிறது.

தாய்லாந்து அகதிகள் முகாம்களில் உள்ள கள மருத்துவமனைகள், போர் வலயங்களில் கண்ணிவெடி அகற்றுதல், எச்.ஐ.வி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் ஆகியவை நீக்கப்படும் அபாயத்தில் உள்ள திட்டங்களில் அடங்கும்.

அமெரிக்க செலவுகள் மற்றும் மோசடிகளைக் குறைப்பது பற்றி மேலும் விரிவாகப் பேசுகையில், அடுத்த ஆண்டு அமெரிக்க பற்றாக்குறையிலிருந்து $1 டிரில்லியன் டாலர்களை ட்ரம்ப் நிர்வாகம் குறைக்க முடியும் என்று மஸ்க் மதிப்பிட்டார்.

 

http://www.samakalam.com/usaidஐ-முடக்கும்-பணிகள்-நடப்ப/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பு – பலர் விடுப்பில் அனுப்பப்பட்டனர் - அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்க திட்டம்

Published By: RAJEEBAN   04 FEB, 2025 | 02:42 PM

image
 

அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு உதவி திட்டங்களிற்கு பொறுப்பான யுஎஸ்எயிட் திங்கட்கிழமை முதல் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது.

யுஎஸ்எயிட்டின் பணியாளர்களிற்கு அலுவலகத்தில் நுழைவதற்கும் கணிணிகளை பயன்படுத்துவதற்குமான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து யுஎஸ்எயிட்டின் சிரேஸ்ட ஊழியர்கள் பலர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.

யுஎஸ்எயிட்டின் இயக்குநர் தானே என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிடடின் செயற்பாடுகள் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்ற விதத்தில் அமைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் வரலாற்றுரீதியாக அமெரிக்க காங்கிரஸிற்கும் வெள்ளை மாளிகைக்கும் பதிலளிக்காத ஒன்று என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அது ஒரு அமைப்பாகயிருந்தாலும் அது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்தே உத்தரவுகளை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் யுஎஸ்எயிட் அதனை புறக்கணித்து தொண்டு என்பது அமெரிக்காவின் நலன்களில் இருந்து வேறுபட்டதாகயிருக்கவேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் வழங்குவது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தையே நாங்கள் ஒவ்வொரு டொலருக்கும் பதிலளிக்கவேண்டும் ஒவ்வொரு டொலரும் எங்கள் தேசிய நலனை அடிப்படையாக கொண்டது என்ற உத்தரவாதத்தை மக்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/205786

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கிலும் மனிதாபிமான உதவிகளை செய்து வரும் USAID அமைப்பை டிரம்ப் மூட நினைப்பது ஏன்?

அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமை

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சியன் செட்டான்
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமையின் (USAID) எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.

இதன் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, இந்த அமைப்பை அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அரசின் சர்வதேச வளர்ச்சி முகமை (USAID) ஆனது, இனி வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்படும். ஆனால் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் ரிப்போர்ட்டின் அடிப்படையில், இச்செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மனிதவளத்தை குறைக்கும் திட்டங்களும் அமெரிக்க அரசிடம் உள்ளன.

இது குறித்து திங்கட்கிழமை பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சக செயலாளர் மார்கோ ரூபியோ, USAID அமைப்பின் தலைமை தனது உத்தரவுகளை ஏற்க மறுப்பதாக குற்றம் சாட்டியதோடு, தானே தற்போது அந்த அமைப்பின் "செயல் தலைமையாக" இருப்பதாகவும் கூறினார்.

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது முதன்மை ஆலோசகர்களில் ஒருவரான தொழிலதிபர் ஈலோன் மஸ்க் ஆகியோர் இந்த முகமை மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த முகமையை மூடுவது உலகெங்கிலும் செயல்பட்டு வரும் மனிதாபிமான திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.

USAID என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

உலகெங்கிலும் அமெரிக்க அரசின் சார்பில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக 1960களின் முற்பகுதியில் இந்த முகமை நிறுவப்பட்டது.

