Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ மண்ணின் போர்ச் சூழலையும், அதனால் சாமானியர்கள் படும்பாட்டையும் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநரான சோமிதரன்.

1988-ல் இலங்கை வடக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் போர்ச் சூழலுக்கிடையில் வசித்து வருகிறார் வாசுகி (கபிலா வேணு). அடுத்த நாள் அவரின் மகளின் (சிது குமரேசன்) திருமணம் நடக்கவுள்ளதால், முதல் நாள் சொந்தங்களால் நிறைந்து மொத்த வீடே மகிழ்ச்சியில் இருக்கிறது.

இந்நிலையில், அன்று இரவு இந்திய அமைதிப் படையின் கேப்டன் நவீன் சந்திரா தலைமையிலான ஒரு ராணுவக் குழு, ஆயுதப் போராளிக் குழு ஒன்றுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வாசுகியுடைய வீட்டின் அருகில் பதுங்குகிறது. அதைத்தொடர்ந்து, ஒரு சில காரணங்களால் அவ்வீட்டிற்குள்ளும் நுழைகிறது.

இந்நிலையில், மறுநாள் திருமணம், வீடு முழுவதும் சொந்தபந்தம், வீட்டிற்குள் நுழைந்த இந்திய அமைதிப் படை, வெளியே போராளிக் குழு, எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதற்றச் சூழல் உருவாகிறது.

பல இன்னல்களுக்கிடையில் நீளும் அந்த ஓர் இரவின் வழியாகப் போரின் வலியைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் சோமிதரன் இயக்கியுள்ள 'நீளிரா' திரைப்படம்.

மகள் திருமணம் குறித்து மகிழ்ச்சி, துப்பாக்கிகளுக்கு அஞ்சாத தீரம், தன்னை நம்பியிருக்கும் பெண்களை நினைத்து வரும் பதற்றம், தன் வீட்டைக் காக்க எடுக்கும் அழுத்தமான முடிவுகள், எங்கும் சரியாத சமநிலையோடு நிற்கும் உறுதி எனப் போர்ச் சூழலுக்கிடையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களின் பிரதிநிதியாக தன் தேர்ந்த நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் கபிலா வேணு.

இந்திய ராணுவ அதிகாரியாகக் கதை நகர்விற்கும், பரபரப்பைக் கடத்தவும் உதவியிருக்கிறது நவீன் சந்திராவின் பொறுப்பான நடிப்பு. ஒரே காட்சியில் தன் கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்திக் கைதட்டல் வாங்குகிறார் ரூபா கொடுவாயூர்.

ஆக்ரோஷம், காதல் என்ற இருவழிப்பாதையைப் போராடிக் கடந்திருக்கிறார் சனந்த். வீட்டுப் பெரியவராக நமச்சிவாயம், ஆணவமான ராணுவ வீரராக ரோஹித் கொகாடே ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர, சிது குமரேசன், 'கயல்' வின்செண்ட், விது ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை.

நீளிரா விமர்சனம் | Neelira Review

நீளிரா விமர்சனம் | Neelira Review

ஓர் இரவு, ஒரு வீடு, அவ்வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம் என மிகச்சிறிய கதைக்களத்திற்குள் ரிப்பீட் அடிக்காத ப்ரேம்களால் பதற்றத்தையும், எமோஷன்களையும் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன்.

முக்கியமாக, ஒளியைக் கச்சிதமாகப் பயன்படுத்திய விதத்தாலும், ஆங்காங்கே வரும் கவித்துவமான ப்ரேம்களாலும் கதாபாத்திரங்களின் கையறுநிலையையும் இறுக்கத்தையும் பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்.

அழுத்தமான எமோஷனையும், நிதானமான த்ரில் அனுபவத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.

சிவா பத்மயன் இசையில், வாகீசன் ராசய்யா குரலில் 'கலியான பைலா' பாடல் 'துள்ளல்' ரகம்!

எமோஷனை அடர்த்தியாக்கி, காட்சிகளை வீரியமாக்கியிருக்கிறது ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுதும் வரும் கே-வின் பின்னணி இசை.

80களின் இறுதியிலுள்ள ஈழத்தின் கல்யாண முறை, அக்கால வீடுகள், சினிமா டெக்குகள் எனக் கலை இயக்குநர் மார்டினின் எதார்த்தப் படையலுக்கு, சுபைர்-தரங்கேனி கூட்டணியின் ஆடை வடிவமைப்பும் கைகொடுத்திருக்கிறது.

