Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,சுருட்டை விரியன்

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன.

"தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன," என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்.

"நஞ்சுள்ளவை, நஞ்சற்றவை எனப் பிரித்தறிய முடியாத காரணத்தால் பல நேரங்களில் நஞ்சற்றவை எனக் கருதி மக்கள் கவனமின்றிச் செயல்படுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாம்புக்கடி விபத்துகள் நிகழக் காரணமாவதாக," கூறுகிறார் பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் மதுரையைச் சேர்ந்த சாம்சன் கிருபாகரன்.

இந்த நிலையில், நச்சுப் பாம்புகளை அடையாளம் காண முடிந்தால் பாம்பு-மனித எதிர்கொள்ளலின்போது ஏற்படும் அசம்பாவிதங்களை பெருமளவு தடுக்க முடியும் என்பதே நிபுணர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

எனவே, இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பிக்4 பாம்புகள் என்று அறியப்படும், அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளைப் பார்த்தவுடன் எளிதில் அடையாளம் காண உதவும், அவற்றின் உடலமைப்பின் முக்கியமான அம்சங்களை இங்கு காண்போம்.

நாகப் பாம்பை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,நாகப் பாம்பு

நாகம் என்றவுடன் அது படமெடுத்து நிற்கும் என்பதைப் பலரும் நன்கு அறிந்திருப்போம்.

அச்சம் அல்லது கோபத்தின் வெளிப்பாடாக அவை அப்படி படமெடுத்து நிற்கும்போது, "முன்பகுதியில் இரண்டு பெரிய கரும்புள்ளிகள் இருக்கும். பின்பக்கத்தில் அதேபோன்ற கரும்புள்ளிகளுடன் வெந்நிறத்திலான 'V' போன்ற ஒரு வடிவமும் இருக்கும்," என்று சாம்சன் விவரித்தார்.

இது மட்டுமின்றி, "நல்ல பாம்பின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும். அந்தக் கண்களுக்குக் கீழே கருமை நிறத்தில் மெல்லியதாக, கண் மை கலைந்ததைப் போன்ற வடிவில் ஒரு தடம் இருக்கும்" என்கிறார் முனைவர் மனோஜ்.

பெரும்பாலும், சாரைப் பாம்பினை நாகம் எனப் பலரும் தவறாகப் புரிந்துகொள்வதுண்டு. அப்படிக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அவற்றின் கண்களைப் பற்றி அறிந்துகொள்வது உதவும் என்கிறார் அவர்.

ஓலைப் பாம்பின் தலைப் பகுதியில் வேல்கம்பு போன்ற குறியீடு இருப்பதால் அதை நாகம் என்று நினைத்து மக்கள் குழப்பமடைவது உண்டு, ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட வடிவம் எனக் கூறுகிறார் சாம்சன்

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,ஓலைப் பாம்பின் தலைப் பகுதியில் வேல்கம்பு போன்ற குறியீடு இருப்பதால் அதை நாகம் என்று நினைத்து மக்கள் குழப்பமடைவது உண்டு, ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட வடிவம் எனக் கூறுகிறார் சாம்சன்

"சாரைப் பாம்பின் கண்ணில் இரண்டு நிறங்கள் இருக்கும். கருவிழி கருப்பாகவும், சுற்றியுள்ள பகுதி தங்க நிறத்திலும் இருக்கும். ஆனால், நாகத்தின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும்."

அதோடு, "நாகப் பாம்பின் தலை, கழுத்து என உடல் முழுக்க ஒரே தடிமனாக இருக்கும். ஆனால் சாரைப் பாம்புக்கு தலை பெரிதாகவும், கழுத்து சிறிதாகவும், உடல் தடிமனாகவும் இருக்கும். நிறமும் நாகத்தின் உடல் முழுக்க பழுப்பு நிறத்திலும், சாரை மஞ்சள், பழுப்பு, சாம்பல் ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றன. இதை வைத்து அவற்றை வேறுபடுத்திக் கொள்ள முடியும்," என்று விவரித்தார் சாம்சன்.

இதுபோக, ஓலைப் பாம்பு என்ற நஞ்சற்ற வகையும் நாகத்துடன் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அதற்குக் காரணம், ஓலைப் பாம்பின் தலையிலும் வேல்கம்பு போன்ற வடிவம் இருக்கும் என்பதுதான். ஆனால், அந்த வடிவம் நாகத்தில் இருப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார் சாம்சன்.

கட்டு வரியன் பாம்பை அடையாளம் காண்பது எப்படி?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,கட்டு வரியன்

கட்டு வரியனை பொறுத்தவரை, பொதுவாக பிற பாம்புகளின் நாக்கு கருமையாக இருக்கும்போது, இவற்றுக்கு மட்டும் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ்.

பிற பாம்புகளைப் போலன்றி, இது சற்று தனித்துவமான உருவ அமைப்பைக் கொண்டது என்கிறார் சாம்சன். "கட்டு வரியனின் உடல் முற்றிலுமாக அடர் கருப்பு நிறத்தில், மினுமினுப்பாக இருக்கும்."

இந்த மினுமினுப்பு இவற்றுக்கே தனித்துவமானது எனக் கூறிய மனோஜ், "அவற்றின் உடலில் '=' போல இரட்டை இரட்டையாக வெந்நிறத்தில் மெல்லிய கோடுகள் இணையாக இருக்கும். அதுவும் தலையில் இருந்து கழுத்து வரைக்கும் இருக்காது, கழுத்தில் தொடங்கி வால் வரைக்கும் இருக்கும்," என்று விளக்கினார்.

சில நேரங்களில் தோலுரிக்கும் கட்டத்தில் பாம்பு இருந்தால் இந்தக் கோடுகள் தெளிவாகத் தெரியாது எனக் கூறிய சாம்சன், அத்தகைய சூழ்நிலையில் "இவற்றின் அடர் கருப்பு நிறத்தை வைத்து அடையாளம் காணலாம்" என்றார்.

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,நஞ்சில்லாத வெள்ளிக்கோல் வரையன், அதன் உடலிலுள்ள பட்டையான கோடுகளின் காரணமாகச் சில நேரங்களில் கட்டு வரியன் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

பொதுவாக, வெள்ளிக்கோல் வரையன் போன்ற பாம்பினங்களுடன் மக்கள் இவற்றைக் குழப்பிக் கொள்வதாகக் கூறிய சாம்சன், "கட்டு வரியன் போலன்றி, இந்த நஞ்சில்லாத பாம்புகளுக்குத் தலையில் இருந்தே பட்டையான கோடுகள் தொடங்கிவிடும்" என்றார்.

அதேபோல, எண்ணெய்ப் பனையன் என்ற பாம்பு வகையுடனும் மக்கள் இதைக் குழப்பிக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம், எண்ணெய்ப் பனையன் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதும் உடலில் கோடுகள் இருப்பதும்தான். ஆனால், இந்த நஞ்சற்ற பாம்புக்கு கருப்பு நிறத்திலான கோடுகள்தான் இருக்கும்.

அதேபோல முனைவர் மனோஜின் கூற்றுப்படி, வெள்ளிக்கோல் வரையனின் உடல் உருண்டையாக இருக்கும். "ஆனால், கட்டு வரியனின் உடல் முக்கோண வடிவில், முதுகுப்பகுதி மேல்நோக்கிய வகையில் இருக்கும்."

அடர்த்தியான கருநீல நிறத்தில், மினுமினுப்பாக இருப்பது இவற்றை அடையாளம் காண்பதற்கான தனித்துவமான பண்புகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கண்ணாடி விரியன் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,கண்ணாடி விரியன்

பொதுவாக விரியன் வகைப் பாம்புகள் என எடுத்துக்கொண்டால், அவற்றின் தலைப் பகுதி முக்கோண வடிவத்திலும் கழுத்து சிறியதாக, தடிமன் குறைவாகவும் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ்.

