Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தரின் மந்திரிகள் - சேரமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரின் மந்திரிகள் - சேரமான்

Posted by: on Oct 31, 2010

அபிவிருத்தி, மீள்குடியேற்றம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு போன்ற பல்வேறு புனைவுகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் உலகத் தமிழர்களை இலக்குவைத்து வனையப்பட்ட பல்வேறு சதிவலைப் பின்னல்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை ஈட்டிக் கொடுக்காத நிலையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைகளை உருவகித்தல் என்ற போர்வையில் மிகவும் நுண்ணியமான நாசகார வியூகம் ஒன்றிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்திய-சிங்கள அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறுகாணாத கொடிய மனிதப் பேரவலத்துடன் கடந்த மே 18ஆம் நாளன்று வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னர் இரண்டாவது மாவீரர் நாளை எதிர்கொள்வதற்குத் தன்னை உலகத் தமிழினம் தயார்படுத்திக் கொள்ளும் பின்புலத்திலேயே இவ்வாறான நாசகார வியூகத்தை செயற்படுத்தும் நடவடிக்கைகளில் முழுவீச்சுடன் இந்திய-சிங்கள அரசுகள் இறங்கியுள்ளன.

காந்தி தேசத்தின் ஆசீர்வாதத்துடன், ஆயுதவலிமையின் ஆணவத்தில் தமிழீழ தாயக மக்களைத் தனது இரும்புப் பிடிக்குள் சிங்களம் முடக்கிவைத்திருந்தாலும்கூட, முள்ளிவாய்க்கால் பின்னடைவு நிகழ்ந்தேறி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி உலகத் தமிழினம் அணிதிரண்டு நிற்பது என்பது இந்திய-சிங்கள அரசுகளைப் பொறுத்தவரை சவாலாகவே விளங்குகின்றது.

மறுபுறத்தில் போர்க்குற்ற விசாரணைக்கான அழைப்புக்கள், அரசியல் தீர்வுக்கான வலியுறுத்தல்கள், மிதமான பொருண்மியத் தண்டனைகள் என அதட்டல் தொனியில் தாராண்மைத்துவ சனநாயகம் பேசும் மேற்குலகின் அழுத்தங்கள் விரிவடையத் தொடங்கியிருப்பது சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை காத்திரமான பாதிப்புக்களை ஏற்படுத்தாவிட்டாலும்கூட, அதன் ‘நற்பெயருக்கு’ களங்கம் விளைவிக்கும் எரிச்சலூட்டும் நிகழ்வுகளாகவே அமைகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியுடன் வீறுகொண்ட தமிழீழ தேசிய அடையாளங்களை மெல்ல மெல்ல தமிழ் மக்களின் அரசியல் எண்ணவோடையிலிருந்து அகற்றும் முயற்சிகளிலும், உலகத் தமிழர்களின் எழுச்சியை மழுங்கடிக்கக்கூடிய வகையில் ‘யதார்த்தவாதம்’ பேசும் தனது கைப்பாவைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்றீடான தலைமைகளாக உருவகித்து விடுவதற்கான முனைப்புக்களிலும் தற்பொழுது மும்முரமாக சிங்களம் ஈடுபட்டுள்ளது.

எவ்வாறு வன்னிப் போரில் சிங்கள அரசுக்கு இந்தியப் பேரரசு துணைநின்று தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக விளங்கியதோ, அவ்வாறே தற்பொழுது சிங்களம் செயற்படுத்தும் நாசகார வியூகத்திற்கும் தற்பொழுது புதுடில்லி முண்டுகொடுத்து நிற்கின்றது. ரஜீவ் காந்தியின் கொலை வழக்கின் முதன்மை எதிராளிகள் பட்டியலில் இருந்து தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன், தமிழீழ தேசிய புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டம்மான் ஆகியோரின் பெயர்களை இவ்வாரம் இந்தியப் பேரரசு நீக்கிக் கொண்டமை காந்தி தேசத்தின் உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்வதற்குப் போதுமானது.

