Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்

Featured Replies

இன்றைய சூழ்நிலையில் நான் யார் ? தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா என்ற கேள்விகள் என்னுள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தமிழகத் தமிழன் மனிதில் உள்ள கேள்வியும் அது தான். இது குறித்து நண்பர் சொ.சங்கரபாண்டியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணத்தை அந்தக் கட்டுரை பிரதிபலிப்பதால் அவரது அனுமதியுடன் அதனை இந்த வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.

(இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது)

உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்கும் அடிப்படைக் காரணம் மனிதரின் பல்வேறு அடையாளங்களும், அவற்றுக்குள்ளேயான முரண்பட்ட நிலைகளுமாகும். அடையாளம் (Identity) என்கிற பொழுது மொழி, இனம், நாடு, மதம், சாதி, வாழும் பகுதி, பண்பாடு, பால்வகை, கட்சி என பலவித அடையாளங்களைக் குறிப்பிட முடியும். இவற்றுள் சில உண்மையான அடையாளங்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவை என்பதை சற்றுப் பின்னால் பார்க்கலாம். இவை எல்லாமே மனிதரின் புற அடையாளங்களே என்பதையும், மனிதர்களெல்லோருமே உயிர் அல்லது ஆன்மா என்ற அகநிலையில் ஒன்றானவர்களே என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அத்தனை முரண்பாடுகளையும் உதறித்தள்ளிப் போய்க்கொண்டிருக்கலாமே. ஆனால் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்பதை பிறப்பு முதல் இன்று வரை எனக்குள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்து வரும் அடையாளப் போராட்டத்தின் மூலம் உணர்ந்து வருகிறேன். ஆனாலும் ஒரு தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்க முடியும் என்பதையும், அவற்றுள் சில இயல்பாகவும், சில திணிக்கப் பட்டும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்து வருகிறேன். அவ்வடையாளங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து பரிணமித்தும் அல்லது முரண்பட்டு ஒன்றையொன்று விழுங்கியும் இயங்கக் கூடும். இயல்பாக இருந்த அடையாளங்கள் வலுவிழந்தும், திணிக்கப் பட்ட அடையாளங்கள் வலுப்பெற்றும் நிலைக்கலாம் என்றும் உணர்கிறேன். சில வேளைகளில் இம்மாற்றத்தினால் சில நன்மைகளும் அல்லது அல்லல்களும் ஏற்படலாம். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை இங்கு ஆராய முற்படுகிறேன்.

நான் பிறந்த பொழுது எனக்கு இயல்பாகக் கிடைத்தது ஆண் என்ற பால் அடையாளம் மட்டுமே. அடுத்து தாயுடனும், உறவுகளுடனும் இயல்பாக வளர்ந்தது தமிழன் என்ற மொழி அடையாளம். வாழும் நாட்டால் வகுக்கப் பட்டது இந்தியன் என்ற நாட்டு அடையாளம். பிறந்த உடனே கற்பனையாக என்மேல் திணிக்கப் பட்டவை சாதி மற்றும் மத அடையாளங்கள். இவ்வாறான பல அடையாளங்களில் பள்ளிக்கு உள்ளே இந்தியன் என்ற அடையாளமும், பள்ளிக்கு வெளியே சாதி மற்றும் மத அடையாளங்களும் போதனைகளால் உரமிட்டு வளர்க்கப் பட்டன. தமிழன் என்ற அடையாளம் தமிழைப் படித்தும், பேசியும் வளர்ந்தவரை கூடவே இருந்து கொண்டேயிருந்தாலும் தமிழை விட பொருள் ரீதியில் முன்னேற்றத்தை அளிக்கவல்ல ஆங்கிலத்தின் முன்பும், மதம் வழியே காதில் விழுந்த சமஸ்கிருதத்தின் முன்பும் கொஞ்சம் கூனிக்குறுகியே நின்றது. திராவிட அரசியல் பரப்புரைகளால் தமிழ் மொழியின் பெருமைகள் ஒருபுறம் ஊட்டப் பட்டு வந்தாலும், இன்னொரு புறம் தமிழன் என்ற மொழி அடையாளத்தைப் பேணுவது குறுகிய சிந்தனையாக படித்த சமூகத்தினரால் சித்தரிக்கப் பட்டதால், என்னுடைய கல்வி உயர உயர தமிழன் என்ற அடையாளம் உள்ளத்தில் மட்டுமே ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

