Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது வாழ்வை ஒழுங்குபடுத்தப் போராடும் துணை இழந்த பெண்கள்

Featured Replies

70 வயதான மூதாட்டி யமுனாதேவிக்கு (இயற்பெயர் அல்ல) வாலிப பருவ எய்திய அவரது 8 பேரப்பிள்ளைகளை பராமரிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற இலங்கையின் சிவில் யுத்தத்தினால் அநாதைகளாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.எனக்கு வேறு வழியில்லை.நானே இவர்களை பராமரிக்கவேண்டும்.என்னைவிட்டால் இவர்களுக்கு வேறுயாரும் இல்லை என்கிறார் யமுனாதேவி. வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் யமுனாதேவி. அரசாங்கத்தின் இராணுவ வெற்றியின் மூலம் 2009 ஆம் ஆண்டில் ஒரு முடிவுக்கு வந்த இரத்தக்களறி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யமுனாதேவியின் பேரப்பிள்ளைகளில் நான்கு பேர் அவர்களது பெற்றோரை இழந்தார்கள். மற்றைய நான்கு பேரப்பிள்ளைகளுக்கும் தந்தை மட்டுமே உயிருடன் இருக்கிறார்.தற்போது அவர்தான் குடும்பத்தினர் அனைவருக்கும் சம்பாதிப்பவராக இருக்கிறார்.

எவ்வளவு காலத்திற்கு எனது பேரப்பிள்ளைகளை நான் பாடசாலைக்கு அனுப்ப போகிறேனோ தெரியவில்லை என்று யமுனாதேவி கூறுகிறார்.இலங்கையின் முன்னாள் யுத்த வலயத்தில் இவரது இந்த சோகக் கதை சர்வ சாதாரணமானது.பெண்கள்,இளையவர்களோ வயதானவர்களோ தங்களை தாங்களே பராமரித்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.சிறுபான்மை தமிழர்களுக்கு தனி நாட்டை அமைத்துக்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்த இந்த யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது இந்தக் குடும்பங்களின் ஆண் உறுப்பினர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போனார்கள்.

யுத்தத்தின் கடைசி காலத்தில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையே சுமார் 3 இலட்சம் பேர் வீடுவாசல்களை விட்டு தப்பி ஓடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 290,000 க்கும் அதிகமான மக்கள் தற்போது சொந்த கிராமங்களுக்கு அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளார்கள்.எவ்வாறாயினும் அவர்களது அவலங்கள் இன்னமும் ஓயவில்லை.முன்னாள் யுத்த வலயங்களில் 20 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட விதவைப் பெண்கள் 89,000 க்கும் அதிகமானோர் உள்ளனர் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார பிரதிஅமைச்சர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போது நாட்டின் கிழக்குப் பிரதேசத்தில் 49,000 விதவைகளும் வடக்கு பிரதேசத்தில் 40,000 விதவை பெண்களும் இருப்பதாக கூறினார். இவர்களில் அநேகமானோர் போரில் கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களில் மனைவியராவர் என்றும் அவர் கூறினார். பிரதி அமைச்சரின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் சுமார் 25,000 விதவைப் பெண்கள் இருப்பதாகவும் அவர்களில் 8,000 பேரில் ஒவ்வொருவருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அயல்நாடான இலங்கையின் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வரும் இந்திய அரசாங்கத்துடன் இலங்கையின் கணவனை இழந்த பெண்களுக்கு உதவிபெறுவது குறித்து தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஆனால், சில பகுதிகளில் இப்பெண்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அந்த மாவட்ட அரசாங்க அதிகாரிகளில் ஒருவரான ரூபவதி கேதீஸ்வரன் பெண்களின் தேவைகளை கருத்தில்கொண்டு திட்டங்களை வகுக்காவிட்டால் அவர்கள் கிரமமாக வேலை செய்வதில் கஷ்டங்களை எதிர்ர்நோக்குவார்கள் என்றும் கூறினார்.

