Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

15 Oct 2025, 11:35 AM

Karur CM MK Stalin Assembly

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) அளித்த விளக்கம்:

  • கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்றது; சுமார் 17,000 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்

  • கரூர் விஜய் பிரசார கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் பகல் 12 மணிக்கே விஜய் வருவார் என தவெக பொதுச்செயலாளர் அறிவித்தார்.

  • கரூர் பிரசார கூட்டத்துக்கு விஜய் 7 மணிநேரம் தாமாக வந்தார்

  • கரூர் வேலுசாமிபுரத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியும் போலீசார் அறிவுறுத்தலை மீறி 35 மீட்டர் தூரம் கூட்டத்துக்குள் விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது

  • கரூர் கூட்டத்துக்கு வருபவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் தவெகவினர் செய்யவில்லை; உணவு வழங்க ஏற்பாடு செய்யவில்லை; பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியே செல்லவும் முடியவில்லை.

  • விஜய் கூட்டத்துக்கு 10,000 பேர் வருவர் என தவெகவினர் தெரிவித்தனர்; ஆனால் அதிகம் பேர் கூடுவர் என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கும் பாதுகாப்பை விட கூடுதலாகவே பாதுகாப்பு அளிக்கப்பட்டது; காவலர்கள், அதிகாரிகள் என மொத்தம் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் கூட்டத்துக்குள் செல்லவில்லை.

  • மீட்பு பணி நடைபெற்ற போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தவெகவினர் தாக்கினர்

  • கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து தவெகவினர் சேதப்படுத்தினர்; இதனால் ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்தார்.

  • கரூர் துயர சம்பவம் அறிந்த என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்; அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன; அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினர்.

  • கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

  • 200 காவல்துறையினர் மருத்துவமனைக்கு பாதுகாப்பும் வழங்கினர்.

  • அனைத்து உடல்களையும் வைக்க போதுமான குளிர்சாதன வசதி இல்லை என்பதால் இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது; இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும் பணி அதிகாலை 1.41 மணிக்கு தொடங்கியது.

  • நான் எனது 50 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன்; இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அத்தகைய அனுபவம் கொண்டவர்கள்தான்; மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் நெறிமுறைகளுக்கும் பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்படுகின்றன; இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும் போது பாதிக்கப்படுவது அந்த கட்சியின் தொண்டர்கள்தான்; இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

https://minnambalam.com/karur-vijay-stampede-tragedy-how-did-41-people-die-why-did-the-ambulance-arrive-cm-stalin-explains-in-the-assembly/#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

'கரூரில் ஒரே நாளில் 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி?' சட்டமன்றத்தில் ஸ்டாலின் பதில்

கரூர் விவகாரம்?: சட்டப்பேரவையில் ஆளும்கட்சி - எதிர்க்கட்சி மோதல், வெளிநடப்பு

பட மூலாதாரம், Tamilnadu Assembly

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 31 நிமிடங்களுக்கு முன்னர்

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விளக்கமளித்தார்.

ஆனால், தாங்கள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதில் சொல்வதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். பிறகு, அ.தி.மு.க. வெளிநடப்புச் செய்தது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானமும் கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொண்டுவந்திருந்தன.

இந்நிலையில், அவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச ஆரம்பித்தார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதிலளிக்கக்கூடாது என அவர்கள் கூறினர்.

இதற்கிடையில் முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பேச ஆரம்பித்தார். கரூர் நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்திருக்கவில்லையென அவர் குற்றம்சாட்டினார்.

"கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27.09.2025 அன்று தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தக் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் பல்வேறு இடங்களைக் குறிப்பிட்டு அனுமதியைக் கோரினார். அவர் அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கப்படவில்லை. 25.09.2025ஆம் தேதியன்று காலையில் லைட் ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. பிறகு செப்டம்பர் 26ஆம் தேதியன்று வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் அனுமதி கோரினார். அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது'' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்

கரூர் விவகாரம்?: சட்டப்பேரவையில் ஆளும்கட்சி - எதிர்க்கட்சி மோதல், வெளிநடப்பு

பட மூலாதாரம், DIPR

'கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்'

இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 517 காவலர்கள் கரூர் மாவட்டத்திலிருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என ஸ்டாலின் கூறினார்.

