Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு வரலாறு – மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் : விஜய்

Featured Replies

மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றினை. பூர்விகக் குடிகள், பின்னர் ஏற்பட்ட குடியேற்றங்கள் என இரண்டாக வகைப்படுத்தி நோக்க வேண்டும் எனவும், நாட்டாரியல் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வரலாற்றை ஆராய வேண்டும் எனவும். இதற்காதராமாக கலாநிதி சி. மௌனகுரு அவர்களின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” தரும் தகவல்களைக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு பெறப்படும் தகவல்களை “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” உட்பட ஏனைய மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் கூறும் தகவல்களுடன் இணைத்து நோக்க வேண்டும் எனவும் முன்னய கட்டுரையில் வரையறுத்திருந்தேன்.

மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் வேடர், புலிந்தர்-புலியர், இயக்கர், நாகர், திமிலர், கழுவந்தர், முக்கியர் ஆகிய குலக்குழுக்களை அல்லது சாதிகளை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக குறிப்பிட்டுள்ளன. வேடர்களை இயக்கருடன் தொடர்பு படுத்தியும் இயக்கர்களை திமிலர்களுடன் தொடர்பு படுத்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன. வேடர்கள் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் என அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை குவேனி வம்சத்துடன் தொடர்பு படுத்தி நோக்கியிருப்பதுடன், கி.மு. 500 ஆண்டளவில் இவர்கள் மட்டக்களப்பில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. மட்டக்களப்பில் வாழ்ந்த வேடர்;, புலியர், முக்கியர் எனப்படுவோர் தமது அடையாளங்களை மறந்து தமிழராகிவிட்டனர் எனவம் கூறப்படுகிறது.

கலாநிதி சி. மௌனகுரு அவர்கள்: மட்டக்களப்புப் பகுதியில் வாழும் வேடர், வேட வெள்ளாளர் எனப்படும் சாதியினரிடம் காணப்படுகின்ற தெய்வங்களையும் வணக்க முறைகளையும் பிற தகவல்களையும் கொண்டு வேடர்களை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக தக்க ஆதாரங்களுடன் கூறியுள்ளார். அத்துடன் தற்காலத்தில் மட்டக்களப்பில் வேடர்கள் வாழ்கிறார்கள் என்ற கருத்தை மௌனகுரு அவர்கள் மட்டுமே உணர்த்தியிருக்கிறார். ஆனால் வேடர்கள் எப்போதிருந்து இங்கு வாழ்கிறார்கள் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. தற்கால களத்ததகவல்கள் மௌனகுரு அவர்களின் கருத்துக்களை மேலும் சான்றுபடுத்தக் கூடியதாக அமைகிறது என்பதனைக் கூறியாக வேண்டும். மட்டக்களப்பு வேடர்கள் மற்றும் அவர்களுடைய தெய்வ-வணக்க முறைகள் குறித்த தகவல்கள் அடுத்த கட்டுரையில் விபரிக்கப்படும். இக்கட்டுரையில் வரலாற்று நூல்கள் விபரித்துள்ள விபரங்கள் தொகுத்து முன்வைக்கப்படுகிறது.

கலாநிதி சி. மௌனகுரு அவர்கள், மட்டக்களப்பின் பூர்விக குடிகளாக வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினரைக் குறிப்பிடுகிறார். ஆயினும் வேடர்கள் பற்றிய விபரங்களையே விபரித்துள்ளார். அவர், “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்”(1998) எனும் ஆய்வு நூலில், மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் குறித்து, “…சுருக்கமான வரலாற்றிலிருந்தும், கிடைக்கும் சான்றுகளிலிருந்தும் மட்டக்களப்பில் ஆரம்பத்தில் பூர்விகக் குடிகள் இருந்தனரென்று…”(பக்.86)ம் “மட்டக்களப்பு பகுதியிலே குடியேற்றங்கள் ஏற்பட முன்னர் இங்கு சில சாதியினர் வாழ்ந்தனர் என்பது கர்ண பரம்பரைக் கதைகளாலும், மட்டக்களப்பின் தெய்வ,வணக்க முறைகளாலும் அறிய முடிகிறது”(பக்.100) எனவும் “…இப்படி வாழ்ந்தோர் வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினராக இருக்கலாம்”. எனவும் “இவர்கள் தமக்கென சில தெய்வங்களையும் வணக்கமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை இன்றும் மட்டக்களப்புப் பகுதியில் வாழும் வேடர், வேட வெள்ளாளர் எனப்படும் சாதியினரிடம் காணப்படுகின்ற தெய்வங்களையும் வணக்க முறைகளையும் கொண்டு அறிய முடிகிறது” எனவும் குறிப்பிடுகிறார். இவர்களை “புராதான குலக்குழு”வாக அவர் இனங்காட்டுகிறார்.

மேலும் “வேடருக்கு குமாரர் பிரதான தெய்வமாகவும்” , “வம்சாவழியாக வந்த தெய்வமாகவும்”(பக்.111) குறிப்பிடுகிறார். வேடர் மரபில் வந்தோரால் அதாவது வேட வெள்ளாளரால் கடைப்பிடிக்கப்படும் குமார தெய்வத்தினை மையமாகக் கொண்ட பல புராதன தெய்வ – வணக்கமுறைகளை கள ஆய்வுத் தகவல்கள் IMG_1636-300x225.jpgமூலம் (கள ஆய்வு தளவாயில் உள்ள பிரதான கோயிலை மையமாகக் கொண்டமைந்தது. விபரம் (பக்.110-119)) விபரித்து, அது புராதான வாழ்க்கை முறையைக் காட்டுகிற முறையினையும் விபரித்துள்ளார். “இச்சடங்கு முறைகள் அவர்களின் முன்னோர்களின் புராதான வாழ்க்கை முறையின் நினைவுகளாகும். பூச்சி பிடித்தல், தேனி கொட்டுதல், யானை பிடித்தல் ஆகிய சடங்கு முறைகளில் அவர்களின் தொழில் சார்ந்த கிரியைகளையும், ஏனையவற்றில் நோய்தீர்க்க ஏனைய தெய்வங்களை வேண்டும் கிரியைகளையும் காணுகிறோம்” (பக.;118) என அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் “இறந்த முன்னோரை வணங்கும் வழக்கம்(உத்தியாக்கள்) இவர்களிடம் இருப்பதும் இவர்களின் புராதானத் தன்மைக்கு உதாரணமாகும்.”(பக்.100) எனவும் , மட்-அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் வேடர்களே முன்பு வேல் வைத்து வணங்கினர் என்ற கதையும், கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர், மண்டூர்க் கந்தசாமி ஆகிய கோயில்கள் முன்பு வேல் வைத்து வேடர்களால் வணங்கப்பட்ட கோயில்கள் என்ற கர்ணபரம்பரைக் கதையும் ஆரம்பத்தில் இவ்வணக்க முறைகளே மட்டக்களப்பில் இருந்தன என்பதை மேலும் வலியுறுத்துகின்றன”;(பக்.101) எனவும் மௌனகுரு அவர்கள்; குறிப்பிடுகிறார்.

