Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பம்மாத்து

(Pretensions)

- சுப.சோமசுந்தரம்

               உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை. இவற்றில் நன்மை விளையும் பம்மாத்தும் உண்டு - பொய்மையும் வாய்மையிடத்த என்பது போல. யானறிந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவித்த ஒரு தலைசிறந்த பம்மாத்து, நான் பெரிதும் போற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் திருமூலரை எடுத்தாண்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பறைசாற்றியது. சமூகத்திற்காகப் போராடுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட திராவிடர் கழகத்தில் இயங்கிய அண்ணாவும் அவர்தம் தம்பிமார் சிலரும், மக்களுக்கான திட்டங்களை இயற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே கைகூடும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்துக் களம் கண்டனர். மக்களிடம் தேர்தல் வாக்குக்காக கையேந்தும்போது சமரசம் எனும் தீமைக்குள் வந்துதானே ஆக வேண்டும் ? கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். அவ்வாறு பம்முகிற ஒவ்வொரு தருணத்திலும், "ஆனால் எனக்குத் தெரியும் அந்த ஒரு தேவனும் கிடையாது" என்று அண்ணா தமக்குள் முணுமுணுத்திருப்பார் என்பதை அண்ணாவை அறிந்தவர் அறிவர். அந்தப் பம்மாத்தில் மக்களுக்கு நன்மைகள் விளைந்தன என்பதை அறிவார்ந்தோர் அறிவர்.

               பெரியார் மற்றும் பெரும்பாலான திராவிட கழகத்தினரைத் தவிர்த்து ஏனைய திராவிட இயக்கங்களிலும், இடதுசாரி இயக்கங்களிலும் நமக்குத் தெரிந்த ஒரு பிம்மாத்து உண்டு; அதாவது, நமக்குப் பம்மாத்தாகத் தோன்றுகிற ஒன்று உண்டு. அது "நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோமே தவிர பார்ப்பனர்களை அல்ல" என்பதுவேயாம். பார்ப்பனியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை எதிர்க்கும் பார்ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கலாம். விதிவிலக்குகள் விதி யாது என்பதைச் சொல்பவைதாமே ! அவ்விதிவிலக்குகள் பார்ப்பனியத்தை உதறியவர்கள்; எனவே அவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ?முடிவு செய்துவிட்டு நியாயங்களைத் தேடிக் கற்பிதம் செய்ய அறிவு ஜீவிகளுக்குச் சொல்லியா தர வேண்டும் ? பெரியார் வேறு எந்த சாதிக்காரர்களையும் விமர்சிக்கவில்லையே !

              மேற்கூறியது போலவே திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள், "நாங்கள் இந்திய எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம்" என்பதுவும். நீங்கள் வேறு எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் ராஜஸ்தானி, போஜ்புரி, மைதிலி, அவந்தி என்று எத்தனையோ மொழிகளைத் தின்று செரித்து விட்டு, அடுத்து மராத்தி, ஒரியா, பெங்காலி என்று காவு கொள்ளத் துடிக்கும் இந்தியை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும் ?

