Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னம்பலங்களின் வெளியேற்றங்களும் தமிழ் மக்களின் தீர்ப்புக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னம்பலங்களின் வெளியேற்றங்களும் தமிழ் மக்களின் தீர்ப்புக்களும் - இரா.துரைரத்தினம்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறிவிட்டார் என்ற செய்தி தமிழ் மக்களின் அரசியல் தலைமையை பிளவு படுத்தி சிதைக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்டு வந்தவர்களுக்கு மிக உவப்பான செய்தியாக இருந்தாலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்தவர்களுக்கு மிகுந்த வேதனை தருகின்ற விடயம் தான்.

காலத்தின் தேவை கருதி பலமான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காக உழைத்த நண்பர் சிவராமின் ஆத்மா இந்த செய்தியைக்கேட்டு நிட்சயம் துடித்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறியதற்கு அவர் தெரிவித்த காரணங்கள் பற்றி பார்ப்பதற்கு முதல் கடந்த காலங்களில் பொன்னம்பலங்களின் வெளியேற்றங்களும் அரசியல் நடவடிக்கைகளும் பற்றி பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக நடத்தி வரும் ஆலோசனைக்கூட்டம் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக நடந்து வருகிறது. மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களின் வேட்பாளர்கள் தெரிவு நிறைவடைந்த நிலையில் அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்தார்.

வன்னி மாவட்டம் மற்றும் யாழ் மாவட்டங்களுக்கான வேட்பாளர் தெரிவு நடைபெற்ற போதே கஜேந்திரகுமார் அந்த வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வெளியேறியிருக்கிறார்.

இந்த வெளியேற்ற காட்சி என்பது எனக்கு கடந்த காலங்களில் பொன்னம்பலங்களின் வெளியேற்றங்கள் சில நினைவுக்கு வருகிறது.

1976ஆம் ஆண்டு தமிழீழ தனியரசு தீர்மானத்தை தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேசிய மாநாட்டில் நிறைவேற்றி அதை ஒரு பொதுஜன வாக்கெடுப்பாக முன்வைத்து 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி போட்டியிட்டது அனைவரும் அறிந்த விடயம். அந்த நேரத்தில் அனைத்து தமிழர்களும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் கொள்கையின் கீழ் அணிதிரண்டிருந்தனர். ஆனால் குமார் பொன்னம்பலம் 1977ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு எதிராக யாழ்ப்பாண தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு படுதோல்வியடைந்தார் என்பது பலருக்கு நினைவிருக்கலாம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவின் போது எவ்வாறு வெளியேறினாரோ அதேபோல 1977ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் தெரிவின் போதும் குமார் பொன்னம்பலம் வெளியேறி சர்ச்சை ஒன்றை உருவாக்கியிருந்தார்.

1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்காக தமிழர் விடுதலைக்கூட்டணி தொகுதி ரீதியாக வேட்பாளர் தெரிவில் ஈடுபட்ட போது( 1977ஆம் ஆண்டில் தொகுதி வாரியான தேர்தலே நடைபெற்றது) வட்டுக்கோட்டை, நல்லூர், கிளிநொச்சி தொகுதிகள் தமிழ் காங்கிரஷ் கட்சிக்கும் யாழ் மாவட்டத்தில் ஏனைய தொகுதிகளில் தமிழரசுக்கட்சியைச்சேர்ந்தவர்களுக்கு ஒதுக்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு தேர்தலில் இந்த மூன்று தொகுதிகளிலுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இதன் அடிப்படையிலேயே வட்டுக்கோட்டை, நல்லூர், கிளிநொச்சி தொகுதிகள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியைச்சேர்ந்தவர்களை நிறுவத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அந்த வேட்பாளர் தெரிவுக்குழு நல்லூர் தொகுதிக்கு சிவசிதம்பரத்தையும், வட்டுக்கோட்டைத்தொகுதிக்கு குமார் பொன்னம்பலத்தையும், கிளிநொச்சி தொகுதிக்கு ஆனந்தசங்கரியையும் நிறுத்துவதென முடிவு செய்த போது குமார் பொன்னம்பலம் பல நிபந்தனைகளை விதித்ததுடன் யாழ்ப்பாணத்தொகுதியே தமக்கு வேண்டும் என விடாப்பிடியாக இருந்தார்.