எஸ்.ஓ. கனகரெத்தினம் அவர்களும் மட்டக்களப்பில் பூர்விக குடிகளாக வேடர்கள் வாழ்ந்தனர் எனக் குறிப்பிடுவதுடன், “மட்டக்களப்பு ஆதிக்குடிகளின் இராச்சியம்(வேடர்களின் இராச்சியம்)” என வரோஸ் குறிப்பிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.(வெல்லவூர்க்கோபால்pன் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம். பக்.49) மேலும், எஸ்.ஓ. கனகரெத்தினம் அவர்கள் குறிப்பிடும் மட்டக்களப்பிலுள்ள சாதிகள் 17 இல் வேடுவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

வி.சி.கந்கையா அவர்கள் “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) என்னும் நூலில், “விஜயன் கி.மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வந்த தமிழ் மக்களைக் ‘கதிராகல’ என்னும் மலைச்சாரலிற் குடியேற்றினான் என்றும், இப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப் பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற ‘கதிராகல’ மலைப்பகுதி ஏறக்குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமிழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உள்ளது”(பக்.6-7) எனக்குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பூர்வ சரித்தம் (2005) , சிறிகுலசேனனுடைய புத்திரன் கூத்திகன் மட்டக்களப்பில் குடியேற்றங்களை முதன் முதலில் உருவாக்கியவனாகக் குறிப்பிடுவதுடன், கூத்திகன் பின், மட்டக்களப்பை இரசதானியாக்கி அரசியற்றிய சேனனுடைய வமிசம் அருகிப்போக, நாகர் இயக்கர் என்னும் இரு குலத்தவர்கள் மேலெழும்பி, காலிங்கர், சிங்கர், வங்கர் என்னும் முக்குலத்தவரையும் அடக்கி, விண்டு அணையை இரசதானமாக்கி முப்பது வருச காலமாகக் கொடுங்கோல் செலுத்தினன் என (பக்13) குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் அனுரதன்புரியை அரசு செய்தவன் சோரநாகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இச்சோரநாகன் இயக்கர் துணைப்பிரியன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விபரிப்புக்களிலிருந்து, இங்கு “இரு குலத்தவர்கள் மேலெழும்பி” எனும் வரியானது அவர்கள் அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்தனர் என்ற கருத்தினையே குறிப்பாய் உணர்த்துகிறது.

மேலும், மட்டக்களப்பிலுள்ள முற்குலத்தவரில் சில நிதியத் தலைவர்கள் வேண்டுகோளின் படி இயக்கர், நாகரை அகற்ற கலிங்க தேசத்து மதிவரகாகுணன் புத்திரன் ரணாசலன்(ரணாசல்-ரஞ்சன்-நிரஞ்சன்) சைனிய வீரர் முந்நூறுடன் இங்கு வந்தான் எனவும், இவன் நாகரைச் சிநேகம் பிடித்து, இயக்கர் என்னும் திமிலரை வாளுக்கிரையாக்கி, விண்டு அணையிலுள்ள இராசமாளிகையை உடைத்து, இயக்கர் அரசனையும் அவன் பிரதானிகளையும் வெட்டிக் கொன்று, மேற்கு வடக்கு மகாவலி கங்கையால் இயக்கர் குலத்திலுள்ள யாவரையும் துரத்தி எல்லைக்கல்லும் நாட்டி..”(பக்.14) எனவருங் குறிப்புக்கள் இயக்கரை திமிலராகக் காட்டுகிறது. பின்னால் வரும் ரணாசலன் கூற்றானது, “நான் காலிங்கதேசம் போய்க் குடிகள் கொண்டு வந்து இயக்கரிருந்த இடமெல்லாம் குடியேற்ற வேண்டும்” என வருகிறது. இதிலிருந்து இயக்கர்கள் பெரும் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்ற கருத்து புலப்படுத்தப்படுகிறது.

இதேவேளை, ரணாசலன் அனுரதன்புரியை அரசு செய்த சோரநாகனுடன் இணைந்து, “இலங்கையை பன்னிரெண்டு பாகமாய்ப் பிரித்து, எட்டுப்பங்கை விசயதுவீபத்தோடு சேர்த்து மண்ணாறு, மணற்றிடரிரண்டையும் குருகுல நாகருக்கீந்து, தெட்சனாபதியை இயக்கர் குலத்திமிலருக்கீந்து, மட்டக்களப்பை ரணாசலனேற்றுக் கொண்டு…” எனவரும் செய்திகள் கவனத்தில் கொள்ளத்தக்கன. இதன் மூலம் பின்னாளில் இயக்கர் வாழிடம் தெட்சனாபதியாக இருந்தது எனக் காட்டப்படுகிறது.

இதே வேளை இந்நூலிலுள்ள குலவிருதக் கல்வெட்டில் “நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு” என்ற குறிப்பும், சாதித்தெய்வக் கல்வெட்டில் “வேடருக்கு கன்னிகளாம்” (மௌனகுரு அவர்கள் குமார தெய்வச் சடங்கில் இணைந்துள்ள சடங்கில் கன்னிமார் சடங்கு நிகழ்வதனையும் குறிப்பிடுகிறார்.பக்.118) என்ற குறிப்பும் (பக்77) காணப்படுகிற போதும் சாதிகள் பற்றிய குறிப்பில், வேடர்கள் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. அதாவது சிறைக்குடிகள்-ஊழியம் செய்யும் சாதிகளில் வேடர்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதன்மூலம் அவர்கள் தனித்துவமான சாதிகளாக இனங்காட்டப்படுவதாக தெரிகிறது.

வெல்லவூர்க்கோபால் அவர்கள் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம் (2005) எனும் நூலில், மட்டக்களப்பின் பூர்விக் குடிகளாக இயக்கர், நாகரைக் குறிப்பிடுவதுடன், அவர்கள் காலத்தினை கி.மு.500க்கு முற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். (பக்.27,45) இலங்கைக்கு புத்தரின் முதலாவது வருகை என மகாவம்சம் கூறும் காலத்துடன் தொடர்பு படுத்தியே இக்காலக்கணிப்பை அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், “இயக்கர் குடியிருப்புக்கள் நாடு முழுக்கப் பரவியிருந்தமையும் மட்டக்களப்புப் பிரதேசத்தே மாணிக்க கங்கை(கதிர்காமம்) மற்றும் விந்தனைப் பகுதிகளில் அவர்கள் பரவலாக வாழந்துள்ளமையும் தெரிகின்றது”(பக்.23) எனவும், நாகர்களின் இருக்கைகளாக “…மட்டக்களப்புப் பிரதேசத்தே நாகர்பொக்கணை(மன்னம்பிட்டி) , நாகர்முனை(திருக்கோவில்) , நாகன்சாலை(மண்டூர்) , சூரியத்துறை(மட்டக்களப்புப் பெருந்துறை) என்பனவும் குறிப்பிடப்படுகின்றன”(பக்.23) எனவும் வெல்லவூர்க்கோபால் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் இயக்கர், நாகர் குழுநிலை ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர்(பக்.45) எனவும் அவர் குறிப்பிடுகிறார். இவர்கள் ஈழம் முழுவதிலும் வாழ்ந்தவர்களாகவே இவ்வாசிரியர் குறிப்பிடுகிறார்.

இலங்கை வரலாற்றில், கி.மு.454 தொடக்கம் கி.மு.437 வரையான காலப்பகுதி சரியான தகவல்கள் குறிப்பிடப்படாத போதும், உள்நாட்டுக் கலகக் காலம் என வரலாற்றில் சொல்லப்பட்டாலும் மீண்டும் இயக்கர், நாகர் வலிமை பெற்ற காலமாக கருதமுடியும் எனவும் வெல்லவூர்க்கோபால் குறிப்பிட்டுள்ளார்.

வெல்லவூர்க்கோபால் அவர்கள் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ள போதும் , குறிப்பிடும் தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதனையம் அதன் உன்மைத்தன்மை பற்றியும் அறிய முடியவில்லை. ஆதாரங்கள் சரியான முறையில் காட்டப்பவில்லை.

க.த.செல்வரசகோபல் அவர்கள் “மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டை வரலாற்று அடிச்சுவடுகள்”(2005) எனும் நூலின் முதன்மைப் பதிப்பாசிரியன் உரையில், “ விந்தனை வேடரும் தம்பானையில் தாம் புலம்பெயர்ந்த தம்பன்னை எனும் இடத்தின் பெயரை மறந்து போகாமல் தாம் வாழும் இடத்திற்கு இட்டுக் கொண்ட தம்பானை வேடரும், புலிந்தரும், திமிலரும், கழுவந்தரும் முக்கிய பண்டை மட்டக்களப்பின் குடிகளராக வாழ்ந்தனர்”(இணையப்பிரதி-பக்.15) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG_1645-300x225.jpgவேடர்கள் பற்றி விபரிக்கையில், “விஜயனின் இன அழிப்புக்கு அஞ்சிய இயக்கர்கள் எனும் பண்டைய தேசிய இனத்தவர்கள்”(இணையப்பிரதி-பக்.61) , “மகியங்கனையை அடுத்த விந்தனை எனும் இடத்திலும் மட்டக்களப்பு வாழைச்சேனையை அண்மித்த கழுவன்கேணியிலும் அம்பாரையை அடுத்த தம்பானை எனும் இடத்திலும் வாழ்ந்து வந்தனர்” , எனவும் “இவர்களை விட பெருந் தொகையானோர் இத்திசை வழியே கூட்டமாகச் சென்று மட்டக்களப்பைச் சார்ந்த சமவெளியில் தங்கலாயினர் (இணையப்பிரதி பக்.62) , எனவும் விபரிக்கப்படுகிறது.