'' வெளி மாவட்டங்களிலிருந்து 1 காவல் துணை கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவுப்படை காவலர்கள் என 99 பேர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல்துறையைப் பொறுத்தவரை, வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது.

பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10 ஆயிரம் பேர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்டம் நடத்த அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சித் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கி விட்டனர்.'' என்றார் ஸ்டாலின்.

கரூர் விவகாரம்?: சட்டப்பேரவையில் ஆளும்கட்சி - எதிர்க்கட்சி மோதல், வெளிநடப்பு

பட மூலாதாரம், DIPR

'பிடிவாதமாக முன்னேறிச் சென்றனர்'

மேலும், ''செப்டம்பர் 27ஆம் தேதியன்று, அக்கட்சியின் தலைவர் சென்னையிலிருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு, 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அதாவது அறிவிக்கப்பட்ட 12.00யை மணியைக் கடந்து, 7 மணி நேரம் கழித்துத்தான் வந்தார். இந்தக் காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கியமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்குப் போதிய குடிநீர் வழங்கவில்லை; உணவு வழங்க எந்தவிதமான ஏற்பாடுகளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.

சம்பவம் நடந்த அதே வேலுசாமிபுரத்தில் இதற்கு இரு தினங்களுக்கு முன்பாக அதாவது செப்டம்பர் 25-ஆம் தேதியன்று எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அக்கூட்டம் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அந்தப் பரப்புரைக் கூட்டத்திற்கு சுமார் 137 காவலர்களும், 30 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தக் கட்சியின் நிகழ்ச்சி நடந்துள்ளது.'' என ஸ்டாலின் கூறினார்

கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாகனத்தைப் பின்தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும், கட்சியினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர் என்றார் ஸ்டாலின்

''நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரசார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் , பிரசார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அக்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தினர். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் என்று பிடிவாதமாக தொடர்ந்து முன்னேறிச் சென்றனர்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியின் இணைச் செயலாளரிடம் பலமுறை தொடர்புகொண்டு பிரசார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும், அவர் த.வெ.கவின் தலைவரிடம் உரையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். வாகனம் அக்ஷயா மருத்துவமனையிலிருந்து, 30-35 மீட்டர் தூரம் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினரை இது நிலைகுலைய செய்தது. இதனால் கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் பீதி, மூச்சுத் திணறல், மயக்கம், நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டிருக்கிறார்கள்.'' என்றார் ஸ்டாலின்.

கரூர் விவகாரம்?: சட்டப்பேரவையில் ஆளும்கட்சி - எதிர்க்கட்சி மோதல், வெளிநடப்பு

பட மூலாதாரம், Getty Images

'நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை'

''கூட்டத்தின் ஒருபகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து, தகரக் கொட்டகையை அகற்றி வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்குவதைத் தடுக்க, ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும், சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து, காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்கள். இவ்வாறு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவர்களைக் காப்பற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர, நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை. காவல் துறை, தீயணைப்பு - மீட்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.'' என்றார் ஸ்டாலின்

மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, த.வெ.கவினர் இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள் என ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்

''இதனால் மீட்புப் பணிகள் தடைபட்டன. இது தொடர்பாக, கரூர் நகர காவல் நிலையத்தில், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கரூர் நீதித் துறை நடுவர் முன்பு சரணடைந்திருக்கிறார். மற்றொரு நபர், கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கரூரில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த உடனேயே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், முதன்மைச் செயலர், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் உள்ளிட்டோர் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டார்கள். மேலும், அன்றிரவே நானும் கரூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் இரவு 7.47 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்கள். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் வந்து பணியில் ஈடுபட்டார்கள். பொது சுகாதார இயக்குநர் தலைமையில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.'' என்றார் ஸ்டாலின்

