Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோபா சக்தியின் உரை.

Featured Replies

நிகழ்வுக்குத் தலைமையேற்றிருக்கும் தோழர் அருந்ததி அவர்களே, நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களே, நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் சக இயக்கத் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகிறேன்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான தோழர் கந்தசாமி பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் பாஸிசப் புலித் தலைமையால் கவனமாகத் திட்டமிடப்பட்டு, கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினத்தில் நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். இங்கே பேசிய தோழர் நந்தன் குறிப்பிட்டது போல இரண்டாண்டுகளிற்கு முன்பு மறைந்த தமது தலைவருக்கு ஒரேயொரு ஒற்றை மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றிவைக்கத் துப்பில்லாத புலிக் கும்பலின் அரசியல் வறுமையின் முன்னே, பத்மநாபாவின் 21வது நினைவுதினத்தை நாங்கள் இங்கே உணர்வுபூர்வமாக அனுட்டித்துக்கொண்டிருக்கிறோம்.

தோழர் பத்மநாபா தனது பதின்ம வயதுகளில் தனது குடும்பத்தைத் துறந்து, கல்வியைத் துறந்து, அவருக்கு லண்டனில் கிடைத்த வசதியான வாழக்கையைத் துறந்து, தமிழீழக் கனவை நெஞ்சில் சுமந்தபடி ஈழத்திற்குத் திரும்பியவர். எழுபதுகளின் இறுதியில் லெபனானில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் போர்ப் பயிற்சி பெற்ற தோழர் பத்மநாபா சர்வதேச இடதுசாரிகளுடன் விரிந்த தொடர்பைக் கொண்டிருந்தவர். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உறவு சிங்கள, தமிழக இடதுசாரிகளிலிருந்து நிக்கிரகுவாவின் சாண்டினிஸ்டுகள் வரை விரிந்திருந்தது. தனது முப்பத்தொன்பதாவது வயதில் சூளைமேட்டில் படுகொலை செய்யப்படும்வரை பத்மநாபா ஓய்வின்றி உழைத்த அரசியல் போராளி.

பத்மநாபாவைக் கொன்றவர்கள் யார்? அவர்களும் தமது பதின்ம வயதுகளில் குடும்பத்தைத் துறந்து, கல்வியைத் துறந்து, தமிழீழக் கனவுடன் போராட்டக் களத்திற்கு வந்தவர்களே. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை 1986ல் தடைசெய்து அழிப்பதற்கு ஒரு வருடம் முன்னதாக முன்னணியுடன் அரசியல் தோழமைபூண்டு, பத்மநாபாவோடு கைகோர்த்து புகைப்படம் எடுத்தவர்களே அவரை 1990ல் சதிசெய்து கொன்றார்கள். எவ்வளவு பெரிய முரண்பாடு! நமது போராட்டத்தின் முழு அக வரலாறும் இந்த முரண்களின் வரலாறாகவேயிருக்கிறது தோழர்களே.

சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்ட மே மாதத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தினர் நினைவேந்தல் நாளை அனுட்டிக்கின்றனர். பத்மநாபா கொல்லப்பட்ட யூன் மாதத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் தியாகிகள் தினத்தை அனுட்டிக்கினறனர். உமா மகேசுவரன் கொல்லப்படட்ட யூலை மாதத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் வீரமக்கள் தினத்தை அனுட்டிக்கின்றனர். சங்கர் கொல்லப்பட்ட நவம்பர் மாதத்தில் விடுதலைப் புலிகள் மாவீரர் நாளை அனுட்டிக்கிறார்கள். ஒரே வருடத்தில் நம்மிடையே வெவ்வேறு நான்கு நினைவு தினங்கள்.

ஈழப்போராட்டக் களத்திலே எண்பதுகளிலே கிட்டத்தட்ட முப்பது அமைப்புகள் இருந்ததாக ஒரு கணக்கு. அவற்றிலிருந்து பிரிந்துவந்த அமைப்புகள், பிரிந்தவற்றில் இருந்து பிரிந்தவை எனக் கணக்குப் போட்டால் வள்ளிசாக நாற்பது போராட்ட அமைப்புகள் நம்மிடையே இருந்தன எனலாம். இந்த நாற்பது அமைப்புகளுமே தமது போராளிகளின் உயிர்களைப் பறிகொடுத்துள்ளன. தமது ஆதரவாளர்களின் உயிர்களைப் பறிகொடுத்துள்ளன. தமது தலைமைகளைப் பறிகொடுத்துள்ளன. உமாமகேசுவரன், சபாரத்தினம், பத்மநாபா, பாலகுமாரன், பிரபாகரன், ஜெகன், ஒபராய் தேவன், விசுவானந்த தேவன் என யாருமே இன்று நம்முடனில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நமது தமிழீழப் போராட்டத்திற்காக எண்ணுக்கணக்கற்ற பொதுமக்கள் பலியாகியிருக்கிறார்கள். 1974ல் பொன். சிவகுமாரன் ஒன்று, 1979ல் இன்பம் - செல்வம் இரண்டு, 1983 யூலைப் படுகொலைகளில் இரண்டாயிரம், இந்திய அமைதிப்படை காலத்தில் மூவாயிரம், இறுதியாக முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் என நாங்கள் சாவுக்கு வாரிக் கொடுத்திருக்கிறோம். சாவுக் கணக்குகளில் அந்த இயக்கம் இந்த இயக்கம் எனப் பேதமில்லைத் தோழர்களே. நாங்கள் தமிழீழத்தின் பெயரால் இவ்வளவற்றையும் இழந்திருக்கிறோம். தனித் தனியான அஞ்சலி நிகழ்வுகளைக் கொண்டாடமால் ஒட்டுமொத்தமாகத் தமிழீழக் கனவுக்கே அஞ்சலி செலுத்தவேண்டிய நிலையில் நாமிருக்கிறோம். இதை நான் ஆழமான மனவேதனையுடனேயே குறிப்பிடுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் தமிழீழம் என்பது துர்க்கனவு அன்று, அது சிதைக்கப்பட்ட இலட்சியம்.

சற்று எண்பதுகள் காலப்பகுதியை நினைத்துப் பாருங்கள். தமிழீழக் கனவுக்காக ஈழத்தின் 99 விழுக்காடு மக்கள் உணர்வுபூர்வமாகத் திரண்டிருந்த காலமல்லவா அது. இந்த மண்டபத்தில் இருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். தோழர்கள் அழகிரி, நந்தன், தோழியர் புஸ்பராணி போன்ற போராட்டத்தின் முன்னோடிகள் இங்கிருக்கிறீர்கள். இங்கிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களே. தமிழீழ விடுதலைக்காக களத்திலும் புலத்திலும் உழைத்தவர்கள் நீங்கள். இன்று சில அரசியல் சூனியங்கள் சொல்வதுபோல தமிழீழ விடுதலைப் போராட்டம் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட ஊருடையவோ, குறிப்பிட்ட சாதியுடையவோ போராட்டமல்ல. இந்தப் போராட்டத்தில் தலித்துகள், பெண்கள், கிழக்கு மக்கள், இஸ்லாமியர்கள் என ஒடுக்கப்பட்ட அனைத்துத்தரப்புகளும் இணைந்திருந்தார்கள்.

நாம் ஆளும் சிங்களப் பேரினவாத அரசுகளிடமிருந்து சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பிரிந்து செல்வதற்காகன அனைத்து நியாயங்களும் நம்மிடமிருந்தன. அந்த நியாயங்களைச் சிங்களப் பேரினவாதிகளே தங்களது இனவாத அரசியலாலும் வன்செயல்களாலும் நமக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்கள். தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையையே யாருக்காவது கேள்வி கேட்கும் நோக்கமிருப்பின் அதைத் தயவுசெய்து என்னிடம் கேளாதீர்கள். அதை லெனினிடமும் ட்ரொட்ஸ்கியிடமும் ரோஸா லக்ஸம்பேர்க்கிடமும் ஸ்டாலினிடமும் கேட்டுக்கொள்ளுங்கள். நான் அவர்களது விசுவாசமான மாணவன் மட்டுமே.

இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நமக்கு வாய்த்த அரசுத் தலைவர்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள். டி.எஸ்.சேனநாயக்க டட்லி சேனநாயக்க, பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஜெயவர்த்தனா, பிரேமதாசா, டிங்கிரி பண்டா விஜேதுங்க, சந்திரிகா, மகிந்த ராஜபக்ச அனைவரும் இனவாத அரசியல் செய்தவர்களல்லவா? சுதந்திரம் கிடைத்த கையோடு சேனநாயக்கா செய்த முதல்வேலை பத்து இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியதே. பண்டாரநாயக்காவின் காலத்திலே தனிச் சிங்களச்சட்டம், இனக்கலவரம். ஸ்ரீமாவின் காலத்திலே ஸ்ரீமாவோ -சாஸ்திரி ஒப்பந்தம், இலங்கையை பவுத்த சிங்களக் குடியரசாக்கி அரசியல் சாசனத்தை மாற்றியமைத்தது, பல்கலைக்கழக நுழைவுக்கு மொழிவாரியான தரப்படுத்தல் - அது சில வருடங்களிற்குகப் பின்பே மாவட்டரீதியான தரப்படுத்தலாக மாற்றப்பட்டது -, ஜெயவர்த்தனா பதவியேற்றதுமே 1977 கலவரம், 1983ல் கலவரம், சந்திரிகாவின் ‘சமாதானத்திற்கான யுத்தம்‘, செம்மணிப் புதைகுழிகள், இறுதியாக மகிந்தவின் காலத்தில் ஒட்டுமொத்தப் பேரழிவும் இனப்படுகொலையும் என எத்தனை எத்தனை பேரழிவுகள்!

பயங்கரவாதத்தோடு யுத்தம் செய்தார்களாம்! 1956ல் எந்தத் தமிழன் ஆயுதம் தூக்கினான்? ஏன் இங்கினியாகல இனச் சங்காரம் நடந்தது. 1958ல் எவன் ஆயுதம் தூக்கினான்? ஏன் மறுபடியும் இனச் சங்காரம் நடந்தது. 1972ற்கு முன்பு எவன் பிரிவினைக்காகப் போராடினான்? ஏன் அரசியல் சாசனம் திருத்தப்பட்டு இலங்கை பவுத்த சிங்களக் குடியரசாக மாற்றப்பட்டது? புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளையும் பெண்களையும் குழந்தைகளையும் காயமுற்றவர்களையும் குண்டுவீசி அழித்தது இனப்படுகொலையா இல்லையா! ருவண்டாவில் நடந்த இனப்படுகொலைக் குற்றவாளிகள் அண்மைக்காலங்களில் ஒருவர் பின் ஒருவராகத் தண்டிக்கப்பட்டு வருவதை அறிவீர்கள். ருவாண்டா இனப்படுகொலையில் முக்கியப் பங்கு வகித்த இராணுவத் தளபதி பிசிமுங்குவுக்கு அய். நாவின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை வழங்கிய அசோகா டி சில்வா, இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்பது ஒரு குறிப்பான தகவல். ருவண்டாவைப்போல எட்டு இலட்சம், பத்து இலட்சம் என்ற கணக்கில் கொல்லப்பட்டால் மட்டும்தானா அது இனப்படுகொலை எனப் பொருள்படும்? ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டால் அது இனப்படுகொலை இல்லையா? இது எந்த ஊர் நியாயம்?

சில அரசியல் மேதைகளும் ஆய்வாளர்களும் அய்.நா.சட்டம், ஜெனிவா வரையறுப்பு என்றெல்லாம் எடுகோள்களைச் சொல்லி இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை என்கிறார்கள். அவை ஆய்வுகளல்ல வக்கிரங்கள். என்று தமிழ் இனத்தில் பிறந்த ஒரேயொரு காரணத்தால் மட்டுமே ஒருவன் தெருவில் கொல்லப்பட்டானோ, என்று எங்கள் கிராமங்களை இலங்கை அரசின் விமானங்கள் குண்டு வீசித்தாக்கி பொதுமக்களைக் கொன்றொழித்தனவோ அன்றே இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பித்துவிட்டது. எது இனப்படுகொலை எனத் தீர்மானிக்கும் உரிமை சட்ட நிபுணர்களிற்கோ, அரசியல் ஆய்வாளர்களிற்கோ கிடையாது. நடந்தது இனப்படுகொலையா இல்லையா என முடிவு செய்ய வேண்டிய உரிமை பாதிக்கப்பட்டவர்களுடையது. வன்னியில் நடந்த பேரழிவிற்கு விடுதலைப் புலிகளும் பொறுப்பானவர்களே. அவர்கள் மக்களைத் தடுத்து வைத்திருந்தது அழிவின் அளவை நிச்சயமாகக் கூட்டியிருக்கிறது. அதற்காக இலங்கை அரசு நிகழ்த்தியது இனப்படுகொலை இல்லையென ஆகிவிடாது.

நமது தமிழீழக் கனவு சிதைக்ப்பட்டுவிட்டது எனச் சொன்னேன். ஆனால் அது சிதைக்கப்பட்;டது முள்ளிவாய்க்காலில் அல்ல. ஈழப் போராட்டம் தோற்றுவிட்டது என்ற திடீர் ஞானத்தை நாங்கள் மே 18க்குப் பின்னாகப் பெற்றவர்களல்ல. 1986ல் TELO இயக்கத்தை விடுதலைப் புலிகள் தாக்கியழித்தபோதே தமிழீழப் போராட்டம் தோற்றுவிட்டது. நமது போராட்த்தின் தோல்வி வெளியிலிருந்து திணிக்கப்பட்டதல்ல. அது புலிகளாலேயே தொடக்கிவைக்கப்பட்டது. ‘ஈழப் போராட்டத்தின் வரலாறைப் பாஸிசத்தால் புலிகள் தோல்வி வரலாறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்‘ என நான் எழுதினேன். ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான மறைந்த நமது தோழர் சி.புஸ்பராஜா 2004ல் ‘தீராநதி‘ இதழின் நேர்காணலில் ‘ஈழப்போராட்டம் தோற்றுவிட்டது‘ என அழுத்தம் திருத்தமாகத் தோல்விப் பிரகடனம் செய்தது தோழர்களிற்கு ஞாபகத்திலிருக்கலாம். நாங்கள் ‘உள்ளுக்கு விட்டு அடிக்கிற‘ கட்சியில்லை. நடக்கப் போவதை ஆதாரத்தோடு முன்னறிவித்தவர்கள். ஈழப்போராட்டத்தின் தோல்வியை எப்படித் தடுக்கலாம் எனத் துடித்தவர்கள். விடுதலைப் புலிகளின் பாஸிசக் கொலைகார அரசியலுக்கு முன்னால் எதுவுமே செய்ய முடியாமல் தோற்றுப் போய் நின்றவர்கள். புஸ்பராஜா வெளியிட்ட ஓர் அரசியல் - இலக்ககியத் தொகுப்பு நூலின் பெயர் ‘ தோற்றுத்தான் போவோமா?‘