தொடர்ந்து இவ்வாறு புலம்பெயர்ந்து குடியேறியவர்கள் பற்றிய விபரிப்பில், “விந்தனை தம்பான எனும் இடங்களிற் சென்றவர்கள் இருப்பிடம் மலைக் குன்றுப் பகுதிகளாக இருந்தபடியாலும் தமது சொந்த நாட்டில் அரச உத்தியோகங்களிலும் படைகளிலும் பணிபுரிந்தவர்களாதலால் தாம் முன்னர் வாழ்ந்த இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத நிலையை அடைந்தனர். நாளடைவில் தம்மைச் சுற்றியுள்ள காட்டு வளத்திலேயே தமது வாழ்க்கையை நடத்தத் தொடங்கினர், அதாவது வேட்டை ஆடுவதைச் சீவனோபாயத் தொழிலாகக் கொள்ளலாயினர். இதனால் வேடர் என்ற காரணப் பெயரையும் பெற்றனர்.”(இணையப்பிரதி-பக்63) எனக் விபரிக்கப்பட்டுள்ளது.

மேலும் “1911ம் ஆண்டு குடிசன மதிப்புக் கணிப்பின்படி வேடர்களின் தொகை முழு இலங்கையிலும் 5312 பேர் மட்டுமே. மற்றக் குலங்களான திமிலர், புலியர், முக்கியர் எனப்படுவோர் தமது அடையாளங்களை மறந்து தமிழராகிவிட்டனர். அந்தக் காலகட்டத்தில், வேடக் குடியிருப்புகள் மகியங்கனை(விந்தனை) , தம்பானை, கழுவன்கேணி எனும் இடங்களில் மட்டும் இருந்தன. நாளடைவில் கழுவங்கேணி வேடர்களும் தமிழர் என்ற என்ற தேசிய அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர்.” (இணையப்பிரதி-பக்.17) எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பின் தொல்குடிகளாக இன்றும் வாழ்ந்து வரும் வேடர்களின் வரலாற்று மூலம் தெளிவாக கண்டறியப்படாத நிலையிலும் ஆரியக் குடியேற்றத்தினால் துரத்தப்பட்ட இயக்கர்கள் (இயக்கர்களை இராவணனுடன் தொடர்பு படுத்தியும் நோக்கப்படுகிறது) பற்றிய தெளிவு ஏற்படுத்தப்படாத நிலையிலும் இவ்வாறு ஒரு முடிவுக்கு வருவது தவிர்க்க இயலாதது என்றே கருதலாம்.

இவரும் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ள போதும் , குறிப்பிடும் தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கும் முடிவுகளுக்கும் ஆதாரங்கள் சரியான முறையில் காட்டப்பவில்லை. பெருமளவு ஊக முறையிலேயே முடிவுகள் காட்டப்படுகின்றன.

வெல்லவூர்க்கோபால் அவர்கள், மட்டக்களப்பின் பூர்விக் குடிகளாக இயக்கர், நாகரைக் (வேடர்) குறிப்பிடுவதுடன் அவர்கள் காலத்தினை கி.மு.500க்கு முற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இவ்விளக்கங்களினால், மட்டக்களப்பின் பூர்விக மக்கள் வேடர்கள் என்ற முடிவிற்கு வரமுடிகிறது.

ஆனால் பின்வரும் விடயங்கள் தொடர்ந்தும் சரிதிட்டமாக விளக்க முடியாத வினாக்களாக எஞ்சியிருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மௌனகுரு அவர்களின் “குமார சடங்கினைச் செய்பவர்கள் வேடர் மரபில் வந்தோராவர்” என்ற குறிப்பும்(பக்.110) “வேட வெள்ளாளரிடம் நடைபெறும் இச்சடங்கு முறைகள்”(பக்.118) என்ற குறிப்பும், இது குறித்த கள ஆய்வும் தளவாயில் உள்ள பிரதான கோயிலை மையமாகக் கொண்ட அமைந்தது என்பதுவும் வேடர் மரபில் வந்த ஆனால் தற்போது அச்சமூகநிலையில் இருந்து வேறுபட்ட நிலையில் வாழுகின்ற சமூகத்தினையே அவர் குறிப்பிடுகிறார் என்பதனைக் காட்டுகிறது. அதாவது வேடர் மரபில் வந்தோர் அல்லது வேட வெள்ளாளர் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். மௌனகுரு அவர்கள், “ சில இடங்களில் முக்குவரிடையே வேட வேளாளர் என்ற ஒரு குடியும் காணப்படுகிறது. இது வேடரோடு முக்குவரிற் சிலர் கலந்தமையால் ஏற்பட்ட குடி என்று கூறலாம்”(பக்.93)எனவும் குறிப்பிடுகிறார்.

அப்படியாயின் இன்று வேடுவர்களாக அறியப்படுகின்ற சமூகங்களில் காணப்படும் தெய்வ-வணக்க முறைகள் எவை? அவற்றில் வெளிக்காட்டப்படும் அம்சங்கள் அவர்களின் வராலற்றினை அறிய உதவுகிறதா? என்பவை முக்கியமான வினாக்களாகும். இது குறித்து தற்போதைக்குப் போதிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

அடுத்து தொல்பொருள் சான்றுகள் மூலம் “வேடர்கள் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள்” என்பதையும் நிருபிக்க முடியாமலும் உள்ளது. வேடர்கள் மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசங்களில்தான் வாழ்ந்திருக்க முடியும் என்ற நிலையில், அப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

வேடர்களுக்கும், இலங்கையின் பூர்விகக் குடிகளான இயக்கர் மற்றும் நாகருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுவும் மற்றொரு வினாவாகும். அதே வேளை, இவ் வேடர்களுக்கும் இராவணன் காலத்து அரக்கர்களுக்கும், புராதான ஈமத்தாழிகள் மூலம் அறியப்பட்ட தொல்குடியினருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதுவும் மற்றொரு வினாவாகும்.

அடுத்து குவேனி குலத்திற்கும் மட்டக்களப்பின் தொல்குடிகளான வேடர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ஆராயப்படல் வேண்டும்.

அடுத்து மட்டக்களப்பின் வரலாற்றில் வேடர்களையடுத்து ஆரம்பகால குடியேற்றவாசிகளாக கருதப்படும் திமிலருக்கும் வேடருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுவும் விளக்கப்படுத்தப்படவேண்டும்

நன்றி: இனியொரு

http://inioru.com/?p=26002

  • தொடங்கியவர்

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளும் அவர்களது குமார தெய்வ வழிபாடும் – தற்கால நிலை : விஜய்

மட்டக்களப்பு வரலாற்று ஆய்வாளர்களால் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் “வேடர்கள்” எனக் குறிப்பிடப்படுவதனை முன்னய கட்டுரையில் விவரித்திருந்தேன். மட்டக்களப்பு வேடர்கள் மற்றும் அவர்களுடைய தெய்வ-வணக்க முறைகள் குறித்த தற்கால நிலைமைகள் தொடர்பாக அடுத்த கட்டுரையில் விபரிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன். இக்கட்டுரைஅதன் ஒரு பகுதியாக அமைகிறது.

Veddas-209x300.jpgஇதற்கு முன்னதாக எழுந்துள்ள விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு “வேடர்கள்” பற்றிய ஒரு குறிப்பை எழுத வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. “வேடர்கள்” என்ற சொல் தற்காலப் பேச்சு வழக்கில் பின்தங்கிய சமூக பொருளதார கலாசார நிலை கொண்டோரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே மட்டக்களப்பின் பூர்விக குடிகளை இவ்வாறான ஒருஅர்த்தத்தில் இனங்காட்ட முடியுமா என்ற வினாவும் எழுகிறது. இவர்களை “வேடர்கள்” என்ற சொல்லால் சுட்டும் வழக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பதுவும் வினாவிற்குரியதே!