கரூர் விவகாரம்?: சட்டப்பேரவையில் ஆளும்கட்சி - எதிர்க்கட்சி மோதல், வெளிநடப்பு

பட மூலாதாரம், Getty Images

'ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்'

கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 700 படுக்கைகளோடு எந்த அவசர நிலையையும் சமாளிக்க ஏதுவாக, கூடுதல் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

''24 மணி நேர அவசர சிகிச்சை மையம், சிடி ஸ்கேன், ஆய்வகங்கள் செயல்பட்டன. பணிகளை விரைவுபடுத்திட திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அம்மாவட்ட மருத்துவக் குழுவினர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து "Help Desk" அமைத்து, இறந்தவர்களின் உடல்களை காவல் துறை உதவியோடு அடையாளம் கண்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அலுவலர்களின் உதவியோடு உடற்கூறாய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

கரூருக்கு அருகில் உள்ள சேலம், நாமக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தங்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்களுடன் 27ஆம் தேதியன்று இரவு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இதுதவிர, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரியில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக வல்லுநர்கள், பிரேத பரிசோதனை உதவியாளர்கள் என மொத்தம் 152 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

இச்சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் மட்டும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலே இருக்கிறார்.'' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்

'' உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41. இதில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 18 பேர், குழந்தைகள் 10 பேர். கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில், இறந்த அனைத்து உடல்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அன்று இரவில் உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடனடியாக, உடற்கூராய்வு நடைமுறையை முடித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் மரு.சங்கர் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 28.09.2025 அன்று அதிகாலை 1.45 மணிக்கு, முதல் உடற்கூராய்வு தொடங்கப்பட்டு, 28.09.2025 அன்று மதியம்1.10 மணியளவில் 39வது உடற்கூராய்வு முடிவுற்றது'' என்றார் ஸ்டாலின்

கரூர் விவகாரம்?: சட்டப்பேரவையில் ஆளும்கட்சி - எதிர்க்கட்சி மோதல், வெளிநடப்பு

பட மூலாதாரம், Tamilnadu Assembly

ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி?

இதற்குப் பிறகு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

"கரூரில் மக்கள் சந்திப்பு நடத்துவதற்கு முன்பாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்திருக்கிறார். அங்கு கூடிய கூட்டத்தை வைத்தே கரூரில் விஜய் பிரசாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்து காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தாலே, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். மேலும், ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி, உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பிறகு பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், குஜராத் விமான விபத்தின்போது இரவிலும் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

"அதிகாலை 1.45 மணிக்கு பிரேதப் பரிசோதனை துவங்கியது. மொத்தம் ஐந்து மேசைகளில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. மொத்தம் 14 மணி நேரத்திற்கு உடற்கூராய்வு நடைபெற்றது. உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதில் சந்தேகம் எழுப்ப வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், X/EDAPPADI PALANISAMY

'எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டத்தில் நெரிசல் ஏற்படவில்லை'

இதற்குப் பிறகு அமைச்சர் எ.வ. வேலு பேசினார். அவர் பேசும்போது, "அங்கு நடந்த எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டத்திற்கும் கூட்டம் வந்தது. ஆனால், நெரிசல் ஏற்படவில்லை. அங்கு வந்தவர்கள் அவர் பேசுவதைக் கேட்க வந்தார்கள். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்காங்கே தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. ஆனால் விஜய் வாகனத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தார். இதனால், கூட்டம் வாகனத்தைப் பின்தொடர்ந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தது. இதனால் நெரிசல் ஏற்பட்டது. கரூரில் அ.தி.மு.க. கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த அதே காவலர்கள்தான் த.வெ.க.வின் கூட்டத்திற்கும் பாதுகாப்பு அளித்தனர்" என்றார் எ.வ. வேலு.

மீண்டும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, "நாங்கள் மக்களுக்காகப் பேசுகிறேன். இந்த கூட்டத்தில் எப்படி விபத்து ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர் என்பதைச் சொல்லுங்கள். அம்புலன்ஸ்களில் தி.மு.க. ஸ்டிக்கர் வந்தது எப்படி?" என அவர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பிறகு பேசப்பட்ட சில விஷயங்களை சட்டப்பேரவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென அ.தி.மு.கவினர் கோரினர். இதற்குப் பிறகு அமளியிலும் ஈடுபட்டனர். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென சபாநாயகர் கோரினார். இதற்குப் பிறகு அ.தி.மு.கவினர் வெளிநடப்புச் செய்தனர்.

