Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏஆர் ரஹ்மான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 57 நிமிடங்களுக்கு முன்னர்

'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் தொடந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கில் என்ன நடந்தது? காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்வது ஏன்?

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

'சிவ ஸ்துதி' - 'வீரா ராஜ வீர' சர்ச்சை

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் 'வீரா ராஜ வீர' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

இந்தப் பாடல் தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட 'சிவ ஸ்துதி' என்ற பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டுள்ளதாக, தனது மனுவில் வசிஃபுதின் கூறியிருந்தார்.

தனது தந்தை மற்றும் மாமா ஆகியோர் 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தீர்வு மூலம் தனக்கு காப்புரிமை (Copy right) வழங்கப்பட்டதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

'வீரா ராஜ வீர' பாடல் ஒலிப்பதிவில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் (credit) கொடுக்கப்படவில்லை எனவும் வசிஃபுதின் தெரிவித்திருந்தார்.

ஆகவே, 'பொன்னியின் செல்வன் 2' படத்தைத் தயாரித்த மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ஏ .ஆர்.ரஹ்மான் சொன்னது என்ன?

ஏஆர் ரஹ்மான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், வழக்கு விசாரணையின்போது மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு மறுத்துள்ளது.

'சிவ ஸ்துதி' என்பது துருபத் வகையைச் சேர்ந்த பாரம்பரிய இசை எனவும் 'வீரா ராஜா வீர' பாடல், இந்துஸ்தானி மரபுகளைத் தாண்டி மேற்கத்திய இசையின் அடிப்படைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது.

'பொதுத் தளத்தில் உள்ள கிளாசிக்கல் படைப்புகள் மீது எந்த பிரத்யேக உரிமையையும் யாரும் கொண்டாட முடியாது' எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 25) டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் தீர்ப்பளித்தார்.

117 பக்க தீர்ப்பு - நீதிபதி கூறியது என்ன?

117 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 'வீரா ராஜா வீர' பாடல், சில மாற்றங்களுடன் 'சிவ ஸ்துதி' பாடலின் இசையை அடிப்படையாக கொண்டும் ஈர்க்கப்பட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

'இந்துஸ்தானி இசை மரபுகளை அடிப்படையாகக் கொண்ட இசையமைப்புகள், அதன் அசல் (Original) தன்மையை வெளிப்படுத்தினால் காப்புரிமை சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்' என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

'ராகம், தாளம் போன்ற அடிப்படை விஷயங்கள் பொதுத்தளத்தில் இருந்தாலும் பாரம்பரிய கட்டமைப்புகளைப் பயன்படுத்தி தனித்துவமான இசைப் படைப்புகளை உருவாக்கும் இசையமைப்பாளர்கள், காப்புரிமை சட்டம் 1957ன்கீழ் உரிமை உடையவர்கள்' என நீதிபதி பிரதீபா எம் சிங் கூறியுள்ளார்.

"அனைத்து பாரம்பரிய இசை அமைப்புகளும் ச,ரி,க,ம,ப,த,நி என எட்டு ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டவை" எனக் கூறியுள்ள நீதிபதி, "அனைத்து ஆங்கில படைப்புகளும் A to Z எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை" எனக் கூறியுள்ளார்.

"இலக்கணத்துக்கு (grammar) எழுத்தாளர்கள் யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. ஆனால், தங்களின் படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகின்றனர். அதுபோலவே ராகமும் பரிந்துரைக்கப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை" என நீதிபதி குறிப்பிட்டார்.

"இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன"

டெல்லி உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி உயர் நீதிமன்றம்

தவிர, 'வீரா ராஜா வீர' பாடலின் மையக் கரு என்பது வெறுமனே ஈர்க்கப்பட்டதல்ல எனக் கூறியுள்ள நீதிபதி, "அந்தப் பாடலைக் கேட்பவரின் பார்வையில் சிவ ஸ்துதியின் ஸ்வரங்கள் மற்றும் செவியில் தாக்கம் ஆகியவை உண்மையில் ஒரே மாதிரியாக உள்ளன" எனக் கூறியுள்ளார்.

அந்தவகையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பு மனுதாரரின் உரிமைகளை மீறுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களில் இந்தப் பாடலுக்குள்ள கிரடிட் ஸ்லைடை (Credit slide) மாற்ற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதாவது, 'மறைந்த உஸ்தாத் நசீர், ஃபயாசுதீன் தாகர் மற்றும் ஜாஹிருதீன் தாகர் ஆகியோரின் சிவ ஸ்துதியை அடிப்படையாக கொண்ட இசையமைப்பு என மாற்ற வேண்டும்' என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி ரூபாயை டெபாசிட் செலுத்துமாறும் இந்த தொகை வழக்கின் விசாரணை முடிவுகளுக்கு உட்பட்டது எனவும் மனுதாரருக்கு செலவாக 2 லட்ச ரூபாயை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

"தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா வழக்குத் தொடர்ந்த பிறகே இதுபோன்ற விஷயங்கள் வெளியில் வருகின்றன" எனக் கூறுகிறார், சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "காப்புரிமை தொடர்பான விவகாரங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் கெடுபிடி காட்டுவதற்கு வாய்ப்பில்லை. அவர், பணத்தைக் கொடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்கிறார்.

காப்புரிமை சர்ச்சைகள்

இளையராஜா

பட மூலாதாரம்,ILAIYARAAJA/FACEBOOK

கடந்த 10 ஆண்டுகளாகவே தனது பாடல்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, இசையமைப்பாளர் இளையராஜா எடுத்து வருகிறார்.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இதை மேற்கோள் காட்டியுள்ளார்.

'2014 ஆம் ஆண்டு முதல் எனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும். அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என இளையராஜா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதியன்று நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தான் இசையமைத்த மூனறு பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாக, படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.

'குட் பேட் அக்லி' படத்தில் 'ஒத்த ரூபாயும் தாரேன்', 'என் ஜோடி மஞ்சள் குருவி' மற்றும் 'இளமை இதோ இதோ' ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டு ரூ.5 கோடி ரூபாய் இழப்பீட்டை இளையராஜா கேட்டுள்ளார்.