சைவமும், காந்தியமும் உயர்ந்த நெறியாக போற்றப் பட்ட என் சமூகச்சூழலில் மதமும், சாதியும் உண்மையிலேயே மனித அடையாளங்களல்ல என்றும், இயல்பான மனித அடையாளமான மொழி அடையாளம் பேணுவது குற்றமானதல்ல என்றும் தோன்றவேயில்லை. சாதிக்கும், மதத்துக்கும் எந்தவித புறவடிவக் கூறுகளோ, குணாதிசயங்களோ கிடையாது. பகுத்தறிந்து பார்த்து, அவற்றை ஒரு நொடிப்பொழுதில் துறக்கவும், மாற்றவும் முடியும் என்கிற போது அவற்றை அடையாளங்கள் என்று அழைப்பதை விட நிறுவனங்கள் என்று சொல்வதே சரியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் நாம் உறுப்பினராக இருக்கும்வரைதான் அந்நிறுவனத்தோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி அடையாளம் மூளையோடும், சுவாசத்தோடும் கலந்த இயல்பான அடையாளம் என்றாலும், அதை வைத்திருப்பது தவறானது என்று நான் படித்த சில மேட்டுக்குடி மேதாவிப் பத்திரிகைகளால் கட்டமைக்கப் பட்டன.

இந்தச் சூழலில் எனக்குள் ஒரு தெளிவை அடையக் காரணமாயிருந்தது ஈழப்பிரச்னையும், அதை இந்தியா எதிர் கொண்ட விதமும். காந்தியம்தான் மனிதாபிமானம் என்றிருந்த எனக்கு போலித்தனங்களை அடையாளம் காட்டிய பெரியாரியமும், போலித்தனங்களின் பொருளாதார அடிப்படையை புரிய வைத்த மார்க்ஸியமும் பரிச்சயமானது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து துரத்தப் பட்ட தமிழரின் துயரங்களை தமிழன் என்றல்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியை தங்களது அடையாளமாக வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு வன்முறையால் விரட்டியடிக்கப் பட்ட தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய ஆளும் வர்க்கத் தேசியவாதம் காட்டிய வழியிலேயே நானும் முதலில் சிந்திக்கிறேன். தமிழன் என்ற அடையாளம் குறுகிய பிராந்திய அடையாளம் என்று எனக்குப் போதிக்கப் பட்டதால் எனக்கு அதுவே சரியாகப் பட்டது.

ஆனால் சில வருடங்களாக ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த பொழுதுதான் புரிந்தது -- தமிழன் என்ற அடையாளம் இந்தியன் என்று கட்டியமைக்கப் படும் அடையாளத்துக்கு எதிராகக் கருதப் படுகிறதென்று. அதனாலேயே ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் தேடவேண்டிய தீர்வுக்குத் தடையாக அம்மக்களது தமிழ் மொழி அடையாளத்தை இந்தியா கருதுகிறதென்று. தமிழ் மொழி அடையாளம் மூடிமறைக்கப் படவேண்டிய அடையாளம் என்று கருதப் பட்டதால்தான் இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடரும் அடக்கு முறையைப் பெரிது படுத்தாமல், இலங்கை அரசிடம் சரணடைந்து வாழுமாறு தமிழர் வன்முறையின் மூலம் பணிக்கப் பட்டனர். இதுவே தனிப்பட்ட அளவில் என்னிடம் தமிழன் என்ற அடையாளம் மீட்டெடுக்கப் படக் காரணமாயிருந்தது. ஈழப் பிரச்னையில் தமிழர் என்று பார்க்காமல், மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்வு அளிக்கப் பட்டிருந்தால் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களிடம் தமிழன் என்ற அடையாளம் வலுப்பெறாமலே கரைந்து போயிருக்கக் கூடும்.

எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை.

கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். மொழி, நிறம், பால், இனம், நாடு என பலவிதங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாடும், எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எப்பொழுதும் மறுக்கப் படக் கூடாது என்ற நிலைப்பாடும் அமெரிக்கன் என்ற அடையாளத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அமெரிக்க அடையாளத்துக்குப் புறம்பாக சில தனிநபர்களும், நிறுவனங்களும், புஷ் அரசு உள்ளிட்ட சில அரசுகளும் நடந்து வந்தாலும், அமெரிக்கன் என்ற அடையாளம் இங்கு வந்தேறியுள்ள அனைத்து மக்களிடமும் நல்லதொரு தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

இப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் அடையாள மாற்றங்களுள் ஒரே நேரத்தில் பல அடையாளங்கள் இருப்பதில் ஆச்சரியமுல்லை. உதாரணமாக, மொழி வாயிலான தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றே ஒடுக்கப் பட்டதாக உணர்ந்ததால் கிளர்ந்தெழுந்த தமிழன் என்ற அடையாளமே என்னுடைய முதல் அடையாளம். ஆனாலும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும், வந்து குடியேறி வாழும் நாட்டினால் அமெரிக்கன் என்ற அடையாளமும் கூடவே இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று அடையாளங்களில் என்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று சொல்லுமளவுக்கும் எந்தவித பெருமையையும் நான் உணரவில்லை.

இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற அடையாளத்தை மிஞ்சிய அடையாளமாக தமிழன் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று கூற நினைப்பவர்களை நினைத்து முன்பெல்லாம் எரிச்சல் வரும், இப்பொழுதோ அனுதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தமிழன் என்ற இயல்பான அடையாளத்தை அங்கீகரிக்கும் பொழுது தான் இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற கட்டமைக்கப் பட்ட அடையாளமும் வலுப்பெற்று இயல்பான அடையாளமாக மாறும். அதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கும் இரகசியம். எனவே நான் முதலில் தமிழன், அதன் பிறகுதான் இந்தியன் மற்றும் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் குழந்தை முதலில் தன்னை அமெரிக்கனாகவும், அதன் பின்னே தமிழனாகவும், இந்தியனாகவும் உணரலாம். அதுவே இயற்கையும் கூட!

* * *

“என்னைப் போன்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவின் மேல் நம்பிக்கை வைப்பதே வீண். ஏனென்றால் இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கேனும் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதன் முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மை இனம் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு தனியொரு இனமில்லாததால்தான். எல்லா இனங்களுமே ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். இல்லையெனில் நாங்களும் ஈழத்தமிழர்களைப் போலவே வன்முறையால் என்றோ ஒடுக்கப் பட்டிருப்போம். எடுத்துக் காட்டாக, கட்டாய இந்தித் திணிப்புப் பிரச்னையில் நேருவின் வாக்குறுதி என்றெல்லாம் ஒன்றைப் பார்த்திருக்க முடியாது. போதாமைக்கு சோ, இராம், சுப்பிரமணியசாமி, சிதம்பரம் போன்ற பார்ப்பனிய-பனியா-இந்தியக் கைக்கூலிகளையும் எங்களுக்குள்ளேயே எப்பொழுதும் விட்டு வைத்திருக்கிறோம். எங்களது கலைஞரின் குடும்பத்தினர் போன்றவர்கள் தமிழகக் கொள்ளையில் ஆரம்பித்து தற்பொழுது அகில இந்திய அளவில் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்துக் கொள்ளத் தெரிந்திருக்கிறார்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிர ஏதும் தெரியாத வைக்கோ போன்றவர்கள் இன்னொரு புறம். எனவே தன்மானம் என்பதெல்லாம் தமிழகத் தமிழனுக்குக் கிடையாது. அந்த ஈரோட்டுக் கிழவன் சமூக மற்றும் பொருளாதாரத் தன்மானம் கிடைப்பதற்காகப் போராடியதால், தமிழ்நாட்டுத் தமிழர் தம்மளவில் விழிப்புணர்வடைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மை இப்படியிருக்க ஈழத்தமிழர்கள் எம்மிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத் தமிழர்கள் சொல் என்றுமே டெல்லி அம்பலத்தில் ஏறாது. ஈழத்தமிழர்கள் பட்டு வருகிற இன்னலுக்கு இந்தியா உதவ வேண்டுமானால் தமிழினம் என்ற அடிப்படையிலான அக்கறை இந்திய அரசுக்கு இருக்க வேண்டியதில்லை. வெறும் மனிதாபிமான அடிப்படை ஒன்றே போதும். அந்த அளவுக்குக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா ஒரு போதும் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாது, இலங்கை அரசுக்குத் தான் உதவும், ஏனென்றால் இந்திய இனமும், சிங்கள இனமும் தம் அடிப்படை வேரில் ஒன்றே. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு உதவுவது அதன் அடிப்படையிலேயே. (இந்திரா காந்தியின் காலத்தில் உதவியதாக ஈழத்தமிழர்கள்தான் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் செய்தது கூட அப்போதைய பூகோள அரசியல் இலாபத்துக்காகத்தான்)

