3I/ATLAS: பூமியை நெருங்கும் வால்மீன் - இதை வேற்றுகிரக விண்கலம் எனப் பலரும் சந்தேகித்தது ஏன்?
பட மூலாதாரம்,NASA, ESA, David Jewitt (UCLA)
படக்குறிப்பு,நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று படம்பிடித்த 3ஐ/அட்லஸ் வால்மீனின் புகைப்படம்
கட்டுரை தகவல்
முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
பிபிசி தமிழுக்காக
6 மணி நேரங்களுக்கு முன்னர்
"டிசம்பர் மாதத்தில் வால்மீன் வந்து பூமியின் மீது மோதி அழிவு ஏற்படப் போகிறது" என்று கவலைப்பட்டுக்கொண்டே கேட்டார் எனக்கு அழைத்த ஒரு சிறுமி.
அதேபோல, ஒரு பதின்ம வயது மாணவர், "வேற்றுகிரகவாசிகள் வேவு பார்க்க வருகிறார்கள்," என்று உறுதிபடப் பேசினார்.
வாராது வந்த மாமணியைப் போல, சூரிய குடும்பத்திற்குள் திடீரென வந்துள்ள 3I/Atlas என்று அழைக்கப்படும் வால்மீன், பல புதிரான தன்மைகள் காரணமாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வால்மீன் ஏன் புதிராக இருக்கிறது? இதுகுறித்துப் பல்வேறு ஊகங்கள் கிளம்புவதற்கும் வானியலாளர்கள் இதைக் கூர்ந்து கவனிப்பதற்கும் என்ன காரணம்? இங்கு விரிவாகக் காண்போம்.
இந்திய நேரப்படி, வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணிக்கு, '3ஐ/அட்லஸ்' எனும் ஒரு மர்ம வால்மீன் நமது பால்வெளியின் எங்கோ தொலைதூரத்தில் இருந்து வந்து பூமியின் அருகே கடந்து செல்லும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவைப் போல சுமார் இரு மடங்கு தொலைவான, 27 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் இது கடந்து செல்வதால் வெறும் கண்களுக்குப் புலப்படாது.
டிசம்பர் 20 அதிகாலையில், சூரிய உதயத்திற்கு முன்பு, வடகிழக்குத் திசையில் சிம்ம ராசி பகுதியில் உள்ள ரெகுலஸ் எனும் பிரகாசமான "மகம்" நட்சத்திரத்தின் அருகே இது காணப்படும்.
இதன் ஒளி முழு நிலவைவிட 40 கோடி மடங்கு மங்கலாக இருப்பதால், இதைக் காண குறைந்தபட்சம் 30 சென்டிமீட்டர் குழிலென்ஸ் கொண்ட தொலைநோக்கி தேவைப்படும்.
3I/ATLAS: சூரிய குடும்பத்திற்கு வந்துள்ள புதிய விருந்தாளி
கடந்த ஜூலை 2 ஆம் தேதி இரவு 21:31 யுடிசி நேரத்தில் (இந்திய நேரம் ஜூலை 3 அதிகாலை 3:01) வெளியிடப்பட்ட சிறுகோள் மின்னணு சுற்றறிக்கை(M.P.E.C. 2025-N12) உலக வானியலாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உலகெங்கும் உள்ள ஐந்து தொலைநோக்கி வலைப்பின்னல் அமைப்பான 'ATLAS' தானியங்கித் தொலைநோக்கி அமைப்பு, பூமிக்கு அருகில் வரும் ஒரு புதிய பொருளைக் கண்டறிந்தது.
அதன் காரணமாகவே வானியலாளர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வான்பொருளாக அது மாறியது. மறுபுறம் சமூக ஊடகங்களில், பல்வேறு கவலைகளும் புனைவுகளும் பரவத் தொடங்கின.
சரி, இதற்கெல்லாம் காரணமான அந்த மூன்று புதிர்கள் என்ன?
அதில் முதலாவது, 3ஐ/அட்லஸ் வால்மீனின் பாதை.
பூமியை எடுத்துக்கொண்டால் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. மேலும் சில வான்பொருட்கள் வட்டமான பாதையில் சுற்றலாம். அதுவே வெகுதொலைவில் இருந்து வரக்கூடிய வால்மீன் போன்ற வான்பொருட்கள் பரவளையத்தில்(Parabolic) சுற்றுகின்றன.
ஆனால் இந்த வால்மீனின் பாதை, சூரியனுக்கு அருகே கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டைப் போல அமைந்த அதிபரவளையப் பாதையாக உள்ளது.