அதன் பின்னர் நல்லூர் தொகுதியில் அவரை நிறுத்துவதற்கு தெரிவு குழு ஓரளவிற்கு இணங்கி வந்த போதிலும் அதையும் நிராகரித்த குமார் பொன்னம்பலம் தான் யாழ்ப்பாணத்தொகுதியிலேயே போட்டியிடப்போவதாக கூறி தமிழர் விடுதலைக்கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

அந்த நேரத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியிலிருந்து பிளவுகள் ஏற்படுவதையோ தமிழ் மக்களின் ஒற்றுமை சிதைவடைவதையோ விரும்பாத பல பிரமுகர்கள் குமார் பொன்னம்பலத்தை சமாதானப்படுத்தி ஒரு இணக்கத்திற்கு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர் தமிழர் விடுதலைக்கூட்டணியிலிருந்து விலகி தனியாக போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியை எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாது என்ற உண்மையை பலரும் எடுத்துக்கூறினர். ஆனால் அதற்கு குமார் பொன்னம்பலம் இணங்கவில்லை.

இதன் பின்னர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத்தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் யோகேஸ்வரனும், சுயேச்சையாக குமார் பொன்னம்பலமும் போட்டியிட்டனர். அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழர் விடுதலைக்கூட்டணியையும் அவர்களின் வட்டுக்கோட்டைத்தீர்மானத்தையும் மிக மோசமாக தாக்கி பிரசாரங்களை மேற்கொண்டவர் குமார் பொன்னம்பலம்தான் என்பது அன்றைய அரசியலை அறிந்து கொண்ட பலரும் அறிந்த ஒரு விடயம் தான். அந்த தேர்தலில் குமார் பொன்னம்பலம் கட்டுப்பணத்தையும் இழந்து படுதோல்வியைச்சந்தித்தார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் உருவாக்கத்திலும் சரி அதன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்தின் போதும் சரி அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியே ஏனைய கட்சிகளை விட முரண்டு பிடித்து பல நிபந்தனைகளை விதித்து இந்த இணைப்புக்களுக்கு பின்னடித்தது என்பதையும் நாம் மறக்க முடியாது.

ஆனால் வடபகுதியை மட்டும் மையப்படுத்தியிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் அறியப்படாத செல்வாக்கில்லாத கட்சியாக இருந்ததுடன் மலையக தமிழ் மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு கட்சியாகவும் இருந்து வந்தது.

தமிழ் கட்சிகளில் மிகவும் பழமைவாய்ந்த கட்சி என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி கூறப்படுகின்ற போதிலும் கிழக்கு மாகாணத்தில் அக்கட்சி முக்கியமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஒரு போதுமே கால் வைத்ததும் இல்லை, தேர்தலில் போட்டியிட்டதும் இல்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் வடமாகாணத்தை முக்கியமாக யாழ்மாவட்டத்தை மையப்படுத்தியே தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. ( மேற்குலக நாடுகளில் உள்ள சிலர் இன்று நினைப்பது போல அவர்களும் அந்த நேரத்தில் யாழ்ப்பாணம் மட்டும்தான் தமிழ் ஈழம் என நினைத்திருக்கலாம்)

1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் சிறிலங்காவை குடியரசாக பிரகடனப்படுத்தி புதிய அரசியல் யாப்பை கொண்டுவந்த போது அதற்கு தமிழரசுக்கு கட்சி எதிர்ப்பை தெரிவித்த போது அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியைச்சேர்ந்த அருளம்பலம், தியாகராசா ஆகியோர் சிறிமாவோ அரசாங்கத்திற்கு ஆதரவை தெரிவித்தனர். கிளிநொச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழ் கட்சிகளை இணைந்து ஒரு கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அக்கட்சியின் முக்கியஸ்தர்களான சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி, வவுனியா சிவசிதம்பரம் உட்பட பலர் ஆதரவு தெரிவித்த போதிலும் அக்கட்சியின் தலைவரான ஜி.ஜி.பொன்னம்பலம் பல நிபந்தனைகளை விதித்து வந்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன.

ஒருவாறு பிற்பட்ட காலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் இணைக்கப்பட்டது.

அதேபோல 2000ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது ஏனைய கட்சிகளை விட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியே பல நிபந்தனைகளை விதித்து சிக்கல்களை உருவாக்கினார்கள்.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டாலும் தமது கட்சியே அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் தமது கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னமே பொதுக்கட்சிக்கான சின்னமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்;தனர். யாழ். மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் தமது கட்சியைச்சேர்ந்தவர்களே தலைமை வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை கூட முன்வைத்தனர்.

சில கட்டங்களில் இவர்களின் நிபந்தனைகளினால் கோபமடைந்த சிவராம் தலைமையிலான ஊடகவியலாளர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியுடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறி வந்திருக்கிறார்கள்.

மிகவும் பலமான கட்சியாக வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் திகழ்ந்த தமிழர் விடுதலைக்கூட்டணி விதிக்காத நிபந்தனைகளையும் நெருக்கடிகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் அந்த நேரத்தில் கொடுத்திருந்தது என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்த ஊடகவியலாளர்களில் ஒருவனான நான் அனுபவபூர்வமாக அறிந்திருந்தேன்.

