Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை) வித்யாசாகர்!

Featured Replies

தேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே குழந்தை மீண்டும் உயிர்பெற்று வந்தால் அந்த தாயின் நன்றியுணர்வு எப்படி கண்ணீரின் வழியே’ தான் விட்டுப்பெற்ற உயிரென பூக்குமென்பதை ஒரு புதிய கட்டத்திற்குள் காட்டுகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

ஒவ்வொரு முறை என் தமிழன் அடிப்பட்டப் போதெல்லாம் தனியே நின்று அழுத என் உணர்விற்கு ஒரு காலங்கடந்த ஆறுதலாய் அமைந்திருந்தது அந்தக் காட்சி. எதிரி என்று எண்ணி ஆரம்பத்தில் போதி தர்மரை ஒதுக்கிய அம்மக்கள் மீண்டும் முன்வந்து அவரையே தனது தெய்வத்திற்குச் சமம் என்றுச் சொல்லி ஒரு கை நீட்டி காலில் விழ’ ஒரு மூத்தக் குடியின் பெருமிதம் உள்ளே ரத்த நாளத்தை ஒரு சொடுக்கு சொடுக்கிவிட்டதென்பது உண்மை.

உலகமெலாம் பரந்துவிரிந்த ஓர் இனம், வாழ்க்கையை பணத்தில் தொலைத்து, வீடு விட்டு, உறவு விட்டு, தன் பெருமைமிகு மண்ணைக் கடந்து, தொழில் சுயமுன்னேற்றம் வியாபாரமென்றெல்லாம் சொல்லி, தன் வாழ்தலின் பெருமையை வெறும் காசுக்கு விற்றுவிடப் பழகிவரும் ஓர் இனம், பிறந்த மண்ணில் இருக்கும் சுதந்திரத்தையும் உரிமையையும் எவனெவனுக்கோத் தன் சிரசருத்துக் கொடுத்ததுபோல் கொடுத்துவிட்டு, கடல்தாண்டி கடல்தாண்டி’ தன் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டோரிடமிருந்து’ தன் வாழ்வின் விடுதலையைப் மீட்டுப்பெற்று, மீண்டும் எம் தமிழர் கொடிபறக்க –

நாங்கள் ஆளும் தேசம் பார் உலகினமே, எங்களின் ஆட்சிக்கு உட்பட்ட மண் இப்படித்தானிருக்கும், எப்படிப் பட்டொளி வீசிப் பறக்கிறது பார் எங்கள் சுதந்திரக் கொடி என்று பகிரங்கமாக சவால்விட்டுக் காண்பிக்க ஒரு பிடி மண்ணேனும் கிடைக்காதா என்று உலகின் மூலைமுடுக்கெல்லாம் அலைந்து திரிந்து, தான் வாழ்ந்த’ பிறந்த’ பிறப்பின் மகத்துவத்தை வேடிக்கையாய்ப் பார்க்கும் உலகிற்கு முகத்தில் அறைந்தாற்போல் காண்பிக்க’ ரத்தத்தையும் உயிரையும் இரண்டறக் கலந்து’ பூமியின் ஒரு பக்கத்தையே இறக்கமற்றோரின் கொடுஞ்செயலால் வடிந்த ரத்தத்தால் நிரைத்துவிட்ட ஓர் இனம் –

இடையில் முளைத்த வெள்ளையனுக்கும் எட்டி உதைக்கும் அரபிக்கும் சலாம் போட்டு அவன் சொடுக்கும் சாட்டைக்கெல்லாம் பயந்து தன் சுயபலத்தை’ வரலாற்றை’ பாட்டன்முப்பாட்டன் ஆண்டப் பெருமையை’ வெறும் கைநீட்டிவாங்கும் மாதசம்பளத்தோடு மறந்துவருமோர் இனம் –

மீண்டும் ஒரு திரைப்படத்தால் தன்னை அலசிப் பார்த்து, தான் வந்த பாதையை திரும்பிப் பார்த்து, தன் உணர்வுகளை பாரம்பரிய அளவீட்டிற்குத் தக கிளர்த்தெழச் செய்து’ தன்னை ஒரு நெடிய பயணத்திற்கு தயார்செய்துக் கொள்ளுமென்று நம்பிய – முருகதாசின்’ சூர்யாவின்’ ஸ்ருதியின்’ இன்னும் திரைக்கு முன்னும் பின்னும் நிற்கும் பலரின் பலத்த உழைப்பிந்த ‘சிலருக்கு எட்டாத தூரத்திலிருக்கும் “ஏழாம் அறிவு” என்னும் திரைப்படம்.

கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறு வருடத்திற்கு முன் வாழ்ந்த பல்லவமன்னனின் மூன்றாம் மகனான போதி தர்மனை தன் அரச குருமாதா சீனா நோக்கிப் போகக் கட்டளை இடுகிறார். பெரியோரிட்ட வாக்கினைக் காப்பதை உயிர்விடும் செயலிற்கறிய ஒரு பெருங் கடமையாக எண்ணிய நம் தமிழர் மரபு வழிவந்த அந்த இளவரசன்’ போதிதர்மன் தன் ஆத்மபலத்தையும், கற்ற பல கலைகளின், கல்வியின், பெருமைகளையும் அடக்கமாய் ஒரு பார்வைக்குள் அடக்கிக்கொண்டு சீனதேசம் நோக்கி பயணிக்கிறார்.

கடவுள்தன்மை புரிந்தோருக்கு காணும் கல்லில் கூட கடவுளைப் பார்க்க முடிகிறது என்பதை என்றோ நம்பிவணங்கும் இனவழி வந்தவன்’ தான் போகும் வழியில் இருக்கும் புத்தரை மானசீகமாய் வணங்கி, தன் ராஜவம்ச உடைகளை கலைந்து சீனர் மரபு வழியணியும் எளிய உடைக்கு மாறி’ மூன்று வருடக் கால தரைவழிப் பயணத்தின் மூலம் சீனாவை சென்றடைய, அங்கே அவரை ஆபத்துவரும் நேரத்தில் சீனர்கள் நம்பமறுக்க, தன் யோகத் தன்மையை, தான் கற்ற கல்வியின் சிறப்பை, தமிழரின் பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தும் இடமாக அந்த காட்சி அமைய, மரபு போற்றுமொரு நோக்கில் “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்பதற்கிணங்க அவர்களின் உயிர்காத்து, அடுத்தகட்டக் காட்சிகளில் தன் வருகையின் காரணத்தை சீனமக்களுக்குப் புரியப் படுத்துகிறார்.

தன் தமிழர் மனவாசத்தை, தூரநோக்குச் சிந்தனையை, கருணை மனப்பான்மையை, தான் அடைந்த ஞானத்தையெல்லாம் பார்க்குமொரு பார்வையில் வெளிப்படுத்துகிறார். சீனர்கள் அவரை தாங்கள் வணங்கும் புத்தருக்கு சமமாகக் கண்டாலும், அவர் தன் தோற்றத்தை வெளிக்காட்டும் பாங்கு நமக்கு ஐயன் திருவள்ளுவரையே நினைவூட்டுகிறது. சீனர்களுக்கு முதன்முதலாக சண்டை சொல்லித்தருமொரு காட்சியில் பக்கவாட்டில் பதியும் அவரது தோற்றம், அதே தாடியும், சுருண்ட முடிழகும், உச்சந்தலைமீது சுழற்றிய கொண்டையும், மார்பின் ஒருபாகம் போர்த்திய ஒற்றைத் துணியும், வித்தைக் கற்றுத் தரும் பாங்கும் நாம் காணாத நம் மூத்த ஆசானை நம் கண்முன் காட்டுகிறது.

ஆக, தற்காப்புக்கலை, பார்வையால் எவரையும் தன் வசப்படுத்தும் நோக்குவர்மம், பச்சிலை மருத்துவம், அதையும் பிறருக்குச் சொல்லித்தரும் உயரிய குணம், அதோடு பார்வையில் நிறைந்த யோகநிலையென தன் அத்தனை சிறப்பினையும்’ தனை நம்பிய மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசானாக போதி தர்மர் விளங்கியிருக்கிறார்’ என்று நம்பத் தக்க மனநிலையை சூர்யாவின் நடிப்பும், அதை இயக்கிய ஏ. ஆர். முருகதாசின் இயக்கமும் தருகிறது. பின், அதே நாம் கற்றுத் தந்த நம் கலை, இன்று நம்மையே திருப்பிக் கொண்டு தாக்க முற்படுவோருக்குப் பயன்படுமெனில் அதை தடுக்கும் வித்தையும் நம்மிடம் இல்லாமாலாப் போகுமென்று சிந்திக்க வைக்கும் படம் தான் இந்த “ஏழாம் அறிவு”.