தோழர்களே! புலிகளின் பாஸிச அரசியலுக்கும் கொலைச் செயல்களிற்கும் எதிராகத் தொண்டைத் தண்ணீர் வற்ற உயிரைக் கையில் பிடித்தபடி புலம்பெயர்ந்த தெருக்கள் தோறும் புலிக் குண்டர்களிடம் நாயடி பேயடி பட்டும் நாங்கள் ஓய்விலாமல் குரல்கொடுத்து வந்திருக்கிறோம். தோழர் சபாலிங்கத்தின் உயிரும் பறிக்கப்பட்டது. புலிகளின் பாஸிச அரசியலுக்கு எதிராகக் குரலெழுப்பி ஈழத்தில் மண்ணோடு மண்ணாகிப் போன நமது தோழர்கள் ஆயிரம் ஆயிரம். நம் எவரை விடவும் புலிகளின் பாஸிச அரசியலையும் கொலைவெறித்தனத்தையும் நந்திக் கடலோரமே நமது மக்களிற்குத் தெளிவாகப் புரியவைத்தது. இனிப் புலிகள் நம் மக்களிடையே தூலமாகவுமில்லை சூக்குமமாகவுமில்லை என்பதுதான் உண்மை. வெளிநாட்டுப் புலிகள் இங்கே சேர்த்த சொத்துகள் கரையும்வரை தாக்குப்பிடிப்பார்கள். இப்போதே அவர்கள் சிதற ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு வருடங்களில் சுக்குநூறாகச் சிதறிவிடுவார்கள். அந்தக்காலத்தில் யாழ் பஸ்நிலையத்தில் ‘வைரமாளிகை‘யின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள். உருத்திரகுமாரன் ஒரு இன்டர்நஷனல் வைரமாளிகை. அவ்வளவும்தான். அதுதான் அவரது பேச்சுக்கான மதிப்பு. இனி ஈழத்து அரசியலில் புலிகள் ஒரு சக்தி இல்லை. எனவே இனியும் நமது சக்தியைப் புலிகளை விமர்சிப்பதிலும் எதிர்ப்பதிலும் அதிகமாகச் செலவிடத் தேவையில்லை.

யுத்தம் முடிந்து புலிகள் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகிவிட்டன. என்ன நடக்கிறது இலங்கையில் இன்று? தேசியகீதத்தைத் தமிழில் தமிழில் பாடக்கூடாது என ஒரு சட்டம், வெளிநாட்டில் அகதித் தஞ்சம் கோரியவர்களிற்கு இலங்கைத் தூதுவரகங்களில் கடவுச்சீட்டு வழங்க மறுத்து ஒரு சட்டம்… இதுதான் பகைமறப்பு என்பதா? இரண்டு நாட்களிற்கு முன்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளவெட்டியில் நடத்திய கூட்டத்தில் இராணுவக் காடையர்கள் சிவில் உடையில் நுழைந்து தாக்கிக் கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாலேயே இது நடந்திருக்கிறது. இராணுவத்தின் அனுமதி பெறாமால் நடத்தப்பட்ட கூட்டம் அதுவென்ற செய்தி உண்மையாயிருந்தால் கூட அதை சட்டப்படி அணுகவேண்டுமே தவிர சிவில் உடையில் நுழைந்து உதைத்துக் கலைக்க இராணுவத்திற்கு உரிமை கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கே இந்த நிலையெனில் பொதுமக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். இலங்கையின் இனங்களிற்கிடையேயான நல்லிணகத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இராணுவத்திற்குள் உள்ள தமிழ் விரோத சக்திகளின் தாக்குதல் அதுவென முண்டிவிழுங்கிப் பேசியுள்ளார். அவ்வாறெனில் அதற்கு என்ன நடவடிக்கையை அமைச்சசர் எடுக்கப்போகிறார் என மனோ கணேசன் திருப்பிக் கேட்டிருக்ககிறார். யாரிடமும் பதிலில்லை.

வெளியாகியிருக்கும் அய்.நா. நிபுணர்களின் அறிக்கையை விவாதித்து இந்தியாவில் கூட்டம் போடுகிறார்கள், அய்ரோப்பாவில் அமெரிக்காவில் கூட்டம் போடுகிறார்கள். அந்த அறிக்கையை விவாதித்துக் கூட்டம்போட வேண்டிய இடம் வன்னியல்லவா. அதற்கு வாய்ப்பிருக்கிறதா? மகிந்த அரசு அதை அனுமதிக்குமா? எங்கேயிருக்கின்றன வடக்கின் வசந்தமும் கிழக்கின் உதயமும்? வாய்மூடி கால்கழுவிக் கிடப்பதற்குப் பெயர் இணக்க அரசியலல்ல, அது அவமானகரமான வீழ்ச்சி மட்டுமே. பகை மறப்பு …..பகை மறப்பு என்கிறோமே யாருடன் இந்தப் பகை மறப்பு என்பதில் நாம் உறுதியாயிருக்க வேண்டும். இழைத்த போர்க்குற்றத்தை ஒத்துக்கொள்ள மறுக்கிறது இலங்கை அரசு. தாங்கள் ஒரு பொதுமகனைக் கூடக் கொல்லவில்லை எனச் சாதிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச. இவர்களா பகை மறப்புச் செய்யப்போகிறவர்கள்? இவர்களா சிறுபான்மை இனங்களிற்கு ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டப்போகிறவர்கள்? தோழர்களே பகை மறப்பு என்பது சிங்கள மக்களுடன் தானே தவிர ஒருபோதும் போர்க் குற்றவாளிகளுடன் அல்ல!

அய்.நா.நிபுணர்கள் அறிக்கை குறித்தும் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். ஏறத்தாழ முன்னூறு நாடுகள் இருக்கும் இந்தப் பூமிப்பந்தில் இந்த நாடுகளுக்கிடையோன மோதல்களையும் முறுகல்களையும் கட்டுப்படுத்தவும் நாடுகளுக்கிடையேயான நல்லெண்ணங்களை வளர்த்தெடுக்கவும் ஒரு பொதுவான அமைப்பு நமக்கு அவசியமே. அய்.நா.அவை அந்தப் பாத்திரதை நிகழ்த்த வேண்டும். மாறாக அய்.நா.அவை அமெரிக்காவினதும் மேற்குநாடுகளினதும் கைப்பொம்மையாகச் செயற்பட்டுவருகிறது என்பது நாமறிந்த பரகசியமே. செய்யப்பட வேண்டியது வெனிசுலாவின் மக்கள் தலைவர் சாவேஸ் சொன்னதுபோல அய்.நா. அவையைச் சீரமைக்க வேண்டியதே. அவர் கூறுவதுபோல அய்.நாவின் அமைவிடம் அமெரிக்காவிலிருந்து மூன்றாமுலக நாடொன்றிற்கு மாற்றப்பட வேண்டும். இதிலெல்லாம் நமக்குக் கருத்து வேற்றுமைகள் கிடையாது. அதற்காக அய்.நா. நிபுணர்கள் இலங்கை குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை பொய்யாகிவிடாது தோழர்களே. இந்த விடயத்தில் அய்.நாவின் அறிக்கை முழுக்க முழுக்க உண்மைகளாலேயே நிரப்பப்பட்டிருக்கிறது. அய்.நா. கண்டறிந்த உண்மைகள் கொஞ்சமே. நடந்த அனர்த்தங்கள் அதைவிட அதிகம். நடந்த உண்மைகளை அறிய நாம் எதற்கு அய்.நா.அறிக்கையை நம்பியிருக்க வேண்டும். நாம் எவ்வளவு பேரை இந்த யுத்தத்திற்கு வாரிக்கொடுத்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா? இங்கேயிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தத்தில் உங்கள் உறவுகளையும் நட்புகளையும் இழந்திருக்கிறீர்களா இல்லையா? இல்லையெனில் தயவு செய்து வன்னிக்குத் தொலைபேசிப் பாருங்கள். போதிசத்துவன் சொன்னதுபோல மிளகு வாங்க இழவு விழாத வீடேதும் வன்னியிலில்லை.