சரி அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஏன் தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது, இந்த வெளியேற்றம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் களத்தை பாதிக்குமா என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் நடைபெற்ற போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்குழுவில் இருந்து அந்த தெரிவுகளுக்கு முழுமையாக ஆதரவை வழங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அம்மாவட்டங்களின் வேட்பாளர் பட்டியல் தெரிவு நிறைவடைந்த பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் தெரிவு நடைபெற்ற வேளையிலேயே சில நிபந்தனைகளை வைத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

யாழ்.மாவட்டத்தில் வேட்பாளர் தெரிவின் போது தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஷ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் தமது கட்சிகளுக்கு கிடைத்த விண்ணப்பங்களை தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பித்து அவற்றை ஆராந்து கொண்டிருந்தன.

2001ஆண்டு இக்கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட போது ஒவ்வொரு கட்சிகளிலிருந்தே வேட்பாளர்களை தெரிவு செய்வதென்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு அவற்றின் முடிவுகளுக்கு கட்டுப்பாடாத போது அவர்கள் மீது அந்தந்த கட்சிகளே ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2004ஆம் ஆண்டு இதற்கு விதிவிலக்காக விடுதலைப்புலிகளும் தமக்கு ஆதரவான சிலரின் பெயர்களை சிபார்ச்சு செய்த காரணத்தால் அந்த தேர்தலில் இந்த நான்கு கட்சிகளை சேராதவர்களும் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களும் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இம்முறை 2001ஆம் ஆண்டு தேர்தலின் போது எவ்வாறு கட்சிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதோ அதேபோன்றே இம்முறையும் கட்சிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றே வேட்பாளர்களை தெரிவு செய்வது என கடந்த மூன்று வாரங்களுக்கு முதலே தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவு எடுத்த போது அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பூரண சம்மதத்தை தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்ட வேட்பாளர் தெரிவு நிறைவடைந்து யாழ் மாவட்ட வேட்பாளர் தெரிவு நடைபெற்றுக்கொண்டிருந்த போதுதான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கையில் இரு நாடு என்ற கோரிக்கையை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார்.

(அவ்வாறானால் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்கள் தமிழீழ தனியரசுக்குள் வரவில்லையா என்ற கேள்வி எழுகிறது. )

தேர்தல் முடிவடைந்த பின்னர் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற குழு இது தொடர்பாக செயற்படுவதென முடிவு எடுத்த பின்னர் வெள்ளிக்கிழமை மாலை கஜேந்திரகுமார் மீண்டும் புதிய நிபந்தனை ஒன்றை முன்வைத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சார்பில் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த தன்னுடைய பெயரையும் விநாயமூர்த்தியின் பெயரையும் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் பெயர்களை சேர்க்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இது வேட்பாளர் தெரிவுக்குழுவுக்கு சங்கடங்களை ஏற்படுத்தினாலும் அவற்றை பரிசீலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதுதான் ஞாயிறு காலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து தான் வெளியேறுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்த போதிலும் தமது கட்சியைச்சேர்ந்த ஏனையவர்கள் தொடர்பாக அவர் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

அவரின் வெளியேற்றம் என்பது அவரின் சுயமான முடிவு இல்லை என்றும் பிரித்தானியாவில் உள்ள சிலரின் அழுத்தம் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியார் சிலரின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் கருதினாலும் என்னைப்பொறுத்தவரை இது பொன்னம்பலங்களின் குழப்பகரமான அரசியல் பயணங்களில் ஒன்றுதான்.

தமிழ் காங்கிரஷ் கட்சியின் இந்த வெளியேற்றம் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் ஒரு வீதம் கூட பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால் யாழ் மாவட்டத்தில் மட்டுமே ஒரளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். யாழ். மாவட்டத்தில் கூட குமார் பொன்னம்பலத்தின் மறைவின் பின்னர் ஓரளவுக்கு அனுதாபம் காரணமாக 2000ஆம் ஆண்டில் ஒரு ஆசனத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி பெற்றிருந்தது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை பிளவு படுத்த வேண்டும் பலவீனப்படுத்த வேண்டும் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த சம்பந்தனை ஓரங்கட்ட வேண்டும் என மகிந்த ராசபக்ச அரசும், மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளும் கங்கணம் கட்டி செயற்பட்டனர். அண்மைக்கால நகர்வுகளைப்பார்க்கும் போது இந்த இரு தரப்பினரின் முயற்சிளும் வெற்றிபெற்றுவருவதாகவே தெரிகிறது.

