Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி?

1373059.jpg

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம்.

சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்).

தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை.

ADVERTISEMENT

HinduTamil12thAugustHinduTamil12thAugust

’மாநகரம்’ தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என தனக்கென ஒரு பாணி, விறுவிறுப்பான திரைக்கதை உத்தி மூலம் இந்தியாவின் ‘மோஸ்ட் வான்ட்டட்’ இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்தியாவின் நம்பர் ஒன் சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினியை இயக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டாரா என்று கேட்டால், ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

லோகேஷ் இயக்கத்தில் வெளியானதிலேயே ‘லியோ’ தான் சுமாரான படம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் தற்போது ‘வீக்’ ஆன திரைக்கதையின் மூலம் லோகேஷின் மிக ஆவரேஜான படம் என்ற பெருமையை ‘கூலி’ தட்டிச் சென்றுள்ளது.

வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’ இன்ட்ரோ காட்சி, சத்யராஜின் மரணம், அதற்கான காரணங்களை ரஜினி தேடத் தொடங்குவது என பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைப்பதுடன் தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளிலேயே சரியத் தொடங்கி விடுகிறது. அதற்கு காரணம் எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும், காட்சிகளுக்கும் வலுவான பின்னணி இல்லாததுதான். ஸ்ருதிஹாசன் தொடங்கி சத்யராஜ், நாகர்ஜுனா, ரச்சிதா ராம் என ஏராளமாக கேரக்டர்கள் திரையில் உலவினாலும் இவர்கள் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை.

படம் முழுக்க ரஜினி, சவுபின் இருவருடைய ஆதிக்கம்தான். தனது அட்டகாசமான திரை ஆளுமையால் ரஜினிகாந்த், நட்சத்திர நெரிசல் மிகுந்த படத்தில் வழக்கம் போல ஜொலிக்கிறார். ரஜினியின் சின்னச் சின்ன மேனரிசங்கள் கூட ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. படத்தில் ஆங்காங்கே வரும் ‘ரஜினி ஸ்பெஷல்’ தருணங்கள் படத்தின் நகர்வுக்கு வலுவூட்டுகின்றன.

சவுபினுக்கு முழுநீள நெகட்டிவ் கதாபாத்திரம். படம் முழுக்க தனது குரூரத் தன்மை கொண்ட கதாபாத்திரத்துக்கு சிறப்பான முறையில் நியாயம் செய்திருக்கிறார். மற்றபடி நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோருக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சில காட்சிகளே வந்தாலும் உபேந்திரா வரும் இடங்கள் மாஸ். ஆமீர்கான் கதாபத்திரம் ரோலக்ஸின் இன்னொரு வடிவம். சிறிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.

லோகேஷின் படங்களில் தொடக்கம் முதல் வரும் ஒரு டம்மி கதாபாத்திரம் திடீரென ஆக்ரோஷம் கொண்டு எழுந்து நிற்கும். உதாரணமாக ‘விக்ரம்’ படத்தில் வரும் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம். அப்படி இதிலும் லோகேஷ் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது பெரியளவில் கைகொடுக்கவில்லை. இணையத்தில் பெரும் வைரலான ‘மோனிகா’ பாடல் பொருந்தாத இடத்தில் வருகிறது. ஆனால் அதில் பூஜா ஹெக்டேவின் நடனம் சிறப்பு.

அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.

80களின் ரஜினியை ரசித்தவர்களுக்கு படத்தில் சிறப்பான ட்ரீட் உள்ளது. நேர்த்தியான முறையில் டீ-ஏஜிங் செய்த தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். லோகேஷ் படங்களில் டிரேட்மார்க் ஆக வரும் பழைய பாடல் இதில் சுத்தமாக எடுபடவில்லை.

படத்தின் முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. ஆனால், படத்தின் நீளம் காரணமாக கிட்டத்தட்ட அந்தக் காட்சி வரும்போதே பார்வையாளர்கள் சலிப்படைந்து விடுகின்றனர்.

