Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை

மைக்கல் றொபேர்ட்ஸ்

தமிழில்: சேரன்

இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள் சிங்களம் பேசினால் அவர்களைத் தமிழர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இனக்கலவரங்களின்போது உயிர்பிழைக்க இத்தகைய ஆற்றல் ஒரு முக்கியமான தேவையாகும். மொழி, அதனுடைய தொனி, பேச்சு வழக்கு போன்ற இயல்புகள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கக்கூடியதாக மாற்றம் பெற்றுவிடுகிற கணங்கள் அவை.

தமிழரல்லாத தமிழர்களான எனது இரண்டு நண்பர்கள் ஜூலை 83இல் அந்தப் பயங்கரமான படுகொலை வாரத்தில் தப்பிப் பிழைத்தார்கள். ஒருவர் இலங்கையின் தென்பகுதி நகரமான காலியில் பிறந்து வளர்ந்தவர். காலியில் நாங்கள் பாடசாலை மாணவர்களாக இருந்தோம். இப்பொழுது அவருக்கு 53 வயது. நாங்கள் அவரை டேமியன் என்று அழைக்கலாம். டேமியன் உயர்ந்த தொழிலில் இருந்தவர். அவருடைய நண்பர்கள் பலரைப் போல அன்றி, இலங்கையை விட்டு எப்போதுமே வெளியேறாதவர். இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் எதுவும் அவருக்கு இருக்கவும் இல்லை. அவருடைய மனைவி தமிழரல்லர். டேமியனும் மனைவியும் கத்தோலிக்கர்கள். கொழும்பில், காலி வீதியில் இருந்து ஒரு கூப்பிடு தூரத்தில் இருந்தது டேமியனின் வீடு. டேமியனின் தந்தை வழிப் பெயர் தமிழ்ப் பெயராகவே இருந்தது.

ஜூலை இனப்படுகொலையின்போது கொழும்பில் எல்லா இடங்களிலும் திரிந்து, தேடித் தேடிக் கொலைசெய்தவர்கள் வாக்காளர் விவரப் பட்டியலைக் கையில் வைத்திருந்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம். வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த வீடு அல்லது எந்தச் சொத்து தமிழருடையது என்பதை நீங்கள் இலகுவில் இனங்கண்டுவிட முடியும். டேமியன் தன்னுடைய இனத்துவ அடையாளத்தைப் பற்றி என்னதான் கற்பனை செய்துவைத்திருந்தாலும் அவருடைய பெயர் அவரைத் தமிழராகக் கொலையாளிகளிடம் இனங்காட்டிவிட்டது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தமிழர்களில் பலர் தப்பியோடித் தமது சிங்கள நண்பர்கள், அயலவர்கள் வீடுகளில் தஞ்சம் பெற்றனர். பல சிங்கள மக்கள் தமிழர்களை இவ்வாறு பாதுகாத்திருந்தனர். வன்முறையின் தொடக்ககட்டங்களில் உடைமை அழிப்பும் கொள்ளையுமே முக்கியமாக இடம்பெற்றிருந்தன. பிற்பாடுதான் இந்த வன்முறை தமிழர்களைப் பெருமளவில் கொன்ற இனப்படுகொலையாக மாறிற்று. டேமியன் தப்பியோடவில்லை. கலவரத்தையும் அழித்தொழிப்பையும் வேடிக்கை பார்க்கிற ஒருவரைப் போல அவரும் காலி வீதியில் கும்பலோடு கும்பலாக உலவித் திரிந்தார். சிங்கள மொழியில் சரளமாக உரையாடினார். அதனால் உயிர் தப்பிவிட்டார். இன்றும்கூட அந்த அனுபவத்தைப் பற்றிப் பேசுவதானால் சிறு புன்னகையோடு தட்டிக்கழித்துவிடுவார்.

எனது நண்பர் வீஜியும் இப்படித்தான் தப்பியவர். ஆனால், வீஜி தப்பியது மயிரிழையில். கண்டியில் பிறந்து வளர்ந்தவர் வீஜி. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தபோது நாங்கள் நெருங்கிய நண்பர்களானோம். நீண்ட காலமாக நாங்கள் சந்திக்கவில்லை. வீஜி வெளிநாட்டவரைத் திருமணம் செய்து நீண்ட காலமாக வெளிநாடுகளிலேயே கற்பித்துவந்தவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1983 ஜூலையில் இலங்கைக்குத் திரும்பியிருந்தார். இனப்படுகொலை தொடங்கியபோது பாதுகாப்பாகத் தன்னுடைய சிங்கள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வீஜி சென்றுவிட்டார். நிலைமை சற்றுத் தணிந்ததும் வீஜியினுடைய இன்னொரு நண்பர் (இவரை தொ. வே. என்று அழைக்கலாம்) வீஜியைத் தன்னுடன் அழைத்துச்சென்றார். வீஜியும் தொ.வேயும் கிரில்லப்பனை மற்றும் கொழும்பு தெற்கு மருத்துவமனைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் இனவன்முறைகள் மறுபடியும் ஆரம்பித்துவிட்டமை அவர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அந்தப் பாதையில் போவதைத் தவிர்த்து வேறு பாதைக்கு வண்டியைத் திருப்பினார் தொ.வே. ஆனால், அந்தப் பாதையிலும் எரிவும் அழிப்பும் கொலைகளும் நடந்துகொண்டிருந்தன. காரைத் தெருவோரமாக நிறுத்திவிட்டு நடந்து செல்வதே பாதுகாப்பு என்று கருதிய தொ.வே. காரை நிறுத்திவிட்டு யாரிடமாவது உதவிபெறலாமா எனத் தேடிச் சென்றார்.

