Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுடும் நிலவு சுடாத சூரியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுடும் நிலவு சுடாத சூரியன்

“இன்று சனிக்கிழமை காலநிலை பூச்சியத்துக்குக் கீழே பத்துப் பாகை என்று வானிலை அவதானநிலைய அறிவிப்பைக் கேட்ட வண்ணம் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி வீட்டைப் பூட்டியபின் தன் குளிருடைகளை எல்லாம் சரிபார்த்தபடி காரை வீதியில் இறக்கினாள் மனோகரி. வீதி ஓரம் எங்கும் பனிக்குவியல். இந்தக் குளிரிலும் வீதியில் ஆள் நடமாட்டத்துக்கு குறைவில்லை. அவரவர் தத்தமது கடமைகளைச் செய்வதற்கு குளிரோ மழையோ இங்கு ஒரு தடையாக இல்லை. காரை வெகு கவனமாகச் செலுத்திய மனோகரி பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தி விட்டு பாடசாலைக்குள் நுழைந்தாள்.

அப்பொழுது நேரம் ஒன்பது மணி. தமிழ் வகுப்புகள் ஆரம்பமாக இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. பெற்றோர் தமது பிள்ளைகள் தாய் மொழியைப் படிக்க வேண்டுமென்ற ஆவலில் தமது ஓய்வு நாளையும் பொருட்படுத்தாது பிள்ளைகளை கொண்டு வந்து பாடசாலையில் விட்டுச் சென்றனர். சில பெற்றவர் தமது பிள்ளைகளுடன் சிறிது நேரம் நின்று ஆசிரியருடன் அளவளாவிச் செல்வதும் உண்டு. மனோகரியின் வகுப்பில் இருபது பிள்ளைகள் படித்தனர். அனைவரும் பத்து வயதுக்கும் உட்பட்டவர்கள்.

வகுப்பு ஆரம்பமாகியதும் மாணவர்களுக்கு இறைவணக்கம் கனடிய தேசியகீதம் தமிழ்த்தாய் வாழ்த்து என்று வழமைபோல பயிற்சி கொடுத்தபின் வீட்டுப் பாடங்களை பரிசீலிக்க ஆரம்பித்தாள் மனோகரி. ராகவி அருகில் வந்தபோது மனோகரிக்கு ஏனோ பாவமாக இருந்தது. காரணம் சென்ற கிழமை வகுப்பில் அம்மா அப்பாவைப் பற்றிக் கதைத்த பொழுது தனக்கு அம்மா இல்லை அப்பாதான் இருக்கு என்று ராகவி பதில் கூறி இருந்தாள். பாவம் ராகவி என்று நினைத்தபடி பாடத்தைத் தொடர்ந்தாள். வகுப்பு முடிந்ததும் பெற்றவர்கள் பிள்ளைகளைக் கூட்டிப் போக வருவார்கள். ராகவியைக் கூப்பிட வந்த பெண்ணிடம் “நீங்க ராகவிக்கு” என்று கேள்விக் குறியுடன் நிறுத்தவும் “நான் ராகவியின் அம்மா” என்று பதில் வந்தது. மனோகரிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “இல்லை போனகிழமை ராகவி தனக்கு அம்மா இல்லை என்று சொன்னவ அதுதான்” என்று தயக்கத்துடன் இழுத்தாள். “உங்களிட்டையும் அப்படிச் சொல்லியாச்சா” என்று சிரிப்புடன் கேட்டவர் “நான் ராகவியின் அம்மாதான் ராகவிக்கு அப்பா என்றால் சரியான விருப்பம.; அவள் அப்பா பிள்ளை. அதனால்தான் இப்படி எல்லோரிடமும் சொல்லுவது வழக்கம். குறை நினைக்கவேணாம்” என்றபடி மகளைக் கூட்டிச் செல்வதை பார்த்தபடி தனது காரை நோக்கி நடந்தாள் மனோகரி.