எந்த கலையை நாம் கற்றுத் தந்ததாய் இத்திரைப்படமும் சில வரலாற்றுக் குறிப்புகளும் சொல்கிறதோ’ அதை நம்மிடமிருந்துக் கற்றுக் கொண்ட சீனப்படையினரே இன்று சிங்களனுக்குத் துணையாக களமிறக்கப் பட்டுள்ளனர். இன்றும் செய்திகளில் சீனப் படையினர் இலங்கை வந்ததாகவும் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதாகவும் செய்திவழி கேள்வியுறுகிறோம். ஆனால் உண்மையில் இவர்களையெல்லாம் கண்டு பயந்து ஒதுங்கிக் கொள்ள இருக்கிறோமா அல்லது எதையும் எதிர்த்து வெல்லத்தக்கவன் தமிழன் என்று உலகத்திற்கு புரியவைக்கப் போகிறோமா என்று பெருத்த பலத்தோடு நமைச் சிந்திக்கவைக்கிறது இந்த “ஏழாம் அறிவு”.

தான் யார்? தமிழன் என்பவன் யார்? தன் வரலாறு என்ன? தான் வாழ்ந்ததன் சாராம்சம் என்ன? ஏனிப்போது இப்படி ஆனோம்? இனி என்ன செய்யப் போகிறோம்? என்ன செய்யலாம்? எது செய்ய இயலும்? என்று உணர்வின் உள்புகுந்து உயிர்வரை உசுப்பிக் கேட்கிறது ஒவ்வொரு இளைஞனையும், ஒவ்வொரு மனிதம்மிக்க மனிதரையும் இந்த “ஏழாம் அறிவு”.

அடிப்பட்டு அடிப்பட்டு, உயிர்விட்டு உயிர்விட்டு, எதை இழந்தப்போதும்’ எம் வீரத்தை, எம் மாண்பிணை, எம் தமிழர் பாரம்பரியத்தை’ எள்ளளவும் விட்டிடாத எம் உறவுகளை, ஈழத்தில் துடிக்கத் துடிக்க, தன் கூட்டுச் சதியினால் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு இனத்தையே கொன்றுக் குவித்த அவலத்தை, அதன் பச்சை துரோகந்தனை வெகு சாதுர்யமாக, காணும் அத்தனைக் கோடி கடைநிலைத் தமிழருக்கும் நேரிடையாக எடுத்துச் சொல்கிறது இத்திரைப்படத்தின் சிலக் காட்சிகளும் சில வசனங்களும்.

தமிழன் என்ற பெருமைமிகு ஒரு வார்த்தையைக் கேட்கும் இடமெல்லாம் இன்று பொறாமையால் பற்றியெரியும் தீயநெருப்பின் அவல முகத்தினைக் காட்டி, ஏன் நாமிப்படி தரங்கெட்டுப் போனோம், நமக்கு நடந்த சதிக்கான நம் தவறுகள் என்ன, இன்றும் நமக்கு நாமே ஏன் எதிரியாக நின்றுக் கொண்டு நம்மை அழிப்போருக்கே நாம் துணைப் போகிறோமே’ எனும் நம் விடிவிற்கான பல கேள்விகளை காட்சிகளின் மூலம் தூண்டிவிட்டு, செவிட்டில் அறைந்தாற்போல் மானவுணர்வின் உச்சத்தில் நகர்கிறது இப்படத்தின் சில காட்சிகள்.

கடவுள் ஒன்றெனப் புரிகையில், அது நம் நன்னடத்தைப் பொருத்து நமை காக்கும் விஷயமொன்றே என்றுப் புரிகையில், அதை புரிந்துக் கொள்ளும் அளவிற்கு மட்டுமே பக்தியும் வழிபாடுகளும் தேவையாகிறது. அல்லது அவரவர் புரிந்துக்கொண்ட அளவிற்கு மட்டும் அவைகள் போதுமாகிறது. இது புரிகையில் எவரையும் மதவழியில் வெறுக்கவோ ஒதுக்கவோ நமக்கென்ன உரிமையோ அல்லது அத்தகு அவசியமோ இருந்துவிடாது.