"இசை தொடர்பான உரிமைகளை அறிந்தவர்கள், நீதிமன்றங்களை நாடி தங்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்" எனக் கூறுகிறார் வழக்கறிஞர் சரவணன்.

இவர் காப்புரிமை தொடர்பாக இளையராஜா தொடர்ந்துள்ள வழக்குகளை நடத்தி வருகிறார்.

காப்புரிமை கோருவது ஏன்?

வழக்கறிஞர் சரவணன்

தொடர்ந்து பேசிய சரவணன், "தான் இசையமைத்த பாடலுக்கு இளையராஜா எவ்வாறு உரிமை கோர முடியும் எனப் பலரும் கேட்டனர். தற்போது அறிவுசார் சொத்துரிமை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டனர்" என்கிறார்.

"ஒரு திரைப்படத்தை தயாரிக்கும்போது இசை, பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்கும் சேர்த்து பணம் கொடுக்கப்படுகிறது. அந்தப் படம் வெளிவந்த பிறகு முழு படத்தையும் விற்கலாம்.

அப்போது பாடல்களுடன் சேர்த்து படத்தை வெளியிடலாம். ஆனால், பாடல்களை மட்டும் தனியாக பயன்படுத்தும்போது அதன் உரிமை இசையமைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. இது அவரின் இசைப் பணிக்கான உரிமை (Musical rights). இது அறிவுசார் சொத்துரிமையில் வரும்" என்கிறார் சரவணன்.

இசையமைப்பாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை என்று ஒன்று உள்ளது என்பதை இளையராஜா நிரூபித்துள்ளதாகவும் காப்புரிமை சட்டத்தை மீறினால் இழப்பீடு கோர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

"உரிய முறையில் சொல்லவில்லை"

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், தேனிகர்ணன்

"பொருளாதார பின்னணி உள்ளவர்களால் காப்புரிமை தொடர்பான வழக்குகளை நடத்தி தீர்வை பெற முடியும். ஆனால், எங்களைப் போன்றவர்களுக்கு அது சாத்தியமில்லை" எனக் கூறுகிறார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன்.

2021 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தில், 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற பாடம் இடம்பெற்றிருந்தது.

'இது தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் பாடல்' என்ற சர்ச்சை கிளம்பியது. படத்தின் டைட்டில் கார்டில் சுந்தர்ராஜனின் பெயர் இடம்பெற்றிருந்தது. 'ஆனால், தங்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை' என சுந்தர்ராஜனின் வாரிசுகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

"பிறரின் பாடல்களை இசையமைப்பாளர்கள் கையாளும் போது, அதற்குரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும். அதைத் தங்களின் பாடல் போல பயன்படுத்துவது வேதனையைத் தருகிறது" என பிபிசி தமிழிடம் கூறினார், கர்ணன்.

'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் தொடர்பான சர்ச்சை, ஊடகங்களில் வெளியான பிறகே தங்களுக்குத் தெரியும் எனவும் கர்ணன் குறிப்பிட்டார்.

பாடல்களால் புகழ் கிடைத்தது, ஆனால்?

கர்ணன்

பட மூலாதாரம்,MARISELVARAJ/X

தொடர்ந்து பேசிய அவர், "பல திரைப்படங்களில் என் அப்பாவின் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார்.

"பிரபல கேசட் நிறுவனம் ஒன்றுக்கு என் தந்தை பாடல்களை எழுதி பாடிக் கொடுத்திருந்தார். அதன் உரிமையாளரிடம் நாங்கள் கேட்டபோது, 'பாடியதற்கு பணம் கொடுத்துவிட்டேன். அது என்னுடைய பாட்டு' எனக் கூறினார்.

ஆனால், அவர்களுக்கு பாடிக் கொடுப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே (1990) மதுரை வானொலி நிலையம், தூத்துக்குடி வானொலி நிலையம் ஆகியவற்றில் இதே பாடல்களை எனது அப்பா பாடியுள்ளார். பிறகு எப்படி அவர்கள் உரிமை கோர முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

திருவிழா காலங்களிலும் கச்சேரிகளிலும் பாடுவது தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் தொழிலாக இருந்துள்ளது. "பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும். அப்போது தான் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்" என்கிறார் கர்ணன்.

தான் தற்போது தேநீர் கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகக் கூறிய கர்ணன், "பாடல்களால் என் அப்பாவுக்குப் புகழ் கிடைத்தது. ஆனால், குடும்பத்தை வறுமையிலேயே வைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் இறந்துவிட்டார்" என்கிறார்.

தனது தந்தையின் பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வழக்கை நடத்துவதற்கான பொருளாதார பின்புலம் தங்களுக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y6r4d63x9o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராஜாவை வறுத்தெடுக்கும் ரகுமான் ரசிகர்கள் இனி என்ன சொல்லப்போகின்றார்கள்?

https://youtu.be/TeOBakLZI_k?si=bXPieV8cBqHE1YI_

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இளையராஜாவை வறுத்தெடுக்கும் ரகுமான் ரசிகர்கள் இனி என்ன சொல்லப்போகின்றார்கள்?

https://youtu.be/TeOBakLZI_k?si=bXPieV8cBqHE1YI_

சகல விடயத்திலும் அணி பிரிந்து அடிபடத்தேவையில்லை😂.

ஆர் செய்தாலும் தப்பு, தப்புத்தான். முன்பே ரஹ்மான் பல ஸ்பானிய இதர மொழி பாடல்களை அப்படியே உருவி பாவித்தமையை கண்டுள்ளோம். யூடியூப்பில் பல வீடியோக்களும் உள்ளன.

ராஜாவும் இப்படி உருவி உள்ளார்.

எவ்வளவு பணம் இருக்கு, இசையை பாவிக்க முன்னம், உரிமையாளருக்கு கொஞ்சம் கொடுத்து, பெயரை படத்தின் முடிவில் ஓடும் கிரெட்டிசில் ஒரு மூலையில் போட்டால் ஒரு சர்ச்சையும் வராது.

ஆனால் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் களவு எடுத்து மாட்டி கொள்வது😀.

ராஜா மீதான விமர்சனம் 4 வகைபடும்.