அதன்பின் ராகவியின் தாய் வரும்போதெல்லாம் அடிக்கடி உரையாடிக் கொள்வார்கள். இப்பொழுது ராகவியின் அம்மா தேவகியும் மனோகரியும் நண்பிகளாகி விட்டனர். “அவருக்குச் சனிக்கிழமை வேலை அதனாலதான் நான் கூட்டி வந்து கூட்டிப் போகவேண்டி இருக்கு. பரவாயில்லை எனக்கும் இங்க வந்து போறது சந்தோசமாத்தான் இருக்கு. “அப்ப நீங்க வேலைக்குப் போறதில்லையா?” என்று ஒருநாள் தேவகியைக் கேட்டாள் மனோகரி. “இல்லை ராகவியின் அப்பா நல்ல வேலையில் இருக்கிறார். அவரது வருமானம் எமது குடும்பத்துக்கு போதும். இப்போதைக்கு ராகவியைக் கவனிக்கிறதுதானே முக்கியம்.” “ஓ அதுவும் சரிதான். ராகவி நல்லா தமிழ் கதைக்கிறா. ஆள் நல்ல கெட்டிக்காரி” மகளைப்பற்றி கூறியதைக் கேட்டதாய் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றாள் மனோகரி.

ஓவ்வொரு கிழமையும் தேவகி மனோகரியுடன் கதைக்கும் பொழுதெல்லாம் தனது கணவனைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் பெருமையாகப் பேசிக்கொள்வதைக் கேட்க இவள் உண்மையிலேயே பேசுகிறாளா? அல்லது பொய்யாக இருக்குமோ? என்று சிந்திப்பதுண்டு. ஒருநாள் தேவகி மனோகரியைப் பார்த்து “உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?” என்று கேட்கவும் மனோகரிக்கு மனதுக்குள் வலித்தது. “பிள்ளைகளா? எனக்கா? எனக்கு யாருமில்லை. தனியத்தான் இருக்கிறன் என்றாள் விரக்தியுடன். தேவகிக்கு சங்கடமாகி விட்டது. நான் கொஞ்சமும் யோசிக்காமல் கேட்டுவிட்டேனோ? திருமணமானவரா? இல்லையா? என்பதுகூட அறியாமல் என்ன கேள்வி கேட்டுவிட்டேன். “மன்னித்துவிடுங்கள் மனோகரி” “பரவாயில்லை” என்று மனோகரி கூறினாலும் எண்ணங்கள் பின்னோக்கி ஓடியது.

எத்தனை வருடங்கள் அத்தனையும் கனவாகிப் போன காலங்கள். மனோகரி ஆசிரியையாகப் பதவி ஏற்று பக்கத்து ஊரில் உள்ள பாடசாலையில் படிப்பித்து வந்தாள். அவளது சிறுவயதில் இருந்தே ஆசியையாக வரவேண்டுமென்ற அவளது கனவு நிறைவேறியதில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெற்றவர்களும் சகோதரர்களும்கூட மிகவும் பூரித்துப் போயினர். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே மனோகரி மிகவும் கெட்டிக்காரி. அனைவருடனும் அன்பாகப் பழகுவாள். அவளிருக்கும் இடத்தில் கலகலப்புக்குக் குறைவில்லை. மூத்த சகோதரியின் திருமணம் முடிந்து மறுவருடமே மனோகரியையும் மணமேடை தேடி வந்தது. மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்பவர். அது வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு மவுசு ஏற்பட்ட காலம். எனவே பெற்றவர்களின் விருப்பப்படி திருமணம் இனிதாக நிறைவேறியது.

திருமணத்திற்காகப் பெற்றிருந்த பதினைந்துநாள் விடுமுறையும் இனிமையான கணங்களாய் விரைந்தே ஓடி மறைந்தது. நாளை திங்கட்கிழமை. எனவே மனோகரி தனது வேலைக்குத் திரும்புவதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினாள்.இன்று காலையில் இருந்தே ராகுலன் எதுவும் கலகலப்பாகக் கதைக்காமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்ன நடந்தது? ஏதாவது நான் தப்பாகப் பேசி விட்டேனோ? அல்லது அப்பா அம்மா ஏதாவது சொன்னார்களா? என்று யோசனையுடன் “ என்ன ராகுல் தலை வலியா?” என்று கேட்டாள்.