வெளிநடப்புச் செய்த அ.தி.மு.கவினர் பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

"பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. கரூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி கருத்தைத் தெரிவித்த பிறகு முதல்வர் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்றேன். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் முதல்வரை அழைத்து பேச அனுமதித்தார். இது முக்கியப் பிரச்சனை என்ற காரணத்தால், 41 பேர் உயிரிழந்த நிகழ்வு என்பதால் அமைதிகாத்தோம். முதல்வர் சொல்வதைக் கேட்போம் என அங்கேயே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். அவர் தி.மு.க. அரசு கரூர் நிகழ்வு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவித்தார். அதற்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பேச ஆரம்பித்தேன். அதில் செப்டம்பர் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் மக்கள் சந்திப்புக்கூட்டத்தில் பேசியபோது, ஒரு செருப்பு வந்து விழுந்தது. அதைப் பற்றி அரசு கருத்து எதையும் சொல்லவில்லை.

அதற்குப் பிறகு கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த உயிர் பலிகளைத் தவிர்த்திருக்கலாம். '' என எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்

''இந்த அரசு ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றுதான் நடத்துகிறது. இந்த அரசின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டேன். ஏற்கனவே த.வெ.க. தலைவர் நான்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ஏற்கனவே நடந்த கூட்டங்களை வைத்து எவ்வளவு பேர் இந்தக் கூட்டங்களில் பங்கு பெற்றார்கள் என்பது அரசுக்குத் தெரியும். அவர்கள் கேட்ட இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கவேண்டும். அதை செய்யவில்லை.

காவல்துறை அதிகாரிகள் ஒரு பேட்டியில் பேசும்போது 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், அவ்வளவு பேர் அந்த இடத்தில் இல்லை. மேலும் இன்று முதல்வர் பாதுகாப்புப் பணியில் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக முரண்பட்ட தகவலைச் சொல்கிறார். அதனால்தான் சந்தேகம் வருகிறது.'' என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.

''வேலுச்சாமிபுரம் த.வெ.க. கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவுக்குக் கேட்டோம். அந்தக் கூட்டம் அந்த இடத்தில் நடைபெற அனுமதிக்கவில்லை. போக்குவரத்து மிகுந்த இடம் என்பதால் அனுமதி மறுத்தார்கள். கரூரில் எழுச்சிப் பயணத்திற்கு இடம் கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. வேறு வழியில்லாமல் இந்த இடத்தை அவர்கள் கொடுத்தார்கள். அதே இடத்தைத்தான் மக்கள் சந்திப்பு இடத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நிராகரித்த இடத்தை எப்படிக் கொடுத்தார்கள்? முதலமைச்சர் முப்பெரும் விழா நடத்திய இடத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அசம்பாவிதம் நடக்க வேண்டுமென்பதற்காகவே இந்த இடத்தைக் கொடுத்தார்கள். ஆகவே, அரசின் அலட்சியத்தாலும் காவல்துறை பாதுகாப்பு அளிக்காததாலும்தான் இந்த நிகழ்வு ஏற்பட்டது.'' என்றார் அவர்

''இந்தச் சம்பவம் நடந்தவுடனேயே இரவில் ஒன்றே முக்கால் மணிக்கே பிரேதப் பரிசோதனை துவங்கினார்கள். மூன்று மேசைகளில் எப்படி 39 பேருக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி? வெளியிலிருந்து மருத்துவர்கள் வந்தாலும்கூட, நான் செல்வதற்கு முன்பாகவே எல்லோருக்கும் உடற்கூராய்வு செய்துவிட்டார்கள். ஒரு உடலுக்கு செய்ய ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். அதற்கு எப்படி உடற்கூறு செய்ய முடியும்.

