Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் ஊர் அழகியின் மரணம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவார ஒரு பேப்பரில் வெளியான சுதந்திராவின் ஞாபகப்பதிவுகளில் வெளியான கதை இது.

எங்கள் ஊர் அழகியின் மரணம்...மறைபட்ட மரணமாய்....... !

மழையில் நனைந்த நிலமும் மாரியில் கரைந்த புழுதியுமாக அந்தநாள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒவ்வொருவரையும் விசாரித்தபடி பூசனியக்கா போனதும் , அதன் பின் அவரது வீட்டிலிருந்து கேட்ட அழுகையும் அதன் பின்னால் நடந்த பூசனியக்காவின் சாவும் அந்தச் சிறுவயதில் அழுவதைத்தவிர வேறெதையும் செய்யத் தெரியவில்லை. நஞ்சருந்தி தற்கொலை பண்ணிய பூசனியக்காவின் இழப்பானது அவரது குடும்பத்தைவிட மற்றவர்களுக்கு வளமையான ஒரு மரணவீடு. சில தசாப்தங்களைக் காலம் அள்ளிக் கொண்டு போன பின்னர் என் ஞாபகங்களுக்குள் பூசனியக்கா..... எங்கள் ஊரின் அன்றைய அழகி பூசனியக்கா. இராமநாதன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த எங்கள் அழகியைத் தேடி ஊருக்குள் இளைஞர்கள் வருவார்கள். சமாதிகோவில் வளவுக்குள் கூட்டம் வைப்பார்கள் , நோட்டீஸ் குடுப்பார்கள் , ஏதோ சத்தமாக விவாதிப்பார்கள். அந்தவிவாதிப்பில் பூசனியக்காவின் குரல் உரத்துக் கேட்கும். பூசனி பெண்விடுதலை பேசுதாம் , புளொட் இயக்கத்துக்குப் பூசனி வேலைசெய்யுதாம்.

ஊரில் சொல்வார்கள். அந்த அழகிக்கு ஊரில் உலவும் நாய்க்குட்டி முதல் ஊர்ச்சிறுசுகள் வரை சினேகிதர்கள். அவ்வளவுக்கு எல்லோருடனும் உறவு. அப்படித்தான் எனக்குள்ளும் பூசனியக்கா. தனது வீட்டிற்கு அழைத்து பாடம் சொல்லித்தருவது முதல் எங்களை அழகாக்கி கோவிலுக்கு அனுப்புவது வரை எல்லாம் அந்த அழகிக்குரிய குணங்கள். என் நினைவறிந்து பூசனியக்கா சினந்ததை நான் காணவில்லை. கட்டுக்கட்டா கனக்க புத்தகங்கள் பூசனியக்காவின் அலமாரிக்குள் இருந்தன. அதெல்லாம் கன பெரியாக்கள் எழுதின புத்தகமாம் அதையும் அவதான் சொன்னா ஒருநாள். காலையும் மாலையும் சிவாகமியம்மனுக்கும் , நாகபூசனியம்மனுக்கும் பூவைத்து கற்பூரம் கொழுத்தி அரை மணித்தியாலம் கண்களை மூடி கடவுளை வணங்குவா. அந்தளவு கடவுள் பக்தி. எங்கள் ஊரின் அந்த அழகியை ஒருவன் காதலிக்கிறானாம்....! பெரிசுகளில் தொடங்கி சிறுசுகள் வரை கதை பெருத்து எங்கள் அழகியைக் கொள்ளை கொண்டவனின் மிதியுந்து மாலை நேரங்களில் பூசனியக்காவின் வீட்டு வாசலில் நிற்கத் தொடங்கியது. 'அவையள் காதலிக்கினமாம் , தாய் தேப்பனுக்கும் விருப்பமாம் , அவை ரண்டுபேரும் கலியாணங் கட்டப்போகினமாம்".

