Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச இராஜதந்திரத்தைக் கையாண்டால், மக்களவை புலம் பெயர் ஆதரவுத் தளத்தை தக்கவைக்கும் நகர்வினை எடுக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்திற்கேற்ற பெறுமதியான கட்டுரை வழக்கம் போல கோப்பி தேத்தண்ணி எண்டு சண்டை பிடிக்காமல் விசயத்தை பாருங்கண்நோய்.............. :rolleyes:

பல தளங்களிலும் நாம் பயணம் செய்தாகவேண்டும் : நிராஜ் டேவிட்

[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 11:43.14 AM GMT +05:30 ]

விடுதலை வேண்டிப் போராடிவரும் ஈழத்தமிழ் இனம் ஒரே நேரத்தில் பல தளங்களிலும் பயணம் செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக சில புத்தி ஜீவிகள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

உலக அரங்கில் ஒரு பக்கத்திற்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதென்பது எமது போராட்டத்தை பின்தள்ளிவிடவே வழி கோலும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்

ஒரு தரப்பை அல்லது ஒரு நாட்டை மாத்திரம் நம்பி தமது இருப்பு, நகர்வுகள், எதிர்காலம் போன்றனவற்றை ஒப்படைப்பதைத் தவிர்த்து, பல நாடுகள், பல அமைப்புக்கள், என்று ஈழத் தமிழர் வியூகம் அமைத்தால் எம்மால் ஒரு விடுதலையை நோக்கிப் பயணிக்க முடியும் என்ற சிலரது வாதம் பற்றி நாம் சற்றுச் சிந்தித்துத்தான் ஆகவேண்டி இருக்கின்றது.

அதாவது நாம் உதவி பெறுவதோ, தங்கியிருப்பது ஒரு நாடு என்றிருக்காமல் முடியுமான பக்கங்களில் இருந்தெல்லாம் உதவிகளைப் பெற்று, பல தளங்களிலும் காய்களை நகர்த்தி எமது விடுதலையை நோக்கிப் பயணிக்கவேண்டும்.

உதாரணத்திற்கு நாம் அமெரிக்காவுடனும் நட்பு பேணவேண்டும். கியூபாவுடனும் பேசவேண்டும். இந்தியாவையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். முடியுமானால் சீனாவிடமும் பொருளாதாரம் செய்யவேண்டும். இது அனைத்தையும் இழந்துவிட்டு நம்பிக்கை என்கின்ற ஒன்றை மாத்திரமே பலமாகக் கொண்டு நகர முற்படுகின்ற எமது இனத்திற்குப் பெரிதும் பலம் சேர்க்கின்ற ஒன்றாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.

„இது இரண்டு தோணியில் கால் வைக்கின்ற செயல். ஒருபோதும் கரை போய் சேர முடியாது“ என்று சிலர் கூறலாம். ஒருவனாகப் பயணம் செய்கின்ற பொழுதுதான் அவன் இரண்டு தோணியில் கால் வைக்க முடியாது. பலர் பயணம் செய்கின்ற பொழுது, சிலர் அமெரிக்கா என்கின்ற தோணியிலும், சிலர் இந்தியா என்கின்ற தோணியிலும், சிலர் சீனா என்கின்ற தோணியிலும் பிரிந்து பிரிந்து பயணம் செய்கின்ற பொழுது, ஏதாவது ஒரு தோணியாவது எங்களைக் கரை கொண்டுபோய் சேர்த்துவிடும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

இதற்கு முதலில் ஈழத் தமிழர் என்பவர்கள் தனி மனிதன் அல்ல என்பதையும், நாங்கள் பலர் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். பல தோணிகளில் பயணம் செய்கின்ற வித்தையை நாங்கள் எங்கள் எதிரியைப் பார்த்துக்கூட கற்றுக் கொள்ள முடியும்.

