Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் வரலாறு நூல் வெளியீட்டு விழா

Featured Replies

நோர்வே - இலங்கையில் தமிழர் நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர் அனித்தா பிரதாப் ஆற்றிய உரை:

http://www.tamilskynews.com/index.php?opti...-09-15-12-46-18

புலம்பெயர் வாழ் இளையோர் சமுதாயம் துடிப்புடன் செயற்படுகிறது: எழுத்தாளர் முருகர் குணசிங்கம் பெருமிதம்

[புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 06:52 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]

புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் சமுதாயம் தமிழ்த் தேசியச் சிந்தனையுடன் துடிப்புடன் செயற்பட்டு வருகிறது என்று "இலங்கையில் தமிழர்- ஒரு முழுமையான வரலாறு" என்ற நூலின் ஆசிரியரான கலாநிதி முருகர் குணசிங்கம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழரின் முழுமையான வரலாற்றை ஆதாரத்துடன் விளக்கும் இலங்கையில் தமிழர்: ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 தொடக்கம் கி.பி. 2000 வரையிலான தமிழர் வரலாற்றின் முழுமையான ஆவணம்) என்ற நூல் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

சுவிசில் நடைபெற்ற அந் நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த நூலாசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம், சுவிசிலிருந்து வெளிவரும் மாதமிருமுறை இதழான "நிலவரம்" ஏட்டுக்கு அளித்துள்ள நேர்காணல்:

ஈழத்துப் புத்திஜீவிகள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் அநேகர் பணம் சம்பாதிப்பது ஒன்றே தமது குறிக்கோள் என்று வாழ்ந்து வருகையில், ஈழத் தமிர்களின் வரலாறை பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அனைத்துலக சமூகம் அறியும்படி செய்யவேண்டும் என்ற முயற்சியினை மேற்கொள்வதற்கு உங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தது எது?

மிகவும் முக்கியமான ஒரு தூண்டுகோல் எதுவென்றால், நான் ஒரு அரசியல் வரலாற்றுத்துறை மாணவனாக கடந்த 35 வருடமாக இருந்து வருகின்றேன். இலங்கைத் தமிழருடைய வரலாறு அந்த மண்ணிலே இதுவரை பூரணமாக எழுதப்படவில்லை, அந்த மண்ணில் இதுவரை எழுதப்பட்ட வரலாறு சிங்கள தேசத்தினுடைய வரலாறாகவே எழுதப்பட்டிருக்கிறது என்ற சிந்தனை என்னை நித்தம் நித்தம் வாட்டிய ஒரு நிகழ்வாகவே இருந்தது.

அதேவேளையில், பல நாடுகளுக்கும் செல்கின்ற வாய்ப்பு, பல்கலைக்கழகங்களிலே கல்வித்துறை சார்ந்த, தொழில் சார்ந்த வேலை வாய்ப்பு, இவ்வாறான காரணங்களினால் பல சந்தர்ப்பங்களில் பலர் என்னிடம் கேட்பதுண்டு. இலங்கைத் தமிழர்களுடைய ஒரு முழுமையான வரலாற்றை அறிய எங்களுக்கு தரமான புலமை சார்ந்த நூல்கள் எங்களிடம் இல்லையே எனக் கூறி இருந்தார்கள். அது உண்மையென்பது எனக்குத் தெரியும்.

எனவே, இவ்வாறான தொடர்ச்சியாக என்னிடம் கேட்கப்பட்ட்ட கேள்விகளும், தொடர்ச்சியாக என் மனதிலே இருந்து வந்த அந்த வெறுமையின் தொடர்ச்சிதான் இந்த நூலை எழுதுவதற்கான மிகவும் அடிப்படையான ஒரு உந்துசக்தி என்று கூறுவது சரியென நான் நினைக்கிறேன்.

தொடர்ந்து ஈழத் தமிழர்களுடைய வரலாறு தொடர்பில் மூன்று நூல்களை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். ஈழத் தமிழினத்தைப் பொறுத்தவரையில் அது போற்றத்தக்க முயற்சி எனத் தமிழர்கள் கருதுகின்றார்கள். இந்த மூன்று நூல்களையும் ஆக்குவது உங்களுக்கு இலகுவாக இருந்ததா? அல்லது கடினமாக இருந்ததென்றால் இதற்காக நீங்கள் செய்த தியாகங்கள் யாவை?

