Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், BOOPATHY

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 30 ஜூன் 2025

[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.]

''போலீசோ, வேற யாராச்சும் வந்து கேட்டா, எனக்காக நீங்க தலை குனிய வேண்டாம். இதை போட்டுக் காமிச்சிருங்க. என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான் காரணம். உடல்ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்; மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்...என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு...என்னை மன்னிச்சிருங்கப்பா...என்னை மன்னிச்சிருங்கம்மா...!''

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், தனது தந்தைக்குப் பதிவு செய்து வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பிய ஆடியோவில் கூறப்பட்டிருந்த வார்த்தைகள் இவை.

அவருடைய இந்த ஆடியோ வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கைகாட்டிபுதுாரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரிதன்யா(வயது 27).

ரிதன்யா, எம்.எஸ்.சி.–சிஎஸ் படித்தவர். இவருக்கும் அவினாசி பழங்கரையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11 அன்று திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 77 நாட்களே ஆனநிலையில், கடந்த ஜூன் 28 அன்று, ரிதன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,BOOPATHY

'திருமணமாகி 2 வாரங்களில் திரும்பிய ரிதன்யா'

அவினாசி–சேயூர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருமணமாகி 2 வாரங்கள் மட்டுமே, ரிதன்யாவும், கவின்குமாரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அதற்குப்பின், பிரச்னையாகி ரிதன்யா தன் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு 20 நாட்கள் இருந்துள்ளார். அப்போது கவின் அவ்வப்போது வந்து பார்த்துச்சென்றுள்ளார்.

பெற்றோர் மீண்டும் ரிதன்யாவிடம் பேசி, அவரை கவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கும், வேறு சில இடங்களுக்கும் சுற்றுலா சென்றுள்ளனர். இரு வாரங்கள் சந்தோஷமாக இருந்த நிலையில், மீண்டும் கடந்த ஜூன் 22 அன்று ரிதன்யாவை கவின் அழைத்து வந்து, அவரின் தந்தையின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது ரிதன்யா மிகவும் சோகமாக இருந்துள்ளார்.

தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாமென்று ரிதன்யா கூறிய நிலையில், தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை, ஒரு வாரம் அப்பாவின் வீட்டில் இருக்க ஆசைப்பட்டதால் கொண்டு வந்து விட்டதாக அண்ணாதுரையிடம் கவின் கூறியுள்ளார்.

ரிதன்யாவை விட்டுச்சென்ற பின், ஜூன் 23 மற்றும் ஜூன் 27 ஆகிய இரு நாட்களும் கவின் வந்து பார்த்துச் சென்றுள்ளார். மறுநாள் ஜூன் 28 அன்று, சேயூர் மொண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்குச் செல்வதாகக் கூறி காரை தனியாக எடுத்துச் சென்றுள்ளார் ரிதன்யா. வாரம் ஒரு முறை அவர் அந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்பதால் அவரை தனியாக அனுப்பியுள்ளனர்.

அன்று மதியம் ஒரு மணிக்கு ரிதன்யாவின் தாயார் ஜெயசுதாவுக்கு ரிதன்யாவின் மொபைலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், இந்த எண் யாருடையது என்று கேட்டு, செட்டிபுதுார் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு பெண் மயங்கிக் கிடக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே ரிதன்யாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு செல்வதற்குள் அவரை அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

முதலில் ரிதன்யாவின் தற்கொலை குறித்து, அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் போலீசில் தெரிவிக்கவில்லை. அதனால் சேயூர் போலீசார் தற்கொலை வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் தற்கொலை செய்வதற்கு முன்பாக, ஜூன் 28 மதியம் 12 மணியளவிலேயே அவர் ஆடியோ பதிவு செய்து, தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

அப்போது மொபைலில் 'நெட்'டை அணைத்து வைத்திருந்ததால் வாட்ஸ்ஆப் தகவலை பெற முடியவில்லை. அன்றிரவு, உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக, இரவு 11 மணியளவில் அண்ணாதுரையின் மொபைலில் 'நெட்'டை அவருடைய உறவினர் ஒருவர் 'ஆன்' செய்தபோது, ரிதன்யாவின் மொபைல் எண்ணிலிருந்து 10 ஆடியோ பதிவுகள் வந்துள்ளன.

அதில் தன்னுடைய தற்கொலை முடிவு பற்றி, அழுதவாறே பேசியுள்ள ரிதன்யா, அந்த ஆடியோக்களை வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பியிருந்தது தெரியவந்தது. அந்த ஆடியோக்களில் தன்னுடைய தற்கொலை முடிவுக்கு கவினும், அவருடைய தாயும், தந்தையுமே காரணமென்று தெரிவித்திருந்தார்.