கண்ணாடி விரியனை பொறுத்தவரை, தலை முக்கோண வடிவில் காணப்படும் என்கிறார் மனோஜ்.

அதோடு, "அதன் உடல் முழுக்க முதுகின் மேற்புறத்தில் கருப்பு நிற எல்லைகளைக் கொண்ட பாதாம் பருப்பு போன்ற நீள்வட்ட வடிவிலான வட்டங்கள் ஒரு சங்கிலித் தொடரைப் போல நீண்டிருக்கும்," என்று அவர் விவரித்தார்.

இந்த நீள்வட்டங்களின் சங்கிலித் தொடர் தலை முதல் வால் வரைக்கும் ஒரே சீராக இருக்கும் எனவும், அதுவே பக்கவாட்டில் அதேபோன்ற நீள்வட்டங்கள் அளவில் சிறிதாக இருக்கும் எனவும் விளக்கினார் சாம்சன் கிருபாகரன்.

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

படக்குறிப்பு,யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்

மற்றுமொரு தனித்துவமான அம்சமாக முனைவர் மனோஜ், கண்ணாடி விரியனின் மூக்கு துவாரம் இருபுறமும் நன்கு பெரியதாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்.

முனைவர் மனோஜின் கூற்றுப்படி, அனைத்து கண்ணாடி விரியன்களுக்குமே இந்த வடிவம்தான் பொதுவாக இருக்கும் என்றாலும், மிக அரிதாக இவை எதுவுமே இல்லாமல் கோதுமை நிறத்தில் மட்டும் காணப்படுவதும் உண்டு. ஆனால், அத்தகைய கண்ணாடி விரியனை பார்ப்பது மிக மிக அரிது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைப் பார்த்துப் பல நேரங்களில் மலைப் பாம்பு என மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு, தீங்கற்றது எனக் கருதி அணுகுவதால் பாம்புக்கடி விபத்துகள் நிகழ்வதாகக் கூறுகிறார் சாம்சன்.

"மலைப் பாம்பு போலவே, இதன் உடல் நன்கு தடிமனாக இருப்பதால் பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொள்வது நடக்கிறது. ஆனால், மலைப்பாம்பின் உடலில் இருக்கும் வடிவங்கள் சீரற்றதாக இருக்கும்." என்றும் அவர் விவரித்தார்.

சுருட்டை விரியனை அடையாளம் காண்பது எப்படி?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் (+) வடிவிலான குறியீடு இருக்கும்

சுருட்டை விரியன் வறண்ட பகுதிகளில் வாழக்கூடியது. கிராமப்புறங்களில் இவற்றால் பாம்புக்கடி அவ்வப்போது நிகழ்கிறது.

சுருட்டை விரியனின் தலை முதல் வால் வரைக்கும், "பக்கவாட்டில் இருபுறமும் ரம்பத்தின் கூர்முனை எப்படி வளைந்து வளைந்து இருக்குமோ அப்படி இருக்கும்" என்றார் மனோஜ்.

அதுவே அதன் முதுகின் மேற்புறம் பார்க்கையில் 'X' வடிவத்தில் கோடுகள் தென்படும் என்கிறார் சாம்சன்.

"அதுமட்டுமின்றி, சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் குறியீடு '+' போன்றதொரு வடிவம் இருக்கும். கண்களைப் பொருத்தவரை, சுருட்டை விரியனுக்கு பூனைக் கண்களைப் போல நீள்வட்ட வடிவில், ஒரு மெல்லிய கோடு போன்ற வடிவிலான கருவிழியுடன் காணப்படும்."

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

படக்குறிப்பு,சாம்சன் கிருபாகரன், பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்

பொதுவாக பாம்புகள் நேராக முன்னோக்கி ஊர்ந்து செல்பவை. ஆனால், சுருட்டை விரியனை பொருத்தவரை, பக்கவாட்டில் செல்லக்கூடியவை. அதாவது, நேராக ஊர்ந்து செல்லாமல், உடலை வளைத்து, பக்கவாட்டில் நகர்ந்து செல்பவை" என்று விவரித்தார் மனோஜ்.

தமிழ்நாட்டில் காணப்படும் பாம்புகளில் சுருட்டை விரியன் மட்டுமே இவ்வாறாக பக்கவாட்டில் செல்லக்கூடியது என்று விளக்கிய அவர், மிக மெதுவாக நகரும் நேரங்களில் மட்டும் அவை நேராகச் செல்லும் என்றும் கூறினார்.

இதேபோல, வறண்ட நிலப்பரப்புகளிலேயே வாழக்கூடிய பூனைக்கண் பாம்புடன் இதைக் குழப்பிக் கொள்வது அடிக்கடி நடப்பதாகக் கூறும் சாம்சன், சுருட்டை விரியன் அதிகபட்சம் ஒரு அடி வரைதான் வளரும் என்றும் உடல் சற்று தடிமனாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,பூனைக்கண் பாம்பு

ஆனால், பூனைக்கண் பாம்பைப் பொருத்தவரை, ஒன்றரை அடி வரைக்கும்கூட வளரும் எனவும் உடல் ஒல்லியாக நீளமாக இருக்கும் என்றும் இரு பாம்புகள் இடையிலான வேறுபாட்டை சாம்சன் விளக்கினார்.

சுருட்டை விரியனின் தலையில் கூட்டல் குறியீடு இருப்பதைப் போலவே, பூனைக்கண் பாம்பின் தலையில் 'Y' வடிவக் குறியீடு காணப்படும்.

பாம்புக்கடி காயத்தை வைத்து எந்த பாம்பு என்று அடையாளம் காண முடியுமா?

ஒரு குறிப்பிட்ட அளவு வரைக்கும் பாம்புக்கடியால் ஏற்படும் காயத்தை வைத்து, கடித்தது நச்சுப் பாம்பாக இருக்கலாம் என்பதைக் கூற முடியும் என்றாலும், அதை 100% உறுதி செய்ய முடியாது என்கிறார் முனைவர் மனோஜ்.

அனைத்து நச்சுப் பாம்புகளுமே கடிக்கும்போது பதியும் நச்சுப் பற்களின் தடம் இரண்டாகத்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை என்கிறார் அவர்.

எனவே, "ஒரு பல் உடைந்திருக்கும் நேரத்தில் அதன் அருகிலேயே மூன்றாவதாகப் புதிய பல் முளைத்துக் கொண்டிருக்கலாம். அதனால் இரண்டு பல் தடங்களுக்குப் பதிலாக மூன்று பல் தடங்கள் பதிந்திருக்கலாம்."

அவரது கூற்றுப்படி, பாம்புகளுக்கு ஆயுள் முழுவதுமே பல் மீண்டும் வளரக்கூடியது. இதனால், "அவை கடித்த இடத்தில் இரண்டு, மூன்று அல்லது நான்கு பற்கள் கூடப் பதிந்திருக்கலாம். இல்லையெனில் ஒரேயொரு பல் கூடப் பதியலாம். சில நேரங்களில் ஒரு கீறல் மட்டுமே இருக்கலாம். நஞ்சு உடலுக்குள் செல்வதற்கு அதுவே போதுமானது."

அதோடு, "ஒரு சில பாம்புகளில், அதாவது, விரியன் வகைப் பாம்புகள் கடித்தால், கடித்த இடத்தில், வீக்கம், ரத்தக் கசிவு போன்ற வெளிப்புற அடையாளங்களே நன்கு தெரியும். அவற்றின் மூலம் கடித்தது நச்சுப் பாம்புதான் என்பதைக் கண்டறிய முடியும்" என்று விளக்கினார் மனோஜ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8dyv9g1y78o

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகளவில் பாதி: இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் பாம்பு கடித்து பல ஆயிரம் பேர் பலியாக என்ன காரணம்?

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 இந்தியர்கள் பாம்புக்கடியால் இறக்கின்றனர்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 இந்தியர்கள் பாம்புக்கடியால் இறக்கின்றனர். இது உலகளவில் ஏற்படும் இறப்புகளில் பாதி.