பிறகு ஏன் வெறும் மதத்தாலும், செய்யும் தொழிலின் நிமித்தம் வந்த பிரிவினையாலும் மனிதருக்கு ஒரே ஒற்றை முகத்தைத் தந்து, ஒருவரை ஒருவர் ஒதுக்கியும் பிரித்தும் மட்டப்படுத்தியும் நம் தமிழர் ஒற்றுமையின் பலத்தை நாமே வெகுவாய் குறைத்துக் கொள்கிறோம்?

இறை தத்துவம் என்பதை’ தனக்குள் இருக்கும், தன்னை சார்ந்து இருக்கும், தன் முன்னும் பின்னும் தானாகி பிற அனைத்துமாகி இருக்கும் இயற்கையின் நற்செயலிற்கான நன்றி செலுத்தலாக மட்டுமே பார்ப்பவர் தமிழர். அதின்றி, ஆன்மிகத்தில் கூட அறிவியல் புகட்டி வாழ்க்கைக்கு தேவையானவைகளை மட்டுமே அன்று “வரம் தரும் சாமியாக” பார்த்த நம் தமிழினம் இன்று மதம் ஜாதி என்றெல்லாம் காரணம் சொல்லி பிரிந்து தன் திறனையும் சிறப்புகளையும் கைக்கெட்டிய தூரம்வரைக்கும் பங்குப்போட்டுக் கொண்டு, தனக்குள்ளேயே தான் அடித்துக் கொண்டு, தனை பிறர் அழிக்கும் முன் தானே தன்னை அழித்துக் கொள்ளும் மூர்க்கதனத்தை விட்டு வெளிவந்து –

கடவுள் இதென்று புரிந்தப்பின், மதம் பிரிவு எல்லாமே இதென்று புரிந்தப்பின் எதன் பொருட்டும் இனி நாம் பிரிந்திராது நம் சுயவிருப்புவெறுப்புகளையெல்லாம் எடுத்து தூர வீசிவிட்டு தமிழர் எனும் ஒற்றைப் போர்வைக்குள், ஒரேப் பெருமைக்குள் நிறைவோமென்று மதங்களின் வெறியை அறுத்தெறிந்துவிட்டு மனிதத்தோடு மட்டுமே பேசுகிறது இந்த “ஏழாம் அறிவு”.

எனக்கு வலித்தது, எங்கெங்கோ என் தமிழன் அடிப்பட்ட போதெல்லாம் எனக்கு வலித்தது. நான் அழுதேன் புரண்டேன் தனியே அமர்ந்து செய்திகளைப் பார்த்து கத்திக் கதறினேன். இன்று அதற்கெல்லாம் மருந்தாக நான் இப்பேற்பட்ட இனத்தைச் சார்ந்தவன் என்று எம் தமிழர் வாழும் பகுதியெல்லாம் ஒரு திரைப்படத்தாலும் புரியவைக்க இயலுமென்று காண்பிக்கும்வகையில் இயக்கிய, திரைப்பட ஊடகத்தை எம் தமிழரின் பெருமையைச்சொல்ல பயன்படுத்திக்கொண்ட நன்றிக்குரிய திரைப்படமிந்த “ஏழாம் அறிவு”.

குறைகள் எதிலில்லை? நிறைகளைக் கடந்தும் நிற்கும் வெகுசில குறைகளை முன்னிறுத்தி தன்னை மெத்த அறிவாளியாகக் காண்பித்துக்கொள்ளத் துடிக்கும் பலரின் பார்வைக்கு, இலகுவாகக் கிடைக்கத் தக்க சில குறைகள் இப்படத்திலும் உண்டு. காரணம் எடுத்துள்ள பாத்திரங்கள், படைப்பின் நோக்கங்கள், கதையின் நுணுக்கம் அத்தகையது. காதல்ரசம் குறைத்தோ அல்லது அதையும் வேறுமாதிரிக் காட்டி படத்தை ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமேக் கொண்டுப் போயிருக்கலாம், ஆனால், அது இந்தளவிற்கு என்னொரு சாதாரண “திரைப்பட மோகம் மட்டுமேக் கொண்ட” ஒருசார்பு தமிழனிடத்திலும், தமிழரில்லாதோரிடத்தும் தமிழர் பெருமையை பறைசாற்றத் தக்க போய்செர்ந்திருக்குமா என்ற கேள்வியை தாங்கிக்கொள்கிறது.

