Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்

Featured Replies

எழுத்துலகில் இவரது இழப்பு ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பிப்படிக்கும் எழுத்தர்களில் இவரும் ஒருவர்.அருமையான எழுத்தாளரின் மரனம் ஈடு செய்ய முடியாதது.அண்ணாருக்கு இறுதி வணக்கங்கள்.

திரைத்துறைக்கு பேரிழப்பு

கண்ணீர் அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் :D

எங்களைப் போன்றவர்களை தன் எழுத்தால் ஆகர்சித்த ஒரு சாதனை எழுத்தாளர். அவரது சிறுகதைகளில் ஒன்றான "அப்பா"வை வாசித்துவிட்டு அவருக்கு கடிதம் எழுதிய ஞாபகம் வருகிறது. சிறந்த சிறுகதை எழுத்தாளர், சுவாரஸ்யமான நாவல்களை எழுதியவர் மாத்திரமல்ல, பல ஆண்டுகளாக "கணையாழி" இலக்கிய இதழில், கடைசிப்பக்கம் என்ற தலைப்பில் தான் ரசித்த பல விடயங்களைப்பற்றி எழுதி பல புதிய படைப்பாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். ஈழத்து கவிஞன் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளை நான் முதல் அறிந்து ரசிக்கத்தொடங்கியது சுஜாதா கடைசிப்பக்கத்தில் அதைப்பற்றி எழுதியபின்னர்தான்.

நேற்று எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய குறிப்பொன்றில், போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு அடைந்துபோய் கிடந்த ஒரு இளைஞனை அவனது கவிதை வரிகளால் இனம்கண்டு எப்படி தூக்கி விட்டவர் சுஜாதா என்று வாசித்த போது நான் கண்ணீர் விட்டேன்.

"சுஜாதா: மறைந்த முன்னோடி

February 27, 2008 – 10:58 pm

அவரைப்புரிந்துகொள்ள முக்கியமான ஒரு நிகழ்வு உதவும். திருச்சிபக்கம் பின்தங்கிய வணிக ஊர் ஒன்றில் போலியோவால் கால்களை இழந்து ,கல்விகற்பிக்கக்கூடப் பொருட்படுத்தப்படாமல், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, சுயநம்பிக்கையே இல்லாமல் தனக்குள் சுருண்டு வாழ்ந்த முஸ்லீம் இளைஞன் ஒருவனின் சில கவிதை வரிகள் வழியாக அவனைக் கண்டுபிடித்தார் அவர். இருண்ட உள்ளறைக்குள் நாள்கணக்கில் வாரக்கணக்கில் அவன் வாழ்ந்த அந்த உயரமான பிசுக்கு படிந்த பழங்காலக் கட்டிலை நான் கண்டிருக்கிறேன். அவன் அறியாத ஓர் உலகிலிருந்து சுஜாதா அவனை நோக்கி கையை நீட்டினார். அவனுக்கு தன்னம்பிக்கையை அளித்தார். அவன் வெளியுலகைப் பார்கக்ச்செய்தார். வெளியுலகம் அவனைப் பார்க்கும்படிச் செய்தார். படிப்படியாக அவனை ஒரு முக்கியமான கலாச்சாரச் சக்தியாக தமிழ்ச்சூழலில் நிலை நாட்டினார். மனுஷ்யபுத்திரன் சுஜாதா தமிழுக்கு அளித்த கொடை. அவரது எழுத்தில் அதிகம் தெரியாத அவரது அகம் எத்தகையது என்பதற்கான முக்கியமான ஆதாரம்.

- ஜெயமோகன்

அந்த சிறந்த படைப்பாளியின் நட்பு தன்னை எப்படி ஒரு படைப்பாளிகளை நேசிப்பவனாக மாற்றியது என்று நடிகர் கமலஹாசன் முன்பு என்னிடம் சொல்லியபொழுது வியந்திருக்கிறேன்.. ஜெயமோகனின் குறிப்பு அதனால் மேலும் அர்த்தமுள்ளதாகின்றது.

அந்த படைப்பாளிக்கு என் அஞ்சலிகள்.

வியாழக்கிழமை, பிப்ரவரி 28, 2008

கவிப்பேரரசு வைரமுத்துவின் இரங்கல்

பறிபோன விஞ்ஞான விரல்

சென்னை: சுஜாதா என்கிற விஞ்ஞான விரலை மரணம் பறித்துக் கொண்டு விட்டது. ஆனால் அதன் ரேகைகள் அழிவதில்லை என்று எழுத்தாளர் சுஜாதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு

நன்றி தற்ஸ்தமிழ்

வசபண்ணா என்ன நக்கலா ^_^ ...அவர் விடுத்த செய்தி இவர் விடுத்த செய்தி என்று போடுறியள் நானும் தானே சொல்லி இருக்கிறேன் அதை போடமாட்டியளே... :lol: (பிறகு கேட்க கூடாது என்ன தகுதி இருக்கு என்று தகுதி இருக்கிறவை :D தான் அநுதாபங்களை தெரிவிக்க வேண்டுமா என்ன...என்டைய போடாட்டி பெரிய பிரச்சினை வரும் சொல்லிட்டேன் ^_^ )..