சிறிலங்கா தேசம் அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கியது. சீனாவைத் துணைக்களைத்துச் சண்டை போட்டது. பாகிஸ்தானின் விமானங்களை வரவழைத்து குண்டு வீசியது. இந்தியாவிடம் இருந்து ராடர் கருவிகளைப் பெற்று தன்னைக் காத்துக்கொண்டது. இஸ்ரேலுக்கு தனது படைவீரர்களை அனுப்பி பயிற்றுவித்தது. ஈரானுக்கு தனது அரச தலைவரை அனுப்பி கைலாகு கொடுத்தது. இப்படி பல தளங்களிலும் நின்று இராஜதந்திரம் செய்ததால்தான் சிறிலங்கா தேசம் ஒரு இமாலய வெற்றியை அதனது வரலாற்றில் பெற முடிந்தது.

இஸ்ரேல் தேசம் உருவாகிய பொழுது அதற்கு பிரித்தானியா, அமெரிக்கா ஆதரவு தெரிவித்த அதேவேளை ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்தது. இஸ்ரேலின் உருவாக்கம் முதற்கொண்டு ஈரானுடனும் இஸ்ரேல் மிக நெருக்கமான உறவைப் பேணி வந்ததையும், அரபு உலகுடன் இஸ்ரேல் மோசமான யுத்தம் புரிந்துகொண்டிருந்த காலங்களில் இஸ்லாமிய நாடான ஈரானிடம் இருந்து இஸ்ரேலினால் பல உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததையும் இந்த இடத்தில் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.

இதைத்தான் இராஜதந்திரம் என்று கூறுவது. இந்த ராஜதந்திரத்தை நாம் சரியாக எமது கடந்த காலத்தில் செய்யவில்லை.

இந்தியாவை நம்பியிருந்த பொழுது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக நாம் அமெரிக்காவைப் புறக்கணித்தோம். எம்.ஜீ.ஆரைச் சார்ந்திருந்த பொழுது அவரைத் திருப்திப்படுத்த கருணாநிதியைப் புறக்கணித்தோம். திராவிடக் கட்சிகளைத் திருப்திப்படுத்த விஷ்வ இந்து பரிசாத் தலைவர் பால்தாக்ரே நீட்டிய நேசக்கரத்தை தட்டிவிட்டோம். மேற்குலகைத் திருப்திப்படுத்த போராடும் இனங்களின் காவலன் என்று கூறப்படுகின்ற கியூபாவையும், ரஷ்யாவையும் நிராகரித்தோம். கடைசியில் எந்தத் தோணியிலும் நாம் ஏறாமல் நடுக் கடலில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றோம்.

1984ம் வருடம், அப்பொழுது தமிழீழ விடுதலைக்காக வேண்டிப் போராடிவந்த தமிழ் அமைப்புக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும், விடுதலையின் அவசியம் பற்றி ஆராய்வதற்கும் என்றும் கூறி அமெரிக்க நியூயோர்க் நகரில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ~தமிழீழ ஆதரவு மாநாடு| என்ற பெயரில் அமெரிக்காவில் இருந்த ஈழத்தமிழர்கள் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஈழத் தமிழ் இயக்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

~அமெரிக்காவின் கரங்களுக்குள் போராட்ட அமைப்புக்களைக் கொண்டுசெல்லும் நோக்கத்துடனேயே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாக| தமிழ் இயக்கங்கள் இந்த மாநாடு பற்றி குற்றம் சுமத்தி மாநாட்டை புறக்கணித்திருந்தார்கள். இந்த மாநாட்டு ஏற்பாட்டாளர்களுள் முக்கியமான ஒருவரான டாக்டர் பஞ்சாட்சரம் என்பவர் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ அமைப்பின் ஒரு உளவாளி என்றும் சந்தேகம் தெரிவித்த தமிழ் இயக்கங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அப்பொழுது மறுப்பு தெரிவித்திருந்தார்கள்.