இந்தியாவின் பண்பாட்டு வேர்கள் என்னுள்ளே எப்பொழுதுமே இருக்கும் என்றாலும் இந்திய மக்களின் மேல் அந்த அடிப்படையிலான என்னுடைய அன்பும், ஈர்ப்பும் எதிர்காலத்திலும் எனக்கு இருக்கும் என்றாலும், ஒரு இந்தியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன். இந்தியா என் முகத்தில் இது வரை கரியைத்தான் பூசிக்கொண்டிருக்கிறது.

உங்களைப் போலவே ஈழத்தின் வலிகளையும், இரத்தக் காயங்களையும், வேதனைகளையும் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களையும் மன்னியுங்கள் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”

* * *

ஆனால் இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல.

சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை. அந்த நாடுகளிலெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் பேரிழப்பு ஏற்படும் பொழுது மனிதாபிமான அடிப்படையில் வருந்துவதும், சிறிய அளவில் உதவுவதும் உண்டு. அப்படியொரு உறவை மட்டுமே இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்தியா தமிழர்களின் முதல் எதிரி நாடு என்ற பிரக்ஞையோடு செயல்படுவேன். தமிழர்களுக்கென்று ஒரு நாடிருந்தால் உலக நாடுகளும் இப்படி இந்தியாவின் விருப்பப்படி படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டா. எனவே உலக அளவில் தமிழர்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன், உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.

http://blog.tamilsasi.com/2009/04/identity...mils-india.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை எழுதியவர் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு சாம்பாறுப் பதிவாகப் போட்டுள்ளார். பெரியாரியமும் மார்க்சிய பொதுவுடமையும்(communism) தனது அடையாளங்களை சுக்குநூறாக்கியது என்கிறார். மதத்திற்கு அடையாளம் இல்லை என்கிறார். முதலாளியத்தால் பெரியாரியம் தோற்றுவிக்கப்பட்ட உண்மையை இந்தக் கறுப்பு சட்டை ஆசாமிகள் ஒருபொழுதும் அறியப்போவதில்லை. மேலும் மார்க்சிய கொள்கைகள் தனிமனித உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றன, அதற்கு முக்கிய காரணம் தம்மை மார்க்சியர்களாக அடையாளப்படுத்தும் நாடுகளும் தலைவர்களும் திருகுதாளர்களாக உள்ளனர். தன்னலமிக்க தலைவர்களாலும் நாடுகளாலும் மார்க்சியத்தை என்றும் முழுமையாக அமுல்படுத்தமுடியாது, அமுல்படுத்தவும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்குப் பதவிமேல் அவ்வளவு மோகம்.

