Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'செவ்வருக்கை' நூல் அறிமுக உரை

           - சுப.சோமசுந்தரம்

             எழுத்தாளர் எம்.எம்.தீன் அவர்களின் சமீபத்தியப் படைப்பான 'செவ்வருக்கை' எனும் சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் பேறு பெற்றேன். தொகுப்பிலுள்ள முதற்கதையின் தலைப்பே நூலுக்கான தலைப்பானது. செவ்வருக்கை என்பது ஒரு வகை பலா மரத்தைக் குறிப்பதாகும் - வாழையில் செவ்வாழை போல. இதன் பழத்தில் சுளைகள் மிக அடர்த்தியாகவும் செவ்வண்ணத்திலும் அமைவன. கனியின் மணமும் சுவையும் தன்னிகரற்றவை. இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் சாதி ஆணவம் பற்றிப் பேசுபவை. தீன் அவர்கள் தக்கோரிடம் கேட்ட உண்மை நிகழ்வுகளைக் கதைக்களத்திற்கு ஏற்றவாறு அமைத்தளித்த படைப்பு இது.

                நூலில் உள்ள அனைத்துக் கதைகளையும் நாம் இங்கு பேச வரவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு (!) பதமாய் நான்கு கதைகளைச் சொல்லி முழுச்சோற்றையும் நீங்களே உண்டு பாருங்கள் என அழைப்பு விடுவதே இவ்வெழுத்தின் நோக்கம்.

          முதலில் செவ்வருக்கை.

சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்த ஒரு ஆதிக்க சாதியினரின் காட்டில் (தோட்டத்தில்) ஆத்தி புலையனும் அவன் மனைவி வெயிலாளும் மற்றும் சில குடியானவர்களும் உழைத்து வந்தனர். அதனைப் பொறுப்பாக வழிநடத்தியவன் ஆத்திபுலயன். வெயிலா நிறைமாத சூலியான நேரம் இரண்டு செவ்வருக்கைப் பழங்கள் ஒரு மரத்தில் காய்த்துக் கனிவாகின. அதனை உண்ண ஆசைப்பட்ட வெயிலா தனது அண்ணன் மாடப்புலையன் மூலமாக வெட்டிக் கொணர்ந்து ஆசை தீர உண்டாள். அதனை அந்த நில உரிமையாளர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதையுணர்ந்த ஆத்திபுலயன் குடும்பத்துடன் அங்கிருந்து தப்ப முயல, ஆதிக்க வெறி பிடித்தவர்களால் கொலையுண்டு முடிந்து போயினர். கொலையாவதற்கு முன் வெயிலா ஈன்ற ஆண் மகவினைக் காப்பாற்றிய மாடப்புலயன் அவனுக்கு செங்காடன் எனப் பெயரிட்டு வளர்த்து ஆளாக்கினான். செங்காடன் வளர்ந்து ஆளாகித் தன் அப்பன் -  ஆத்தாளைக் கொன்றவர்களைக் கொன்று அந்தச் சண்டையில் தானும் உயிர் நீத்தான். இதன் பின்னர் பல இன்னல்களுக்கு ஆளான பண்ணையார் குடும்பத்துக்குப் பரிகாரம் சொன்ன மலையாள மாந்திரீகர்கள் ஆத்திபுலயன், வேலாயி, செங்காடன் ஆகியோருக்குப் பூடம் போட்டு வருடா வருடம் செய்முறைகள் செய்து வழிபடச் செய்தார்கள்.

            இது நடந்து முந்நூறு வருடங்களுக்குப் பிறகு பழைய கதையெல்லாம் திரிந்து இப்போது பண்ணையார் குடும்பத்து வகையறாக்கள் அந்தத் தெய்வங்கள் தங்கள் குலத்தைச் சார்ந்த, தங்கள் குலத்தை ஆசீர்வதிக்கும் குலசாமி என்றே நம்புகின்றனர். தங்களுக்குக் கீழான பகைச்சாதியினர் மீது தாக்குதல் நடத்தப் போகும்போதெல்லாம் அக்குல தெய்வங்களை வணங்கி உத்தரவு பெற்றே செல்கின்றனர். "செங்காடனும் மற்ற குல தெய்வங்களும் பழியை மறந்து சமாதானம் ஆகியோ அல்லது அவர்களது அதிகாரம் கண்டு பயந்தோ சிரித்தபடியே உத்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்று எழுத்தாளர் தம் கூற்றாக அங்கதத்துடன் கதையை நிறைவு செய்கிறார்.