"வசபண்ணா எனக்கு ஒரு டவுட் கிளியர் பண்ணுங்கோ :unsure: நீங்க ஊடகவியாளரா நேக்கு டவுட்டா இருக்கு உதுக்கு ஒழுங்கான பதில் சொல்ல வேண்டும் சொல்லிட்டேன் :( ஆமோ அல்லது இல்லையோ மழுப்ப கூடாது" ^_^

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

திரு சுஜாதா அவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி என்போன்ற வாசகர்களின் உள்ளங்களையெல்லாம் தனது எழுத்தின் வீச்சால் பறித்தெடுத்தவர் என்றால் மிகையாகாது!!!

அவர் உருவாக்கிய கனேஷ், வஸந்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள். ஒரு கதையில் புரஜக்டர்மூலமாக ஆகாயத்தின் பனிமூட்டத்தில் படம் கான்பிப்பதாக எழுதியிருந்தார். அது இங்கும்கூட வெளியே அடர்த்தியான பனிப்புகாரைப் பார்க்கும்போதெல்லாம் நினைவில் வரும். அவரது எழுத்து இன்றும் இளமையாகவே இருக்கிறது என்பதை 'சிவாஜி" யும் நிரூபித்து நிக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறையைப் பிரார்த்திக்கிறேன்! அண்ணாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கும் எனது ஆறுதலைக்கூறிக் கொள்கிறேன்!!!

எளிமையான ஜீனியஸ் சுஜாதா - ஷங்கர்

shankarfi4.jpg

மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ். அவரது மறைவை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சுஜாதா மறைவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் ஷங்கர்தான். அவரது பெரும்பாலான படங்களுக்கு சுஜாதாதான் வசனம் எழுதியிருக்கிறார். தொழில் தவிர்த்து, இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சுஜாதாவை தனது தந்தை ஸ்தானத்தில் தான் வைத்திருந்தார் ஷங்கர்.

சுஜாதாவின் மறைவினால் பெரிதும் கலங்கியுள்ள ஷங்கர், அவரை எளிமையான ஜீனியஸ் என புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவருடைய இழப்பு எழுத்துலகத்துக்கு மட்டுமில்லை திரை உலகிற்கும் தான். அவருடன் இந்தியன் படத்திலிருந்து, முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என்று நான்கு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படங்களில் அவர் வசனம் எழுதியிருந்தாலும் அவருக்கு மிகவும் பொருத்தமான தீனி போடும் படம் ரோபோ.

என்னுடைய கேரியரில் அவருடைய பெஸ்ட் வொர்க் இந்த படத்தில் இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

அவரும் எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தமான புராஜெக்ட் என்று சொல்வார். இந்த படம் முடிவதற்குள்ளாகவே எங்களை விட்டு மறைந்து விட்டார்.

ஒவ்வொரு படத்துக்காகவும் டிஸ்கஷனுக்காக பத்து நாட்கள் வெளியூர் போவோம். அந்த இனிமையான நாட்களை மறக்க முடியாது. கதை போக்கையும், அதிலுள்ள சிக்கல்களையும், குறைபாடுகளையும் மிக அழகாக அலசுவார்.

அவருடைய சிந்தனை எப்பொழுதும் ஒரு கல்லூரி மாணவன் மாதிரி இளமையாக இருக்கும். எவ்வளவு பெரிய விஷயத்தையும் சுருக்கமாகவும், நவீனமாகவும், சுவாரசியமானதாகவும் எழுதிக்கூடியவர். சமயத்தில் நண்பராகவும், சமயத்தில் ஒரு ஆசிரியராகவும் நான் அவரை உணர்வேன்.

அவருக்கு பணத்தாசை கிடையாது. சம்பளம் கேட்கவே தெரியாதவர். சம்பளம் பற்றிப் பேசினால், 'எதாவது கொடுங்க' என்பார். ஆசைகள் ஏதும் இல்லாத எளிய மனம் கொண்டவர்.

யாரையும் காயப்படுத்த மாட்டார். எல்லோரையும் மதிக்கும் குணமுடையவர். திறமை எங்கிருந்தாலும் கண்டெடுத்து பத்திரிகைகள் வாயிலாக அவர்களை அடையாளம் காட்டுவார். எதற்கும் கலங்க மாட்டார், எதற்கும் உணர்ச்சி வசப்பட மாட்டார். பாசாங்கு இல்லாதவர்.

அவர் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துகொள்ளும் போதுகூட அவர் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. கூல் அண்டு டேக் இட் ஈசி என்பார்.

எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு போன் பண்ணினால் அதற்கு அவர் மிகச் சுலபமாக தீர்வு சொல்லி நொடியில் தீர்த்து விடுவார். அதற்கு நன்றி சொன்னால், எதற்கு நன்றியெல்லாம் நீ என் மகன் மாதிரி என்பார்.

இந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல எனக்கும் தான்... இதை என்னால் அவரது பாணியில் 'கூலாகவோ ஈசியாகவோ' எடுத்துக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ஷங்கர்.