இலங்கையின் பிரபல்யமான வரலாற்று நூலான மகாவம்சம் மகியங்கனையில் வாழ்ந்த தொல்குடியினரை யக்சர்கள்(ஆங்கில மற்றும் பாளி மொழி நூலில் எவ்வாறு உள்ளது எனத் தெரியவில்லை) என்றே குறிப்பிடுகிறது. அதே போல மட்டக்களப்பின் பிரபல்யமான வரலாற்று நூலான மட்டக்களப்பு மாண்மியமும் (மட்டக்களப்பு பூர்வ சரித்திரமும்)மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக இயக்கர் மற்றும் நாகர் எனும் இருகுலத்தவர்களையே குறிப்பிடுவதுடன் இயக்கரை திமிலராகவும் குறிப்பிட்டுள்ளது. க.த.செல்வரசகோபல் அவர்கள் வேடர்களை முதுநாகரிகம் மிக்க சமூகமாக குறிப்பிடுகிறாhர். எனவே தற்காலப் பேச்சு வழக்குப் பொருளில் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளை வேடர்கள் என்ற சொல்லினால் அடையாளப்படுத்த முடியாது.

ஆயினும் தற்காலத்தில் குமார-தெய்வ வணக்க முறைகளைப் பின்பற்றுவோர் மற்றும் பூர்விகத் தொடர்புகளைப் பேணுவோர் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள போதும் தங்களை வேடர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர் என்பது குறிப்பிட்டாக வேண்டிய விடயமாகும்.

இனி, மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் வாழ்ந்த இடங்கள் பற்றி வராலற்று ஆசிரியர்கள் கூறும் தகவல்கைளப் பார்ப்போம்.

மட்டக்களப்பு வரலாற்றை விபரிக்கும் நூல்களில் இயக்கர் மற்றும் நாகர் வாழ்ந்த சில இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. வெல்லவூர்க்கோபால் அவர்கள் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம் (2005) எனும் நூலில் “இயக்கர் குடியிருப்புக்கள் நாடு முழுக்கப் பரவியிருந்தமையும் மட்டக்களப்புப் பிரதேசத்தே மாணிக்க கங்கை(கதிர்காமம்) மற்றும் விந்தனைப்பகுதிகளில் அவர்கள் பரவலாக வாழந்துள்ளமையும் தெரிகின்றது” எனவும் நாகர்களின் இருக்கைகளாக “…மட்டக்களப்புப் பிரதேசத்தே நாகர்பொக்கணை(மன்னம்பிட்டி), நாகர்முனை(திருக்கோவில்), நாகன்சாலை(மண்டூர்), சூரியத்துறை(மட்டக்களப்புப் பெருந்துறை) என்பனவும் குறிப்பிடப்படுகின்றன”(பக்.23) எனவும் குறிப்பிட்டுள்ளார்.

க.த.செல்வரசகோபல் அவர்கள் வேடர்கள் “மகியங்கனையை அடுத்த விந்தனை எனும் இடத்திலும் மட்டக்களப்பு வாழைச்சேனையை அண்மித்த கழுவன்கேணியிலும் அம்பாரையை அடுத்த தம்பானை எனும் இடத்திலும் வாழ்ந்து வந்தனர்” எனவும் “இவர்களை விட பெருந் தொகையானோர் இத்திசை வழியே கூட்டமாகச் சென்று மட்டக்களப்பைச்சார்ந்த சமவெளியில் தங்கலாயினர் (இணையப்பிரதி- பக்.62), எனவும் விபரிக்கிறார். ஆனால் “மட்டக்களப்பைச் சார்ந்த சமவெளியில் தங்கியமைக்கு” போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

வி.சி.கந்கையா அவர்கள் “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) என்னும் நூலில் “விஜயன் கி.மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வந்த தமிழ் மக்களைக் ‘கதிராகல’ என்னும் மலைச்சாரலிற் குடியேற்றினான் என்றும் இப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப் பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற‘கதிராகல’ மலைப்பகுதி ஏறக்குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமிழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உள்ளது”(பக்.6-7) எனக்குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிடும் சிங்கள சரித்திர நூல் எது என்ற குறிப்பு இல்லை.

தற்காலத்தில் வாழும் வேடர்கள் மற்றும் குமார தெய்வ – வணக்க முறைகள் பற்றிய தகவல்கைளத் தேடிய போது கிடைக்கப்பெற்ற தகவல்களை இனிக் குறிப்பிட முனைகிறேன். கிடைக்கப்பெற்ற தகவல்களில்

, கட்டுரையின் நோக்கப் பொருளுக்கு தேவையான விடயங்களை. அதாவது “மட்டக்களப்பின் பூர்விக வரலாற்றில் வேடர்கள் கொண்டுள்ளசெல்வாக்கினை” விவரிக்கவே முனைகிறேன். ஏனைய தகவல்கள், சமூக- மானிடயவில் நோக்கில் விளக்கப்படத்தக்கன.

வேடர்கள் என அடையாளப்படுத்தக் கூடியவர்களில் இரு வேறுபட்ட “குலகுழுக்கள்” அல்லது “சாதிகள்” அல்லது “குடிகள்” மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வருவதனையும், அவர்களின் வாழிடம் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே வாகரை-கதிரவெளி (படுவான்கரை உள்ளிட்டு) வரையும் அமைவதையும் காணமுடிகிறது.

அவர்களில் ஒரு குழுவினர் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் என இனங்கண்ட மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வருபவர்களாவர்.

இவர்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள போதும் தமது பழைய தெய்வ-வணக்க முறைகளுடன் (குமார தெய்வம் மற்றும் அதற்கான சடங்குகள்) தொர்பு பட்டவர்களாக இன்றும் உள்ளனர்.ஆனால் தெளிவான ஒரு வாழிடப்பிரதேசத்தினை இனங்காண முடியாதவாறு ஏனைய குடிகளுடன் இணைந்து வாழ்கின்றனர்.

மற்றொரு குழுவினர் அண்மைக்காலத்தில் (மகியங்கனைப் பிரதேசத்திலிருந்து) குடியேறி வாழ்பவர்கள். இவர்கள் தனித்துவமான வாழிடப் பகுதி கொண்டவர்கள்.

அண்மைக்காலத்தில் குடியேறிய வேடர்கள் வாழிடங்களில் கிரானிற்கு தெற்கே படுவான்கரையிலுள்ள கானந்தனை, முறுத்தானை, அக்குறானி எனுமிடங்கள் முக்கியமானவை. அதே வேளை வாகரை-பனிச்சங்கேணி-கதிரவெளிப் பகுதியிலும் இவர்களையொத்த குடிகள் வாழ்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது. அத்துடன் மன்னம்பிட்டிக்கு அருகில் சீரவணஎனுமிடத்திலும் வேடர்கள் வாழ்வதாக அறிய முடிகிறது.

கானந்தனை, முறுத்தானை, அக்குறானி பகுதிகள் ஏனைய வயல் பகுதிகளிலிருந்து வேறுபட்டு காட்டுப் பிரதேசமாக உள்ளது. 1984-85 இல் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மிகப் பின்தங்கிய சமூக-பொருளாதார நிலையையே (வேடர் சமூகத்திற்குரியவாறு) கொண்டிருந்தார்கள். யுத்தகாலத்தில் இவர்கள் இடம் பெயர்ந்து ஆலங்குளத்தில் (வாழைச்சேனைக்கு அருகேபொலன்னறுவ வீதியில் உள்ள இடம்) வாழ்ந்து தற்போது மீள்குடியேறியுள்ளார்கள். அவர்கள் மத்தியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

batti14-300x225.jpgஇவர்கள் மகியங்கணையிலிருந்து மூன்று தலைமுறைக்கு முன்னதாக இங்கு வந்து குடியேறியதாகவும் அவர்களில் முன்னோர்கள் சிங்களம் மற்றும் வேடபாசை தெரிந்தவர்களாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது சிங்களம் தெரியாத அளவிற்கு தமிழர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். தற்போது மதச் சடங்குகளைப் பொறுத்தளவில் தலைவராக இருப்பவர்சிங்களப் பெயர் கொண்டவர். ஆனால் அவர்களுடைய வழியில் வந்தவர்களும் ஏனையவர்களும் தமிழ்ப் பெயர்களைக் கொண்டுள்ளனர்.

