Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடிவயிற்றை முறுக்கவில்லையா?

Featured Replies

ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா? கட்சிகளெல்லாம் கிடக்கட்டும். எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?

ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு என்று தாய் மகளிடம் சினந்து கேட்டாளாம். போனவன் போயிட்டான்; நான் இருக்கேனே என்று மகள் புன்முறுவலோடு விடை இறுத்தாளாம் கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்ப என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஏதோ வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போல ராஜபட்சவுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறது. பஜ்ஜி மாவுக்குத் தனித்து எந்த மதிப்புமில்லை. அது வெங்காயத்தோடோ, வாழைக்காயோடோ சேரும்போதுதான் அதற்குப் பெயரும் கிடைக்கிறது வடிவமும் கிடைக்கிறது.

இந்தப் பஜ்ஜி மாவுக்கெல்லாம் வடிவம் கொடுப்பவர் கருணாநிதி என்பது ராஜபட்சவின் எண்ணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட கருணாநிதியின் உயிர்நாடியோ, சென்னைக் கோட்டையில் இருக்கிறது. சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ, சோனியாவின் தயவில் இருக்கிறது. சோனியாவோ சிங்களவர்களின் உற்ற நண்பர். ஆகவே, சோனியாவின் தோழமை இருக்கும்வரை இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கத் தேவையில்லை என்பது ராஜபட்சவின் எண்ணம்.

ஆனாலும் விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச உன் கதையையும் முடித்திருப்பேன் என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?

ராஜபட்ச உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்துவிட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒரு நாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே.

ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே அதுவும் ராஜபட்ச, ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன் என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்று கொண்டு, இரத்தம் கொதிக்கிறது என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?

அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே.

இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்து கொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?

போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், நன்றாக இருக்குமா? என்று திருமாவளவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே.

இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை (966).

முன்பொருமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உச்சத்திலிருந்தபோது மாநிலங்களின் அமைச்சர்களெல்லாம் பங்கேற்ற கூட்டத்தில், செல்வாக்குமிக்க மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய், இந்தி இல்லாமல் இந்தியா இல்லை என்று பேச, இந்தி இருக்குமானால், இந்தியாவே இருக்காது என்று அன்றைய தமிழக அமைச்சர் செ. மாதவன் பேசிவிட்டார் என்பதற்காக, ஊர்ஊராக நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செ. மாதவனை உட்காரவைத்து ஊர்வலம் விட்டு, ஐந்து ஆண்டு அரசியலை இதைச் சொல்லியே ஓட்டினார்களே தி.மு.க.வினர்.

அன்று மாமன்னன் அசோகன் இலங்கைக்குத் தன் மகள் சங்கமித்திரையை அனுப்பிப் பௌத்தத்தை வளர்த்ததுபோல, இன்று தன் மகள் கனிமொழியை அனுப்பிச் சிங்களவர்களோடு நேசத்தை வளர்க்கும் கருணாநிதி, ராஜபட்சவை எதிர்த்துத் திருமாவளவன் பேசுவதை ரசிக்க மாட்டார் என்றாலும், கருணாநிதி ரசிக்காததை எல்லாம் செய்யாமலிருப்பதற்குத் திருமாவளவன் என்ன தி.மு.க.வின் ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளரா?

தமிழுக்கும், தமிழனுக்கும் கேடு என்றால் சீறிவரும் சிறுத்தையாக இருந்தவரை, நாடாளுமன்றப் பதவியைக் கொடுத்து அடங்கிப் போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே கருணாநிதி.

முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரஸயும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம் ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக்கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன?

முள்வேலி முகாம்களில் ஈழத் தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துவதை ஓர் அமெரிக்கப் பெண்மணி சத்தம்போட்டு உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழ்நாட்டுக்கும் வந்து சொல்ல விரும்பியபோது, அவருக்கு விசா வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி! அந்தப் பெண்மணியின் வருகை தன்னுடைய சாயத்தை வெளுக்கச் செய்துவிடும் என்னும் அச்சம்தானே காரணம்.