இது ஒரு சோதனையான கேள்வியாகத்தான் இருக்கிறது. காரணம் என்னவெனில், ஒரு பிரச்சினையை ஆய்வு செய்து அதனைச் சரியான முறையில் ஒரு ஆய்வு நூலாக வெளிவிடுவதென்பது எத்துணை கடினம் என்பது அத்துறை சார்ந்தவர்களுக்கே தெரியும். அதேவேளையில், அதற்கு எவ்வளவு நேரமும், பணமும், புலமையும் தேவையென்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

நேரம் என்பது மிகவும் தீவிர பிரச்சினை. முதலிலே இலங்கைத் தேசியவாதம் பற்றி எழுதியபோது மூன்றரை வருடங்கள் தொடர்ச்சியாக எனக்கு ஒரு புலமைப்பரிசில் கிடைத்தது. முழுமையாக என்னை ஆய்வில் ஈடுபடுத்தி எனது கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக அது செய்யப்பட்டது. எனவே, அதில் நேரம் எனக்கு ஒதுக்கக் கூடியதாக இருந்தது. பணத்தையும் பல்கலைக்கழகம் தந்ததன் விளைவாக நான் அதனைச் செய்யக்கூடியதாக இருந்தது.

அடுத்தது புலமை என்பது, எனது சிறிய வயதில் பாடசாலைக் காலங்களில் இருந்தே நல்ல ஆசிரியர்களிடமும், நல்ல பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடமும் வரலாற்றையும் அரசியலையும் கற்கின்ற வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

குறிப்பாக ஆரம்ப காலங்களில் திறமான ஆசிரியர்கள் வாய்த்தார்கள். பின்னர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களான கைலாசபதி, சிவத்தம்பி, சின்னச்சாமி போன்றோரிடம் கற்கின்ற வாய்ப்புக் கிட்டியது.

தொடர்ந்து மேலைத் தேய நாடுகளில் பேராசிரியர் வில்சன், பேராசிரியர் அரசரட்ணம் பேராசிரியர் ஜவ்பர்டி, பேராசிரியர் பீற்றர் றீவ்ஸ், போன்றோரிடம் கற்பதற்குக் கிட்டிய வாய்ப்புக்கள் காரணமாக அந்தப் புலமையும் என்னிடம் வந்து சேர்ந்தது. எனவே அந்த வகையில் அது வெற்றியாக அமைந்தது.

அடுத்து வெளிவந்த இலங்கைத் தமிழர் வரலாறு அடிப்படை மூலங்கள் - உலகளாவிய தேடல் என்ற புத்தகம், எனது சொந்த விருப்பத்தின் பேரில் பல்கலைக்கழகத்தில் ஒரு வருட விடுமுறையை எடுத்துக்கொண்டு உலகம் முழுவதும் சென்று முழுநேரமாக ஈழுபட்டு அந்த ஆய்வினைச் செய்து முடிக்கக் கூடியதாக இருந்தது.

பல்கலைக்கழகத்தில் தொழில் செய்ததன் விளைவாக எனக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுடனான விடுமுறை காரணமாக எனக்கு அப்போது பணக்கஷ்டமும் இருக்கவில்லை. என்னுடைய விடுமுறைக் காலம் முழுவதையும் இதற்கெனச் செலவிட்டேன். அது நூலக முகாமைத்துவம் சார்ந்த என்னுடைய துறைசார் ஆய்வு.

உலகின் பல்வேறுபட்ட நாடுகளுக்கும் இலகுவாகச் சென்று அந்த ஆவணக் காப்பகங்களில் உள்ள தமிழர் சம்பந்தமான ஆவணங்களை இலகுவாக அடையாளம் கண்டு அவற்றை எடுத்துத்தொகுத்து அந்த நூலை எழுதுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

ஆனால் அந்த நூலை எழுதி முடித்தவுடன் அதை வெளியிட என்னிடம் பணம் இருக்கவில்லை. பெருந்தொகைப் பணம் தேவைப்பட்டது. லண்டனில் உள்ள ஒரு நண்பர் அதற்குத் தேவையான சகல பணத்தையும் தந்து உதவினார். அவருக்கு நானும் தமிழ்த் தேசமும் நிச்சயமாக நன்றிக் கடன்பட்டுள்ளோம். எனவே, அந்த நூலையும் நான் வெளியிடக்கூடியதாக இருந்தது.

மூன்றாவதாக வந்துள்ள "இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு" எனும் நூலுக்கு நிறையக் காலமும் அர்ப்பணிப்பும், பணமும், புலமையும் தேவைப்படும் என்பது அனைவருக்கும் இலகுவில் புரியும்.