இது ஒருபுறமிருக்க கடந்த யூன் மாதத்திலிருந்து பரபரப்பாக ஊடகச் செவ்விகளை வழங்கிப் பின்னர் ஓய்ந்துபோன கே.பி என்றழைக்கப்படும் தம்பியையா செல்வராஜா பத்மநாதன் பற்றிய செய்திகள் மீண்டும் கொழும்பு ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருப்பதும், இவை இணையப்பரப்பில் மறுபதிப்புச் செய்யப்படுவதும், வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நிகழ்த்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் மகிந்தர் ஈடுபடுவதை ஒருவகையில் கட்டியம்கூறி நிற்கின்றன.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் துரோகம் இழைத்த இரண்டகர்களின் வரிசையில் டக்ளஸ், கருணா, பிள்ளையான், கே.பி போன்றவர்கள் முதன்மையானவர்கள். இவர்களில் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், கருணாவிற்கும் அமைச்சுப் பதவிகளையும், பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியையும் வழங்கித் தனது நன்றிக்கடனை எப்பொழுதோ மகிந்தர் செலுத்துவிட்டார். இப்பொழுது ராஜபக்ச சகோதரர்களின் அன்புக்கும், நன்றிக்கடனுக்கும் உரித்தான எஞ்சியுள்ள ஒருவராகக் கே.பி திகழ்கின்றார்.

வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பு என்ற பெயரில் அரசாங்க திணைக்களத்திற்கு நிகரான அதிகாரங்கள் கொண்ட அரசுசாரா நிறுவனம் ஒன்றை அமைத்து அதற்கான செயலாளர் பதவியை கே.பியிடம் ராஜபக்ச சகோதரர்கள் கையளித்திருந்தாலும்கூட, புலம்பெயர் தேசங்களில் உள்ள ‘கடும்போக்குப் புலிகள்’ என்று வர்ணிக்கப்படும் தமிழீழ தேசிய உணர்வாளர்களின் வலிமையான எதிர்ப்புக் காரணமாக கருவிலேயே மடிந்து பிறந்த ஊன்தடியாகவே இந்த அமைப்பு விளங்குகின்றது.

இந்நிலையில் கே.பியை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறக்கி, பிள்ளையானைப் போன்று அவரையும் ஒரு முதலமைச்சராக்கித் தமது நன்றிக்கடனை தீர்த்துக் கொள்வதற்கு மகிந்தரும், அவரது சகோதரர்களும் தயாராகி வருவதையே அண்மைய நாட்களில் காதும்காதும் வைத்தாற்போன்று வடதமிழீழப் பகுதிகளில் நடந்தேறும் சில நிகழ்வுகள் நிதர்சனப்படுத்துகின்றன.

கடந்த ஒரு வார காலப்பகுதியில் வன்னிக்குப் பயணம் செய்த கே.பி, மீள்குடியேற்றம் என்ற போர்வையில் சிங்கள அரசால் திறந்தவெளிச் சிறைக்கைதிகளாக முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கித் தனது தேர்தல் பரப்புரைகளைத் தொடங்கியுள்ளார். கே.பியின் வன்னிப் பயணத்திற்கு முன்னோடியாக ‘புலிகளின் முன்னாள் போராளிகள்’ எனப் பட்டம்கட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி இளைஞர் – யுவதிகளை விடுதலை செய்யும் நாடகத்தையும் சிங்கள அரசு அரங்கேற்றி முடித்துள்ளது.

தனது குடும்ப ஆட்சியை தக்கவைப்பதற்கு ஏதுவாக அரசியலமைப்பை மிகவும் கச்சிதமாகத் திருத்தியமைத்திருக்கும் மகிந்தர், விரைவில் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடலாம் என்று அரசியல் அவதானிகள் ஆரூடம்கூறத் தொடங்கியிருக்கும் நிலையில், தேர்தலுக்கு முன்னோடியாக எதிர்வரும் வாரங்களில் தனது பரப்புரைப் பயணங்களை கே.பியும் முடுக்கிவிடுவார் என்று கருதமுடியும். இதற்குக் கட்டியம்கூறும் வகையிலேயே கடந்த வாரம் பொதுமக்களின் மத்தியில் கே.பி ஆற்றிய சொற்பொழிவுகளும் அமைகின்றன.