ஈழ மண்ணின் போர்ச் சூழலையும், அதனால் சாமானியர்கள் படும்பாட்டையும் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநரான சோமிதரன்.


சிறுவர்களின் விளையாட்டு, கல்யாண வீட்டுக் குதூகலம், உறவுகளுக்கிடையிலான செல்லச் சண்டைகள் என ஆர்ப்பாட்டமில்லாமல் வீட்டிற்குள்ளே இருந்து தொடங்கும் திரைக்கதை, வெளியுலகிற்குள் செல்ல செல்ல, போர்ச் சூழலையும், ராணுவ அடக்குமுறைகளையும் கதையோட்டத்துடனேயே சொல்லத்தொடங்குகிறது.

கல்யாண சடங்குகள், விஜயகாந்த் படங்கள், அச்சூழலிலிருக்கும் வாழ்வாதாரங்கள் என எக்கச்ச விவரணைகளுடன் நுணுக்கமாக விரிகிறது திரைக்கதை. இரவிற்குப் பின் த்ரில்லர் மோடுக்கு நகரும் படம், இடைவேளைக் காட்சி வரை பரபர பிடியை விடாமல் பற்றிக்கொள்கிறது.முன்னாள் ராணுவ வீரரான வீட்டுப் பெரியவர், குடும்பத்தைக் காக்கும் வாசுகி, கல்யாணக் கனவிலிருக்கும் மணப்பெண், இளம் காதல் ஜோடி, குச்சியை வைத்து விளையாடும் சிறுவர்கள் என எல்லாத் தலைமுறை கதாபாத்திரங்களும் இடம்பெற்றிருப்பதும், அவற்றை தனித்தனியாகக் கிளைக்கதைகளாக விவரிக்காமல், மையக்கதையுடனேயே விவரித்திருப்பதும் திரைக்கதையை ஆழமாக்குகின்றன.

ராணுவத்தால் அக்கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் வெவ்வேறு தாக்கங்களும் அழுத்தமாகப் பதிகின்றன.முக்கியமாக, தன்னைப் பற்றி வீட்டுப் பெரியவர் சொல்லும் கதை, ராணுவம் மீது கட்டமைக்கப்படும் புனிதங்களை உடைத்தெறிகிறது.

நீளிரா விமர்சனம் | Neelira Review

நீளிரா விமர்சனம் | Neelira Review

டெக் சினிமாவிற்கு இடையில் ஓடும் இயக்கப் பிரசாரப் பாடல், ராணுவம் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கூடுதல் ஆடைகளை உடுத்தும் பெண்கள், மரக்குச்சிகளை துப்பாக்கிகளாகப் பாவித்து விளையாடும் சிறுவர்கள் எனக் குறியீடுகள் நிறைய வந்தாலும், அவை மேதாவித்தனமாகக் காட்சிப்படுத்தப்படாமல் எதார்த்தமாகவும் உயிர்ப்போடும் வருவது அவ்வீட்டிற்குள்ளே நம்மையும் ஓர் உறுப்பினராக்கிவிடுகிறது.

இடைவேளைக்குப் பிறகு ஒரே இடத்திலேயே காட்சிகள் சுழல்வது போன்ற அயர்ச்சி சில இடங்களில் மேலோங்கினாலும், நுணுக்கமான விவரணைகள் அவற்றைக் களைத்து, சுவாரஸ்யத்தைக் கூட்டி நம்மைப் பரபர பாதைக்கு மடைமாற்றிவிடுகின்றன.உணர்ச்சிகளைப் பிழிய எக்கச்சக்க தருணங்கள் இருந்தாலும், அவற்றை விடுத்து, மையக்கதையிலிருந்து எங்கும் பிறழாமல், எதார்த்தமான உணர்ச்சிகளையும் வசனங்களையும் வைத்தே, போரின் வலியை ஆழமாகப் பேசியிருக்கிறது திரை எழுத்து.

'எல்லா ராணுவமும் ஒன்றுதான்', 'போரில் எப்படி அமைதியைத் தேடுவீர்கள்?', 'இந்த வீட்டிலாவது அமைதியை நிலைநாட்டுங்கள்' என எல்லா வசனங்களும் உரையாடல்களோடே எதார்த்தமாக வருகின்றன.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் vs இந்திய ராணுவத் தரப்பு என விரியும் உரையாடல்களையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

நீளிரா விமர்சனம் | Neelira Review

நீளிரா விமர்சனம் | Neelira Review

வசனங்களோ, நிறைய ஷாட்களோ இல்லாமல் மிகச் சில நொடிகள் மட்டுமே வரும் இறுதிக்காட்சி, கதையின் ஆன்மாவைப் பேசுகிறது.