அதன் பின்னர் பூசனியக்காவைத் தேடி வரும் இளைஞர்கள் அவ்வளவாய் வருவதில்லை. காரசாரமான அவர்களது விவாதங்கள் சமாதிகோவில் வளவில் கேட்பதுமில்லை. அதெல்லாம் அவாடை காதலனுக்குப் பிடிக்கிறேல்லயாம். திடீரென மாரிகால மாலையொன்றில் பூசனியக்கா வீட்டிலிருந்து ஐயோ....ஐயோ....என்ரை பிள்ளை.....ஐயோ....என அழுகை. பூசனியக்காவின் காதலனின் மிதியுந்து பூசனியக்காவின் வீட்டிலிருந்து வடக்கு நோக்கிப் போவதாகச் சொன்னார்கள். அந்த அழுகை கேட்டு ஊர் முழுவதும் பூசனியக்கா வீட்டு முற்றத்தில். பூசனியக்கா வாயிலிருந்து நுரை தள்ள தலை தொங்க தனது அறைவாசலில்.....அவரது அம்மாவும் , தங்கையும் சுற்றமும் அழுது துடிக்க மருத்துவமும் மீட்காமல் பூசனியக்கா செத்துப்போனா. கூடப்பழகினவையிட்டை பூசனியக்கா வருவாவாம்....அவைக்கு விரும்பினா தன்னோடை கூட்டிக்கொண்டு போவாவாம்.... அந்தச்சாவை ஏற்க முடியாது அழுது நின்ற சிறுவட்டங்களின் காதில் விழுந்த செய்தி. பூசனியக்காவை அவான்ரை காதலன் ஏமாத்திப்போட்டாராம்....அவேக்க?? ஏதோ பிரச்சனையாம்.... அதுதான் பூசனியக்கா பொலிடோலைக் குடிச்சுப் பிணமாப் போனாவாம். அதுவும் தனது காதலனின் கண்முன்னால் பொலிடோலைக் குடிச்சிட்டு போத்தலை எறிஞ்சாவம். அதைப்பாத்திட்டு அவாடை காதலன் போட்டாராம். பூசனியக்கா ஏன் செத்தா ? சிவராத்திரிக்குப் பாத்த படமொண்டிலை பாத்தமாதிரி பூசனியக்காவும் தன்ரை காதலனை பேயா வந்து பழிவாங்குவாவோ? அந்த முகம் சிரித்த சிரிப்பு , கதைத்த கதைகள் , சொல்லித் தந்த பாடங்கள் என ஒவ்வொரு நினைவுக்குள்ளும் பூசனியக்கா..... மறுநாள் மரண நிகழ்வு. சின்னப்பிள்ளைகள் மரண வீட்டுக்குப்போகக்கூடாதாம்,

ஆச்சி சொன்னதோடை விட்டிருந்தால் பறவாயில்லை. சிவகாமியம்மன் கோவிலைத்தானாம் பூசனியக்கா பேயாச்சுத்துவாவாம். ஆச்சிக்கிழவி சொன்னதோடை அயலட்டைச் சின்னனுகள் ஒண்டும் சிவாகமியம்மனுக்கே இனி போறேல்லயென முடிவெடுத்திட்டுதுகள். மரண வீட்டுக்குப் போய் வந்த அம்மா கதைகதையாய் சொன்னா. பூசனியக்காவின் காதலன் செத்த வீட்டை போகேல்லயாம். அவற்றை சகோதரங்கள் மட்டும்தானாம் போனவையள். பூசனியக்காவை நினைக்க நினைக்க ஒரே அழுகையாகத்தான் இருந்திச்சு. பாவம் அவாடை அம்மா , அப்பா , தங்கைச்சி. அவையின்ரை முகங்கள்தான் நெடுகலும் ஞாபகத்தில இருந்திச்சு. பூசனியக்கான்ரை மரணவீடு முடிஞ்சு எட்டுச்செலவு செய்திச்சினம். அண்டைக்கு இரவு படையல் செய்து ஊர் மூலைவரை போய் பேய்கழிக்க ஆண்கள் போச்சினம். முற்றத்தில இருந்த அம்மா , அம்மம்மா , மற்றும் முன்வீடு பின்வீடு அயலென இருந்த உறவுகளெல்லாம் அண்டைக்கு கெதியா வீடுகளுக்கை முடங்கீட்டினம். பேய் கழிச்சிட்டு வாறவையின்ரை கண்ணில யாரும் எதிர்ப்பட்டா அவையில பேய் வருமாம். பேய் வந்தா ரத்தம் கொட்ட ஆக்களை அடிச்சுக் கொல்லுமாம்.