இன்று உலகளவு விரிந்து நீதிக்கேட்டு நிற்கும் எம் தமிழர் பிரச்னையை ஒரு திரைப்படத்திற்குள் அடக்குவது என்பது அத்தனை சாதாரனமில்லையே? அதும் எம் மக்கள் எந்த பிரிவினைக்கும் ஆட்பட்டுப் போகாதளவிற்கு பொதுவாகவும், பின் பார்ப்போரை சிந்திக்கவைக்கும் விதாமாகவும் இத்திரைப்படத்தை அமைக்க எண்ணியிருப்பர் போல்.

காதிற்கினியப் பாடல்கள், விரும்பத் தக்க வரிகள் என்றாலும் பின்னணி இசையை இன்னும் ஒரு கல் உப்பு கூட்டும் அளவிற்கு வேறுமாதிரி கூட முயற்சித்திருக்கலாம். ஒரு சண்டைக் காட்சியைக் கண்டு பிரம்மிக்கும் அளவிற்கு ஒரு நிறைவு இப்படத்தின் பின்னணி இசையில் முழுமையாக இல்லை. பாடல்கள் மட்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியில் தனையறியாத தொனியில் உணர்வுகளுக்குள் மென்மையாகவும் மறக்க இயலா இனிமையோடும் பதிந்துப் போகிறது.

இருந்தாலும், முதல்முறைப் பார்க்கச் சென்றபோது சில காட்சிகள் குழந்தைகள் உடன் இருந்ததால் சரிவர கவனிக்க இயலாமல் போக, இரண்டாம் முறை தனியாகச் சென்று பார்த்தேன். அப்போது நிறைய குறைகள் என்று எண்ணிய இடமெல்லாம் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள்முன், படம் விட்டு வெளிவருகையில் உணர்ச்சிப் பெருக்கோடு போகும் தமிழர்முன் ஒரு பெரிய குறையாகத் தெரியவேயில்லை.

எனினும் “சில இடங்களில் பாடல்களே இன்றிக் கூட ஒரே வரலாற்று சிந்தனையோடு நம் தமிழரின் சிறப்பு கண்டு பிரம்மிக்கும் ஒரு உணர்வோடு மட்டுமேக்கூட இப்படத்தைக் கொண்டு சென்றிருக்கலாம். அது ஒருவேளை இன்னும் சிறப்பாக, வருமானம் கடந்து நம் மண்ணுக்கு செய்த ஓர் நன்றிக்கடனாகவே இருந்திருக்கும்” என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் எழாமலில்லை.

அதுபோல் திரைக்கதை இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். வசனங்கள் எதிரியைத் தாக்கும் ஈட்டிபோல் பாய்ந்தாலும் இன்னும் செதுக்கியும், சில இடங்களில் வசனங்களைக் கூட்டியும், ஒற்றுமைக்கு வலுசேர்க்கும் காட்சிகளை மேலும் கூர்மைபடுத்தியும் இருக்கலாம்.

போதிதர்மன் சீனதேசம் போகையில், முதன்முறையாகக் காட்டுமந்த உருவாக்கப் பட்ட கிராமமும், பன்னிரண்டே நாள்களில் அரவிந்தை போதி தர்மானாக மாற்ற திட்டமிடும் காட்சி ஒன்றில் “சுடுகாட்டின் நுழைவாயிலில் நின்றுக்கொண்டு சூர்யா ஸ்ருதி மற்றும் நண்பர்கள் எல்லோரும் திட்டமிடத் துவங்கும் முன், ஆட்டோவிலிருந்து இறங்கி வரும் ஸ்ருதியின் முகத்தில் அடிப்பட்டத் தழும்பாகக் காட்டும் முகப்பூச்சு அப்பட்டமாக தெரிவதும், மாதா மருத்துவமனையிலிருந்து ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பணி என்று பிரித்துக் கொடுத்து ஸ்ருதி திட்டம் தீட்டும் காட்சிகள் சற்று தரம் போதாமலும், முடிவில் படம் பார்க்க வந்தவர்கள் தமிழன் என்னும் உணர்வினால் உறைந்திருக்க’ ஒரு சப்தமுமின்றி ஏதோ மின்சாரம் துண்டிக்கப் பட்டதுபோல் சூர்யா வணக்கம் சொல்வதுபோல் முடியும் காட்சியும் மனதிற்குள் “இன்னும்கூட தரமாக முயற்சித்திருக்கலாம்” என்ற எண்ணத்தை எழச் செய்கிறது.