கட்டுரை தகவல்

  • செரிலன் மொல்லன்

  • 2 பிப்ரவரி 2026, 08:08 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தேவேந்திரா என்பவர் ஒரு இந்திய விவசாயி.

மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பாம்பு தன் காலில் பற்களைப் பதித்த அந்தத் தருணத்தை அவர் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்.

"பாம்பு கடித்த நான்கு நாட்களுக்குப் பிறகு, வலி தாங்க முடியாததாக மாறியபோது தான் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். தாமதமாகச் சென்றதால் எனது காலை இழக்க நேரிட்டது," என்று உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு (Global Snakebite Taskforce - GST) வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தில் அவர் கூறுகிறார்.

ஆனால் உயிர் பிழைத்த சில அதிர்ஷ்டசாலிகளில் தேவேந்திராவும் ஒருவர். மத்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிர் இழக்கின்றனர். இது உலகெங்கிலும் ஏற்படும் இறப்புகளில் பாதியாகும்.

சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

2000 முதல் 2019 வரை, இந்தியாவில் 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிர் இழந்திருக்கலாம், அதாவது ஆண்டுக்கு சராசரியாக 58,000 இறப்புகள் நேர்ந்திருக்கலாம் என்று 2020 ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது, உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 99% சுகாதாரப் பணியாளர்கள் விஷமுறிவு மருந்தை வழங்குவதில் சவால்களை எதிர்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது விஷத்தின் நச்சுத்தன்மையை நீக்கும் உயிர் காக்கும் ஆன்டிபாடிகள் ஆகும்.

பாம்புக்கடியால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் இந்தியா, பிரேசில், இந்தோனீசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 904 மருத்துவ நிபுணர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மோசமான உள்கட்டமைப்பு, மருந்து கிடைப்பதில் சிக்கல் மற்றும் போதிய பயிற்சி இல்லாமை போன்ற தடைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

சிகிச்சையில் ஏற்படும் தாமதத்தால் நோயாளிகளின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுதல் , அறுவை சிகிச்சைகள் அல்லது வாழ்நாள் முழுவதுமான உடல்நலப் பாதிப்புகள் போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படுவதாகப் பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்புக்கடியால் ஏற்படும் அதிகப்படியான உயிரிழப்புகள் காரணமாக, 2017ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) இதை "மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்" என்று அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டது.

உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள தகவல்படி, உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 54 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகிறார்கள்; 1,00,000-க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழக்கின்றனர்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள ஏழை கிராமப்புற மக்களே பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

தேவேந்திரா

பட மூலாதாரம்,Strike Out Snakebite

படக்குறிப்பு,மல்பெரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததால் தேவேந்திராவின் காலை துண்டிக்க வேண்டியிருந்தது.

மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் பாம்புக்கடியால் அதிகப்படியான உயிர் இழப்புகளும் காயங்களும் பதிவாகின்றன என்று மத்திய சத்தீஸ்கர் மாநில ஜிஎஸ்டி உறுப்பினரும் பயிற்சியாளருமான மருத்துவர் யோகேஷ் ஜெயின் கூறுகிறார்.

குறிப்பாகப் பண்ணைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஏழை பழங்குடி மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

2030-ஆம் ஆண்டிற்குள் பாம்புக்கடி இறப்புகளைப் பாதியாகக் குறைக்கும் நோக்கத்தில், 2024-ஆம் ஆண்டில் இந்தியா பாம்புக்கடி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயல் திட்டத்தை (NAPSE) அறிமுகப்படுத்தியது.

இது கண்காணிப்பு, விஷமுறிவு மருந்து கையிருப்பு, ஆராய்ச்சி, மேம்பட்ட மருத்துவத் திறன் மற்றும் பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

நிபுணர்கள் இது ஒரு சரியான முயற்சி என்று ஒப்புக்கொண்டாலும், அது சரியாக செயல்படுத்தப்படுவது இல்லை.

"இந்தியாவில் பாம்புக்கடி என்பது ஏழைகளின் பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த முற்றிலும் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கு எதிராகப் போதிய எதிர்ப்போ அல்லது நடவடிக்கையோ இல்லை. பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நொடியும் முக்கியமானது"என்கிறார் ஜெயின்.

பாம்பு விஷம் சில நிமிடங்களில் ரத்த ஓட்டத்தில் கலந்து, பாம்பு வகையை பொறுத்து நரம்புகள், செல்கள் அல்லது சுற்றோட்ட மண்டலத்தைத் தாக்குகிறது. மருந்து செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் சுவாசக் கோளாறு, பக்கவாதம், திசு பாதிப்பு அல்லது உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம் என்று அவர் விளக்குகிறார்.

கிராமப்புற இந்தியாவில் மோசமான சாலைகள், மருத்துவமனைகள் செல்வதற்கான தூரம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமை போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ப்பதில் தாமதம் ஏற்படுவது பொதுவான ஒன்றாக இருக்கிறது.

கடந்த செப்டம்பரில், குஜராத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒரு கர்ப்பிணி இறந்ததாகக் கூறப்படுகிறது. அவரது கிராமத்துக்குப் போதுமான வாகன வசதி இல்லாததால் குடும்பத்தினர் அவரை 5 கி.மீ (3 மைல்) தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.

சில மாநிலங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷமுறிவு மருந்துகளை கையிருப்பு வைத்து நிலைமையை மேம்படுத்த முயற்சிப்பதாக ஜெயின் கூறுகிறார். இருப்பினும், அதை சரியாக நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

பல சுகாதாரப் பணியாளர்களுக்குப் போதிய பயிற்சி இல்லை மற்றும் நோயாளிகளுக்குச் செலுத்தப்படும் மருந்து எதிர்வினைகளை உண்டாக்குமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.

"விஷமுறிவு மருந்து சலைன் திரவத்துடன் கலந்து ஒரு மணி நேரம் நரம்பு வழியாகச் செலுத்தப்பட வேண்டும். ஆனால் பல மையங்களில் பக்கவிளைவுகளைக் கையாளும் வசதிகள் இல்லை" என்று ஜெயின் கூறுகிறார்.

மற்றொரு பிரச்னை என்னவென்றால், கிராமப்புறங்களில் உள்ள பலர் இன்னும் நாட்டு வைத்தியம் அல்லது உள்ளூர் மருத்துவ முறைகளை நம்பியிருக்கிறார்கள். நிலைமை மோசமான பிறகு மட்டுமே அவர்கள் மருத்துவமனைக்குச் செல்வதால் , அது ஆபத்தில் முடிகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

ஜெர்ரி மார்ட்டின்

பட மூலாதாரம்,The Liana Trust

படக்குறிப்பு,ஜெர்ரி மார்ட்டினின் தி லியானா டிரஸ்ட், பிராந்திய பாம்பு இனங்களின் கடிக்கு மாற்று மருந்துகளை ஆராய்ச்சி செய்து வருகிறது.

கர்நாடகாவில் மனித-பாம்பு மோதல்களைக் குறைக்கப் பணியாற்றும் 'தி லியானா டிரஸ்ட்'அமைப்பின் இணை நிறுவனர் ஜெர்ரி மார்ட்டின், உயர்தர விஷமுறிவு மருந்து கிடைப்பதில் உள்ள சிக்கலே மற்றொரு பெரிய தடையாக இருப்பதாகக் கூறுகிறார்.

தற்போது இந்தியாவில் உள்ள விஷமுறிவு மருந்து, இந்தியாவில் பாம்புக்கடியால் ஏற்படும் அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமான "பிக் ஃபோர்" என்று அழைக்கப்படும் நான்கு நச்சுப் பாம்புகளுக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. அவை, நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகும்.

இந்தியாவில் பெரும்பாலான பாம்புக்கடிகளுக்கு இவை காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தப் பாம்புகளின் விஷத்தை குதிரைகளுக்கு செலுத்தி, அவற்றின் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து மனிதர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுவதாக இந்த விஷமுறிவு மருந்து தயாரிக்கும் முறை பற்றி மார்ட்டின் விளக்குகிறார்.