நன்றி தற்ஸ்தமிழ்

எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் அவரின், "ஏன்? எதற்கு? எப்படி?" என்ற நூல் மூலம் தான் அறியக் கிடைத்தது. தவிரவும் ஒரு சில அவரின் வெளியீடுகள் படித்திருக்கின்றேன்.

அன்னாருக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்.

----------------------------------

வலைப்பூக்களில் வருகின்ற சில கருத்துக்கள் வருத்தமளிக்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது. சாதியம் அடிப்படையில் அஞ்சலி செலுத்துகின்ற சாதி வெறிபிடித்த பகுத்தறிவாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலரைக் காண முடிகின்றது. முன்பும் சிவாஜி படத்தில் ஏதோ ஒரு விடயத்திற்காக அவரின் பூணூல் தெரிகின்றது என்று திட்டி எழுதியிருந்ததைக் காண முடிந்தது.

பொதுவாகச் சொல்லப் போனால், அவர் கூட மதநம்பிக்கையற்ற ஒருவராகவே தன்னைக் காட்டிக் கொண்டிருந்தார். அப்படியிருந்தும் சாதிய வெறி கொண்டு, அதைப் பகுத்தறிவு என்ற முகமூடிக்குள் இருந்து அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கிய ஊழியம் செய்த முக்கியமானவர்களில் சுஜாதாவும் ஒருவர். அவரின் இழப்பு தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்க் கணணி உலகிற்கும் பேரிழப்பாகும். சுவாரஸ்யமான எழுத்து நடையுள்ள அவரின் பல நாவல்களையும், கட்டுரைகளையும் படித்து மகிழச் சந்தர்ப்பம் கிடைத்தன..

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..

sujathasj7.png

வெறும் பத்து நாளில் ஒரு பழக்கம் அழுத்தமாக மனதில் படிந்து விட்டது. தூர்தர்ஷனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அகிலனின், ‘பாவை விளக்கு’ படத்தைப் பகுதி பகுதியாகக் காட்டினார்கள். அந்த மகாநடிகனின் ஒவ்வொரு கையசைவிலும் கண்ணசைவிலும் கட்டுண்டு, தினசரி ராத்திரி ஒன்பது மணிக்கு டி.வி. முன்னால் உட்கார்ந்து விடுகிற பழக்கம் போன வாரம் முழுக்க என்னைப் பிடித்து இருந்த ஒன்று. அப்படி அரைமணி நேர அற்புத உலகத்தை எதிர்பார்த்து புதன்கிழமை இரவு சுவிட்ச் போட, வேறு ஏதோ கறுப்பு வெளுப்பு உலகம். ‘பாவை விளக்கு’ முந்தைய நாள்தான் முடிந்து போனது என்பதை எப்படி மறந்து போனேன்?

சிவாஜியும், , சி.எஸ்.ஜெயராமனும், மருதகாசியும் ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’ என்று விசாரித்தபடி கொலம்பியா இசைத்தட்டாக மனதில் சுழன்று சுழன்று வர, சுற்றி கனமாகக் கவியும் வெறுமை. மேஜை மேல் வைத்த மொபைல் சத்தமில்லாமல் அதிர்கிறது. இதுதான் இதுதான் என்று ஏதோ துக்கத்தை எதிர்பார்த்து எடுத்த கை நடுங்குகிறது. “சுஜாதா சார் காலமாகி விட்டார்.’’ நண்பரான பத்திரிகை ஆசிரியரின் குரல் எதிர்முனையில். தொடர்ந்து பேச ஏதுமில்லாததுபோல் நீண்ட நிசப்தம். ‘சரி’. எதுவும் சரியில்லைதான். ஆனாலும் ஏதோ சொல்ல வேண்டுமே, சொல்கிறேன்.

ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் என்ற சுஜாதா, என்னை விட இருபது வருடம் மூத்த இளைஞர்.. குமுதத்தில், ‘நைலான் கயிறு’ என்று ஒரு தொடர்கதை எழுத ஆரம்பித்தபோது துணிச்சலான, நவநாகரிகமான ஒரு பெண் எழுத்தாளர் என்று நினைத்தேன். முதல் ஷாக், சுஜாதா மாணவ மாணவியரைச் சந்தித்தது தினமணி கதிரில் புகைப்படத்துடன் வந்திருந்தது. ‘ரொம்ப சாதாரணமா, எலெக்ட்ரிக் ட்ரெயின் பிரயாணி மாதிரி இருக்கீங்களே’ என்று ஒரு மாணவி கேட்க, பக்கத்தில் மீசை இல்லாத சாதுவான சுஜாதா என்ற ஆண் படம்.