ஏனெனில், இது தமிழர்களுடைய ஒரு பூரணமான வரலாறு. 2,300 வருட கால வரலாற்றை எழுதுவது என்பது சாதாரணமான விடயமல்ல. தனியே வரலாறு மட்டுமல்ல. அவர்களுடைய சமயம், கலாச்சாரம் பாரம்பரியம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என அத்தனை வரலாறுகளுமே கால வரன்முறைப்படி எழுதப்பட்டிருகின்றது. இது ஒரு முக்கியமான விடயம்.

இரண்டாவது அதற்கான ஆதாரங்களைத் தேடி உலக நாடுகள் பூராவும் சென்று, அவற்றைத் தேடிப்பெற்று பல ஆயிரக்கணக்கான டொலர்களை அது விழுங்கிய சம்பவங்கள் - அதற்கான போக்குவரத்துச் செலவுகள், இதர செலவுகள் - இதற்காக வேலை செய்தோர் பல ஆயிரக்கணக்கில் - நான் நினைக்கின்றேன். பெருந்தொகையான பணம் அதற்கு செலவிடப்பட்டு அந்த ஆவணங்கள் பெறப்பட்டன. பின்னர் அந்த ஆவணங்கள் போர்த்துக்கேச, டொச்சு மொழிகளில் இருந்து துறை சார்ந்தவர்களைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டு அந்த ஆய்வு இடம்பெற்றது.

இவைகள் அனைத்தையும் விட அந்த ஆய்வு மட்டும் நடைபெற்ற காலம் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள். 35, 36 மாதங்கள் வெறுமனே அந்த ஆய்வு மட்டும் செய்யப்பட்ட காலம். பிறகு செய்யப்பட்ட ஆய்வை ஆங்கிலத்திலும் தமிழிலும் தட்டச்சு செய்து ஒரே காலகட்டத்தில் வெளியிடுவதென்பது இலகுவான காரியமல்ல. அதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது. நேரம் தேவைப்பட்டது. இவை எல்லாவற்றையும் தாண்டி அதை நாம் உரியமுறையிலே வெளியிடுவதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது.

இரு மொழிகளில், தரமான கடதாசியில் தரமான ஒரு வடிவமைப்பைச் செய்ய நிறையப் பணம் தேவைப்பட்டது. இதற்கெல்லாம் எங்களுடைய மக்கள்தான் பக்கபலமாக நின்றார்கள். எங்களுடைய மக்கள் செய்த அர்ப்பணிப்பில் இவ்வாறான ஒரு பாரிய பணியைச் செய்ய முடிந்தது. அது பணம் சம்பந்தமான விடயம்.

மற்றையது நேரம் சம்பந்தமானது. நான் 12 வருடங்களாக அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் முழுநேர ஊழியராக வேலை செய்தேன். அந்தப் பதவியிலிருந்து விலகிவிட்டு முழுமையாக இப்பணியில் என்னை அர்ப்பணிக்க வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். இது காலத்தின் தேவை. காலத்தின் கட்டாயம். நிச்சயமாக தமிழ் மக்களுக்கும், தமிழ்த் தேசியத்துக்கும், அவர்களுடைய அடையாளத்திற்கும், அவர்களுடைய தேசிய விடுதலைக்கும் மிகவும் அவசியமானது என்ற காரணத்தினால் எனது உத்தியோகத்தைத் துறந்து, இந்த நூலை நல்லமுறையில் எழுதி முடிக்க தேவையான நேரத்தை நான் பெற்றுக்கொண்டேன்.

புலமையும் ஏற்கனவே நான் கூறியதைப் போன்று நீண்டகால அனுபவமும் என்னிடம் இருந்தது. கூடவே என்னுடைய பேராசிரியரான க.இந்திரபாலா எனக்குப் பக்கபலமாக எந்தநேரமும் இருந்து கொண்டார். நான் கேட்கின்ற சந்தேகங்களையெல்லாம் அவர் எனக்குத் தெளிவுபடுத்துவார். அதேபோன்று இலங்கையில் உள்ள பேராசிரியர் பத்மநாதன் அவர்களும் கேட்கும் போதல்லாம் எனது சந்தேகங்களைப் போக்குவார்.