இப்பொழுது வீஜி காருடன் தனித்து நின்றாலும் அருகில் இருந்தவர்களிடம் சிங்கள மொழியில் உரையாடினார். ஆனால், அவருடைய சிங்கள மொழி முறையான சிங்களம் அல்ல. அப்பொழுது கத்தி, கோடரி, தடி, பொல்லுகள் சகிதம் ஒரு கும்பல் அவரை நோக்கி வந்தது. கும்பலில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் சாரம் (லுங்கி) கட்டியிருந்தார்கள். சிலர் அரைக்கால் சட்டை அணிந்திருந்தார்கள். பொதுவாக வயது நாற்பதிலிருந்து ஐம்பதுவரை இருக்கும். சாதாரணப் பொதுமக்கள். கோபத்திலும் ஆத்திரத்திலும் அவர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கவில்லை. மிக நிதானமாக, சாதாரணமான முறையில் நல்ல பணிகளைச் செய்வதுபோல இயல்பாக நடந்துகொண்டார்கள். இப்பொழுது அவர்கள் கவனம் முழுவதும் வீஜி நோக்கித் திரும்பியிருந்தது. அவர்களில் ஒருவன் வீஜியினுடைய பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பினான். தனது தமிழ்ப் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளையும் வைத்துக்கொண்டு பொய்யான ஒரு சிங்களப் பெயரை வீஜி அவனுக்குச் சொன்னார். (பார்த்தீர்களா, எவ்வாறு தந்தை வழியான வரலாறு இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒன்றிணைக்கிறது என்பதை). உன்னுடைய குடும்பப் பெயரென்ன என்று கேட்டார்கள். லொகுகே என்று பொய் சொன்னார் வீஜி. உன்னுடைய ஊர் எது? வெலிக்கடை.

இந்தக் கேள்விகள் கொலை செய்வதற்கு முன்பாக ஒருவர் தமிழரா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்காகக் கேட்கப்படும் கேள்விகளாகும். கும்பல் முற்று முழுதாகத் திருப்தி அடையவில்லை. எனினும் வீதியை விட்டு நகர்ந்து சென்றது. ஆனால், யாரோ ஒருவர் தொ. வே. அந்த இடத்தை விட்டு ஏற்கனவே நகர்ந்துவிட்டதை அவதானித்து இருந்தார். தொ. வே. குள்ளமானவர். கறுப்பானவர். தமிழர்கள் எல்லோரும் கறுப்பானவர்கள் என்ற படிவார்ப்பு சிங்கள மக்களிடம் இருந்தது. கும்பலில் ஒரு சிலர் வீஜியிடம் திரும்பிவந்தனர். எங்கே அந்தப் பெரிய தமிழ்த் தடியன் என்று தொ.வேயைப் பற்றிக் கேட்டார்கள். தொ. வேயின் உண்மையான பெயரை வீஜி அவர்களுக்குச் சொன்னார். ஆனால், கும்பலால் அதை நம்ப முடியவில்லை. இப்பொழுது வீஜி தமிழரா சிங்களவரா என்பதில் கும்பலுக்குக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