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,BOOPATHY

படக்குறிப்பு,கணவர் குடும்பத்துடன் ரிதன்யா

'300 சவரன் நகை, புது வால்வோ கார், திருமண செலவு ரூ.3 கோடி'

இந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ரிதன்யாவின் தந்தை, சேயூர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

அந்த ஆதாரத்தின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியது (IPC 306) உள்ளிட்ட பிரிவுகளில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாயார் சித்ரா தேவி ஆகியோர் மீது சேயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கவின்குமாரும், ஈஸ்வரமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். உடல்ரீதியான பாதிப்பு காரணமாக, சித்ரா தேவியை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், ''300 சவரன் போட்டு 70 லட்ச ரூபாய்க்கு வால்வோ காரும் வாங்கிக்கொடுத்தோம். அதில் 150 சவரன் அங்கே இருந்தது. மீதம் என் வீட்டில் இருந்தது. ஆனால் அதற்கு மேலும் கேட்டு, டார்ச்சர் செய்து, இரண்டே வாரத்தில் மகளை என் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். நானும் எல்லாம் சரியாகிவிடுமென்று சமாதானப்படுத்தி பேசி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆனால் வெளியில் சொல்லவே முடியாத அளவுக்கு உடல்ரீதியான கொடுமைகளை அவள் அனுபவித்துள்ளார்.'' என்றார்.

''என்னிடமும் என் மனைவியிடமும் கூட முழுமையாக எதையும் சொல்லாமல், அவள் மாமியாரை வரச்சொல்லி, என் வீட்டில் வைத்தே ஒன்றரை மணி நேரம் தனியாகப் பேசினாள். அதன்பின், மாமியார் எங்களிடம் வந்து, 'எங்க பையன் இப்படி இருப்பான்னு எங்களுக்கே தெரியலை. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.' என்று கூறி அழைத்துச் சென்றார்.

மறுபடியும் 20 நாளில் திரும்பிவிட்டாள். பையனுக்கு தொழில் இல்லை. உறவினர்களில் பலர் 100 கோடி ரூபாய் செலவழித்து அவரவர் மாப்பிள்ளைக்குத் தொழில் செய்து கொடுத்துள்ளனர். உங்க அப்பா 500 சவரன் போடுவதாகக் கூறி பாதியளவும் போடவில்லை என்று எல்லோரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.'' என்றும் அண்ணாதுரை தெரிவித்தார்.

மாப்பிள்ளைக்கு தனியாக தொழில் இல்லாவிடினும், 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை வாடகை வந்ததால் வருமானம் இருக்கிறதென்று திருமணத்துக்கு 3 கோடி ரூபாய் செலவழித்ததாக பிபிசி தமிழிடம் கூறிய ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, தற்கொலைக்கு முன்பாக ரிதன்யா, தன் தந்தைக்குப் பேசி அனுப்பிய ஆடியோக்களை பிபிசிடம் பகிர்ந்தார்.

அதில் பேசியுள்ள ரிதன்யா, தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக மீண்டும் மீண்டும் பல முறை தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தற்கொலை முடிவுக்கு, கவினும், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தியும், அவருடைய தாயார் சித்ராதேவியும்தான் காரணமென்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,BOOPATHY

படக்குறிப்பு, பெற்றோருடன் ரிதன்யா

மகளுக்கு நீதி வேண்டுமென்று கேட்கும் தந்தை!

தன்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், இனிமேல் எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என்று கண்ணீரோடு பேசினார் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை.

கவின் குடும்பத்தினருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, பிபிசி தமிழிடம் பேசுகையில் குற்றம் சாட்டினார்.

ரிதன்யாவின் ஆடியோவில், தன்னுடைய தற்கொலைக்கு கவின் மற்றும் அவருடைய தாய், தந்தை இருவரும் காரணமென்று தெளிவாகக் கூறியிருந்தும் கவினையும், அவருடைய தந்தையை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி சேயூர் காவல் ஆய்வாளர் ராஜபிரபுவிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அவருடைய தாயார் வயது முதிர்ந்தவர். சமீபத்தில்தான் அவருக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. விசாரணையின் போதே, அவர் அடிக்கடி மயக்கமாகிவிட்டார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டே உடனடியாக அவரைக் கைது செய்யவில்லை. ஆனால் வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.'' என்றார்.

ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தரப்பில் அவர்களுடைய உறவினர் யாரிடமும் கருத்துப் பெற முடியவில்லை. அவர்கள் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சண்முகானந்தன், ''கவின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி யாரும் பேசமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் சார்பில் நானும் எந்தக் கருத்தும் கூற முடியாது. '' என்றார்.