அய்.நா. நிபுணர்களின் அறிக்கை குறித்து அண்மையில் சென்னையில் மே 17 இயக்கத்தினர் ஒரு கருத்தரங்கை நடத்தியிருந்தனர். அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளில் ஒன்றிரண்டை இணையம் வழியே நான் கேட்டேன். சிங்கள இனவாதிகள் அய்.நா.வின் மீது ஏகாதிபத்தியச் சார்பு என்ற விமர்சனத்தை முன்வைத்து இலங்கை அரசைக் காப்பாற்ற முயல்கிறார்களல்லவா, அதைப் போலவே அந்த விமர்சனத்தை முன்வைத்து புலிகளை நியாயப்படுத்தும் வகையில் ஒருவர் உரையாற்றினார். இன்னொருவர் ஒரே போடாக அய்.நா. அறிக்கை புலிகள் மீது சுமத்தும் குற்றங்களைக் காலி செய்தேயாக வேண்டும் என்றும் அது மிக இலகுவானது என்றும் சொன்னார். அவர் புலிகளைக் காப்பாற்ற செய்த முயற்சிகளில் ஒன்றைச் ‘சாம்பிளுக்கு‘க் கேளுங்கள். அய். நா. அறிக்கையின் பார்வை மேற்கு சார்ந்த மனிதாபிமானப் பார்வையாம். அது நமக்குப் பொருந்தாதாம். சிறுவர்களைப் படையில் கட்டாயமாக இணைப்பதைக் குற்றமாகக் காண்பது மேற்குலகப் பார்வையாம். சிறுவர்கள் தம்மைத்தாமே சாட்டைகளால் அடித்துப் பிச்சை கேட்பதைப் பார்த்தும் பாராமல் போவதுதான் நமது பண்பாடாம். நாசமாய்ப் போக!

தமது குழந்தைகள் பத்திரமாகத் தமது கைகளிலேயே இருக்கும் வரை இந்த மேலைத்தேய கீழைத்தேய மயக்கம் இருக்கத்தான் செய்யும். புலிகளின் முகாம்களின் முன்னே தங்களது குழந்தைகளை விடுதலை செய்யுமாறு தாய்மார்கள் அழுது வடித்த கண்ணீர் இந்த அறிவிலிகளை மன்னிக்காது. இது குறித்த விவாதம் இணையத்தில் நடந்துகொண்டிருக்கையில் “இது அறியாமை அல்ல…உண்மைகளை மறைப்பது சுரண்டலே“ என்று ஒரு தோழர் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதுதான் உண்மை. இவர்களெல்லாம் குமுதம் ரிப்போர்ட்டர், ஜுனியர் விகடன் தாண்டி ஏதும் படிக்கமாட்டாதவர்கள் என்பது தெரிந்தாலும் இவ்வாறு உளறுவதற்கு முன்பு ஆகக் குறைந்தது சைனா கெய்ற்றசி எழுதிய ‘குழந்தைப் போராளி‘ என்ற நூலையாவது இவர்கள் படித்துப் பார்க்க வேண்டும். அரசிலையோ யுத்தத்தையோ குறித்துத் தெரிந்துகொள்வதற்காக அல்ல, துப்பாக்கி திணிக்கப்பட்ட குழந்தைகளின் அகவுலகைத் தெரிந்துகொள்வதற்காக இவர்கள் அதைப் படிக்க வேண்டும் எனத் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன். “அவர்கள் எனது அம்மாவை என்னிடமிருந்து பறித்துக்கொண்டு எனது கைகளில் துப்பாக்கியைத் திணித்தார்கள்” என்றெழுதினார் உகண்டாவின் குழந்தைப் போராளி சைனா கெய்ற்றசி.

எனினும் பாரிஸ் இலக்கிய வட்டங்களிற்கு குழந்தைப் போராளிகளை நியாயப்படுத்தும் இந்தச் சுத்துமாத்துக் கருத்துப் புதிதல்ல. இங்கே லா சப்பலில் வாசுதேவன் என்றொரு மூதறிஞர் சுற்றிக்கொண்டிருக்கிறார் அல்லவா. அவர் கிட்டத்தட்ட இதே கருத்தைச் சில வருடங்களிற்கு முன்பு இலக்கியச் சந்திப்பொன்றில் சொன்னார். அதாவது 1789ல் நடந்த பிரஞ்சுப் புரட்சியில் பத்து வயதுச் சிறார்கள் எல்லாம் போரிட்டனராம். அந்தப் புரட்சியை நாம் ஏற்றுக்கொண்டால் சிறுவர்கள் போரில் இணைக்கப்படுவதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாரவர். மகாத்மா காந்தி பத்து வயதில் கலியாணம் முடித்தார், மகாகவி பாரதி பன்னிரெண்டு வயதில் கலியாணம் முடித்தார். அவர்களை நாம் ஏற்றுக்கொள்வதெனில் நாமும் நமது குழந்தைகளிற்கு பத்து வயதில் கல்யாணம் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒப்பான லூசுத்தனமல்லவா இது. 18ம் நூற்றாண்டு மனிதவுரிமை விழுமியங்களை 21ம் நூற்றாண்டிற்கு பொருத்திப் பார்ப்பதும் அதன் மூலம் புலிகளின் அடாவடிகளை நியாயப்படுத்த முயற்சிப்பதும் எவ்வளவு பொறுக்கித்தனம். குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பதைத் சட்டமாகவேனும் தடைசெய்திருக்கும் தேசத்தில் குழந்தைகளைக் கட்டாயமாகப் போரில் இணைப்பதும் அவர்களை யுத்தமுனைகளின் முன்னரங்கத்தில் நிறுத்தி அவர்களைக் கொல்லக் கொடுத்ததும் எவ்வளவு பெரிய போர்க் குற்றம்!

யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 2009 பெப்பரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே இலங்கை அரசினதும் விடுதலைப் புலிகளினதும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களையும் கட்டாயப் பிள்ளைபிடிப்புகளையும் அய். நா.அவையும் யுனிசெப்பும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும் செஞ்சிலுவைச் சங்கமும் அம்பலப்படுத்தி அறிக்கைகளை வெளிட்டன. அவற்றின் தொகுப்புத்தான் இன்றைய அய்.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை. அய்.நா.அவையின் அமெரிக்கச் சார்பு, பக்கச் சார்பு குறித்த விமர்சனங்கள் வேறு. ஆனால் அதை முன்வைத்து போர்க் குற்றங்களிலிருந்து இலங்கை அரசையோ விடுதலைப் புலிகளையோ நியாயப்படுத்த எத்தனிப்பது பச்சை அயோக்கியத்தனம். அது நந்திக்கடல் படுகையில் தசையும் நிணமும் சிதறி மாண்டுபோன மக்களிற்கு இழைக்கப்படும் மன்னிப்பே அற்ற துரோகம்.

இங்கே எனக்குமுன் பேசிய ஒருவர் இலங்கை அரசு இந்திய அரசின் ஒத்துழைப்போடு இடதுசாரிப்பாதையில் நடைபோடுவதால் அவற்றை மடக்கவே மேற்கு ஏகாதிபத்தியங்கள் அய். நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பயன்படுத்த முயற்சிக்கின்றன என்றார். என்னவொரு அவல நகைச்சுவையிது. போர்முனையில் சரணடைந்தவர்களைச் சித்திரவதை செய்து கொல்வதும் அதை மூடிமறைப்பதுவுமா ஓர் இடதுசாரி அரசின் பண்பு? நாட்டின் பொதுச் சொத்துகளை அந்நிய பல்தேசிய நிறுவனங்களிற்கு விற்றுத் தள்ளுவதா இடதுசாரிப் பண்பு? அரசியல் சட்டப்படியே இலங்கை மதச் சார்புள்ள நாடு. அந்த நாட்டில் பெரும்பான்மை மதத்தின் புத்தர் சிலைகளை அடாத்தாகத் தமிழர் நிலத்தில் நிறுவுவதா இடதுசாரித்தனம்? இராணுவம் படை நடத்துவதாகக் கேள்விப்பட்டுள்ளோம். கடை நடத்துவதாக இப்போதுதான் கேள்விப்படுகிறோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தளங்களிற்கும் இராணுவத்தை நுழைத்துவிட்டு எங்களின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் ஆக்கிரமித்து நின்று அது இடதுசாரித்தனமென்றால் அய்யோ உங்களிற்கு கேடு!