"ஆனால், இந்தியாவில் இன்னும் பல்வேறு வகையான விஷப் பாம்புகள் உள்ளன, அவற்றுக்கான பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் நம்மிடம் இல்லை."

இமாச்சல பிரதேசத்தில் காணப்படும் க்ரீன் பிட் வைப்பர் (Green pit viper), தென்னிந்தியாவில் உள்ள மலபார் பிட் வைப்பர் (Malabar pit viper), ஹம்ப் நோஸ்ட் பிட் வைப்பர் (hump-nosed pit viper) மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு இனங்கள் இதில் அடங்கும்.

கடந்த ஆண்டு ஜோத்பூர் எய்ம்ஸ் (AIIMS) நடத்திய ஆய்வு இந்த சிக்கலை உறுதிப்படுத்தியது.

சுருட்டை விரியன் பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் விஷ முறிவு மருந்து 105 பாம்புக்கடி நோயாளிகளுக்கு (கடித்த பாம்புகளின் இனங்கள் தெரியவில்லை) வழங்கப்பட்ட போது, மூன்றில் இரண்டு பங்கு பேருக்குச் சிகிச்சைக்கு எதிர்பார்த்த பலனை தரவில்லை என்று கண்டறியப்பட்டது.

"மேற்கு இந்தியாவில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பிரத்யேக விஷமுறிவு மருந்துகள் உடனடியாகத் தேவைப்படுவதாக" அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, 'தி லியானா டிரஸ்ட்' இந்த நான்கு நச்சுப் பாம்புகள் தவிர பிற பாம்புகளின் விஷம் குறித்து ஆய்வு செய்து, அவற்றுக்கான மாற்று மருந்துகளை உருவாக்கி வருகிறது. ஆனால், இது அதிக உழைப்பும் காலமும் தேவைப்படும் செயல் என்பதால் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது என மார்ட்டின் கூறுகிறார்.

கர்நாடக அரசால் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அந்த உத்தரவில் பாம்புக்கடியை "தெரியப்படுத்தப்பட வேண்டிய நோய்" என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாம்புக்கடி சம்பவங்களை மருத்துவ பணியாளர்கள் கட்டாயமாக அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதையும், இதனால் பாம்புக்கடி சம்பவங்கள் குறைவாகப் பதிவு செய்யப்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

"அரசியல் விருப்பம் எங்கு முடிகிறதோ, அங்குதான் பாம்புக்கடி மரணங்கள் தொடங்குகின்றன" என்று மருத்துவர் ஜெயின் கூறுகிறார்.

"ஏழை மக்கள் மோசமான சுகாதார கட்டமைப்பைப் பெறக்கூடாது என்பதில் அரசாங்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அவர்கள் சிறந்ததைப் பெற தகுதியானவர்கள்" என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgqede7wwxlo

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2025 at 07:37, ஏராளன் said:

நல்ல பாம்பின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும். அந்தக் கண்களுக்குக் கீழே கருமை நிறத்தில் மெல்லியதாக, கண் மை கலைந்ததைப் போன்ற வடிவில் ஒரு தடம் இருக்கும்" என்கிறார் முனைவர் மனோஜ்.

என்னது கண்ணை பார்ப்பதா…

தலை தெறிக்க வேணா ஓடலாம்….😂

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்…

அந்தியேட்டி என்று அர்த்தம்😂.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

கொம்பேறி மூக்கன் விசமா? இல்லையா?

சின்னதில் இது விச பாம்பு எண்டும், கொத்தினால் சவம் எடுக்கும் வரை மரத்தில் (கொம்பில்) இருந்து பார்க்கும் என்றும் கிலியை வர வைத்தனர்.

ஆனால் அண்மையில் ஒருவர் அது லுலுலா பாம்பு என சொல்லி, கையில் அசால்டாக பிடித்து விளையாடும் வீடியோ பார்த்தேன்.

யாராவது ஜஸ்டின் அண்ணாக்கு @ போட்டு விடவும்.

இதே போல் - இலங்கையில் உள்ள விச பாம்புகள் எவை?

நாகம், பறவை நாகம், புடையன் என்று ஏதேதோ சொல்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பிகு

கொம்பேறி மூக்கன் விசமா? இல்லையா?

சின்னதில் இது விச பாம்பு எண்டும், கொத்தினால் சவம் எடுக்கும் வரை மரத்தில் (கொம்பில்) இருந்து பார்க்கும் என்றும் கிலியை வர வைத்தனர்.

ஆனால் அண்மையில் ஒருவர் அது லுலுலா பாம்பு என சொல்லி, கையில் அசால்டாக பிடித்து விளையாடும் வீடியோ பார்த்தேன்.

யாராவது ஜஸ்டின் அண்ணாக்கு @ போட்டு விடவும்.

இதே போல் - இலங்கையில் உள்ள விச பாம்புகள் எவை?

நாகம், பறவை நாகம், புடையன் என்று ஏதேதோ சொல்வார்கள்.

@Justin அண்ணை கவனத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

@Justin அண்ணை கவனத்திற்கு.

நன்றி தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

பிகு

கொம்பேறி மூக்கன் விசமா? இல்லையா?

சின்னதில் இது விச பாம்பு எண்டும், கொத்தினால் சவம் எடுக்கும் வரை மரத்தில் (கொம்பில்) இருந்து பார்க்கும் என்றும் கிலியை வர வைத்தனர்.

ஆனால் அண்மையில் ஒருவர் அது லுலுலா பாம்பு என சொல்லி, கையில் அசால்டாக பிடித்து விளையாடும் வீடியோ பார்த்தேன்.

யாராவது ஜஸ்டின் அண்ணாக்கு @ போட்டு விடவும்.

இதே போல் - இலங்கையில் உள்ள விச பாம்புகள் எவை?

நாகம், பறவை நாகம், புடையன் என்று ஏதேதோ சொல்வார்கள்.

தாயகத்தில் நாம் சிறுவர்களாக இருக்கையில் நம்பிய பாம்புக் கதைகளை நினைத்தால் இப்போது சிரிப்புத் தான் வருகிறது.

கொம்பேறி மூக்கன் விசமில்லாத பாம்பு. கூகிள் தேடலில் இந்தப் பாம்பின் ஆங்கிலப் பெயர் Bronzeback tree snake என்று வருகிறது. எல்லா வகைப் பாம்புகளும் லாவகமாக மரங்களில் ஏறுவதில்லை. கொம்பேறி மூக்கன் மரங்களில் ஏறி மரங்களிலேயே வாழக் கூடிய ஒரு பாம்பு வகை. இதையொட்டி இட்டுக் கட்டிய கற்பனைக் கதை தான், "ஆளைக் கடித்து விட்டு மரத்தில் போய் ஏறிக் கொள்ளும் கொம்பேறி மூக்கன், கடித்த ஆள் இறந்து எரிக்கப் படும் புகை தெரியும் வரை மரத்தை விட்டு இறங்காது" என்ற கதை. (இதனால், "சும்மா எதையாவது எரித்து புகை கிளப்பினால், கொம்பேறி மூக்கன் இறங்கி வரும்" என்று சில ஊர்ப் பெரிசுகள் கதையை கௌதம் மேனன் பாணியில் நீட்டித்துச் சொல்லவும் கேட்டிருக்கிறேன்).

கொம்பேறி மூக்கன் பற்றிய இன்னொரு அபாண்டமான பழி, இது "ஆண் சாரைப் பாம்பு" என்ற கதை. சாரைப் பாம்பும் கொம்பேறி மூக்கனும் வெவ்வேறு இனப் பாம்புகள். சாரை (Indian rat snake) மரங்களில் வேகமாக ஏற முடியாமல் தரையில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு விசமில்லாத பாம்பு. ஆனால், இரண்டுமே மிகவும் அச்சுறுத்தப் பட்டால் ஒரு சீறல் (hissing) ஒலியை எழுப்பக் கூடியவை, கடிக்கவும் செய்யும். ஆனால், விசப் பல் இல்லாமையால் சாதாரண காயம் ஏற்படும். உயிருக்கு ஆபத்துக்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

இதே போல் - இலங்கையில் உள்ள விச பாம்புகள் எவை?