கொஞ்சம் தமிழர்களை அடுத்த தெருவில் தாங்கள் கொன்றிருப்பதாகவும் அந்தக் கும்பல் வீஜியிடம் கூறியது. குருதி வழியும் கோடரியை வீஜியிடம் காட்டினான் ஒருவன். கொல்லப்பட்டவர்களின் உடம்புகளைப் பார்க்கத் தங்களோடு வர விருப்பமா என்று வீஜியைக் கேட்டனர் அவர்கள். வீஜி தமிழரா சிங்களவரா என்பதை உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு அமிலப் பரிசோதனையாக அது இருந்திருக்க வேண்டும் என்று வீஜி என்னிடம் பிற்பாடு தெரிவித்தார். ஒரு நல்ல சிங்களவர் இத்தகைய படுகொலைகளில் ஈடுபட வேண்டும் அல்லது அவற்றுக்குச் சாட்சியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குருதியைப் பார்ப்பது தனக்கு அலர்ஜி என்று வீஜி அவர்களிடம் சொன்னார். அவர்களுடைய சந்தேகம் பலபடிகள் அதிகரித்தன. தொ. வேயின் காரை எரித்துவிடலாம் என்று கும்பல் முடிவெடுத்தது. அவர்கள் காரை எரிக்கத் தயாரானபோது வீஜி அவர்களுக்கு முன்னால் ஓடிச்சென்று தொ.வே. ஒரு சிங்களவர் என்று வலியுறுத்தினார். சிங்களவருடைய காரை எரிப்பது எவ்வளவு மோசமானது என்று வீஜி அவர்களிடம் வாதாடினார். காரின் கதவைத் திறந்து அதற்குள் இருந்த தொ. வே.யின் பெயர் பொறித்த ஆவணம் ஒன்றை எடுத்துக் கும்பலுக்குக் காட்டினார். அப்பொழுதும் அந்தக் கும்பல் நம்பிக்கைகொள்ளவில்லை. அந்தக் கணத்தில்தான் ஒரு போலிஸ் வண்டியில் தொ. வே. அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். ஆனால், அப்போதும் அந்தக் கும்பல் அசையவில்லை. வந்திருந்த போலிஸ்காரர்களைவிடக் கும்பலில் ஏராளமானபேர் இருந்தனர். வீஜி சிங்களவர் அல்லர் என்று தெரிந்தாலும் வீஜியைச் சிங்களவர் போலவே நடத்தினர் வந்திருந்த போலிஸ்காரர்கள். தொ. வே. சிங்களவர்தான் என்பதை அவருடைய சிங்களம் மட்டுமின்றி அவருடைய நடையுடை பாவனைகளும் இப்போது தெளிவாகக் கும்பலுக்கு உணர்த்தின. வீஜியை போலிஸார் பாதுகாப்பாக ஜீப்பில் அழைத்துச் சென்றனர். தொ. வே. தன்னுடைய காரில் அவர்களுக்குப் பின்னால் சென்றார்.

ஒரு படுகொலை: நண்பனை இழந்தேன்

அருமைநாயகம் யாழ்ப்பாணத் தமிழர். எனது நண்பர் என்று கூறுவதைவிட நன்கு அறிமுகமானவர் என்பதே பொருத்தமானது என்று சொல்லத் தோன்றுகிறது. நல்ல அறிமுகத்துக்கும் நட்புக்கும் இடையே இருக்கும் ஒரு குழப்பமான வெளியில் இருந்தது எமது உறவு. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் சிங்கள மொழியில் கற்பித்துக்கொண்டிருந்தபோது அருமைநாயகம், வரலாற்றுத் துறையில் தமிழ் மொழியில் கற்பித்துக்கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் அவருடைய நியமனம் தற்காலிகமானதாக இருந்தது. பிற்பாடு இலங்கை அரசின் வருமான வரித் திணைக்களத்தில் உயர்பதவியில் இணைந்துகொண்டார். கொழும்பில்தான் வாழ்வும் வேலையும். அருமைநாயகத்துடன் நான் ஒருபோதும் சிங்கள மொழியில் பேசியதில்லை. எனினும், அவரது சிங்களப் பேச்சு சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத ஒருவரது சிங்களம்போலக் கொச்சையாக இருந்திருக்கும் என்பதே எனது ஊகம். படுகொலைக் காலங்களில், தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம் என்று கூறுவார்கள்.

படுகொலைகள் தொடங்கியபோது, அருமைநாயகமும் குடும்பத்தினரும் பாதுகாப்பாக வேறு வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். பிற்பாடு கொழும்பில் தமிழர்களுக்காக அவசரம் அவசரமாக உருவாக்கப்பட்ட அகதி முகாம்களில் ஒன்றுக்குப் போய்த் தங்கினார். சில நாள்களின் பின் நிலைமை மெல்லமெல்ல வழமைக்குத் திரும்பியது. எனினும் ஒருவகையான இறுக்கமான சூழலே நிலவிற்று. அருமைநாயகமும் அவரது தமிழ் நண்பர் ஒருவரும் கடற்கரைப் பக்கம் சென்று வரலாம் எனத் தீர்மானித்துக் காரில் புறப்பட்டனர். ஆனால், அன்று திடீரென நிலைமை தலைகீழாயிற்று. அன்று ஜூலை 29, 1983. பதற்றமும் பீதியும் வதந்திகளும் கொழும்பை மூடிய ஒரு காலை. மீண்டும் படுகொலைகள் தீவிரமாக இடம்பெற ஆரம்பித்தன. அகதி முகாமுக்குத் திரும்பிவருகிற வழியில் அருமைநாயகத்தையும் அவரது நண்பரையும் ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டது. அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அருமைநாயகத்தின் கதையை எனக்குச் சொன்னவர் அருமை நாயகத்தோடு ஒரே காலத்தில் கல்வி பயின்ற ஒரு சிங்கள நண்பர். சாதாரணமான ஒரு அலுவலகத்தில் சாதாரணமான நாற்காலியில் இருந்து சாதாரணமாக இந்தக் கதையைக் கேட்டேன். எவ்வகையிலும் ஆச்சரியமோ வியப்போ எனக்கு ஏற்படவில்லை; தலையில் கை வைக்கவில்லை. சிலவேளைகளில் என்னுடைய இயல்பு இதுதானோ என்னவோ? ஆனால், என்னால் மறக்க முடியவில்லை. அருமைநாயகத்துக்கு நான் எழுதும் அஞ்சலிக் குறிப்பு இதுதான். அவலமும் அவலத்துள் எதிர்ப்பும், இவ்வகையான கணங்களில் உரை நடை தோற்றுப்போகின்றது. ஆனால், கவிதை அந்தக் கணங்களை மீட்டுத்தருகிறது.

