Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

large.goldsmith200CE.jpg

போந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள்

கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்

பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர்

ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு

ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி

- நீர்ப்படைக் காதை 130

ஞாயிற்றுக்கிழமை.

நெருப்பு எரிந்து முடிந்தாலும் பூமியும் பாதாளமும் கனன்று கொண்டிருந்த மதுரையில்,

சுருங்கியிருந்த வைகையின் சலசலப்பு, முணுமுணுப்பாக மாறிப் புகையில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.

கண்ணகியின் கோபம், புயல் போல், பாண்டிய அரசுகட்டிலைக் கரியாக மாற்றியது.

ஆனால் நெருப்பாறு கூடப் பாண்டிய மன்னர்களின் பாவங்களைக் கழுவ முடியவில்லை.

திரும்பும் இடமெங்கும் வறட்சியும் ஏக்கமும்.

பஞ்சம் நகருக்குள் எட்டிப்பார்க்கத் துவங்கி, இப்போது குசலம் விசாரிக்கும் அளவுக்கு வந்து விட்டது .

வான் பொய்த்து, வைகை ஆற்றின் நீரும் பொய்த்தது.

நெடுஞ்செழியன் செத்துப்போன போது அவன் குற்ற உணர்வுடன் இறந்தான் என்று சொன்னார்கள்.

அவன் இதயம் அழுகிய பழம் போல் வெடித்தது.

கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் அடுத்த அரசனானான்.

ஆனால் மக்கள் அவனைப் பொம்மை அரசன் என அழைத்தார்கள்.

பழைய பயங்களால் பீடிக்கப்பட்ட வெற்று மனிதன்.

பாண்டிய சிம்மாசனத்தின் வெம்மை அவனைத் தகித்தது, அல்லும் பகலும் ஊணுறக்கமின்றித் தவித்தான்.

பூசாரிகள் குறி சொல்லினர்.

தெய்வங்கள் இன்னும் கேட்கின்றன,

"மதுரையின் அவமானத்தைக் கழுவ ஆயிரம் பொற்கொல்லர்களின் இரத்தம் தேவை".

"மதுரையில் ஏது ஆயிரம் பொற்கொல்லர்?" கேட்டான் அரசன் "சில நூறு குடும்பங்கள் தானே உள்ளன?"

"ஆயிரவர் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் அரசே" கூறினர் அணுக்கர்.

இரவோடிரவாக இரகசியம் யாருக்கும் தெரியாமல் நீருக்குள் பரவும் வேர்கள் போல் ஊருக்குள் பரவியது.

பொற்கொல்லர் தெருவுக்கு அச்சங்கதி வர அதை எவராலும் நம்ப முடியவில்லை.

வீட்டுக்குள் புகுந்து விட்ட விஷப் பாம்பு போல அச்செய்தி எல்லோரையும் வெடவெடக்கச் செய்தது.

தெருவிலிருந்து யாரும் வெளியேற முடியாதபடி சிப்பாய்கள் சுற்றி வளைத்து விட்டதாகத் தெரிய வந்த போது எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.

பக்கத்திலிருக்கும் சங்கு வினைஞர்களின் தெருவும் வெண்கல வினைஞர்களின் தெருவும் கூட முற்றுகையிடப்பட்டுள்ளதாம்.

நாங்கள் ஏற்கனவே ஒரு செத்த நகரத்தில் பேய்களாக இருந்தோம். இப்போது, பலியாகப் போகிறோம்.

அம்மா தன் வெண்கல விளக்கின் கீழ் தூணைக் கெட்டியாக பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள்,

அதன் சன்னமான ஒளி அவள் ஒடுங்கிய கன்னங்களில் நிழல்களைச் செதுக்கியது.

அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் வைரங்களாக மாறி என் நெஞ்சைக் கிழித்தன.

"ஒரு பொற்கொல்லனின் கூற்றால் நெடுஞ்செழியன் கண்ணகிக்கு தவறு செய்தான்," அவள் கூறினாள்,

"ஆனால் நாம் அவன் குற்றத்திற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டுமா? தெய்வத்தின் நியாயம் எங்கே?"

நியாயம் நிரபராதிகளுக்கு முன்னமே செத்துவிடுகிறது.

திங்கட்கிழமை

விடியல் வந்ததும் வெற்றிவேற் செழியனின் சிப்பாய்கள் வெறிகொண்டு வந்தனர்.

துணியால் முகங்களை மூடியவர்கள்.

முகங்களின் சுயத்தை மறைப்பதற்கோ இல்லை புகையைத் தடுப்பதற்கோ தெரியவில்லை.