அப்புறம் கோடாலி மீசை, கொம்பு மீசை எல்லாம் வைத்துக்கொண்டு எலெக்ட்ரிக் ட்ரெயினில் வம்பு வளர்க்கும் சக பிரயாணி பற்றி கதிர் தீபாவளி மலரில் (‘குரலா அது? டி.எம்.எஸ்.ஸ§க்கு ஜலதோஷம் பிடித்த மாதிரி’) சுஜாதா கதை எழுதினார். கூடு விட்டு அவர் கூடு பாய, கதை சொல்கிற இளைஞர். ‘நான் இறங்கி பிளாட்ஃபாரத்தில் நடந்து போவதைப் பார்த்தேன்’ என்று முடிக்கிற, திரும்பத் திரும்பப் படிக்க வைத்த அந்த வரியும் கதையும்தான் நான் முதலில் படித்த மாஜிக்கல் ரியலிசம். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸைப் படிக்க, என் மாஜிக்கல் ரியலிச நாவலை எழுத எனக்கு அதற்கு அப்புறம் முப்பது வருடம் கடந்து போனது.

இடைப்பட்ட இந்த நீண்ட காலகட்டத்தில் இலக்கியப் பத்திரிகையில் கவிதை எழுதினேன். வெகுஜனப் பத்திரிகையில் அதை சிலாகித்தார் சுஜாதா. அதன் மூலம் பரவலாக வெளியே தெரிய வந்தேன்.

முந்தைய பாராவை எழுத்துப் பிசகாமல் அப்படியே எடுத்து தமிழில் ஒரு நூறு எழுத்தாளர்கள், கவிஞர்களாவது தங்கள் கட்டுரைகளில் ஒட்ட வைத்துக் கொள்ளலாம். கொள்ள வேண்டும். அந்த நன்றி மறந்தால், எங்க வாத்தியார் பாணியில் சொல்வதாக இருந்தால், ‘இன்று ராத்திரி சாப்பாடு கிடைக்காது.’

மூன்று தலைமுறைகளைத் தொடர்ந்து வசீகரித்து வரும் சுஜாதாவின் எழுத்து ரகசியம் என்ன? எழுத்தில், இலக்கியத்தில், அறிவியலில் அவருக்கு இருந்த தீராத காதல். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் படிப்பதில் காட்டுகிற அதே ஈடுபாட்டை நானோ டெக்னாலஜியின், ஸ்டெம் செல் உருவாக்கும் மருத்துவ நுட்பத்தில் காட்டுவார் அவர். காலத்தோடு கைகோத்துச் செல்லும் எழுத்து பாணி அவருடையது.

மற்றவர்கள் எல்லாரும் கம்ப்யூட்டர் கற்பழித்தது என்று கதை எழுதி, தலையில் ராட்சத பல்புகள் சுழல ஒரு யந்திரம் நடந்து வருவதாகப் படம் போட்ட காலத்திலேயே, அவர் கதையிலும் கட்டுரையிலும் நாம் தொட்டு உணரக் கூடிய கம்ப்யூட்டரைக் காட்டினார். பஞ்சாயத்து போர்ட் நூலகத்தில் பத்திரிகை படிக்கக் கிடைக்கிற கிராமப்புற, சிறு நகர இளைஞர் கூட்டத்துக்கு அவர் இப்படிக் காட்டியது கம்ப்யூட்டரை மட்டுமில்லை. ஷியாம் பெனகலின் ‘அங்கூர்’, பாபு நந்தன் கோடுவின் ‘தாகம்’ போன்ற ஆர்ட் சினிமாக்களை, ஞானக்கூத்தன் கவிதைகளை, எம்.பி.சீனிவாசன் சேர்ந்திசையில் ஆயிரம் கார்ப்பரேஷன் பள்ளிச் சிறுவர்களை. ஒரே குரலில் ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ என்று பாரதி பாடலைப் பாடவைத்த அற்புதத்தை, சால்வடார் டாலி, பிகாசோவின் ஓவியத்தை, பீட்டில்ஸின் ‘செர்ஜண்ட் பெப்பர்ஸ் லோன்லி ஹார்ட் கிளப்’ இசை ஆல்பத்தை, ஹோலோகிராமை, ஆழ்வார் பாசுரத்தை.

எதைத்தான் விட்டார் அவர்? எழுத அவரும், படிக்க நாமுமாகத் தொடர்ந்து கொண்டே போகும் இது என்று தோன்றியது. நேற்று தூர்தர்ஷனில் ‘பாவை விளக்கு’ முடிந்து போனமாதிரி சட்டென்று மனதில் அழுத்த, திரும்ப ஒரு வெறுமை எங்கும் நிறைகிறது.

எனக்கு அண்மையில் ஒரு இ_மெயில் அனுப்பியிருந்தார். ‘என்னது? ஐம்பத்து ரெண்டெல்லாம் வயதில் சேர்த்தியா? ஏன் அதற்குள் வேலைக்கு குட்பை சொல்லி விட்டு இலக்கிய சேவையில் முழுமூச்சாக இறங்க நினைக்கிறாய்? எழுபத்துரெண்டு வயதில் இன்னும் நான் பார்ட் டைம் கன்சல்டண்ட் ஆக வேலை பார்க்கிறேனே? வேறு எதுவும் இல்லாவிட்டாலும் வீட்டில் மனைவிக்கு ஒரு ஏழெட்டு மணி நேரம் தனிமையில் நிம்மதி கிடைக்குமில்லையோ?’

நாலு வரிக் கடிதத்திலும் இந்த நகைச்சுவைதான் சுஜாதா. For me, he goes on for ever.