            நமது பம்மாத்து ஜோடிகளில் அடுத்து வருபவை காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும். தமிழ்நாட்டில் (தமிழகத்தில் என்று நம்மைப் பேச விடாமல், எழுத விடாமல் செய்த ஒரு கிராதகனை என்னவென்று சொல்வது !) இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்த அறுபதுகளில் ஒன்றிய அரசான காங்கிரஸ் பணிந்தது. "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் திகழும்" என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவாதம் அளித்ததன் பேரிலேயே போராட்டத் தீ அணைந்தது. இடதுசாரிகள் தங்களது அகில இந்திய மாநாடுகளில் மொழி பற்றிய விவாதங்களில், 'தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழி, மற்றபடி இந்தியே இணைப்பு மொழி' என்ற நிலைப்பாடு கொள்வது வழக்கம். "மக்கள் விரும்பும் வரை" என்பதன் பொருள் "நாங்கள் விரும்பவில்லை; என்றாவது ஒரு நாள் நீங்கள் ஏற்பீர்கள். அதுவரை நாங்கள் அடக்கி வாசிப்போம்" என்பதே !. இது ஒரு சூளுரை அல்லது கெக்கலிப்பு. தேசியம் எனும் நீரோடையில் கரைந்து போன கட்சிகளுக்கு இந்தப் பிரச்சினை எப்போதும் உண்டு. அந்நீரோடையில் மூழ்காமல் நீந்தக் கற்றுக் கொண்ட எங்களுக்கு என்ன பிரச்சினை ? காங்கிரஸ் தேசியத்தில் கரைந்தது என்றால், இடதுசாரிகள் ஒரு படி மேலே போய் உலகவியத்தில் கரைந்தவர்கள். நேற்றைய சோவியத் யூனியனில் பெரும்பான்மையின ரஷ்ய மொழியின் தாக்குதலினால் பல சிறுபான்மையின மொழிகள் தொலைந்து போனதை லாவகமாகக் கடந்து வந்தவர்கள் ஆயிற்றே ! அது நமக்குத் தான் ரணம்; வர்க்கப் போராட்டத்தில் அவர்களுக்கு அதெல்லாம் சாதா'ரணம்' தோழர்  !தமிழ்நாட்டில் அன்றைக்குப் போராடிய மக்களிடம் காங்கிரசின் சமரசம் என்பது "உங்களுக்கு இனி இந்தி கிடையாது" என்பதாகத்தானே இருக்க முடியும் ? "நீ செத்த பின்பு பார்த்துக் கொள்கிறேன்" என்பது சமரசமா ? மும்மொழித் திட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதானே இடதுசாரிகளின் மண்ணுக்கேற்ற மார்க்சியமாய் அமையும் ? அப்படி விலக்கு அளிக்கப்பட்டாலும் மதவாத , பாசிச பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அடாவடித்தனமாய் ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதைப் போல பின்னர் வரும் அரசுகள் நடந்து கொள்ளா என்பதற்கு உத்திரவாதம் இல்லைதான். ஆனால் சொல்லும்போதே 'தற்காலிகமாக' என்று பொருள்படச் சொல்வது ஒரு பம்மாத்து வேலை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராகத்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று பொருள்.

               இப்போது ஒன்றியத்தில் உள்ள பாசிச பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டத்தை முன்வைத்து விட்டு, "மும்மொழித் திட்டம் என்றுதானே சொன்னோம் ? இந்தி படி என்று எங்கே சொன்னோம் ?" என்று சொல்வதுதான் உலக மகா பம்மாத்து. ஒரு திரைப்படத்தில் வருவது போல, "நீ எப்படியெல்லாம் டைப் டைப்பா முழியை மாத்துவே !" என்று எங்களுக்குத் தெரியாதா ? நான் கேரளாவில் வேலை கிடைத்துச் சென்றால், தேவை அடிப்படையில் அப்போது மலையாளம் தெரிந்து கொள்வேன். அதுவரை நான் என் மொழியையும், வெளியுலக இணைப்பு மற்றும் கணினி பயன்பாட்டிற்காக நமது அடிமை வரலாறு நமக்களித்த வரமான ஆங்கிலத்தையும் படிப்பேன். நீ உன் மொழியையும் ஆங்கிலத்தையும் படி. அப்போது மொழியில் கூட சமநீதி, சமூக நீதி எல்லாம் உருவாகுமே !

            எனவே உலகீரே ! மக்கள் நலனுக்காக பம்மாத்து அரசியல் செய்ய வேண்டுமென்றால், அறிஞர் அண்ணா போன்றோரிடம் படித்துவிட்டு வாருங்கள். அப்புறம் பேசுவோம்.

பின் குறிப்பு : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்",  "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பவற்றிற்கு மாற்றுச் சிந்தனையை  ச.தமிழ்ச்செல்வன், தொ.பரமசிவன் ஆகியோரிடம் வாசித்த நினைவு. பழம் பாடல்களின் அவ்வரிகள் இன்று தமிழனின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை அவர்கள் மறுதலிக்கவில்லை. எனினும் அவர்கள் மாற்றுச் சிந்தனையைப் பதிவிடாமலும் விடவில்லை. அந்த அடிப்படையில் அக்காலச் சமூக, அரசியல் சூழல் கருதி மக்கள் நலனுக்காக திருமூலர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரின் பம்மாத்தாக அவ்வரிகளைப் பார்க்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்பார்வை நம் கற்பனையாகவே இருக்கலாம். பல நேரங்களில் கற்பனையும் ரசனைக்குரியதுதானே !