  1. அவர் இயல்பிலேயே சபை நாகரீகம் அற்றவர்

  2. பல படங்களின் பாடல் உரிமை அவருடையது அல்ல, தயாரிப்பாளரது

  3. பிச்சைகாரத்தனமாக மேடை நிகழ்ச்சியில், பணக்கஸ்டத்தில் இருக்கும் போது எஸ் பி பி பாடியதற்கு கூட காசு கேட்டார்

  4. மெட்டுக்களை திருடினார்

இதில் 4 வது மட்டுமே இதுவரை ரஹ்மானுக்கு பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேஸ்டிரோ…

பேஷ்…பேஷ்…காப்பின்னா மேஸ்டிரோ காப்பிதான்😂👇

மாட்டிகினாரு ஒத்தரு அவர காப்பத்தவேணும் கர்த்தரு…

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

ராஜா மீதான விமர்சனம் 4 வகைபடும்.

  1. அவர் இயல்பிலேயே சபை நாகரீகம் அற்றவர்

நீங்கள் சொல்வது உண்மைதான். இளையராஜாவிற்கு மேடையில் எப்படி பேச வேண்டும் என தெரியாது.ஆனால் மேடையில்லாத அவர் வாழ்க்கை மிக மிக நாகரீகமானது. தமிழ்நாட்டு திரையுலகை பொறுத்தவரையில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்கள் மேடையில் நாகரீகமாக இருந்து விட்டு மேடை பின் நடக்கும் இருட்டு வாழ்க்கையும் அசிங்க வாழ்க்கையும் எவ்வளவு அசிங்கமானது என்பதை என்பதை இந்த ஊர் உலகமும் அறியும் தாங்களும் அறிவீர்கள் என நம்புகின்றேன்.

எந்த வாழ்க்கை சிறந்தது என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

13 minutes ago, goshan_che said:

பல படங்களின் பாடல் உரிமை அவருடையது அல்ல, தயாரிப்பாளரது

அதை நீதிமன்றங்கள் தான் சட்ட ரீதியாக தீர்மானிக்க வேண்டும்.

14 minutes ago, goshan_che said:

பிச்சைகாரத்தனமாக மேடை நிகழ்ச்சியில், பணக்கஸ்டத்தில் இருக்கும் போது எஸ் பி பி பாடியதற்கு கூட காசு கேட்டார்

ஏனைய இசை அமைப்பாளர்களுக்கு சட்டரீதியாக இசையுரிமை பணம் போகின்றது. இளையராஜா முன்னரெல்லாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மற்றவர்கள் தனது பாடல்களுக்கு உரிமம் கோரும் போது இளையராஜா ஏன் வாய் மூடிக்கொண்டிருக்க வேண்டும்?

19 minutes ago, goshan_che said:

மெட்டுக்களை திருடினார்

அதை அவர் மேடைகளிலேயே நேரடியாக சொல்லியுள்ளார். அதற்கான காரணங்களையும் மிக தெளிவாக சொல்லியுள்ளார்.

ஏனைய இசையமைப்பாளர்கள் அப்படி பொது வெளியில் சொல்லியதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது உண்மைதான். இளையராஜாவிற்கு மேடையில் எப்படி பேச வேண்டும் என தெரியாது.ஆனால் மேடையில்லாத அவர் வாழ்க்கை மிக மிக நாகரீகமானது. தமிழ்நாட்டு திரையுலகை பொறுத்தவரையில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்கள் மேடையில் நாகரீகமாக இருந்து விட்டு மேடை பின் நடக்கும் இருட்டு வாழ்க்கையும் அசிங்க வாழ்க்கையும் எவ்வளவு அசிங்கமானது என்பதை என்பதை இந்த ஊர் உலகமும் அறியும் தாங்களும் அறிவீர்கள் என நம்புகின்றேன்.

எந்த வாழ்க்கை சிறந்தது என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்

ஒவ்வொரு பிரபலத்தினதும் தனிப்பட்ட வாழ்க்கையை நாம் அலசதேவையில்லை. என்பது என் நிலைப்பாடு. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என மறுதரப்போ, மூன்றாம் தரப்போ புகார் கூறும் வரை அது அவர்கள் தனிப்பட்ட விடயம்.

ஆனால் பொதுவெளியில் நடந்து கொள்ள என ஒரு முறை உள்ளது. இளையராஜாவிடம் தன்னை விட நலிந்தோரை தூக்கி போட்டு மிதிக்கும் ஒரு கேடு கெட்ட குணம் உள்ளது.

பத்திரிகையாளரை, ரசிகரை, இசை ஆர்வம் உள்ள சிறுவனை அவர்கள் சுயமரியாதையை சீண்டும் படி பொது வெளியில் அவமரியாதை செய்யவார்.

ஆனால் கோவிலில் அவமரியாதையாக அவர் நடத்தப்பட்டால், அந்த அந்நீதியின் முன் நவதுவாரங்களையும் மூடி கொள்வார்.

அகங்காரமே கூடாத விடயம் - அதிலும் அகங்காரத்தை - ஆட்களின் ஸ்டேடஸ் பார்த்து காட்டுவது எவ்வளவு கீழ்தரமானது?

இந்து இறையியலின் மிக அடிப்படையான விடயம் நான் என்ற மமதையை அழிப்பது. இந்த மமதையை அழிக்காமல் மனமுருகிபாடி, சாமியார் வேடம் போட்டு வாழ்வதில் ஒரு பயனும் இல்லை.

2 hours ago, குமாரசாமி said:

அதை நீதிமன்றங்கள் தான் சட்ட ரீதியாக தீர்மானிக்க வேண்டும்.

நிச்சயமாக. ஆரம்பகால பாடல்கள் திரைப்பட நிறுவனன்வ்களுக்கும், பிந்தைய இளையராஜ ஒப்பந்தம் போட்ட பாடல்கள் அவருக்கும் உரியன என தீர்பாகும் என எதிர்பார்க்கிறேன்.

2 hours ago, குமாரசாமி said:

ஏனைய இசை அமைப்பாளர்களுக்கு சட்டரீதியாக இசையுரிமை பணம் போகின்றது. இளையராஜா முன்னரெல்லாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மற்றவர்கள் தனது பாடல்களுக்கு உரிமம் கோரும் போது இளையராஜா ஏன் வாய் மூடிக்கொண்டிருக்க வேண்டும்?