இந்த முகமையின் கீழ் 10,000 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், இதில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். 60 நாடுகளில் பணிக்கான தளங்களை கொண்டுள்ள இந்த முகமை, இதற்கும் மேலாக சுமார் ஒரு டஜன் நாடுகளில் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் பெரும்பாலான களப்பணிகளை மற்ற அமைப்புகளை பயன்படுத்தி ஒப்பந்த அடிப்படையிலோ, நிதி உதவி அளித்தோ USAID செய்து வருகிறது.

இந்த அமைப்பு மேற்கொள்ளும் பணிகள் விரிவானவை. உதாரணத்திற்கு பட்டினியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உணவு அளிப்பதோடு, உலக அளவில் பஞ்சத்தை அளவிடும் அமைப்பையும் இயக்கி வருகிறது.

இந்த அமைப்பானது தரவுகளை ஆராய்ந்து எந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் பணியைச் செய்கிறது.

USAID-ன் நிதியில் கணிசமான அளவு சுகாதாரம் சார்ந்த பணிகளுக்காக செலவிடப்படுகிறது. போலியோ பாதிப்பு இன்னமும் தீர்க்கப்படாத நாடுகளில் தடுப்பூசி வழங்குவது மற்றும் பெருந்தொற்றுக்களை ஏற்படுத்தும் வைரஸ் பரவலை தடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பிபிசியின் சர்வதேசத் தொண்டு அமைப்பான பிபிசி மீடியா ஆக்ஷன் USAID வழியாக நிதியைப் பெறுகிறது. 2024ம் ஆண்டு அறிக்கையின் படி, USAID அமைப்பானது 3.23 மில்லியன் டாலர்களை நிதியாக வழங்கியதன் மூலம் அந்த நிதியாண்டின் 2வது மிகப்பெரிய நன்கொடையாளராக உள்ளது.

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,EPA

அமெரிக்க அரசுக்கு எவ்வளவு செலவாகிறது?

அமெரிக்க அரசு வழங்கிய தரவுகளின் அடிப்படையில், 2023ம் ஆண்டு சர்வதேச நாடுகளுக்கான உதவியாக 68 பில்லியன் டாலர்களை அந்நாடு செலவிட்டுள்ளது.

இந்த செலவில் பல்வேறு முகமைகள் மற்றும் துறைகளுக்கான செலவீனங்கள் அடங்கும் என்றாலும், USAID-ன் நிதி ஒதுக்கீடானது இந்த தொகையில் பாதிக்கும் மேலாக உள்ளது. அதாவது சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்த பணத்தில் பெரும்பங்கு ஆசியா, ஆஃபிரிக்க நாடுகளில் செலவிடப்படுகிறது. ஐரோப்பாவைப் பொருத்தவரையிலும் யுக்ரைனில் போர் பாதித்த பகுதிகளில் மனிதாபிமான செயல்பாடுகளுக்காக செலவிடப்படுகிறது.

சர்வதேச வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிடுவதில் உலகின் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா உள்ளது.

இந்த வகையில் மனிதநேய உதவிகளுக்காக செலவிடுவதில் பிரிட்டன் உலகின் 4வது பெரிய நாடாக உள்ளது. 2023ம் ஆண்டில் 15.3 பில்லியன் பவுண்டுகளை பிரிட்டன் செலவிட்டுள்ளது. இது அமெரிக்கா செலவிட்ட தொகையில் 4ல் ஒரு பகுதியே ஆகும்.

USAID-ஐ மறு ஆய்வு செய்ய வேண்டும் என டிரம்ப் மற்றும் மஸ்க் விரும்புவது ஏன்?

சர்வதேச நாடுகளுக்கான உதவியை நீண்டநாட்களாகவே விமர்சிப்பவராக டிரம்ப் இருக்கிறார்.