சூரியனின் ஈர்ப்புத் தளையில் கட்டுண்டு இயங்கும் பொருட்கள் அனைத்தும் மூடிய வட்ட, நீள்வட்ட அல்லது பரவளையப் பாதைகளிலேயே செல்லும்.
அதற்கு மாறாக, அதிபரவளையப் பாதை ஒரு திறந்த பாதை; நேர்கோட்டைப் போன்றது. எனவே, இந்த வான் பொருள் சூரியக் குடும்பத்துக்கு வெளியிலிருந்து வந்தது; அடுத்த சில மாதங்களில் சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறும் என்பதும் உறுதியானது.
பட மூலாதாரம்,Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamani
இரண்டாவதாக, வால்மீனின் வேகம் ஒரு புதிரான விஷயமாக இருந்தது.
பொதுவாக, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவைப் போல சுமார் முப்பது முதல் ஐம்பது மடங்கு தொலைவில் உள்ள கைப்பர் வளையப் பகுதியில், ஐம்பது முதல் இருநூறு ஆண்டுகள் காலத்திற்குள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் வால்மீன்கள் குடிகொண்டுள்ளன.
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான, பத்தாயிரம் லட்சம் வருடங்கள் வரையிலான ஊசல் காலத்தைக் கொண்ட வால்மீன்கள், பூமி-சூரியன் தொலைவைப் போல 2,000 முதல் 2,00,000 மடங்கு தொலைவிலுள்ள ஊர்ட் மண்டலத்தில் இருந்து வருகின்றன. இவற்றின் பாதை நீள்வட்டமாகவோ அல்லது பரவளையமாகவோ அமையும்.
ஆனால் 3ஐ/அட்லஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது, இதன் வேகம் மணிக்கு 2,21,000 கிலோமீட்டர் (நொடிக்கு 61 கிமீ) ஆக இருந்தது. சூரியனை நெருங்க நெருங்க இந்த வேகம் கூடியது. அக்டோபர் 30, 2025 அன்று சூரியனுக்கு அருகே 21 கோடி கிலோமீட்டர் தொலைவில் இது கடந்து சென்றபோது, அதன் வேகம் மணிக்கு 2,46,000 கிலோமீட்டர் வரை உயர்ந்தது.
மூன்றாவதாக, இந்த வால்மீனில் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்தான் அதிகமாக உள்ளது. பிற தனிமங்களின் அளவு மிக மிகக் குறைவாக இருக்கிறது.
சூரிய குடுமபத்தில் இருக்கும் வான் பொருட்களில் ஹைட்ரஜன், ஹீலியம் மட்டுமே இருக்காது. பிற பொருட்களின் செறிவும் அதிகமாக இருக்கும்.
இந்த மூன்றையும் வைத்துப் பார்த்தால், 3ஐ/அட்லஸ் வால்மீன் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது இல்லை என்பதையும் அது வேறு ஏதோவொரு விண்மீன் குடும்பத்தில் உருவாகி சூரிய குடும்பத்திற்குள் வந்திருக்கக்கூடிய ஒரு விருந்தாளி என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
பட மூலாதாரம்,Atlas/University of Hawaii/Nasa
படக்குறிப்பு,அட்லஸ் தொலைநோக்கி, பூமியுடன் மோதக்கூடிய வாய்ப்புகளைக் கொண்ட வான்பொருட்களைக் கண்டறிய விண்வெளியை ஆய்வு செய்கிறது. இருப்பினும் 3ஐ/அட்லஸ்ஸால் அத்தகைய ஆபத்து இல்லை என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள்.
3ஐ/அட்லஸ் வால்மீன் எங்கிருந்து வருகிறது?
ஒரு பந்து செல்லும் பாதையைப் பார்த்து அது எங்கிருந்து வந்தது என ஊகிக்க முடியும். அதுபோல, இந்த வால்மீனின் வந்த பாதையைக் கணக்கிட்டு, ஒரு கோடி ஆண்டுகள் பின்னோக்கி அது கடந்து வந்த வழியை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இருப்பினும், பால்வெளி மண்டலத்தின் மற்றொரு பகுதியில் இந்த வால்மீன் பிறந்திருக்கலாம் எனத் தெரிய வந்தாலும், எந்தக் குறிப்பிட்ட விண்மீனின் அருகே இது உருவானது என்பதை இன்னும் இனங்காண முடியவில்லை.