மொத்தத்தில் எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறப்பாக இருந்தாலும், அது சொல்லப்பட்ட விதத்தில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாததால் ‘ஆவரேஜ்’ ஆன படம் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது ‘கூலி’. ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன.

‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி? | Coolie Movie Review - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

532006668_1284400549727677_2637895856618

"கூலி" படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்று நேர்த்திக்கடன் வைத்து,

மண்சோறு சாப்பிட்ட... ரசிக குஞ்சுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

532006668_1284400549727677_2637895856618

"கூலி" படம் ஆயிரம் கோடி வசூல் செய்ய வேண்டும் என்று நேர்த்திக்கடன் வைத்து,

மண்சோறு சாப்பிட்ட... ரசிக குஞ்சுகள்.

அவனவன் பணத்தை சுருட்டிக் கொண்டு போகிறான்.

ஏமாளிகள் மண்சோறு சாப்பிட்டு மண்டையைப் போடப் போறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் : கூலி!

14 Aug 2025, 5:18 PM

cakd.jpg

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘கூலி’?

’ஆயிரம் கோடி வசூலை நிச்சயம் தமிழ் திரையுலகில் இருந்து நிகழ்த்தும்’ என்ற எதிர்பார்ப்பைப் பெருக்கியது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவான ‘கூலி’. அனிருத்தின் இசை, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு மற்றும் சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், நாகார்ஜுனா, அமீர்கான், ஷ்ருதிஹாசனின் இருப்பு எனப் பல அம்சங்கள் அதற்குத் துணை நின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘கூலி’, இன்று (ஆகஸ்ட் 14) தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

‘கூலி’ எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவானது?

பழிக்குப் பழி!

canandna-1024x576.webp

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடத்தல் வேலைகளைச் செய்து வருகிறார் சைமன் (நாகார்ஜுனா). அவரிடத்தில் வேலை செய்யும் கூலியாட்களில் காவல் துறையைச் சேர்ந்த உளவாளிகள் இருப்பதாகத் தகவல் தெரியும்போதெல்லாம், அவர்களைக் கண்டறிந்து கொடூரமாகக் கொல்கிறார் அடியாள் தயாள் (சௌஃபின் ஷாஹிர்).

ஒருநாள் தங்கள் தொழிலுக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாதவரான ராஜசேகர் (சத்யராஜ்) என்பவரை நாடுகிறது சைமன் கும்பல். அதனைச் செய்யாவிட்டால், அவரது மூன்று மகள்களையும் கொலை செய்வதாக மிரட்டுகிறது. அதனால், வேறு வழியில்லாமல் அவர்கள் செய்கிற குற்றங்களுக்குத் துணையாக இருக்கிறார் ராஜசேகர்.

இந்த நிலையில், திடீரென்று ராஜசேகர் மரணமடைகிறார். இந்தத் தகவல் சென்னையில் இருக்கும் அவரது உயிர் நண்பரான தேவாவுக்குத் தெரிய வருகிறது.

ராஜசேகரின் இறுதிச்சடங்குகளில் தேவா கலந்துகொள்வதை, அவரது மூத்த மகள் ப்ரீத்தி ஏற்கவில்லை. ‘நீங்க ஏன் இங்க வந்தீங்க’ என்று அவரை விரட்டுகிறார்.

ஆனால், அதே தேவா ப்ரீத்திக்கு உதவிக்கரம் நீட்டுகிற சூழல் உருவாகிறது.

ராஜசேகர் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மையைக் கண்டறிகிறார் தேவா. அவர் சைமனிடத்தில் வேலை செய்தார் என்பதை அறிந்து, ப்ரீத்தி உடன் துறைமுகத்திற்குச் செல்கிறார்.

அங்கு தயாளின் இன்னொரு முகம் அவருக்குத் தெரிய வருகிறது.