மேடையில் பாடுவதற்கு எந்த இசையமைப்பாளருக்கும் பணம் கொடுப்பதாக நான் அறியவில்லை. ஆதாரம் தந்தால் அறிந்து கொள்வேன்.

2 hours ago, குமாரசாமி said:

அதை அவர் மேடைகளிலேயே நேரடியாக சொல்லியுள்ளார். அதற்கான காரணங்களையும் மிக தெளிவாக சொல்லியுள்ளார்.

எல்லாம் பிடிபட்ட பின்புதான்.

யூடியூப் வரும் வரை நானே இசை பிரம்மா என்பதுதான் அவரின் நிலைப்பாடாக இருந்தது.

என்ன காரணம் சொன்னாலும் களவு, களவுதானே.

அதாவது இளையராஜ ஜீவி யை அண்மையில் சொன்னது போல சொல்வதாயின், ஆண்மை அற்ற தன்மை🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜ கொப்பி அடித்த படங்கள் எதிலாவது அதை கிரெட்டில் போடும்படி செய்துள்ளாரா?

இல்லை.

தான் சொல்லாமல் கொப்பி அடித்தால் அதுக்கு பிடிபட்டபின் காரணம் சொல்வார்.

ஆனால் ஜீவி பிரகாஷ் கதை பொருத்தம் கருதி, வெளிப்படையாக இளையராஜா பாடலை கையாண்டால் அது ஆண்மை அற்றதனமா?

3 hours ago, goshan_che said:

  1. பிச்சைகாரத்தனமாக மேடை நிகழ்ச்சியில், பணக்கஸ்டத்தில் இருக்கும் போது எஸ் பி பி பாடியதற்கு கூட காசு கேட்டார்

நான் வேலை செய்வது இசை காப்புரிமை தொடர்பான அமைப்பில். பாடல்களின் காப்புரிமை காரணமாக கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் அமைப்பில

கனடாவில் வர்த்தக நோக்கத்திற்காக இசையை / பாடலை பயன்படுத்தினால் எம்மிடம் மற்றும் எம்மை போன்ற இன்னொரு அமைப்பிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது gym மில் ஒலிக்க விடும் பாடலாக இருந்தாலும் சரி, FM மில் ஒலிபரப்பும் பாடலாக இருந்தாலும் சரி அந்த இசைக்கான காப்புரிமை பணத்தை தரவேண்டும்.

Live music நிகழ்விற்கும் இது பொருந்தும். அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பங்கு காப்புரிமை பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.

பாடல் யாருக்கு சொந்தம்? பாடல் அதன் இசையமைப்பாளருக்கே சொந்தம். இது தான் பெரும்பாலான நாடுகளின் சட்டம். கனடா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இது தான் சட்டம்.

ஒரு பாடலின் இசையை படத்தின் தயாரிப்பாளர் வாங்குகின்றார். அதை அவர் அப் படத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

SPB, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது, அங்கு இசைத்த, இசைக்கப்படும் பாடல்களின் list இனை நான் வேலை செய்யும் அமைப்புக்கோ (கனடாவில் நிகழ்ந்தால்) அல்லது அது போன்ற இன்னொரு அமைப்பிற்கோ வழங்கப்படும். அதன் படி காப்புரிமையின் படி வருமானத்தின் சிறு பங்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில் spb யின் மகனே இவ் நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்பவர் எனும் அடிப்படையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடினால் அதனையும் அந்த list இல் தர வேண்டும்.ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

சட்ட ரீதியாக ஒரு நாட்டில் நிகழ்ச்சி நடாத்த அனுமதி பெற்று இளையராஜா வின் பாடலையும் பாடி வருமானம் பெற்று விட்டு, சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய அதன் விபரங்களை அவர்கள் கொடுக்காமல் தவறினார்கள்.

இது வேண்டும் என்றே செய்த தவறு.

இதே தவறை ஒரு பிரபலமான ஆங்கில பாடல் பாடி செய்து இருந்தால் பெரும் பணம் தண்டமாக கிடைத்திருக்க வாய்பிருந்து இருக்கும்.

இசை மூலம் / காப்புரிமை மூலம் பெறப்படும் பணத்தை பெற்று இசையமைப்பாளருக்கும் ஏனையவர்களுக்கும் பகிர இந்தியாவில் IPRS என்ற அமைப்பு உள்ளது.

இதனையே அங்குள்ள அனேகமான இசையமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

இளையராஜா இதனை பயன்படுத்துவதில்லை. தன் இசை மூலம் கிடைக்கும் ராயல்டி பணத்தை நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்கான ஒரு அமைப்பின் மூலமே பெறுகின்றார் என கூறுகின்றனர்.

அதாவது இளையராஜா ராயல்டியின் மூலம் பெறப்படும் வருமானத்தில் ஒரு பெரும் பங்கை நலிவுற்ற கலைஞர்களுக்கு பகிர்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

பல தெரியாத தகவல்களை தந்துள்ளீர்கள் நன்றி.

மேடையில் பாடுவது பற்றி நான் எழுதியதை கொஞ்சம் தெளிவில்லாமல் எழுதிவிட்டேன் என நினைக்கிறேன்.

மேற்கத்திய பாடல்களை மேடைகளில் பாடும்போது அதற்கு ராயல்டி செலுத்தி பாடுவது போல் தமிழிலும் ஒரு வழமை இருக்கிறதா?

உதாரணமாக ஜிம்மில் ஒலிக்க விடும் பாடலுக்கு இப்படி ராயல்டி செலுத்த வேண்டும் எனில் ஊரில் பஸ்சிலும், வீடியோ கடைகளிலும் ஒலிக்கும் பாடலுக்கும் செலுத்த வேண்டி வரும் அல்லவா?

அதே போல் எஸ்பிபிக்கு பொருந்தும் அதே சட்டம், லக்ஸ்மன் சுருதி, ஏனைய சின்ன சின்ன டுரூப்புகள், மாரி அம்மன் கோவில் கூழ் ஊத்தும் நிகழ்வில் “ஆடல் பாடல்” செய்யும் திண்ட்டுகள் ரீட்டா குழுவினர் அனைவருக்கும் பொருந்துமா?