ஈழப் போராட்ட அமைப்புக்களின் பிரசன்னம் இல்லாமல் நடைபெற்ற இந்த மாநாட்டில் ~தமிழர் தாயகம்| என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக ஒரு தமிழர் தேசத்தைக் கோரி பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்த மாநாடு பற்றிக் கருத்துத் தெரிவித்த ஈழப் போராட்ட அமைப்புக்கள், இது அமெரிக்கா சீ.ஐ.ஏ. இன் சதி என்றே தெரிவித்திருந்தன. ஆனால் அதே அமெரிக்காவில்தான் இன்று நாடு கடந்த தமிழீழ அரசை ஈழத் தமிழர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள்:

இந்த இடத்தில் 1964 இல் நடைபெற்ற மாநாடு சரி-பிழை என்றோ அல்லது நாடுகடந்த அரசாங்கம் சரி-பிழை என்றோ நான் கூறவரவில்லை. 1984 இல் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நகர்வை நாங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதைத்தான் நான் இங்கு சுட்டிகாட்ட விரும்புகின்றேன்.

அந்த நேரத்தில் இந்தியாதான் ஈழத் தமிழருக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருந்தது. அந்த நேரத்தில் அமெரிக்காவுடன் நாம் கைகோர்த்திருந்தால் இந்தியா எங்களை கைகழுவி விட்டிருக்கும் என்று சிலர் வாதாடலாம். அந்த வாதத்தில் உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது.

இதற்கும் சிங்கள தேசத்திடம் இருந்தே நாம் கற்றுக்கொள்ளவேண்டும். சிங்கள தேசம் எப்படி எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் நாடுகளை, சக்திகளை தனக்கு ஏற்றாற்போன்று கையாளுகின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் சில விடயங்களை எங்களால் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஜே.ஆர். அமெரிக்காவுடன் பேசுவார். இஸ்ரேலை அழைத்து இலங்கையில் நிறுத்துவார். அதேவேளை, சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சர் ஏ.சீ.எஸ் கமீது அரபு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரபு நாடுகளைச் சமாளிப்பார். அரபு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளைப் பெற்று வருவார்.

ஒரு பக்கம் சந்திரிக்கா இந்தியாவுக்குச் சென்று கூடிக் குலாவுவார். மறுபக்கம் மகிந்த பலஸ்தீன உதவி வழங்கும் அமைப்புகளுக்கு தலைமை வகிப்பார். அதேவேளை லக்ஷ்மன் கதிர்காமரோ மேற்குலக ராஜதந்திரிகளைச் சமாளிப்பார்.

மகிந்த இந்தியாவுடன் ஒப்பந்தம் பற்றிப் பேசுவார். ஜே.வி.பி அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சீனாவுடன் சிறிலங்கா தேசத்தை நட்பாக வைத்திருக்கும். – எப்படி பல தோணிகளில் பயணம் செய்வதென்பதும், எப்படி பல தரப்புக்களில் இருந்தும் நன்மைகளைப் பெற்று எமது பாதையைச் செப்பனிடுவது என்பதும்- நாங்கள் சிங்களத்திடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

எமது போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற ஒரு உதாரணத்தை இந்த இடத்தில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

இந்தியாவைத் தளமாகக் கொண்டு, உலகளாவிய ரீதியில் மிகவும் பலமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இந்து அடிப்படைவாத அமைப்புத்தான்: ‘விஷ்வ இந்து பரிஷாத் அமைப்பு‘. இந்த அமைப்பின் தலைவராக இருந்த பால்-தர்க்கரே இந்தியாவில் மிகவும் பிரபல்யமான ஒரு தலைவர். இந்தியாவின் ஆட்சியைத் தீர்மானிப்பதில் முக்கியமானவர். இவர் ஒரு சந்தர்ப்பத்தில் விடுதலைப் புலிகளை நோக்கி நேசக்கரம் நீட்டியிருந்தார்.