srilankapix2hm4.jpg

பாஸில் ஃபெர்னாண்டோ (Basil Fernando) என்னும் சிங்கள வழக்கறிஞர் ஜூலைப் படுகொலைகளின் பல முகங்களைக் கவிதையில் காட்டியிருக்கிறார். அவருடைய 'தார்மீக சமூகம்' என்கிற கவிதை கொலையாளிகள்மீதும் எனதும் அவரதும் சமூகத்தின் மீதுமான பெருங்குற்றச்சாட்டாகும். அந்தக் கவிதையைத் தொடர்ந்து அவரெழுதிய மற்றுமொரு கவிதைதான் "ஜூலை 83: மேலும் ஒரு சம்பவம்". இது இன்னுமொரு பெருங்குற்றச்சாட்டு. கவிதையில் வருகிற "மேலும்ஒரு" என்ற தொடர் எழுப்புகிற முரண்நகை மிகுந்த பலம் வாய்ந்தது; அதன் நோக்கமே இத்தகைய முரண்நகையைக் கிளப்புவதுதான். எனினும் வேறொரு தலைப்பையும் ஒருவர் எண்ணிப் பார்க்க முடியும். அவலத்துள் எதிர்ப்பு அந்தக் கிழமை இடம்பெற்ற ஒரு சம்பவம் பற்றிய பாஸில் ஃபெர்னாண்டோவின் கவித்துவ விவரணம் அருமை நாயகத்துக்கு ஏற்பட்ட அவலத்தை மட்டுமன்றி, அந்த வாரம் கொல்லப்பட்ட அத்தனை தமிழர்களதும் அவலத்தையும் வலியையும் ஒரு சேர எழுப்புகிறது. அது மட்டுமன்று. பாஸில் ஃபெர்னாண்டோவின் கவிதை சுமத்துகிற குற்றச்சாட்டுள் இன்னுமொரு விடயமும் பொதிந்திருக்கிறது: பயங்கரமான அவலத்தை எதிர்கொள்ளப்போகும் ஒரு தமிழர் வெளிப்படுத்திய, அழிக்க முடியாத எதிர்ப்பே அது. வரிக்கு வரியாக இதோ அந்தக் கவிதை:

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது

ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்

இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்

காரணம் ஏதுமில்லை

சத்தியமாகச் சொல்கிறேன்:

நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்

சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை

உங்களைப் போலவே

நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்

மேலும் அன்றாட வாழ்க்கையிலும்

நான் ஒரு யதார்த்தவாதி

எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட

மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்

உடனடியாகவே மறந்துவிடுகிறேன்

மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை

என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது

எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை

எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை

இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்

காருக்குள் நாலு பேர்

பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்

ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்

ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ

அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்

எந்த வேறுபாடும் இல்லை

குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்

ஒரு சில கேள்விகள் செய்வதைப்

பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்

பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல

பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்

ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்

காரின் கதவுகளைத் திறந்தான்

அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த

இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்

குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது

சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என

அவன் எண்ணியிருக்கக்கூடும்

துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்

சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு

இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது

அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்

பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்

கலைந்து போனார்கள் ஒரு சிலர்

காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்

என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்

சமாதான விரும்பிகளாக மக்கள்

தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்

அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்

கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்

சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது

குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்

எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை

செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்

கதவை மூடினார்

தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்

எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது

ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்

மாநகர சபை அதனை அகற்றக்கூடும்

தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.