நாகம், பறவை நாகம், புடையன் என்று ஏதேதோ சொல்வார்கள்.

இலங்கையைப் பொறுத்த வரை 5 முக்கியமான விசப் பாம்புகள் இருக்கின்றன.

1. நாக பாம்பு -Cobra- பல பெயர்களால் அழைக்கப் பட்டாலும், இது ஒரே வகையான இந்திய நாக பாம்பு தான். உதாரணமாக, கருநாகம் என்பது நன்கு வயது முதிரும் போது கருமையாக மாறி விட்ட நாக பாம்பு. பற நாகம் என்பது கற்பனைப் பெயர். "பறக்கும் நாகம்" என்ற மிகைப் படுத்தலினால் உருவான கற்பனையாக இருக்கலாம்.

இலங்கையில் ராஜநாகம் -King Cobra என்ற இன்னொரு வகையான பாம்பும் இருக்கக் கூடும், ஆனால் நான் அங்கிருந்த காலத்தில் அறியவில்லை. ராஜநாகம், பெயரில் நாகம் இருந்தாலும் , நாக பாம்பு அல்ல! நாக பாம்பையே உணவாக உட்கொள்ளக் கூடிய 20 அடிகள் வரை வளரக் கூடிய வேறொரு இனப் பாம்பு.

2. கண்ணாடி விரியன்-Russel's viper: இது முக்கியமான புடையன் வகைப் பாம்பு. நாகத்தை விட மூர்க்கமான பாம்பு.

3. சுருட்டை விரியன்-Saw-scaled viper: இதுவும் ஒரு புடையன் பாம்பு. கண்ணாடி விரியனை விடச் சிறிதென்றாலும் விசம் கண்ணாடி விரியன் போன்றது.

வன்னியில் "முத்திரைப் புடையன்" என்று பெயர் கேள்விப் பட்டிருக்கிறேன். இது கண்ணாடி விரியனைக் குறிப்பதா அல்லது சுருட்டை விரியனைக் குறிப்பதா என இன்றும் எனக்குக் குழப்பம். இந்த இரு புடையன்கள் கடித்தாலும் சிறு நீரில் இரத்தம் வெளியேறும் என்பதால், "மூத்திரப் புடையன்" என்று இரண்டுமே அழைக்கப் படுகின்றனவோ தெரியவில்லை.

4. கண்டங்கருவளை-common krait - மூர்க்கம் குறைந்த ஆனால், நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் விசம் கொண்ட பாம்பு.

5. Hump-nosed viper - இதுவும் சிறிய ஒரு புடையன் பாம்பு. உள்ளூர்ப் பெயர் கோடாலிப் பாம்பு, கோடாலிப் புடையன் என்பதாக இருக்கலாம். இதன் மூக்குப் பகுதி தெளிவாக மேல் நோக்கி வளைந்திருப்பதால் இந்தப் பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இலங்கையைப் பொறுத்த வரை 5 முக்கியமான விசப் பாம்புகள் இருக்கின்றன.

1. நாக பாம்பு -Cobra- பல பெயர்களால் அழைக்கப் பட்டாலும், இது ஒரே வகையான இந்திய நாக பாம்பு தான். உதாரணமாக, கருநாகம் என்பது நன்கு வயது முதிரும் போது கருமையாக மாறி விட்ட நாக பாம்பு. பற நாகம் என்பது கற்பனைப் பெயர். "பறக்கும் நாகம்" என்ற மிகைப் படுத்தலினால் உருவான கற்பனையாக இருக்கலாம்.

இலங்கையில் ராஜநாகம் -King Cobra என்ற இன்னொரு வகையான பாம்பும் இருக்கக் கூடும், ஆனால் நான் அங்கிருந்த காலத்தில் அறியவில்லை. ராஜநாகம், பெயரில் நாகம் இருந்தாலும் , நாக பாம்பு அல்ல! நாக பாம்பையே உணவாக உட்கொள்ளக் கூடிய 20 அடிகள் வரை வளரக் கூடிய வேறொரு இனப் பாம்பு.

2. கண்ணாடி விரியன்-Russel's viper: இது முக்கியமான புடையன் வகைப் பாம்பு. நாகத்தை விட மூர்க்கமான பாம்பு.

3. சுருட்டை விரியன்-Saw-scaled viper: இதுவும் ஒரு புடையன் பாம்பு. கண்ணாடி விரியனை விடச் சிறிதென்றாலும் விசம் கண்ணாடி விரியன் போன்றது.

வன்னியில் "முத்திரைப் புடையன்" என்று பெயர் கேள்விப் பட்டிருக்கிறேன். இது கண்ணாடி விரியனைக் குறிப்பதா அல்லது சுருட்டை விரியனைக் குறிப்பதா என இன்றும் எனக்குக் குழப்பம். இந்த இரு புடையன்கள் கடித்தாலும் சிறு நீரில் இரத்தம் வெளியேறும் என்பதால், "மூத்திரப் புடையன்" என்று இரண்டுமே அழைக்கப் படுகின்றனவோ தெரியவில்லை.

4. கண்டங்கருவளை-common krait - மூர்க்கம் குறைந்த ஆனால், நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் விசம் கொண்ட பாம்பு.

5. Hump-nosed viper - இதுவும் சிறிய ஒரு புடையன் பாம்பு. உள்ளூர்ப் பெயர் கோடாலிப் பாம்பு, கோடாலிப் புடையன் என்பதாக இருக்கலாம். இதன் மூக்குப் பகுதி தெளிவாக மேல் நோக்கி வளைந்திருப்பதால் இந்தப் பெயர்.

நன்றி அண்ணா.

விசமில்லாதா பாம்புதானா கொம்பேறி மூக்கன்? என்னமா கிலி ஏத்தி இருக்கிறார்கள்.

2 hours ago, Justin said:

(இதனால், "சும்மா எதையாவது எரித்து புகை கிளப்பினால், கொம்பேறி மூக்கன் இறங்கி வரும்" என்று சில ஊர்ப் பெரிசுகள் கதையை கௌதம் மேனன் பாணியில் நீட்டித்துச் சொல்லவும் கேட்டிருக்கிறேன்).

எங்கள் ஊர் ஜேம்ஸ் கமரனுகள் “போலியாக ஒரு பாடை கட்டி ஒப்பாரி வைத்து அழுதபடி அதை சுடலை நோக்கி எடுத்து போனால்தான் கொம்பேறி மூக்கன் இறங்கும்” என்பார்கள்😂.

அப்படியே இந்த ஒண்டை கொண்டால் அதன் சோடி தேடி வந்து கொத்தும் எண்ட கதையும் பொய் என்பதை உறுதிபடுத்தி விடுங்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2026 at 15:26, goshan_che said:

அப்படியே இந்த ஒண்டை கொண்டால் அதன் சோடி தேடி வந்து கொத்தும் எண்ட கதையும் பொய் என்பதை உறுதிபடுத்தி விடுங்கள்.

"முந்தானை முடிச்சு" திரைப் படம முருங்கைக் காய் விடயத்தை தமிழர்களிடையே பரப்பிய மாதிரி, சிறீப்பிரியா நடித்த "நீயா" படம் இந்தச் சோடிப் பாம்பு பற்றிய கதையைப் பரப்பியது.

பாம்பு, பென்குயின் போல ஒரே சோடியோடுவாழ் நாளைக் கழிக்கும் உயிரினம் அல்ல. அப்படியெல்லாம் அடித்தவரைச் சோடி அடையாளம் கண்டு வருவதானால், ஒரு சோடிகளின் படையே வர வேண்டும். அந்தளவுக்குப் பல தார மணம் செய்வது பாம்பினம். அப்படியெதுவும் நிஜத்தில் நடப்பதில்லை, திரையில் பார்த்து ரசிக்க வேண்டியது தான்!