„பிரபாகரன் ஒரு இந்து. விடுதலைப் புலிகள் இந்துக்கள். ஈழத் தமிழர் இந்துக்கள். எனவே அவர்களை காப்பாற்றும் கடமையும், அவர்களுக்கு ஆதரவு வழங்கும் கடமையும் ஒவ்வொரு இந்துவுக்கும் உள்ளது. அந்த வகையில் விஷ்வ இந்து பரிஷாத் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்க விரும்புகின்றது“ என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

ஆனால் அந்த நேசக் கரத்தை விடுதலைப் புலிகள் தட்டிவிட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் மதச் சார்பற்ற கொள்ளை, நிலைப்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அத்தோடு இந்தியாவில் விடுதலைப் புலிகளின் மிக நெருங்கிய ஆதரவாளர்களாகவும், நண்பர்களாகவும் இருந்தவர்கள், விஷ்வ இந்து பரிசாத் அமைப்பின் மிக மோசமான விரோதிகளான திராவிடக் கட்சிகள். எனவே திராவிட அமைப்புக்களின் தோழமையை இழந்துவிடாமல் இருப்பதற்காகவும் விஷ்வ இந்து பரிசாத் அமைப்பின் சேநக்கரத்தை விடுதலைப் புலிகள் பற்றிப்பிடிக்கவில்லை.

இதனைத் தவறு என்று நான் கூறவரவில்லை. விடுதலைப் புலிகள் செய்தது சரியான ஒரு நடவடிக்கைதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் எமது சமூகத்தின் தவறைத் தான் நான் இங்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றேன்.

விஷ்வ இந்து பரிஷாத்தின் நேசக்கரத்தை விடுதலைப் புலிகள் பற்றிப் பிடிக்காதிருந்தாலும், ஈழத்தில் இருந்த இந்து அமைப்புக்கள் நிச்சயம் பற்றிப் பிடித்திருக்கவேண்டும். விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை அமைப்பாக விஷ்வ இந்து பரிசாத்தின் உதவிகளைப் பெறுவதில் சிக்கல்கள், சங்கடங்கள் இருந்திருந்தாலும், வேறு ஒரு அமைப்பை மறைமுகமாக ஊக்குவித்திருப்பதன் ஊடாக, உலக இந்துச் சமூகத்தின் நட்பு வலயத்தை உருவாக்கியிருக்கலாம்.

ஏனெனில், உலகில் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்தான். கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களுக்கு அடுத்ததாக உலகில் அதிமானோர் வழிபற்றும் மதம் இந்து மதம்தான். உலகில் சுமார் 837 மில்லியன் மக்கள் இந்து மதத்தை பின்பற்றி வருகின்றார்கள். உலக சனத்தொகையில் சுமார் 13 வீதமானவர்கள் இந்துக்கள். இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈழத் தமிழரின் போராட்டத்தில், உலகம் முழுவதும் பரவி வாழும் இந்துக்களை நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும், இந்து ஆதரவுத் தோணியில் நாம் பயணிக்கவில்லை என்பதும் ஈழத் தமிழர் விட்ட மிகப் பெரிய தவறுகளில் ஒன்று என்றுதான் கூறவேண்டி இருக்கின்றது.

வாசல்தேடி வந்த ஒரு நட்பு சக்தியை சரியாகக் கையாளாதது உண்மையிலேயே ஈழத் தமிழர் விட்ட பெரிய பிழை என்றுதான் நான் கூறுவேன்.

வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவம் கால் வைத்த ஒவ்வொரு தெருக்களிலும் இந்து ஆலயங்கள், வழிபாட்டு தலங்கள், கடைசி ஒரு சூலமாவது நட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்தியப் படைகள் நுழைந்த ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறைகள் இருக்கத்தான் செய்தன. நாங்கள் உலக இந்து அமைப்பை சரியாகக் கையாண்டிருந்தால், எந்த தெருக்களில் சிறிலங்கா இராணுவத்தின் சப்பாத்துக் கால்கள் நடந்திருந்தாலும், தமிழரின் எந்த வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்டாலும், அது இந்து வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல்களாக மாற்றப்பட்டு உலகளாவிய ரீதியில் ஒரு பெரிய எதிர்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.