இவர்களுடைய தெய்வங்கள் வேறுபட்டன. ஆனால் பிரதான தெய்வ வழிபாட்டில் குமாரருக்கும் ஒரு பந்தல் போடப்படும், அவருக்கும் சடங்கு செய்யப்படும். ஊரின் நடுவே சிறு பிள்ளையார் கோவில் ஒன்றும் உண்டு. மிக அண்மைக்காலத்தில் மகியங்கணைப் பிரதேச அதிவாசிகள் (வேடர்கள்) இங்கு வந்து அவர்களைச் சந்தித்து சென்றதாகவும் அறியமுடிகிறது.இதனை அரசாங்கம் (அமைச்சர் விமல் வீரவன்ச) ஏற்பாடு செய்திருக்கும் போல்.

வாகரை-பனிச்சங்கேணி-கதிரவெளிப் பகுதியில் வாழ்பவர்கள் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளார்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது. அனால் அண்மையில் ஆதிவாசிகளுக்கான வீட்டுத்திட்டம் (மதுரங்கேணிக்குளம்) அரசால் அமைக்கப்பட்டதற்கான விழாவில், பாரம்பரிய உடைகளுடன் கலந்து கொண்டதுடன், வரவேற்பினை பாரம்பரிய முறைகளுடன்செய்துமிருக்கின்றனர். அவ்விழாவிற்கும் மகியங்கனை வேடர் பிரதிநிதிகள் அழைத்து வரப்பட்டும் உள்ளனர்.

இதனை விட சல்லித் தீவில் வாழ்பவர்கள் கடற்தெய்வங்கள் குறித்து சடங்கு செய்து வருபவர்கள் எனவும் கூறப்படுகிறது. இப்பகுதி வாழும் பழங்குடியினர் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இது பற்றிய விபரங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.

இனி, மட்டக்களப்பின் பூர்விக குடிகள் என இனங்கண்ட, மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு பிரதேசத்தில் வாழ்ந்து வருபவர்கள் பற்றிய தகவல்கைளை பார்க்கலாம்.

இவர்கள் தொடர்பாக, கலாநிதி சி.மௌனகுரு அவர்கள் “மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்” என்ற நூலில், முன்னர் வேட்டையாடுதல், மந்தை வளர்த்தல் ஆகிய தொழில்களைச் செய்த வேடர் மரபில் வந்த, தற்போது கூலி விவசாயத் தொழில், கூடை பின்னுதல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளேரே இச்சடங்கினைச்செய்கின்றனர். இவர்கள் பல இடங்களில் பரவி வாழ்கின்றனர். தாம் வாழும் இடங்களிலெல்லாம் ஒரு சிறு குமார கோயிலை வைத்திருப்பர் என்ற தகவலையும் தந்திருக்கிறார்.

மௌனகுரு அவர்களுடைய களவாய்வு தளவாயில் அமைந்துள்ள பிரதான குமார கோயிலை மையமாகக் கொண்டும் அமைந்துள்ளது. அக்கோயில் வேடர் வேட வெள்ளாளரகளுக்குரியதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் தகவல்களில் கவனத்திற்குரியவை.

இவர்களின் குலதெய்வம் குமார தெய்வமாகும். முருகனையே இவர்கள் குமாரர் என அழைப்பர்.

இவர்கள் தமிழ் பேசினாலும் வேடபாஷை என இவர்களால் அழைக்கப்படும் பாஷையிலேயே வணக்க முறைக்குரிய சொற்களையும், பாடல்களையும் கூறுகின்றனர்.

பந்தலிட்டு இலை குழை தென்னை ஓலை காட்டுப் பூக்கள் ஆகியவற்றாற் பந்தலை அலங்காரம் செய்து தெய்வங்களுக்கு விசேட பூஜை செய்வர்.

பூஜை நடைபெறும் சமயம், தெய்வத்தோடு சம்பந்தமுடைய பல நிகழ்ச்சிகள் நிகழ்த்திக் காட்டப்படும். உ-ம் இறுதி நாள் சடங்கில் நடைபெறும் நாடகத்தன்மை வாய்ந்த நிகழ்ச்சிகள்)

இத்தெய்வங்களுக்கெனப் பிரத்தியேகமான வணக்க முறைகளுமுண்டு. கொட்டுக்கு ஏற்ப சன்னதம் கொண்டோர் ஆடும் ஆடலும், அது சம்பந்தமான சடங்கு முறைகளுமே இத்தெய்வங்களுக்குரிய வணக்க முறைகளாகும். போன்ற தகவல்கைளத் துந்துமுள்ளார்.

தளவாய் குமார கோவில் பற்றி அவர் தரும் தகவல்கின் முக்கியமான விடயங்கள்:

மண்ணாலோ கல்லாலே கட்டப்பட்ட தனிப்பட்ட கோயில் கிடையாது. (கிராமத்தின் அல்லது காட்டின் மத்தியிலுள்ள குறிக்கப்பட்ட மரம் ஓன்றே கோயிலுக்குரிய நிலையமாகும்.)

ஆண்டுக்கொருமுறை பந்தல் தோரணிமிட்டு சடங்கு நடைபெறும். ஆவணி மாதம் கதிர்காமத்தில் தீர்த்தம் நடக்கும் அன்று இவர்களின் சடங்கு தொடங்கி ஏழு நாட்கள் நடைபெறும்.

பூசை செய்யும் “பூசாரி” கப்புகனார் என அழைக்கப்படுகிறார். சன்னதம் கொண்டு ஆடுபவர்கள் “கட்டாடி” என அழைக்கப்படுகிறார்கள். பூசகரே தெய்வம் ஏறி ஆடுவார். இரண்டு மூன்று பூசகர் இருப்பார்.

மந்திரம் சொல்லப்படுவதில்லை. வேடபாசையில் பாட்டுக்கள் பாடப்படுகின்றன. பாட்டுடன் கொட்டு எனப்படும் பறையும் அடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான கொட்டு எனப்படும் பறை ஒலி உண்டு. அதற்குத் தகவே தெய்வம் பிரசன்னமாகி ஆடும்.

முதல்நாள் சடங்கில் கப்புகனார் வீட்டிலிருந்து குமார சிலை மடைச் சாமான் பெட்டிகளை கோயிலுக்கு கொண்டு வருதல் குமாரர் அம்மாள் கன்னிமார் மடை வைத்தல் தலைமைக் கப்புகனார் குமார தெய்வத்திற்கு ஆடுதல் வண்ணான் வெள்ளை கட்டுதல் ஆலத்தித் தெய்வம் வந்து ஆடுதல் போன்ற சடங்குகள் நடைபெறும்.

இரண்டாம் நாள் சடங்கு உத்தியாக்கள்(இறந்தவர்கள்)கப்புகனார் மீது வர, வில் அம்பு எடுத்து ஆடுதல் நடைபெறும். மடை கலைக்கப்பட்டு புதிய மடை வைக்கப்படும். பின், கப்புகனார் மீது குமாரகலை, அம்மன் கலை, தெவுத்தன் கலை, காட்டுத் தெய்வம், செம்பகனாட்சி, பொய்யனாட்சி, கடற்பகுதிமாறா பணிக்கமாறா, வதனமாறா, பட்டாணி, புள்ளிக்காரன் ஆகிய தெய்வங்கள் வெளிப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான கொட்டும் ஒவ்வொரு விதமான வேடபாiசை என அழைக்கப்படும் பாடலும் உண்டு.

தொடர்ந்து ஏழு நாட்கள் வரை நடைபெறும் சடங்கில், அயொத்தியாய, மாந்திய, மனமுந்த, குருவிலிமுந்த, எரிகனுமுந்த ஆகிய தெங்வங்கள் ( கூடாத நோய்களைக் கொடுக்கும் தெய்வங்கள்) வெளிப்பட்டு வில், அம்பு எடுத்து விளையாடும்.