ஆகவே தமிழில், இந்தியாவில் எதற்கு ராயல்டி கோரலாம், கோராமல் விடலாம் என்பதில் ஒரு சமச்சீர் இன்மையை நான் காண்கிறேன்.

அல்லது அனைவரிடமும் கோரலாம், ஆனால் உரிமையாளர் கொழுத்த ஆடுகளாகப்பார்த்து அவற்றிடம் மட்டுமே கோரும் உரிமை உள்ளவரா?

22 hours ago, நிழலி said:

ஒரு பாடலின் இசையை படத்தின் தயாரிப்பாளர் வாங்குகின்றார். அதை அவர் அப் படத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதை அப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. அது ஒப்பந்தத்தில் என்ன கூறி உள்ளது என்பதை பொறுத்து மாறுபடும் என நினைக்கிறேன்.

குட் பேட் அக்லி தயாரிப்பாளர் - நாம் இசையை உண்மையான உரிமையாளரிடம் வாங்கி விட்டோம் என்றே கூறி உள்ளனர்.

ஆகவே இளையராஜ இசை அமைத்த அத்தனை பாடல்களும் அவருக்கு சொந்தமா என்பதை கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும்.

பொதுவாக ஒரு படத்தின், படைப்பின் கதை, வசன, இசை முழு உரிமையும் தயாரிப்பாளரிடமே இருக்கும்.

மத்திய, பிற்காலங்களில் ராஜா இதற்கு மாறாக ஒப்பந்தம் போட்டிருக்கலாம். அப்படி எனில் அந்த பாடல்கள் மட்டும் அவருக்கு சொந்தமாகலாம்.

22 hours ago, நிழலி said:

சட்ட ரீதியாக ஒரு நாட்டில் நிகழ்ச்சி நடாத்த அனுமதி பெற்று இளையராஜா வின் பாடலையும் பாடி வருமானம் பெற்று விட்டு, சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய அதன் விபரங்களை அவர்கள் கொடுக்காமல் தவறினார்கள்.

இது வேண்டும் என்றே செய்த தவறு.

நடந்தது இதுதான் எனில் - எஸ்பிபி பக்கம் தவறு உள்ளது.

ஆனால் யூடியூப் இல்லை என்ற துணிவில், உலகம் முழுவதும் இருந்து மெட்டுக்களை எடுத்து பாடல் போட்டு விட்டு ஒரு இலவச கிரெடிட் கூட போடாத “உருவல் ஞானி” க்கு இதை தட்டி கேட்கும் வர்த்தக உரிமை இருப்பினும் தார்மீக உரிமை இல்லை என்பதே என் வாதம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

இசை மூலம் / காப்புரிமை மூலம் பெறப்படும் பணத்தை பெற்று இசையமைப்பாளருக்கும் ஏனையவர்களுக்கும் பகிர இந்தியாவில் IPRS என்ற அமைப்பு உள்ளது.

இதனையே அங்குள்ள அனேகமான இசையமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

இளையராஜா இதனை பயன்படுத்துவதில்லை. தன் இசை மூலம் கிடைக்கும் ராயல்டி பணத்தை நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்கான ஒரு அமைப்பின் மூலமே பெறுகின்றார் என கூறுகின்றனர்.

அதாவது இளையராஜா ராயல்டியின் மூலம் பெறப்படும் வருமானத்தில் ஒரு பெரும் பங்கை நலிவுற்ற கலைஞர்களுக்கு பகிர்கின்றார்.

இந்த கதையை நானும் கேள்விபட்டுள்ளேன்.

இதன் உண்மைதன்மைக்கான ஆதாரம் என்ன?

இராஜா பொதுவெளியில் நலிந்தோரை போட்டு மிதிப்பதையே முட்டு கொடுக்க முரட்டு ரசிகர் உள்ளார்கள். இப்படி ஒரு கதையை அவர்களே ஜோடித்தும் இருக்கலாம் அல்லவா.

1 hour ago, goshan_che said:

மேற்கத்திய பாடல்களை மேடைகளில் பாடும்போது அதற்கு ராயல்டி செலுத்தி பாடுவது போல் தமிழிலும் ஒரு வழமை இருக்கிறதா?

உதாரணமாக ஜிம்மில் ஒலிக்க விடும் பாடலுக்கு இப்படி ராயல்டி செலுத்த வேண்டும் எனில் ஊரில் பஸ்சிலும், வீடியோ கடைகளிலும் ஒலிக்கும் பாடலுக்கும் செலுத்த வேண்டி வரும் அல்லவா?

அதே போல் எஸ்பிபிக்கு பொருந்தும் அதே சட்டம், லக்ஸ்மன் சுருதி, ஏனைய சின்ன சின்ன டுரூப்புகள், மாரி அம்மன் கோவில் கூழ் ஊத்தும் நிகழ்வில் “ஆடல் பாடல்” செய்யும் திண்ட்டுகள் ரீட்டா குழுவினர் அனைவருக்கும் பொருந்துமா?

வர்த்தக நோக்கத்திற்காக இசையை பயன்படுத்த லைசென்ஸ் எடுத்து இருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகளில் இது தான் சட்டம். இதனையும் Tariff என்பர்.

இது ஒவ்வொரு இடத்துக்கும் மாறுபடும். ஜிம் போன்றவை ஒவ்வொரு பாடலுக்கும் காப்புரிமை பிரகாரம் பணம் செலுத்துவதில்லை. அவர்கள் எந்த நாட்டு இசையை பிரதானமாக இசைக்க விடுவர் என்று முன்னரே தெரிவித்து விடுவர். உதாரணத்துக்கு ஒரு ஜிம், ஜப்பானிய பாடல்களையும் அமெரிக்க இசையையும் ஒலிக்க விடுவாராயின், அதற்கான காப்புரிமைக்கான பணத்தை ஒவ்வொரு வருடமும் செலுத்துவர். IPRS போன்ற அமைப்புகள் அதனை வாங்கி, தம் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிப்பர். அதாவது அவ் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் ஜப்பானிய/ அமெரிக்க இசைக்கலைஞர்களுக்கு பகிர்ந்தளிப்பர்.