அதுகுறித்த சமீபத்திய ஆய்வுகள், வயது குறைந்த விண்மீன்கள் நிரம்பிய பால்வெளியின் மெல்லிய வட்டுப் பகுதியிலிருந்தே இது வந்திருக்கலாம் எனக் கூறுகின்றன.
இதன் வேகம், பாதை ஆகியவற்றைக் கவனத்தில் கொண்ட விஞ்ஞானிகள், "சுமார் 700 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தொலைதூரத்தில் ஏதோவொரு விண்மீன் பிறக்கும்போது அதனுடன் உருவாகி, விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வால்மீன் தற்போது நமது சூரிய மண்டலத்தைக் கடந்து செல்வதாக" கணித்துள்ளனர்.
இதற்கு முன்னர், 2017இல் கண்டுபிடிக்கப்பட்ட 1ஐ/ஓமுவாமுவா எனும் வால்மீனும், 2019இல் கண்டறியப்பட்ட 2ஐ/போரிசோவ் எனும் வால்மீனும் இதேபோன்ற தன்மைகளைக் கொண்டிருந்தன.
எனவே நாம் இதுவரை அறிந்துள்ள தகவல்களின்படி, நமது சூரிய குடும்பத்திற்கு அப்பாலிருந்து வரும் மூன்றாவது வான் பொருளே இந்த 3ஐ/அட்லஸ்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட, ஒளிரும் பச்சை நிறத்தில், கண்ணுக்குத் தெரியும் வால் பகுதியுடன் பயணிக்கும் C/2025 A6 (லெம்மன்) வால்மீன் (கோப்புப் படம்)
3I/ATLAS என்று பெயர் சூட்டப்பட்டது ஏன்?
கடந்த சில பத்தாண்டுகளாக பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு இருக்கக் கூடிய விண்பாறைகள், விண்கற்கள் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கான வலைப்பின்னல் போன்ற தொலைநோக்கி அமைப்பு செயல்பட்டு வருகிறது.
அப்படி இருக்கக்கூடிய ஒரு வலைப்பின்னல் அமைப்பின் பெயர் ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல் இம்பாக்ட் லாஸ்ட் அலெர்ட் சிஸ்டம் (Asteroid Terrestrial Impact Last Alert System). அதாவது சுருக்கமாக அட்லஸ் (ATLAS).
அதன் மூலமாகத்தான் இந்த வால்மீன் அவதானிக்கப்பட்டது என்பதால் அட்லஸ் என்ற பெயர் அதற்குச் சூட்டப்பட்டது.
மேலும் ஐ என்பதற்கு இன்டர்ஸ்டெல்லார் என்று பொருள். அதாவது, இரண்டு விண்மீன் குடும்பங்களுக்கு இடையிலுள்ள விண்வெளிப் பகுதியே இன்டர்ஸ்டெல்லார் என்று அழைக்கப்படுகிறது. இந்த வால்மீனும் அந்தப் பகுதியில் காணப்படும் ஒரு வான்பொருள் என்பதால் அதைக் குறிப்பதற்காக ஐ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றோடு, இதுவரை நாம் கண்டுபிடித்துள்ள விண்மீன்களுக்கு இடையிலான வான்பொருட்களில் இது மூன்றாவது பொருள். அதைக் குறிக்கவே 3 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையிலேயே, சூரிய குடும்பத்திற்குள் நுழைந்துள்ள இந்தப் புதிய வால்மீனுக்கு 3ஐ/அட்லஸ் (3I/ATLAS) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/K Meech (IfA/U Hawaii); Processing: J Miller, M Zamani
படக்குறிப்பு,வால் மீன் 3ஐ/அட்லஸ் சூரிய குடும்பம் வழியாக நகரும்போது அதன் வண்ணமயமான பாதையை ஹவாயில் உள்ள ஜெமினி வடக்குத் தொலைநோக்கி படம்பிடித்தது.
ஹார்வர்ட் விஞ்ஞானி முன்வைத்த வேற்றுகிரக விண்கலம் கருதுகோள்
இந்த வால்மீனை சிலர் வேற்றுகிரகத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய ஒரு விண்கலம் என்று சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள்.
இத்தகைய பரபரப்பான பேச்சுகளுக்கெல்லாம் தொடக்கமாக இருந்தது, முனைவர் அவி லோப் என்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிதான்.
இந்த வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், அப்போதிருந்த தகவல்களை அடிப்படையாக வைத்து "இதுவொரு வேற்றுகிரக விண்கலமாக இருக்க வாய்ப்புள்ளது" என்று அவர் கூறினார்.