             எம்.எம்.தீன் அவர்களின் கதை சொல்லும் நேர்த்தியைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. எழுத்து அவருக்குப் புதிதல்ல. சமூக அவலங்களை எடுத்தியம்புவதில் நேரிடையாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நேரிடையாகவும், குறிப்பாகச் சொல்ல வேண்டிய இடத்தில் குறிப்பாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் வெகு சிலரே. ஒவ்வொரு கதையிலும் அவர் போடும் நிறைவுத் திரை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வது நிறைவாய் அமையும். எடுத்துக்காட்டாக, செவ்வருக்கையை இப்போது கையிலெடுப்போம். தாங்கள் முன்னர் அநீதி இழைத்தவர்களிடமே வந்து ஆதிக்க வர்க்கத்தினர் மீண்டும் அந்த அநீதியைத் தொடர்ந்திட உத்தரவு கேட்பதும், அதற்கு அவர்கள் இசைவதுமான வெளிப்பாடு நகைமுரண் மட்டுமல்ல; இன்றைய சமூக அவலத்தின் அபாரமான குறியீடும் கூட. நமக்குத் தெரிந்து தலித் சமூகத்தினர் சிலரும், ஒரு காலத்தில் மேலாடை அணிய மறுக்கப்பட்ட சமூகத்தில் பலரும் அதே பாசிச சக்திகளிடம் சரணடைந்து நிற்பது என் போன்றோர் நினைவில் நிழலாடுவது தவிர்க்க இயலாத ஒன்று. எழுத்தாளர் இக்குறிப்பைத்தான் பெரும்பாலும் கொண்டிருப்பார்; உறுதியாகத் தெரியாது. எழுத்தாளர் சிந்தித்ததை வாசகரும் சிந்திக்க வைப்பதும், அவர் சிந்திக்காதையும் சிந்திக்க வைப்பதும்தானே சிறந்த எழுத்தாக அமைய முடியும் !

             போகிற போக்கில் இக்கதை தொடர்பான வேறு ஒன்றைச் சொல்வது என் கடமை என எண்ணுகிறேன். இது செவ்வருக்கை. அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதை செவ்வாழை. முக்கனிகளில் இரண்டு வந்து விட்டனவே ! இரண்டு கதைகளின் பொதுவான அடிநாதம் மேட்டிமைத்தனம் சாடல். செவ்வருக்கை சாடுவது சாதிய மேட்டிமையை; செவ்வாழை சாடுவது வர்க்க மேட்டிமையை. செங்கோடன் என்னும் ஏழைக் குடியானவன் தன் குழந்தைகளிடம் ஆசையை வளர்த்து, தன் வீட்டுக் கொல்லையில் செவ்வாழை ஒன்றை வளர்த்து வருகிறான். அந்த ஏழையின் கனவு செழித்து வளர்ந்தது. இரண்டொரு நாட்களில் வாழைக்குலையினை வெட்ட எண்ணுகிறான். பிள்ளைகள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் வேலை செய்யும் பண்ணையின் உரிமையாளர் தம் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சியொன்றுக்கு அந்த செவ்வாழைக் குலையைக் கேட்டு ஆள் அனுப்புகிறார். மறுப்பது எங்ஙனம் ? தனது மற்றும் தன் குழந்தைகளின் கனவெல்லாம் நொறுங்க, அக்குலையை வெட்டிக் கொடுத்து விடுகிறான். குழந்தைகளின் அழுகை நாட்கணக்கில் ஓயவில்லை. ஓரளவு விவரம் தெரிந்த பெரிய பையனின் விரக்தி நிலையைக் கதையின் முத்தாய்ப்பாக அறிஞர் அண்ணா இவ்வாறு வைக்கிறார் - "பாவம் சிறுவன்தானே ! அவன் என்ன கண்டான் -  செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகில் சர்வ சாதாரண சம்பவம் என்பதை !". உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் பொதுவுடமைக் கருத்தை அண்ணா முன்னெடுக்கும் கதை செவ்வாழை. தோழர் தீன் சமூக நீதியைக் கையிலெடுத்ததும், சமூக நீதியை அதிகம் பேசும் அறிஞர் அண்ணா பொதுவுடமை பேசியதும் ஒரு இனிமையான ஒப்பீடு ! வர்க்க விடுதலையும் சமூக நீதியும் பின்னிப் பிணைந்த வை என்னும் பொதுவுடைமைவாதிகளின் கருத்திற்கு உரமிடுவது.

             சாதியம் என்னும் இழிவு, மத எல்லைகளைக் கடந்தது என்பதை சுட்டிக்காட்ட எம்.எம்.தீன் ஒருபோதும் தவறவில்லை. இந்திய இஸ்லாமியரிடையே சாதியம் விரவிக் கிடப்பதை 'நாசுவம்' எனும் கதையிலும், கிறித்துவத்தில் சாதியப் போக்கினை 'ஊரு ஒப்பாது' எனும் கதையிலும் ஆணித்தரமாய் உரைப்பதில் அவர் பின்வாங்கவில்லை.