இறுதிச்சடங்கு நாடகத்தன்மை பொருந்திய சடங்காகும். அதற்கு முதல் நாளிரவு வினாசகப்பானை எழுந்தருளப் பண்ணுவார். அன்று பலகாரம் வடிக்கும் தெய்வம் வந்து முற்படும். அதற்குப் பலகாரம் வடிப்பர். அந்நேரம் மொட்டாக்குத் தெய்வம் முற்பட்டு பலகாரம் வடிக்கும். அதன்பின் நள்ளிரவில், வினாசகப் பானை தொடர்பான சடங்கு நடைபெறும்.

இறுதி நாள் சடங்கு பகல் வேளையில் நடைபெறும். இதற்கு உயரமான பந்தல் அமைக்கப்படும். அப்பந்தல் உச்சியில் 3 கும்பா குடம், தென்னம் குருத்தோலை, வாழை மடல் கொண்டு அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்படும். மாறாத்தெய்வம்(வேட்டை ஆடும் தெய்வம்) கப்புகனாரில் முற்பட்டு ஆடும். மாறாத் தெய்வம் மீண்டும் வர உயரமான பந்தலில் ஏறி இறங்கும்.அதன் பின் கப்புகனார் பக்தர்களால் கொண்டு வரப்படும் தேன் பூச்சி பெட்டி, கோடாரி என்பவற்றை மற்றொரு வழியால் உயரமான பந்தலுக்குக் கொண்டு செல்ல தெய்வமும் ஏறி பந்தல் உச்சியில் தேன் பூச்சியைத் தன் தலையிலும் கப்புகனார் தலையிலும் கொட்டி விளையாடி, 3 கும்பா குடங்களையும் கோடாரியில் கொத்தி வீழ்த்தும்.

பின், மாறாத்தெய்வம் கீழே வர, படகிடை மாறா என்னும் தெய்வம் தென்னம் பாளையின் பூக்களை இதன்மேல் எறியும். மாறாத்தெய்வம் பூச்சி குத்தியது போல் பாவனை செய்து தலைக்கட்டாடியின் காலில் வீழும். தலைக்கட்டாடி பூச்சிக் கடியின் ஆகாரம் தணிப்பார்.

மேலும், பணிக்க மாறா தெய்வம், (யானை பிடித்தலுடன் சம்பந்தமானது) கடற் பகுதி, கப்பற் தெய்வங்கள், ஆச்சா தெய்வம், ஆக்கா தெய்வம் (இவை சிங்களத் தெய்வங்கள்) வைசூரி அம்மன், மணல்வாரி அம்மன், அம்மாள், சின்னமுத்து அம்மன்கள், புள்ளிக்காரத் தெய்வம் என்பனவற்றிற்கான ஆட்டங்களும் நிகழும். மற்றும் கன்னிமார் சடங்கும் (அதனுடன்இணைந்தவர்கள் தெவுத்தன், மாத்தளை தெவுத்தன்) இடம் பெறும்.

மட்டக்களப்பு ஆலயங்கள் பற்றிய பதிவுகளில் “கிரான் குமார கோயில்” இடம் பெற்றிருக்கிறது. இது அம்மக்களால் குமாரத்தன் கோவில் என அழைக்கப்படுகிறது.

கிரான் குமாரத்தன் கோயில் நிலையான இடத்தில் கல்லினால் அமைக்கப்பட்டிருக்கிற போதும், அவை பந்தல்களாகவே அமைக்கப்பட்டு பந்தல்கள் என்றே அழைக்கப்படுகின்றன. வருடத்திற்கொருமுறை ஏழு நாட்கள் “சடங்கு” நிகழ்த்தப்படுகிறது. இன்று மக்கள் தினசரி வழிபாடு செய்து வருகிற போதும், ஆகம முறையான பூசை நடைபெறுவதில்லை. ஐயர்வழிபாடு நடத்துவதுமில்லை. கப்புகனாரே கோயில் பூசாரியாக விளங்குகிறார். தினசரி வழிபாடு “நடைப்பூசை” எனக்குறிப்பிடப்படுகிறது. இச்சொல், வருடாந்தம் நடைபெறும் “சடங்கு” எத்தகையது என்பதனைச் சுட்டிக்காட்டுகிறது. வருடாந்தம் நடைபெறும் “சடங்கு” பாரம்பரிய வழிபாட்டு முறையாக விளங்குகிறது.

இக்கோயில் கிரானில் குடியேறிய திருமலை வன்னி மற்றும் உடையார் சாதியினரால் தோற்றுவிக்கப்பட்டதாக அறியமுடிகிறது. ஆனால், படுவான்கரையிலுள்ள ‘லாவனி’ உனும் இடத்தில் வேடர்கள் நிகழ்த்திய சடங்கில் கலந்து கொண்ட போது, அவர்கள் சடங்கின் மடையொன்றினை வழங்கி, அதனை வீட்டிற்கு கொண்டு செல்லவேண்டாம், பொதுஇடத்தில் வைக்குமாறு கூறியதாகவும் அதன் வழியாகவே இக்கோயில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் மற்றும் ஊரிலுள்ள முக்கிய குடிகளுக்கும் ஏழு நாள் சடங்கினைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கப்புகனார் துறைக்காரர் குடியினரின் வழ்சாவழி உரிமையாக அமைந்துள்ளது. துறைக்காரர் குடி என்பது துறைக்கடவைத் தொழிலைச் செய்பவர் எனும் தொழில் அடிப்படையில் அமைந்துள்ளது. ஆனால் துறைக்கடவை என்பது தற்போது ஆறும் துறையும் இருக்கும் இடத்தில் அன்றி முன்னர் வேறு பகுதியில் இருந்தது என்ற செய்தியும் கிடைத்தது. கோயில்ஊரின் மையத்தில்-பிரதான வீதிக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. ஆனால், முன்னர் அப்பகுதி காட்டுப்பகுதியாக இருந்தது எனவும் முன்னர் குடியிருப்புக்கள் தற்போது “குடியிருப்புச் சேனை” என அழைக்கப்படும் இடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயிலின் பிரதான தெய்வம் குமார் அல்லது குமாரத்தன் தெய்வம் ஆகும். எனினும் இது கொழும்புக் குமாரன் என அழைக்கப்படுகிறதுடன், வாகனமாக குதிரையும் குறிப்பிடப்படுகிறது. குமாரருடைய உருவம், ஒரு அரசிளங்குமரனை ஒத்துள்ளது. பிரதான தெய்வமான குமாரர் அல்லது குமாரத்தன் பந்தல், பந்தல்

மைப்பிலன்றி சாதாரன கோயில்வடிவில் அமைந்திருக்கிறது. பிரதான பந்தல் வருடத்திற்கு ஒரு முறை நிகழும் சடங்கின் போது மட்டுமே திறக்கப்படும்.

குமார், புள்ளிக்காரன், கழுக்குமார், அம்மாள் மற்றும் பிற பாரம்பரியத் தெய்வங்களுக்கும்; பாரம்பரிய முறையிலமைந்த “சடங்கு” வழிபாடு நடைபெறும். சடங்கு பெருமளவுக்கு பாரம்பரியம் சிதைவடையாது இடம் பெற்று வருகிறது. தெய்வங்களுக்கு என தனியானை சிலைகள் இல்லை. பந்தலில் பீடங்கள் காணப்படுகிறது. கழுக்குமாரருக்கு கழுமரம்குறியீடாக உள்ளது. இக்கோவில் சடங்கில் கானந்தனை-முறுத்தானைப் பகுதி வேடர்களில் “தலைச்சான்கள்” (மூத்தோர்கள்)கலந்து பணிவிடைகள் செய்வார்கள்.