இவ்வாறெல்லாம் பல முயற்சிகளின் விளைவாக இந்த ஆய்வைச் செய்து, பூரணமாக முடித்து இன்று அதை ஐரோப்பிய நாடொன்றிலே மிகவும் அழகாக நல்ல வடிவமைப்பில் அச்சிட்டு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இந்த மூன்று நூல்களையும் வெளியிடுவதற்கான தியாகத்தையும் சந்தர்ப்பத்தையும் என்னால் செய்ய முடிந்தது.

இயல்பான உந்துதல் காரணமாகவே ஆய்வை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானதாக நீங்கள் கூறியிருந்தீரக்ள். ஆய்வுகளைச் செய்பவர்கள் ஏதாவது ஒரு உந்துதல் காரணமாகவே ஆய்வுகளைச் செய்கிறார்கள். அல்லது இதைப்பற்றி ஆய்வு செய்யுங்கள் என யாராவது கூறியிருக்கலாம். அதாவது, எதன் மூலமோ உருவாகும் சிந்தனையே இதற்கு வித்திடுகிறது என நான் படித்திருக்கிறேன். தங்களுக்கு அது இயல்பாகவே இந்திருக்கின்றது.

ஏற்கனவே நான் குறிப்பிட்டது போன்று எம்மத்தியில் உள்ள புத்திஜீவிகள் பலர் இதுபற்றி அதிக அக்கறை அற்றவர்களாக இருக்கின்றார்கள். ஆனாலும் கூட, தங்களைப் பொறுத்தவரை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில புத்திஜீவிகள் தங்களுக்கு உதவியும் இருக்கிறார்கள் என அறிய முடிகின்றது. ஆனால், இதைப் போன்று பலமடங்கு புத்திஜீவிகள் வெளியிலே நிற்கிறார்கள். உங்களது ஆய்வு அத்தகையோருக்கு ஒரு முன்மாதிரியாக, உந்துதலாக அமைந்து அவர்களும் இந்தத் துறையிலே அல்லது வேறு ஏதாவது துறையிலே தமிழ்த் தேசியத்துக்கு அவசியமான வேறு ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என நினைக்கின்றீர்களா? இது விடயமாக புத்திஜீவிகள் யாராவது உங்களோடு தொடர்புகொண்டு கதைத்தார்களா?

நிச்சயமாக அவ்வாறான ஒரு தூண்டுதலை எனது ஆய்வு ஏற்படுத்தும் என திடமாக நம்பலாம். காரணம் என்னவெனில், சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஒரு தேசத்தினுடைய முழு வரலாற்றையும் பார்க்கும்போது ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் தாம் அந்த வரலாற்றை அப்படியே பார்த்து பல்கலைக்கழக மட்டத்தில் குழுவாகச் சேர்ந்து இவ்வாறான நூல்களை எழுதுவது ஒரு தேசத்தின் வரலாற்றை எழுதுவது வழக்கம். அது இந்திய வரலாறாக இருக்கலாம். ஐரோப்பிய வரலாறாக இருக்கலாம். இலங்கையில் சிங்கவர்களுடைய வரலாறாக இருக்கலாம். சேர்ந்து ஒருமித்து பல்வேறு துறை சார்ந்தவர்களுடைய புலமையின் அடிப்படையிலே இதை எழுதுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் அரசியல் வரலாற்று மாணவன். அந்த வகையில் தமிழர்களுடைய சமயத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். தமிழர்களுடைய மொழியைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவர்களுடைய சமூகக் கட்டுமானங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவர்களுடைய கலாச்சாரம், பாரம்பரிய பண்பாடுகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவர்களுடைய பொருளாதாரங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். அரசியலை தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன். எனவே, பல்வேறுபட்ட விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன.

அத்தனை துறைசார்ந்த புலமைகளும் ஒருவருக்கு இருப்பதற்கு நியாயமில்லை. கல்வித்துறையைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் தங்களுடைய சிறப்புத்துறையிலேதான் ஆழமாக ஈடுபடுவதுண்டு. அகலமாகப் போவது என்பது கல்வித்துறையில் இயலாத காரியம்.