இது அமெரிக்க வரி செலுத்துவோரின் நலனை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பது அவரது குற்றச்சாட்டாக உள்ளது. முந்தைய பேச்சுக்களின் போதும் USAID மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள அவர், இந்த நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளை "இனவெறி கொண்ட மனப்பிறழ்வாளர்கள்" என்றும் விமர்சித்துள்ளார்.

இது போன்ற வெளிநாடுகளுக்கு உதவும் நிறுவனங்களை நீக்குவது வெகுஜன ஆதரவைப் பெற உதவலாம்.

வெளிநாடுகளுக்கான உதவித் தொகையை குறைப்பதை அமெரிக்க வாக்காளர்கள் விரும்புகிறார்கள் என்பதை நீண்டகாலமாக கருத்துக் கணிப்புகளும் வெளிப்படுத்தி வருகின்றன.

டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியேற்ற உடன் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில், அனைத்து சர்வதேச செலவீனங்களையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதற்கான உத்தரவும் இருந்தது. இவை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட ஒரு குறிப்பாணையின் அடிப்படையில் களத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும்பான்மை பணிகள் நிறுத்தப்பட்டன.

மனிதாபிமான செயல்பாடுகளுக்கான விதி விலக்குகள் பின்னர் அறிவிக்கப்பட்டன. எனினும் அமெரிக்க அரசின் நடவடிக்கை சர்வதேச வளர்ச்சிப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, சேவைகளில் பரவலான சிக்கலை ஏற்படுத்தியது.

உலகின் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் மருத்துவ சேவை, சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகளும் இரவோடு இரவாக நிறுத்தப்பட்டன.

மனிதாபிமான செயல்பாடுகளில் ஈடுபட்ட மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசும் போது இதனை "மனிதநேய சேவைகளில் ஏற்பட்டுள்ள பூகம்பம் போன்றது" என விமர்சிக்கிறார்.

USAID தலைமையகத்தை அணுகிய ஈலோன் மஸ்க்கின் அதிகாரிகளுக்கு பாதுகாக்கப்பட்ட நிதி விவரங்கள் மறுக்கப்பட்டன.

மத்திய அரசு செலவினங்களை குறைப்பது தொடர்பான பணியில் ஈலோன் மஸ்க்-கிற்கு உதவுவதற்காக டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள் என்பதால் வெள்ளை மாளிகை மற்றும் USAID இடையே பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது.

இதன் பின்னதாக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

தான் நிர்வகித்து வரும் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் நடந்த உரையாடல் ஒன்றில் திங்கட்கிழமை ஈலோன் மஸ்க் பேசும் போது, "USAID விவகாரம் தொடர்பாக அதிபர் டிரம்பிடம் விரிவாக பேசினேன். இதனை இழுத்து மூட வேண்டும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்." என்றார்

USAID-ன் இணையதளம் செயல்பாட்டை நிறுத்தியது, மற்றும் ஊழியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு திங்கட்கிழமை அறிவுறுத்தப்பட்டனர்.

திங்கட்கிழமை பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, USAID அமைப்பின் தலைமை உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுப்பதாக குற்றம் சாட்டிதோடு, தானே தற்போது அந்த அமைப்பின் செயல் தலைமையாக இருப்பதாகவும் கூறினார்.

அந்த அமைப்பு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைப் பணிகள் தொடரும் என்றாலும், செலவீனங்கள் தேசிய நோக்கத்துடன் ஒன்றிணைவதாக இருக்க வேண்டும் என கூறினார்.

USAID

பட மூலாதாரம்,REUTERS

USAID அமைப்பை டிரம்ப்பால் மூட முடியுமா?

USAID அமைப்பின் மீது வெள்ளை மாளிகைக்கு குறிப்பிடத்தக்க அதிகாரம் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதிகாரம் வரம்புகளுக்குட்பட்டதாகவே உள்ளது

1961ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி USAID அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த சட்டம், ஒரு அரசு முகமையானது உருவாக்கப்பட்டு, வெளிநாட்டு செலவுகளை நிர்வகிப்பதற்கு ஆணை பிறப்பித்தது. 1998ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் USAID-யை சுய உரிமைகள் பெற்ற நிர்வாக முகமையாக தரம் உயர்த்தியது.