திருமணம் முடிந்த 77 நாட்களில் இந்த மரணம் நடந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் தனது விசாரணையை இன்று காலையில் துவக்கியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவினாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், ''தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் ஆடியோ கிடைத்துள்ளது. அதில் அவர் கூறியுள்ள தகவலின் அடிப்படையில், அவரின் கணவர், மாமனார், மாமியார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிதன்யாவின் ஆடியோவில் எந்த மாதிரியான கொடுமை நிகழ்ந்தது பற்றி எதுவும் கூறவில்லை. அதனால் இன்னும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது. இரு தரப்பிலும் விசாரித்தபின்பே தெளிவான காரணங்கள் தெரியவரும்.'' என்றார்.

திருப்பூரில் பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம்,BOOPATHY

நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy4nnp0wq7yo

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் இல்லாதவர்களுக்கும் பெண்ணிடம் சன்மானம் கேட்கும் தன்மானமில்லா ஆண்களுக்கும் ஏன் பெண்ணை கொடுக்கிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

515408342_24033421916277887_392435998509

மகள் தற்கொலை செய்து கொண்ட பிறகும் இப்படி பேசுகிறார் என்றால்,

கணவன் குடும்பத்தால் சித்ரவதை என்று அந்த இளம் பெண் வந்து கதறிய போதெல்லாம் இந்தாள் எவ்வளவு பிற்போக்கு தத்துவங்களை மகளுக்கு போதித்திருப்பார்?

பாவம் அந்த பெண்.. பொறந்த வீடும் சரியில்ல.. புகுந்த வீடும் சரியில்லை... சுடுகாடே பரவாயில்லைனு நினைச்சுட்டாங்க போல..

Ezhumalai Venkatesan

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை முறையிடும் போது "நம்ம வீட்டுக்கு வாம்மா" நான் பார்த்து கொள்வேன் என தைரியம் கொடுத்திருக்கலாம் தானே ..அல்லது போய் என்ன எது என்று பார்த்திருக்கலாம் தானே மணப்பெண் வீட்டுக்கு வந்தால் ஊர் என்ன சொல்லும் உறவென்ன சொல்லும் என்று...படித்த பிள்ளை எவ்வளவு செல்லமாக வளர்த்திருப்பார் .

கடைசியில் ....இப்படி போய்விட்டாயே அம்மா ? கண்டறியாத ஒருவனுக்கு ஒருத்தி ...அது உண்மையான பாசமுள்ள கணவனாய் இருந்தால் மட்டும். இவ்வ்ளவும் செலவு செய்து கட்டி கொடுத்த மனுஷன் உன்னை பார்க்கமலா விட்டு விடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரதட்சிணை கொடுமை: யாருக்கெல்லாம் ‘படிப்பினை’ ஆகிறது ரிதன்யா தற்கொலை வழக்கு?

1367877.jpg

வரதட்சிணை கொடுமையால் உயிரிழப்புகள் ஏற்படுவது நம் நாட்டில் அரிதான நிகழ்வொன்றும் அல்ல. அது ஊடகத்தின் ‘பிரதான கவனம்’ பெறுவதுதான் அரிதான நிகழ்வு. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருமணமான 4-ம் நாளில் 24 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கும், 300 பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ரிதன்யா தற்கொலை செய்யப்பட்டதற்கும் இந்தச் சமூகம் ஒரே மாதிரி ஒப்பாரி வைக்கவில்லை. சமூக வலைதளங்களிலும் இரண்டு சம்பவங்களுக்கும் ஒரே மாதிரியான அக்கறையோடு கருத்துகள் தெளிக்கப்படவில்லை.

எதிலும் அரசியல் என்பதுபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் எதற்கு அதிக கவனம் என்பதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பெண் என்றாலே பெரும் அரசியல்தான். 100+ சவரன் நகை என்பதால் கேரளத்து விஸ்மயாவையும், தமிழகத்து ரிதன்யாவையும் ஹைலைட் செய்துவிட்டு வெறும் 1 பவுன் நகை என்பதால் திருவள்ளூர் மகேஸ்வரியை துணுக்குச் செய்தியாக்காமல் இருப்போம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு உட்பட்ட நடக்கும் ஒவ்வொரு வரதட்சிணைக் கொடுமையையும் அதே முக்கியத்துவதோடு அணுகும்போது சமூகத்தில் அது அடிக்கடி பேசப்படும் பொருளாகும். வரதட்சிணைக் கொடுமைகளில் ஈடுபட நினைப்போருக்கு சமூகப் பார்வை நம் மீது இருக்கிறது என்று உள்ளூர ஓர் அச்ச உணர்வு ஏற்படக் கூடும் என்ற அக்கறையை பதிவு செய்து கொண்டு, ‘வரதட்சிணை கொடுமைக்கு பெண்கள் ‘பலி’ ஆக பெற்றோரும் காரணமா?’ என்ற வாதத்துக்கு நகர்வோம்.