பிறகு அவையும் கெதியில சாவினமாம். சாகிறதெண்டா ஆருக்குத்தான் பயமில்லை. நானும் ஓடிப்போய் அம்மம்மான்ரை பாயில சீலையாலை போத்துக்கொண்டு படுத்திட்டேன். இரவிரவா பூசனியக்கா உயிரோடை எங்களோடை உலவிறமாதிரி கனவுகள். அவான்ரை சிரிப்பும், கதையும் தான் சுத்திக் கொண்டிருந்திச்சு. அவா சாகேல்லப்போல சிலவேளை உயிரோடைதான் எரிச்சினமோ ? அப்பிடியும் சந்தேகம் வாறமாதிரி கனவில பூசனியக்கா..... என் நினைவறிந்து முதல் முதல் பார்த்த சாவு. என்னோடு நெருங்கிய அந்த இழப்பு....நானும் செத்துவிட வேண்டும் போல உணர்வுகள். கிணற்றுக் கட்டில் நின்று குதிக்கட்டோ எனவும் , தோட்டத்தில மாமா வைச்சிருக்கும் பொலிடோலை குடிக்கட்டோ எனவும் எண்ணிய எனது எண்ணத்தைச் சொல்லப் போக என்ரை வகுப்பில படிச்ச பொன்மலர் சொல்லிச்சுது. தற்கொலை பண்றவைதானாம் பேயா அலைவினம். பூசனியக்காவும் இப்ப எங்கடை இலுப்பை மரத்தடியில இரவில உலவிறாவாம் என்றாள். அதோடை நானும் பூசனியக்காட்டை போக வேணுமெண்ட நினைவு மறந்து , நிலவு முழுதா தெரியிற நாளில பூசனியக்கவை பாக்கலாமெண்டு பொன்மலர் சொன்னதை நம்பி, முழுநிலவு வருநாட்களில் மட்டுமில்லை பிறையிலும் பூசனியக்காவைத் தேடி அலுத்தேன்.

பூசனியக்கா சாகக்காரணமான அந்த ஆளை வளந்து பிடிச்சு வேணும். பூசனியக்கா சாகுமட்டம் என்ன வாய் பாத்தனீயெண்டு கேக்க வேணும். அந்தக் காதலனைப்பற்றி (கொலைகாரன்) நினைக்கும் போதெல்லாம் சொல்ல முடியாக்கோபம் வரும். ஆனால் ஊரில ஒருதரும் அதைப்பற்றி கனக்கக் கதைச்சவையே தவிர ஒண்டுமே செய்யேல்ல. பூசனியக்கான்ரை சாவோடை பூசனியக்கான்ரை வீடு வெறிச்சுப்போச்சு. பூசனியக்கா வளர்த்த பூச்செடிகள் எல்லாம் வாடிக்கருகிக் கொண்டிருந்தன. அவான்ரை வீட்டுக்காறரும் அவாவில்லாமல் அந்தச் செடியளை என்னத்துக்கெண்டு விட்டிட்டினம் போல. பூசனியக்காவுக்கெண்டு கட்டின வீடு பதியில நிண்டுபோய் அந்த அத்திவார கொங்கிறீற்கள் நடுவில் முட்செடிகள்.