சுருக்கமாக சொல்வதென்றால் டிரம்ப் தன்னிச்சையாக நிர்வாக உத்தரவின் மூலம் USAID அமைப்பை நீக்கி விட முடியாது. இந்த அமைப்பை நீக்கும் எந்த முடிவும் நீதிமன்றத்திலும், அமெரிக்க காங்கிரசிலும் கடுமையான சவால்களை சந்திக்கும்.

USAID அமைப்பை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தின் முடிவுக்குட்பட்டது எனில், டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறைந்த வித்தியாசத்திலேயே பெரும்பான்மையை தாண்டி நிற்கிறது.

டிரம்ப் நிர்வாகம் முன்வைக்கும் கருதுகோள்களில் ஒன்றான USAID அமைப்பை வெளியுறவு அமைச்சகத்தின் கிளையாக மாற்றும் முடிவும் இருக்கிறது. தன்னுரிமை பெற்ற அமைப்பாக அது இருப்பதற்கு நேர் எதிரான முடிவு இதுவாகும்.

இது போன்ற முடிவு முன்னெப்போதும் கேட்காதது அல்ல, 2020ம் ஆண்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்வதேச வளர்ச்சிக்கான துறையை வெளியுறவு அலுவலகத்துடன் இணைத்தார்.

அப்போது போரிஸ் அரசின் அமைச்சர்கள் இந்த முடிவால், அரசின் வெளியுறவு கொள்கை இலக்குகளுடன் சர்வதேச செலவீனங்கள் ஒத்துப்போகும் என கூறி ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சர்வதேச உதவிகளில் இது நிபுணத்துவத்தைக் குறைக்கும் எனவும், வெளிநாடுகளில் பிரிட்டனின் செல்வாக்கை சரிக்கும் எனவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

USAID யை மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?

USAID அமைப்புக்கு வழங்கப்படும் நிதியில் பெரும்பான்மை அமெரிக்காவால் வழங்கப்படும் நிலையில், நிதி எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்ற கொள்கையில் மேற்கொள்ளப்படும் மாற்றம் உலகெங்கிலும் உணரப்படும்.

USAID அமைப்பின் செயல்பாடுகள் உண்மையிலேயே உலகளாவியவை. யுக்ரைன் போரில் காயமடையும் வீரர்களுக்கு செயற்கை உடலுறுப்புகள் வழங்குவது முதல் ஆஃப்ரிக்காவில் எபோலா பரவலை கட்டுப்படுத்துவது வரை இந்த அமைப்பின் செயல்பாடுகள் பரந்துபட்டவையாக உள்ளன.

சர்வதேச செலவீனங்கள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசுகையில் ஒவ்வொரு டாலர் செலவும் அது அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும், வலிமைக்காகவும், செழிப்புக்காவும் செலவிடப்படுகிறது என்பதை நிறுவி நியாயப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

ஜனநாயக கட்சியின் அரசியல்வாதிகள் இந்த முடிவை சட்டவிரோதமானது மற்றும் தேச பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என விமர்சிக்கின்றனர்.

சிரியாவில் ஆயிரக்கணக்கான ஐஎஸ் அமைப்பினர் அடைக்கப்பட்டுள்ள சிறையின் காவலர்களுக்கான ஊதியமும் அமெரிக்காவின் நிதியால் வழங்கப்படும் நிலையில், இவர்கள் பணியிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் என்ற செய்தியை ஜனநாயக கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

"அமெரிக்காவே முதன்மை" என்ற அணுகுமுறைக்கு ஏற்ப வெளிநாடுகளுக்கான செலவீனங்களும் இருக்க வேண்டும் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனால் சர்வதேச வளர்ச்சிக்கான திட்டங்கள் மேலும் அதிர்ச்சியலைகளுக்கு தயாராகி வருகிறது.