கியூபா போன்ற மார்க்சிய நாடுகளில் சொத்து வைத்திருப்பதே மிகமிக் கடினம். அங்கே வீடு வாங்க முடியாது, வீடு கட்ட முடியாது, பழைய வீட்டை இடிக்க முடியாது, புது வீட்டைக் கட்ட முடியாது, எதையும் கட்ட அனுமதிபெற முடியாது, சொந்த வீடு வைத்திருக்க முடியாது. அங்குள்ள பொதுவுடமைக் கட்சி மட்டும்தான் கியூபாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு கட்சி. (கியூப)மார்க்சிசயத்தையும் பொதுவுடமையையும் முன்மொழிபவர்கள் அடக்குமுறையை மக்கள்மீது வலுக்கட்டயமாகத் திணிக்க முயல்கின்றனர் என்பதே உண்மை. இதனால்தான் பல போராட்டக் குழுக்கள் பொதுவுடமை, மார்க்சியம் போன்ற விடயங்கள்மீது நாட்டம் கொள்கின்றன.

மருத்துவர்கள் அதிகம் உள்ள கியூபா தனது இயற்கை வளங்களை நிவேர்த்தி செய்ய மருத்துவர்களை அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகள் உடைய மார்க்சியம் இதை எழுதியவரிற்கு எதை எவ்வாறு அடித்து நொறுக்கியது? சனநாயகம் சிறந்த வழி அல்ல எனினும், சனநாயகமே தற்போதுள்ள வழிகளில் சிறந்தது என்பது பலரது வாதம்.

சாதியமைப்பை வெறுக்கும் ஒருவரால் எவ்வாறு மார்க்சியம் விரும்பப்படுகிறது? சாதியமைப்பின் அடிப்படையே ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பாகும். காலநீரோட்டத்தில் அதை மாற்றிவிட்டார்கள், ஏற்றத் தாழ்வுகளை உண்டுபண்ணிவிட்டார்கள்.

இந்தியாவில் எந்த இனமும் முதன்மைபெறவில்லை என்றும் எந்த இனமும் 50 விழுக்காடாக இல்லை எனக்கூறுகிறார். அதேநேரத்தில் சிங்களவர்களுக்கு இந்தியா இன அடிப்படையில் உதவி செய்வதாகக் கூறுகிறார். அப்படியாயின் இந்தியாவில் 40 விழுக்காட்டிற்கு மேலாக உள்ள இந்திக்காரர்களை இந்தியா தேசிய இனமாகக் கருதுகிறது எனக்கூறுகிறாரா? 40 விழுக்காடு இந்தியாவில் இந்திக்காரர்களை மேவுதியாக(majority) நிறுவிவிட்டது எனக்கூறுகிறாரா?

இந்தியா தமிழர் போராட்டத்தை வெறுமனவே தமிழ் இன அடிப்படையில் அச்சம்கொண்டு பார்க்காது. அதைவிடப் பாரதூரமான முற்கால, தற்கால விளைவுகள் இந்தியாவின் மனதில் அழிக்கமுடியாத அச்சத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.

மேலும் இவர்கூறுவதுபோல் மதம் அடையாளமற்றது எனக்கூறமுடியாது. மதத்திற்கு மொழியைப்போல் பலவிதமான அடையாளங்கள் உண்டு. சில மதங்கள் அவை தோன்றிய மொழிகளோடு பின்னிப் பிணைந்து விடுகின்றன. இந்து மதம் தமிழ் வேர் உடையது. இந்தியாவில் தோன்றிய வேறு மொழிகளும் இந்து மதத்தைப் போதிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. தமிழன் வேற்று மதத்தைப் பின்பற்றும்போது தனது மத அடையாளத்திற்காகத் தனது மொழியைத் துறக்கிறான். தனது பெயரை மாற்றுகிறான். மதத்திற்கு அடையாளமில்லை என்றால் ஏன் அவ்வாறு செய்யத் தூண்டப்படுகிறான்?