பூசனியக்கான்ரை அம்மா புவனமன்ரி பாவம் நெடுகலும் அம்மாவோடை கதைப்பா ஒரே அழுவா. அம்மாவும் கண்கலங்க அவாவை அழ வேண்டாமெண்டு சொல்லுவா. என்ரை பிள்ளையில்லாமல் என்ரை வீடு இருண்டுபோச்சு.....விம்முவா புவனமன்ரி. அந்த வீட்டின் மகிழ்ச்சியெல்லாம் போய்விட அந்த வீட்டின் மிஞ்சிய 3சீவன்களும் நடைபிணங்களாயின...... பூசனியக்காவின் சாவு நிகழ்ந்து சில மாதங்களில் பூசனியக்காவின் காதலன் வெளிநாடு போய்விட்டதாகச் சொன்னார்கள். பூசனியக்காவின் இழப்பைத் தாங்க முடியாமல் அவர் வெளிநாடு போனதாகச் சொன்னார்கள். வெளிநாடு போய் சிலகாலத்தில் அவருக்கு பெண் தேடுதல் நடந்தது. உண்மையா காதலிச்சவை வேறை கலியாணம் செய்யாகினமாம். ஒருநாள் தோட்டத்தில புல்லுப்புடுங்கியபடி கந்தையாண்ணை சொன்னவர். தான் ஒரு பெண்ணை காதலிச்சவராம் அவைக்கை ஏதோ பிரச்சனை வந்ததாம் பிறகு கந்தையாண்ணை கலியாணமே கட்டாமல் 55வயதில தன்ரை காதலைச் சொன்னது தான் குழப்பமா இருந்தது. காதலிச்சவர் காதலி செத்தாப்பிறகு இன்னொரு கலியாணஞ் செய்யிறதெண்டா என்னண்டு ? ஆரிட்டைக் கேக்கிறது. ஆரையேன் கேட்டாலும் அந்த நேரம் அடிதான் விழுந்திருக்கும். பூசனியக்காவின் காதலனுக்கு பெண்பார்த்து , பொருத்தம் பார்த்து , சம்பந்தம் கலந்து , திருமணமும் வெளிநாட்டில் முடிந்து , தசாப்தம் இரண்டைக் கரைத்துக் காலம் தன் கதையை எழுதி விட்டது. எத்தனையோ மாற்றங்கள் வந்த பின்னும் பெண் மீதான திணிப்புக்கள் , வன்முறைகள் , காரணம் அறியப்படாத சாவுகள் இன்றும் தொடர்கதைதான். பூசனியக்காவின் நினiவுகளையும் காலம் கதையாக்கி என்னுள்ளும் பூசனியக்கா....காரணம் கண்டறியப்படாத அந்த மரணம்..... இன்றும் காதல் தோல்வியென்ற ஒற்றைச் சொல்லுக்குள் எங்கள் ஊரின் அழகியின் சாவு மர்மமாய்....மறைபட்ட மரணமாய்.......

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி

உங்களின் கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும் நான் ரசிகன். இருந்த போதிலும், இக்கட்டுரையில் குறித்த பெண்ணை, அதுவும் அக்கா என்ற உயர்ந்த சகோதர பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டு, அவரை அழகி என்று விளிப்பது சரியானதா?

பொதுவாக பத்திரிகைகளிலும் நான் அவதானித்த ஒன்று. எந்தப் பெண் இறந்தாலும், அவரை அழகி என்று பாலியல்ரீதியான விளிப்பைச் செய்து தான் அந்தப் பெண்ணின் இறப்பைக் கொச்சை செய்வார்கள். இது அந்த அடிப்படையில் எழுதியிருக்கமாட்டீர்கள் என நினைக்கின்றேன்.