ரிதன்யாவும் பெற்றோரும்.. - “மாற்று வாழ்க்கையை அமைப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. என் பொண்ணு ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லி இறந்துட்டா. அதுல எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. பெண்ணை இழந்தால் கூட. அதேமாதிரி எல்லா பொண்ணும் இருக்கணும்னு நான் நினைக்கல. வாழுறதுக்கு வழி இருக்கு. வாழலாம். தன் வாழ்க்கைய மாய்ச்சுதான் இந்த உலகத்தைவிட்டுப் போகணும்னு முடிவெடுப்பது தவறுதான்” - சமூகவலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் ரிதன்யாவின் தந்தை பேசிய வீடியோவில், அவர் இவ்வாறு கூறுவது பதிவாகியுள்ளது.

அவரது இந்தப் பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது. உண்மையில் ஓர் அரதப் பழசான, ஆணாதிக்கம் தடித்த வாக்கியம் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம். எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர், 12-ம் வகுப்பு படிக்கும் மகளின் திருமணம் பற்றி அடிக்கடி கனவுகளோடு பேசுவார். “என் மகளுக்கு 300 பவுனாவது நகை போட்டு, ஜாம் ஜாம்னு திருமணம் செய்ய வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார். அவர் 40+ இளைஞர்தான். படித்தவர். வியாபாரத்தில் வெற்றி கண்டவர். வெளிநாடுகளுக்கு அடிக்கடி விசிட் கொடுப்பவர். செல்போன் முதல் கார் வரை எல்லாவற்றையும் லேட்டஸ்டாக அப்கிரேட் செய்பவர். ஆனால், அவர் வரதட்சிணை ஐடியாலஜியை மட்டும் சற்றும் மாற்றிக் கொள்ளவில்லை.

அதாவது, அவரது வெற்றியும், கவுரவமும் மகளின் திருமணத்தை எவ்வளவு பகட்டாகச் செய்கிறோம் என்பதிலேயே நிரூபிக்க முடியும் என்று நம்புகிறார். அல்லது, அவ்வாறு நம்ப இந்தச் சமூகத்தால் பழக்கப்படுத்தப்பட்டுள்ளார். 5 பவுனோ, 500 பவுனோ மகளை கல்யாணச் சந்தையில் வியாபாரம் செய்துவிடுவதுதான் தகப்பனின் தலையாயக் கடமையாக இருக்கிறது. இதில் ரிதன்யாவின் தந்தையோ, மகேஸ்வரியின் தந்தையோ விதிவிலக்கல்ல.

மகளுக்கு வரதட்சிணை கொடுப்பது ஒரு குற்றம் என்று புரியாமலேயே அதை ஊக்குவிக்கும் அனைத்து பெற்றோருமே வரதட்சிணை மரணங்களுக்குப் பொறுப்பானவர்கள் தான். வரதட்சிணை கொடுப்பது குற்றம் என்பதால், வரதட்சிணை மரணங்கள் நிகழும்போது பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்வதும் வழக்கத்துக்கு வர வேண்டும். மகளை தொலைத்த துயரத்தில் இருப்பவர்களுக்கா? என்று கேட்காமல், இதை ஊக்குவிக்க வேண்டும்.

பெண்ணின் பெற்றோர்கள் எப்படி வரதட்சிணையை தங்களின் பெருமித அடையாளமாகக் கருதுகிறார்களோ, ஆணின் பெற்றோர்கள் வரதட்சிணையை அவர்களின் உரிமையாகக் கருதுகிறார்கள். அந்த வகையில், வரதட்சிணைக் கொடுமைகளுக்கு பெருங்காரணம் ஆணின் பெற்றோர் தான் என்றால் அது மிகையாகாது. தங்கள் மகனை எத்தனை பணத்துக்கு வியாபாரம் செய்யலாம் என்று கணக்குப் போடுபவர்கள் அவர்கள்தான். வரதட்சிணை கேவலம் என்று எந்த ஆண் மகனின் பெற்றோரும் அவரிடம் சொல்வதாகத் தெரிவதில்லை. மாறாக “உனக்கு இருக்கும் அழகுக்கும், சம்பாத்தியத்துக்கும்.. ” என்று கல்யாணச் சந்தையில் தன்னை ஒரு “பிராண்டாகக்” கருதப் பழக்குவதே ஆணின் பெற்றோர்கள் தான்.