இதை ஓர் அளவீட்டை வைத்துப் புரிந்துகொள்ள முயல்வோம். அதாவது, 0 என்றால், அது இயற்கையான வான்பொருள்; 10 என்று கூறினால், அதுவொரு முற்றிலும் செயற்கையான விண்கலம்.
இத்தகைய மதிப்பீட்டில், அப்போதைக்குத் தம்மிடம் இருந்த தகவல்களை அடிப்படையாக வைத்து, இந்த வான்பொருளுக்கு 4 என்ற மதிப்பீட்டை விஞ்ஞானி அவி லோப் வழங்கினார். அதாவது "பெருமளவுக்கு இயற்கையான வான்பொருளைப் போலத்தான் இருக்கிறது. ஆனால், சில புதிர்களும் இதில் இருக்கின்றன" என்பதே அந்த மதிப்பீட்டிற்கான காரணம்.
அதில் அவர் புதிர்கள் உள்ளன என்று கூறியதைச் சிலர் ஊதிப் பெரிதாக்கியதால், பல்வேறு விதமான அச்சங்களைக் கிளப்பிவிடக் கூடிய கோட்பாடுகள் பரவி வருவதை நாம் பார்க்கிறோம்.
அதில் இருப்பதாகச் சொல்லப்பட்ட மர்மங்களில் ஒன்றாக, "செயற்கையாக ஏவப்படும் ராக்கெட் போன்றவற்றின் பாதை பெருமளவுக்கு நேர்க்கோடு போலவே இருக்கும். அதேபோல இந்த 'விண்கலத்தின்' பாதையும் இருகிறது" என்று கூறப்பட்டது.
அவி லோப், சூரிய குடும்பத்தில் உள்ள வான்பொருட்களில் இப்படி இருக்க முடியாது என்று ஒரு கருத்தை முன்வைத்தார். முதலில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த வால்மீனின் பாதையை ஆராய்ந்தபோது அதுவொரு நேர்க்கோடு போலத்தான் தெரிந்தது. ஆனால், கிட்டத்தட்ட நேர்க்கோடு போலத் தெரிந்தாலும், அந்த வால்மீன் அதிபரவளையத்தில் சுற்றி வருகிறது என்பது தெரிய வந்தது.
பட மூலாதாரம்,M Hopkins/Ōtautahi-Oxford team; Base map: Esa/Gaia/DPAC, S Payne-Wardenaar
படக்குறிப்பு,வால் மீன் 3ஐ/அட்லஸ் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட பாதை), நமது சூரியன் (மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட பாதை) போலவே நமது பால்வெளி மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது.
வால்மீனுக்கு வால் தோன்றுவதில் ஏற்பட்ட தாமதம்
ஒரு வால்மீனை எடுத்துக்கொண்டால், அதில் பனி போன்றவை இருக்கும். சூரியனில் இருந்து வெகுதொலைவில் இருக்கும்போது மிகவும் குளிர்ந்த நிலையில் அதிக பனியுடன் இருக்கும். அதுவே சூரியனை நெருங்கி வரும்போது வெப்பநிலை உயர்ந்து பனி உருகத் தொடங்கும்.
அதோடு சேர்த்து, சூரியனில் இருந்து வரும் சூரியக் காற்று காரணமாக, உருகும் பனியால் வால்மீனின் பின்புறத்தில் ஒரு வால் உருவாகும். அந்த வால், சூரியனுக்கு மேலும் நெருக்கமாக வர வரப் பெரிதாகிக் கொண்டே செல்லும். ஆனால், வியப்பளிக்கும் வகையில் இந்த வால்மீன் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் முதல் சில மாதங்களுக்கு வால் தோன்றவே இல்லை. அது மிகவும் புதிரான அம்சமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது பார்த்தால், அந்த வால்மீனில் வால் உருவாகி, வளர்ந்தும் வருகிறது. எனவே அது தற்போது ஒரு முக்கியமான புதிராக இல்லை.
ஜூலை 21 அன்று ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி எடுத்த கூர் படங்களில், இது ஒரு கண்ணீர்த்துளி போன்ற வடிவில் சிறு வாலுடன் தென்பட்டது. பின்னர் சூரியனை நெருங்க நெருங்க, அதன் வால் நீண்டுகொண்டே போனது.