அரசின் பட்ஜெட்டிலிருந்து வெளிநாடுகளுக்கான நிதிச்செலவை குறைக்கும் பொறுப்பு ஈலோன் மஸ்க்கிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஆண்டுகளில் வெளிநாடுகளுக்காக எவ்வளவு தொகை செலவிடப்படும் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

எலன் தேவை இல்லாமல் அமெரிக்காவின், மேற்றுகின் பல்வேறு உளவுத்துறைகளின் எதிர்ப்பை சம்பாதிக்க போகிறார்.

usaid, வெலிஹத்தோற்றம் மட்டுமே உதவி என்பது எலனுக்கு தெரியவில்லை போலும்,

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

 

யுஎஸ்எயிட் வழங்குவது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தையே நாங்கள் ஒவ்வொரு டொலருக்கும் பதிலளிக்கவேண்டும் ஒவ்வொரு டொலரும் எங்கள் தேசிய நலனை அடிப்படையாக கொண்டது என்ற உத்தரவாதத்தை மக்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு டாலரிற்கும் கணக்கு காட்டப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. விரயத்தையும், ஊழலையும் தவிர்க்க அது உதவும். ஆனால், செய்யப்படும் உதவிகள் அமெரிக்க தேசிய நலனுக்கு என்பதை விட, உலகில் உள்ள மிக பலவீனமான மக்களின் நலனுக்கு என்று அமைந்தாலும் அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு காரணமே.

சூடானில் பிள்ளைகளுக்கு மதிய உணவு போன்ற ஒன்று இதன் மூலம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது அது நின்றுவிட்டது. இப்படியானவற்றை நிற்பாட்டுவதாலும், மொத்தமாகவே வருடம் 40 பில்லியன் டாலர்களை அமெரிக்க சேமிப்பதாலும், அமெரிக்கா புதிதாக எங்கே போகப் போகின்றது. உக்ரேனுக்கு கொடுப்பதில் அல்லது இஸ்ரேலிற்கு கொடுப்பதில் ஒரு சிறு பகுதியை குறைத்தாலே இந்த 40 பில்லியன் டாலர்களையும் விட மிக அதிகமாக சேமித்துவிடலாம்.

நான் ஆரம்பப்பாடசாலையில் படிக்கும் நாட்களில், பாடசாலைகளில் பிஸ்கட் கொடுப்பார்கள். அந்தப் பெட்டிகளில் அமெரிக்க தொண்டர் நிறுவனம் ஒன்றின் பெயரே இருந்த ஞாபகம். இதைப் போன்றே வேறு பல உதவிகளும் இவர்களிடமிருந்து அது தேவையான மக்களுக்கு கிடைத்திருக்கும். இவற்றை அமெரிக்கா தொடரவேண்டும்.

உலகில் உள்ள சில நாடுகள் மட்டுமே முழு உலகின் செல்வத்தையும் உடமையாக்கி வைத்துள்ளார்கள். அந்த நாடுகளுக்கு இந்தக் கடப்பாடு நிச்சயம் இருக்கின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் NGO களில் வேலை செய்யும் 1000 பேர்களுக்கு இதனால் வேலை போகப்போவதாக ஒரு செய்தி வந்துள்ளது. என்னோடு படித்த சிலர் இப்பிடியான NGO களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள், அவர்களின் நிலை என்னவோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கிலும் உள்ள  USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு

உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு

February 5, 2025  10:56

2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து USAID ஊழியர்களையும் விடுமுறையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விசேட பணிகளில் ஈடுபடும் ஒரு சில ஊழியர்களை மட்டுமே தொடர்ந்து சேவையில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நபர்கள் யார் என நாளை (06) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையை USAID நிர்வாகம் எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=199751

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

Published By: RAJEEBAN   05 FEB, 2025 | 09:43 AM

image

சர்வதேச அளவில் யுஎஸ்எயிட் அமைப்பு நேரடியாக பணிக்கு அமர்த்திய அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் யுஎஸ்எயிட்டிற்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை மீள அழைக்கப்போவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏழாம் திகதி முதல் யுஎஸ்எயிட் பணிக்கு அமர்த்திய அனைவரும் நிர்வாகவிடுப்பில் வைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு யுஎஸ்எயிட்டின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