               இஸ்லாமிய சமூகம் பெருமளவில் வாழும் ஊருக்கு முடி திருத்தும் தொழிலுக்காகவே கொண்டுவரப்பட்ட குடும்பத்தின் வாரிசு ஒருவர் பிற்காலத்தில் சென்னை சென்று கட்டுமானத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார். தம் மகனின் திருமணத்தை இந்த ஊரில் அவர் கட்டித் தந்த 'நிலா மஹால்'இல் நடத்த முடிவு செய்து ஊரடைக்க மதிய விருந்துக்கும் மாலை வரவேற்புக்கும் தடபுடலாக ஏற்பாடு செய்து அழைக்கிறார். மதிய விருந்துக்கு அந்த ஊர்க்காரர் ஒருவர் கூட வரவில்லை. அவரும் இஸ்லாமியராயினும் அவரது சாதி கருதி ஊர் மக்களான இஸ்லாமியர்கள் (!) திருமணத்தைப் புறக்கணித்த விவரம் அவருக்குத் தெரிய வருகிறது. நியாயமான அறச்சீற்றத்துடன் மாலை வரவேற்பை ரத்து செய்துவிட்டுக் குடும்பத்துடன் சென்னைக்குக் கிளம்பிச் சென்று விடுகிறார். திருமணத்திற்கு போன மாதிரியும் இருக்கட்டும், போகாத மாதிரியும் இருக்கட்டும் என்று மாலை வரவேற்புக்கு வந்த ஊர்க்காரர்கள் சிலரை பூட்டிய கதவு வரவேற்கிறது. வந்தவர்களில் தொப்பியும் பெரிய தாடியும் வைத்திருந்த பெரிய மனுசர் ஒருவர், "என்ன இருந்தாலும் நாசுவப் பயலுக்கு இம்புட்டு பவிசும் வீம்பும் ஆவாது" என்று சொல்ல, கதை முடிகிறது. இந்திய இஸ்லாத்திலும் சாதிய மனநிலை மாறவில்லை; மாறுவதாகவும் இல்லை என்பதை 'நாசுவ'த்தின் அந்த இறுதி நொடி உணர்த்துகிறது. இக்கதை அன்வர் பாலசிங்கம் எழுதிய 'கருப்பாயி என்ற நூர்ஜஹான்' எனும் குறுநாவலை நினைவுறுத்துகிறது. சாதியக் கொடுமையால் மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்தைத் தழுவிய தலித் சமூகத்தினர் பின்னர் தம் சமூகத்தாராலும், இஸ்லாமியராலும் ஒதுக்கி வைக்கப்பட்டு அல்லலுற்ற கதையைத் தத்ரூபமாகப் படம் பிடித்த நாவல் அது. அந்த நாவலை எழுதிய பின் அன்வர் பாலசிங்கம் பட்ட பாட்டை நண்பர்களிடம் கேள்விப்பட்ட நினைவு. நெஞ்சில் உரம் கொண்டு நேர்மைத் திறம் கொண்டு 'நாசுவம்' எழுதிய தோழர் தீன் அவர்களுக்குப் பாராட்டு.

             தேவாலயத்தில் இரு குடும்பங்கள் சந்தித்து மனமொத்து (தலைவனையும் தலைவியையும் சேர்த்துதான் !) ஒருவருக்கொருவர் விவரங்களைப் பகிர்ந்த பின், "நீங்க வேற நாங்க வேற; ஊரு ஒப்பாது" என்ற நூலிழையில் திருமணப் பேச்சு முறிந்து போகிறது. பின்வாங்கிய குடும்பம் தாங்கள் அவர்களை விட மேலோராக்கும் எனும் கற்பனையில் மிதக்கும் இடைநிலைச் சாதியினர் என்பதும், சிறிய அல்லது பெரிய ஏமாற்றத்துக்குள்ளான பிறிதொரு குடும்பம் வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் பட்டியல் இனத்தோர் என்பதும் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன ? அவர்களுக்குள் திருமணப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்த பாஸ்டரும் சாதிய மனநிலையில் இருந்து விலகியவர் அல்லர் என்பது சூசகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அங்கேயும் உள்ள அநாகரிகத்தை 'ஊரு ஒப்பாது' கதையில் குறிப்பாக வெளிப்படுத்தியது எழுத்தாளரின் நாகரிகம்.

              பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கடைசிக் கதையான 'சாதி நாற்காலி', பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த ஒரு படித்த அருந்ததியர் பெண் ஆதிக்க இடைநிலைச் சாதியினரால் எதிர்கொள்ளும் அவமானங்களைத் தோலுரித்துக் காட்டுவது. அவள் கற்ற கல்வி அவளைக் கொள்கைப் பிடிப்புடன் நிற்க வைக்கிறது. அவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று திரும்பும் அப்பெண் வீறு கொண்டு நிற்பதைப் பேசும் கதை இது. சமநிலையை ஏற்க மறுக்கும் சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் அறிவாயுதம் கொண்டு நேர்மையாக சமூகப் பணியாற்றும் உறுதியேற்று உயிரையும் பணயம் வைக்கத் தயாரான புதுமைப் பெண்ணின் கதை இது. ஏனைய கதைகள் நிதர்சனத்தை சமூகத்தின் முகத்திலறைந்து சொல்லுகையில் இக்கதை ஒரு படி மேற்சென்று நம்பிக்கை ஒளியூட்டுவதாய் அமைகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் போல அறவழி நின்று எதிர்வினை ஆற்றுகிறது.

              தோழர் தீன் அவர்கள் தமது எழுத்துப் பணியான சமூகப் பணியினைப் பன்னெடுங்காலம் முன்னெடுத்துச் செல்வார்; செல்ல வேண்டும்.

https://www.facebook.com/share/p/1E5ofEE61x/

                          

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.