எது எப்படி இருந்தபோதிலும் மகிந்த ராசபக்ச அரசும் சிங்கள தேசமும் எதிர்பார்ப்பது போல அல்லது மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளின் எண்ணங்களுக்கு இசைவான தீர்ப்பை நிட்சயம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் வழங்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

இரா.துரைரத்தினம்.

ஊடகவியலாளர்.

பலர் சரித்திரமே தெரியாமல் தான் அலம்பிக்கொண்டிருந்தார்கள்.எல்லோரும்வாசிக்க வேண்டிய கட்டுரை.இணைப்பிற்கு நன்றி.

குமார் பொன்னம்பலம் ஞானாஸ்ஞானம் பெற்று மாமனிதரானது வேறு கதை

சம்பந்தரை தூக்கி வைத்து எழுத வேண்டும் என்ற நோக்கிலே பிரதேசவாதத்தை முன்நிறுத்தி எழுதப்பட்ட ஆக்கமிது.

சம்பந்தர் செய்த தவறுகளை சுட்டிக்காட்ட தவறிய கட்டுரையாளர் கஜேந்திரன் பொன்னம்பலம் அவரின் முடிவை கட்சியின் முடிவாக மாற்றியமைத்து கதையளக்கிறார்.

கட்டுரையாளர் நினைப்பது போல வடகிழக்குதமிழ் மக்கள் தீர்ப்பை வழங்கினால் அதன் மூலம் கிடைக்ககூடிய பலாபலன்களையும் பட்டியலிடுங்கள்.

கோவணமும் பறிபோன நிலையில் உள்ள தமிழ் மக்கள் இன்று சம்பந்தரின் முடிவால் கோவணத்திற்குள் இருந்ததையும் பறிகொடுக்க போகிறார்கள்.

முன்பு குறிப்பிட்ட தமிழ் கூடமைப்புகளுக்கும் அக்கால சூழ்நிலைகளுக்கும், தற்போது சம்பந்தன் இழுத்துக்கொண்டு செல்லும் கூத்தமைப்புக்கும் சூழ்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், உந்த ஆசிரியரின் ஒப்பீட்டு முயற்சி நேர்மையற்றது என்பது தெளிவாகிறது.

தற்போதைய சம்பந்தன்-கூத்தமைப்பு தமிழின கொலைகாரர்களுக்கு அடிவருட முனைகிறது. அயல் நாடில் இருக்கும் தமது குடும்பத்தினரின் நலனை முன்னிலைப்படுத்தி, போலி வாக்குறுதிகளை மனம்போன போக்கில் அள்ளித்தெளித்து செயற்பட முற்படுகிறது.

உந்த கூட்டமைப்பு முயற்சியின் போது நடந்த பலதரப்பு நிலைப்பாடுகளையும் நாமும் அறிவோம். ஏனையவர்களும் முரண்பாடான, நோக்கத்துக்கு ஒத்துவராத விடயங்களில் நீண்டகாலத்தை விரயம் அடித்ததும் தெரியும்.

எனவே ஒருவரது முரண்பாட்டை தூக்கிபிடிக்கும் துரைரத்தினத்தின் நயவஞ்சக பக்கச்சார்பு சரியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதய கூட்டமைப்பின், இந்திய சார்புதன்மை பற்றியும் பத்திரிகையாளர் கருத்து தெரிவித்து இருக்கலாம். கஜேந்திரனுக்கு சீட்டு கொடுக்க மறுத்தற்கான காரணங்களையும் அலசி இருக்கலாம்.

Edited by சித்தன்

ஆக சம்பந்தரின் நிலைப்பாடுகள் குறை இல்லை, அவர் விலக்கியவர்களோடு போய் சேர்ந்து கொண்ட பொன்னம்பலத்தாரின் பேரன் கெட்டவரோ...??

அது சரி பத்திரிகையாளன் எண்று வந்து விட்டால் நடு நிலைமையோடு யோசிக்க கூடாது எண்டது சட்டம் தானே...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் காங்கிரஷ் கட்சியின் இந்த வெளியேற்றம் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் ஒரு வீதம் கூட பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.

அம்பாறையைப் பிரதிநிதிப்படுத்த தமிழர் எவரும் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள்.

மட்டக்களப்பில் 3 பேருக்குமேல் தமிழ் உறுப்பினர்கள் தெரிவானால் ஆச்சரியம்தான்!

திருமலையில் அ.இ.த.கா. போட்டியிடுவதால், தமிழர் வாக்குச் சிதறலாம். சம்பந்தர் தெரிவாகக் கூடாது என்றுதான் அ.இ.த.கா.அங்கு போட்டியிடுகின்றது. எல்லாம் ஏப்பிரலில் தெரியும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.