அதன்பிறகு என்ன ஆனது? நண்பனைக் கொன்றவரைத் தேவா கண்டறிந்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கூலி’யின் மீதி.

’நண்பனைக் கொன்றவரைப் பழி வாங்காமல் விட மாட்டேன்’ என்று எதிரியின் கோட்டைக்குள் நுழைகிற ஒரு ஐம்பது ப்ளஸ்களில் இருக்கிற ஒரு ‘முன்னாள்’ கூலியின் ‘ஆக்‌ஷன் எபிசோடு’ தான் இப்படத்தின் ஆதார மையம்.

image-267.png

பெரிதாக பஞ்ச் டயலாக்குகள், ஹீரோவுக்கான காதல் காட்சிகள், காமெடி ட்ரூப் கலாட்டாக்கள் இல்லாமல், சீரியசாக கதை சொல்கிற பாணியில் இப்படத்தின் காட்சியாக்கத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ஆக்‌ஷன் படம் எனில் சஸ்பென்ஸ் அல்லது சர்ப்ரைஸ் ஆகச் சில விஷயங்கள் சொல்லப்படும். இதிலும் அப்படியொரு விஷயம் இருக்கிறது. அது ‘ஊமை விழிகள்’, ‘எல்லாமே என் காதலி’, ‘காக்கிசட்டை’ எனப் பல படங்களில் நாம் பார்த்ததுதான்.. படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கவும் அதுவே காரணமாக உள்ளது.

ரஜினியின் ‘கெட்டப்’!

வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் காட்சியாக்கம் ‘புதிதாக ஏதோ ஒன்றை’க் கண்ட உணர்வை ஏற்படுத்தும். விஎஃப்எக்ஸும் டிஐயும் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். இதிலும் அப்படியே.

ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சதிஸ்குமார், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அதனைச் சாதித்திருக்கிறது.

image-264-1024x576.png

அனிருத்தின் இசையில் ‘சிக்குடு’, ‘மோனிகா’ பாடல்கள் எளிதாக ஈர்க்கின்றன. பின்னணி இசை சில காட்சிகளில் பிரமாண்டத்தை உணர வைக்கிறது; ஆனாலும் பல இடங்களில் இரைச்சல் அதிகம்.

இப்படத்தின் எழுத்தாக்கத்தைச் சந்துரு அன்பழகனோடு இணைந்து கையாண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்திலும் கிளாசிக் திரையிசைப் பாடல்களைப் புகுத்துகிற வேலையைச் செய்திருக்கிறார் இயக்குனர். ‘வா வா பக்கம் வா’ என ‘தங்கமகன்’ படத்தின் பாடல் ஒலிக்கிற அந்த இடைவேளைக்கு முன்பான காட்சி மண்டைக்குள் ‘ஜிவ்வ்..’வென்ற உணர்வை ஏற்படுத்துகிறது. போலவே, இடைவேளை ‘ப்ளாக்’கில் ரஜினியின் ஸ்டைலான நடிப்பு அசத்தல்.

அதேநேரத்தில், ‘இதேமாதிரி படம் முழுக்க விஷயங்களைக் கொட்டினா இன்னாவாம்’ என்று ரசிகர்கள் புலம்புகிற வகையில் இதர காட்சிகள் இருக்கின்றன.

அந்த காட்சிகளைக் காண்கிறபோது வேறு கதாசிரியர்கள், திரைக்கதையாசிரியர்களின் பங்களிப்பைப் பெறலாமே என்ற எண்ணம் மனதில் விஸ்வரூபம் எடுக்கிறது.

நட்சத்திர அந்தஸ்து உள்ள நாயகர்களைத் திரையில் காட்டுகிறபோது, முந்தைய படங்களில் அவர்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்த விஷயங்களையும் தொட்டுச் சென்றாக வேண்டும். அதோடு தனது கதை சொல்லலையும் இணைத்து சமநிலையை உருவாக்குவதில் தடுமாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் இருக்கிற ஒரு நாயகனாக ரஜினியின் ஸ்டைல், ஆக்‌ஷன் பில்டப் எல்லாம் வழக்கமானதாக அமைந்திருக்கின்றன. அவற்றைத் தாண்டி, மிகச்சில இடங்களில் அவரது நடிப்பு சிரிக்க வைக்கிறது. ஒரு ‘பவர்ஹவுஸ்’ ஆக படத்தைத் தாங்கி நிற்கிறது.