எனவே, அந்த வகையிலே இது ஒரு முதல் முயற்சி, முன்னோடி முயற்சி எனக் கூறமுடியும். இதில் நான் ஓடக் கூடியளவு ஓடியிருக்கிறேன். அஞ்சலோட்டத்திலே ஆரம்பத்தில் தொடங்குபவர் எவ்வளவு தூரம் ஓடி அடுத்து ஓடுபவரிடம் வேகமாகத் தடியைச் சேர்ப்பிக்கிறாரோ அதற்கேற்ப மற்றவர் தொடர்ந்து ஓடவேண்டும்? இறுதியாக உள்ளவர் எப்படி ஓடி அஞ்சலோட்டத்தில் வெல்ல வேண்டும், ஓடி முடிக்க வெண்டும் என்ற நியதியைப் போல இந்த அஞ்சலோட்டத்தில் நான் முடியுமானவரை நேர்மையாக, உண்மையாக ஓடியிருக்கின்றேன். நேரக்கணிப்புடன் ஓடியிருக்கிறேன்.

எனவே, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற இளைஞர்கள், யுவதிகள் அல்லது கல்விமான்கள் மேலும் இந்த சகல விடயங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான வரலாற்று நூலை மேலும் சிறப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு இன்னும் பல்வேறுபட்ட விடயங்களையும் உள்ளடக்கி ஒரு தரமான படைப்பைப் படைக்கலாம்.

அல்லது இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அல்லது மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்க் கல்விமான்கள் அனைவரும் இணைந்து இந்த ஆய்வை அடிப்படையாக வைத்துக்கொண்டு மேலும் தங்களுடைய திறமைகளையும் புலமைகளையும் அதற்குள் செலுத்தி மேலும் இந்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்காலத்தில் நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

மேலும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற இளம் சமுதாயத்தை தொல்பொருள் இயல் சார்ந்து, மானுடவியல் சார்ந்து மொழியியல் சார்ந்து சமூகவியல் சார்ந்து அரசியல் விஞ்ஞானம் சார்ந்து கலாச்சாரம் சம்பந்தமான, பொருளாதாரம் சம்பந்தமான துறைகள் சார்ந்து இவர்களை ஊக்கப்படுத்தலாம். அவ்வாறான ஆய்வுகளை தாங்கள் தங்கள் தேசத்தின் பொருட்டுச் செய்ய வேண்டும்.

அந்த வகையில் தற்போது பார்க்கும் போது நான் பல்வேறு இளைஞர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே இந்தத் துறைகளில் தங்களுடைய கால்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் இந்த சமூகவியல், ஊடகத்துறை, உளவியல் போன்ற பல விடயங்களைப் பயில்வதைக் காண முடிகின்றது. சிலர் வரலாறைக் கற்கிறார்கள். அவ்வாறானோருக்கு நிச்சயமாக இதுவொரு உந்துதலாக அமையும்.

மேலும் இது பலரை ஊக்குவிக்கப் போகின்றது என்பதுவும் எனக்குத் தெரியும். புலம்பெயர்ந்த நாடுகளில் நான் இப்போது 17 நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றேன். அந்த நாடுகளில் எல்லாம் இந்த இளைஞர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு அதற்கான ஒழுங்கமைப்பு எல்லாம் செய்யப்பட்டிருக்கிறன. நிச்சயமாக அவர்களைச் சந்திக்கின்ற போது ஏற்கனவே நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது அவ்வாறான ஆர்வங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றது. மேலும் இந்த நூல் வெளியீடும், நூல் அறிமுகமும் இது பற்றிய கலந்துரையாடல்களும் நிச்சயமாக அவர்களை இந்த முயற்சியில் ஊக்குவிக்கும் என நான் திடமாக நம்புகின்றேன்.

நல்லது. ஆற்றல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமானது. உங்களுடைய ஆற்றல் இந்த நூலைப் படைப்பதில் முழுமையான நேர்த்தியுடன் வெளிப்பட்டிருக்கின்றது. இந்த நூலின் அறுவடை என்பது உண்மையில் உங்களுடைய ஆய்வை நீங்கள் செய்து முடித்துவிட்ட திருப்தியா? அல்லது தமிழ்த் தேசியத்தின் வரலாற்றை தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி விட்டோம் என்ற திருப்தியா? அல்லது இதற்கும் அப்பால் ஏதாவது எதிர்பார்ப்பு இருக்கிறதா? அதாவது இந்நூலில் சொல்லப்படுகின்ற செய்தி எங்கெங்கே சென்றடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதாவது இருக்கின்றதா? அவ்வாறாயின் அது என்ன? அதனை நிறைவேற்றக் கூடியவர்கள் யார்?