இந்தப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உல்லாசப் பயணத்தில் இங்கிருந்தே இலங்கை அதிகாரிகள் உடன்வந்தார்களாம். கொழும்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாம்; ஹெலிகாப்டர்களில் பறந்தார்களாம்; ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினார்களாம்; முப்பொழுதும் முப்பழங்களோடும் விருந்துகளாம்; வேதமே பாராட்டிய சோமபானங்களுக்கும் குறைவில்லையாம் அரசியல் நெறியற்ற டக்ளஸ் தேவானந்தா கூட்டிவைத்த கூட்டத்தில் கலந்துரையாடினார்களாம் இதற்குச் சிங்களவர்களோடேயே உரையாடியிருக்கலாமே

ஈழத்துக்கான போர் சிங்களக்காடையர்களோடு மூன்றுமுறை நடந்தது; முப்பதாண்டுக் காலம் நடந்தது; அப்போதெல்லாம் இடையிடையே போர் நடக்கும்; சிங்களக்காடையர்கள் முண்டிப் பார்ப்பார்கள்; பின்பு பின்வாங்கி ஓடிப்போவார்கள்.

ஈழத்தில் வரிவசூல் நடந்தது; காவல் நிலையங்கள் இருந்தன் நீதிமன்றம் நடந்தது; பராமரிப்புப் பணிகளும், நிர்வாகப் பணிகளும் செவ்வனே நடந்தன. அந்தக் காலகட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத சுதந்திர நாடாகவே ஈழம் இயங்கியது.

நான்காம் ஈழப் போர் ஈழத்தைச் சுடுகாடாக்கியது. சிங்களக்காடையர்கள் ஒன்றும் ஓரிரவில் வீரர்களாய் மாறிவிடவில்லை. இந்தியப் பெருநாடு சிங்களவர்களை முன்னிறுத்தி அந்தப் போரை நடத்தி இந்தக் கொடுமையை அரங்கேற்றியது.

பாரதி சொன்னதுபோல எல்லாமே பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே.

நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு மருந்தில்லை; கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளை பெற வசதியில்லை.

ஈழத்துக்கு முற்றாக விடுதலை கேட்டவர்கள் இன்று முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து வீட்டுக்குப் போக மட்டும் விடுதலை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார்கள்; இந்த நிலைக்கு இவர்களை ஆளாக்கிய சோனியா காந்தி, கருணாநிதி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபட்சவைச் சந்தித்து, நாட்டுக்கு விடுதலை கேட்கவில்லையே; வீட்டுக்குப் போகத்தானே விடுதலை கேட்கிறார்கள்; கொடுத்துவிட்டுப் போங்களேன் என்று எடுத்துச் சொல்லப் போய் இருக்கிறார்கள். தமிழனின் தலைவிதியைப் பார்த்தீர்களா?

இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறுவேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?இப்படிக் கருணாநிதி அறிவித்த மறுநாளே சிங்காரச் சென்னையில் சுவரொட்டிகள் மின்னின. நான்கே நாளில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கலைஞரை வணங்குகிறோம். அண்ணா விடுதலை இயக்கமாகத் தோற்றுவித்த ஒரு கட்சியில் விடுதலை என்பதை எவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலம்; அதையும் ரசிக்கிறார் கருணாநிதி என்பதுதான் அதைவிடப் பேரவலம். உலகத் தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. ஈழப் பேரழிவுகளுக்குப் பிறகு உலகத் தமிழர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதி நடத்துவதை ஏற்கவில்லை. சில மாதங்களுக்கு இந்த மாநாட்டைத் தள்ளிவைத்து அவர்களை அமைதிப்படுத்தலாம் என்னும் கருணாநிதியின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரை மாற்றி நடத்தப் போகிறார்கள். உலகத் தமிழர்களின் சினம் நியாயமானதுதானே. உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார்; எம்ஜிஆர் நடத்தினார்; ஜெயலலிதா நடத்தினார்; ஆனால், கருணாநிதியால் நடத்தவே முடியால் போய்விட்டதே தமிழைத் தாயாக உருவகிப்பது தமிழர்களின் வழக்கம். தாய் ஒருத்தி; பிள்ளைகள் இருவர் இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மார்பிலும் தமிழ்ப்பால் சுரந்தாள் அவள் அவர்கள் இனத்தால், நிறத்தால், ரத்தத்தால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் அனைத்தாலும் ஒன்று; நிலத்தால் மட்டுமே வேறு, வேறு.