இந்த நிகழ்வு குறித்து அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்தனர். அவர்கள் அரசின் திட்டங்கள் குறித்துப் பேச நியமிக்கப்பட்டனர். அப்படியிருக்கும்போது, ஒரு நபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக செயல்படும்? சிறுநீரக முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென நீதிமன்றம் கூறிய பிறகும் அதைச் செய்யவில்லை. ஆனால், இந்த விவகாரத்திற்கு அமைக்கப்பட்டது. அதேபோல, கள்ளக்குறிச்சி விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆகியவற்றுக்கும் சி.பி.ஐ. விசாரணை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். இப்போது இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கரூர் நிகழ்வைப் பொறுத்தவரை அரசின் அலட்சியம், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கப்படாததுதான் காரணம்" என்று குற்றம்சாட்டினார் எடப்பாடி கே. பழனிசாமி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn8vyvp3j9ko

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_9189.jpeg.978d11cc9a2b20a2afe5

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

👆 மேலே உள்ள காணொளியில் விளக்கம் கொடுப்பவர் மாரிதாஸ் என்கின்ற சிறை சென்ற பிஜேபி போராளியாவார்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👆 மேலே உள்ள காணொளியில் விளக்கம் கொடுப்பவர் மாரிதாஸ் என்கின்ற சிறை சென்ற பிஜேபி போராளியாவார்.

விளக்கம் கொடுப்பது யாராக இருந்தாலும் கேட்கும் கேள்விகளில் எந்த பிழையும் இல்லையே!!

  • கருத்துக்கள உறவுகள்

அவன் பிரபல கொலைகாரன் அல்ல,

பிரபலமாக இருப்பதால்

கொலைகாரன்;

அவனுக்குக் கூட்டம் பிடிக்காது;

அதுவும் தன்னைப் பார்க்க

எதற்கு இத்தனைக் கூட்டம்

என ஆச்சரியம் அவனுக்கு;

தன்னை அவர்களுக்கு

எவ்வளவு பிடிக்கும் என பார்க்க

டெஸ்ட் மேல் டெஸ்ட் வைப்பான்;

கடும்வெயிலில் காக்க விட்டான்,

கள்ளிச்செடிபோல் மணிக்கணக்கில்

அப்படியே நின்றார்கள்;

தூக்கித் தூர எறிந்தான்,

பந்துபோல் அவனிடமே

திரும்பி வந்தார்கள்;

நீரின்றி நா வரளவிட்டான்,

அவனைப் பார்த்தவுடன்

நாவாலேயே வாலாட்டினார்கள்!

அவனுக்கு ஒரே மகிழ்ச்சி;

தன் ஊர்வலங்களில்

அவ்வப்போது ஓரிருவரைக்

கொன்று பழகினான்;

யாரும் கணக்கு பார்க்கவில்லை,

கண்டும்கொள்ளவில்லை!

கொலைகாரன் குதூகலமானான்,

விளையாட்டு அடுத்த கட்டம் நகர்ந்தது!

மதியம் 12க்கு வருகிறேன்

என சொன்னவனைப் பார்க்க,

இரவு 12ல் இருந்தே ரோட்டில் தூங்கினார்கள்!

அவனோ பகலிலும்

தூங்கிவிட்டு

இரவு 7.30க்கு

'சாவ'காசமாக வந்தான்!

சாவு வண்டியில்

சனியன் போல்

கூட்டம் புகுந்தான்!

முகத்தை மூடியும் காட்டியும்

குழந்தைகளிடம் நாம்

விளையாடுவதைபோல,

தன் அடிமைகளிடம்

விளையாடினான்;

அவர்களைக் கதறவைத்துச்

சிரித்தான்;

தன்னைப் பார்ப்பதற்காக

அவர்கள் தவிப்பதைக்கண்டு

ரசித்தான்!

உலகில் முதல்முறையாக,

கொலையாகப் போகிறவர்கள்

கொலைகாரனைப் பார்க்க

ஆசை ஆசையாய்

வந்திருந்தார்கள்!

காத்திருந்தார்கள்!