நெருக்கடியா சூழலில் செயற்படுவதற்கு அவசியமானவர்கள், முக்கிய தலைவர்கள், சிறப்பாக நியமிக்கப்பட்ட திட்டங்களிற்கு பொறுப்பானவர்களிற்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எயிட்டின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

us__aid.jpg

யுஎஸ்எயிட்டிற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர் இவர்களில் பெருமளவானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

உலகின் 60நாடுகளில் யுஎஸ்எயிட்டின் அலுவலகங்கள் உள்ளன.

வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கர்களிற்கான திட்டமொன்றை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ள இணையதளம், அவர்கள் அமெரிக்காவிற்கு மீள பயணித்தமைக்கான செலவீனங்களை30 நாட்களிற்குள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிர்ச்சி நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு உதவி திட்டங்களிற்கு பொறுப்பான யுஎஸ்எயிட் திங்கட்கிழமை முதல் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது.

யுஎஸ்எயிட்டின் பணியாளர்களிற்கு அலுவலகத்தில் நுழைவதற்கும் கணிணிகளை பயன்படுத்துவதற்குமான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து யுஎஸ்எயிட்டின் சிரேஸ்ட ஊழியர்கள் பலர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.

யுஎஸ்எயிட்டின் இயக்குநர் தானே என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகள் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்ற விதத்தில் அமைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் வரலாற்றுரீதியாக அமெரிக்க காங்கிரஸிற்கும் வெள்ளை மாளிகைக்கும் பதிலளிக்காத ஒன்று என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அது ஒரு அமைப்பாகயிருந்தாலும் அது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்தே உத்தரவுகளை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் யுஎஸ்எயிட் அதனை புறக்கணித்து தொண்டு என்பது அமெரிக்காவின் நலன்களில் இருந்து வேறுபட்டதாகயிருக்கவேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் வழங்குவது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தையே நாங்கள் ஒவ்வொரு டொலருக்கும் பதிலளிக்கவேண்டும் ஒவ்வொரு டொலரும் எங்கள் தேசிய நலனை அடிப்படையாக கொண்டது என்ற உத்தரவாதத்தை மக்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/205823

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட் ஊழியர்களை நீக்கும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்: அமெரிக்க நீதிபதி அதிரடி உத்தரவு

09 FEB, 2025 | 02:04 PM
image
 

யுஎஸ்எயிட்டின்  வெளிநாடுகளில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும்  ஜனாதிபதி டிரம்பின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அந்நாட்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உலக நாடுகளுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற மனிதாபிமான உதவிகளை செய்ய அமெரிக்க அரசு  யுஎஸ்எயிட்அமைப்பை கடந்த 60 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த அமைப்பிற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதி ஒதுக்குகிறது.

அந்த நிதியின் மூலம் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பலன் அடைகின்றன. ஆனால் இந்த நிதி உதவி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தவறான நோக்கங்களுக்கு செலவிடப்படுவதாகவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி நிதி உதவியை நிறுத்தி உள்ளது. மேலும் உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான அரசின் செயல்திறன் குழு யுஎஸ்எய்டை முழுமையாக மூட பரிந்துரைத்தது. அதற்கு  டிரம்ப் ஒப்புதல் வழங்கிய நிலையில் அதற்கான பணிகள் வேகமாக நடக்கின்றன.