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2026 at 09:43, goshan_che said:

கொம்பேறி மூக்கன் விசமா? இல்லையா?

இந்தக் கொம்பேறி மூக்கன் பாம்பு குறித்து என்னிடம் ஒரு கதை இருக்கிறது. இது புனைந்தது இல்லை, மாறாக நேரில்க் கண்டது.

1986 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். பாடசாலை நாட்களில் ஒன்று. பிற்பகல் பாடசாலை முடிந்து நானும் தம்பியும் சைக்கிளில் டெம்பிள் ரோட் ஊடாக கோண்டாவில் நோக்கி வந்துகொண்டிருந்தோம். பக்கத்தில் நண்பன் விஜயரூபனும் வந்துகொண்டிருந்தான்.

நல்லூர்க் கோயிலைத் தாண்டி ஆடியபாதம் வீதிச் சந்திக்குச் செல்வதற்கு சில மீட்டர்கள் தூரத்தில், வீதியின் இடதுபக்கத்தில் வீதியை அடைத்து மூடி பெருஞ்சனத்திரள். எங்களால் தொடர்ந்து பயணிக்கமுடியாததால் சைக்கிள்களை விட்டு இறங்கிக்கொண்டோம். வீதியோரத்தில் இருந்த பாரிய காணியொன்றிற்குள் இருந்தது மண்ணால் கட்டப்பட்ட, ஓலையினால் வேயப்பட்ட கூறையைக் கொண்ட வீடு. நடுத்தரவர்க்கத்தை எட்டியிருக்க வாய்ப்பில்லாத குடும்பம் ஒன்று வாழும் வீடுபோலக் காட்சியளித்த அவ்வீட்டின் முற்றத்தில் இரு சாரைகள் பிணைந்தபடி முற்றமெங்கும் அரைந்து கொண்டிருந்தன. சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கை பார்க்க, அவ்வீட்டின் பெண்மணியோ கையில் ஒரு சாக்குடன் பாம்புகளுக்குக் கிட்டச் செல்வதும் பின்னர் பாம்புகள் (பிணைந்தபடி) அவர் அருகில் வரும்போது விலகி ஓடுவதுமாக இருந்தார். எங்களுக்கோ அவர் அப்படி கையில் சாக்குடன் நிற்பதன் காரணம் தெரியவில்லை. அருகில் நின்ற பெரியவர்களிடம் என்ன நடக்கிறது என்று பேச்சுக் கொடுத்தோம். அப்போதுதான் சாக்கின் மகிமை தெரிந்தது.

பிணைந்த பாம்புகளில் ஒன்று கொம்பேறி மூக்கனாம். விசமுள்ளது என்று கூறினார்கள். அதனை அடிப்பதற்கு அப்பகுதியில் நின்றவர்கள் முயன்றபோது, அவ்வீட்டின் பெண்மணி அவர்களை மறித்துவிட்டாராம். ஏனென்று கேட்டால், பாம்புகள் பிணையும்போது அவற்றின் மீது துணியினையோ அல்லது சாக்கினையோ போர்த்து மூடி, பின்னர் பாம்புகள் கலைந்து சென்றவுடன் அச்சாக்கினை கவனமாக எடுத்துக்கொண்டுபோய் வீட்டின் அலுமாரிக்குள் வைத்துவிட்டால் அவ்வீட்டில் செல்வம் கொழிக்குமாம் என்று அப்பெண்மணி கூறியிருக்கிறார். இதனாலேயே பாம்புகளை அடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

சிறிதுநேரத்தில் சுற்றியிருந்த ஆட்களின் சத்தத்தினால் பாம்புகள் கலைந்து ஒவ்வொரு பக்கமாகச் சென்றுவிட, அப்பெண்மணியும் அச்சாக்கினை கவனமாக மடித்து வீட்டிற்குள் எடுத்து சென்றார்.

ஆனால் என்ன, அதற்குப் பிறகும் அதே வீதியினால் குறைந்தது 2 வருடங்களாவது சென்று வந்திருப்பேன், வீட்டின் நிலையோ மாறாமல் அப்படியே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2026 at 04:53, Justin said:

"ஆளைக் கடித்து விட்டு மரத்தில் போய் ஏறிக் கொள்ளும் கொம்பேறி மூக்கன், கடித்த ஆள் இறந்து எரிக்கப் படும் புகை தெரியும் வரை மரத்தை விட்டு இறங்காது" என்ற கதை. (இதனால், "சும்மா எதையாவது எரித்து புகை கிளப்பினால், கொம்பேறி மூக்கன் இறங்கி வரும்"

அச்சொட்டாக இக்கதையினை கேட்டிருக்கிறேன். கரவெட்டி - நாவலர் மடத்தில் தோட்டக்காணியில் அமைந்திருந்த குடிசைக்குள் படுத்திருந்த ஒரு குடும்பத்தில் தகப்பன், பிள்ளைகள் இருவர் என்று மூவரை பாம்பு தீண்டி இறந்துபோனார்கள். 80 களின் நடுப்பகுதியிலாக இருக்கலாம். இரு பாம்புகள் தோட்டத்தில் பிணைந்தபோது தகப்பனார் மண்வெட்டியால் அவற்றை அடித்ததாகவும், அப்போது ஒன்று இறந்துவிட‌ , மற்றையது தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறினார்கள்.

உயிர் தப்பிய பாம்பே அன்றிரவு வீட்டினுள் நுழைந்து அக்குடும்பத்தில் தகப்பானாரைக் கொல்லவந்ததாகவும் ஆனால் அவர் கடிபட்டதும் பாம்பைத் தூக்கி எறிந்துவிட அப்பாம்பு அருகில் படுத்திருந்த இருபிள்ளைகளையும் கடித்துவீடுச் சென்றதாகவும் கூறினார்கள்.

மரண ஊர்வலம் நடக்கும்போது அருகில் இருந்த வீதியில் நின்ற பனையில் அப்பாம்பு ஏறியிருந்ததை சிலர் கண்டதாக கூறினார்கள். மயானத்தில் அந்த மூவரும் எரிக்கப்பட்ட பின்னரே அப்பாம்பு இறங்கிச் சென்றதை இன்னும் சிலர் கண்டதாகவும் கூறினார்கள்.

அந்தவயதில் எவர் என்ன சொன்னாலும் உண்மையென்று நம்பியதால் (இப்போதும் சிலவேளைகளில் அப்படித்தான்) சிலகாலம் பாம்பென்றால், அதுவும் கொம்பேறி மூக்கன் என்றால் கெட்ட பயம்.

என்ன மாதிரி எங்களைப் பேய்க்காட்டி வைச்சிருக்கிறாங்கள் எண்டு இப்பத்தான் தெரியுது!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி இன்னுமொரு கதையும் அக்காலத்தில் கூறினார்கள்.

ஏதோவொரு வகைப் பாம்பு இரவு உணவுதேடிச் செல்லும்போது தனது வாயில் எப்போதும் வைத்திருக்கும் முத்தினை வெளியே துப்பிவிட்டு, அவ்வெளிச்சத்தில்த்தான் தனது இரையை வேட்டையாடுமாம். ஆகவே பாம்பு இரைதேடச் செல்லும்போது அந்த முத்தினை எடுக்க அதன் பின்னால் போய், பாம்பு முத்தினை துப்பிவிட்டு இரைதேட ஆரம்பிக்கும்போது ஓடிச்சென்று அம்முத்தின் மேல் சாணியையோ அல்லது களி மண்ணையோ போட்டு மூடிவிட்டு வந்துவிட வேண்டுமாம். இருட்டினுள் தனது முத்தினைத் தேடிக் களைத்துவிட்ட பாம்பு காலையில் இறந்துவிடுமாம். பின்னர் தாராளமாகச் சென்று சாணிக்குள் புதைந்துப்போன‌ முத்தினை எடுத்து வரமுடியுமாம்.