அவனைப் பார்த்தாலே

பாக்கியம் என வந்தவர்களில்,

அவன் கையால் சாகும் பாக்கியம்

40 பேருக்கு மட்டுமே வாய்த்தது;

முகத்தில் வாயில் வயிற்றில்

மிதிபட்டார்கள்;

உடல் பிய்ந்து,

மணிக் கணக்காக

அடக்கி வைத்திருந்த

மலமும் சிறுநீரும்

தெருவில் பாய்ந்தது!

குழந்தைகள் சீக்கிரம்

போய்ச் சேர்ந்தார்கள்!

பெரியவர்களுக்கு கொஞ்சம்

நேரம் பிடித்தது!

வீடு போய்ச்சேர்ந்த

அடிமைகளில் சிலர்,

அடுத்த கூட்டத்திலாவது

போய்ச்சேர நமக்கு லக்

அடிக்கிறதா பார்ப்போம்

என முனகினார்கள்!

வேன் மோதி

திருப்பதி சென்ற

பக்தர்கள் 4 பேர் பலி

என செய்திகளில் வருமே,

அந்த பக்தர்களை ஏழுமலையான்

அம்போ என விட்டுவிடுவார்;

ஆனால் கொலைகாரன் அப்படி அல்ல;

நான்காவது நாள் வீடியோவில்

காட்சி தந்தான்;

நாற்பதாவது நாள் அக்கவுண்டில்

காசு தந்தான்;

குழந்தைகளை இழந்தவர்கள்

சிரித்தபடியே பேசினார்கள்!

மகன்களை இழந்தவர்கள்

மனதார வாழ்த்தினார்கள்!

மனமுடைந்த ஒரு தாய்

அய்யோ தூக்கிக் கொடுக்க

இன்னொரு புள்ள

இல்லாம போச்சே

என மேஜர் முகுந்த் வரதராஜனின்

தாய் போல வருந்தினார்!

ஒரு அண்ணன்,

தம்பி செத்தா என்னங்க

எங்க அண்ணன்

கூட்டத்துல சாகுறது

வைகுண்ட ஏகாதசி சாவு மாதிரி

நேரா சொர்கம்தான் என்றார்.

யாரையும் பலிகொடுக்காத ஒருவர்

தன் துரதிருஷ்டத்தை

நொந்து கொண்டார்!

எப்படிடா தப்பிச்சு வந்த

என தன் பையனை அடித்தார்!

தவளைகள் பாம்பின்மேல்

முழுமையாய் காதல் கொண்டிருந்தன!

பட்டாம்பூச்சிகள் பல்லியைப்

பார்த்துப் பல்லிளித்தன!

ஏதோ ஒரு ஊரின்

ஏதோ ஒரு கோடியில்,

கொலைகாரனின்

அடுத்த பேட்ச் தயாராகிக் கொண்டிருந்தது!

கொலைசெய்யும் நேரம்போக

மீதி நேரம் வீட்டிலும் ஆஃபீசிலும்

மட்டுமே இருக்கும்

கொலைகாரன்,

தன் ரத்தம் தோய்ந்த

பற்கள் தெரிய சொன்னான்

"ஐயாம் வெயிட்டிங்...."

-டான் அசோக்

19 அக்டோபர் 2025

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2025 at 13:46, Eppothum Thamizhan said:

விளக்கம் கொடுப்பது யாராக இருந்தாலும் கேட்கும் கேள்விகளில் எந்த பிழையும் இல்லையே!!

ஒம்

👇இந்த காணொளியில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த விஜய் பாதுகாப்பாகவே வளர்ந்து பாதுகாப்பாகவே தமிழ்நாட்டின் முதல்வாரக வருவதற்கு ஆசைபடுவதை மாரிதாஸ் விளக்குகின்றார்.

இந்த 👇காணொளியில் தமிழ்நாட்டின் முதல்வாரக வந்து தமிழர்களை ஆட்சிசெய்ய விரும்புகின்ற விஜயின் மனைவி பிள்ளைக்கு இந்திய குடியுரிமை வாக்கு போடும் உரிமை கிடையாது என்பதை மாரிதாஸ் விளங்கபடுத்துகின்றார்.

https://www.youtube.com/shorts/i11EiNz_jIo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.