அதன் ஒரு கட்டமாக யுஎஸ்எய்டு அமைப்பிற்காக வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிர்வாக விடுப்பு வழங்கப்படுவதாகவும் அவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அமெரிக்கா திரும்ப வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவு அரசு தரப்பில் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து  யுஎஸ்எயிட் ஊழியர்கள் தரப்பில்  வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்ல் நிக்கோலஸ் நிர்வாக விடுப்பு மற்றும் 30 நாள் கெடு உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் யுஎஸ்எயிட் அமைப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்திய டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். இந்த 2 உத்தரவாலும் வெளிநாடுகளில் பணியாற்றும் சுமார் 2200 ஊழியர்களை டிரம்ப் நிர்வாகம் பணிநீக்கம் செய்வது தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

இதே போல மஸ்க்கின் செயல்திறன் குழு அமெரிக்காவின் நிதி விவகாரங்களை கவனிக்கும் கருவூலத் துறையின் முக்கிய ஆவணங்களை அணுகுவதற்கு தற்காலிக தடை விதித்து  நீதிபதி பால் என்ஜெல்மேயர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக வருமான வரி ரீபண்ட்கள் சமூக பாதுகாப்பு பயனாளிகள் முதியோர் நிதி உதவி உள்ளிட்ட கோடிக்கணக்கான கணக்கு வழக்குகள் அரசின் திட்டங்கள் மூலம் பலனடையும் பயனாளிகளின் விவரங்களை மஸ்க் குழு பார்வையிட டிரம்ப் நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்க மஸ்க் தலைமையில் அதிபர் டிரம்ப் குழு அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தங்கி உள்ள சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் பணியில் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளுக்கு உள்ளூர் போலீசாரும் உதவலாம் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் உள்ளூர் காவல் அதிகாரிகள் நேரடியாக சந்தேகிக்கப்படும் நபரை நடுரோட்டில் நிறுத்தி குடியேற்ற ஆவணங்களை சரிபார்த்து கைது செய்ய முடியும். நிறவெறிக்கு எதிரான பிரச்னையை தூண்டியதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நடைமுறையை டிரம்ப் மீண்டும் கொண்டு வந்திருப்பது அமெரிக்காவில் பிரச்னைகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

https://www.virakesari.lk/article/206226

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

அமெரிக்காவில் தங்கி உள்ள சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் பணியில் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளுக்கு உள்ளூர் போலீசாரும் உதவலாம் என்கிற உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் உள்ளூர் காவல் அதிகாரிகள் நேரடியாக சந்தேகிக்கப்படும் நபரை நடுரோட்டில் நிறுத்தி குடியேற்ற ஆவணங்களை சரிபார்த்து கைது செய்ய முடியும். நிறவெறிக்கு எதிரான பிரச்னையை தூண்டியதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நடைமுறையை டிரம்ப் மீண்டும் கொண்டு வந்திருப்பது அமெரிக்காவில் பிரச்னைகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

https://www.virakesari.lk/article/206226

இது சரியான தகவல் அல்ல. 

ட்ரம்ப் பொலிசாரும் ஒருவரின் குடிவரவு நிலையை கேள்வி கேக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அமெரிக்காவின் மிகப் பெரும்பாலான நகர , மாநில காவல் துறையினர் ஒருவரின் குடிவரவு நிலையை (immigration status) கேள்வி கேட்க அதிகாரமில்லை. அப்படிக் காவல் துறை குடிவரவு நிலையைக் கேட்டாலும், தடுத்து வைக்கப் படுபவர் சொல்ல வேண்டிய கடமை இல்லை. இதை "right to remain silent" என்பார்கள்.

இந்த சட்டப் பாதுகாப்பு அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டு வெவ்வேறு திருத்தங்களில் (5th and 14th amendments) உள்ளடக்கப் பட்டிருக்கிறது. அமெரிக்காவினுள் - சட்ட ரீதியாகவோ, சட்ட விரோதமாகவோ- வசிக்கும் அனைவருக்கும் இந்த அரசியலைப்பு விதிகள் பொருந்தும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சில தடவைகள் உறுதி செய்திருக்கின்றன.

எனவே, நகரகாவல் துறை, மாநில காவல்துறை குடிவரவு நிலையைக் கேள்வி கேட்கும் போது பதில் சொல்ல வேண்டிய கடமை இல்லை.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.