இரா. முருகன்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

சுஜாதா பெயரில் விருது மனுஷ்யபுத்திரன்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008

sujathameet25004032008kb1.jpgsujathameet9tn1.jpg

சென்னை: எழுத்தாளர் சுஜாதாவின் பெயரில் ஆண்டுதோறும் உயரிய இலக்கிய விருது வழங்கப்படும் என உயிர்மை பதிப்பக ஆசிரியரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் அறிவித்துள்ளார்.

எழுத்துலக பிரம்மாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சுஜாதா என்கிற எஸ்.ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

ஆழ்வார்பேட்டையில் நாரத கான சபாவில் நடந்த இந் நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுஜாதாவின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடந்தது.

மரபுகளை மீறிய துணிச்சல்காரர் - ஜெயகாந்தன்:

ஜெயகாந்தன் பேசுகையில், எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் சுஜாதா. அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது எழுத்துக்களை நான் வெகுவாக ரசித்தவன். தமிழில் வசீகரமான ஒரு எழுத்து நடையை அறிமுகப்படுத்தியவர், அதற்காக பல மரபுகளை மீறிய துணிச்சல்காரர் என்றார்.

புரட்சிகரமான எழுத்தாளர் - மனுஷ்யபுத்திரன்:

சுஜாதாவுக்கு நெருக்கமான எழுத்தாளர்களில் ஒருவரும், உயிர்மை பதிப்பக உரிமையாளருமான மனுஷ்யபுத்திரன் பேச்சு மிகவும் உணர்வுப் பூர்வமாக அமைந்திருந்தது.

அவர் பேசுகையில், மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழில் புரட்சிகரமான எழுத்தாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவர் சுஜாதாதான். இதைப் பலமுறை பல இடங்களில் நான் கூறியிருக்கிறேன். அந்த எழுத்து மேதையை நினைவு கூறும் வகையில் இனி ஆண்டுதோறும் சுஜாதா இலக்கிய விருதினை உயிர்மை பதிப்பகம் மூலம் வழங்கவிருக்கிறோம். புதிய எழுத்தாளர்களுக்கு அந்த விருது மிகப்பெரிய உற்சாகத்தையும் வேகத்தையும் தரும் என்றார்.

திரைக்கதை சுஜாதா - கமல்:

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், சுஜாதா முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, மேலும் அதிக பாரத்தை அவருக்குக் கொடுத்தவன் நான்.

எனக்கு அவர் எழுதிக் கொடுத்து, ஆனால் சினிமாவாக எடுக்காத கதைகள் இன்னமும் எவ்வளவோ என் வீட்டில் உள்ளன. எனது மருதநாயகம் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் சுஜாதா.

டைட்டிலில் திரைக்கதை சுஜாதாகமல் என நான் எழுதிக் கொடுத்தேன். உடனே அந்த காகிதத்தை வாங்கிய சுஜாதா, அவரது பெயரை அடித்துவிட்டதோடு, உங்க பெயரே இருக்கட்டும் என்றார் பெருந்தன்மையோடு.

அவருடன் இணைந்துதான் மீண்டும் அந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் போய்விட்டார். இப்போது மருதநாயகம் படத்தை எடுத்தால் நான் மட்டுமே அதிகம் எழுத வேண்டியிருக்கும். நேர்மை, ஒழுக்கம் இரண்டையும் தனது வாழ்க்கை நெறியாகக் கொண்டவர் அவர்.

தமிழுக்காக இப்படி ஒரு விழா எடுப்பது பெருமையாக உள்ளது. தமிழ் வாசகர்களின் தரத்தை உயர்த்திக் காட்டும் ஒரு நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன். சுஜாதா அதிகம் காதலித்தது தமிழைத்தான். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்ற வார்த்தையில் அதிக நிஜமிருக்கிறது என்றார் கமல்.

மறுபிறவி எடுக்க வேண்டும் - சிவகுமார்:

நடிகர் சிவகுமார் பேசுகையில், சுஜாதாவின் தீவிர ரசிகன் நான். அவரது நூல்களை ஒரு லைப்ரரியாகவே சேமித்து வைத்திருக்கிறேன். அந்த மேதையை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோமா என்ற கேள்வி இன்னமும் எனக்குள் உறுத்திக் கொண்டே இருக்கிறது. நாடக உலகுக்கு அவர் செய்தவை ஏராளம். அவர் மறுபிறவி எடுக்க வேண்டும், மீண்டும் சுஜாதாவாகவே நம்முடன் வாழவேண்டும் என பேராசைப்படுகிறேன் என்றார்.

சுஜாதாயிஸம் - வைரமுத்து:

வைரமுத்து பேசுகையி்ல், மரபுகளை உடைத்த மாமேதை சுஜாதா. வாழ்க்கை தராத மலர்ச்சியை அவருக்கு மரணம் தந்தது. அவரது உடலை நான் கண்டபோது, அதில் உறைந்த புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் ஒரு கடல்.