அது தவிர்ததுப் பார்த்தால் வழமையானது போலச் சிறப்பான கட்டுரையைத் தந்திருக்கின்றீர்கள். அதற்கு மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் விம்மும்படி எழுதுகின்றீர்கள். நல்லாயிருக்கு என்றால் பொருட்பிழையாகிடுமோவெனத் தயங்குகிறேன். :(:(

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

பூசனியக்காவின் மரணச்செய்தியினை 80களில் நானும் அறிந்திருந்தேன். புளட் இயக்கத்தில் பல பெண்களை இணைத்தவர்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி கன பூசனியக்காக்களின்ரை இளப்பிலை கலியாணங்கள் நடந்திருக்கு . ஒவ்வரு இடத்திலை ஒவ்ருமாதிரி நாக்கை பிரட்டி கதைப்பனம் . நல்ல கதைக்கு நன்றி சாத்திரி .

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் இந்த இணைப்பை கவனித்தேன். இணைப்பை அழுத்திப் பார்த்தேன். இந்தக்கதையை எழுதியது நான்தான். சுதந்திரா என்ற எனது புனைபெயரில். ஒருபேப்பரில் சுதந்திரா என்ற பெயரில் நான் எழுதிய ஆக்கங்கள் கணிசமானளவு என்னிடம் இல்லை. 3வருடங்கள் முடிந்த பின்னர் நான் எழுதிய ஒரு கதை எனக்கு பதிவாக இங்கு கிடைத்திருக்கிறது.

 

2008இக்கதையை வாசித்து இங்கே பகிர்ந்த சாத்திரிக்கு நன்றிகள். கிட்டத்தட்ட ஒருவருடங்களுக்கு மேலாக ஒருபேப்பரில் 'என் ஞாபகப்பதிவுகள்' பதிவுகள் யாராவது படித்தால் எனக்கு தந்துதவுங்கள். பழைய ஆக்கங்கள் பல இல்லாமலே போய்விட்டது.



பூசனியக்காவின் மரணச்செய்தியினை 80களில் நானும் அறிந்திருந்தேன். புளட் இயக்கத்தில் பல பெண்களை இணைத்தவர்.

 

அந்த பூசணியக்காதான் எங்கள் ஊரில் முதல் முதல் பெண்போராளியானவர் கந்தப்பு.
 

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் இந்த இணைப்பை கவனித்தேன். இணைப்பை அழுத்திப் பார்த்தேன். இந்தக்கதையை எழுதியது நான்தான். சுதந்திரா என்ற எனது புனைபெயரில். ஒருபேப்பரில் சுதந்திரா என்ற பெயரில் நான் எழுதிய ஆக்கங்கள் கணிசமானளவு என்னிடம் இல்லை. 3வருடங்கள் முடிந்த பின்னர் நான் எழுதிய ஒரு கதை எனக்கு பதிவாக இங்கு கிடைத்திருக்கிறது.

சில வினாடிகள் பூசனியக்கா உடன் வாழ்ந்ததுபோன்ற ஒர் உணர்வை ஏற்படுத்திய உங்கள் எழுத்துக்களுக்கு என் நன்றி அக்கா.....

இப்பதான் இந்த இணைப்பை கவனித்தேன். இணைப்பை அழுத்திப் பார்த்தேன். இந்தக்கதையை எழுதியது நான்தான். சுதந்திரா என்ற எனது புனைபெயரில். ஒருபேப்பரில் சுதந்திரா என்ற பெயரில் நான் எழுதிய ஆக்கங்கள் கணிசமானளவு என்னிடம் இல்லை. 3வருடங்கள் முடிந்த பின்னர் நான் எழுதிய ஒரு கதை எனக்கு பதிவாக இங்கு கிடைத்திருக்கிறது.

சில வினாடிகள் பூசனியக்கா உடன் வாழ்ந்ததுபோன்ற ஒர் உணர்வை ஏற்படுத்திய உங்கள் எழுத்துக்களுக்கு என் நன்றி அக்கா.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.