வெளிநாடு ஒன்றைக் குறிப்பிடும் எழுத்தாளர், அங்கு இன, மொழி, நிறம், பால் வேறுபாடுகளின்றி எல்லோரும் சமமாக நடாத்தப்படுவதாகக் கூறுகிறார். வேணுமென்று மதத்தை நழுவவிட்டுட்டார் போலும். அங்கே பேச்சுரிமையும் எழுத்துரிமையும் உள்ளது எனப் போதிப்பவர் அங்கே ஆங்கிலம்தான் அது இரண்டடிற்கும் முதன்மையாக உள்ளது என்பதைக் கண்டும்காணாமல் விடுகிறார். ஆக, மொழியும் அதனைக் காக்க உதவும் மதமும் முக்கிய விழுமியங்களாகவும் அடையாளங்களாகவும் கருதவேண்டிய கட்டாயம் நிலவுகிறது. எழுத்தாளர் குறிப்பிடும் நாட்டில் நிற வேற்றுமை பல்வேறு மட்டத்தில் உள்ளது. பால் வேற்றுமையைப் பற்றி கதைக்கத் தொடங்கினால் அவர் குறிப்பிடும் நாட்டில் அது எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதைக் கண்கூடாகக் காணமுடியும்.

மொழி எவ்வாறு ஒரு மனிதனின் ஊற்றாக(origin) விளங்குகிறதோ. அதேபோல் அவன் பின்பற்றும் மதமும் அவனது மூதாதையர்களின் சிந்தனையைக் கட்டிக் காத்து வருகிறது. உண்மையான மதமும் உண்மையான கடவுளர்களும் உடைய இந்து மதத்தை வேராகக்கொண்டுள்ள தமிழர்கள் மதம்மாறுவதும், வேற்று மதத்தை நாடுவதும், வேற்று மதத்தவர் தம்மைவிட மேலானவர் எனக் கருதுவதும் இந்து மதத்தை இழிந்துரைப்பதும் இந்துக் கடவுளர்களை அவமதிப்பதும் அற்பமான விடயம். அவ்வாறான செயல்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பங்கம் விளைவிக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. கருப்புத் துணிகளால் எம் கண்களைக்கட்டாது இந்து மதத்தைப் பின்பற்றி இந்துக் கடவுளர்களை நாம் வழிபடுவோமாக. இந்துக் கடவுளர்களே எம் தமிழ் இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தருவர்.

ஓம் நமசிவாய

அம்மனே துணை!

Edited by vengaayam

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இவர்கூறுவதுபோல் மதம் அடையாளமற்றது எனக்கூறமுடியாது. மதத்திற்கு மொழியைப்போல் பலவிதமான அடையாளங்கள் உண்டு. சில மதங்கள் அவை தோன்றிய மொழிகளோடு பின்னிப் பிணைந்து விடுகின்றன. இந்து மதம் தமிழ் வேர் உடையது. இந்தியாவில் தோன்றிய வேறு மொழிகளும் இந்து மதத்தைப் போதிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. தமிழன் வேற்று மதத்தைப் பின்பற்றும்போது தனது மத அடையாளத்திற்காகத் தனது மொழியைத் துறக்கிறான். தனது பெயரை மாற்றுகிறான். மதத்திற்கு அடையாளமில்லை என்றால் ஏன் அவ்வாறு செய்யத் தூண்டப்படுகிறான்?

ஓம் நமசிவாய

அம்மனே துணை!

வெங்காயம்!!