பெண்களுக்கு வேலைகிடைத்தாலும் மிக மிகக் குறைவான சம்பளமே அவர்களுக்குக் கிடைக்கிறது.உதாரணமாக கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் புல்லுமலை கிராமத்தை சேர்ந்த 17வயதான ரவீந்திரநாதன் வளர்மதி வாரத்தில் 6 நாட்கள் பால் சேகரிக்கும் தொழிலை செய்து மாதம் ஒன்றுக்கு 17 அமெரிக்க டொலரை சம்பாதிக்கிறார்.யுத்தம் முடிவுக்கு வந்ததும் வாழ்க்கை சுமுகநிலைக்கு திரும்பிவிடும் என்று நினைத்த பலருக்கு இந்த துன்பகரமான வாழ்க்கை தொடர்வதாகவே இருக்கிறது.கணவரையும் இழந்து குடும்பத்தவர்களையும் இழந்து தனிமரமாக நிற்கும் இப்பெண்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்று கிழக்கிலங்கையின் வாகரை பிரிவு அரசாங்க அதிபர் இராசநாயகம் ராகுலநயனி ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். இவர்களுக்கான நிவாரண உதவியும் தாமதமடையும் போது இவர்கள் பல ஆபத்துகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது என்று அவர் கூறினார். யுத்தத்தில் தாமும் தமது தந்தையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

ராகுலநயனி ஐ.பி.எஸ்.ஸிடம் பேசிக் கொண்டிருந்த போது யுத்தத்தின்போது கணவன்மார் காணாமல்போன பெண்கள் தவறவிட்ட அடையாள அட்டைகள் மற்றும் தேவையான ஆவணங்களை பெறுவதற்காக அவரது அலுவலகத்திற்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தார்கள்.ஆண் ஆதிக்க சமுதாய அமைப்புமுறையில் விதவைப்பெண்களும் தனியனான தாய்மாரும் பெரும் துன்பதுயரங்களை அனுபவிக்கிறார்கள் என்று ராகுலநயனி தெரிவித்தார். வழமையாக தமிழ் சமூகத்தினர் மத்தியில் ஆண்கள் குடும்ப விவகாரங்களில் முன்னணி வகிப்போராகவும் பெண்கள் ஆண்களை பின்பற்றுவோராகவும் இருக்கிறார்கள். தற்போது விதவைகளானோர் குடும்ப விவகாரங்களை தாங்களே பொறுப்பெடுத்துக்கொள்வது தனியார் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் அலுவல்களை செய்து கொள்வது உட்பட தீர்மானங்களை எடுப்பதிலும் ஈடுபடுவதால் இப்புதிய பொறுப்புகளை அவர்களால் ஈடேற்ற முடியாதிருக்கிறது.

ராகுலநயனியை காண்பதற்கு காத்துநின்ற இரண்டு பிள்ளைகளின் தாயான 27 வயது சரோஜாதேவி வடக்கில் தங்கள் குடும்பத்தினர் யுத்தத்திலிருந்து தப்பி ஓடியபோது தமது கணவர் காணாமல் போய்விட்டார் என்று கூறினார். அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றியோ உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றியோ தமக்கு தெரியாது என்று சரோஜாதேவி கூறினார்.கணவன் காணாமல் போனபின்னர் அவர் பிறந்த இடமான கிழக்கு மாகாணத்தில் வாகரைக்கு அருகில் வசிக்கும் அவரது உறவினரிடம் சென்றார். தமது கணவர் விடுதலைப்புலிகளுக்கு உதவ மறுத்ததால் புலிகள் அவரை சிறிது நேரம் தடுத்து வைத்திருந்ததாக சரோஜாதேவி தெரிவித்தார். ஷெல் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக தாங்கள் ஓடும்போது கணவர் காணாமல் போனதாக அவர் தெரிவித்தார். நாள் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாங்கள் எவ்வாறு தப்பினோம் என்று தமக்கே தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மிகுந்த நம்பிக்கையுடன் கணவரை தேடுவதோடு அவரது குடும்பத்தினரை காப்பாற்ற சம்பாதிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள வாகரையில் தொழில் எதுவும் கிடைப்பதில்லை. மீன்பிடிப்பதும் விவசாயம் செய்வதுமே அப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாகும்.தற்போது தாம் தொழில் எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்த சரோஜாதேவி தமது குடும்ப உறுப்பினர்களுக்கு தாம் வயலில் உதவி செய்வதாகவும் அவர்கள் தமக்கு பணம் தருவதாகவும் கூறினார். பட்டினி இருப்பதை தவிர்ப்பதற்காக தமது தங்க நகைகள் அனைத்தையும் தாம் விற்றுவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