இதேபோன்றுதான், கிறிஸ்தவர்கள் என்கின்ற ஒரு பெரிய தோணியையும் ஈழத் தமிழர் தமது விடுதலைப் பயணத்தில் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

உதாரணத்திற்கு கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக மேற்குலகின் பல தெருக்களிலும் ஈழத் தமிழர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தமது கைகளில் புலிக்கொடிகளையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படங்களையும், வன்னியில் படுகொலை செய்யப்பட்டு மக்களின் இரத்தம் தோய்ந்த காட்சிகளையும் தாங்கிக்கொண்டு வீதிகளில் இறங்கியிருந்தார்கள். உலகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் இந்த கவனயீர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதில் எங்களால் பெரிதாக வெற்றி காண முடிந்ததா என்று பார்த்தால்;- அதில் பாரிய அளவிற்கு எம்மால் வெற்றியீட்டியிருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

அதேவேளை, ஈழத் தமிழரில் ஒரு சிறிய குழு கைகளில் சிலுவைகளையும், பைபிளில் அநீதிக்கு எதிராக கூறப்பட்டிருக்கின்ற சில வாக்கியங்களையும், பாதிக்கப்படுகின்றவர்களுக்கு உதவேண்டும் என்ற கிறிஸ்துவின் போதனைகள் அடங்கிய பதாதைகளையும், வன்னியில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், தேவாலயங்கள் போன்றனவற்றின் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களையும் சுமந்தபடி வீதிகளில் இறங்கியிருந்தால், மேற்குலகின் அத்தனை கவனமும் நிச்சயம் எம்மை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எங்களில் ஒரு தரப்பு அவ்வாறு செய்திருந்தால், எமது பிரச்சனையையும், எமக்கு நடந்த அநீதிகளையும் உலகம் பார்த்திருக்கும். எமக்கெதிரான அவலத்தைத் தடுக்க மேற்குலகம் நிச்சயம் முயன்றிருக்கும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் சுமார் 500 இற்கும் அதிகமான கிறிஸ்தவ சபைகள் ஈழத் தமிழர்களால் நடாத்தப்படுகின்றன. இந்தச் சபைகளை நாம் எமது போராட்டத்தின் ஒரு அங்கமாக மாற்றவில்லை என்பது உண்மையிலேயே ஒரு பின்னடைவு என்றுதான் நான் கூறுவேன்.

போராட்டத்தின் அங்கமாக மாத்திரமல்ல போராட்டத்தின் எதிரிகளாகவும் கூட சில பொறுப்பாளர்களால் இந்தச் சபைகள் கையாளப்பட்ட சம்பவங்கள் ஏராளம் இருக்கின்றன. புலம் பெயர் தமிழ் தேசிய ஊடகமாக ஒரு காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட ரி.ரி.என் தொலைக்காட்சி ஒரு கிறிஸ்தவ சபையின் விளம்பரத்தை ஒளிபரப்புவதற்கு மறுத்ததை அந்தச் சபையின் போதகர் ஒரு தடவை என்னிடம் கூறி மனவருத்தப்பட்டார்.

விடுதலைப் புலிகளால் சுவிஸ்சில் வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகையில் கிறிஸ்தவ சபை ஒன்றின் முக்கிய நிகழ்ச்சி பற்றி வெளிவந்த விளம்பரம் தொடர்பான பிரச்சனை வன்னிவரை செய்றிருந்தது.

இப்படி கிறிஸ்தவ மத அமைப்புகளுக்கு எதிராக தேசியம் பேசிய எம்மில் சிலரால் மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதங்கள் பற்றி பல முறைப்பாடுகள் இருக்கின்றன.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பொறுப்புக்களில் இருந்த சிலரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, மதநம்பிக்கை காரணமாக இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்கள், புலம்பெயர் நாடுகளில் இருந்த கிறிஸ்தவ மத அமைப்புக்களை போராட்டத்தில் இருந்து அன்னியப்படவைத்திருந்தது என்பதான ஒரு சுயவிமர்சனத்தை இந்தச் சந்தர்பத்தில் செய்வது அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.

இதேபோன்றுதான் இலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இஸ்லாமிய சமூகத்தை எமது போராட்டத்துடன் இணைத்துக்கொள்ளாததையும் குறிப்பிட வேண்டும்.