இதில் இந்திய அரசுக்கு வேறு ஓர் இடதுசாரி முத்திரை. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது இந்திய அரசு. இன்று மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறோம் எனச் சொல்லிக்கொண்டு தண்டகாரண்யப் பகுதி முழுவதும் மாபெரும் ஒடுக்குமுறையை அவிழ்த்துவிட்டிருக்கிறது இந்திய அரசு. பழங்குடிகள் ஆயிரம் ஆயிரமாக அங்கே கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தண்டகாரணயப் பகுதியிலிருந்து ஆதிவாசிகளை வெளியேற்றிவிட்டு அங்கிருக்கும் கனிம வளங்களைப் பெருமுதலாளிகளுக்கு விற்றுவிட இந்திய அரசு தனது குடிமக்களின் ஒரு பகுதியினருக்கு எதிராக ஓர் உள்நாட்டுப் போரையே நடத்திக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக அய்.நா. நிபுணர்கள் குழுவிற்கு தண்டகாரண்யப் பகுதியிலும் பாரிய வேலையிருக்கிறது. இதுவா இடதுசாரி அரசு? தோழர்களே இலங்கை - இந்திய அரசுகளிற்கு இடையேயான உறவு இடதுசாரி உறவல்ல. அது அப்பட்டமான முதலாளித்துவ உறவு. இலங்கையின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் இலங்கையின் சந்தையைக் கைப்பற்றவுமே இந்திய அரசு இலங்கையில் கூடிக் கும்மியடிக்கிறது. அதில் அது பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டது. அனல்மின் நிலையம், காங்கேசன்துறை சீமெந்து ஆலை, சுதந்திர வர்த்தக வலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், நிர்மாண ஒப்பந்தங்கள் என இந்தியப் பெருமுதலாளிகள் இலங்கையில் இலாபம் கொழிக்க ஆரம்பித்துவிட்டார்கள். போரின்போது பெற்ற உதவிக்கான விலையை ராஜபக்ச இப்போது இந்திய அரசிற்கும் பெருமுதலாளிகளிற்கும் செலுத்திக்கொண்டிருக்கிறார். செலுத்தப்படும் ஒவ்வொரு சதமும் இலங்கையின் உழைக்கும் மக்களின் வேர்வைத்துளிகள். ஒவ்வொரு ரூபாயும் இரத்தத் துளிகள்.

அண்மையில் கே.பியின் தொலைக்காட்சி நேர்காணலைப் பார்த்திருப்பீர்கள். அதில் அவர் தாங்கள் போராட்டத்தைச் சற்றுப் பிந்தித் தொடங்கியது பிழையாகிவிட்டது எனத் தெரிவித்திருந்தார். அய்யோ ஆண்டவனுக்கு நன்றி. இவர்கள் இன்னும் கொஞ்சம் முன்னதாகவே போராட்டத்தைத் தொடக்கியிருந்தால் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தையே போட்டுத்தள்ளியிருப்பார்கள்.அந்த நேர்காணலில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும் மறுபடியும் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுவதும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமை என அவர் தெரிவித்திருந்தார். புலம்பெயர்ந்த தொலைக்காட்சி விவாதங்களில், வானொலிகளில், பத்திரிகைகளில், இணையங்களில் இவ்வாறான குரல்களை நாம் அடிக்கடி கேட்கிறோம். விடுதலை அரசியல் கருணையின் அரசியலாக மாற்றப்படும் காலமிது. உதவி செய்பர்கள் தாராளமாகச் செய்யட்டும் அதிலொன்றும் மறுப்பில்லை. ஆனால் நமது நிலங்களை எரித்தது இலங்கை அரசு. நமது வளங்களை அழித்தது இலங்கை அரசு. நமது வீடுகளைக் குண்டு போட்டுச் சிதைத்தது இலங்கை அரசு. அவற்றையெல்லாம் மறுநிர்மாணம் செய்து அளிக்கவேண்டிய கடமை எங்களது வரிப்பணத்தில் தங்கியிருக்கும் இலங்கை அரசுடையது தானே தவிர அந்தச் சுமையைச் சுமக்க வேண்டியவன் இந்தக் குளிர்தேசங்களில் மாடாய் உழைத்து அய்ம்பது வயதிலேயே மண்டையைப் போடும் அகதித் தமிழனல்ல. அரசு செய்ய வேண்டிய பிராயச்சித்தக் கடமையை அகதித் தமிழன் மீது சுமத்தும் கே.பியின் கருணையுள்ளம் சந்தேகத்திற்குரியது. கே.பிக்கு வெளிநாட்டில் அகதித் தமிழனிடம் காசு வசூலித்துப் பழகிவிட்டது. பலகாலப் பழக்கமல்லவா. திடீரென நிறுத்துவது கொஞ்சம் சிரமம்தான்.

நவீன முதலாளித்துவ சமூக அமைப்பில் முதலாளி - தொழிலாளி - ஊதியம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ‘கூலியுழைப்பும் மூலதனமும்‘ என்ற நூலில் ஏங்கெல்ஸ் விளக்கியிருப்பார். ஒரு தொழிலாளி வேலை முடிந்து, வீடு சென்று, உணவருந்தி, உறங்கி அடுத்தநாள் வேலைக்குத் தெம்போடு வருவதற்கு ஆகக் குறைந்தது எவ்வளவு பணம் தேவைப்படுமே அதையே முதலாளி தொழிலாளிக்கு ஊதியமாக வழங்குகிறார் என்பார் ஏங்கெல்ஸ். அதுதானே உண்மை தோழர்களே! இங்கே நாங்கள் 95 விழுக்காடானவர்கள் அடிப்படைச் சம்பளத்திற்கு வேலைசெய்து அதில் பாதியை வீட்டு வாடகையாகச் செலுத்திவிட்டு கடையில் ஒரு கோப்பி குடிக்கக் கூட ஒன்றுக்கு இடண்டுதரம் கணக்குப் பார்ப்பதுதானே உண்மை. மின்சார பில்லும் தொலைபேசி பில்லும் குறித்த தவணையில் கட்டக் கூடச் சிரமப்படுகிறோமல்லவா. நாட்டின் அபிவிருத்திக்கு என இலங்கையின் உழைக்கும் மக்களின் பெயரால் கோடி கோடியாகக் கடன்வாங்கும் அரசுக்கா அகதித் தமிழனுக்கா நாட்டை மறுபடியும் கட்டியெழுப்ப வேண்டிய கடமையுள்ளது எனச் சொல்லுங்கள். இருபது வருடங்களாக யுத்தத்திற்குச் செலவளித்த பட்ஜெட் பணத்தை தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்காக அரசாங்கம் திருப்பி விடுவதை இனவாதம்தானே தடுக்கிறது. அது அவ்வாறில்லையெனில் கே.பியின் அகதித் தமிழனை நோக்கிப் பணம் கேட்கும் குரலின் பொருளென்ன. அழிப்பதற்கு மட்டும் இந்தியாவிடமும் இஸ்ரேலிடமும் அதி நவீன ஆயுதங்களைப் பெற்று அதனால் தமிழ் மக்களைக் கொன்றழித்துவிட்டு, நிவாரணமாக நாலு தகரமும் பிளாஸ்டிக் வாளியும் அரசு கொடுக்கிறது. மிச்சத்தை அகதித் தமிழன் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். இவ்வளவுக்கும் அகதித் தமிழன் புகலிடத்திற்கு வந்தநாளிலிருந்து வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி ஊரிலுள்ள தனது உறவுகளிற்கு உதவிகள் செய்துகொண்டுதானிருக்கிறான். இன்றைய ஈழத் தமிழர்களின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் இலங்கை அரசின் அந்நிய செலவாணியிலும் அகதித் தமிழனின் உழைப்புத்தான் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த அகதித் தமிழன்தான் விடுதலை இயக்கங்களுக்கும் பின்பு புலிகளிற்கும் தன்னை ஒறுத்துப் பொருள் வழங்கியவன். இலங்கை அரசுடைய பொறுப்பையும் அவனது தோள்களில் சுமத்தி அவனைக் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளிவிடாதீர்கள். யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவன் மாதம் மாதம் ஊருக்குப் பணம் அனுப்பிக்கொண்டுதானிருப்பான்… அவனின் மரணம்வரை. கே.பியும் தொண்டுள்ளம் படைத்தவர்களும் நிவாரணம் கேட்டுப் போராட வேண்டியது அரசிடமே.