இது எனக்கு மிகவும் விருப்பமான கேள்வி. நான் எதிர்பார்த்த ஒரு கேள்வியும் கூட. முக்கியமாக இவ்வாறானதொரு நூல் முழுமையான வரலாறு தமிழர்களைப் பற்றி எழுதப்பட வேண்டும் என்பது அடிப்படையில் அமைந்த ஒரு ஆசையும், ஒரு வேகமும். அது இப்போது நிறைவேறியிருக்கின்றது. ஆனால், அதனுடைய தாற்பரியம், பங்களிப்பு, அதனுடைய வெற்றி என்பன இனிமேல் தான் எட்டப்பட வேண்டும்.

அதாவது முக்கியமாக இந்நூல் பல்வேறு மட்டத்தில் குறிப்பாகத் தமிழர்கள் மத்தியிலே முக்கியமாகச் சென்றடைய வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற இந்தியாவில் வாழ்கின்ற தமிழர்கள் எல்லோரிடமும் இந்த நூல் சென்றடைந்து அவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட வேண்டும்.

ஈழத் தமிழர்கள் அந்த மண்ணின் சொந்தக்காரர்கள். ஈழத் தமிழர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் அந்த மண்ணில் ஆரம்ப காலத்தில் இருந்து வாழ்ந்து வருகின்ற ஒரு இனம். தனியான இனம், தனியான மொழி, கலாசாரம், பண்பாட்டைக் கொண்ட இனம். தற்போது அவர்கள் கடந்த 500 வருடங்களாக அந்த நாட்டில் அடிமைகளாக இருக்கிறார்கள்.

எனவே நாங்கள் இந்த அடிமை நிலையில் இருக்க வேண்டிய எந்தவித யதார்த்தமும் இல்லை. நாங்கள் போராடி நிச்சயமாக தேசிய விடுதலையை வெற்றிபெற வேண்டும் என்ற ஒட்டுமொத்தமான ஒரு முனைப்பு தமிழர் மத்தியில் மிகவும் ஆக்கிரோசமாக வரவேண்டும். அது தான் இந்த நூலின் முதலாவது வெற்றி.

அடுத்ததாக இந்த நூல் எங்களுடைய சிங்கள தேசத்தினைச் சென்றடைய வேண்டும். ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளபடியால் அங்கு நிச்சயமாக ஆங்கில மொழி தெரிந்தவர்களிடம் சென்றடையும். அந்த நூல் சிங்கள மொழியிலும் வெளிவர வேண்டியது அவசியம். நிச்சயமாக அது சிங்கள மொழியில் வெளிவர வேண்டும். நாங்கள் தமிழர்கள் மாத்திரம் எம்முடைய பிரச்சினையை விளங்கிக் கொண்டால் போதாது. சிங்களவர்கள் முக்கியமாக விளங்கிக் கொள்ள வேண்டும். சிங்கள அரசியல் தலைவர்களும், சிங்களக் கல்விமான்களும், சிங்களத் தேசியவாதிகளும், சிங்கள மக்களும், சிங்கள மாணவர்களும் நிச்சயமாக இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே, சிங்கள மொழியில் அந்த நூல் வெளிவருவதற்கான முனைப்பான வேலைப்பாடுகள் செய்யப்பட வேண்டும். அது மிகவும் முக்கியமானது.

அடுத்ததாக மேலைத்தேய நாடுகளில் குறிப்பாக போர்த்துக்கீச மொழியிலும் டொச்சு மொழியிலும் இந்த நூல் நிச்சயமாக வெளிவர வேண்டும். ஏனெனில் எங்களுடைய தேசியக்கொடியை இறக்கி எங்களை அந்த நாட்டில் அடிமையாக ஆக்கியவர்கள். இந்த போர்த்துக்கீசர்களும் ஒல்லாந்தர்களுமே.

எனவே, அந்த மொழியிலே நிச்சயமாக இது வெளிவந்து அந்தத் தேசங்களில் வாழும் மக்கள், இளைய சமுதாயம் தமது மூதாதையர் செய்த அநியாயங்களை அட்டூழியங்களை உணர்ந்து அதன் விளைவாக எமது தேசிய விடுதலைக்காக தங்களுடைய ஆதரவை வழங்குவார்கள் என்பது அடுத்த முக்கியமான ஒரு நிகழ்வாக அமைய வேண்டும். இந்த நூலின் வெற்றியில் பெரிதும் அந்த நிகழ்வு தங்கியிருக்கிறது.

