Jump to content

இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்!


Nirupans

Recommended Posts

பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய எம் இனிய உறவுகளே!

எங்கள் வலைப் பதிவுகள் வாயிலாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாங்கள் இன்று முதல் ஓர் குழும வலைப் பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்!இணைய வலையில் அரட்டைகளை மட்டுமல்ல மனதில் கனிந்திருக்கும் இனிதான விடயங்களையும், இலகுவில் எம் நெஞ்சை விட்டகலாத நினைவுகளையும், இலக்கிய நயம் கொஞ்சும் கலக்கலான படைப்புக்களையும், அதிரடி அரசியல் விடயங்களையும் பகிரலாம் எனும் நிலையினையும் தாண்டி கொஞ்சம் சிக்கலான விடயமொன்றினைக் கையிலெடுத்து உங்கள் உள்ளங்களை நாடி எம் இறக்கைகளை விரித்திருக்கின்றோம்!

Eelavayal.jpg

ஆம் ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டுவியல் விடயங்களை எம் வலையில் ஆவணப்படுத்தி எம் அடுத்த சந்ததியிடம் கொண்டு சேர்க்கும் விடயத்தினை நாம் அனைவரும் கையிலெடுத்திருக்கின்றோம்!வாழும் காலமதில் தன் வாழ்வை நிலை நிறுத்த முடியாது தமிழன் இன்று தள்ளாடிக் கொண்டிருக்கையிலும், அவன் ஆளுவதற்கும் அனுபவிப்பதற்கும் என்றோர் தனி நாடு இல்லை எனும் ஆதங்களிற்கும் அப்பால்; அழிந்து விடும் சில பொக்கிஷங்களை ஆவணப்படுத்திட நாம் அணி சேர்ந்திருக்கிறோம். இன்று ஈழத்தின் இயல்பு நிலை பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதற்கு அமைவாக அரசியல் கலப்படமற்று எம் மொழியிற்கான ஓர் பாதையில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்!

காலப் பெரு வெளியில் கட்டுண்டு எம் வாழ்வு கரைந்துருகிப் போனாலும் இந்த ஞாலத்தில் வாழத் துடிக்கும் எம் சந்ததியிடமிருந்து எம் மொழியானது இன்றைய இலங்கைத் திரு நாட்டின் அரசியற் சூழலினால் அந்நியப்பட்டு விடுமோ எனும் அச்சம் ஈழ மக்கள் அனைவர் மனங்களிலுமிருக்கின்றது. இன்றைய மொழிக் கலப்பால் பண்டைத் தமிழ்ச் சொற்கள், நெஞ்சில் நினைவாய் தவழும் இலக்கிய மரபுகள், சந்தம் விஞ்சி எம் மனதைக் கொஞ்சி மகிழ்விக்க வல்ல ஈழத்து நாட்டார் பாடல்கள்,உலகில் இன்று சிறப்பிக்கப்படும் செம் மொழி எனும் அடை மொழிக்குள் தன்னை உள்ளடக்கியிருக்கும் எம் தமிழ் மொழியில் ஈழத்திற்கான அடையாளமாக இருக்கும் தனித்துவமான பிரதேசச் சொற்கள் எனப் பல விடயங்கள் எம்மை விட்டு அந்நியப்பட்டு விடுமோ எனும் அச்சம் உலகில் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் இருக்கின்றது.

இணைய வலையில் ஈழத்துக் கலை, கலாச்சார மொழிப் பண்பாட்டு அம்சங்களை உங்கள் மனதைக் கவரும் வண்ணம் வலையேற்றும் நாங்கள் எமை நாடி வரும் அதிகளவான தமிழ் வாசக நெஞ்சங்கள் பரந்து வாழும் தமிழத்து மொழி வழக்கினைக் கருத்திற் கொண்டு எம் பதிவுகளில் வரும் ஈழத்து அடையாளங்கள் ஒவ்வொன்றினையும் தமிழக உள்ளங்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் இயல்புத் தமிழ் நடையிலும் பகிரவுள்ளோம் எனும் இனிப்பான சேதியினையும் இங்கே சொல்லிக் கொள்வதில் அகம் மகிழ்கின்றோம்! திசைக்கு ஒன்றாய் பிரிந்து வாழ்ந்தாலும் ஈழத்துக் காற்றை இன்றும் சுவாசித்துக் கொண்டிருக்கும் உறவுகள் நாம் இந்த முயற்சியில் இணைந்திருக்கின்றோம்!