இந்த படத்தில் வில்லன்கள் என்று சிலர் வந்து போகின்றனர்.

அவர்களில் இயக்குனர் முதன்மையாக முன்னிறுத்துவது ‘கிங்’ என்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் நாகார்ஜுனா. ஆனால், அவர் சண்டையிடும்போது ‘வில்லனாக’ நம் கண்களுக்கு தெரிவதே இல்லை. அது இப்படத்தின் தலையாய ‘மைனஸ்’களில் ஒன்று.

தனது இருப்பால் அந்தக் குறையைச் சமன் செய்திருக்கிறார் மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர். ‘தயாள்’ ஆக வந்து மிரட்டியிருக்கிறார்.

image-268.png

ரக்‌ஷிதா ராம், கண்ணா ரவி வருகிற காட்சிகள் புதிதாக இல்லை; அதேநேரத்தில், அவை சில ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்குகின்றன என்பதை மறுக்க முடியாது.  

சத்யராஜுக்கு இதில் பெரிதாகக் காட்சிகள் இல்லை. அதேநேரத்தில், கதையின் அச்சாணிப் பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.

image-263.png

ஷ்ருதிஹாசன் இப்படத்தில் ஆங்காங்கே வருகிறார். அவரது சோகமே உருவான பாவனைகள் நம்மை அயர்ச்சியுறச் செய்கின்றன.

உபேந்திரா, அமீர்கான் இருவரும் ‘கேமியோ’வாக வந்து ‘கைத்தட்டல்’களை அள்ள முயற்சித்திருக்கின்றனர். இரண்டாமவர் அதனை எளிதாகச் சாதித்திருக்கிறார்.

இதுபோக மகேஷ் மஞ்ச்ரேகர், சார்லி, பாபுராஜ், காளி வெங்கட், தமிழ், ரிஷிகாந்த், திலீபன், ரொபா மோனிகா, மோனிஷா ப்ளெஸ்ஸி, மாறன் எனச் சிலர் இப்படத்தில் உண்டு.

அவர்களது காட்சிகளில் பெரிதாக அதிருப்தி இல்லை. அதேநேரத்தில், அவர்களில் பலருக்குத் தனித்துவமான பாத்திர வார்ப்பு அமையாதது ‘மைனஸ்’ தான்.

ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்திய ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் அதிகமாக இடம்பெறாதது, ரஜினி – சத்யராஜ் நட்பு பிணைப்பைத் திறம்படக் காட்டாதது, இதற்கு முன்பான ‘லோ.க.’ படங்களில் உள்ள சில விஷயங்கள் இதிலும் ‘ரிப்பீட்’ ஆகியிருப்பது என ‘கூலி’யில் சில குறைகளைப் பட்டியலிட முடியும். அவற்றைக் கடந்து ‘ஓகே’ எனும்படியான திரையனுபவத்தைத் தருகிறது இப்படம்.

’ஆஹா..’, ‘ஓஹோ..’ எனப் புகழும்படியாக ‘கூலி’யை உருவாக்கியிருந்தால், ரஜினியின் ஐம்பதாண்டு காலத் திரைப் பங்களிப்பை இன்னும் ‘அபாரமாக’ கொண்டாடலாம்.. அந்த வாய்ப்பினைத் தவறவிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ஏற்கனவே சொன்னது போல, ‘ஆயிரம் கோடி வசூல்’ இலக்கை எட்டுகிற ரேஸில் ‘கூலி’ அடைகிற இடம் என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஒருவேளை அந்த இலக்கு இல்லாமல் களமிறங்கியிருந்தால் கூட வெற்றி எளிதாக வாய்த்திருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம் தருகிற திரையனுபவம்..!

https://minnambalam.com/rajinikanth-coolie-movie-review/

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிக்கு லாஜிக் இல்லையினா ஓ.கே.. கதைக்கே லாஜிக் இல்லையினா எப்படி? கூலி சொதப்பல் வறுவல் இதோ!