ஆனால் FM போன்றன, தாம் வர்த்தக நேரங்களில் இசைக்கும் பாடல்கள் அனைத்தினது விபரங்களையும் அனுப்பி வைப்பர். அதன் படி காப்புரிமை பணம் பகிர்ந்தளிக்கப்படும்.

வர்த்தக நிலையம் ஒன்று வானொலியில் வரும் பாடல்களை ஒலிக்கவிடின், காப்புரிமைக்கான பணத்தை செலுத்த தேவை இல்லை. ஏனெனில் FM நிலையங்கள் ஏற்கனவே அதற்கான கட்டணங்களை செலுத்துவதால்.

TikTok, YouTube, TV, Concert venues போன்றவையும் கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றின் மூலம் நினைத்து பார்க்காத அளவு பணம் collect பண்ணப்படுகின்றது.

லக்ஸ்மன் சுருதி போன்றவைக்கும் இது பொருந்தும். ஆனால் இந்தியாவில் எவரும் சின்ன சின்ன இசைக்குழுக்களிடம் இருந்து இவற்றை எதிர்ப்பார்ப்பது இல்லை. ஆனால் இங்கு எதிர்ப்பார்க்கின்றனர்.

Chatgtp இல் இப்படித் தேடிப்பாருங்கள். இந்த லைசென்ஸ் / இனை பற்றி மேலும் அறிய முடியும்

what is tariff in music industry

1 hour ago, goshan_che said:

இந்த கதையை நானும் கேள்விபட்டுள்ளேன்.

இதன் உண்மைதன்மைக்கான ஆதாரம் என்ன?

இராஜா பொதுவெளியில் நலிந்தோரை போட்டு மிதிப்பதையே முட்டு கொடுக்க முரட்டு ரசிகர் உள்ளார்கள். இப்படி ஒரு கதையை அவர்களே ஜோடித்தும் இருக்கலாம் அல்லவா.

விகடன் போன்றவை இதனை பற்றி எழுதியிருக்கின்றனர். அத்துடன், அண்மையிலும் ஒரு தயாரிப்பாளர் இதைக் கூறியிருந்தார்.

1 hour ago, goshan_che said:

இதை அப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. அது ஒப்பந்தத்தில் என்ன கூறி உள்ளது என்பதை பொறுத்து மாறுபடும் என நினைக்கிறேன்.

குட் பேட் அக்லி தயாரிப்பாளர் - நாம் இசையை உண்மையான உரிமையாளரிடம் வாங்கி விட்டோம் என்றே கூறி உள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் மட்டுமல்ல இப்படியான விடையங்களிலும் கெட்டிக்காரர் (இவரது மனைவி சட்டம் படித்தவர் என கேள்விப்பட்டுள்ளேன்). தன் முதல் படத்தில் இருந்து இன்றுவரைக்கும் இது தொடர்பாக சரியான ஒப்பந்தங்களை போட்டுள்ளார். அதனால் அவரது இசையை/ பாடலை எவரும் அவரது அனுமதி இன்றி பயன்படுத்த முடியாது.

ஆனால் இளையராஜாவுக்கு இப்படியான சட்டம் மற்றும் ஒப்பந்தங்கள் போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட ஆரம்பத்தில் இருக்கவில்லை. மிகச் சாதாரணமாக தயாரிப்ப்பாளருடன் மட்டும் சம்பளம் / உரிமை தொடர்பாக ஒப்பந்தங்களை போட்டுள்ளார். பின்னாட்களில் தான் அவர் சுதாகரித்துக் கொண்டார். முக்கியமாக மலேசியாவில் இருக்கும் ஒரு இசை வெளியீட்டு நிறுவனம் இவரது பாடல்களை திருப்பி திருப்பி சிடி போட்டு விற்கும் போதுதான் உணர்ந்து கொண்டார் என்று சொல்வர்.

2 hours ago, goshan_che said:

ஆனால் யூடியூப் இல்லை என்ற துணிவில், உலகம் முழுவதும் இருந்து மெட்டுக்களை எடுத்து பாடல் போட்டு விட்டு ஒரு இலவச கிரெடிட் கூட போடாத “உருவல் ஞானி” க்கு இதை தட்டி கேட்கும் வர்த்தக உரிமை இருப்பினும் தார்மீக உரிமை இல்லை என்பதே என் வாதம்.

எனக்கு இளையராஜாவின் மீது விமர்சனங்கள் உண்டு. ஒரு மனிதராக அவர் பல பிழைகளைக் கொண்ட ஒருவர்.

ஆதி திராவிட சமூகத்தில் பிறந்து விட்டு, அதை மறுக்கும் விதமாக நடந்து கொள்வதுடன் தன்னை ஒரு பார்ப்பனராக, ஒரு சங்கியாக நினைப்பதுடன், மற்றவர்களும் தன்னை அவ்வாறுதான் நடத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒருவர். எந்த சமூகம் அதிகாரத்துடன் உள்ளதோ, அதில் தானும் சங்கமிப்பதனூடாக, அதிகாரம் அற்ற, குரலற்ற சமூகங்களை ஏளனப்படுத்த முனைகின்ற ஒருவர் இளையராஜா.

மோடிக்கு முன், முதலமைச்சர் முன், கோயில் பூசாரி முன், குருக்கள் முன் பவ்வியமாக கைகட்டி நிற்பார். அவர்கள் இவரை மதிக்காவிடின் கூட, அவர்கள் கால்களை கழுவி விடக் கூட துணிவார். ஆனால் ஒரு சாதாரண ஊடகவியலாளரைக் கூட மதிக்க மாட்டார். சபை நாகரீகம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்ற கொள்கை கொண்டவர்.

ஆரம்பத்தில் தன் குருக்களாக, பழைய இசையமைப்பாளர்களை ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிட்டுச் சொல்வார். இன்று தன்னை பிரம்மாவாக நினைத்துக் கொள்கின்றார். மிகுந்த தலைக்கனம் பிடித்தவர். குடும்பத்தினருடன் கூட தலைக்கனமாக நடந்து கொள்கின்றவர்.

அவருக்கு பா.ஜ.க வின் மூலம் கிடைத்த ராஜ்யசபா எம் பி பதவி என்பது தலையில் சந்தனம் என்று நினைத்து அவரே வைத்துக் கொண்ட மலக் குவியல்.