யாராவது இப்படிக் கேளவிப்பட்டிருக்கிறீர்களா? என்ன மாதிரி அளந்துவிட்டிருக்கிறார்கள்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொம்பேறிமூக்கன் பாம்பு.

யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் உள்ள அந்தச் சிறிய கிராமத்தில் உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. செல்லையா, தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த பலா மரத்தின் காய்ந்த கிளைகளை வெட்டுவதற்காகக் கையில் வீச்சரிவாளுடன் மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார்.

செல்லையாவுக்கு வயது ஐம்பதைக் கடந்திருக்கும். "மரமேறிக் கைத்தழும்பு ஏறிய உடம்பு" என்று ஊருக்குள் சொல்வார்கள். பலா மரத்தின் ஒரு கிளை வீட்டின் கூரைக்கு மேலே நீண்டுகொண்டு தொல்லையாக இருந்தது.

"டேய் ரகு, அந்தக் கயிற்றை இங்க எறிடா" என்று கீழே நின்ற மகனிடம் கத்தினார்.

கயிற்றைப் பிடித்துக்கொண்டு அந்தக் கிளையின் நுனிப் பகுதிக்கு நகர்ந்தார். அப்போதுதான் அந்தச் சலசலப்பு கேட்டது. பலா இலைகளுக்கு நடுவே பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் நீண்ட ஒரு பாம்பு பதுங்கியிருந்தது.

செல்லையா உற்றுப் பார்த்தார். அவரது நெஞ்சு 'திக்' என்றது.

"அடக் கடவுளே! இது சாரைப் பாம்பின்ரை ஆண் வர்க்கம்! கொம்பேறி மூக்கன்!"

கிராமத்துப் பெரியவர்கள் சொல்வது செல்லையாவின் நினைவுக்கு வந்தது. ‘கொம்பேறி மூக்கன் கடிச்சால் கொல்லாம விடாது. அது கடிக்கிற வேகத்தில மரத்து உச்சிக்கு ஏறும். அது ஏற ஏற விஷம் தலைக்கு ஏறும். கடைசியில பிணத்தை எரிச்சாத்தான் கீழ இறங்கும்.’

செல்லையா சுதாரிப்பதற்குள் அந்தப் பாம்பு மின்னல் வேகத்தில் பாய்ந்தது.

செல்லையாவின் வலது கையில் மணிக்கட்டுக்கு மேலே 'நறுக்'கென்று கொத்தியது. அடுத்த நொடியே அந்தப் பாம்பு செல்லையாவை விட்டு விலகி மரத்தின் உச்சிக்கிளையை நோக்கிச் சரசரவென்று ஏறத் தொடங்கியது.

"ஐயோ! அப்பா!" என்று கீழே நின்ற ரகு அலறினான்.

செல்லையா நிலைகுலைந்தார். விஷம் ஏறுகிறதோ இல்லையோ பயம் அவரை ஆட்கொண்டது. மரக்கிளையைப் பிடித்துக்கொண்டே கீழே பார்த்தார். கண்கள் இருட்டின. பிடி தளர்ந்தது.

"தொப்"பென்று கீழே மணலில் வந்து விழுந்தார்.

சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்களும், அயலவர்களும் ஓடி வந்தார்கள். செல்லையாவின் கையில் இரண்டு பற்கள் பதிந்த அடையாளம். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

ஊர்ப் பெரியவர் கனகசபை ஓடி வந்தார். மரத்தை அண்ணாந்து பார்த்தார்.

மரத்தின் மிக உயரமான, மெல்லிய கிளையின் நுனியில் அந்தப் பாம்பு சுருண்டு உட்கார்ந்து கீழே விழுந்து கிடக்கும் செல்லையாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

"மாட்டிட்டியே செல்லையா, அது கொம்பேறி மூக்கன்டா! கடிச்சிட்டு உச்சிக்கு ஏறிட்டு. இனி அது இறங்க மாட்டுது. அது மேல இருக்கிற வரைக்கும் இவன் ஒடம்பில விஷம் ஏறிக்கொண்டே தான் இருக்கும்." என்றார் கனகசபை பீதியுடன்.

செல்லையாவுக்கு வாய் நுரைக்கத் தொடங்கியது. உடல் வெட்டி இழுத்தது. விஷத்தின் வேலையா அல்லது மரண பயமா என்று தெரியவில்லை.

"ஆஸ்பத்திரிக்குத் தூக்குங்கோ!" என்று ரகு கத்தினான்.

"தம்பி, இது சாதாரண பாம்பு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற நேரத்துக்குள்ள கதை முடிஞ்சிடும். அந்தப் பாம்பு கீழ இறங்கினாத்தான் உன்ரை அப்பா பிழைப்பான். ஆனால் உன்ரை அப்பாவை எரிச்சுக் கருமாதி செய்யுற புகை வந்தாத்தான் அது இறங்கும்." என்றார் பெரியவர்.

ரகுவுக்குக் கோபம் வந்தது. "என்ன லூசுத்தனமா கதைக்கிறீங்கள்? அப்பாவைக் காப்பாத்த வழியைப் பாருங்கோ!"

அப்போது கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் "பெரியவரே அந்தப் பாம்புக்குச் செல்லையா செத்துப்போனது தெரியோணும். அவ்வளவு தானே?" என்றான்.

"ஓம். அவன் எரிஞ்ச புகை அதுக்குத் தெரியோணும்." என்றார் பெரியவர்.

"அப்ப ஒரு காரியம் செய்வம். செல்லையாவைத் தூக்கிட்டுப் போய் ஒரு ஓரமா வையுங்கோ. உடனை கொஞ்சம் பச்சை ஓலையளையும், பழைய பாயளையும் போட்டு மரத்துக்குக் கீழ எரிப்பம். அந்தப் புகை மண்டலத்தில பாம்பு ஏமாந்தாலும் ஏமாறும்." என்றான் அவன்.

வேறு வழியில்லை. செல்லையா மயக்க நிலையில் இருந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

ரகுவும் நண்பர்களும் வேகமாகச் செயல்பட்டார்கள். பலா மரத்தின் அடியில் காய்ந்த சருகுகள், பழைய பனையோலைகள் எல்லாவற்றையும் குவித்தார்கள். நடுவே கொஞ்சம் பச்சை இலைகளையும் போட்டார்கள்.

"நெருப்பை வைடா!" என்றார் பெரியவர்.

நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பச்சை இலைகள் எரிந்ததில் கரும்புகை குப்பென்று கிளம்பியது. அந்தப் புகை நேராக மரத்தின் உச்சியை நோக்கிச் சென்றது.

கீழே அனைவரும் மூச்சடக்கிக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மரத்தின் உச்சியில் இருந்த கொம்பேறி மூக்கன் அந்தப் புகையை உணர்ந்தது. கீழே ஏதோ எரிகிறது; புகை வருகிறது என்பதை அது பார்த்தது.

"எரிச்சுட்டாங்க போல" என்று நினைத்ததோ என்னவோ அந்தப் பாம்பு மெதுவாக நகரத் தொடங்கியது.

"இறங்குது! பாம்பு இறங்குது!" என்று கூட்டத்தில் ஒருவர் கிசுகிசுத்தார்.

பாம்பு ஒவ்வொரு கிளையாக இறங்க இறங்க ஓரமாகப் படுத்திருந்த செல்லையாவின் இழுபறி கொஞ்சம் குறைவது போலத் தோன்றியது. பாம்பு பாதி மரத்தைத் தாண்டி கீழே வந்து கொண்டிருந்தது.

திடீரென்று காற்று திசைமாறி வீசியது. புகை கலைந்து சென்றது.

பாம்பு சட்டென்று நின்றது. கீழே எரிவது மனித உடல் அல்ல, குப்பைகள் என்பதை அது கவனித்துவிட்டதோ? அல்லது கீழே சலசலக்கும் மனிதர்களின் சத்தத்தைக் கேட்டுவிட்டதோ?