“ஆமாம் தலைவலிதான். நாளைக்கு நீரும் பள்ளிக்கூடம் போனபின் நான் தனிய இங்க இருந்து என்ன செய்யப் போறன்? நீர் இன்னும் லீவு எடுக்க ஏலாதோ?” என்றான் ராகுல்.

“ஓ இதுதான் பிரச்சனையா?” என்று மனதுக்குள் நினைத்தபடி “ இனி எனக்கு லீவு எடுக்கக் கஸ்ரம். வேணுமென்றால் மத்தியானத்தில நான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டிட்டு போறன்” என்றாள்.

மறுநாள் தொடக்கம் மத்தியான இடைவேளையில் கணவனின் ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டுவிட்டு போகத் தொடங்கினாள்.இருந்தும் ராகுலனின் போக்கில் மாற்றமில்லை. தினமும் ஏதாவது சொல்லி மனோகரியின் மனதைப் புண்படுத்திக்கொண்டே இருந்தான்.

“என்ன இது? ஆரம்பத்தில் இனிமையாகப் பேசி அன்பாகப் பழகி ஆதரவாய் இருந்தவன் சில நாட்களிலேயே இப்படி மாறி விட்டானே?” என்று மனதுக்குள் மறுகினாள்.

மனோகரியின் நெடுநாளைக் கனவு ஆசிரியத் தொழில். அதை வெறுக்குமளவிற்கு கணவன் வந்து வாய்த்தது விதியா? அல்லது அவளது வாழ்க்கைளையே மாற்றிப்போட விதி செய்த சதியா?

நாட்கள் செல்லச் செல்ல மனோகரி யாருடனும் பேசினாலும் சிரித்தாலும் பழகினாலும் எதுவும் ராகுலனின் கண்களுக்கு விகற்பமாகவே பட ஆரம்பித்தது. அவள் படித்து அரசாங்க உத்தியோகம் பார்ப்பதால் தன்னை குறைவாக மதிக்கிறாள் என்று தனக்குள்ளேயே தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதால் எதையுமே தப்பான கண்ணோட்டத்துடனேயே பார்க்கத் தொடங்கினான்.

மாதக் கடைசியில் தன் சம்பளப் பணத்துடன் கணவன்முன் நின்று சந்தோசமாக “என் சம்பளக்காசு” என்று நீட்டினாள் மனோகரி.. ராகுலனின் முகம் கறுத்தது. “இது வேணுமென்று யார் கேட்டது?”

“ஏன் நான் உழைக்கிறது இரண்டு பேருக்கும் சொந்தம்தானே”

“உம்மை உழைச்சுத் தரச்சொல்லி நானா கேட்டனான்.”மனோகரி விக்கித்து நின்றாள்.

என்ன செய்வது? எப்படிப் புரிய வைப்பது?

“ராகுல் நான் இந்த வேலை எடுக்க எவ்வளவு கஸ்ரப்பட்டனான் எண்டு உங்களுக்குத் தெரியாது”

“அதுக்கு நான் என்ன செய்ய?” அது அப்பா அம்மாவோட இருக்குமட்டும் சரி. இப்ப நீர் என்ர மனைவி. எனக்கு விருப்பமில்லாததைச் செய்யிறவள் நல்ல மனைவியா?”

“இது என்ன கேள்வி? நான் எந்த விதத்தில நல்ல மனைவியாக இல்லை? உங்கட சந்தோசத்துக்கு ஏதாவது தடையாக இருக்கிறேனா? என்ன விதத்தில நான் தப்பு செய்யிறன்?