1373059.jpg

சென்னை: விக்ரம், லியோ படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதை விட கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம் கூலி. காரணம் லோகேஷ் கனகராஜ் + ரஜினிகாந்த் என்பதால் தான். ஆனால், படம் உள்ளூர் தொடங்கி வெளிநாடுகள் வரை தர்ம அடி வாங்கிக் கொண்டு உள்ளது. காரணம் படத்தின் திரைக்கதையில் இருக்கும் ஓட்டை உடைசல்கள்தான். இன்னும் சொல்லப்போனால் சொதப்பல் தான் படமே இருக்கிறது எனக் கூறும் அளவுக்கு ஏகப்பட்ட சொதப்பல்.

சத்யராஜை வில்லன் கொன்றுவிட, அதற்கு பழிவாங்குகிறார் ரஜினி. இது தான் கதை. சத்யராஜை கொன்று விட்டார்களே என்ற பரிதாபமோ, கோபமோ ரசிகர்களுக்கு ஏற்படவே இல்லை. அதற்காக ரஜினி பழி வாங்கினால் என்ன வாங்கவில்லை என்றால் என்ன என்றுதான் இருந்தது.

படத்திற்கே மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்த மோனிகா பாடல். ஏன் வந்துச்சு, எதுக்கு வந்துச்சு என்றே தெரியவில்லை. திரைக்கதையில் பாடல் காட்சி இடம் பெற்றிருந்த இடம் ஒட்டவேயில்லை. பாடல் நன்றாக இருந்ததே என்று அனைவரும் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். இல்லையென்றால் வெளியே கூட எழுந்து சென்றிருக்க அதிக வாய்ப்பு.

காரில் செல்லும் ஸ்ருதி ஹாசனை சௌபின் பைக்கில் துரத்துகிறார். காரின் ஜன்னல் கண்ணாடியை மூடியிருந்தால் சௌபின் காருக்குள் ஏறி இருக்க வாய்ப்பில்லை. இது மட்டும் இல்லாமல், காரை வைத்து பைக்கை ஒரு இடி இடித்து இருக்கலாமே?

சத்யராஜை சௌபின் ஏன் கொல்லுகிறார்? கூலியாக இருந்து நடுக்கடலில் இருந்து தப்பித்து வந்த ரஜினிகாந்திற்கு மேன்ஷன் கட்டி அதை நடத்தும் அளவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? ஃபிளாஷ் பேக்கில் கூலியாக இருக்கும் சத்யராஜ், சமகால கதையில் விஞ்ஞானியாக உள்ளார் அது எப்படி?

ஒரு காட்சி கூட இல்லை: விசில் அடித்தால் இறங்கி அடிப்போம் என இருக்கும் ரஜினியின் நண்பர்கள், ஸ்ருதி ஹாசனை மீட்கச் சென்று இருக்கலாம். அதனால் லொள்ளு சபா மாறன் கொல்லப்பட்டிருக்க மாட்டார். கதாநாயகன் தரப்பைச் சார்ந்தவர்களை வில்லன் கொல்லும் போது கரிசணம் ஏற்படும் அளவுக்கு கூட ஒரு காட்சி இல்லை.

சொதப்பல்: கொடூர வில்லன் நாகர்ஜுனாவுக்கு தனது தந்தையை கொன்றவரை நியாபகம் இல்லை என்பது வேடிக்கை. நாகார்ஜுனாவின் மகனை வைத்து சௌபின் காய் நகர்த்தி இருக்கலாம். ஆனால் அதை விடுத்து நாகர்ஜுனா மகனைக் கொலை செய்வதும் திரைக்கதை சொதப்பல்.