           பேரரசுகள் மருத நிலங்களைச் சுற்றியே தோன்றியிருக்கும். நிலவுடமைச் சமூகங்களும் அங்கேதான் உருவாகி அமைந்திருக்க முடியும். அவர்களுக்கான உழைக்கும் வர்க்கத்தினர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தே வந்திருப்பர் அல்லது கொண்டு வரப்பட்டிருப்பர். தன் நிலத்தில் தன் சாமியை விட்டு வந்திருப்பவன் கொண்ட ஏக்கம் தீர, "இங்குள்ள சாமியும் உன் சாமிதானய்யா" என்று அவனை ஆற்றுப்படுத்துவதே "ஒன்றே குலம் ஒருவனே தேவ"னாய் முகிழ்த்திருக்கலாம். அன்றைய தேவைக்கேற்ப, பன்முகத்தன்மையை உடைத்து ஓர்மையை உருவாக்கும் பம்மாத்தாக (அன்றைய பாசிசம் எனக் கொள்ளலாமா ?") இதனைப் பார்க்கலாமோ ! மேலும் அவனது நிலத்தில் சாமியின் அருகிலிருந்து பிடி மண் எடுத்து வந்து அவன் புலம்பெயர்ந்த இடத்தில் அதே சாமியை உருவாக்கும் வழக்கம் அப்போது உருவாகியிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் வந்த இடத்துடன் அவன் மனம் ஒன்றியிருக்கச் செய்ய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" !

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

சுப. சோமசுந்தரம் அவர்களே.. நல்லதொரு பம்மாத்து கட்டுரைக்கு நன்றி. 😁

  • கருத்துக்கள உறவுகள்

பம்மாத்து என்ற சொல்லை இலங்கைத் தமிழர்தான் பாவிப்பார்கள் என நினைத்திருந்தேன். தமிழகத் தமிழரும் அந்தக் சொல்லை பாவிப்பதை உங்கள் மூலம்தான் கேள்விப்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பம்மாத்து இப்போதும் தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சுப.சோமசுந்தரம் ஐயா... உங்கள் கட்டுரையை, "யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பதிந்தால் நன்றாக இருக்குமே. உங்களுக்கு விருப்பம் என்றால்... நிர்வாகத்திடம் சொல்லி அங்கு நகர்த்தி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை ....... அரசியல் என்றாலே பம்மாத்துதான் .......... தந்திரமாக "சாணக்கியம் " என்றும் பூசி மொழுகுவார்கள் ......... ஏமாத்துறதுக்கு "இங்குள்ள சாமியும் உன் சாமிதான் " என்னும் வசனமும் சரியாகவே வந்திருக்கு . .........! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுப.சோமசுந்தரம் ஐயா... உங்கள் கட்டுரையை, "யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பதிந்தால் நன்றாக இருக்குமே. உங்களுக்கு விருப்பம் என்றால்... நிர்வாகத்திடம் சொல்லி அங்கு நகர்த்தி விடுங்கள்.

நன்றி தமிழ் சிறி அவர்களே ! நான் நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்ய Messages ல் சென்று பார்த்தேன். அதனை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரம் தெரிவிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

நன்றி தமிழ் சிறி அவர்களே ! நான் நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்ய Messages ல் சென்று பார்த்தேன். அதனை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரம் தெரிவிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் பதிந்த பதிவின் வலது பக்க மேல் மூலையில்...

மூன்று புள்ளிகள் (...) அடைப்புக் குறிக்குள் காட்டியவாறு தெரியும்.

அதனை நீங்கள் கிளிக் பண்ண.... Report என்று ஒரு தெரிவு வரும்.

அதில் நீங்கள்... உங்களது விருப்பத்தை எழுதி, பதிவு செய்து...

கீழே Submit Report என்ற பெட்டியை, கிளிக் பண்ண...

அது நேரடியாக நிர்வாகத்தின் கவனத்திற்கு செல்லும்.

அவர்கள் அதனை பார்த்தவுடனே... மாற்றி விடுவார்கள்.

மேலதிக உதவி வேண்டுமென்றால் தாராளமாக கேளுங்கள் ஐயா.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனிடமே நீங்கள் தெரிவிக்கலாம் .......!

  • கருத்துக்கள உறவுகள்

பிற் குறிப்பு: Messages ற்குப் போகாமல், நீங்கள் இந்தத் திரியிலேயே

இலகுவாக மாற்றும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

நன்றி தமிழ் சிறி அவர்களே ! நான் நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்ய Messages ல் சென்று பார்த்தேன். அதனை யாருக்கு அனுப்ப வேண்டும் என்ற விவரம் தெரிவிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களே.... உங்கள் பதிவு தற்போது,

"யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்தப் பட்டுள்ளது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். ]

அண்ணாவை பற்றி பலர் நன்றாக சொல்லி அவர் பற்றி படித்த போது அவர் இல்லாத ஒருவரை ஒருவனே தேவன் என்று சொன்னது உறுத்தலாக இருந்தது உங்கள் மூலம் விளக்கம் கிடைத்தது

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2025 at 07:48, சுப.சோமசுந்தரம் said:

உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை.

🤣................

இதை வாசித்த பின் எல்லாமே பம்மாத்துகளாகவே தெரிகின்றது.............. நானே ஒரு பம்மாத்து போலவும் தோன்றுகின்றது..................🤣.