அண்மையில் அவளுடைய சிறிய பிள்ளைக்கு ஊறு நேர்ந்துவிட்டது; பொறுப்பாளா அவள்? அந்தப் பிள்ளைக்கு ஊறு விளைவித்த அரக்கன் அழிந்து, அந்தப் பிள்ளை தன்னுடைய மண்ணில் காலூன்றும் வரை உறக்கம் வருமா அவளுக்கு?

அந்தச் சிறிய பிள்ளையின் மண்ணைப்பிடுங்கிக் கொள்ள ஓர் அரக்கன் முயன்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அரக்கனுக்குத் துணைபுரிய தில்லிவாசிகள் விரும்பியதையும் புரிந்துகொள்ள முடிகிறது ஆனால், மூத்த பிள்ளையின் மண்ணிலிருந்தே சிலர் தில்லியின் விருப்பத்தின்பேரில் அரக்கனுக்கு உதவியாக இருந்ததைத்தான் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கண்ணகி அழுததைப் போல் அரற்றி அழுகிறாள் தாய் தன் இளைய மகனின் வம்சத்தில் எண்பதாயிரம் பேர் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு மாண்டுமடிந்ததை எண்ணி அழுகிறாள். இளைஞர்களெல்லாம் செத்து, இளம்பெண்களே விஞ்சி நிற்கும் கொடுமையை எண்ணி அழுகிறாள். அறத்தை மடவோய் என்று வாயாற வைகிறாள். நான் உயிர் பிழைத்திருப்பேனோ என்று அரற்றுகிறாள்.

மறனோடு திரியும் கோல் மன்மோகன் தவறு இழைப்ப

அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ?

(சிலம்பு, துன்பமாலை 40).

இளைய பிள்ளையின் வம்சத்தை அழிக்க மூத்தபிள்ளையின் வழியினரில் சிலரே மாற்றானுக்கு உதவிவிட்டு, தன்னுடைய வெக்கை தணியத் தனக்கே விழா எடுக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் விழாவினைப் புறந்தள்ளி விட்டாள் தாய் உலகத் தமிழ் மாநாட்டை அவள் ஏற்கவில்லை. தாயல்லளோ அவள்.

அது மட்டுமன்று; தமிழ் மாநாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார் கருணாநிதி

சென்ற மத்திய ஆட்சிக் காலகட்டத்தில் சோனியாவோடு சேர்ந்துகொண்டு ஈழத்தைச் சுடுகாடாக்கியதை இது போன்ற தீர்மானங்களால் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறார் கருணாநிதி.

ஈழத் தமிழர்களுக்கு எந்தச் சலுகைகள், உரிமைகள் அளித்தாலும் எனக்கு உடன்பாடே. ஆனால், இங்கே ஈழத் தமிழர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை. திபெத்தியர்கள், பர்மியர்கள், வங்கதேசத்தினர் என்று ஏராளமானோர் அகதிகளாய் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மட்டும் மத்திய அரசு தனித்துப் பிரித்துப் பார்க்குமாறு கருணாநிதியால் செய்ய முடியுமா?

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை என்றால் அவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புப் போன்ற எல்லாம் உண்டா? அப்போது தானே அது முற்றான குடியுரிமையாய் இருக்க முடியும். என்றெல்லாம் அடுக்கி அடுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கேட்டாரே ஒன்றுக்காவது விடை சொன்னாரா முதலமைச்சர் கருணாநிதி?

கருணாநிதி தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசை ஏற்கும்படி செய்ய வேண்டும்; அல்லது அரசை விட்டு வெளியே வந்து அதற்காகப் போராட வேண்டும். அப்படியெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு பேச்சுக்குப் போட்டு வைப்போம் என்று, தான் நம்பாததையே தீர்மானமாக்குவது முழு மோசடி இல்லையா?

ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசிலிருந்து என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் அனைவருக்கும் இசைவே.