எனக்கு நீர் வேலைக்குப் போவது விருப்பமில்லை என்று வெளிப்படையாகப் பதில் சொல்லாமல் மனதுக்குள் வைத்துக் கொண்டு விதண்டாவாதமாகப் பேசும் ராகுலனை முதல்முதலாக உணர்ந்துகொண்ட போது மனோகரி உள்ளுக்குள் உடைந்து போனாள்.

மனோகரியின் இலட்சியம் விருப்பம் கனவு எல்லாம் அவளது தொழில்தான். இதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை என்பது புரிந்து கொண்டபோது அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை.

தினமும் ஏதாவது தேவையில்லாத விடயங்களுக்கும் பிழை பிடித்து வேண்டாத பெண்டாட்டி கால் பட்டாக் குற்றம் கை பட்டாக் குற்றம் என்பது போல் எதற்கும் ஏட்டிக்குப் போட்டியாகக் கதைப்பது இப்பொழுது வழக்கமாகி விட்டது.

வெளிப்பார்வைக்கு சந்தோசமான புதுமணத் தம்பதிகளாய் வலம் வந்த அவர்கள் குடும்பத்தில் நான்கு சுவர்களுக்குள் விரிசல்கள் பலமாக வளரத் தொடங்கியது. அவளும் எவ்வளவோ சொல்லி ராகுலனைச் சமாளிக்கலாம் என்று முயற்சிகள் சௌ;தாள். ஆனால் ராகுலனோ ஒன்றுக்கும் அசைவதாய்த் தெரியவில்லை. பெற்றவர்கள் ஒருபுறம் கணவன் மறுபுறம் அவள் எந்தப் பக்கம் என்ன சொல்லிப் புரியவைப்பது என்று தெரியாமல் தினமும் வேதனையைச் சுமந்தபடி வேலைக்குச் சென்று வந்தாள்.

ஒருவாரத்தின் பின் பாடசாலை அதிபரிடமிருந்து அழைப்பு வந்தது. சென்றவளிடம் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிக்கான விண்ணப்பப் படிவத்தை நீட்டினார் அதிபர்.

அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி வினாடியில் கரைந்து போனது. கணவனின் அனுமதி கிடைக்குமா? சந்தேகந்தான். இருந்தும் நன்றியுடன் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றவளை ஏறிட்ட அதிபர் “என்ன ரீச்சர் முகத்தில சந்தோசத்தைக் காணயில்லை. ஏதாவது பிரச்சனயா?” என்று கேட்டார்.

“ஒண்டுமில்லை” என்று அவள் சொன்னதிலிருந்தே ஏதோ இருக்கு என்று உணர்ந்து கொண்ட அதிபரோ மேற்கொண்டு ஏதும் கேட்பது சரியில்லை என்று நினைத்தார் போலும் “சரி இதை நீர் நிரப்பி அனுப்பும்” என்று சொல்லி விடை கொடுத்தார்.

மனோகரிக்குள் போராட்டம்.

மாலையாகியது. ராகுலன் வீட்டிலிருந்தான். மெதுவாகப் பக்கத்தில் அமர்ந்து தேநீர் கொடுத்தபின் “ராகுல் எனக்கு றெயினிங் கொலிச்சுக்கு அட்மிசன் வந்திருக்கு” என்று மலர்ந்த முகத்துடன் சொல்லவும் ராகுலின் முகம் மாறியது. முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

என்ன இவன். தான் தன் சுகம் மாத்திரம் தான் முக்கியமா? எனக்கும் உணர்வுகள் விருப்பங்கள் எதுவும்இருக்கக் கூடாதா?

பெண் விடுதலை என்று நிரம்பப் பேசுகிறார்களே? இது தானா பெண் விடுதலை?

ஆண்கள் மட்டும் தாம் எதை நினைத்தாலும் செய்யலாம் ஆனால் பெண்கள் மட்டும் விதி விலக்குகளா?

ஆத்திரத்தில் மனம் துடித்தாலும் அடக்கிக் கொண்டாள்.

“ராகுல் நீங்க வெளிநாட்டுக்குப் போய் வர இரண்டு வருசம் செல்லும் அதுக்கிடையில நான் றெயினிங்கை முடிச்சிருவன்”

ராகுலனிடமிருந்து எவ்வித பதிலுமில்லை.