என்றாலும் ஆத்மார்த்தமாக மனம் மெச்சும், சிந்திக்கவைக்கும், உணர்வில் தன்னை திருப்பிப்போட்டு’ நான் தமிழன்.. நான் தமிழன்.. என்று தனக்குள்ளே தன்னை கர்ஜித்துக் கொள்ளவைக்கும் பெருமைமிகு காட்சிகளும் இயல்பாகவே இருப்பது மிகப் பாராட்டிற்குரியது.

இறுதிக் காட்சியில் தன் தந்தையிடம் இருந்து அல்லது தன் ஆசானிடமிருந்து தான் கற்றுக் கொண்ட கலையை வைத்தே தன் ஆசானை அடிக்கும் ஒரு மாணவனுக்கு ஆசான் என்பவர் யார்? நல்லது செய்தோரிடத்தில் தீயது எப்படி மண்டியிடும்? போன்ற கேள்விகளுக்கு பதிலுரைக்கும் விதமாய் அந்த இறுதி சண்டைக் காட்சி அமைந்துள்ளது. கடைசியில் அந்த வில்லன் அடிபடும் காட்சியின் ஒவ்வொரு நகர்வும், அவன் வாங்கும் ஒவ்வொரு அடியும் ஏனோ நாம் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கும் உணர்வாகவும், எம் இனம் அடிப்பட்ட போதெல்லாம் வலித்த இடத்திற்கு மருந்திடும் ஆறுதலாகவும் இருந்ததை சொல்ல மறுப்பதற்கில்லை. நன்மை என்றும் நன்மையே பயக்கும் என்று நம்பத்தக்க அந்த இறுதிக் காட்சி’ உலகிற்கு வீரத்தையும் உன்னத பண்புகளையும் கற்றுத் தந்த தமிழினத்தை நாளை உலகமே ஒன்று சூழ்ந்தாலும் ஒரு இழையளவும் அசைக்க இயலாது எனும் தீரத்தை இத் திரைப்படத்திலாவது மனது சலிக்க சலிக்க பார்த்துக்கொள்ள முடிகிறது.

என் சகோதரி ஒருவர் எழுதிய கவிதையின் அர்த்தம்போல, நம் விளையாட்டுக்களைக் கூட நாம் பிறரது வழித்தோன்றலாக எண்ணி ஒதுக்கி ஒதுங்கி இருக்கும் இந் நிலையில், கலை என்பது அழிவதுபோல் தெரிந்தாலும், ஏதோ ஒரு கலைஞனின் ரத்தத்தில் இன்னும் இன்னும் இக்காலமன்றி எக்காலத்திற்கும் அது மிச்சப்பட்டேக் கிடக்கிறது. அதை கமலின் வழியே வந்த அவருடைய மகள் ஸ்ருதியும் நிரூபிக்கிறார்.

கமல் வந்து சொல்லித்தர அவசியப் பட்டிடாத வெகு யதார்த்தமான நடிப்பென்றாலும், அவர் அழுகையிலும், சிரிக்கையிலும், பார்க்கையிலும் ஒரு இருபது முப்பது வருடதிற்கு முன் பார்த்த கமலஹாசனையே நினைவுபடுத்துகிறது. ஆனால் இதில் தனித்திறன் என்னவென்று பார்த்தால் கமல் இத்தனை வருடகாலமாய் நடித்துவிட்டு இன்று காட்டும் ஒரு வியக்கத் தக்க முகஅசைவுகளை தன் முதல் படத்திலேயே ஸ்ருதி காட்டியிருப்பது, அவருக்கான நல்ல ஒரு இடம் திரைப்படவுலகில் இருப்பதை இந்த “ஏழாம் அறிவும் பதிவு செய்கிறது. என்றாலும், தமிழை செவிட்டில் அறைந்தாற்போல் அழுத்தமாகப் பேசும் குரல் இருப்பினும், உச்சரிப்பை இன்னும் கூட ஒரு தமிழச்சி என்று சொல்லத் தக்க சரிசெய்துக் கொள்ளல் ஸ்ருதி நடிக்கயிருக்கும் வேறு பல பாத்திரங்களுக்கு அவசியப் படலாம்.