திரைமொழி, அரசியல், புனைவாக்கம் என எல்லாவற்றிலும் கவனிக்க வைத்து, தமிழ் சினிமாவில் முக்கிய முன்னெடுப்பாக மாறியிருக்கிறது இந்த 'நீளிரா'.

நேற்று அரங்கம் சென்று பார்த்தோம்.

நாம் கடந்து போன போர் வலி நிறைந்த பல்லாயிரக்கணக்கான இரவுகள் ஒன்றின் கதை.

இது எமது கதை.

போர் தின்ற எம் மக்களின் சொல்லப்படாத இலட்சக்கணக்கான கதைகளில் ஒன்றை சோமி தரன் மிகச் சிறப்பான திரை மொழியில் சில சமரசங்களுடன் செதுக்கியுள்ளார்.

படம் முடிந்த பின்னும் நீளா இரவின் நினைவுகள் தொடர்கின்றன..

படத்தின் சில காட்சிகள் தனக்கு ஒரு வித படபடப்பை தந்தது என்றும், தான் சிறு வயதில் அனுபவித்த சில வலிமிகுந்த தருணங்களை மீட்டியது என்றும் என் நண்பர் கூறினார்.

இந்திய இராணுவத்தில் நல்லவர்களை தான் ஒரு போதும் சந்தித்தது இல்லை என்றும் ஆனால் இப் படத்தில் அப்படியான ஒருவரை காட்டுவது ஒரு விதமான முரண் என்றும் இன்னொரு நண்பர் கூறினார்.


பெரும் வணிக சினிமாக்களுக்கு விழுந்தடித்து ஆதரவு தரும் எம் சமூகம், தன் வலியை, போராட்டத்தின் நியாயத்தை பேசும் இவ்வாறான சினிமாக்களுக்கும் ஆதரவு கொடுத்தால், இன்னும் சொல்லப்படாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான எம் கதைகளில் சிலவற்றையாவது சொல்வதற்கு ஊக்கம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

இந்திய இராணுவத்தில் நல்லவர்களை தான் ஒரு போதும் சந்தித்தது இல்லை என்றும் ஆனால் இப் படத்தில் அப்படியான ஒருவரை காட்டுவது ஒரு விதமான முரண் என்றும் இன்னொரு நண்பர் கூறினார்.


பெரும் வணிக சினிமாக்களுக்கு விழுந்தடித்து ஆதரவு தரும் எம் சமூகம், தன் வலியை, போராட்டத்தின் நியாயத்தை பேசும் இவ்வாறான சினிமாக்களுக்கும் ஆதரவு கொடுத்தால், இன்னும் சொல்லப்படாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான எம் கதைகளில் சிலவற்றையாவது சொல்வதற்கு ஊக்கம் கிடைக்கும்.

வழக்கம்பரை முகாம் பொறுப்பாளாராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்மேகம் போன்ற விதிவிலக்கான ஓரிரு அதிகாரிகளும் பணியாற்றியிருந்தனர்.

சுழிபுரம் சந்தி முகாமிற்கு பொறுப்பாக இருந்த ராமையா என்ற அதிகாரி மிகமோசமாக நடந்துகொண்டார். போராளிகளின் தாக்குதலில் விக்ரோறியாக் கல்லூரி அருகில் கொல்லப்பட்டார், அந்த தாக்குதலை மேற்கொண்ட போராளியும் சாவடைய அவருடைய உடலை ஜீப்பில் கட்டி இழுத்து சென்றிருந்தனர். அத்தோடு வீடு வீடாக வந்து வளர்ந்த ஆண்கள் எல்லோருக்கும் மோசமான அடி விழுந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

பெரும் வணிக சினிமாக்களுக்கு விழுந்தடித்து ஆதரவு தரும் எம் சமூகம், தன் வலியை, போராட்டத்தின் நியாயத்தை பேசும் இவ்வாறான சினிமாக்களுக்கும் ஆதரவு கொடுத்தால், இன்னும் சொல்லப்படாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான எம் கதைகளில் சிலவற்றையாவது சொல்வதற்கு ஊக்கம் கிடைக்கும்.

இந்த படத்தைப் பற்றி நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. தியேட்டரில் போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காது. எப்போதாவது OTTயில் வெளிவரும் போது பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்+

இந்திய ராணுவத்துக்கு வெள்ளை பெயின்ட அடிச்சு படம் எடுத்திருக்கிறாங்கள்...