திருமணத்துக்கான தகுதி என்பது பெண்ணை இணையராக நடத்தும் பக்குவம் மட்டுமே. இதை எத்தனை பெற்றோர் ஆண் பிள்ளைக்கு சொல்லி வளர்க்கிறார்கள். அப்பா, அண்ணன், அக்கா / தங்கையின் கணவர் எப்படி வாழ்க்கைத் துணையை நடத்துகிறார்களோ அப்படியே தனக்கு வரும் பெண்ணையும் அணுகுவது அவனுக்கு இயல்பானதாக இருக்கிறது. மேலும், மனைவி என்றால் நம் பாலியல் தேவைக்கான நுகர்பொருள் என்ற போக்கும் குடும்பங்களில் ஊக்குவிக்கப்படுகிறது. பெண்ணின் மனது என்னவென்பதை தாராளமாக வெளிப்படையாக தாய் தன் மகன்களிடம் பேசலாம்.

குற்றாச்சாட்டுகளை சுமத்தும் முன்... - ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கற்பிதம் எல்லாம் 27 வயதான, கல்லூரி படிப்பு முடித்த, கார் ஓட்டத் தெரிந்த, தந்தையின் தொழிலை நிர்வகித்து பழக்கமுள்ள, வசதியாக வளர்ந்த பெண்ணின் மனதில் பதிவாகிறது என்றால், அதற்கு குடும்பச் சூழலும் தூபம் போடாமல் இருந்திருக்க முடியாதல்லவா? ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு இயல்பாகக் கடத்தப்பட்டுவிடும். சிலர் மட்டுமே கல்வி, வாசிப்பு என்ற சிறகை விரித்து தேவையற்றதை விட்டொழிப்பார்கள், இல்லை குடும்பத்துக்கே புரிய வைப்பார்கள்.

ரிதன்யாவுக்கு என்ன மாதிரியான பழக்கவழக்கங்கள் ஊக்குவிக்கப்பட்டன என்பது வெளியில் இருந்து இந்த தற்கொலை விவகாரத்தை அணுகும் நமக்கு முழுமையாகத் தெரியாது என்றாலும் கூட மகளின் மரணத்துக்கு அவர் சொன்ன காரணத்தை உயர்த்திப் பிடிக்கும் தந்தையின் பேச்சு பிற்போக்கானது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதும் கூட. அதேவேளையில் தற்கொலை முடிவு தவறானது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை ரிதன்யாவின் தந்தை கூறியுள்ளார். மறுமணம் அவரவர் விருப்பம் என்பதிலும் உடன்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகளை மட்டுமே சுமத்தும் முன்னர் அவருடைய இந்த நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டுவது அவசியம்.

நமக்கு நாமே... - பெண் சுதந்திரம் என்பது யாரும் யாருக்கும் தானமாகக் கொடுப்பது அல்ல. இந்தா வைத்துக் கொள் என்று யாரும் நமக்கு பொட்டலம் கட்டிக் கொடுக்க மாட்டார்கள். பெண் சுதந்திரத்துக்கான பெரிய திறவுகோல் கல்வி. கல்லூரிக் கல்விவரை இன்றைய பெண்கள் கற்பது எளிதாகவே வசப்படுகிறது. கல்லூரியில் நீங்கள் என்னப் பாடம் வேண்டுமானாலும் படியுங்கள், ஆனால் அங்கேயும் சென்று பணக்காரர்களாக திரள்வது, ஊர்க்காரர்களாக திரள்வது, சாதிக்காரர்களாக திரள்வது என்று சுருங்காதீர்கள்.

பாடப் புத்தகத்தைத் தாண்டி வாசியுங்கள். சினிமா, பொழுதுபோக்கு தாண்டி அரசியல் பேசுங்கள். இன்னமும் நாட்டின் குடியரசுத் தலைவர் யார் என்று கூடத் தெரியாமல் பட்டம் பெறும் மாணவிகள் உள்ளனர். நீங்கள் பெறும் பட்டம், திருமணப் பத்திரிகையில் பதிவு செய்வதற்காக மட்டுமே இருக்குமாயின் நீங்கள்தான் வேண்டி விரும்பி அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். பணம் சம்பாதிக்கத் தேவையில்லை என்றாலும் பணிக்குச் செல்லுங்கள். நட்பு, வாசிப்பு, பணியிடம் என பயணப்படும்போது வாழ்க்கையில் தெளிவு பிறக்கும்.

பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி குறைந்த பட்ச அறிவாவது பெண்களுக்கு இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு இந்தச் சட்டங்கள் பற்றிய கையேடுகளைக் கொடுக்கலாம். அது பற்றிய விவாதங்களை ஊக்குவிக்கலாம். பெற்றோர், சமூகம், கல்வி நிறுவனங்கள் தாண்டி பெண்கள் தங்களுக்காக நிற்க வேண்டும்.

ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பழமொழி எழுதப்பட்ட கால, சூழல் வேறு. அதற்கான களமும் வேறு. ஆனால், வெகு நிச்சயமாக பெண்களுக்காக பொருத்திப் பார்க்கலாம்.