ஆனாலும் இளையராஜா ஒரு அற்புதமான, அருமையான, இயற்கை எமக்கு அருளிய ஒரு கொடை.

இதுவரைக்கும் அவர் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒரு 100 பாடல்கள் வரைக்கும் ஏனைய பாடல்களின் மெட்டுக்களை உருவி இசையமைத்து இருப்பார். ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவரது அளப்பரிய இசையை எடை போட்டு மட்டம் தட்ட முடியாது.

என்னைப் பொறுத்தவரைக்கும் ரஹுமான், ஹரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரையும் கவரக்கூடிய இசையை அளிப்பவர்கள் அல்ல. ஆனால் இளையராஜாவால் அது முடியும்.

சாதாரண, படிக்காத, அன்றாடம் காச்சி, பாமரனான் ஒருவராலும் அவரது இசையை ரசிக்க முடியும்; தனி விமானம் வைத்து பயணம் செய்கின்றவர்களாலும் ரசிக்க முடியும்.

கருவில் இருந்து சுடுகாடு போகும் வரைக்குமான வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். அந்தந்த கட்டங்கள் வாழ்வில் வரும் போது, அதற்கு ஏதுவாக ஒரு பாடலை , இசையை ஏற்கனவே அவர் இசையமைத்து இருப்பார்.

பாடல்கள் மட்டுமல்ல, அவரது பின்னனி இசையும் அற்புதமானது.

பிதாமகன் படத்தில் கள்ளச்சாராயம் காச்சி குதிரைகளில் வைத்து கடத்தி செல்லும் காட்சியில் பின்னனி இசைத்து இருப்பார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், பரவசம் அடைவோம் (இப் படத்தில் உள்ள பிறையே பிறையே பாடல் தனிமையில் கேட்கும் போது புல்லரிக்க வைக்கும்). மெளனராகத்தின் படத்தின் பின்னனி இசை முழுதுமே ஒரு தனி அல்பமாக போட்டு கேட்க முடியும். தளபதி படத்தில் வரும் பின்னனி இசை இன்னொரு வகையான பரவசம்.

--------

என் அம்மாவுக்கு 80 வயதாகின்றது. இப்ப இருக்கும் அம்மா முன்னர் இருந்த என் அம்மா மாதிரி அல்ல. எப்பவும் தன்னை பற்றி மட்டுமே கதைக்கின்ற, தற்பெருமை பேசுகின்ற, என் அப்பாவை எப்பவும் உயர்த்தி மட்டுமே கதைக்கின்ற ஒருவராக இப்ப அம்மா உள்ளார். அறளை பெயர்ந்து தற்பெருமை பேசும் ஒருவராக அம்மா மாறிவிட்டார்.

ஆனாலும் அம்மா மீதான என் பாசம் குறையவில்லை. அவர் எனக்கு செய்த அனைத்து நன்மைகளையும் நான் மறக்கவில்லை

எனக்கு இளையராஜாவும் அப்படித்தான். இன்னும் சொன்னால், நான் அம்மாவுடன் கழித்த ஒட்டுமொத்த நிமிடங்களை விட, இளையராஜாவின் இசையும் கழித்த நிமிடங்கள் பல மடங்கு அதிகம்.

Wishing you long life Ilayarajah

3 hours ago, goshan_che said:

இந்த கதையை நானும் கேள்விபட்டுள்ளேன்.

இதன் உண்மைதன்மைக்கான ஆதாரம் என்ன?

இராஜா பொதுவெளியில் நலிந்தோரை போட்டு மிதிப்பதையே முட்டு கொடுக்க முரட்டு ரசிகர் உள்ளார்கள். இப்படி ஒரு கதையை அவர்களே ஜோடித்தும் இருக்கலாம் அல்லவா.

Tamil Behind Talkies
No image preview

ராயல்டி கேட்டதற்கான நோக்கம் இது தான்..!இளையராஜாவை திட்டி...

பாடல்களுக்கான காப்புரிமை ராயல்டி தொகையை,நலிந்த இசை கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜா பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்....
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

வர்த்தக நோக்கத்திற்காக இசையை பயன்படுத்த லைசென்ஸ் எடுத்து இருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகளில் இது தான் சட்டம். இதனையும் Tariff என்பர்.

இது ஒவ்வொரு இடத்துக்கும் மாறுபடும். ஜிம் போன்றவை ஒவ்வொரு பாடலுக்கும் காப்புரிமை பிரகாரம் பணம் செலுத்துவதில்லை. அவர்கள் எந்த நாட்டு இசையை பிரதானமாக இசைக்க விடுவர் என்று முன்னரே தெரிவித்து விடுவர். உதாரணத்துக்கு ஒரு ஜிம், ஜப்பானிய பாடல்களையும் அமெரிக்க இசையையும் ஒலிக்க விடுவாராயின், அதற்கான காப்புரிமைக்கான பணத்தை ஒவ்வொரு வருடமும் செலுத்துவர். IPRS போன்ற அமைப்புகள் அதனை வாங்கி, தம் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிப்பர். அதாவது அவ் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் ஜப்பானிய/ அமெரிக்க இசைக்கலைஞர்களுக்கு பகிர்ந்தளிப்பர்.

ஆனால் FM போன்றன, தாம் வர்த்தக நேரங்களில் இசைக்கும் பாடல்கள் அனைத்தினது விபரங்களையும் அனுப்பி வைப்பர். அதன் படி காப்புரிமை பணம் பகிர்ந்தளிக்கப்படும்.

வர்த்தக நிலையம் ஒன்று வானொலியில் வரும் பாடல்களை ஒலிக்கவிடின், காப்புரிமைக்கான பணத்தை செலுத்த தேவை இல்லை. ஏனெனில் FM நிலையங்கள் ஏற்கனவே அதற்கான கட்டணங்களை செலுத்துவதால்.

TikTok, YouTube, TV, Concert venues போன்றவையும் கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றின் மூலம் நினைத்து பார்க்காத அளவு பணம் collect பண்ணப்படுகின்றது.

லக்ஸ்மன் சுருதி போன்றவைக்கும் இது பொருந்தும். ஆனால் இந்தியாவில் எவரும் சின்ன சின்ன இசைக்குழுக்களிடம் இருந்து இவற்றை எதிர்ப்பார்ப்பது இல்லை. ஆனால் இங்கு எதிர்ப்பார்க்கின்றனர்.