வருத்தம்: இந்த படத்திற்கு எதற்கு ஆமிர் கான்? அவர் படத்தில் வந்த காட்சிகள், ரசிகர்களாகிய நாங்கள் நொந்த காட்சியாக மாறிவிட்டது. ரஜினியின் ரசிகர் என வில்லனுக்கு எல்லாம் வில்லன் கூறும்போது யப்பா முடியல என்பது போலத்தான் இருந்தது. கதை கேட்காமல் நடித்த ஆமிர் கானை நினைத்து வருத்தப்படுவதா இல்லை? தலைவர் படம் முதல் நாளே பார்த்தாக வேண்டும் என படத்திற்கு போன ரசிகர்களை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ரூபாய் 200 கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, பிளாக்கில் 4500 க்கு டிக்கெட் வாங்கி படம் பார்த்தவர்களை நினைத்து மனசை தேற்றிக் கொண்டு வெளியேறியாகிவிட்டது.

https://tamil.filmibeat.com/news/rajinikanth-lokesh-kanagaraj-coolie-movie-moves-to-failure-of-screenplay-mistakes-162293.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் வறுத்தாலும் நாம தலீவர் படத்தை அகன்ற வெண்திரையில் பார்ப்போம்! ஞாயிறு ஷோ புக்கிங் ரெடி😍 ஆன்ரிகளின் விசில் காதில் விண் கூவும்😁

ஆயிரம் கோடியை அள்ள ‘கூலி’ என்ற பெயரையே கெடுப்பதா?

-பிரகாஷ் தேவேந்திரன்

1373059.jpg

75 வயதிலும் துடிப்பான ரஜினிகாந்த்! ஈர்ப்பைத் தரும் ஸ்டைல் நடிப்பு, அதிரடி சண்டைகள், ரத்தம் சொட்டும் வன்முறை, கணக்கு வழக்கில்லாமல் நடக்கும் கொலைகள்.. என அதகளம் காட்டும் படத்தில் கதை இருக்கிறதா? நல்ல மெசேஜ் இருக்கிறதா? குழந்தைகள், பெண்கள் என குடும்பத்தோடு பார்க்க முடியுமா? ஒரு அலசல்;

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  கூலி திரைப்படம், அவரது திரையுலக பயணத்தில் 50-ம் ஆண்டை நிறைவு செய்யும் திரைப்படமாக வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகிறது என்றாலே, அது வொரு திருவிழா போல அமைந்துவிடுகிறது அவரது ரசிகர்களுக்கு..

சன் பிக்சர்கஸ் தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படம் இயக்குகிறார் என்ற அறிவுப்பு வெளியாகிய உடனேயே, மக்கள் மத்தியில் பற்றிக் கொண்டு விட்டது ஒரு எதிர்பார்ப்பு. ஆடியோ ரிலீஸ்சில் ரஜினிகாந்த் பேசிய அந்த வார்த்தைகள், தமிழ்நாட்டு மக்கள் நெஞ்சில் இன்னமும் நெகிழ்வாக நின்றுகொண்டிருக்கிறது. அதாவது, “என்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்களின் பாதங்களில் என் தலையை வைத்து எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்பது தான் அது.

சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் டைரக்டராக உயர்ந்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ் என்று புகழாரங்கள் சூட்டப்படுகின்றன. கூலி திரைப்படத்திலும் அதே ஃபார்முலா  தான். கத்தி, கோடாரி, வெட்டு குத்து ரத்தம், கொடூரமான கொலைகள்.. அப்பப்பா.. ஜீரணிப்பதற்கு காலம் தேவைப்படுகிறது.

இந்தப் படத்தின் கதையை வித்தியாசமாக அமைக்கலாம் என்ற முடிவில், திரைக்கதைக்குள் பல ட்விஸ்ட்டுகளை வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ். அவை பெரிதாக எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும்.