சித்தாண்டி முருகன் கோவில் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முருகன் கோவிலாகும். இக்கோவில் திருவிழாவிலும் வேடர்கள் கலந்து கொள்வார்கள். தேன் போன்ற பொருட்களைப் கொண்டு வந்து தருவார்கள் என்ற தகவலும் சொல்லப்பட்டது. ஆனால் இக்கோயிலின் மேற்கே வெளிவீதியில், குமாரருக்கு என தனியான ஒரு கோவில் உண்டு. இக்குமாரருக்குதனியான சடங்கும் நடைபெறுவதுண்டு. அதனுடன் ஊர்ப்பகுதிகளில் வாழும் வேடர்கள் தொடர்பு பட்டுள்ளார்கள் எனத் தெரியவருகிறது. கழுமரமும் ஆயுதங்களும் வைத்து சடங்கு நிகழ்த்தப்படுகிறது. சித்தாண்டி முருகன் கோவில் இன்று மக்கள் செறிந்து வாழும் பகுதியாக உள்ள போதும், முன்னர் காட்டுப்பகுதியாக இருந்ததாகவும், முன்னர் குடியிருப்பு படுவான்கரைப்பகுதியில் அமைந்திருந்ததாகவும், இப்பகுதி இன்றும் குடியிருப்பு என்றழைக்கப்படுவதாகவும் அறிய முடிந்தது.

கிரான் மற்றும் சித்தாண்டியில் சொல்லப்பட்ட தகவல்களில், இவ்விரண்டு இடங்களிலும் முன்னர் குடியிருப்புக்கள் அமைந்திருக்கவில்லை என்பதுவும் அது வேறு இடங்களில் அமைந்திருந்தது என்பதுவும் அப்பகுதிகள் தற்போதும் குடியிருப்புக்கள் என அழைக்கப்படுவதும் முக்கிய கவனிப்பிற்குரிய தகவலாகும். கிரான் மற்றும் சித்தாண்டி எனுமிடங்களில்தற்போதைய மக்கள் வாழும் பகுதி, பிரித்தானியர் காலத்தின் பின், மட்டக்களப்பு – திருமலை வீதி அமைக்கப்பட்ட பின்னரே ஏற்பட்டிருக்கலாம்.

மட்டக்களப்பு நகரின் விளிம்புப் பகுதியென அடையாளங் காணக்கூடிய ஜெயந்திபுரத்திலும் குமாரர் கோவில் உண்டு. இது தற்போது முருகன் கோவிலாக மாற்றமடைந்து வருகிறது. கோவிலின் பெயரும் “ஸ்ரீ குமாரத்தன்(முருகன்) ஆலயம்” என்றே உள்ளது. பிரதான கோவில் முருகன் என்றே அமைந்துள்ளது. அங்கு ஆகம முறையிலமைந்த பூசையேநடைபெறுகிறது.

ஆனால் குமாரருக்கென் சிறு கோவில் உண்டு. இக் குமாரர் கோவிலில் குமாரருக்கான சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பிரதான கோவிலில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை உடன் அற்றவர். அதாவது பால முருகன். முருகன் ஏனைய இடங்களிலுள்ளது போல் வலக்கையில் வேல் ஏந்தாது இடது கையில் வேல் ஏந்தி நிற்கிறார் என்பது ஒருகுறிப்பிடத்தக்க வேறுபாடாகும். அவரை “சுப்பிரமணியர்” என அடையாளப்படுத்தி பூசை நடைபெற்றது.

முருகன் கோவில் வருடாந்தப் பூசையானது, முதலில் குமாரருக்கு பந்தலிட்டு வேடர்களால் நடாத்தப்படும் சடங்காகவே அமைந்துள்ளது. அதன் பின்பே முருகன் கோவில் திருவிழா நடைபெறும். நீண்ட காலமாக குமார சடங்கினை அப்பகுதியில் வாழ்ந்த வேடர்களே நடத்தியுள்ளார்கள். அண்மைக்காலத்தில் வேறு பகுதிகளிலிருந்து (ஊர்ப்பகுதி) வந்துவேடர்கள் சடங்கை நடத்தியிருக்கிறார்கள்.

god2-225x300.jpgஇதற்கப்பால், மட்டுநகர் ஸ்ரீமாமாங்கப் பிள்ளையார் ஆலய வரலாறு(திரு.நாகையா-1996) எனும் நூலில், “வேட்டை காரணமாக இப்பகுதிக்கு வந்த விந்தனை வேடர்கள் இங்கு குடியேறி கொத்துப் பந்தலிட்டு ஆலயம் அமைத்தனர். தமது குல தெய்வமான முருகனுக்கும் வீரபத்திரனுக்கும் கோயில் அமைத்தனர்.” எனவும் “இன்றும் வருடாந்த விழாவில்வேடர் சந்ததியினர் பங்கேற்று வருகின்றனர்” என்ற குறிப்பும் மாமங்கன் எனும் வேடனும் பிள்ளையான் எனும் குருகுலத்தவனும் சேர்ந்து அமைத்ததால் இது மாமங்கப்பிள்ளையார் ஆலயம் எனப்பட்டது என்ற குறிப்பும் காணப்படுகிறது. (மட்டக்களப்பு வரலாற்று அடிச்சுவடிகள், இணையப்பிரதி. -113).

மட்டக்களப்பு சைவக் கோயில்கள் பற்றிய நூல்களில்(வீ.சி.கந்தையா, 1983) “கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் வேடர்களால் ஆரம்பிக்கக்கப்பட்டது” மட்டக்களப்பு வரலாற்று அடிச்சுவடிகள்- இணையப்பிரதி. பக்.115) என்ற குறிப்பும் காணப்படுகிறது. இக்குறிப்பக்கள் வேடர்கள் மட்டக்களப்பின் வரலாற்றில் பெற்றிருக்கக் கூடியமுக்கியத்துவத்தினை நன்குணர்த்துகிறது.

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் வேடர்கள் என்பதற்கான போதுமான ஆதராங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் வாழ்ந்த காலப்பகுதி, அவர்களின் தோற்ற மூலம் பற்றிய தகவல்கள் போதுமானளவில்லை. அத்துடன் அவர்கள் உண்மையில் வேடர்கள் என்ற சொல்லினால் குறிப்பிடத்தக்கவர்களா? என்ற முடிவினையும் பெறமுடியாதுள்ளது. தற்காலத்தில் இக்குடிகள் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே பரந்த ஒரு பிரதேசத்திலே காணப்படுகிறார்கள் என்பதானால், மட்டக்களப்பின் தெற்கே இவர்கள் வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்ற முடிவிற்கும் வரமுடியாதுள்ளது. மேலும் தேடலை விரிவு படுத்த வேண்டும்.

குமார தெய்வ வணக்கு முறையான சடங்கிற்கும், அண்மைக்கால் வேடர்களின் வழிபாட்டு முறைக்கும் மற்றும் கண்ணகி வழிபாட்டிற்கு முறைக்குமுள்ள தொடர்புகள் ஆராயப்படவும் வேண்டும். குமார தெய்வ வழிபாட்டில் காலத்திற்குக் காலம் ஏற்பட்டுள்ள வந்துள்ள மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இவற்றிகு மேலாக, பெருமளவுதொல்பொருள் சான்றுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவை பற்றிய தேடலை மேற்கொள்ள வேண்டும்.

எனினும் மட்டக்களப்பின் பூர்விக குடிகள் பற்றிய இவ்வத்தியாயத்தினை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்றே கருதுகிறேன். இதற்கடுத்த பகுதியான திமிலரைப் பற்றியும் குடியேற்றங்கள் பற்றியும் போதுமான தகவல்கள் ஏற்கனவே உள்ள நூல்களில் விபரிக்கப்பட்டுள்ளது. வெல்லவூர்க்கோபால் அவர்கள் “மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம்” (2005) எனும் நூலில், பெருமளவு தகவல்களைத் தந்திருக்கிறார். மட்டக்களப்பின் வரலாற்றில் முக்கியமானதொரு விடயமாக அமையும் மட்டக்களப்பு பிரதேசத்திற்குரிய தனித்துவமான அம்சங்கள் – சமூக, கலாசார-பண்பாட்டு, மொழி பற்றிய அம்சங்கள் – பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். இது பற்றிய தகவல்கள் ‘மட்டக்களப்பு தமிழகத்தில்” ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவற்றினைப் பற்றிய முன்னேற்றகரமான – சரிதிட்டமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இலங்கை வரலாறு – தொல் பொருள் சான்றுகள், மற்றும் சமூகவியல் – மானிடவியல் குறித்த அறிவு தேவையாக இருக்கும்.