கடந்த நவம்பரில் சூரியனுக்கு மிக அருகில் இருந்த நிலையில், ஹபிள் தொலைநோக்கி மற்றும் வியாழன் கிரகம் நோக்கிப் பயணிக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் 'ஜூஸ்' (JUICE) விண்கலம் நுட்பமாகப் படம் எடுத்தபோது, வளர்ந்த வால் தெளிவாகத் தென்பட்டது. அவற்றின் மூலம் இதுவொரு வால்மீன்தான் என உறுதிப்படுத்தப்பட்டது.
சில வால்மீன்களுக்கு ஏற்படுவது போலவே, சூரியனுக்கு அருகே செல்லும் நிலையில் நவம்பர் மாதத்தில் இதற்கு இரண்டு வால்கள் உருவாயின; தூசும் தும்பும் கொண்ட ஒரு வால் சூரியனுக்கு எதிர்த்திசையிலும், பிளாஸ்மா எனும் அயனி கலவைப் பொருள்கள் நிறைந்த இன்னொரு வால் சூரியன் உள்ள திசையிலும் என எதிரெதிர்த் திசைகளில் முளைத்தன.
பட மூலாதாரம்,Nasa/SPHEREx
படக்குறிப்பு,ஒளியியல் மற்றும் அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியால் வானத்தை ஸ்கேன் செய்யும் நாசாவின் SPHEREx ஆய்வகம், வால் மீன் 3ஐ/அட்லஸ்ஸில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் பனிக்கட்டியை அளவிட்டது.
விண்கலம் போல திடீரென வேகம் பெற்றது எப்படி?
இவைபோக, முன்பு பார்த்தபோது ஒரு நிறத்திலும், பின்னர் வேறொரு நிறத்திலும் தெரிவதாகவும் வால்மீன் பிரகாசமடைவதாகவும், இத்தகைய பிரகாசம் செயற்கை ஒளிகளின் வாயிலாகவே தோன்றியிருக்கும் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.
உண்மையில், வால்மீன் சூரியனுக்கு நெருக்கமாக வரும்போது, அதிலுள்ள பனியில் பட்டுப் பிரதிபலிக்கிறது. பொதுவாக, பூமியில் பனி என்றால் அது தண்ணீரால் ஆனது. ஆனால், இத்தகைய வால்மீன்களில், கார்பன் டை ஆக்சைடால் ஆன பனி இருக்கும்.
அந்தப் பனி சூரியனுடைய வெப்பத்தில் உருகி, வால்மீனை சுற்றி பனிமூட்டம் போலப் படர்ந்திருந்தது. அந்தப் பனிமூட்டத்தில் பட்டு சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது பிரகாசமாகத் தெரிகிறது. இதன் மூலம், செயற்கை ஒளிகள் அதில் இருப்பதைப் போலத் தெரிந்தது ஒரு தோற்றமயக்கம்தான் என்பது மேலதிக ஆய்வுகளில் நமக்குத் தெளிவாகியுள்ளது.
இவற்றைப் போலவே முன்வைக்கப்பட்ட மற்றொரு புதிர், வால்மீனின் வேகம் குறித்தானது. வால்மீன் ஒரு பாதையில், குறிப்பிட்ட வேகத்தில் சீராகச் செல்ல வேண்டும். ஆனால், இந்த வால்மீன் திடீரென வேகமெடுத்து நகர்ந்தது. அது 'எப்படிச் சாத்தியமானது?' என்ற கேள்விகளும் சந்தேகங்களும் வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் என்ற கருதுகோள் குறித்த பேச்சுகள் ஏற்படக் காரணமாயின.
அதோடு, "வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை ஒரு காரணியாக வைத்து, இதுவொரு ராக்கெட் போன்ற பொருள், செயற்கையாக அதில் வேகம் கூட்டப்பட்டுள்ளது" என்றெல்லாம் விவாதங்கள் எழத் தொடங்கின.
ஆனால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு இதற்கான உண்மைக் காரணம் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்வுகளின்படி, வால்மீனில் பனி உருகி வெளியேறும்போது, அதிலுள்ள பல்வேறு விதமான வாயுப் பொருட்கள் வெளியே சிதறுகின்றன.
அந்த வாயுப் பொருட்களின் சிதறல் காரணமாகவே வேகம் அதிகரித்தது. அதாவது, ஒரு பலூனை நன்கு ஊதிய பிறகு அதன் மீதுள்ள பிடியை விடுவித்தால் உள்ளிழுத்த காற்றை முழு வேகத்துடன் வெளியேற்றியபடி பறக்கும் அல்லவா, அதேபோல வாயுப் பொருட்கள் வெளியேறும்போது கிடைத்த உந்துதலின் விளைவாகவே வால்மீன் வேகம் பெற்றது.