வரிசையில் சரோஜாதேவிக்கு அருகில் நின்றிருந்த 29 வயதான நவுனாத் சுதாவும் தேவியைப் போலவே அவரது நகைகள் அனைத்தையும் நீண்டநாட்களுக்கு முன்னரே விற்றுவிட்டார். வாகரையில் பிறந்த சுதா வடக்கை சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்தார். யுத்தத்திலிருந்து தப்பி ஓடும்போது அவரும் கணவரை இழந்துவிட்டார்.ஆனால், சரோஜாதேவியைப் போலல்லாமல் சுதா, 2009 ஆம் ஆண்டு காணாமல் போன தமது கணவர் தற்போது அரசாங்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார்.சில ஆதாரங்கள் கிடைத்ததும் அவரை கண்டுபிடிக்கப் போவதாக அவர் கூறினார்.இதற்கிடையில்,தையல் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அரசாங்க அதிகாரிகளின் உதவியை நாடும் சுதாவுக்கு நாளாந்த பிரச்சினைகள் ஒரு சவாலாக அமைந்துள்ளன. பணம் ஏதாவது சம்பாதிப்பதற்காக வீட்டில் தாம் தையல்வேலை செய்வதாக அவர் தெரிவித்தார்.‐ஐ.பி.எஸ் நன்றி: தினக்குரல்

link

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமது வாழ்வை ஒழுங்குபடுத்தப் போராடும் துணை இழந்த பெண்கள்

[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 07:46 GMT ] [ தி.வண்ணமதி ]

தமது பதின்ம வயதுகளில் உள்ள எட்டு சிறுவர்களைப் பராமரிப்பது என்பது எழுபது வயது யமுனாதேவிக்கு இலகுவான காரியமாக இருக்கவில்லை.

ஆனால் இவர்கள் இருபதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் அநாதைகளாக்கப்பட்ட அவரது பேரக் குழந்தைகளாவர். "எனக்கு வேறு வழி தெரிவில்லை. நான்தான் அவர்களைப் பார்க்கவேண்டும். அவர்களுக்கு வேறு யாரும் இல்லை", என்கிறார் அளம்பிட்டி முல்லைத்தீவைச் சேர்ந்த யமுனாதேவி.

அவர்களில் நான்குபேர் மே 2009ல் முடிவுற்ற போரின் இறுதி நாட்களில் தமது பெற்றோரை இழந்தனர். ஏனைய நால்வருக்கும் தந்தை மட்டும் இருக்கிறார். அவரே தற்போது இந்தக் குடும்பத்திற்கான ஒரேயொரு உழைப்பாளி.

"என்னால் எவ்வளவு காலத்திற்கு இவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப முடியும் எனத் தெரியவில்லை", என்கிறார் யமுனாதேவி.