மனோகரிக்கு விளங்கி விட்டது. தனது எந்தப் பேச்சும் இவனிடம் எடுபடப் போவதில்லை.

அவனைப் பொறுத்தவரையில் மனைவி என்பவள்

சம்பளமில்லாத வேலைக்காரி

செலவில்லாத விபச்சாரி

பிள்ளை பெறும் இயந்திரம்.

இதைத்தவிர வேறு எதுவும் அவனிடம் எதிர் பார்க்க முடியாது.

தன் மனைவியின் உயர்வு கண்டு மறுகிடும் உள்ளங்களைப் பற்றி கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறாள். தனது வாழ்க்கையிலும் இது நிகழும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஏக்கத்தில் உள்ளம் துடித்தது.

நேரே பெற்றவர்களிடம் சென்றவள் “எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்” என்றாள் தீர்மானமாக.

எதையும் ஒளித்து மறைத்து பேசத்தெரியாத வெள்ளை உள்ளம் கொண்ட மனோகரியால் இதைத் தவிர வேறு எதையும் கூற இயலவில்லை.

இறுதியில் மனோகரியை பெற்றவரின் பேச்சுக்களோ சுற்றி இருந்தோரின் அறிவுரையோ ராகுலனின் எதிர்பார்ப்புகளோ எதுவும் அவளை மாற்றவில்லை.

விவாகரத்துக்கு மனுச்செய்தாள்.

விவாகரத்தும் கிடைத்தது.

பத்து வருடங்கள் பஞ்சாய்ப் பறந்துவிட நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலமை காரணமாக வேலையிலிருந்து ஓய்வெடுத்த மனோகரியும் சகோதரியுடன் கனடா வந்து விட்டாள்.

கோலாகலமாய் ஆரம்பிக்கப்பட்ட மணவாழ்க்கை கோலமிழந்து போய்விட்டதைப்பற்றி மனோகரி என்றும் கவலைப்பட்டது கிடையாது.

எப்போதாவது தனிமை வாட்டும்போது மனம் குறுகுறுத்தாலும் நிறைய புத்தகங்கள் வாசிப்பது வானொலி கேட்பது தொலைக்காட்சி பார்ப்பது என்று வேலை தவிர்ந்த நேரங்களில் தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வாள்.

சனிக்கிழமைகளிலும் தமிழ் பாடசாலையில் கல்வி கற்பித்தாள்.

கிறிஸ்மஸ் விடுமுறை விடுவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. வருட இறுதியில் மாணவர்களுக்கு நிகழ்ச்சிகள் வைத்து கிறிஸ்மஸ் தாத்தா வந்து பரிசில்கள் கொடுத்து மகிழ்விப்பது வழக்கம். அனைத்து மாணவர்களுக்கும் அதற்கான அழைப்பிதழ் அனுப்பி இருந்தாள். அன்று மாணவர்கள் எல்லோரும் சிற்றுண்டிகள் கொண்டுவந்து பகிர்ந்துண்பதுவம் பரிசில்கள் பரிமாறி மகிழ்வதுவும் உண்டு.

மனோகரியும் அன்று அழகாக உடை அணிந்து தன்னை நேர்த்தியாக அலங்காரம் செய்திருந்தாள். பெற்றோர்கள் ஒவ்வொருவராக தத்தமது பிள்ளைகளுடன் வந்து ஆசிரியரைச் சந்தித்து மகிழ்வதுவும் பிள்ளைகளின் சிறு சிறு குறும்புகளைப் பார்த்து ரசிப்பதுமாக இருந்தனர்.

ராகவியும் தமது பெற்றவர்களுடன் வருவதை அவதானித்த மனோகரியின் மனதுக்குள் குறுகுறுப்பு. அம்மாவே இல்லை. அப்பாதான் எனக்கு எல்லாமென்;று சொல்லுமளவிற்கு அன்னையும் பாசத்தையும் தன் செல்லப் பெண்ணின் மேல் மழையாகப் பொழிந்த அந்த நல்ல அப்பாவைப் பார்க்கப் போகிறோம் என்ற துடிப்பு.