பட மூலாதாரம்,ESO/O. Hainaut
படக்குறிப்பு,3I/Atlas வால்மீன் இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
சீன விண்கலம் எடுத்த புகைப்படத்தில் என்ன தெரிந்தது?
ஆரம்பக் கட்டத்தில் பார்க்கும்போது மேலோட்டமான சிவப்பு நிறத்தில் அதன் தூசுகள் தென்பட்டன. அதற்குப் பிறகு கூடுதலான திறன் கொண்ட தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்தபோது அது நீல சாயல் கொண்ட நிறத்தையுடையது என்பது தெளிவானது.
ஆனால், இந்த வால்மீன் பச்சோந்தியை போலத் தனது நிறத்தை மாற்றிக் கொள்வதாகச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டனர். உண்மையில் அனைத்து வால்மீன்களுக்குமே ஒவ்வொரு தனித்துவமான பண்புகள் இருக்கும். அத்தகைய தனித்துவமான பண்புகளின் பின்னுள்ள காரணங்களைத் தீவிரமான ஆய்வுகளுக்குப் பிறகே அறிய முடியும்.
அதேபோல, 3ஐ/அட்லஸ் வால்மீனுக்கு சில தனித்துவமான பண்புகள் உண்டு. அவை குறித்த அறிவியல் விளக்கங்களை மேலதிக ஆராய்ச்சிகளில்தான் நாம் தெரிந்துகொள்ள முடியும்.
சமீபத்தில் செவ்வாய் கோளை சுற்றி வரும் சீனாவின் தியான்வென்-1 விண்கலத்தின் உயர்தெளிவுத் திறன் கொண்ட கேமரா உதவியுடன் 3ஐ/அட்லஸ் வால்மீனை புகைப்படம் எடுத்துப் பார்த்தார்கள்.
அந்தத் தெளிவான புகைப்படத்தில், இதுவொரு விண்கலமாக இருப்பதற்கான எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை என்பதும் இயல்பான வால் விண்மீன் என்பதும் நமக்குத் தெரிய வந்துள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதெல்லாம் சரி, ஒரு வால் விண்மீன் குறித்து இவ்வளவு பரபரப்பாகப் பேசப்படுவதற்கு என்ன காரணம்? விஞ்ஞானிகள் இதன்மீது மிகுந்த ஆர்வம் காட்டுவது ஏன்?
இதை ஒரு சிறு உதாரணத்துடன் பார்ப்போம். ஓரிடத்தில் கட்டடம் ஒன்றைக் கட்டுகிறார்கள். கட்டடத்தை கட்டி முடித்த பிறகு அந்த இடத்தைச் சுற்றி செங்கல், மண் போன்ற அதைக் கட்டுவதற்குப் பயன்பட்ட பொருட்களின் மிச்சங்கள் கிடக்குமல்லவா!
அதேபோல, சூரிய குடும்பத்தில், சூரியன், கோள்கள் ஆகியவை உருவான பிறகு, அவற்றின் உருவாக்கம் போக மிச்சம் எஞ்சியுள்ள வான்பொருட்கள்தான் வால்மீன்களாக, விண்கற்களாக சுற்றிக் கொண்டிருக்கின்றன.
அவற்றில், சிறு கற்கள், மணல் துகள்கள், கடும் குளிர் நிலையில் உறைந்த கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் போன்ற எளிதில் ஆவியாகக்கூடிய வாயுக்கள், பனிக்கட்டி வடிவில் உள்ள நீர் ஆகியவை கலந்த கலவையே வால்மீன்கள்.
சூரியனைச் சுற்றி வரும் வால்மீன்களைப் போலவே, வேறொரு விண்மீன் அருகே கோள்கள் உருவாகும்போது அதோடு சேர்ந்து 3ஐ/அட்லஸ் உருவாகியிருக்க வேண்டும்.
எனவே, இந்த வால்மீனை ஆய்வு செய்வதன் மூலம், வேறொரு விண்மீன் குடும்பத்திலுள்ள கோள்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பது குறித்தும் அறிய முடியும். இந்த அரிய வாய்ப்புக்காகத்தான், "வாராது வந்த மாமணி" போன்ற இந்த 3ஐ/அட்லஸ் மீது உலகின் கவனம் குவிந்தது.
(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cn81d64zznpo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.