எங்கள் வீதி, ஒரு காலத்தில் உருக்கிய தங்கத்தின் நறுமணம், இப்போது விரக்தியின் துர்நாற்றம்.

அவர்கள் பாதி எரிந்த வீடுகளில் இருந்து குடும்பங்களை வெளியே இழுத்தனர்.

வளையல்கள் விற்ற விதவை, பத்தினிக்குப் பாடல் பாடிய குருட்டுக் கிழவன்,

பால் மணம் மாறாத பிஞ்சுகளைக் கூட விட்டு வைக்கவில்லை....

வீதியெங்கும் அழுகுரல் உயிருக்குத் தத்தளிக்கும் விலங்குகளின் ஓலமாக ஈரற்குலையை அந்தரிக்க வைத்தது.

எம் வாசலில் சிப்பாய்களின் அரவம் கேட்டது. படலையை உதைத்து உடைத்து விழுத்தினர்.

அப்பா கைகள் நடுங்க, என்னை நிலவறைக்குள் மறைத்தார்.

"மௌனமாய் இரு, மகனே," அவர் கிசுகிசுத்தார். "புதிய அரசன் தனக்கு கட்டுப்படாதவற்றைப் பயப்படுகிறான்."

அப்பா போராடவில்லை. அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டு, என்னை நோக்கி கரகரத்த குரலில்.

"நீ என் மகன். எமது வம்சத்தின் நெருப்பாக நீ இருக்க வேண்டும்" என்று கூறிவிட்டு வெளிநடந்தார்.

அவருடனேயே அம்மாவும் நடந்தாள். அவள் கூறுவதற்கு எதுவும் இருக்கவில்லை.

அவர்கள் சென்ற பிறகு சிப்பாய்கள் தடதடவென உட்புகுந்து வேறு யாரும் இருக்கிறார்களா என்று தேடும் சத்தம் கேட்ட போது நான் இரகசியமாக ஊர்ந்து வெளியேறினேன்.

உறுதி செய்வதற்காக சிப்பாய்கள் அனைத்து வீடுகளுக்கும் தீ மூட்டினர்.

வேறு யாரும் ஒளித்திருந்தாலும் தப்பியிருக்க முடியாது என்று தெரிந்தது.

கோவில் முன்றில் கருகிய தூண்களின் சுடுகாடு.

பூசாரிகள் பத்தினியின் உருவச்சிலைக்கு கடும் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரித்து, மன்னனுக்கு சைகை காட்டினர்.

நான் ஒருவாறாக ஒளித்திருந்து அனைத்தையும் பார்த்தேன்.

வெற்றிவேற் செழியன் தன் உயிரற்ற குரல் நடுங்க, உத்தரவை வாசித்தான்.

"குற்றவாளிகளின் இரத்தத்தால், மதுரை மீண்டும் எழும்!"

ஆனால் நாங்கள் குற்றவாளிகள் அல்ல.

அம்மா பேய் பிடித்தவள் போல் சிரித்தாள். செழியன் தன் தலையை நிமிர்த்தி அவளைக் கோபத்துடன் பார்த்தான்.

அவள் குரலை உயர்த்தி "ஒரு பெண்ணின் கோபத்தைப் பார்த்துப் பயப்படுகிறாய், அதனால் எங்களைப் பலியிடுகிறாயா?

கண்ணகியின் தீ நியாயம்! இது… இது கோழைத்தனம்!" என்று கூவினாள்.

"ஒரு பத்தினியின் சாபம் மதுரையை எரித்தது, இங்கிருக்கும் பத்தினிகள் சாபம் யாரை எரிக்கும் என்று யோசித்தாயா?"

சிப்பாய்கள் முதலில் அவள் மீது பாய்ந்தனர்.

அம்மாவின் குங்குமத்தைக் கரைத்துக் கொண்டு இரத்தம் அலை அலையாய் வழிந்தது, அப்பா அவளைக் காக்கப் பாய்ந்தார்.

எல்லாமே நேரம் கடந்து போனது போல் உலகமே விக்கித்து நின்றது.

பல நூறு வாட்கள் கொலை வெறி கொண்ட மிருகத்தின் பற்கள் போல மேலும் கீழும் பாய்ந்தன.

கருஞ்சிவப்பு இரத்தம் குளமாகி கற்களின் வெடிப்புகளில் வடிந்து தேங்கியது.

சிறு பெண்டிரின் கூச்சல் காற்றைக் கிழித்தது.

பின்னர் மரண அமைதி.

காகங்கள் வந்தபோது, நான் பிணங்களுக்கூடாக ஊர்ந்தேன், என் கைகள் பிணங்களின் உள்ளுறுப்புகளில் வழுக்கின.