தமிழ் மக்களைப் போலவே இலங்கையில் ஏராளமான அடக்குமுறைகளை எதிர்கொண்ட, எதிர்கொண்டுவருகின்ற ஒரு சமூகம்தான் இஸ்லாமிய சமூகம். ஈழத் தமிழருடைய போராட்டத்தில் இணைந்து போராட ஒரு சந்தர்ப்பத்தில் அந்த இஸ்லாமிய சமூகம் முன்வந்திருந்தது. ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளில் தம்மை இணைத்துக்கொண்டு தம்மை ஆகுதியாக்கிக்கொண்ட இஸ்லாமிய இளைஞர்கள் எத்தனையோ பேர்.

'தமிழீழத்தை அமிர்தலிங்கம் கைவிட்டாலும், நான் கைவிடமாட்டேன்" என்று பிரகடனம் செய்தவர்தான் மறைந்த அஷ்ரப். ஆனால் வளமையான எமது பிறவிக் குணம், இஸ்லாமியர்களை வேறுபிரித்து எமது போராட்டத்தில் இருந்து அவர்களை அன்னியப்படுத்தி – அவர்களை எமது போராட்டத்தின் எதிரிகளாக்கிவிடும் சிங்கள பேரினவாதத்தின் திட்டத்திற்கு துணைபோயிருந்தது.

1984ம் ஆண்டு சித்திரை மாதத்தில் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசியப் பிராந்திய உதவிப் பணிப்பாளர் டேவிட் மட்னாய் இலங்கைக்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பொழுதும், 1984ம் ஆண்டு மே மாதம்; 24ம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ~இல்ரேலிய நலன் காக்கும் பிரிவு| உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட பொழுதும், இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனமான ~~ஷின் பெய்த்|| மற்றும் இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனமான ~~மொசாட்|| என்பன இலங்கைப் படையினருக்கு உத்தியோகபூர்வமாகப் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்த பொழுதும், 1984ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி, இல்ரேலின் நலன் காக்கும் பிரிவின் புதிய பொறுப்பாளராக ~அக்ரயில் கார்பி| என்கின்ற கடும்போக்கு யூதர் நியமிக்கப்பட்ட பொழுதும், தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக கிழக்கில் இஸ்லாமிய வாலிபர்கள் கிழர்ந்தெழுந்தார்கள். பாரிய எதிர்ப்புக்களை வெளிக்காண்பித்தார்கள்: ஆனால் அந்த நேரத்தில் வடக்கு கிழக்கில் உள்ள ஈழத் தமிழர் போராட்ட அமைப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவு ஆதரவினை இஸ்லாமிய மக்களுக்கு வழங்கி, அவர்களை அரவனைக்க முன்வரவில்லை.

1984ம் ஆண்டு ஆணி மாதம் 9ம் திகதி நடைபெற்ற ஐ.தே.கட்சி செயற்குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய சிறிலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன, 'இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவு தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆதரிக்க விரும்பாவிட்டால் தாராளமாக வெளியேறலாம்|| என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார். ~அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்துப் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தை விட்டு மாத்திரமல்ல கட்சியை விட்டும் வெளியேற்றப்படுவார்கள்|| என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவை அணுகுவதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். அதற்கு அவர்கள் தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் உதவியை நாடிய போதும், தமிழ் தலைவர்கள் அவர்களை அரவணைக்கவும், அவர்களுக்கு உதவவும் முன்வரவில்லை.

அதுமட்டுமல்ல ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு ஈழத் தமிழனும் வெட்கித் தலைகுனியவேண்டிய அளவிற்கான சில சம்பவங்களை எம்மைப் போன்றே அடக்கப்படுகின்ற ஒரு சமூகத்திற்கு எதிராக யாழ்பாணத்திலும், காத்தான்குடியிலும் நாம் செய்திருந்தோம்.

எமது போராட்டப் பயணத்தில் இஸ்லாமிய படகிலும் பயணிக்கும் சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிட்டிருந்தோம்.