யுத்தம் முடிந்து புலிகள் இல்லாமற்போய் இரண்டு வருடங்களாயிற்றே இந்தப் புலிகளை விமர்சித்தவர்களெல்லாம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்றொரு கேள்வியும் இப்போது அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாயிருக்கிறது. இரண்டு வருடங்கள் எனபது வரலாற்றின் மிகமிகச் சிறிய துகள். நான் எனது உரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதுபோல தமிழீழக் கனவு கலைந்து போயிற்று. ஆயுதப் போராட்டம் இனிச் சாத்தியமேயில்லை. இலங்கையில் ஈழத்தமிழர்கள் பதினைந்து விழுக்காட்டுக்கும் குறைவான சனத் தொகையாகிவிட்டார்கள் எனப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. முழு இலங்கையின் அதிகார மாற்றங்களும் இனித் தேர்தல்கள் மூலமே நடைபெறும். எனவே பெரும்பான்மை இனத்தின் வாக்குகளே இலங்கை அரசியலின் இயங்குதிசையை வலுவாகத் தீர்மானிக்கும். கடந்த முப்பது வருடங்களாகப் பாஸிசக் கலாசாரத்தின் மூலம் நமது மக்களை விடுதலைப் புலிகள் அரசியல் உணர்வற்றவர்களாக்கிவிட்டார்கள். அப்படி ஏதாவது இருந்திருப்பின் அது தலைமை வழிபாடகவே எஞ்சி நின்றது. பிரபாகரனுக்கு எதிராக ஒரு சொல் பேசுவது கொலைக்குரிய குற்றமாக இருந்தது. நம்மைப் போன்ற சாதாரணர்களிற்கு மட்டுமல்லாமல் மாத்தையா போன்றவர்களிற்கே இந்தநிலைதான் இருந்தது. அந்தப் பாஸிசக் கலாசாரம் புகலிடத்திற்கும் பரவியது. இங்கும் கொலைகளும் வெட்டுக் குத்துகளும் நிகழ்ந்தன. மழைவிட்டும் தூவானம் விடாததுபோல அவை இப்போதும் தொடர்கின்றன. அண்மையில் புலிகளை விமர்சித்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசியதால் தோழர் குட்டி தாக்கப்பட்டிருக்கிறார். அதற்குச் சற்றுநாட்களிற்கு முன்பாக மேதின நிகழ்வொன்றில் தோழர் சீலன் புலியாதரவாளர்களால் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறார்.

இந்தக் கையறு சூழல்களிற்குள்தான் நாம் இயங்கவேண்டியுள்ளது. நமக்காக மட்டுமல்லாமல் நம்மைத் துரோகி என்பவர்களிற்கும் சேர்த்துத்தான் நாம் சிந்திக்கவும் எழுதவும் பேசவும் வேண்டியிருக்கிறது. புலிகளின் இராணுவவாத அரசியலால் எம்மிடையேயிருந்து துடைத்து அழிக்கப்பட்ட சனநாய அரசியல் கலாசாரத்தை நாம் மறுபடியும் கட்டியெழுப்பாமல் நமக்கு எதிர்காலமில்லை. இதை அரசியல் அணிதிரட்டல் என்றெல்லாம் நீங்கள் அகலக்காலால் அளக்கத் தேவையில்லை. முதலில் தேவையானது ஒவ்வொரு தனிமனிதனிக்குமான அரசியல் விழிப்புணர்வு. அது நடந்தால் அணிதிரட்டல் தானே சாத்தியமாகும். பதினைந்து விழுக்காட்டினரும் ஒன்றிணைந்து தமது அரசியல் பலத்தைப் பிரயோகிக்காமல் இனி நடக்கப்போவது ஏதுமில்லை. இதைச் செய்யத் தாமதிப்போமானால் இணக்க அரசியல் என்ற பெயரில் அடிபணிவு அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் சக்திகளிடமே இப்போது போலவே எப்போதும் தமிழ் மக்களின் தலைவிதி விட்டுவைக்கப்பட்டிருக்கும். மறுபடியும் சொல்கிறேன் தோழர்களே, தமிழீழப் போராட்டத்திற்காக நமது மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே இழந்திருக்கிறார்கள். நாங்கள் சாவுக்கு வாரிக்கொடுத்த போராளிகளிற்கும் போராட்டத்தின் ஆதரவாளர்களிற்கும் பொதுமக்களிற்கும் உண்மையிலேயே கணக்கில்லை. எனது உரையை இந்த அரங்கில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மிகச் சரியான அரசியல் முழக்கமொன்றுடன் நிறைவு செய்ய விரும்புகிறேன்:

உரிமைகள் அல்லாமல் சலுகைகளே போதுமென்றால் இழப்புகளுக்கு அர்த்தமேதுமில்லை.

வாய்ப்பளித்த தோழர்களிற்கு நன்றி, வணக்கம்

நமது தமிழீழக் கனவு சிதைக்ப்பட்டுவிட்டது எனச் சொன்னேன். ஆனால் அது சிதைக்கப்பட்;டது முள்ளிவாய்க்காலில் அல்ல. ஈழப் போராட்டம் தோற்றுவிட்டது என்ற திடீர் ஞானத்தை நாங்கள் மே 18க்குப் பின்னாகப் பெற்றவர்களல்ல. 1986ல் Tஏளோ இயக்கத்தை விடுதலைப் புலிகள் தாக்கியழித்தபோதே தமிழீழப் போராட்டம் தோற்றுவிட்டது. நமது போராட்த்தின் தோல்வி வெளியிலிருந்து திணிக்கப்பட்டதல்ல. அது புலிகளாலேயே தொடக்கிவைக்கப்பட்டது

"இதுவே எந்தன் என்றும் மாறாத நிலைப்பாடு" ------அர்ஜுன்

  • கருத்துக்கள உறவுகள்

1986ல் Tஏளோ இயக்கத்தை விடுதலைப் புலிகள் தாக்கியழித்தபோதே தமிழீழப் போராட்டம் தோற்றுவிட்டது. நமது போராட்த்தின் தோல்வி வெளியிலிருந்து திணிக்கப்பட்டதல்ல. அது புலிகளாலேயே தொடக்கிவைக்கப்பட்டது

root cause ஐ ஆராய்ந்து பார்த்தால் இந்தியா இயக்கங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து தமிழ் மக்களை தற்போது பேக்காட்டுவது போல் காட்டும் அதே வேளை சிங்கள அரசையும் ஒரு பய பீதியில் வைத்திருந்தல்.இதன் மூலம் இந்தியாவை தவிர யாருக்கும் பயன்படாமல் தனது மறைமுக திட்டத்தை ஏனைய இயக்கம் மூலம் நிரைவேற்றியது என்றால் அது மிகையாகாது.சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல், மாங்குள யாழ்தேவி போன்ற மிகப்பெரிய தாக்குதலை ரெலோ மூலம் செய்வித்து மக்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெறுவதன் மூலம் புலிகளை ஓரம் கட்ட இந்தியா பகீரதப்பிரயத்தனம் எடுத்தது.இந்த கபட நாடகத்தில் புலிகள் எடுபடவில்லை.