Chatgtp இல் இப்படித் தேடிப்பாருங்கள். இந்த லைசென்ஸ் / இனை பற்றி மேலும் அறிய முடியும்

what is tariff in music industry

விகடன் போன்றவை இதனை பற்றி எழுதியிருக்கின்றனர். அத்துடன், அண்மையிலும் ஒரு தயாரிப்பாளர் இதைக் கூறியிருந்தார்.

மிகவும் விளக்கமான பதில், பல புதிய தகவல்களுடன்.

இளையராஜா, அவர் நிலைப்பாடு பற்றிய என் கணிப்பீட்டில் ஒரு10% அளவு மாற்றத்தை உங்கள் கருத்துகள் ஏற்படுத்தி விட்டன 🙏.

நன்றி.

1 hour ago, நிழலி said:

எனக்கு இளையராஜாவின் மீது விமர்சனங்கள் உண்டு. ஒரு மனிதராக அவர் பல பிழைகளைக் கொண்ட ஒருவர்.

ஆதி திராவிட சமூகத்தில் பிறந்து விட்டு, அதை மறுக்கும் விதமாக நடந்து கொள்வதுடன் தன்னை ஒரு பார்ப்பனராக, ஒரு சங்கியாக நினைப்பதுடன், மற்றவர்களும் தன்னை அவ்வாறுதான் நடத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒருவர். எந்த சமூகம் அதிகாரத்துடன் உள்ளதோ, அதில் தானும் சங்கமிப்பதனூடாக, அதிகாரம் அற்ற, குரலற்ற சமூகங்களை ஏளனப்படுத்த முனைகின்ற ஒருவர் இளையராஜா.

மோடிக்கு முன், முதலமைச்சர் முன், கோயில் பூசாரி முன், குருக்கள் முன் பவ்வியமாக கைகட்டி நிற்பார். அவர்கள் இவரை மதிக்காவிடின் கூட, அவர்கள் கால்களை கழுவி விடக் கூட துணிவார். ஆனால் ஒரு சாதாரண ஊடகவியலாளரைக் கூட மதிக்க மாட்டார். சபை நாகரீகம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்ற கொள்கை கொண்டவர்.

ஆரம்பத்தில் தன் குருக்களாக, பழைய இசையமைப்பாளர்களை ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிட்டுச் சொல்வார். இன்று தன்னை பிரம்மாவாக நினைத்துக் கொள்கின்றார். மிகுந்த தலைக்கனம் பிடித்தவர். குடும்பத்தினருடன் கூட தலைக்கனமாக நடந்து கொள்கின்றவர்.

அவருக்கு பா.ஜ.க வின் மூலம் கிடைத்த ராஜ்யசபா எம் பி பதவி என்பது தலையில் சந்தனம் என்று நினைத்து அவரே வைத்துக் கொண்ட மலக் குவியல்.

ஆனாலும் இளையராஜா ஒரு அற்புதமான, அருமையான, இயற்கை எமக்கு அருளிய ஒரு கொடை.

இதுவரைக்கும் அவர் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒரு 100 பாடல்கள் வரைக்கும் ஏனைய பாடல்களின் மெட்டுக்களை உருவி இசையமைத்து இருப்பார். ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவரது அளப்பரிய இசையை எடை போட்டு மட்டம் தட்ட முடியாது.

என்னைப் பொறுத்தவரைக்கும் ரஹுமான், ஹரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரையும் கவரக்கூடிய இசையை அளிப்பவர்கள் அல்ல. ஆனால் இளையராஜாவால் அது முடியும்.

சாதாரண, படிக்காத, அன்றாடம் காச்சி, பாமரனான் ஒருவராலும் அவரது இசையை ரசிக்க முடியும்; தனி விமானம் வைத்து பயணம் செய்கின்றவர்களாலும் ரசிக்க முடியும்.

கருவில் இருந்து சுடுகாடு போகும் வரைக்குமான வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். அந்தந்த கட்டங்கள் வாழ்வில் வரும் போது, அதற்கு ஏதுவாக ஒரு பாடலை , இசையை ஏற்கனவே அவர் இசையமைத்து இருப்பார்.

பாடல்கள் மட்டுமல்ல, அவரது பின்னனி இசையும் அற்புதமானது.

பிதாமகன் படத்தில் கள்ளச்சாராயம் காச்சி குதிரைகளில் வைத்து கடத்தி செல்லும் காட்சியில் பின்னனி இசைத்து இருப்பார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், பரவசம் அடைவோம் (இப் படத்தில் உள்ள பிறையே பிறையே பாடல் தனிமையில் கேட்கும் போது புல்லரிக்க வைக்கும்). மெளனராகத்தின் படத்தின் பின்னனி இசை முழுதுமே ஒரு தனி அல்பமாக போட்டு கேட்க முடியும். தளபதி படத்தில் வரும் பின்னனி இசை இன்னொரு வகையான பரவசம்.

--------

என் அம்மாவுக்கு 80 வயதாகின்றது. இப்ப இருக்கும் அம்மா முன்னர் இருந்த என் அம்மா மாதிரி அல்ல. எப்பவும் தன்னை பற்றி மட்டுமே கதைக்கின்ற, தற்பெருமை பேசுகின்ற, என் அப்பாவை எப்பவும் உயர்த்தி மட்டுமே கதைக்கின்ற ஒருவராக இப்ப அம்மா உள்ளார். அறளை பெயர்ந்து தற்பெருமை பேசும் ஒருவராக அம்மா மாறிவிட்டார்.

ஆனாலும் அம்மா மீதான என் பாசம் குறையவில்லை. அவர் எனக்கு செய்த அனைத்து நன்மைகளையும் நான் மறக்கவில்லை

எனக்கு இளையராஜாவும் அப்படித்தான். இன்னும் சொன்னால், நான் அம்மாவுடன் கழித்த ஒட்டுமொத்த நிமிடங்களை விட, இளையராஜாவின் இசையும் கழித்த நிமிடங்கள் பல மடங்கு அதிகம்.

Wishing you long life Ilayarajah

இதில் எதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.