நான் இந்து இல்லை. எனக்குத் தமிழ்ப் பெயர் இல்லை. ஆனால் தமிழன் என்பது தான் என் முதல் அடையாளம். என்னைப் போல கிறிஸ்துவ மதம் சார்ந்த பல லட்சம் பேருக்கு தமிழ் தான் முதல் அடையாளம். தமிழர்களுக்காக போராடும் போராளிகளை கிறிஸ்துவின் தியாகத்தினூடாக விளங்கிக் கொள்ள இந்த தமிழ் கிறிஸ்தவர்கள் முயலுகிறார்கள். இங்கே எங்கே பின் பற்றும் மதம் அடையாளத்தை மாற்றுகிறது? அடையாளம் என்பதை மேல் கட்டுரையை எழுதியவர் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள், மதம், வாழும் புலம், அதிகமாகப் புளங்கும் மொழி, சூட்டிக் கொள்ளும் பெயர் இவையெல்லாம் அடையாளங்கள் என்று வரையறுத்துக் கொண்டு சாம்பார் ஆக்கியிருக்கிறீர்கள். பத்தி எழுத்தாளர் intellectual ஆக எழுதப் போக நீங்களும் அவரைப் பார்த்து முயற்சி செய்திருக்கிறீர்கள் . ஆனால், இந்த அறிவு ஜீவித்தனம் ஒரே நாளில் வருவதில்லை. இதைத்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள், புரிகிறதா வெங்காயம்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெங்காயம்!!

நான் இந்து இல்லை. எனக்குத் தமிழ்ப் பெயர் இல்லை. ஆனால் தமிழன் என்பது தான் என் முதல் அடையாளம். என்னைப் போல கிறிஸ்துவ மதம் சார்ந்த பல லட்சம் பேருக்கு தமிழ் தான் முதல் அடையாளம்.

Justin - நல்ல தமிழ் அடையாளம் :lol:

தமிழன் என்கிற அடையாளத்திற்கான காரணிகளைத் தூக்கி எறிந்துவிட்டு வெறுமனவே தமிழன் என்று மார் தட்டினால் அது அல்லவோ நீங்கள் அறிந்த புத்திசாலித்தனம். அப்ப எதற்காகப் போராடுகிறோம்? வேற்று மொழியையும் வேற்று மதத்தையும் தழுவவா? :wub:

ஐயோ, ஐயோ! :lol:

தமிழர்களில் இந்துக்களே மேவுதியர்(majority). அவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்வது எவ்வாறு நிஞாயமாகும்? இந்துக் கடவுளர்களையும் இந்து மதத்தையும் இழிந்துரைக்க மேவுதிகளான நாங்கள் ஏன் உடன்படவேண்டும். நாங்கள் யாரும் மதப் பிரிவிணையைத் தூண்டவில்லை. ஆனால் இந்துக் கடவுளர்களையும் இந்து மதத்தையும் கேவலப்படுத்துவதை நிஞாயப்படுத்தினால் எங்கள் உண்மையான இந்துக் கடவுளர்களையும் எங்கள் உண்மையான இந்து மதத்தையும் நாங்கள் பாதுகாக்க முயல்வோம். அதில் வெல்வோம். தமிழன் அமைதியாக இருந்தால் அவனது மதத்தை பொசுக்கலாம் என்று நினைப்பது தவறு.

உங்களைப் போன்றுதான் நீங்கள் கூறிய 1 இலக்கத்திற்கும்(லட்சம்) மேற்பட்ட அவர்கள் இருப்பார்கள் போலும். இதையும் தூக்கிடுவார்கள், இனம் இனத்தைச் சேரும்!

ஓம் நமசிவாய

அம்மனே துணை

Edited by vengaayam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திக்கு சந்தி வைத்த அம்மனின்,வைரவரின் கைகளில் உள்ள ஆயுதங்களை அன்றே தாங்களும் இந்துக்கள் என்று இன்று வரை அடம் பிடிக்கும் உங்களைப் போன்ற ஏழாவது அறிவு படைத்த சென்மங்களே,இன்றும் வன்னியில் உள்ள அப்பாவி சனங்கள் ஒங்கடை அம்மனையும்,அது சார் சாமிகளையும் கும்பிடாமல்,என்ன புத்தனையா தொழுது நின்றனர், இந்த நேரத்தில் ஆளாளிற்கு ஓர் ஆயதம் கைக் கொண்டிருந்தால் இன்று தாயகம் தளைந்திருக்கும்,யதார்த்தத்�

Edited by s.kumaar

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல.

சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை.

காலம் தாழ்ந்த முடிவாயினும் சரியான முடிவு. தமிழகத்தில் இன்று பலரின் நினைவும் இதனோடுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.