கருணாநிதியும், சோனியாவும் அந்த இனத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு ஈடுகட்டவும், பாவங்களுக்குக் கழுவாய் தேடவும், எந்தச் சலுகை வேண்டுமானாலும் அளிக்கட்டும்; அளிக்க வேண்டும் வெறும் 500 கோடி ரூபாயை அளித்துக் கைகழுவி விடும் ஏமாற்று வேலை வேண்டாம்.

ஆனால் அவர்கள் பிறப்பால் ஈழத் தமிழர்கள்; ஈழம் அவர்களின் தாயகம் அங்கே அவர்களுக்கு வீடு வாசல், நிலம் கரை அனைத்தும் உண்டு. அவர்களுக்குச் சொத்துகளும் அங்கேதான்; சொந்தங்களும் அங்கேதான்.

ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி அரசியலில் ஆக்கம் இழந்த பிறகு.... அது நடக்காதா என்ன? முன்பு தெருவிலிருந்தவர்கள் இப்போது திருவை அடைந்திருக்கிறார்கள்; மீண்டும் திருவை இழந்து தெருவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?

அப்போது தாங்கள் விரும்பும்வண்ணம் தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்.

தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் உண்டு. ஒன்று தமிழ்நாடு; இன்னொன்று ஈழம் போர்த் தோல்வி காரணமாகச் சோர்வுற்றிருக்கும் தமிழர்களை விரட்டிவிட்டால், இலங்கை முற்றாகச் சிங்களவர்களின் நாடாகிவிடும் என்பது ராஜபட்சவின் எண்ணம். கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, தமிழ்நாடு என்று போனபோன இடங்களில் ஏதாவதொரு உரிமை பெற்று அவர்கள் ஆங்காங்கே இருந்துவிட வேண்டும் என்பதுதான் ராஜபட்சவின் விருப்பம் அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிவிடும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்காகத்தான் கொடுமைகள் மிகுந்த முள்வேலிச் சிறை முகாம்களின் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறார் ராஜபட்ச இறைமகன் ஏசுவை சிலுவையில் அறையக் காரணமான யூத மத போதகர்கள் யாரையாவது ஏசுவின் உண்மைச் சீடர்கள் பதினோரு பேரில் எவனாவது கட்டிப்பிடித்ததுண்டா?யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா?கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், முன் தோன்றிய மூத்த தமிழினத்தைக் கருவறுத்த ராஜபட்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும் சிரித்து மகிழ்வதையும் சிலர் கட்டித் தழுவிக் கொள்வதையும் நிழற்படங்களில் பாருங்கள் அடிவயிற்றை முறுக்கவில்லையா?

நன்றி தினமணி http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=142502&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=அடிவயிற்றை%20முறுக்கவில்லையா?

நண்பர்களே ! இக்கட்டுரைக்கு வாசகர்கள் வழங்கிய கருத்துக்களையும் இதனுடன் இணைக்கிறேன்

கருத்துக்கள்

உங்கள் கட்டுரை அடிவயிற்றை முறுக்கவில்லை. இதயத்தை பிழிந்து விட்டது.அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் மிரட்டலுக்கும், பணத்திற்கும் அடிபணிந்து விட்ட நிலையில் தினமணி துணிவாக இக்கட்டுரையை வெளியிட்டது மிகவும் பாரட்டுதலுக்குரியது. இன்றைய ஆட்சியாளர்களுக்கும், துரோகிகளுக்கும் இது சாட்டையடியாக இருந்தாலும் அவர்கள் அதை கண்டுகொள்ளப் போவது இல்லை. பெரும்பாலான மக்களை இது போய்ச் சேராது, நிறைய பேர் செய்தித்தாள்களை படிப்பதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். என்ன செய்வது? சன் டி.வியில் வந்தால்தான் செய்திகள் என்றாகி விட்டது. யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா? நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே! பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு

By Kovalan

10/21/2009 1:26:00 PM

Very good article, after read that feel very shame. Wish you all the best my dear Brothers and Sisters.

By Durai

10/21/2009 1:12:00 PM

Dear Friends please print this article and distrubute to all of your tamil friends. Thanks to Dinamani to publish this article and wake up us. Soon the judjement day will come Tamil nadu is waiting for one good leader. The friends who asking why LTTE killed other rebels please go and read about French Revolution you can find the answer.