நீங்கள் உங்களுக்கான சுதந்திரத்தை யாராவது கொடுப்பார்கள் என்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தால், யாரும் கொடுக்க மாட்டார்கள். உங்களுக்காகப் போராட உங்களைவிட மிகத் திறமையானவர், தகுதியானவர் யாரும் இருக்க முடியாது. எந்தச் சூழலில் மீண்டெழ கல்வி அவசியம். அதை வாழ்க்கைக்குமானதாக மாற்றிக் கொள்வது உங்கள் வசம். இப்போது அதை செய்யாவிட்டால், எப்போது செய்யப்போகிறீர்கள் பெண்களே..!

இது ஒரு கூட்டுப் பொறுப்பு: இங்கே சமூகத்தையும், பெறோரையும் பெண் சுதந்திரத்தை மதியுங்கள் என்று அறிவுரை சொல்லும் அதேவேளையில் ஆண்களுக்கும் முக்கியமாக சில அறிவுறுத்தல்கள் உள்ளன. எத்தனை காலம் தான் நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்பவர்களாக, வரதட்சிணைக் கொடுமை செய்பவர்களாக, பெண் அடிமைத்தனம் செய்பவர்களாக, குடும்பத்தின் கவுரவத்தை பெண்ணின் தலையில் சுமத்துபவர்களாக இருப்பீர்கள். கொஞ்சமேனும், வெட்கப்பட மாட்டீர்களா? சிறிதளவேனும் உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்த மாட்டீர்களா?.

உங்கள் கல்வியை சம்பாத்தியத்துக்காக மட்டுமல்லாது சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் பயன்படுத்தும் வகையில் கற்றுக் கொள்ளுங்கள். பள்ளி, கல்லூரி, பணியிடம் என்று பாலின சமத்துவத்தை மதியுங்கள். அதுவே இல்வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும். படித்த, அழகான, குடும்பப் பாங்கான பெண், இந்தச் சமூகத்திலிருந்து, இத்தனை பவுன் நகையோடு வேண்டுமென கேட்கும் ஆணும், அவனது குடும்பமும் எவ்வளவு ஆபத்தானதோ, அதே அளவுக்கு ஆபத்தானவர்கள், எனக்கு எத்தனை பவுன் நகை போடுவீர்கள்? டிரீம் வெட்டிங் செய்வீர்களா? என்று பெற்றோருக்கே நெருக்கடி கொடுக்கும் ‘டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்’ வகையறா பெண்கள்.

வரதட்சிணைக் கொடுமையால் நிகழும் மரணங்களில் இவர்கள் எல்லோருமே ஸ்டேக் ஹோல்டர்ஸ்தான். இதனை ஒழிப்பதென்பது சமூக கூட்டுப் பொறுப்பே!

https://www.hindutamil.in/news/life-style/1367877-will-the-rithanya-case-serve-as-a-wake-up-call-for-parents-who-perpetuate-dowry-culture-4.html

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி

எல்லோர் வாழ்விலும் இதை நினைவில் கொள்ளுங்கள்.

உனக்காக நீ போராடு ....மிகவும் விருப்பமான ஒரு சொற் பதம் என் வாழ்விலும் நடந்திருக்கிறது போராடி எடுத்த ஒரு விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிலாமதி said:

ஒரு பிரபல ஹீப்ரூ பழமொழி உண்டு. ”நான் எனக்காக நிற்கவில்லை என்றால்; யார் நிற்பார்கள்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று அந்த பழமொழி

எல்லோர் வாழ்விலும் இதை நினைவில் கொள்ளுங்கள்.

உனக்காக நீ போராடு ....மிகவும் விருப்பமான ஒரு சொற் பதம் என் வாழ்விலும் நடந்திருக்கிறது போராடி எடுத்த ஒரு விடயம்.

எதையும் இலகுவாக சொல்லலாம்.போராட்டம் என்று வரும் போது கூட எவ்வளவு தூரம் அந்த குடும்பம் பின்னோக்கி சிந்திக்கிறது என்பதை பொறுத்தது தான் பெண்ணின் அடுத்த கட்ட முன்னேற்றம் இருக்கிறது.அது யாராக இருந்தாலும் அந்தந்த துன்பங்களை அனுபவிப்பர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

.போராட்டம் என்று வரும் போது கூட எவ்வளவு தூரம் அந்த குடும்பம் பின்னோக்கி சிந்திக்கிறது என்பதை பொறுத்தது தான் பெண்ணின் அடுத்த கட்ட முன்னேற்றம் இருக்கிறது.