அப்பாவின் உடலின் கீழ், அவரது சுத்தியல் கிடைத்தது, கைப்பிடி இரத்தக் கறைபடிந்து கிடந்தது.

அதைக் கெட்டியாகப் பிடித்தபடி, எரிந்த நகரத்திலிருந்து தப்பினேன்.

கொலை சாதனை செய்த பாண்டியனும் புலவர் பலர் புகழ் பாட அரியணை ஏறினான்.

பலி நாளன்று அவன் கண்களில் ஏறிய இருளை அவனால் அகற்ற முடியவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரைக்கு இரகசியங்கள் நிறைந்த கொல்லனாகத் திரும்பினேன்.

நான் பணக்காரருக்கு நகைகள் செய்வதில்லை, அரச குடும்பங்களுக்குப் பதக்கங்கள் செய்வதில்லை.

மாறாக, சிறு குழந்தைகளின் காவல் நகைகளை, ஏழைகளின் தாலிகளை, மறக்கப்பட்டவர்களுக்கான தாயத்துகளை.

ஒவ்வொரு வேலையிலும் இறந்த காலத்தின் ஒரு துணுக்கை மறைக்கிறேன்.

ஒரு எரிந்த ஓலை, ஒரு எலும்புத் துண்டு, அம்மாவின் பாடலின் ஒரு சத்தம்.

கிராமத்தாருக்கு என் பெயர் தெரியாது.

ஆனால் தாய்மார்கள் இரவில் குழந்தைகளைத் தூங்க வைக்கும் போது,

வெற்றிவேற் செழியனின் கொலைத்தாண்டவத்திலிருந்து தப்பிய ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறார்கள்.

ஆயிரம் ஆன்மாக்களின் கடைசித் தீப்பொறியை தன் உலையில் வளர்க்கிறான் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, villavan said:

பழைய பயங்களால் பீடிக்கப்பட்ட வெற்று மனிதன்.

❤️...............

இது என்ன ஒரு எழுத்து, வில்லவன்...................👏. நீங்கள் முன்னர் எழுதிய சில குறிப்புகளிலிருந்து நீங்கள் மிகவும் அனுபவம் மிக்கவர் என்று நான் நினைத்திருந்தேன்.........👍.

வாசிக்கும் போதே கிறுகிறுவென்று தலை போனது. தொடர்ந்து இன்னும் அதிகமாக எழுதுங்கள்.....❤️.

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி @ரசோதரன் அண்ணை. என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகி மன்னனை மட்டும் எரித்திருக்கலாம்..!

அது நியாயம்

ஏன் மதுரையை எரித்தாள்?

மதுரை என்ன தவறு செய்தது?

அனுமனும் தேவையில்லாமல் தான் இலங்கையை எரித்தான்…!

அழகிய எழுத்து நடை உங்கள் வித்தை..।

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான கேள்விகள் புங்கையூரன்,

இணைச் சேதம் (Collateral damage) ஒருபுறமும் திட்டமிட்ட பலியெடுப்புகள் மறுபுறமும் அப்பாவிகளைத் தானே குறிவைக்கின்றன.

இரண்டுமே மனிதாபிமானத்தை நசுக்கும் வேலைகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னரான ஒரு கதையை வசனகவிதை சுட்டி நிற்கின்றது . ....... எங்கும் சகல அதிகாரங்களுமிக்க வல்லவர்கள் என்ன வேண்டுமாயினும் செய்யலாம் , செய்யமுடியும் ......... அன்று மட்டுமல்ல அவை இன்றும் தொடர்கின்றன . .........! 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் @suvy அண்ணை, இதுவும் ஒரு கதை தான்.

ஆனால் நான் சொல்ல வந்த நோக்கம் பிறிதொன்று.

ஒரு கண்ணகியின் கதையைக் காப்பியமாய் வடித்த இளங்கோவடிகள் ஆயிரம் பேரை நரபலி கொடுத்த சம்பவத்தை ஓரடியில் கடந்து போனதை, இன்னொரு கோணத்தில் வரலாற்றில் மறைக்கப்பட்டவர்களின் குரலாய்ச் சொல்ல முயன்றிருக்கிறேன்.

மற்றபடி இது வசனகவிதையா கதையா உரைநடையா என்பதை வாசிப்பவர் பார்வைக்கே விட்டு விடுகிறேன் 😁.

நன்றி 🙏.

  • 1 month later...

அருமை !

இவ்வாறான பல சம்பவங்கள் வரலாற்றில் புலவர்களின் பக்கச்சார்பான பாடல்களால் மறைக்கப்பட்டுள்ளது. புலவர் இலகுவாகக் கடந்து போன சம்பவத்தை ஆழமாகக் கற்பனை செய்து உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.