ஆங்கிலத்தில் ஏற்கனவே இதனை நாங்கள் பிரசுரித்து விட்டோம் நிச்சயமாக அது பிரித்தானிய நாட்டில் வாழ்கின்ற அத்தனை மனிதர்களையும் சென்றடைய வேண்டும். முக்கியமாக பல்கலைக்கழகங்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், படித்தவர்கள் அனைவரிடமும் இந்த நூல் சென்று அவர்களுடைய மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும். தாங்கள் அந்த நாட்டில் தமிழர்களுக்கு செய்த அநீதியைப் பற்றிச் சிந்தித்து தங்களால் செய்யக்கூடிய சில நன்மைகளைச் செய்து அந்த மக்களை அடக்குமுறையில் இருந்து விடுவித்து அந்த மக்களை ஒரு சுதந்திர மக்களாகவும் அந்த நாட்டை ஒரு சுதந்திர நாடாகவும் அங்கீகரிக்க வேண்டும். இந்த விடயத்தில் ஆக்கமும் ஊக்கமுமான அவர்களுடைய பங்களிப்பைக் காட்ட வேண்டும் என்பது அடுத்த முக்கியமான வெற்றியாக இருக்கிறது.

அதேபோன்று உலகத்தில் பிரெஞ்சு மொழி, ஆங்கிலத்தைப் போன்று பரவலாகப் பேசப்படுகின்றது. அந்த மொழியிலும் இந்நூல் வெளிவர வேண்டும். பிரெஞ்சு நாட்டில் பிரெஞ்சு மொழி பேசுகின்றோர் எல்லோரும் அதைப்படிக்க வேண்டும். அதேபோன்று யேர்மன் மொழியில் முடியுமானவரை இந்த நூல் வெளிவந்து அனைத்துலக மட்டத்தில் தமிழர்களுடைய அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமை பாதிக்கப்பட்ட விடயம் சென்றடைய வேண்டும். அதற்கு நீதியும், நியாயமும், தீர்ப்பும், அனைத்துலக அங்கீகாரமும் இந்த தமிழ் தேசியத்துக்குக் கிடைத்து தமிழ்த் தேசியம் வெற்றியடைந்து அந்த மக்கள் அந்த மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும். அப்போதுதான் இந்த நூலின் வெற்றி முழுமையடையும் என்பது எனது அசைக்க முடியதாத நம்பிக்கையாக இருக்கிறது.

தமிழர்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது தமிழர்களிலே பண்டைய காலம் தொட்டு திறமைசாலிகள் பலர் இருந்து வந்திருக்கிறார்கள். பல்வேறு துறைகளிலும் அவர்கள் பிரகாசித்து வந்திருக்கின்றார்கள். இருப்பினும். காலப்போக்கில் அவர்கள் ஒரு மாபெரும் தவறைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென்று வாரிசுகளை உருவாக்கத் தவறிவிட்டார்கள்.

அண்மைக் காலங்களிலும் கூட மிகச் சிறந்த மருத்துவர்களாக இருந்தவர்கள் மிகச் சிறந்த சோதிடர்களாக இருந்தவர்கள் தங்களுடைய அந்தத் திறமையை தங்களுடைய சந்திக்கு வழங்காமல் சென்றுவிட்ட ஒரு பாரம்பரியம் தமிழர் மத்தியிலே இருந்து வந்திருப்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். அந்த வகையில் நீங்கள் இப்போது ஒரு சிறந்த ஆய்வாளராக அறியப்பட்டிருக்கின்றீர்கள். நீங்கள் இந்த ஆய்வுத்துறையில் உங்களுக்கென்று வாரிசுகள் அல்லது சீடர்களை வைத்திருக்கின்றீர்களா? அல்லது அதற்கு முயன்றிருக்கின்றீர்களா? அதாவது அடுத்த தலைமுறையும் இந்தத் துறையிலே ஈடுபட வேண்டுமென ஏதாவது முயற்சி செய்திருக்கின்றீர்களா?

இதில் ஒரு முக்கியமான விடயத்தை விளங்கிய பின்னர் தான் நாங்கள் இந்தக் கேள்விக்கு விடைகாண முயல வேண்டும்.

இலங்கையில் கடந்த 30 வருடங்களாக எத்தனையோ துறைசார்ந்த கல்விமான்கள் தங்களுடைய துறைசார்ந்த வாரிசுகளை உருவாக்கவில்லை என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டாக இருக்கின்றது. உண்மையில் அதற்கு முந்திய காலங்களை நீங்கள் பார்த்தீர்களானால், ஒரு வரலாற்றுப் பேராசிரியர் இருப்பார். அதற்குப் பின்னால் திறமான இன்னொரு வரலாற்று மாணவர் வந்து கொண்டிருப்பார். ஒரு அரசியல் பேராசிரியர் இருப்பார். அவருக்குப் பிறகு திறமான இன்னொரு அரசியல் மாணவர் வந்து கொண்டிருப்பார்.