By ISAAC

10/21/2009 12:58:00 PM

vazhga enran thamizh makkal urimai petrea ! veezhga singhalanin kodia aatchi ! Unarvai oottuginra katturaiyai vaditha pazha.Karuppaiya avargalukku enathu nanri. v.seenivasan By v.seenivasan

10/21/2009 12:52:00 PM

உங்கள் கட்டுரை அடிவயிற்றை முறுக்கவில்லை. இதயத்தை பிழிந்து விட்டது. சம்பந்தப் பட்டவர்களின் மனம் ஏன் எப்படி கல்லாய் போனது? பணத்திர்காகவா? பதவிக்க்காகவா? மனிதனின் மனம் மிருகத்தைவிட இவ்வளவு கொடூரமாகவா - கேவலமாகவா மாறும்?

By abdul.com - dubai

10/21/2009 12:32:00 PM

என்னை செருப்பால் அடித்தாலும் சரி, சாணத்தை கரைத்து அடித்தாலும் சரி. எனக்கும் என் குடும்பத்துக்கும் பதவி வேண்டும். அதற்க்காக எதையும் செய்வேன் என்று இருக்கும் மு.கருணாநிதிக்கு இதெல்லாம் உரைக்காது. மக்களும் புரிந்துகொள்ள போவதில்லை. அப்படியே புரிந்து கொண்டாலும் இலவசம் என்ற பெயரில் adutha முறையும் ஆட்சியை பிடித்து விடுவார்கள். அதனால்தானே தன் குடும்பத்தை பல பதவிகளில் மேலிருந்து கீழ் வரை அமர்தயுள்ளார். மக்கள் புரிந்துகொண்டால் சரி.

By Boomi

10/21/2009 12:13:00 PM

தமிழர்களை அழித்து தமிழ் மாநாடு தேவையா ? சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

By selvam

10/21/2009 11:42:00 AM

அய்யா நாக்க புடிங்கீட்டு சாகற மாதிரி கேக்கரீங்க !!! ஆனா ஒறக்கனுமே !!!

By Rasukkutty

10/21/2009 11:23:00 AM

கேள்விகள் ஒவ்வொன்றும் செருப்படி. இந்த அரசியல் கோமாளிகளுக்கு இதெல்லாம் உறைக்காது. தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எழுச்சி ஒன்றே விடிவை பெற்றுத் தரும். அதற்கு நிறைய போராட்டம் தேவை. வீதியில் இறங்கி போராடுவோம். தமிழனாய் ஒன்றுபடுவோம் தமிழனுக்கான நாட்டை வெல்வொம்.

By Ravi Shankar

10/21/2009 10:38:00 AM

We really appreciate that you are writing such a great article which is carrying the truth to the public.Keep it up.

By Raja

10/21/2009 10:12:00 AM

Dear Dinamani, We admire you to publish a article which induce the tamil patriotism and realize a real condition of our tamil people. We suggest you to brief the content and publish it in your news paper onceagain. So it may reach to many tamilans. They may can show their agitation to Tamil nadu governmant and Indian government. By Uganandan

10/21/2009 9:59:00 AM

சீமான் போன்ற உண்மையான தோழர்கள் தலைமையில் அணிதிரள வேண்டிய காலம் நெருங்குகிறதை உணரமுடிகிறது. வெத்துவேட்டுகளின் சாயம் வெளுத்து போவதையும் கூட...

By கண்ணன்

10/21/2009 8:59:00 AM

அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் மிரட்டலுக்கும், பணத்திற்கும் அடிபணிந்து விட்ட நிலையில் தினமணி துணிவாக இக்கட்டுரையை வெளியிட்டது மிகவும் பாரட்டுதலுக்குரியது. இன்றைய ஆட்சியாளர்களுக்கும், துரோகிகளுக்கும் இது சாட்டையடியாக இருந்தாலும் அவர்கள் அதை கண்டுகொள்ளப் போவது இல்லை. பெரும்பாலான மக்களை இது போய்ச் சேராது, நிறைய பேர் செய்தித்தாள்களை படிப்பதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். என்ன செய்வது? சன் டி.வியில் வந்தால்தான் செய்திகள் என்றாகி விட்டது.