உண்மை

மேலே ஏராளன் கட்டுரையில் சொல்லபட்டது போல வெற்றியும் கவுரவமும் எவ்வளவு பகட்டாக பணம் செலவு செய்து செய்கிறோம் என்பதிலேயே நிரூபிக்க முடியும் என்று வெளிநாட்டில் தமிழர்கள் நம்பி செய்வதை காணகூடியதாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முதல் குற்றவாளி வரதட்சணைதான் (A # 1), எமது சமூகத்திலும் வரதட்சணை வாங்குபவர்கள் உள்ளார்கள், ஆதிலும் பெரும்பாலானாவர்கள் படித்தவர்கள்தான் இந்த வரதட்சணை வாங்குபவர்களாக உள்ளார்கள்.

சிலர் வரதட்சணை கொடுப்பதினை பெருமையாக நினைப்பவர்களும் உள்ளார்கள்.

எமது சமூகத்தில் வரதட்சணையினை ஒரு பிற்போக்குத்தனமாக பார்க்கும் நிலை கூட இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ம் ....வரதட்ஷனை இல்லாதவர்களை யாரும் பெண் பார்ப்பதில்லை, காதலிப்பதில்லை. தன் பெண் வாழவேண்டுமென்பதற்காகவே எத்தனையோ பெற்றோர் கடன் வாங்கி கலியாணத்தை நடத்தி பின் கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள். வரதட்ஷனை கொடுக்க மாட்டேன் என அடம்பிடிப்பவர்கள் வாழ்நாள் எல்லாம் வாழாக்குமரி எனும் பட்டம். தன் பெண்ணுக்கு திருமணமாகிவிட வேண்டுமென பல லட்ஷங்களை செலவிடும் பெற்றோர் மாப்பிள்ளையின் தொழில், குடும்ப பின்னணி ஆராய்வதில்லை, பின் பெண் திரும்பி பிறந்த வீட்டுக்கு வந்தால் குடும்ப கௌரவம் போய் விடும், ஏனைய பிள்ளைகளுக்கு வரன் வராமல் போய்விடுமென சமாதானம் செய்து புகுந்த வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்கள், அல்லது தமது பெற்றோர் பட்ட கஷ்ரம், படும் கஸ்ரம் கண்டு மேலும் கஷ்ரப்படுத்தாமல் தவறான முடிவை எடுக்கிறார்கள். இதுவே ஆண் வீட்டடாருக்கு வசதியாக போய்விடுகிறது. கிடாய் வளர்ப்பது போல் சீதன சந்தையில் விற்று விட தீனி போட்டு வளர்க்கிறார்கள், நல்ல பண்பை, தன் மானத்தை சொல்லிக்கொடுப்பதில்லை. காதலித்து தந்தையாகிய பின்னும் சீதனம் என்றவுடன் வாயைப்பிளந்துகொண்டு இன்னொரு கலியாணத்திற்கு சம்மதிக்கிறார்கள். நம்பிய பெண்ணை கைவிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். இதுவே பெண் செய்தால் ஏற்றுக்கொள்வதில்லை. பெற்றோர் பெண்குழந்தைகளை வெறுப்பதற்கும் சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதற்கும், சீதன தொகை உயர்வுக்கும் காரணமாகிறது. அதிக சீதனம் கொடுப்பதோடு வாழ்நாள் பிரச்சனைகளையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு நிச்சயம் செய்கிறார்கள் பின் வேறொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் காரணம், சீதனச்சந்தையில் அதிக விலைகொடுத்து வாங்கிவிட்டார்கள். சீதனம் எனும் பிரச்சனையால் கரையேறாக் குமரிகளும் தன்மானம் கெட்ட கழுதைகளும் பெரும் சுமையாக உள்ளது. படித்த பெண்ணுக்கு அதிக வரதட்சனை. காரணம் பெண்ணை விட படித்த, மேலான வேலை பார்க்கும் மாப்பிளை என்பதால். படித்த மேலான வேலை பார்க்கும் ஆணுக்கு ஒரு பெண்ணை காப்பாற்ற முடியாதா? அப்படிப்பட்டவரை நம்பி எதற்கு பெண்ணை ஒப்படைகிறார்கள். இது சீதனமுமல்ல அந்தப்பெண்ணை பராமரிப்பதற்கு அளிக்கப்படும் தொகை, பிச்சை. அந்தப்பெண், பிள்ளை பெற மாட்டேன் என்றால் சம்மதிப்பார்களா? அல்லது அதற்கு பணம் கொடுப்பார்களா மாப்பிள்ளை வீட்டார்? சீதனத்தையும் கொடுத்து அந்த வீட்டுக்கு சம்பளமில்லாமல் மாடாய் உழைக்கிறாள் பெண். அதில் பெண் குழந்தை பிறந்தால் அது வேறு அவள்தான் தாக்கப்படுகிறாள். குழந்தை பெறாவிட்டாலும் வசை பாடுகிறார்கள், வேறு கலியாணம் செய்கிறார்கள். சீதனம் கொடுப்பது, பிள்ளை பெறுவதற்கு மட்டுமே பெண்ணை வாங்குகிறார்கள். அவளுக்கும் மனதுண்டு, ஆசை, விருப்பு வெறுப்பு உண்டு என்பதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆணிற்த் தான் குறைபாடு என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரித்தன்யாவின் தாய், தந்தையரின் வாக்கு முலத்தின் படி பார்க்கப் போனால் இந்த ஆண் மனோ ரீதியாக ஏதோ பாதிப்புடையவர் போல் உள்ளது..காரணம் நாட்கணக்காக குளிக்க மாட்டாராம், அறையைச் சாத்திக் கொண்டு வீட்டுக்குள்ளயே இருந்து பழக்க பட்ட ஒருவராம்..அது மட்டுமல்ல திருமணத்தின் பின் தான் இந்தியாவில் சில இடங்களையே சுற்றி பார்த்திருக்கிறார் அதுவும் பெண் வீட்டாரின் உதவியோடு.ஆக மொத்ததில் இவருக்கு ஏதோ மைல்டான உடல், உள பிரச்சனைகள் இருந்திருக்க வேண்டும்.சொல்லாமல் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உடையை நிலத்தை வாங்கும்போது தெரிவுசெய்யும்போது எத்தனை யோசிக்கிறோம் விசாரிக்கிறோம் ஆனால் பெண்ணை கொடுக்கும் போது அவ்வளவு சிரத்தை எடுப்பதில்லை பெரும்பாலும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள் காரணம் யாராவது காது குத்தி குழப்பிப்போடுவார்கள் என்கிற பயம் இது இருபாலாருக்கும் பொருந்தும். தெரிந்தவர்கள், உறவினர், எதிரிகள், அண்டை வீட்டார், தொழில் புரியுமிடம் என பலரிடமும் விசாரிக்க வேண்டும். இதற்குத்தான் நம்மவர் சொல்வர் "ஒரு கலியாணம் செய்து வைப்பதென்றால் ஏழு செருப்பு தேயவேண்டுமென்று." பெண் வீட்டிலிருந்து பெறும் வரதட்ஷணையில் வாழ நினைப்பதும், தொடர்ந்து வாங்கி வாழலாம் என நினைப்பதும் தவறு. இதுவே இன்றைய ஆண் பிள்ளைகள், அவர்களைப்பெற்றவர்களின் நினைப்பு.