உதாரணமாக பேராசிரியர் அரசரட்ணம், பேராசிரியர் கணபதிப்பிள்ளை போன்றோர் தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்களாக இருந்ததன் விளைவாக பேராசிரியர் இந்திரபாலா பின்னர் பேராசிரியர் பத்மநாதன், பேராசிரியர் குணசிங்கம், பேராசிரியர் ரகுபதி போன்றோர் வந்தார்கள். அப்படியான ஒரு பாரம்பரியத்தை நாம் காண முடிகின்றது.

அதேபோன்று தமிழ்த்துறையை எடுக்கலாம், மொழியியல் துறையை எடுக்கலாம். கலைத்துறையை எடுக்கலாம். விஞ்ஞானத்துறையை எடுக்கலாம். மருத்துவத்துறையை எடுக்கலாம். எந்தத்துறையை எடுத்தாலும் அவர்கள் தங்களுடைய வாரிசுகளை விட்டுச் சென்றார்கள்.

ஆனால் கடந்த 30 வருடங்களாக அது இடம்பெறவில்லை. ஏனென்று பார்த்தோமானால் உண்மையான அடிப்படைக் காரணம் முதன் முதல் இலங்கையில் நடந்த ஒரு பாரிய பிரச்சினை. அதாவது உயர்கல்வி அந்தந்த மொழிகளில் கற்பிக்கப்பட்ட ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆங்கிலத்தில் அப் பாடங்களைக் கற்கும் ஒருமுறை அல்லது ஆங்கிலம் ஒரு கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்

நோர்வேயில் "இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு" நூல் வெளியீடு

[புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 07:12 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்]

கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு" நூல் அறிமுகமும் வெளியீடும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.09.08) நடைபெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட மண்டபத்தில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் இருநூறுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

மங்கள விளக்கேற்றல், அகவணக்கத்துடன் தொடங்கிய நிகழ்வுக்கு ஊடகவியலாளர் ஜெயசிறி தலைமை தாங்கினார்.

நிகழ்வில் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனதுரையில், "தமிழ் மக்களின் இன்றைய நிலைமையையிட்டு ஆழ்ந்த கவலை கொள்வதாகத் தெரிவித்த அவர், கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் மக்கள் எனது இதயத்திற்கு நெருக்கமானவர்களாக உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

1984 ஆம் ஆண்டு இந்தியாவின் "சண்டே" வார இதழுக்காக தமிழீழத் தேசியத் தலைவரை நேர்காணல் எடுத்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

முருகர் குணசிங்கம் எழுதியுள்ள இந்நூல் இன்றைய காலகட்டத்தில் மிக இன்றியமையாத காலத்தேவை என்று தெரிவித்த அவர், வரலாற்று அறிவு என்பது அனைவருக்கும் மிகமிக அவசியமானது என சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தை அறிந்திருக்காத வரை ஒருவனால் நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியாது. நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியாதவனால் எதிர்காலத்தை உரியமுறையில் திட்டமிட முடியாது. எனவே வரலாற்று அறிவு இன்றியமையாத தேவைக்குரியது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிரான்சிலிருந்து வருகை தந்த எழுத்தாளரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் நூல் பற்றிய மதிப்பீட்டுரையை நிகழ்த்தினார். ரூபன் சிவராஜா வெளியீட்டுரை நிகழ்த்தினார். நூலாசிரியர் முருகர் குணசிங்கத்தின் நீண்ட சிறப்புரையும் இடம்பெற்றது.

நூலாசிரியரின் சிறப்புரையை அடுத்து நூல் வெளியீடு நடைபெற்றது.

முதற்பிரதியை நூலாசிரியர் முருகர் குணசிங்கம் வெளியிட்டு வைக்க, அருட்தந்தை இன்பநாதன் பெற்றுக்கொண்டார்.

அடுத்து சிறப்புப் பிரதிகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சபையோர் நூல்களைப் பெற்றதோடு நிகழ்வு நிறைவடைந்தது.

தொடர்ந்து வாசிக்க

என்ன மொழியில் எழுதப்பட்டது?

யாருக்காக எழுதப் பட்டது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.