இவ்வாறு ஈழத்தமிழ் பெண்களின் கண்ணீர்க் கதைகளை பதிவு செய்துள்ளது ஐபிஎஸ் செய்தித்தளம். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

சிறிலங்காவின் முன்னாள் போர் இடம்பெற்ற பகுதியில் இவரது கதை மிகவும் பொதுவானது. தமது ஆண் உறவினர்கள் போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட அல்லது காணாமல்போக இளைய மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் தம்மைத் தாமே பார்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

2006 ஓகஸ்ட் முதல் 2009 மே வரை இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் 300,000 மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். 290,000 க்கும் மேற்பட்ட மக்கள் தமது இடங்களுக்கு மீண்டும் சென்றுள்ளனர் அல்லது தமது உறவினர்களுடன் வசிக்கிறார்கள். எவ்வாறிருந்தும், அவர்களது பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.

தமது இருபதுகளின் ஆரம்பத்திலும் முப்பதுகளின் நடுப்பகுதியிலும் 89000 இற்கு மேற்பட்ட துணை இழந்த பெண்கள் போர் இடம்பெற்ற பகுதிகளில் இருப்பதாக அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் 49000 துணை இழந்த பெண்களும் - இவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் மனைவிமார் - வடக்கில் 40,000 துணை இழந்த பெண்களும் இருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எம்ஏஎம் கிஸ்புல்லா கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்தார்.

தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் 25000 துணை இழந்த பெண்கள் இருப்பதாகவும் அவர்களில் 8000 பேருக்கு ஒவ்வொருவருக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த துணை இழந்த பெண்களுக்கு உதவுவதற்காக தான் இந்தியாவின் உதவியை நாடியிருந்ததாக பிரதி அமைச்சர் கிஸ்புல்லா தெரிவித்தார். "ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நாம் இங்கு ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்", என கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பணியாளரான ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பெண்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு திட்டங்கள் வரையறுக்கப்படாததினால் பெண்கள் பொதுவாகவே தமக்கான நிரந்தர தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவர்களுக்கு வேலை கிடைத்தாலும் மிகக்குறைந்தளவு ஊதியமே வழங்கப்படுகிறது. உதாரணத்திற்கு, மட்டக்களப்பு மாவட்டத்தின் புல்லுமலையைச் சேர்ந்த ரவிந்திரநாதன் வளர்மதி வாரத்தில் 6 நாட்களுக்கு பால் சேகரிப்பதன்மூலம் மாதம் 17 டொலர்களே சம்பாதிக்கிறார்.

போர் முடிவுற்றதால் தமது வாழ்வு வளம்பெறும் என எதிர்பார்த்த பலருக்கு இத்தகைய சூழ்நிலை குறிப்பாக துணை இழந்த பெண்களுக்கு அவநம்பிக்கையையே ஏற்படுத்துகிறது.

"உங்களுக்கு கணவன் இல்லாமல், உங்களுக்கென குடும்பம் இல்லாமல் நீங்கள் தனியே இருப்பது மிகவும் கடினமானது", என்கிறார் வாகரை உதவி அரச அதிபர் ராசநாயகம் ராகுலநயனி.

"உதவிகள் இல்லாதபோது, பெண்கள் மிகவும் பலவீனமானவர்களாக உணர்வார்கள்", என்கிறார் போரில் தனது தந்தையை இழந்ததாகக் கூறும் அவர்.

ராகுலநயனி எம்முடன் கதைத்துக் கொண்டிருந்தபோதுகூட, அரை டசினுக்கும் அதிகமான துணை இழந்த பெண்கள் இழந்த தமது அடையாள ஆவணங்களைப் பெறுதல்

மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொறுமையுடன் வெளியே காத்திருந்தனர்.

"ஆணாதிக்க சமூக முறைமைக்குள் துணை இழந்த பெண்களும், கணவனில்லாத பெண்களும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்", என்றார் ராகுலநயனி.