கல்யாணப் பொம்பளைய இந்திய ராணுவம் வன்புணராமல் விட்டுவைத்ததா🙄😒😏

வரலாற்று திரிபுகள் பல....

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்க்கவில்லை.

ஆனால் ரானா ஒரு தெலுங்கன்…எனவே படம் பார்க்க கூடாது என ஒரு குரூப் சொல்லி திரிகிறது.

எனது கருத்து:

இந்தியாவில் இருந்து வரும் எந்த படமும், எமது போராட்டத்தில் இந்தியனின் நரித்தனத்தை காட்டாது. இந்தியன் ஆமி, இலங்கை ஆமியை விட மோசமான பாலியல் வல்லுறவாளர் என காட்டாது.

காட்ட அவர்களின் இந்திய பாசம் விடாது.

அப்படியே காட்டினாலும் சென்சார் விடாது.

இந்தியாவின் கோரமுகத்கை காட்டாத எம்மை பற்றிய எந்த படமும், குறிப்பாக 87-90 காலப்பகுதியில் நடந்த கதைகளம் எனில், அது வெள்ளை அடிப்பு என்ற வகையில்தான் அடங்கும்.

வழமை போல் எம்மை இன, போர் வெறியராக, பயங்கரவாதிகளாக சித்தரிக்காமல் விட்டார்களே என நிம்மதி வேண்டுமானால் அடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

இந்திய இராணுவத்தில் நல்லவர்களை தான் ஒரு போதும் சந்தித்தது இல்லை என்றும் ஆனால் இப் படத்தில் அப்படியான ஒருவரை காட்டுவது ஒரு விதமான முரண் என்றும் இன்னொரு நண்பர் கூறினார்.

87 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியா இராணுவம் பலாலி வீதி,காங்கேசன் துறை வீதி வழியாக செல் தாக்குதல்கள் செய்து கொண்டு வீதிகளில்,வீடுகளில் சென்ற இருந்த அப்பாவி பொதுமக்களை ( உ+ம் உரும்பிராய், கொக்குவில், குளப்பிட்டி சந்தி, யாழ் போதன வைத்தியசாலை) கொன்று குவித்து யாழ் நகரை கைப்பற்றினார்கள்.

நாங்கள் இணுவில் கந்தசுவாமி கோவிலில் அகதியாக இருந்தோம். தீபாவளி அன்று எங்களை போல அருகில் இருந்த இடங்களில் இருந்து தங்களது வீடுகள் பார்க்க சென்ற சிலர் இந்தியா படையினால் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் நாங்கள் இருந்த கோயிலுக்கு பின்னால் இருந்த பாடசாலை மைதானத்தில் எரியூட்டபட்டது. கிட்டத்தட்ட கோயிலில் 45 நாட்கள் இருந்தோம். இடையில் இருமுறை சில மணித்தியாலங்கள் வீடுகள் பார்க்க மக்களை அனுமதித்தார்கள். வீடுகளில் இருந்த கைக்கடிகாரங்கள், சப்பாத்துக்கள், கமராக்கள் உட்பட விலையுயர்ந்த பொருட்கள் களவாடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் வீடுகள் பார்க்க அனுமதித்தார்கள். நாங்கள் இணுவில் கந்தசாமி கோவில் முன்வாசல் வழியாக செல்லும் வீதியூடாக காங்கேசன் துறை வீதி ( KKS Road) நோக்கி சென்று கொண்டிருந்தோம். வரிசையில் மக்கள் நிற்க இரு இந்தியா இராணுவத்தினர் ஒவ்வொரு மக்களையும் ஒவ்வொன்றாக போக விட்டனர். அதில் சிக்கிய இராணுவ வீரர் ஒரு சில இளம் பெண்களின் முன்பக்கத்து உடைகளுக்குள் கை வைத்து குண்டுகள் இருக்குதா என்று தேடி கொண்டு இருந்தார். வரிசையின் கடைசியில் இருந்தவர்கள் கவலையுடன் இருந்தார்கள். அப்பொழுது இரண்டாவதாக நின்ற இராணுவ வீரர் தமிழில் ஏன் இந்த வழியாக வருகிறீர்கள், கோயிலுக்கு வலது பக்கத்தின் வழியாக உள்ள வீதியின் ஊடாகவும் செல்லாம் என்று உரத்து கூறினார். உடனே நாங்கள் உட்பட பலர் வலது பக்க வழியாக உள்ள வீதியுடாக சென்றோம். அந்த வீதியில் ஒரு இராணுவ வீரர்களும் இருக்கவில்லை.

Edited by கந்தப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.