இயற்கைக்குப் பின், இறந்த பெரியோரை வணங்குதலும், நாட்டார் தெய்வ முறை எனும் முன்னோரை வணங்கும் முறையும் நம்மிடம் இருந்ததையுமே புத்தரை வணங்குதலும், அதன் பின் வந்தோரை வணங்குதலுமாக இத்திரைப்படம் காட்டுகிறது. அவ்வழியே இன்றும் பல தேசங்கள் வணங்கிவரும் ஒரு மாமனிதரை நம் வணக்கத்திற்குரிய அத்தமிழரை நாம் நேரில் கண்டிருந்தால் எத்தனை மகிழ்ந்து, மனதாலும் உயிர்நிறையும் உணர்வாலும் அவரை உள்வாங்கி, தொழுதிருப்போமோ அப்படி ஒரு மாண்பினை சூர்யாவின் முகமும், ஞானம் நிறைந்தப் புன்னகையும், நடிப்பும் காண்பித்தது. ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு சூர்யாவை விட போதி தர்மரே அதிகம் தெரிகிறார்.

உண்மையில், சூர்யா வாழும், அவர் கடைபிடிக்கும் அவரின் ஒழுக்கம்’ மனசு’ பரந்த மனப்பான்மை’ அவர் செய்யும் நல்லவைகளென அனைத்துமே இப்படத்தின் பாத்திரவழியாக உலகிற்கு வெளிச்சமாகத் தெரியவருகிறது என்பதும் உண்மை. பொதுவாக சூர்யா ஒரு பண்பட்ட களிமண், எதுவாக சிற்பிக்கு தேவையோ அதுவாக ஆகிவிடும் பொக்கிஷம். என்றாலும், அவரை பொக்கிஷமாக்கிய பெருமை ஏ.ஆர்.முருகதாசிற்கும், ஆன பெருமை சூர்யாவிற்கும் காலத்திற்கும் நிலைத்திருக்கும்.

தமிழரின் வாழ்வுநிலையை சொட்டிய ரத்தம் ஊறிய மண்ணும், மண்ணில் மறைந்தாலும் காற்றோடும் மழையோடும் கலந்த’ காலத்திற்கும் அழியாப் புகழும், மொழி இனம் என்றுமட்டும் நின்றிடாது யார்மூலமேனும் வாழ்ந்து நிலைத்து பலர் பேசிக்கொள்ளும் பெருமையுமாக விளங்கும் நம் உழைப்பும், பண்புகளும், கலைகளும், நாகரிகமும் வானமும் பூமியும் உள்ளவரை, கடலென பரந்துவிரிந்து மனிதரின் நாடிதுடிப்பின் ஒவ்வொரு அசைவிலும் நின்று மௌனமாகவேனும் பேசிக் கொண்டேயிருக்கும்..

வித்யாசாகர்

http://vidhyasaagar.com/

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஹரி!

  • கருத்துக்கள உறவுகள்

இரு பெரும் நடிகளின் வாரிசுகளின் நடிப்பு ,அவர்களுக்கு இணையாக சீன வில்லனின் நடிப்பு ஆகியன அருமை.

சூர்யா சுருதி குட்டித்தூக்கம் போடும் போது அவரின் செல் போனில் தன்னை சுருதி காதலிப்பதை செல்போனில் (காணொளி) கூறியிருக்கும் விதம் புதுமை.அத்தோடு அக்காட்சியும் புதுமை.

இறுதியில் சூர்யா,வில்லனின் சண்டைக்காட்சி மிக தத்ரூபமாக நடித்துள்ளனர்.இதற்கு பின்னணியாக உள்ள படப்பிடிப்பாளர்,பின்னணி இசை என்போரை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இது ஒரு ஆரம்ம புள்ளியாக எடுத்து மேலும் பல படங்கள் எமது வரலாற்றை சொல்ல வேண்டும்.

இணைப்புக்கு நன்றி ஹரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.