பாரம்பரியமாக, ஆண்கள் குடும்பத்தைத் தலைமை தாங்க அவர்களைச் சார்ந்து பெண்கள் வாழும் முறைமையையே தமிழ் சமூகம் பின்பற்றி வருகிறது. இந்நிலையில், ஆண்களின்றி குடும்ப விடயங்களைக் கவனிப்பது, தனியார் மற்றும் அரச நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களைத் தொடர்புகொள்ளல் போன்ற புதிய பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் இந்த துணை இழந்த பெண்கள் சங்கடங்களை எதிர்கொள்கின்றனர்.

ராகுலநயனியை சந்திக்க வந்திருந்த இரு பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய சரோதேவியின் கணவர் வடக்கில் போரிலிருந்து அவரது குடும்பம் தப்பிவரும்போது காணாமல்போய்விட்டார். "அவர் எங்கே இருக்கிறார், உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட எனக்குத் தெரியாது",என்கிறார் தேவி.

தொடர்ந்து, தேவி தனது சொந்த இடமான வாகரைக்குத் திரும்பிவிட்டார். "அவர் உதவி செய்ய மறுத்ததால் புலிகள் அவரை தடுத்து வைத்திருந்தனர். எறிகணைகள் வெடித்துக் கொண்டிருந்தபோது நாம் ஓடும்போதே அவர் காணாமல் போனார். நாள் முழுவதும் எறிகணைத் தாக்குதல் இடம்பெற்றது. நாம் எவ்வாறு தப்பினோம் என்பது எமக்குத் தெரியாது".

இந்தவேளையில், தனது கணவனைத் தேடுவதே தேவிக்கு எல்லாவற்றையும்விட நம்பிக்கை தருவதாக உள்ளது. அதேவேளையில், அவள் தனது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டியுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள வாகரையில் மக்களின் பிரதான சீவனோபாயம் விவசாயமும் மீன்பிடியுமாக இருப்பதால் அங்கு வேலை வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும்.

"தற்போது நான் எதுவும் செய்யவில்லை. நான் எனது குடும்ப உறவினர்களுக்கு வயலில் உதவி செய்வேன். அவர்கள் எனக்குப் பணம் தருவார்கள்", எனும் தேவிக்கு தனது தங்க நகைகளை விற்பதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை.

தேவிக்கு அடுத்ததாக வரிசையில் நின்ற 29 வயதுடைய நவுனாத் சுதாவிடம் எந்த நகையும் இல்லை. யாவற்றையும் விற்றுவிட்டார். சுதாவின் கதையும் தேவியினுடையதைப் போன்றதே.

வாகரையைச் சேர்ந்த அவரும் வடக்கைச் சேர்ந்த ஒருவரை மணந்து ஓடிவரும்போது கணவரைப் பிரிந்துவிட்டார். ஆனால் தேவியைப் போலன்றி, ஏப்ரல் 2009 ல் காணாமல்போன தனது கணவன் இராணுவத்தின் தடுப்பில் இருப்பதாகவே சுதா நம்புகிறார்.

"எனக்கு ஆதாரம் ஏதாவது கிடைக்கும்வரை நான் அவரைத் தேடிக்கொண்டிருப்பேன்". அதேவேளையில், நாளாந்த வாழ்க்கைப் போராட்டம் சுதாவை அழுத்துகிறது. அரசாங்க பணியாளர்களின் உதவியுடன் தையல் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அவர் வந்திருந்தார்.

"நான் வீட்டில் ஆடைகளைத் தைத்து பணம் சம்பாதிப்பேன்", என்கிறார் அவர்.

http://www.puthinappalakai.org/view.php?20101026102363

  • கருத்துக்கள உறவுகள்

அயல்நாடான இலங்கையின் நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்து வரும் இந்திய அரசாங்கத்துடன் இலங்கையின் கணவனை இழந்த பெண்களுக்கு உதவிபெறுவது குறித்து தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

என்ன திருகுதாளம் செய்யலாம் என்று கவனித்துவரும் இந்தியாவுடன் என்று வர வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.