பல தளங்களில் எமது போராட்டம் சமாந்தரமாகப் பயணிக்கவில்லை என்பதை உணர்த்தும் நோக்கோடு நாம் மேலே பார்த்திருந்த விடயங்கள் வெறும் உதாரணங்கள் மாத்திரம்தான். பல தளங்களை எமது போராட்டத்திற்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதென்பதுதான் தொடர்ந்து நாம் எமது விடுதலை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

நாங்கள் எதோ செய்து அமெரிக்காவை எமது விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஐரோப்பாவை எமது முக்கிய தளமாகத் தொடர்ந்தும் பேண வேண்டும். இந்தியாவிடம் இருந்து எத்தனை தூரம் எமக்கு உதவிகளைப் பெற முடியுமோ அத்தனை தூரம் பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்குப் பல வழிகள் இருக்கின்றன.

எதிர் எதிர் துருவங்களில் இருக்கும் சக்திகளைச் சமாளித்து அவர்களிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு முதலாவது வழி, எங்களுக்கு இடையே காணப்படுகின்ற பிளவுகளைப் பிரிவுகளைக் கூட எப்படி எமது இனத்தின் நன்மைக்காகப் பயன்படுத்துவது எப்படி என்று நாம் யோசிக்கவேண்டும். நாங்கள் பிரிந்து நின்றாவது எமது இனத்தின் விடுதலைக்காகப் பயணம் செய்யவேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச இராஜதந்திரத்தைக் கையாண்டால், மக்களவை புலம் பெயர் ஆதரவுத் தளத்தை தக்கவைக்கும் நகர்வினை எடுக்கலாம்.

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானிய அரசைக் கையாண்டால், கனடிய தமிழ் காங்கிரஸ் கனடிய அரசைக் கையாளலாம்.

குளோபல் தமிழ் போரம் மேற்குலகைக் கையாண்டால், எம்மிடையேயுள்ள இடதுசாரிகள் ஒன்றிணைந்து கிழக்கு உலகைக் கையாளமுனைய வேண்டும்.

த.தே.கூட்டமைப்பு இந்தியாவின் காலில் விழுந்து கிடக்கின்றது என்று நாம் குறைகூறுவதை விட, தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக இந்தியாவை நாம் எப்படிக் கையாளலாம் எப்பது பற்றி யோசிக்கவேண்டும்.

அதேபோன்று, வெவ்வேறு நாட்டு அரசியலில் காணப்படுகின்ற முரண்பாடுகளைக் கூட எமக்குச் சாதகமாக்கிக் கொள்வது எப்படி என்று நாம் சிந்திக்கவேண்டும்.

எமது விடுதலையின் பாதையில் பயணம் செய்கின்ற பொழுது, வியூகம் அமைத்து இராஜதந்திரத்துடன் பயணிக்கின்ற பொழுது, எமது இனத்தில் உள்ள நல்ல கெட்ட அத்தனை அம்சங்களையும் நாம் எவ்வாறு எமது இனத்தின் விடுதலைக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசித்து, கையாண்டு பயணிக்கின்ற பொழுது,- விடுதலை என்கின்ற விடயம் எங்களால் பெறமுடியாத ஒரு விடயம் இல்லை என்பதுதான் உண்மை.

nirajdavid@bluewin.ch

நன்றி :தமிழ்வின்

தமிழ்வின்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு தோழர் வெடியன்... தாயக விடுதலையை மனதில் நிறுத்தி வேலை செய்வார்கள் எனில் மகிழ்ச்சி ஆளுகொரு திசையாய் அந்தந்த நாட்டுக்கு பின் சென்றுவிடாமல் இருக்கவேண்டுமல்லவா? :wub:

நல்லதொரு பதிவு தோழர் வெடியன்... தாயக விடுதலையை மனதில் நிறுத்தி வேலை செய்வார்கள் எனில் மகிழ்ச்சி ஆளுகொரு திசையாய் அந்தந்த நாட்டுக்கு பின் சென்றுவிடாமல் இருக்கவேண்டுமல்லவா? :wub:

வெறுமனே கட்டுரைகளை வரைபது சுலபம்.