இங்கே பிரதேசவாதம் எனும் இராப் பாடலுக்கு சிறிதளவேனும் இடமில்லை எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இந் நன் நாளில் பகிர்ந்து கொள்கின்றோம். ஈழத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள்,மத்தியமலைநாடு, மற்றும் புத்தளம் - சிலாபம் ஆகிய பிரதேசங்களையும் ஏனைய இஸ்லாமியச் சொந்தங்கள் செறிந்து வாழும் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பதிவர்களையும் இவ் அரிய முயற்சியில் அரவணைத்தும் நாம் செயற்படவிருக்கின்றோம் எனும் நற் சேதியினையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம். இணையத்தில் மட்டும் இந்த மொழிக் காப்புப் பண்ணியினை நாம் செய்து விட்டு நின்று விடப் போவதில்லை!

ஈழ வயலினூடே உங்கள் இதயங்களை நாடி வரும் ஒவ்வோர் பதிவுகளையும் தொகுத்து நூலுருவிலேற்றி ஈழத்திலும், தமிழகத்திலும், உலகெங்கும் தமிழ் உறவுகள் பரந்து வாழும் பகுதிகளிலும் தவழ விடலாம் எனவும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எமது பதிவுகள் தொடர்பான உங்களின் கருத்துக்களையும், ஈழவயல் எனும் வலைப் பதிவினூடாக நாம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் அன்பு உள்ளங்களே! வாசகர்களாக நீங்கள் உங்கள் கால்களை இங்கே பதிக்கும் அதே வேளை எம் படைப்புக்கள் தொடர்பான விமர்சகர்களாகவும் உங்களின் தார்மீகப் பங்களிப்புக்களை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா?

இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயல்!

உங்கள் இதயதங்களைக் கொள்ளையிடப் போகும் தமிழ் இயல்!

எங்கள் வண்ணத் தமிழ் அம்சங்களை வார்த்தைகளிலேற்றி

உங்கள் எண்ணங்களைப் பெற்று எம் தமிழுக்கான

அடுத்த கட்டப் பணியினைச் செய்திட அணி சேந்துள்ளோம்!

வரவேற்று கரங் கொடுத்தால் நீங்கள் ஓர் வாசகர்!

விரல் கொண்டு எம் படைப்புக்கள் மெருகேறிட

மென்மையாக வருடினால் நீங்கள் ஓர் விமர்சகர்!

ஈழவயல் எனும் வலைப் பதிவினை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும், விவாதங்களையும் முன்னெடுத்த பதிவர்களினையும் இந் நேரத்தில் நினைவு கூருவதில் பெருமையும் பேருவகையும் அடைகின்றோம்.

ஈழ வயல் எனும் குழும வலைப் பதிவு ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் எனும் ஆலோசனையினை வழங்கியவர்

<a href="http://shayan2613.blogspot.com/" style="text-decoration: none; color: rgb(120, 63, 4); ">அகசியம் வலைப் பதிவின் சொந்தக்காரன் கானா வரோதயன் அவர்கள்!

வரோதயன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் நடாத்தி இம் முயற்சி சிறப்படைய பங்களிப்பு நல்கியோர்

நண்பர்கள் வலைப் பதிவின் சொந்தக்காரர் KSS.Rajh மற்றும்;

சிறகுகள் வலைப் பதிவின் சொந்க்காரர் மதுரன்

காட்டான் வலைப் பதிவின் சொந்தக்காரர் காட்டான்

நிகழ்வுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் கந்தசாமி

தமிழ் ஆதி வலைப் பதிவின் சொந்தக்காரர் பவுடர் ஸ்டார் ஐடியாமணி

அம்பலத்தார் பக்கங்களின் சொந்தக்காரர் அம்பலத்தார்

கற்றது தமிழ் வலைப் பதிவின் சொந்தக்காரர் துஸ்யந்தன்

மதியோடை வலைப் பதிவின் சொந்தக்காரர் மதிசுதா,

ஆகுலன் கனவுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் ஆகுலன்,

நாற்று வலைப் பதிவின் சொந்தக்காரர் நிரூபன் ஆகிய பதிவர்களோடு முக நூலில் எம்மோடு கலந்துரையாடல்களில் பங்களிப்புக்களை நல்கிய பதிவர் மைந்தன் சிவா, சந்துரு குரு, குட்டிப் பையன், விண்ணாணம் விநாசியார், ஈழத்து பூதந்தேவனார், ஆகியோரையும் இந் நேரத்தில் உங்கள் முன் அறிமுகப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்

ஈழவயல் குழுவினர்!

நன்றி;

வணக்கம்!!

http://www.eelavayal.com/2011/12/blog-post_12.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.