அவர்கள் நெருங்கி வரவர மனோகரியின் உடலிலுள்ள அத்தனை நரம்புகளிலும் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு.

என்ன இது? இவரா ராகவியின் அப்பா? யாரை அன்பில்லாதவர் மற்றையவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதவர் வெறும் மரக்கட்டை என்று முடிவெடுத்து தனது வாழ்விலிருந்து தூக்கி எறிந்தாளோ அவனே இன்று அன்புக் கணவனாய் ஆசை அப்பாவாய் பாசமுள்ள தந்தையாய் தன் மனைவியுடன் சிரித்துக் கதைத்தபடி கம்பீரமாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவளையும் மீறி வெளிப்பட இருந்த கண்ணீரை கட்டுப்படுத்தி உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் யன்னலூடாகத் வெளியே பரந்து தெரிந்த நீலவானத்தின் வெறுமையை ஏறிட்டாள். ஒரு சின்னப் பறவை தன்னந் தனியாக தன் இறக்கைகளை விரித்து வானில் பறந்து கொண்டிருந்தது.

கண்மணி அக்கா கதை மிகவும் நன்றாக இருந்தது :wub: ...இறுதிவரை முடிவு இப்படி தான் இருக்கும் என்று நினைக்கவில்லை..(வித்தியாசமான முடிவு நன்னா இருந்தது :( )..ம்ம் எதுவும் எமக்கு அருகில் இருக்கும் போது அதன் அருமை புரிவதில்லை தானே அக்கா :( ..(அப்படி தான் அவளின் கணவனும் :( )...கண்மணி அக்காவின் சுடும் நிலவும் சுடாத சூரியன் வாசிக்கும் உள்ளங்களை சுட்டெரிக்கிறது வாழ்த்துக்கள் அக்கா.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் ஆக்கங்களை உடனுக்குடன் படித்து ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் யமுனாவுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கண்மணி கதை நல்லாத்தான் இருக்கு ஆனால் எல்லாரும் கதையோடை நிக்காமல் எத்தினை பேர் பெண்விடுதலை நடைமுறையிலை இருக்கப் போகினம் எண்டுதான் கவலை :rolleyes::D

கண்மணி நல்லாக இருக்கு கதை. தேவகியை சந்தித்த போதே நினைச்சேன் அவளின் கணவனுக்கும் மனோகரிக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்குமென. ம்ம் எத்தனையோ பெண்கள் மனோகரி போல சீரழிந்து இருக்கின்றனர் ஆண்களால்.

எத்தனையோ பெண்கள் மனோகரி போல சீரழிந்து இருக்கின்றனர் ஆண்களால்.

மனோகரி தன்னாலும் தன் குடும்பத்தாலும் தான் சீரழிந்தாள் என்று சொல்லவேண்டும். ராகுலன் மனோகரியின் விருப்பு வெறுப்புகள் ஒத்துப்போகிறதா என்று பாராமல் கல்யாணம் செய்தது தான் பிழை. தான் எடுத்த முடிவு சரியில்லை என்று ஏன் மனோகரி தடுமாறுகிறாள்? தேவகிக்கு வேலைக்கு போகமல் இருப்பதில் சங்கடம் இல்லை போல் தெரிகிறது.

நல்ல ஆக்கம், பாராட்டுகள் கண்மணி.

கல்யாணம் செய்ததில் தப்பில்லை.

எல்லோரும் காதலிச்சு ஒருவரையொருவர் புரிந்ததன் பின்னர் தான் கல்யாணாம் செய்துக்கணும் என்றில்லை தானே.

ஒரு பொண்ணை ஒரு ஆடவனை நம்பி அவனிடம் ஒப்படைக்கும் போது ஒரு ஆண்மகன் எபப்டி நினைக்க முடியும் அவள் வேலைக்கு போக கூடாது தனக்குள் அடங்கி போகணும்...... இப்படி பல.