அடுத்த இந்தியாவின் திட்டம் புலிகள் தம் சொல்லை கேட்காத வரை அவர்களை அழித்தல்.இதனை ரெலோ போன்ற இயக்க்ங்கள் மூலம் செய்ததோடு மட்டுமல்லாமல் தாங்களும் தமிழ் மக்களை காப்பாற்றுகிறோம் என்று சொல்லி தமிழ் மக்களையும் புலிகளையும் அழைத்து விட்டு சிறிய கெரில்லா படையிடம் பெரிய இழப்புக்களுடன் வெளியேற்றப்பட்டது.

இந்தியாவின் கபட நாடகத்துக்கு சிறந்த உதாரணம் போர் ஓய்ந்து 2 வருட காலத்தில் புலிகளின் பிரசன்னம் இல்லாத போது தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு அரசியல் தீர்வை எடுத்து கொடுத்திருக்க முடியும். ஆனால் ஒரு போதும் செய்யாது.

ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராட புறப்பட்ட புலிகள் எப்படி தோல்விக்கு காரணமாகி விட முடியும்??

அர்ஜுன்,

பத்மநாபா கொல்லப்பட்ட தருணங்களின் முன் நகர்ந்த காலத்தில் தான் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்களை கட்டாய இராணுவ பயிற்சிக்கு என்று இந்தியனின் ஆக்கிரமிப்புக்காக பலிகொடுத்தார். இந்திய ஏவல் நாய்களின் அனைத்து ஆக்கிரமிப்புக்கும் சரி என பதில் கொடுத்து அதற்கான அரசியல் பலம் கொடுத்தார். இவர் காலத்தில் தான் மண்டையர் குழு தன் அட்டகாசத்தை காட்டியது

இவர் கொல்லப்பட வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் பிள்ளைகள் இருந்தனர் , தமிழ் ஈழம் பற்றிய கனவு இருந்தது. தன் இன விடுதலை பற்றிய அவா இருந்தது

பத்மநாபா கொல்லப்பட்ட அன்று நான் வெடி கொளுத்தி மகிழ்து இருந்தேன்; இன்றும் மகிழ்கின்றேன்

-----

இன்று, தமிழர் புனர் வாழ்வு கழக பெண் உறுப்பினரையே பாலியல் வல்லுறவு செய்து கொன்ற கொலை காரன் கருணாவின் பிளவை சந்தோசமாக வரவேற்ற முன்னாள் புலி போராளி ஷோபா ஷக்தி; கூறியதை ஏற்று "இதுவே எந்தன் என்றும் மாறாத நிலைப்பாடு" என்று சத்தி எடுக்கின்றீர்கள்

ஆக உங்களுக்கு பத்மநாபா எனும் கொலைஞனின் நடவடிக்கையும் சரி ஆகின்றது; கருணாவினை ஆதரித்த ஷோபா சக்தியின் அரசியல் கொள்கைகளும் சரியாகின்றது

---------------------

வழக்கம் போல இந்த பதிவுக்கும் பதில் கூறாமல் கோழையாக மௌனம் சாதிப்பீர்கள் என்று தெரியும்;ஆனால் தன் இன தமிழ் மக்களின் விடுதலைக்காக புறப்பட்ட எந்த போராளியும் கோழையாக இருந்ததில்லை

நீங்கள் இதில் எதில் சேர்த்தி அர்ஜுன் ?

Edited by நிழலி

  • தொடங்கியவர்

இவைகளெல்லாம் கொஞ்சம் விபரமாக விளக்கபடவேண்டியன.

நுணவிலான் தொட்டு பலர் புலிகளின் ஊடகங்களின் ஊடாக வளர்ந்தவர்கள்.இவர்களுக்கு ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.

இந்தியா இயக்கங்களை பயிற்சிக்கு அழைத்தபோது அனைத்து இயக்கங்களும் தான் சென்றன.ஆனால் ரோ ஆல் நேரடியாக பாவிக்க பட்ட இயக்கங்கள் டெலோவும் புலிகளும்தான்.ரோவிற்கு தெரியும் அனைத்து இயக்கங்களின் நிலைப்பாடும்.ஈரோஸ் சிறு இயக்கம்.உமாவும்,நாபாவும் மாக்கிசம் கதைப்பவர்கள்? எனவே சிறியும்,பிரபாவும் தான் தமக்கு கேள்விகேட்காமலே உதவுவார்கள் என்று நினைத்தார்கள்.(பிராபாவின் உள்மனதிற்குள் வேறு திட்டம் இருந்திருக்கலாம்.முடிந்தவரை பாவித்துவிட்டு மாறிவிடுவம் என்று).இதை ஒரு ரோ அதிகாரி என்னிடம் சொன்னார்.

சாவகச்சேரி தாக்குதல்,ரெயின் தாக்குதல்-டெலோ

அனுராதபுர தாக்குதல்-புலிகள்

இவை ரோவின் வேண்டுகோளுக்காக நடந்தவை.

நான் உமாவுடன் பிரச்சனைப்பட்டே வெளியேறினேன் இருந்தும் உமா டெல்கியில் பல தடவை "நீங்கள் என்னத்தை எங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை தெளிவாக்கும் வரை உங்களுடன் சேர்ந்து வேலை செய்வது சாத்தியமற்றது என தெளிவாக அவர்களிடம் கூறினார்".

பின்னர் டெலோ-புலிகள் யுத்தம் அனைத்தையும் மாற்றிவிட்டது.அந்த நேரம் பிரபா இந்தியாவில் தான் இருந்தார்.ரோ விற்கு 5 நிமிடங்கள் எடுத்திருக்க மாட்டாது பிரபாவிடம் சண்டையை நிப்பாட்டச்சொல்ல.அதையும் அவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.இந்த நேரமாவது புலிகளுக்கு விளங்கியிருக்க வேண்டும் ரோவின் உள்நோக்கம்.

அடுத்து நாபா இன்றும் நான் மதிக்கும் ஒரே தலைவர்.இந்தியன் ஆமி வந்தபின் நடந்தது எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி.இந்தியன் ஆமி வர முதல் நாபா செய்த ஒரு கொலை சொல்லவும் பார்க்கலாம்.நான் வெளியில் வேலை செய்ததால் பலருடன் பழகும் வாய்ப்பு கிட்டியது.புலிகளின் மத்திய குழுவில் இருந்து விலகிய பலரை சந்தித்தபடியால் புலி என்ன செய்யும் என முன்பே பலர் சொல்லிவிட்டார்கள்.கடந்த 20 வருடங்களாக அதுதான் நடந்து முடிந்தது.

சோபாவின் கட்டுரைக்கு(வணக்கத்திற்கு பின்னால் ) ஒரு பந்தி இணைத்து அதுவே எனது கருத்து என எழுதினேன்.முழு கட்டுரையும் அல்ல.எனது இணைப்பால் வந்தபிழை மன்னிக்கவும் நிழலி.

  • தொடங்கியவர்

நான் என்றும் மௌனம் சாதிப்பவனல்ல நிழலி.வேண்டாத விடயங்களுக்கு சிலவேளை பதிலளிக்க விரும்புவதில்லை.சிலவேளை யாழும் இடம் தராது.