தலைவர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், இலக்கியவாதிகள்,...................... இப்படி பம்மாத்து விட்டுக் கொண்டிருக்கும் வரிசை மிக நீண்டது. நீங்கள் சொல்லியிருப்பது போலவே மக்களிடம் சில சந்தர்ப்பங்களில் இவர்கள் கையேந்தி நிற்க வேண்டியிருப்பதால், உண்மைகளை பூசி மெழுகி பம்மாத்துக் காட்டுகின்றார்கள்.

ஆனால் எலான் மஸ்க் இன்று இங்கு காட்டிக் கொண்டிருக்கும் பம்மாத்தும், அதற்கு மக்கள் அவருக்கு காட்டிக் கொண்டிருக்கும் எதிர் விளைவுகளும் புதியதொன்றாக வரலாற்றில் நிற்கப் போகின்றது........ பெரியார் போன்ற வெகு சிலரை விட, மற்ற எல்லோருக்கும் மக்கள் ஆதரவு தேவை என்பதை மஸ்க் மறந்து போனார்............🤣.

சமீபத்தில் நடந்த பம்மாத்துகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில மக்களை விஜய் அவரின் பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து நிவாரணம் வழங்கியது உச்சமான ஒன்று. விஜய் சொன்ன காரணம்: நான் அங்கு வந்தால் உங்களுடன் உட்கார்ந்து ஆறுதலாக பேசமுடியாது. நீங்கள் இங்கு வந்ததால், நாங்கள் மிகவும் சாவகசமாகப் பேசலாம்...............🫣.

அண்ணாமலையின் சவுக்கடி இன்னொரு சிரிப்பு பம்மாத்து..................

ஈழத்திலும் பம்மாத்துக்கு குறைவில்லை. அர்ச்சுனா தினமும் பம்மாத்துக் காட்டுவார். சுமந்திரன், சிறிதரன், அவர்களின் ஆதரவாளர்கள் என்று பம்மாத்துக்கு எந்தக் குறைவும் இல்லை.............. என்ன, இவர்கள் வெறும் பம்மாத்துகள் என்று மக்களுக்கு தெரிந்து விட்டது தான் இந்தப் பம்மாத்துகளுக்கும், அண்ணா போன்றோரின் மக்கள் நலன் நோக்கிய பம்மாத்துகளுக்கும் இருக்கும் வித்தியாசம்...............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

ஈழத்திலும் பம்மாத்துக்கு குறைவில்லை. அர்ச்சுனா தினமும் பம்மாத்துக் காட்டுவார்.

அண்ணா பல கடவுள்கள் வைத்திருந்து துன்பபடுகின்ற மக்களுக்காக நல்ல நோக்கில் ஒருவனே தேவன் என்று பத்துமாத்து பண்ணினார். ஆனால் ஈழத்தில் அர்ச்சுனா தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை கருத்துக்களை இலங்கை பாராளுமன்றத்தில் அள்ளி வீசியதால் அவரது பாராளுமன்ற பேச்சுகளுக்கு தடை வந்தது, அந்த தடையை எதிர்த்து சிறிதரன் பேசியது கேவலமான சுத்துமாத்து

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணா பல கடவுள்கள் வைத்திருந்து துன்பபடுகின்ற மக்களுக்காக நல்ல நோக்கில் ஒருவனே தேவன் என்று பத்துமாத்து பண்ணினார். ஆனால் ஈழத்தில் அர்ச்சுனா தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை கருத்துக்களை இலங்கை பாராளுமன்றத்தில் அள்ளி வீசியதால் அவரது பாராளுமன்ற பேச்சுகளுக்கு தடை வந்தது, அந்த தடையை எதிர்த்து சிறிதரன் பேசியது கேவலமான சுத்துமாத்து

'எல்லோர் சார்பிலும் நான் மன்னிப்புக் கேட்கின்றேன்..............' என்பது இந்த உலகில் இருக்கும் பெரிய பம்மாத்துகளில் ஒன்று................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2025 at 16:25, தமிழ் சிறி said:

பம்மாத்து என்ற சொல்லை இலங்கைத் தமிழர்தான் பாவிப்பார்கள் என நினைத்திருந்தேன். தமிழகத் தமிழரும் அந்தக் சொல்லை பாவிப்பதை உங்கள் மூலம்தான் கேள்விப்படுகின்றேன்.

‘பம்மாத்து’ என்பதே எங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து கிடைத்ததுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

‘பம்மாத்து’ என்பதே எங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து கிடைத்ததுதான்

உங்கள் அங்கதம் (Sarcasm) அருமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.