க்ரிமேட்டர் மெஷின், அதாவது இறந்த உடலை மின்சாரம் பாய்ச்சி சில நொடிகளில் அதனை சாம்பலாக்கும் நவீன இயந்திரம். அந்த க்ரிமேட்டர் மிஷினை உருவாக்கும் சத்யராஜை கொண்டு, தங்களால் கொலை செய்யப்பட்ட ஒரு இருபது பேரின் உடல்களை அழிக்கச் சொல்கிறார் வில்லன் நாகார்ஜுனா.

சத்தியராஜ் அதை செய்யவில்லை என்றால், அவரது மூன்று இளம் மகள்களை அழித்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததால், அவர் அதை ஒப்புக் கொண்டு செய்து வருகிறார். இங்கு தொடங்கும் கதை, நாகார்ஜுனாவின் கையாள் சோபின் ஷாஹிரால் சத்தியராஜ் கொல்லப்பட, தனது உற்ற நண்பனும் மைத்துனனும் ஆன சத்தியராஜின் கொலைக்கு பழி வாங்குவதற்காக உள்ளே வருகிறார் ரஜினிகாந்த்.

cooliemovietwitterreview-1755108209-down

திரைப்படத்தின் கதையை முமையாக சொல்வது சரியல்ல.  ஆனால், இந்த படத்தின் கதையில் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை.  அதே கமர்ஷியல் கதை தான். கதைக் களம் துறைமுகத்தில் நிற்கும் கண்டைனர் கப்பல்கள் மற்றும் கடல் அலைகள் பின்னணியோடு நகர்கிறது. திரைப்படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் ஹீரோ அறிமுகம், அதைத்தொடர்ந்து ஹீரோ அறிமுகப் பாடல். முக்கால் மணிநேரம் முடிவதற்குள், மூன்று ஃபைட், மூன்று பாடல்கள் முடிந்து விடுகிறது. ஒருமணிநேரத்துக்குள் ஐந்து பாடல்கள், ரத்தம் சொட்டச் சொட்ட ரணகளமான கொலைகள். ஒரு இருபது பேர் உடல்களை, காவல்துறை கண்களுக்கு தெரியாமல் மறைப்பதற்கு சத்யராஜின் க்ரிமேட்டர் தொழில் நுட்பத்தை அணுகும் வில்லன் நாகார்ஜுனா, அதற்கு பிறகு நிகழும் கேட்பாரற்ற, சுமார் நூறு கொலைகளை எப்படி மறைத்தார் என்று தெரியவில்லை.

பழைய பாடல்களை ஒலிக்க விட்டு, நிகழும் சண்டை காட்சிகள், தலைமறைவாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வரும் முன்னாள் வீரர்கள் (கேங்க்ஸ்டர்ஸ்), அப்பா மகள் செண்டிமெண்ட் என்று எல்லாமே லோகேஷின் ட்ரெண்டில் கூலி திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கேமரா பதிவுகளும், எடிட்டரின் ஒட்டு-வெட்டுகளும் நன்றாக இருக்கிறது. சாண்டி மாஸ்டரால் இதில் இவ்வளவு தான் செய்ய முடியும். அனிருத்தின் பாடல்கள் ஓகே ரகம். பிண்ணனி இசையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும். ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சோபின், சார்லி, லொள்ளு சபா மாறன் என்று எல்லோரும் திறமையான நடிகர்களே. உபேந்திராவுக்கு நடிக்க ஒன்றும் இடமில்லை. இதில், ஸ்ருதிஹாசனின் பெர்ஃமார்மன்ஸ் அபாரமாக இருக்கிறது. வாழ்த்துகள் ஸ்ருதி..

shruti2-1755158716.jpg

அமீர்கான் எப்போது வருவார் என்று ஆடியன்ஸ் மத்தியில் பெரிய எதிர்பார்பையே ஏற்படுத்திவிட்டார்கள். கடைசியில், படம் முடிவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக வருகிறார் அவர். வந்தவுடன் என்ன..? டமால் டுமீல் தான்.. ஒரு முப்பது பேர் காலி. அவருடைய கெட்-அப் நன்றாக இருந்தாலும், அவரைப் போய் இப்படியா பயன்படுத்துவது என்று சலிப்பு மேலோங்குகிறது. நல்ல திறமையான நடிகரை முற்றிலும் வீணடித்துவிட்டார்கள்.