அடுத்து கட்டுரையின் முடிவிற்கு பின் நான் அதில் ஒரு பந்தியை இணைத்து அதுதான் எனது கருத்தென பதிவிட்டிருந்தேன்.முழுக்கட்டுரையும் ,சோபாவின் சிந்தனையுமல்ல எனது கருத்து.இணைப்பால் வந்த கோளாறு மன்னித்துவிடுங்கள்.

  • தொடங்கியவர்

ஒருமணித்தியாலம் பேஸ்புக்கில் கழித்துவிட்டு மீண்டும் ஒரு பதிவு.

எனக்கும் எத்தனையோ ஆயிரம் நண்பர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நாட்டைபற்றி ஒரே கவலை.பேஸ்புக்கில் கூட இரத்தம் தோய்ந்த அடையாளம் எங்கேயாவது இருக்கும்.ஆனால் ஏதாவது செய்வோம் அல்லது கதைப்போம் என்றால் மகனுக்கு டுயூசன் மகளுக்கு டான்ஸ் கிளாஸ் இதுதான் பிரச்சனை

.ஒரு குறிப்பிட்ட கூட்டமே தேசியமோ, எதிரோ தொடர்ந்தும் களத்தில் இதுதான் உண்மை.இதில் சிலருக்கு வருமானம் சிலர் பேயடைகள்.இப்படித்தான் எமது போராட்டம் இப்போ நகர்கின்றது

இன்று கலாதரனின் வானொலியில் சுரேந்திரனின் பேட்டி"பல அமைப்புகள் வேண்டுமென அடித்து சொல்லுகின்றார் ஒன்று விலை போனாலும் ,அழிந்தாலும் இன்னொன்று இருக்குமாம் ஆரம்பத்தில் சொல்ல எவருக்கும் துணிவு இல்லாமல் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அர்சுனன், சோபாசக்தி எந்தப் புஸ்பராஜாவைச் சொல்லுறார்? கென்சிமோகணோட சேர்ந்து வங்கிக் கொள்ளையில ஈடுபட்டு பின்பு பஸ்தியாம்பிள்ளையிடம் அடிவாங்கி அதுக்குப் பழிதீர்க்கவென தலைவரை நாடி பெரிய தம்பண்ணையில வைத்து பஸ்தியாம்பிள்ளைணைப் போட்டுத்தள்ளினார்களே அவர்களைச் சொல்லுறாரோ. ஐயோ ஐயோ அதுக்குப் பிறகு அவர்கள் பிரான்சுக்கு கள்ளத்தோணியில வந்திட்டினம் அதுக்கப்புறம் சென்னைப் புறநகர் நங்கநல்லூரில பிரான்சிலிருந்து வந்திருந்து ஏஜன்சி வேலை பார்த்ததை சிலவேளை தமிழீழ விடுதலை நோக்கிய போராட்டமாக, மப்பும் மந்தாரமான இந்தநேரத்தில உழறகிறீர்களோ தெரியாது. அந்த நேரத்தில பிரான்ஸ்சுக்கு வந்த நிறையப்பேரிட்ட கேட்டால் தெரியும் புஸ்பராசாவினது திருவிளையாடல்களை பொன்ஸ ரவி, பஞசன் குரு என அந்தக்காலத்து பிரான்ஸன் தமிழ் முன்னோர்கள் சென் அனியெனும் இடத்தில அப்போவாழ்ந்தார்கள் அவர்களிடம் கேளுங்கள். மிகுதிக் கதையைச் சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்,

பத்மநாபா கொல்லப்பட்ட தருணங்களின் முன் நகர்ந்த காலத்தில் தான் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்களை கட்டாய இராணுவ பயிற்சிக்கு என்று இந்தியனின் ஆக்கிரமிப்புக்காக பலிகொடுத்தார். இந்திய ஏவல் நாய்களின் அனைத்து ஆக்கிரமிப்புக்கும் சரி என பதில் கொடுத்து அதற்கான அரசியல் பலம் கொடுத்தார். இவர் காலத்தில் தான் மண்டையர் குழு தன் அட்டகாசத்தை காட்டியது

இவர் கொல்லப்பட வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் பிள்ளைகள் இருந்தனர் , தமிழ் ஈழம் பற்றிய கனவு இருந்தது. தன் இன விடுதலை பற்றிய அவா இருந்தது

பத்மநாபா கொல்லப்பட்ட அன்று நான் வெடி கொளுத்தி மகிழ்து இருந்தேன்; இன்றும் மகிழ்கின்றேன் -----

இன்று, தமிழர் புனர் வாழ்வு கழக பெண் உறுப்பினரையே பாலியல் வல்லுறவு செய்து கொன்ற கொலை காரன் கருணாவின் பிளவை சந்தோசமாக வரவேற்ற முன்னாள் புலி போராளி ஷோபா ஷக்தி; கூறியதை ஏற்று "இதுவே எந்தன் என்றும் மாறாத நிலைப்பாடு" என்று சத்தி எடுக்கின்றீர்கள்

ஆக உங்களுக்கு பத்மநாபா எனும் கொலைஞனின் நடவடிக்கையும் சரி ஆகின்றது; கருணாவினை ஆதரித்த ஷோபா சக்தியின் அரசியல் கொள்கைகளும் சரியாகின்றது

---------------------

வழக்கம் போல இந்த பதிவுக்கும் பதில் கூறாமல் கோழையாக மௌனம் சாதிப்பீர்கள் என்று தெரியும்;ஆனால் தன் இன தமிழ் மக்களின் விடுதலைக்காக புறப்பட்ட எந்த போராளியும் கோழையாக இருந்ததில்லை

நீங்கள் இதில் எதில் சேர்த்தி அர்ஜுன் ?

நிஐத்தை சொல்லும் எழுத்து

நன்றி ஐயா

உங்கள்போன்ற எமது அடுத்த சந்ததி தெளிவாக இருப்பது ஒன்று மட்டும்தான் இன்று எனக்கு நிம்மதி தருகிறது

Edited by விசுகு

  • தொடங்கியவர்

அடுத்த சந்ததி தெளிவாக இதில் என்ன இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சந்ததி தெளிவாக இதில் என்ன இருக்கு?

உங்களின் புலிப்பாசிச பருப்பு அடுத்த சந்ததியிடம் பலிக்காது என்பதை தான் கூறுகிறார்.

நுணவிலான் தொட்டு பலர் புலிகளின் ஊடகங்களின் ஊடாக வளர்ந்தவர்கள்.இவர்களுக்கு ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.

மறு பக்கம் நாற்றம் பிடித்தது.அதனை பற்றி பல ஊடகங்கள் பினாத்துகின்றன.அதாவது அரசு சொன்னதை ஊதுகுழலாக இன்றும் கூறுகின்றன.இவர்களை தமிழ் மக்கள் உங்களை தவிர ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விடையத்திலும் மறுபக்கம் நாற்றம் என்பது இரக்கவே செய்கின்றது. உதாரணமாக உலகஅழகியோ அன்றேல் சினிமாக் கனவுக்கன்னிகளோ அன்றாட வாழ்கையைக் கவனித்தீர்களேயானால் அவர்களும் இயற்கைக் கடனைக் கழிக்கத்தான் வேண்டும் அவர்களும் எமைப்போலவே நாற்றம் பிடித்த அந்தச் சமாச்சாரத்தை வெளியேற்றியே ஆகவேண்டும் அழகானவள் என்பதால் அந்தப்பகுதியே வேண்டாமென வெட்டியெறிந்துவிட முடியாது. இருந்தாலும் நாம் அவர்களை நினைத்து அது போன்றதொரு கனவுக் கன்னி வாழ்துணையாக வரவேண்டுமென விருப்பப் படுவதில்லையா? வரப்போறதுக்கும் அப்படியொரு சமாச்சாரம் இருக்குதுதானே!அதுபோலவே ஒவ்வொரு விடையங்களிலும் கவனிக்கப்படாத அன்றேல் அதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளக் கூடாத விடையங்கள் இருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.