பொதுவாக, தமிழர்கள் செத்தபிறகுதான் சிங்காரித்து அழகு பார்ப்பார்கள். அப்படியில்லாமல், இனியாவது வாழும்போதே வாழ்த்த கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்திய இலக்கியத்தையும், மேல்நாட்டு இலக்கியத்தையும் கலந்து சுஜாதாயிஸம் என்ற புது இலக்கியமே படைத்தவர் அந்த மேதை. எனக்குத் தெரிந்து எந்த எழுத்தாளரையுமே அவர் புறம் பேசியதில்லை.

உங்கள் எழுத்தை மேம்படுத்துங்கள், அடுத்தவர் எழுத்தைக் குறை சொல்லாதீர்கள் என்பார் எப்போதும். தமிழும் அதன் வீச்சும் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும். உண்மை, இது வெறும் புகழ்ச்சியில்லை என்றார்.

ஞானகுரு - பாலகுமாரன்:

எழுத்தாளர் பாலகுமாரன் பேசுகையில், நாமெல்லோருமே பல விஷயங்களை சுஜாதாவிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம். எனது எழுத்துக்கள் அனைத்துக்குமே சுஜாதாதான் ஞானகுரு என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்... என்றார் எழுத்தாளர் பாலகுமாரன்.

ஆளுமை படைத்த எழுத்தாளர் - கனிமொழி:

கவிஞர் கனிமொழி எம்.பி., பேசுகையில், அடுத்த எழுத்தாளர்களைக் குறைசொல்வது சுஜாதாவுக்குப் பிடிக்காத விஷயம். தன்னை மோசமாக விமர்சித்த எழுத்தாளர் ஒருவரின் கவிதையை என்னிடம் காட்டி, தமிழின் மிகச்சிறந்த ஹைக்கூ இது என்று பாராட்டிய பெருமகன் அவர். அவரைப் போன்ற ஆளுமை படைத்த எழுத்தாளரை பார்க்க முடியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்த அவரை இழந்த சோகம் என் ஆயுள் வரை தீராது என்றார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் சாருநிவேதிதா, மதன், கணையாழி கஸ்தூரிரங்கன், விகடன் ஆசிரியர் அசோகன், ஓவியர் ஜெயராஜ், சிவசங்கரி, இயக்குநர்கள் பாலுமகேந்திரா, தங்கர் பச்சான், பெண்டாமீடியா சந்திரசேகர், நடிகர் சத்யராஜ், தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் ஞானசம்பந்தன், திருப்பூர் கிருஷ்ணன் உள்பட பலரும் சுஜாதாவுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் உருவப்படத்தை சுஜாதாவின் மகன்கள் கேசவபிரசாத், ரங்கபிரசாத்திடம் வழங்கினார் கமல்ஹாசன்.

புகழஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உயிர்மை பதிப்பக ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் நடராஜன், இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் வசந்த் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

நன்றி தற்ஸ்தமிழ்

Edited by Vasampu

எழுத்தாளர் பாலகுமாரன் பதில்கள்

ரமா, கோவை.

எழுத்தாளர் சுஜாதா மறைந்து விட்டாரே?

தமிழ் உரைநடைக்கு பெரும் இழப்பு. மிகப் பெரிய சாதனையாளர். சாதித்தேன் என்கிற கர்வமில்லாதவர்.

‘‘சிறுகதை எழுதறதப்பத்திதானே. வாங்க சொல்லித் தரேன் என்று.’’ என்னையும் அமரர் எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவையும் அழைத்து எழும்பூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள வீதி நடுவே உள்ள புல்திட்டில் நிற்க வைத்து நாற்பது நிமிடம் உரையாடினார். வெகு அழகாகச் சொல்லிக் கொடுத்தார். இதை நான் ஒரு கூட்டத்தில் நன்றியோடு சொன்ன போது, உடனே எழுந்து, ‘‘நான் ஒரு நாலுபேருக்கு கதை எழுத சொல்லிக் கொடுத்தேன். ஒரு பாலகுமாரனுக்குதான் புரிஞ்சுது. சொல்லிக் கொடுக்கறது பெரிசு இல்லை. கத்துக்கறதுதான் பெரிசு’’ என்றார். அதிரும் கைத்தட்டல். ஆனால் அவரிடம் சலனமேயில்லை. நான் அதையும் கற்றுக் கொண்டேன்.

அவர் பலதும் பலருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். தமிழ் நாவலில் வண்ணமிகு அத்தியாயம் சுஜாதா. மறக்க முடியாத பக்கம் சுஜாதா.

நன்றி குமுதம்

sujatha02zs9.png

மிழ் அன்னை ஒரு வசன பாரதியை இழந்து விசனத்துக் குள்ளாகியிருக்கிறாள்.

உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை.

சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது.

பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது.

வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கௌரவம் தர வக்கில்லை நமக்கு.

ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை.

sujatha01ln4.jpg

திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை.

வஞ்சக வியூகத்தில் அகப்பட்டுக் கொண்ட அபிமன்யு மாதிரி உள்ளிருந்தே வளைத்துக் கொண்ட நோய்களுடன் ஒண்டியாக, தீரமாகப் போரிட்டு வீர மரணம் எய்தினீர். (நோய்களையும், மருத்துவ மனைகளையும், மருத்துவர்களையும் எமனே சிரிக்கும்படி கிண்டல் செய்த எம காதகர்!)

அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள்.

ஆனால், தானொரு வி.ஐ.பி. என்ற எண்ணமே அவருக்கு எழுந்ததில்லை என்பதற்குச் சான்று வேண்டுமா? ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவன் ஓட்டலில் ஓர் ஒதுக்குப்புறமான சாளரத்தருகே நின்றவாறு மதிய நேர சிற்றுண்டியைப் பொறுமையாக ஸ்பூனினால் சாம்பாரின் கொத்துமல்லிகளையும், கறிவேப்பிலைகளையும் இதர ஜட வஸ்துக் களையும், சீராக எடுத்துத் தட்டின் ஒரு மூலையில் போடுவதைப் பார்த்திருக்கிறேன்.

அவரை அங்கே சந்தித்தபோது, அந்தக் கல்விக் கடலுடன் பேச அறிவார்ந்த வார்த்தைகளின்றி மிகச் சாதாரண வசனங்களை, ‘எப்படி யிருக்கீங்க, சவுக்கியமா, டிபன் இங்கேதான் சாப்பிடுவீங்களா?’ என்பது போன்ற குழந்தைத்தனமான கேள்விகளையே கேட்டிருக்கிறேனென்றாலும், அவரது உயிரைக் காப்பாற்றிய ஓர் அதி உன்னதமான சாகஸத்தையும் நான் செய்திருக்கிறேன்.

அவர் குமுதத்தில் எழுதிய ‘ரத்தத்தின் நிறம் சிவப்பு’ என்ற ஓர் அற்புதமான சரித்திர நாவலில் சில வரிகள் ஒரு சிலரின் மனம் புண்படுமாறு அமைந்திருந்ததாக ஒரு கலவரம் ஏற்பட்டது.

‘எங்கே அந்த சுஜாதா?’ என்று வெறித் தனமான கூட்டம் அன்று குமுதம் அச்சகத்துக்குள் மூர்க்கத்தனமாகப் பிரவேசித்தது.

ஏறக்குறைய முற்றுகை இட்டுக் கொண்டிருந்தது.

‘சுஜாதாவை அனுப்பு வெளியே’ என்று வெறிக் கூச்சல்.

எவருடைய மனத்தையும் புண்படுத்தக்கூடிய விஷயங்களைப் போட விரும்பாத நெறியைக் கடைப்பிடித்து வந்த குமுதம் ஆசிரியர் அவர்கள், மேற்படி தொடர்கதையை அன்றே, அங்கே அப்பொழுதே நிறுத்திவிட்டு, அதை நிறுத்திவிட்டதான அறிவிப்பை யும் மாலைப் பத்திரிகையான ‘மாலை முரசு’வில் அறிவிப்பு விடும்படி செய்தார்.

மாலை முரசு பத்திரிகைக்கு விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு, அந்த சமாசாரத்தை குமுதம் அச்சகத்தில் சொல்லிவிடலாம் என்று நான் அச்சகம் வந்தால், காம்பவுண்டு பூரா கோபக் கும்பல் _ கைகளில் கிடைத்த உருட் டுக் கட்டைகள் சகிதம்.

உள்ளே செல்ல முடியாது. கதவு உட்புறம் தாழிடப்பட்டுள்ளது. ‘சரி, வாபஸாவதே விவேகம்’ என்று திரும்புவதற்குள் சிலர் (என்னையும் என் உதவி ஆசிரியர் பணியையும் அறிந்த வர்கள்) ‘அந்த ஆளைப் பிடியுங்கள்’ என்று குரல் கொடுத்ததும், ஒரு கும்பல் என்னைச் சூழ்ந்து கொண்டு ‘சுஜாதாவை வெளியே வரச் சொல். இல்லாவிட்டால் குத்திவிடுவோம், கொன்று விடுவோம்’ என்று மிரட்டினர்.

தொடர்கதை எழுதுகிறவர்கள் பத்திரிகை ஆபீசுக்குள்தான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள் என்ற தவறான புத்திசாலித்தனம் கும்பலில் சிலருக்கு.

நான், ‘சுஜாதா இங்கிருந்து எழுதமாட்டார். வெளியூரிலிருந்து எழுதுவார்’ என்றேன்.

அதுகள் என் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘எந்த ஊர் என்று சொல்லு. அட்ரஸ் என்ன? எங்க ஆளுங்க எல்லா ஊரிலும் இருக்காங்க. கிழிச்சுடணும் கிழிச்சு’ என்று ஆவேசப்பட்டார்கள்.

நான் நிதானமாக சட்டையை விடுவித்துக்கொண்டு நிதானமாக யோசித்து., நிதானமாக ஒரு பொய்யான முகவரியை மனசுக்குள் சிருஷ்டித்து மனப்பாடம் செய்துகொண்டு, அவர் களிடம் இன்ன நம்பர், இன்ன தெரு, பெங்களூர் என்றேன்.

குறித்து வைத்துக் கொண்டு கும்பல் கலைந்தது.