அது மீண்டும் மேலே ஏறத் திரும்பியது.

"ஐயோ! அது ஏமாறல! திரும்பவும் ஏறுது!" என்று ரகு கதறினான்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமு தன் கையில் வைத்திருந்த 'கவணை'(கெற்றப்போல்) எடுத்தான். சின்ன வயதில் குருவி, ஓணான் அடித்த கை பழக்கம்.

தரையில் கிடந்த ஒரு கூர்மையான கல்லை எடுத்துக் கவணில் பொருத்தினான். குறி தவறக்கூடாது. தவறினால் பாம்பு உச்சிக்குப் போய்விடும்; செல்லையா கதை முடிந்துவிடும்.

மூச்சிரைக்கக் குறி பார்த்தான். பாம்பு மேல் கிளைக்குத் தாவத் தயாரானது.

‘விர்ர்ர்’

கவணில் இருந்து புறப்பட்ட கல் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. சரியாகப் பாம்பின் தலைப்பகுதிக்குக் கீழே அதன் கழுத்தில் 'நச்'சென்று தாக்கியது.

பாம்பு நிலைதடுமாறியது. பிடி நழுவியது.

சுமார் முப்பது அடி உயரத்தில் இருந்து ஒரு கயிறு அறுந்து விழுவது போல அந்தப் பாம்பு தொப்பென்று கீழே விழுந்தது.

விழுந்த வேகத்தில் அது சுதாரிப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் கம்பு, தடிகளால் அதை அடித்தார்கள்.

அதே நேரம் அங்கே ஓரமாகப் படுத்திருந்த செல்லையா ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்களைத் திறந்தார்.

"அப்பா!" என்று ரகு ஓடிப் போய்க் கட்டிக்கொண்டான்.

பாம்பு செத்துவிட்டது. அதன் உடல் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது.

பெரியவர் கனகசபை செல்லையாவின் கையைப் பிடித்துப் பார்த்தார். நாடித் துடிப்பு சீராக இருந்தது.

"தப்பிச்சுட்டான். அந்தப் பாவி கீழ இறங்கினதால தான் இவன் பிழைச்சான். ஆனா அதுவா இறங்கேல்லை. நாங்கள் இறக்கினோம்!" என்றார்.

செல்லையா மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். அவர் கண்கள் அந்தப் பலா மரத்தின் உச்சிக்கிளையையே பார்த்துக்கொண்டிருந்தன.

மருத்துவ ரீதியாக அது பயத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம். அல்லது அந்தப் பாம்பு குறைந்த அளவு விஷத்தையே கக்கியிருக்கலாம். ஆனால் அந்த ஊர் மக்களுக்கு இன்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

"கொம்பேறி மூக்கன் ஏறினால் விஷம் ஏறும்; அது இறங்கினால் தான் உயிர் தங்கும்."

அன்று முதல் அந்தப் பலா மரத்தில் யாரும் ஏறுவதில்லை. காற்றில் அதன் இலைகள் அசையும்போதெல்லாம் அந்தப் பாம்பின் ஆவி இன்னும் அங்கே உச்சிக்கிளையில் உட்கார்ந்து யாராவது கடி வாங்குவார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு பயம் அந்த ஊரில் இன்றும் இருக்கிறது.

நண்பனின் முகநூலிருந்து.....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

இப்படி இன்னுமொரு கதையும் அக்காலத்தில் கூறினார்கள்.

ஏதோவொரு வகைப் பாம்பு இரவு உணவுதேடிச் செல்லும்போது தனது வாயில் எப்போதும் வைத்திருக்கும் முத்தினை வெளியே துப்பிவிட்டு, அவ்வெளிச்சத்தில்த்தான் தனது இரையை வேட்டையாடுமாம். ஆகவே பாம்பு இரைதேடச் செல்லும்போது அந்த முத்தினை எடுக்க அதன் பின்னால் போய், பாம்பு முத்தினை துப்பிவிட்டு இரைதேட ஆரம்பிக்கும்போது ஓடிச்சென்று அம்முத்தின் மேல் சாணியையோ அல்லது களி மண்ணையோ போட்டு மூடிவிட்டு வந்துவிட வேண்டுமாம். இருட்டினுள் தனது முத்தினைத் தேடிக் களைத்துவிட்ட பாம்பு காலையில் இறந்துவிடுமாம். பின்னர் தாராளமாகச் சென்று சாணிக்குள் புதைந்துப்போன‌ முத்தினை எடுத்து வரமுடியுமாம்.

யாராவது இப்படிக் கேளவிப்பட்டிருக்கிறீர்களா? என்ன மாதிரி அளந்துவிட்டிருக்கிறார்கள்??

நான் கேள்விபட்டுள்ளேன்.

சாணியை பாம்பின் முத்து மேல் போடும் தைரியம் எல்லாம் இல்லை, அதனால் பாம்பு முத்தை துப்பிய பின் இயற்கை/அகால மரணம் அடைந்தால் நான் போய் முத்தை நைசாக எடுத்து கொள்ளலாம் என நப்பாசை கொண்டதுண்டு😂.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

ஏதோவொரு வகைப் பாம்பு இரவு உணவுதேடிச் செல்லும்போது தனது வாயில் எப்போதும் வைத்திருக்கும் முத்தினை வெளியே துப்பிவிட்டு, அவ்வெளிச்சத்தில்த்தான் தனது இரையை வேட்டையாடுமாம். ஆகவே பாம்பு இரைதேடச் செல்லும்போது அந்த முத்தினை எடுக்க அதன் பின்னால் போய், பாம்பு முத்தினை துப்பிவிட்டு இரைதேட ஆரம்பிக்கும்போது ஓடிச்சென்று அம்முத்தின் மேல் சாணியையோ அல்லது களி மண்ணையோ போட்டு மூடிவிட்டு வந்துவிட வேண்டுமாம். இருட்டினுள் தனது முத்தினைத் தேடிக் களைத்துவிட்ட பாம்பு காலையில் இறந்துவிடுமாம். பின்னர் தாராளமாகச் சென்று சாணிக்குள் புதைந்துப்போன‌ முத்தினை எடுத்து வரமுடியுமாம்.

அண்ணை, அது முத்தில்ல நாகரத்தினம், தானாக ஒளிருமாமே!!🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை, அது முத்தில்ல நாகரத்தினம், தானாக ஒளிருமாமே!!🤣

சரி தான். முத்தில்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அண்ணை, அது முத்தில்ல நாகரத்தினம், தானாக ஒளிருமாமே!!🤣

ஓம் நாகரத்தினமேதான்.

எனக்கு தெரிந்த நாகரத்தினம் எண்டா அது எங்கட நக்கத் மட்டும்தான்😀

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான பாம்புக் கதைகள்!

இந்தக் கதைகளை வாசிக்கையில் 1980/85 அளவில் யாழ்ப்பாணத்தில் வசித்த நசீர் என்ற கின்னஸ் சாதனை முயற்சியாளர் நினைவுக்கு வருகிறார். நசீர் அவர்களுடைய ஒரு சாதனை முயற்சி ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் சில டசின் பாம்புகளுடன் பல நாட்கள் வசிக்கும் முயற்சி. அப்பாவுடன் சென்று நாம் பார்த்த நினைவு, இடம் நினைவில்லை. சுற்றி வரப் பல வகையான பாம்புகள் அலைந்து திரிய, கூண்டின் நடுவில் ஒரு கட்டிலில் அமர்ந்து செய்திப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். சப்பாத்து அணிந்து, நீளக் காற்சட்டையின் கீழ் பகுதியை கிளிப் மூலம் கால்களோடு இறுக்கமாகக் கட்டியிருந்தார். இல்லா விட்டால் உறங்கும் போது கால் சட்டையின் கீழ் வழியாக ஏதாவது பாம்பு உள்ளே நுழைந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.