1985இல் இந்தக் கவிதையை முதல்முறை வாசித்தபோது என்னுடைய எலும்புகள் உறைந்தன. கவிதையில் இடம்பெற்ற சம்பவங்கள் கற்பனையானவை என நான் நினைக்கவில்லை. கவிதை தருகிற துல்லியமான வர்ணனையும் விவரங்களும் நேரடிச் சாட்சியம் இன்றிச் சாத்தியப்பட்டிருக்காது. நேரில் பார்த்த ஒரு சிங்களவரின் சாட்சியம். வலியுடன் ஆனால், சிங்களவர் என்ற வகையில் பாதுகாப்பான நிலையிலிருந்து பார்த்த ஒரு நேரடிச் சாட்சியம். இந்தச் சம்பவத்தை பாஸில் ஃபெர்னாண்டோ நேரடியாகப் பார்க்கவில்லை. நேரில் பார்த்தவர் பாஸிலின் நண்பர் ஒருவர். நாரஹேன்பிட்டியாவில் இருக்கும் தொழில் திணைக்களத்துக்கு அருகே சம்பவம் நடந்தது. வேறு பல வன்முறைச் சம்பவங்களை அந்த வாரம் நேரடியாகப் பார்த்திருந்தமையால், உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ. 'வெகு சாதாரணமாக' என்பதை அழுத்திச் சொன்னார். "ஏராளமான சம்பவங்களை நான் பார்த்துவிட்டேன். போலிஸ்காரர்கள் இவற்றைக் கணக்கிலெடுக்கவே இல்லை. சம்பவங்களைப் பற்றித் திருப்பித் திருப்பிக் கதைப்பதே அந்த நாள்களில் வழமையானதொன்றாக இருந்தது. இந்தச் சம்பவமும் அப்படித்தான் எனக்குச் சொல்லப்பட்டது. எனினும் ஒருவருக்காவது இந்தச் சம்பவம் ஆச்சரியத்தைத் தரவில்லை" என்கிறார் பாஸில் ஃபெர்னாண்டோ. அவருடைய நண்பர்கள் வட்டத்தில் இத்தகைய சம்பவங்கள் பற்றிக் கோபமும் துயரமும்தான் இருந்தன. அவருடைய கவிதை மத்தியதர வர்க்கத்தின் மீதான விமர்சனம் மட்டுமல்ல; ஜூலை படுகொலைகளின்போது நடந்த சம்பவங்களைப் புறத்தே ஏற்றுக்கொண்டுவிட்டாலும் அச்சம்பவங்கள் அகத்தே எழுப்பிவிட்ட கிளர்ச்சியை எதிர்கொள்ளும் முயற்சிதான் பாஸில் ஃபெர்னாண்டோவின் கவிதைகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஆனால், என்னுடைய அக்கறையோ அந்த ஊர், பெயர் தெரியாத தமிழ்த் தந்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டிய எதிர்ப்பு பற்றியது. முகம் தெரியாத அந்தத் தமிழரின், ஒரு தந்தையின் மிகுந்த உறுதிவாய்ந்த அந்தச் செயல், வார்த்தைகள் பேசுவதைவிடப் பெரிதும் பலமாகப் பேசிற்று. அவருடைய செயலைவிட மிகக் காத்திரமான எந்த அறிக்கையும் வெளிவர முடியாது; அது ஒரு கிளர்ச்சியின் செயல்; வன்மையான கண்டனம். மானுடத்தின் மீது பொதுவாகவும் சிங்களவர்மீது குறிப்பானதுமான குற்றச்சாட்டு அது. அவருடைய துணிவு, மன உரம், தனது செயல் மூலம் அவர் வெளிக்காட்டிய மிகத் துல்லியமான கருத்து என்பன என்றென்றைக்குமாக எனது ஆன்மாவில் படிந்துவிட்டன. மற்றவர்களுக்கு இதனைப் பற்றி வேறுவகையான அர்த்தப்பாடுகள் எழலாம். ஒவ்வொரு பிரதியும் பல சாத்தியப்பாடுகளைக் கொண்டது. எனவே, பலவகையான வாசகப் பரப்புகளைச் சாத்தியமாக்குவது. பெயர் தெரியாத அந்தத் தமிழர் என்ன சொல்லியிருப்பாரோ என்பதை என்னால் எளிமையான அவுஸ்திரேலியப் பேச்சு வழக்கில் மொழிபெயர்க்க முடியும். ஆனால், என்னுடைய மொழிபெயர்ப்பு அந்தத் தமிழரின் வார்த்தைகளுக்கு நியாயம் செய்ய முடியாது. எளிமைக்கும் சாதாரணத்துக்கும் அப்பாற்பட்டவை அவரது வார்த்தைகள்.