இதேநேரத்தில் கே.பியை வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக களமிறக்கும் தமது திட்டத்திற்கு மேற்குலகின் ஆசியைப் பெறும் முயற்சியிலும் சிங்கள அரசு ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பாக கடந்த வாரம் இலண்டனில் உள்ள மூலோபாயக் கற்கைகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் உரையாற்றும் பொழுது தமது திட்டத்தை மிகவும் சூசகமான முறையில் சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிப்படுத்தியிருந்தார்.

அதாவது சனநாயக ரீதியில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை உருவாக்குவதே தமது அரசாங்கத்தின் தற்போதைய நோக்கம் என்றும், கிழக்கு மாகாணத்தில் முன்னாள் சிறுவர்போராளி ஒருவரை அரசியல் நீரோட்டத்தில் இணைத்து அவரைக் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக்கி முதலமைச்சர் நிலைக்கு உயர்த்தியமை போன்று வடக்கு மாகாணத்திலும் அவ்வாறான ஒருவரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் தமது அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் தனதுரையில் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

2008ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்பட்டதில் ராஜபக்ச சகோதரர்கள் காலாக விளங்கிய பொழுதும், இதற்கான புறநிலையை தோற்றுவிப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்கியதில் முக்கியமான பாத்திரத்தை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகமும், கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபேர் ஓ பிளேக் அவர்களும் வகித்திருந்தனர். கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பிள்ளையான் பதவியேற்றதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சினால் தமது கொழும்புத் தூதரகத்தின் உயரதிகாரி ஒருவருக்கு விருதொன்று வழங்கி மதிப்பளிக்கப்பட்டமையும் இங்கு நினைவூட்டத்தக்கது.

இதனை எடுகோளாகக் கொண்டே கே.பியை வடக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கும் தமது முனைப்புக்களுக்கு மேற்குலகின் ஆசீவாதத்தைப் பெறுவதற்கு சிங்களம் முற்படுகின்றது என்று கருதமுடியும். இதுபற்றித் தனது உரையில் மேலும் குறிப்பிட்ட ஜி.எல்.பீரிஸ், தமிழர்களில் ஒரு தொகுதியினர் யதார்த்தபூர்வமாக சிந்திப்பதாகவும், இவர்களை தமது அரசாங்கம் அரவணைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் என்ற போர்வையில் தனது கைப்பாவைகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சிங்களம், புலம்பெயர் தேசங்களில் தமிழீழ மக்களின் எழுச்சியை முடக்கும் நோக்கத்துடன் தமிழீழ தேசிய அடையாளங்களை சிதைக்கும் கைங்கரியங்களில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு உடந்தையாக கே.பியின் வாரிசாக விளங்கும் உருத்திரகுமாரனும் அவரது பரிவாரங்களும் திகழ்வதை அவர்களின் அண்மைக்கால அமைச்சரவைக் கேலிக்கூத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

கே.பி குழுவின் பரிபூரண உதவியுடன் தனக்குத் தானே பிரதமர் பட்டத்தை சூட்டிக்கொண்டிருக்கும் உருத்திரகுமாரன், தற்பொழுது தனக்கான அமைச்சர்களை தெரிவுசெய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். குந்துவதற்கு ஒரு குடிநிலம்கூட இன்றி இரவல் மண்டபங்களில் கூட்டம்கூடிக் கலையும் உருத்திரகுமாரனின் அமைச்சரவைக் கூத்து என்பது ஒட்டுமொத்தப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் ஒரு அவமானமேயன்றி வேறேதுமல்ல.

பிரதமரைக் கொண்டிருக்கும் ஒரு அரசு என்பது பிரதமரைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அதிபரையோ அல்லது குறைந்தபட்சம் மன்னரையோ அன்றி ராணியையோ கொண்டிருக்கும். இந்த வகையில் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் என்றால் அவரைக் கட்டுப்படுத்தும் அதிபர் யார் என்ற கேள்வியும் இங்கு இயல்பாகவே எழுகின்றது. அது கே.பியா? அல்லது மகிந்தரா? என்பது வேறுவிடயம். ஆனால் மகிந்தரின் நாடுகடந்த பிரதம மந்திரியாக உருத்திரகுமாரன் மாறிவிட்டாரா? என்பதை வரும் மாதங்களில் நிகழப் போகும் மேலும் பல கேலிக்கூத்துக்கள் பட்டவர்த்தனமாக்கும் என்பதில் ஐயமில்லை.