குமுதம் ஆசிரியருக்கு சுஜாதாவின்மீது அளவு கடந்த பிரியம், மதிப்பு, பாசம்.

சுஜாதாவைப் பாராட்ட எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு எப் போதுமே வெகு பிரியம். ஆனாலும் அடிக்கடி அவருக்கு போனில் தன் அபிப்பிராயத்தைக் கூறிக் கொண்டிருக்கமாட்டார். ரசனை தாங்க முடியாதபோது ரா.கி.ர. அவர்களிடம், ‘அவருக்கு வேணும்னா லைன் போடறீங்களா, ‘நான் பேசறேன்’ என்று தொலைபேசியில் கூப்பிடச் செய்து பேசி மகிழ்வார்.

ஒரு கெட்டிக்கார எழுத்தாளனது மதிப்பு, ஒரு பத்திரிகை முதலாளியின் அந்தஸ்தைவிடவோ, சினிமா டைரக் டரின் அந்தஸ்தைவிடவோ உயர்ந்தது என்பது போன்ற சுயமரியாதை உடைய வராகவே சுஜாதா கடைசி வரை இருந்தார்.

இந்தக் கட்டுரையை சுஜாதா எழுதியிருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன். அவருடைய ‘டச்’ எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், காப்பி அடித்தாலும் வேறு ஒருத்தருக்கும் வரவே வராது. ஊனைத் தேனாக்கிய மணிவாசகனும் வான் கலந்தான்.

கம்பனும் போயினன்.

பாரதியும் பறந்தனன்.

கண்ணதாசனும் காலன் வசப்பட்டான்.

உலக நீதி : உளது இலதாகும். இலது உளதாகும்.

மறைந்தால் இப்படிப் பட்ட புகழுடம்புடன் மறைய வேண்டும் என்று ஓரொரு எழுத்தாளனையும் ஏங்க வைக்கும் மகத்தான முடிவு எழுத்தாளப் பெருமகன் சுஜாதாவுடையது.

இத்தனைக்கும் அவர் தன் விளம்பரத்துக்காக ஓர் உள்ளங்கை அளவு சின்னத் தம்பட்டத்தைக் கூட உபயோகித்தது இல்லை. அவரது ஓரோர் எழுத்துமே அவரது புகழைப் பாடின. இனியும் பாடிக்கொண்டிருக்கும்..

படங்கள்: ஆர். சண்முகம்

நன்றி குமுதம்

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியின் வீடியோ வடிவம்

http://www.kollywoodtoday.com/events/celeb...sujatha-videos/

Edited by Ponniyinselvan

சுஜாதாவின் நினைவுகளை மீட்டுகையில் எனக்கு ஞாபகம் வரும் ஒரு சிறுகதை.

அவர் ஆத்திசூடிக்கதைகள் என ஔவையின் பொன்மொழி ஒவ்வொன்றிற்கும் தற்போதைய நவீன யுகத்திற்கும் இயைந்த சிறுகதைகளை எழுதி வந்தார். அதன்போது இந்திய இராணுவம் அமைதிப் படை தாயகப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியாகும். அச்சிறுகதையொன்றில் "ஆண்மை தவறேல்" என்ற ஆத்திசூடிப் பொன்மொழிக்கு சுஜாதா எழுதியிருந்த கதை.

அதன் சுருக்கம்:

குறித்தவொரு பாதையொன்றினால் செல்லவிருந்த இந்திய இராணுவ அதிகாரி வாகனத்திற்கு விடுதலைப்புலிகள் கண்ணிவெடி வைத்து காத்திருக்கின்றனர். அப்பாதை வழியே அவ்வாகனம் வருகிறது. அதன் பின்னால் சிறார்களின் சுற்றுலாப் பேரூந்து ஒன்று வருகிறது. அதிலிருந்த சிறார்கள் "ரூவிங்கிள் ரூவிங்கிள் லிட்டில் ஸ்டார்" என்ற பாடலை பாடியபடி வருகின்றனர். அச்சிறார்கள் பேரூந்து ஓட்டுனரை வேகமாக ஓடி இந்திய இராணுவ அதிகாரி வாகனத்தை முந்தும்படி உற்சாகப்படுத்துகின்றனர். பேரூந்தும் முந்துகிறது. காத்திருந்த புலி வீரர்களுக்கு சங்கடம். காத்திருந்த அணியின் வீரனொருவன் அணித்தலைவனிடம் அனுமதி வேண்டுகிறான். ஓடிச்சென்று பேரூந்து அவ்விடத்தை அணுகமுன் வெடிக்க வைத்து தற்கொடையாகிறான். இந்திய வீரர்கள் அவ்விடத்தில் காணப்பட்;ட கரமொன்றிற்கு மரியாதை செலுத்திச் செல்கின்றனர்.

"ஆண்மை தவறேல்" பொன்மொழிக்கு சுஜாதாவிற்கு கிடைத்த கதைக்களம் தாயகம்.

இது ஆனந்தவிகடனில் வந்த சிறுகதை என நினைக்கிறேன்.

யாழ்கள நண்பர்கள் இக்கதை முழுமையாக கிடைப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.