carwa6.jpg

இன்பத் திளைப்பு - 1

இனப்படுகொலைகளின்போது தப்பிப் பிழைத்தவர்கள், பாதிக்கப்பட்டோர், கொல்லப்பட்டோரை நினைந்து அழுவோர் ஆகியோரின் நினைவுக் கணங்களில் கொலையாளிகள் பற்றிய எண்ணங்களும் தவிர்க்க முடியாமல் பிணைந்திருக்கும். எல்லாப் படுகொலைக் காலங்களிலும் கொலையாளிகள், எரியூட்டுவோர், கொள்ளையடிப்போர் எனப் பலதரப்பினர் இருக்கத்தான் செய்வர். இவர்கள் வெறுமனே 'காடையர்கள்; காட்டுமிராண்டிகள்' அல்லர். இத் தகைய வரைவிலக்கணங்களுக்குள் இருப்போர் சிலரும் படுகொலைக் காலங்களில் சேர்ந்துகொள்ளக்கூடும் என்பது உண்மைதான். எனினும் பழியை வேறு யாரிடமாவது சுமத்தி விட்டுத் தாம் விலக நினைக்கிற மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் கண்டுபிடித்த அடைமொழிகள்தாம் இவை. அசாதாரணமானவர்களால்தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும்; சாதாரண மனிதர்க்கு இவை அப்பாற்பட்டவை என்பதே அவர்கள் கருதுவது. ஆனால், இத்தகைய படுகொலைகளை மிகச் சாதாரணமான சராசரி மனிதரும் புரியலாம் என்பதைத்தான் நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

இனப்படுகொலைகளில் ஈடுபட்டோர் அரசாங்கத்தின் அடியாள்களாக இருக்கலாம். அவர்கள் நிதானமாகத் திட்டமிட்ட முறையில் மாக்கிய வெல்லியன் (Machiavellian) பாணியில் இயங்கியிருக்கலாம் அல்லது அடங்காத வெஞ்சினத்துடன் வெறிபிடித்தோராகக் கும்பல்களாய் மக்கள் இயங்கியிருக்கலாம். இனப்படுகொலைகள், இனக்கலவரங்களின்போது கொலையாளிகளை வர்ணிக்க அறிவுஜீவிகளும் கௌரவமான பூர்ஷவாக்களும் பயன்படுத்தும் வழமையான தொடர்தான் 'வெறிபிடித்த' என்பது. இது பிழையன்று. வீஜியை விசாரணை செய்தவர்கள் வெளிப்படுத்திய நிதானமும் குதூகலமும் ஒருபுறமிருக்க, பழிக்குப் பழி என்பதாகக் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவதும் இலங்கை இனக்கலவரங்களிலும் இனப்படு கொலைகளிலும் தாராளமாகக் காணக்கிடைக்கிறது. எனினும், இந்த மாதிரிச் சூழலில் வெளிப்படுவது வெஞ்சினம் மட்டுமன்று. இன்பத் திளைப்பு, வெற்றிக் களிப்பு, இளிப்பு, கேளிக்கை என்பவையும்தான்.

srilankapix1pv7.jpg

அந்தத் தமிழர் கொலை செய்யப்படுவதற்குச் சில கணங்களுக்கு முன்பாக அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

கொழும்பு நகரில் பொறள்ளை என்னுமிடத்திலிருந்த பஸ் நிலையத்துக்கு அருகே அதிகாலை 1.30 மணியளவில், 24 ஜூலை 1983 திங்கள் கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது. அன்றைய நாளைத்தான் 'கறுப்புத் திங்கள்' என்று சிலர் அழைக்கிறார்கள். ஜூலை 83இன் முதலாவது படுகொலைகளில் ஒன்றாக இது இருந்திருக்க வேண்டும். பழிக்குப் பழியாகக் கொலை என்பது கொண்டாட்டமாகவும் களிப்போடும் செய்யப்படுகிற ஒன்று. சம்பந்தப்பட்டவர்களின் முகங்களிலும் உடலிலும் களிப்பும் குதூகலமும் மிகத் தெளிவாக உயிர் பெறுகின்றன.

இன்பத் திளைப்பு - 2

இனப்படுகொலைகளின்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய குதூகலத்தை ஒட்டுமொத்தமாகவே விசித்திரமான மடத்தனம் என நாம் ஒதுக்கிவிட முடியாது. இன்னொரு சிங்கள நண்பர் எனக்குச் சொன்னது இந்தக் கதை: கண்டி நகரின் பேராதனை வீதிக்கு அண்மையில் ஒரு 'கௌரவமான' தெருவில் குடியிருந்தவர் அவர். ஜூலை 83 படுகொலைகள் கண்டியிலும் பரவலாகவும் கொடூரமாகவும் இடம்பெற்றன. தெருவில் இருந்த தமிழ் வீடுகளைத் தேடிக்கொண்டு ஒரு இளைஞர் கும்பல் அலைந்தது. தமிழ் மூதாட்டி ஒருவர் குடியிருந்த வீட்டை இனங்கண்ட கும்பல் நேரே அங்கு சென்றது. நல்லவேளையாக, ஏற்கனவே அந்த மூதாட்டி பாதுகாப்பாகத் தன்னுடைய சிங்கள நண்பர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். கும்பல் வீட்டை உடைக்க ஆரம்பித்தது. எனது நண்பரும் கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவராக அங்கே நின்றார். தமிழ் மூதாட்டியின் வளர்ப்புப் பிராணியான அல்சேஷன் (Alsation) நாயைக் கும்பல் கண்டுபிடித்துவிட்டது. அந்த நாய் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. கும்பலுக்கு மிகுந்த கொண்டாட்டம். பெரும் கேளிக்கை.