சோ இதை தான் சொல்லுவார்களோ பெண்னடிமை என?

ஒரு பொண்ணை ஒரு ஆடவனை நம்பி அவனிடம் ஒப்படைக்கும் போது ஒரு ஆண்மகன் எபப்டி நினைக்க முடியும் அவள் வேலைக்கு போக கூடாது தனக்குள் அடங்கி போகணும்...... இப்படி பல.

சோ இதை தான் சொல்லுவார்களோ பெண்னடிமை என?

கல்யாணம் என்பது இருவர் இணையும் பந்தம். ஏன் ஒருவரை இன்னொருவரிடம் ஒப்படைக்கிறீர்கள்? பிறகு ஏன் அடிமை பற்றிய விவாதம்?

ஆண் தன் மனைவி கஷ்டப்படக்கூடாது என்றும் நினக்கலாம் அல்லவா? தம் குழந்தைகளை சரியாக கவனிக்க வேண்டும் என்பதற்காக வேலைக்கு போகவேண்டாம் என்றும் நினைக்கலாம் அல்லவா? இதிலே எங்கே அடிமைத்தனம் வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி கஸ்டப் படக்கூடாது எண்டு கணவனுக்கு அக்கறை, அதனால வேலைக்குப் போக வேண்டாம் எண்டு கட்டளை! அது சரி, சில பேருக்கு சும்மா வீட்டில குந்தியிருக்கிறது தான் பெருந்துன்பம், வேலைக்குப் போய் வாறது சுகமான அனுபவம். ஒரு அடிமையா மனைவியப் பார்த்தா அவவுக்கு எது சந்தோசம் எது கஸ்டம் எண்டு தீர்மானிக்கிற அதிகாரத்த நாங்கள் எடுத்துக் கொள்ளுவம். ஆனா அதுக்கு அன்பும் வாஞ்சையும் தான் காரணம் எண்டு நாங்கள் சொல்லுவம், நீங்கள் எல்லாரும் அதை நம்ப வேணும். சரியா EAS நான் சொல்லுறது? :unsure::lol:

அதுதான் முதலிலேயே சொன்னேன் ஜஸ்டின். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பு/வெறுப்புகள் இருக்கலாம். அட்ஜஸ்ட் செய்வது முக்கியம், ஆனால் அதுவே வாழ்க்கை என்றால் கஷ்டமாகிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குளிர் நிலவும் நெருப்பாய் சுடலாம் சுட்டெரிக்கும் சூரியனும் தண்மையாகலாம். ஈஸ் எழுதியதுபோல் தன் மனைவி கஸ்ரப்படக் கூடாது என்று நினைத்தால் புலம்;பெயர் நாடுகளில் குறிப்பாக கனடா நாட்டில் இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் பற்றி என்ன சொல்வது? அடிமைத்தனமா? அக்கறையா? எல்லாம் பணத்தேவைதான். அல்லது யஸ்ரின் சொல்வதபோல் வேலைக்குப் போவது சுகமான அனுபவமோ அல்லது சுமையான அனுபவமோ அது சம்பந்தப்பட்ட பெண்ணைப் பொறுத்தது. ஒவ்வொருவருக்கும் சுயம் என்று ஒன்று இருக்கிறது. இந்தக்கதையில் இரு பெண்களும் தத்தமது சுயத்துடன் செயற்படுகிறார்கள். இன்று எமது இளம் சமுகம் பேச்சுத்திருமணம் பற்றிப் பேச்செடுத்தாலே பேயைக் கண்டதுபோல் ஓடுவதற்குக் காரணம் என்ன? ஈஸ் முதலில் சொன்னது போல் விருப்பு வெறுப்புகளை அறிந்தபின் திருமணபந்தத்தில் ஈடுபட்டால் இப்படிப்பட்ட பிரச்சனைகளை ஓரளவாவது தவிர்க்கலாம் என்பது என் கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.