படம்  முழுக்க லாஜிக் அவுட்டுகள் நிறைய இருக்கின்றன.

சுத்தியலால் ஓங்கி மண்டையில் அடித்தும் சாகாமல் நின்று பேசுவது,

சவக்குழியில் அதுவும் ஈர மண்ணில் புதைக்கப்பட்டவர் உயிரோடு எழுந்து வருவது,

சோபினின் காதலி சொல்வதை உண்மை என்று நம்பும் கண்ணா ரவி கதாபாத்திரம் என்று, சொல்லிக் கொண்டே போகலாம்.

ரஜினியும், சத்யராஜும் உயிருக்கு உயிரான நண்பர்களாக சொல்லப்பட்டாலும், ஒரேயொரு முறை தான் இருவரும் இணைந்திருக்கும் காட்சி அமைக்கப்பட்டிருப்பது ஏனென்று கேள்விகள் எழுகின்றன.

இன்னொன்றை வெகுவாக பாராட்டியாக வேண்டுமென்றால், நமது AI தொழில்நுட்பம்  தான்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நாற்பது வருடத்திற்கு முந்தைய இளமைத் தோற்றத்தையும், பேச்சையும் அப்படியே படக்குழு கொண்டுவந்து விட்டது. சூப்பர்ப்..!

தொலைக் காட்சிகளில் ஓடும் முப்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில், எதில் பார்த்தாலும் எல்லா கதாபாத்திரங்களும் பெரும்பாலும் நின்று கொண்டே பேசிக் கொண்டிருக்கும். படப்பிடிப்புக்கு வசதியாக டிவி தொடர் இயக்குபவர்கள் அதை செய்கிறார்கள். ஆனால், லோகேஷ் கனகராஜுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.. அவரும் அந்த பாணியை கையாண்டிருப்பது போல தோன்றுகிறது.

இதில் இன்னொன்றையும் சொல்லவேண்டுமென்றால், கலாநிதி மாறனுக்கு தனது சொந்த நிறுவனமான சன் பிக்சர்ஸில் படம் எடுத்தால் மட்டுமே அதனை தனது தொலைக்காட்சியில் வெளியிட முடியும் என்ற நிலைமை இருப்பதையும் மறுக்க முடியாது. ஏனென்றால் இன்றைய படங்கள் எல்லாமே ‘ ரெட் ஜெயண்ட்டு’க்கு தானே சொந்தமாகிறது..!

படுபயங்கர வன்முறைக் காட்சி காரணமாக படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதை 18 வயதுக்குள்ளானவர்கள் பார்க்க முடியாது. ரஜினி படத்திற்கான நகைச்சுவை, பன்ச் டயலாக், குழந்தைகள், பெண்களை கவரும் காட்சி அமைப்பு இல்லை என்பது பல ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

இந்தப் படம் LCU இல்லை என்று சொல்லிவிட்டாலும், ICU இருக்கிறது. படத்திற்கு இல்லை.. படத்தில் அடியாட்களாக வரும் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களுக்குத் தான்.. FDFS – First Day First Show பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் ஒருபக்கம் காசை கத்தைகத்தையாக செலவழிக்க  துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், முன்னூறு நானூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி.

மொத்தத்தில், கூலி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான திருவிழாவாக அமைந்திருக்கிறது. ரசிகர்களின் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்..!

திரை விமர்சனம்; பிரகாஷ் தேவேந்திரன்

https://aramonline.in/22486/coolie-rajinikandh/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.