By நவீன் சென்னை

10/21/2009 8:25:00 அம

pazha karuppaiah pale karuppaiah! By sankar.mu.su. 10/21/2009 6:59:00 am

We Tamils in Tamilnadu have wholeheartedly supported LTTE before the demise of RAJIV GANDHI.After the demise of RAJIV,the sympathy towards srilankan Tamils has been decreased in view of the activities of LTTE. Tamilnadu is a state within INDIA.Mostly north INDIANS are the PM of INDIA.What we are loosing in Tamilnadu.We are having full rights in TN to rule Tamilnadu.Under the RAJIV-JAYAWARTHANA pact, the same Indian federal setup formula was adopted.But the LTTE was adamant to accept to accept the formula.If it was accepted by all EELAM TAMILS including LTTE, there will be peaceful in Srilanka. There is no reason to findfault with TN leaders & TN MPs team. Our sympathy towards EELAM TAMILS has been spoiled by LTTE"s activities.DINAMANI Sir,Please stop to publish this kind of OPPARI. EELAM TAMILS have invited the trouble in mejority Sinhalese state under the guidance of LTTE. By T.S.PRAKASAM

10/21/2009 5:32:00 AM

கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் நியாயமானவையே! இந்த உண்மை தெரிந்தாலும் உரியவர்கள் அதனைச் சொல்ல மாட்டார்கள். மக்களாவது சிந்தி்த்து இனப்படுகொலைகாரர்களை உலக நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்கும் தண்டனைகள் வாங்கித் தர வேண்டும். நம்பிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan

10/21/2009 2:33:00 AM

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தையை இப்படித் தினமணி சீண்டுவதா ? கூடாது. அடுத்தமுறை மகிந்தவை சந்திக்கும் போது சிறுத்தை சீறிப்பாய்ந்து குதறிவிட்டுத்தான் மறுவேலை செய்வார். ஏதோவொரு பழமொழிதான் ஞாபகம் வருது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுத்தையை இப்படித் தினமணி சீண்டுவதா ? கூடாது. அடுத்தமுறை மகிந்தவை சந்திக்கும் போது சிறுத்தை சீறிப்பாய்ந்து குதறிவிட்டுத்தான் மறுவேலை செய்வார். ஏதோவொரு பழமொழிதான் ஞாபகம் வருது.

சாந்தி அக்கா இந்த பழமொழி தானே..

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனது போல...

அரசியல்லை இதெல்லாம் சகஜமப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

திருமா அவர்களுக்கு வரும் கோபம் நியாயமானதா இல்லையா என்பது கேள்விக்குறிதான்.

இவ்வளவு காலமும் ஈழத்தமிழர்க்காகப் போராடினார் என்பதெல்லாம் சரிதான், ஆனால் முள்ளிவாய்க்காலில் சோனியாவும் மகிந்தவும் ரத்தக்குளியல் செய்தபோது எப்படி அவரால் சோனியாவுடன் போய்ச் சேர முடிந்தது? அதை எப்படி நியாயப்படுத்துவார்?? மகிந்தவுடன் உணவுண்டதை எப்படி நியாயப்படுத்துவார்?? மகிந்த சொன்ன மண்டையில் போடும் கதையை எப்படி நகைச்சுவையாக எடுத்துக்கொண்டார்??

நாடாளுமன்றத்தில் தமிழர்க்காக பேசுவதாகச் சொல்கிறாரே? எந்தப் பாராளுமன்றத்தில்? தில்லியிலா?? யாரை நம்பச் சொல்கிறார்?? கருணாநிதியிடம் சரனடைந்து தனது அனைத்து உணர்வுகளையும் கதிரைக்காக விற்றுவிட்ட இவரை நான் இனியும் எதிர்பார்க்கவில்லை.

இதையெல்லாம் கேட்டால் நண்பர்களை இழக்கிறீர்கள், எதிரிகளை அதிகமாக்குகிறீர்கள் என்றெல்லாம் கதைக்க வந்துவிடுவார்கள். ஆளை விடுங்கள் !!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.