உருத்திரகுமாரனின் இந்தக் கேலிக்கூத்து அரசியலைப் புறந்தள்ளிவிட்டு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஒரு வலுவான பரப்புரைத் தளமாக மாற்றியமைக்கும் வகையில் பிரான்ஸ் தமிழீழ மக்களவையுடன் இணைந்து செயற்படுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் உறுப்பினர்களான தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்கள் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு, கே.பி-உருத்திரகுமாரன் குழுவினரின் கேலிக்கூத்துக்களுக்கு மூட்டைகட்டிவிட்டு, தமது பரப்புரைப் பணிகளை ஏனைய நாடுகளில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களான தேசிய செயற்பாட்டாளர்கள் முன்னெடுப்பார்கள் என்று நம்புவோமாக.

- நன்றி: ஈழமுரசு (29/10/2010)

சிங்களவனுக்கு அவனின் நோக்கங்களை நிறைவேற்றக் கிடைத்திருக்கிறது ஒரு நாய். அந்த நாய் வேறு யாருமல்ல. இந்த சேரமான்தான். (கடைசி நான்கு பந்திகளிற்காக).

மின்னலுக்கு ஒரு பச்சை ... பச்சையாக உண்மையை சொன்னதற்கு! ... நானும் காவல் இந்த சேரமான்களும், நெடியமான்களும் எப்போ சிங்களவனின் கால்களில் பகிரங்கமாக விழும் செய்தி வரப்போகிறதென்று! ... மே18இற்குப் பின் இங்கு புலத்தில் பலருக்கு "துரோகி பட்டம்" அழித்து கவுரவித்த, பிரான்ஸில் இருக்கும் ஒரு ஈழநாட்டு வேதாளம், வரதராசபெருமாளின் காலில் விழுந்த செய்தி சூடாக இப்போ இங்கு ஓடிக்கொண்டிருக்கிறது!!! ... இந்த காஸ்ரோவின் ஏனைய வேதாளங்களும் ..... கனநாட்கள் இல்லை!

.. சில நாட்களுக்கு முன்னுக்கு ... சிங்கப்பூரில் இருந்து இயங்கும் சிங்கள றொகான் குணரட்ன கூறியதாக ... யாரையோ இங்கு புலத்திருந்து நாடு கடத்தச் சொல்லி ... அதுகளை நாடு கடத்துகிறதென்ன ... நாமே ஏதாவது செய்ய வேண்டும்! இல்லையேல் இந்த கும்பல் இருக்கும் எச்ச சொச்சங்களையும் நாசமாக்கி விட்டுட்டுத்தான் போகும்!! ...

.... உந்த சேரமான்கள் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுதுகள் மட்டுமல்ல ... சிங்களத்தின் மாதாந்த ஊதியம் பெற்று செயற்படும் கும்பல்கள்!! ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் பின்னடைவில் இருபது ஆயிரம் புலிகளை எதிர்த்து மூன்று வருடத்தில் அறுபத்து ஐந்தாயிரம் சிங்கள கூலிகள் மண்டையை போட்டன.

ஒரு சின்ன கம்பாரிசன்: அமெரிக்காவின் எட்டு வருட இராக் போரில் இரண்டு இலட்சம் இராக் ஆயுததாரிகளை எதிர்த்து அமெரிக்க இழந்தது பன்னிரண்டாயிரம் பேர்.

எனக்கு என்னவோ, இது ஸ்ரீ அரசாங்க இனவெறி இராணுவத்துக்கும் தான் ஒரு பெரிய பின்னடைவு மாதிரி தெரியுது. பாவம், தளபதி வேறு சிறைக்குள், எனக்கு என்னவோ முள்ளிவாய்க்கால் போரில் நாம் வென்றது போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களிடம் தான் கடிவாளம் கொடுக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.