ஐயம்/குழப்பம்

1991, ஒரு நல்ல வெயில் நாளில், கண்டியிலிருந்து மாத்தளைக்கு வரும் வழியில் ஒரு முஸ்லிம் முதியவருக்கு எனது காரில் இடம் கொடுத்தேன். அவரைத் திரு. கிவீ என அழைக்கலாம். திரு. கிவீ அவர்களுக்கு மாத்தளையில் கடையன்றிருந்தது. ஜூலை 83 இல் மாத்தளையில் என்ன நடந்தது என்று பேச்சுவாக்கில் திரு கிவீ அவர்களைக் கேட்டேன். கடைத் தெருவிலிருந்த தமிழர் கடைகளைச் சில சிங்களவர்கள் அடித்து நொறுக்கினார்கள் என்றார் திரு கிவீ. தான் வெளியே வந்து பார்த்தபோது, சிங்கள இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்தோடு அழிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டதாகவும் 'தேச சேவை'யாகவே இதனைச் செய்வதாக அந்த இளைஞர்கள் கோஷம் எழுப்பியதாகவும் சொன்னார். திரு கிவீ அவர்களிடம் மேலும் விரிவாக நான் கேள்விகளைக் கேட்காமையால் இந்தக் கதைக்கு விரிவும் ஆழமும் போதாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்களுடைய கோஷத்தில் இருந்த முரண் நகை என்ன தொனியில் வெளிப்பட்டது என்பது எனக்குத் தெரியாது.

அழித்தொழிப்பிலும் ஒரு தேசிய இலட்சியம் இருக்கிறது என்று அந்த இளைஞர்கள் எண்ணியிருப்பார்களா? இனப்படுகொலைகளை அவர்கள் புரிந்துகொண்ட முறையில் அவநம்பிக்கை சார்ந்த புத்திசாலித் தனம் இருந்திருக்குமா? அல்லது அவர்களது நடவடிக்கைகளில் ஒரு தீவிரமான உரிமை கோரல் இருந்ததா? தேசிய வேட்கையும் இனவெறியும்தான் அவர்களது களிப்புமிக்க நடவடிக்கைகளுக்கு அடிநாதமாக இருந்ததா? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை.

படம் 1: கொலைக்கு முன்பாக களிக்கூத்து.

பொறள்ளை சந்தி. அதிகாலை. 24.07.1983

இந்தப் படத்தை எடுத்தவர் சந்திரகுப்த அமரசிங்க. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' என்கிற நாளிதழில் பணியாற்றியவர் அவர். படத்தில் இருக்கும் தமிழர் கொல்லப்பட்டதை சந்திரகுப்த அமரசிங்க பின்னர் உறுதிப்படுத்தினார். கேளிக்கை உணர்வுடனேயே கொலையாளிகள் இயங்கியதாகச் சந்திரகுப்த அமரசிங்க என்னிடம் தெரிவித்தார்.

படம் 2: எரிப்பும் களிப்பும்: கொழும்பு

24-25, ஜூலை 1983

http://www.kalachuvadu.com/issue-103/page27.asp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்

எமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்வதில் பெரும்பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இதனை வரலாறு மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கை வரலாற்றை அறிய உதவும் நூல்களில் மகாவம்சம் முதன்மையானது. இந்நூலின் கூற்றுப்படி கி.மு. 06 ஆம் நூற்றாண்டின் பின்பே இங்கு மனிதக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அந்த குடியேற்றங்கள் வட இந்தியாவிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்ல, ஆரியர் என்ற இனத்தவர்களே இங்கு முதலில் குடியேறினர் என்பதும் மகாவம்சம் தரும் தகவலாகும். ஆனால், ஆரியர் வருகைக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை தொல்லியல் ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன. ஆரியர் வருகைக்கு முன்பு இங்கு வாழ்ந்தவர்களை அமானுஷர் என்று (நாகரிகமடையாதவர்) மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த அமானுஷர்கள் யார்? என்பதனை ஆய்வாளர்கள் தொல்லியல், மானிடவியல், வரலாறு ரீதியாக மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் திராவிடர் என்பதனை தற்காலத்தில் நிறுவியுள்ளனர். மகாவம்சத்தை எழுதிய மகாநாமர், தன் இனம் (சிங்களவர்), தன்மதம் (தேரவாத பௌத்தம்), தன்மொழி (சிங்களம்) என்பனவற்றின் மீது கொண்டே உயர்ந்த பற்றுக்காரணமாக, பக்கச்சார்பான கருத்தை இந்நூலின் மூலம் வெளியிட்டுள்ளார். இவை மறுக்கமுடியாத உண்மை. எனவேதான், தான் சார்ந்த இனம், மதம், மொழி என்பனவற்றை உயர்வாகக் காட்டிய அதேவேளை, தமிழர்கள் தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுத்து அவர்களைப் புறம்தள்ளி சிங்களவர்களை உயர்வாக காட்ட முற்பட்டுள்ளார். அதுமட்டுமல்ல, குறித்த காலத்தில் வாழ்ந்த ஏனைய மக்களின் மதம், மொழி, பண்பாடு தொடர்பான தகவல்களைத் திரிபுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக காட்டியுள்ளார். அதாவது, கி.மு. 247 இல் பௌத்தம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்தான் இங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகமடைந்தனர் என்ற கருத்துப்பட கூறியுள்ளார். அக்காலத்தில் காணப்பட்ட ஏனைய மதங்கள் தொடர்பான தகவல்களை மறைத்து தேரவாத பௌத்த மதம் தொடர்பான தகவல்களை முதன்மைப்படுத்தியுள்ளார். பௌத்த மதத்தில் தேரவாதம், மகாஜனம் எனும் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன. மகாவிகாரையை மையமாகக்கொண்டு வளர்க்கப்பட்ட, தான்சார்ந்த தேரவாத பௌத்த பிரிவு பற்றி சிறப்பித்து மகாநாமதேரர் குறிப்பிட்டுள்ளார். அபயகிரி விகாரையை மையப்படுத்திய மகாஜன பௌத்த பிரிவு பற்றியோ, ஏனைய மதங்கள் பற்றியோ உண்மையான தகவல்களை அவர் மறைத்து விட்டார். இதேபோன்றுதான் தமிழ் மன்னன் எல்லாளன் என்பவருக்கும் துட்டகைமுனுவுக்குமிடையில் நடைபெற்ற அரசியல் ரீதியான ஆதிக்கப் போராட்டத்தை, தமிழருக்கும் சிங்களவருக்குமிடையில் நடைபெற்ற இனப்போராட்டமாக மகாநாமதேரர் காட்டியுள்ளார். உண்மையில், கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த நாட்டில் இன, மத, மொழி அடிப்படையிலான போராட்டங்கள் இடம்பெற்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறிக்கொள்ளலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று நடைபெற்றதாகவும், அதில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் மகாவம்சம் தகவல்களைத் தருகின்றது. பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் போன்ற வரலாறு, தொல்லியல் துறைசார் ஆய்வாளர்கள், இந்த யுத்தம் இன, மத, மொழி ரீதியாக நடந்ததற்குச் சான்றுகள் இல்லை என்றும் மாறாக அரசியல் ஆதிக்கமே பிரதானமாக இருந்ததென்றும் காட்டுகின்றனர். எனவே, இனரீதியான வன்முறைகள் 1915 இன் வரை நடைபெற்றதாக தெரியவில்லை. அரசியல் ரீதியான ஆதிக்கமே காலத்துக்கு காலம் யுத்தங்கள் நடைபெறப் பிரதானமான காரணமாக இருந்தன என்பது நோக்கத்தக்கது. ஐரோப்பியர் இலங்கையை ஏறத்தாழ 450 வருடகாலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செலுத்தினர். ஆங்கிலேயர் 1796 இல் இலங்கையில் தமது ஆட்சியை நிறுவிய பின்னர் 1815இல் கண்டி உட்பட முழுநாட்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இவர்கள் அதிகாரம் செலுத்திய காலத்திலேதான், இரண்டு இனங்களுக்கிடையிலான இனவன்முறை மோதல் முதன் முதலாக நடைபெற்றது. இது முஸ்லிம், சிங்கள இனங்களுக்கிடையிலான கலவரமாகும். எனவே, முதல் இனரீதியான அடி தமிழருக்கு அல்ல, மாறாக 1915 இல் சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டதென்பது உண்மை. 1833 இல் ஆங்கிலேயரால் சட்டசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1835 இல் அரசாங்க மொழி பெயர்ப்பாளராக இருந்த சிங்களவர் ஒருவர் மற்றும் தமிழர், பேகர் இனங்களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் மூன்று உறுப்பினர்கள் இனரீதியில் நியமிக்கப்பட்டனர்.இனரீதியான நியமனங்கள் 1835 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதென்பத

நுணா அல்லது யாராவது, முதலாவது பதிவின் ஆங்கில பதிப்பு கைவசம் இருந்தால் தாருங்களேன்?

  • கருத்துக்கள உறவுகள்

:lol: மிக்க நன்றி நுணாஸ்,

நிச்சயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய ஆக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா அல்லது யாராவது, முதலாவது பதிவின் ஆங்கில பதிப்பு கைவசம் இருந்தால் தாருங்களேன்?

யாழ்களத்தில்தானே நிறைய ஆங்கிலப்புலவர்கள் உண்டு.. கேட்டால் மொழிபெயர்த்து தரமாட்டார்களா?

Exploring Confrontation: Sri Lanka--politics, Culture and History

By Michael Roberts

http://books.google.lk/books?id=wNnF6POE40...esult#PPA315,M1

Thanks for Google!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.