பணமும் போய் பிள்ளையையும் இழந்து தவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

515640316_4024781801097118_4957453930695

■2 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட திருமணம்,

■நகை, கார் என்று 3 கோடி ரூபாய் வரதட்சணை.,

■5 கோடி ரூபாயை அந்த பெண்ணின் வங்கி கணக்கில் fixed deposit செய்தாலே 7% க்கு வட்டி கிடைத்து இருக்கும் அதாவது குறைந்தது மாதம் 3 லட்சம் ரூபாய் வருவாய்.,

■இதை வைத்து அந்த பெண் 7 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிட முடியும்.,

■ஆக இந்த திருமணத்திலும் பெண் நல்லா வாழனும் என்பதை விட பெற்றோரின் கௌரவம் தான் பிரதானமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.!

■பெற்றோரின் கௌரவத்துக்கு பணத்தாசை பிடித்த மிருகங்களிடம் சிக்கி பலியான பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

உண்மை உரைகல்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1367877.jpg?resize=750%2C375&ssl=1

ரிதன்யாவின் மரணம் – மாமியார் கைது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான  ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும்   கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 28-ந் திகதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தன் உயிரை  மாய்த்துக்கொண்டார். தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி தனது மரணத்திற்கு  தனது கணவர், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய குரல் பதிவொன்று அனுப்பி இருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து சேவூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வர மூர்த்தியை கைது செய்தனர்.

இதையடுத்து மாமியார் சித்ராதேவி உடல் நலக்குறைவு காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டிருந்தார். கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி இருவரும் தங்களை பிணையில்  விடுவிக்க அனுமதிக்கு மாறு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் 7-ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவியை தனிப்படை பொலிஸார்  கைது செய்துள்ளனர். சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். ரிதன்யாவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து மாமியார் சித்ரா தேவியை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image preview

ரிதன்யாவின் மரணம் - மாமியார் கைது

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி புதூரை சேர்ந்தவர் தொழிலதிபரான அண்ணா துரை. இவருடைய மகள் ரிதன்யா. 27 வயதான ரிதன்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபரான  ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கு...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.