ஆனால் தமிழ் தேசிகன் கூறியது மிக முக்கியம். அந்தக் கருத்து இல்லாததால், நல்ல கருத்துக்களை உடைய, கூட்டமைப்பு - இந்திய சார்பான கட்டுரை செல்லாக் காசாகிவிட்டது.

முதலாவது வெவ்வேறு பிரிவினர்களாக இயங்குவது என்பது பலவீனம் அல்ல! பலம், ஆனால் இலட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும் - அப்போது மட்டும் தான் பலம்.

சிங்களவன் பல கட்சிகளாக இருந்தாலும், பல பிரிவுகளாக இருந்தாலும், தமிழனை எதிர்ப்பதில், தமிழன் சொத்துக்களை அபகரிப்பதில், தமிழனை அழிப்பதில், பௌத்தம் பேசுவதில், தமிழன் வரிப்பணத்தில் சிங்கள பகுதிகளை மட்டும் அபிவிருத்தி செய்வதில், இனப்பாகுபாடு காட்டி தமிழனை ஒதுக்குவதில், ஒருவன் காலை ஒருவன் வாராமல் ஒன்றாகவே இருக்கிறான். தமிழன் சார்பாக முழுமனதுடன், நேர்மையாக ஒருவனும், நீதிபதிகள் கூட, இல்லை. கதிர்காமர், டக்லஸ் போன்ற பச்சோந்தித் தமிழனை தனது தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துகின்றான்.

ஆனால் தமிழனின் முக்கிய எதிரிகளை எதிர்ப்பதில் கூட ஒருவன் காலை ஒருவன் வாருவதில் கதிர்காமர், டக்லஸ் போன்றவர்கள் எதிரிகளின் தாளத்துக்கு ஆடுகிறார்களே தவிர, தமிழன் இலட்சியத்தை முன்னெடுப்பதில்லை.

நீண்டகாலமாக, வரதர், சித்தார்த்தன், டக்லஸ், சங்கரி போன்றவர்கள், அண்மையில் சம்பந்தன், சுரேஷ், போன்றவர்கள் இந்தியனின் தமிழர் விரோத தாளத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆடினார்களே தவிர, போராடியவர்களின் காலை வாரினார்களே தவிர, தமிழர் சுதந்திரத்துக்கு துளியும் முயற்சிக்கவில்லை.

அது போலவே கதிர்காமர், டக்லஸ், சங்கரி போன்றவர்கள் சிங்களவனின் தமிழர் விரோத தாளத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆடினார்களே தவிர, போராடியவர்களின் காலை வாரினார்களே தவிர, தமிழர் சுதந்திரத்துக்கு துளியும் முயற்சிக்கவில்லை.

ஒவ்வொரு பிரிவினரும், குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவினரை சமாளித்து தமிழர் விடுதலைக்கு பங்களித்தால் நல்லது. ஆனால் கூட்டமைப்பின் சம்பந்தன், சுரேஷ் போலவும், சித்தார்த்தன், டக்லஸ் போலவும் கண்ணை மூடிக்கொண்டு இந்தியனின் தமிழர் விரோத தாளத்துக்கு, தமிழின அழிப்புக்கு - அவர்கள் தாளத்துக்கு ஆடிக்கொண்டிருப்பவர்களை ஆதரிக்க, இணைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆய்வாளர் இந்தக் கட்டுரையை புலிகள் பலமாக இருந்த பொழுது எழுதியிருந்தால் புலிகள் கூட அதிலுள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்திருப்பார்கள்.அப்பொழுது புலம்பெயர் மக்களை உசுப்பேத்தும் கட்டுரைகளை எழுதி விட்டு இப்ப இப்படி எழுதுகிறார்கள்.ஆனால் அப்ப தவறு விட்டது புலிகளும் தமிழ்மக்களும் மட்டுமல்ல.இந்த ஆய்வார்களும் தான்.ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயங்கள் கருத்கெடுக்கப் படக் கூடியவையே.எதற்கும் தமிழ்மக்களை ஒற்றுமை; படுத்துவதிலேதான் வெற்றி தங்கியிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.