தற்போதைக்கு மிகச் சரிதிட்டமான காலக்கணிப்புடன் கூடிய வரலாற்றம்சங்கள் குறித்து நாம் தேடியறிய முடிந்தால், தொல்காலம் பற்றிய முடிவுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். அதற்கு மட்டக்களப்புடன் தொடர்பு பட்ட ஐரோப்பியர்கள்-மேலைத்தேசத்தவர்கள் எழுதிய குறிப்புக்கள் வெளிவரவேண்டும் போலுள்ளது. கிடைக்கும் தகவல்களைக்கொண்டு தனித்தனி விடய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மட்டக்களப்பின் வராலற்றில் இன்னமும் கண்டறியப்படாத – விளக்கப்படுத்தப்படாத விடயங்கள் உள்ள போதும் கிடைத்த சான்றுகளைக் கொண்டு தொடர்ச்சியான வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம். அவற்றை சரிதிட்டமாக-விஞ்ஞான பூர்வமாக விளக்க தற்போதைய நிலையில் முடியாதுள்ளது. அதற்கு மேலும் கடினமான தேடல்தேவைப்படுகிறது.

http://inioru.com/?p=26230

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பதியுங்கள் நிழலி

ஆறுதலாக வாசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி மௌனகுருவின் மேடை நாடகத்தை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் ரசித்துப் பார்த்த சிறுவன் நான்.

என்ன... அழகாக.. துள்ளிப் பாய்வார். ஆடை அலங்காரம், எல்லாம் மனக் கண்ணில் நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பதியுங்கள் நிழலி...இணைப்பிற்கு நன்றி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும் : விஜய்

மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளில் பிரதானமானவர்கள் வேடர்கள் எனவும் அவர்களுடைய பிரதான தெய்வம் குமார தெய்வம் எனவும் ஆய்வாளர்களால் விபரிக்கப்பட்டுள்ளதனை முன்னய கட்டுரையில் விபரித்திருந்தேன். இக்குமார தெய்வம் முருகனையே குறிக்கும் என்பது ஆய்வாளர்களினதும் மக்களினதும் கருத்தாகும்.

எனவே குமார தெய்வத்திற்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிய வேண்டியது அவசியமாகிறது. அதற்கு, முதலில் மட்டக்களப்பில் நிலவிவந்த-நிலவி வருகிற குமார தெய்வ வழிபாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய வேண்டும்.

குமார தெய்வம் மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட வழிபாட்டு முறைகள் தொடர்பாக, கலாநிதி சி.மௌனகுரு அவர்கள் “மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்” என்ற நூலில் விபரித்திருந்தவற்றை முன்னய கட்டுரையில் சுருக்கித் தந்திருந்தேன்.

க.மகேஸ்வரலிங்கத்தின் மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும் (2008) எனும் நூலில், குமார தெய்வ வழிபாட்டு முறைகள் பற்றிய பல தகவல்களை; காணப்படுகின்றன. அந்நூலில், மட்டக்களப்பின் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் பற்றி விபரிப்பில், “இவ் ஆதிக் குடிகளிடம் பொது வழிபாட்டுடன் தனித்துவமான வீட்டு வழிபாட்டு முறைகளும் இருந்து வந்துள்ளன. குறித்த இடத்தில் ஆண்டுக்கொருமுறை தற்காலிக பந்தல்கள் அமைத்து வழிபாடு செய்வதே இவர்களின் பொது வழிபாடாகும்”(பக்62) எனக்குறிப்பிடுகிறார். குமார தெய்வம் தொர்பான தகவல்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் கவனத்திற்குரியவை,

• இவ்வேட வழிபாடுகளில் முக்கியமான அம்சம் பல தெய்வ வழிபாடு. இவர்களால் வழிபடப்படும் பல தெய்வங்களுள் முக்கியம் பெறுவது குமார தெய்வம்.

• வேடர் குமார தெய்வம் என்பதுவும் சிங்களவர் கதிர்காம தெய்வம் என்பதுவும் தமிழர் போற்றும் முருகனையே.

• குமார தெய்வம் காட்டுத் தெய்வமாகவும், வேட்டைத் தெய்வமாகவும், தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாகவும் மதிக்கப்படுகிறது.

• குமார தெய்வத்திற்கு அடுத்ததாக இவர்கள் வழிபாட்டில் முக்கியம் பெறும் தெய்வம் பெரியசாமி. இத்தெய்வத்திற்கு செய்யும் சடங்கு கதிரவெளி பாற்சேனையில் ஆண்டு தோறும் சிறப்பாகச் செய்யப்பட்டு வந்தமையை பலரும் அறிவர்.

• இவற்றைவிட கடல் தெய்வங்கள், மாறத் தெய்வங்கள், தெவுத்தன் தெய்வம், நாச்சிமார் தெய்வம், கன்னிமார், மொட்டாக்குத் தெய்வம், பட்டாணி முதலிய பல்வேறு தெய்வங்களும் வேடரின் வழிபாட்டுக்குரியனவாக இருந்து வந்துள்ளன.

• இத் தெய்வங்களில் பல உட்பிரிவுகள் இருப்பதாக இவர்கள் நம்பகிறார்கள். உதாரணமாக குமார தெய்வக்கலைகளாகிய ஆதிக்குமாரர், கொழும்புக் குமாரன், அழகுக் குமாரன், கண்டிக் குமாரன், புள்ளிக் குமாரர், காலிக்குமாரர் என்பன உள்ளதாகக் கூறுகின்றனர். (பக். 62) மேலும், இத்

தெய்வங்களின் வழிபாட்டு முறைகள்; பற்றி தகவல்களையும் அவர் முன்வைத்திருக்கிறார். அவற்றில் கவனத்திற்குரியவை,

• இவ்வேடர்கள் தங்களது இத் தெய்வங்களையெல்லாம் குமார தெய்வச் சடங்கினால் வழிபடுகின்றனர்.

• வழிபாடுகள் எல்லா வளம், உடல் நலம், நிம்மதி, நிவாரணம் முதலியன வேண்டிச் செய்யப்படுகின்றன.

• இச்சடங்கின் போது குமார தெய்வத்திற்குப் பெரிய பந்தலும் ஏனைய தெய்வங்களுக்குச் சிறுசிறு பந்தலும் அமைக்கப்படும்.

• இச்சடங்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஏழு அல்லது ஐந்து நாட்கள் நடைபெறும். இது பெரும்பாலும் ஆடி, ஆவணி மாதங்களில் நிகழ்த்தப்படுகிறது.

• இச்சடங்கு முறைகள் ஏனைய வழிபாடுகளில் இருந்து வேறுபட்டதாக உள்ளது.

• குமார தெய்வம் தவிர ஏனைய தெய்வங்களுக்கு விக்கிரகம் வைக்கப்படுவதில்லை. இத்தோடு கும்பங்களையும் காணமுடியாது. மடைகள் மட்டும் வைத்துத் தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன.

• இச்சடங்கை நடத்தும் பூசகர் கப்புகன் என்று அழைக்கப்படுகின்றார். இவருக்கு உதவி புரிய இரண்டு மூன்று துணைக் கப்புகன்மார் இருப்பர்.

• ஏனைய சடங்குகள் போல மந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, உருக்கொடுத்தல், கட்டுதல், வெட்டுதல் என்னும் நிகழ்ச்சிகள் இச்சடங்குகளில் இடம் பெறுவதில்லை.

• சடங்குகள் தெய்வங்களை மன்றாடுகின்ற முறையில் அல்லது வேண்டுதல் செய்கின்ற முறையில் நடத்தப்படுகின்றது.

• இச்சடங்குகளில் சிறப்பம்சம் கப்புகனும் தெய்வமாக உருக்கொண்டு ஆடுபவனும் ஒருவராகவே இருத்தலாகும். இவ்வகையில் கப்புகனார் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி ஒவ்வொரு தெய்வத்தையும் வேண்டுதல் செய்து குறித்த தெய்வமாக அவரே மாறி உருக்கொண்டு ஆடிவருவார். இதனால் கப்புகனார் ஆண்தெய்வமாக வரும் பொழுது ஆணுக்குரிய ஆடையும், பெண்தெய்வமாக வரும் பொழுது பெண்ணுக்குரிய ஆடையும் பழைய பாணியில் அணிந்து கொள்வார்.

• ஏனைய சடங்கு முறைகளைக் காட்டிலும் இச்சடங்கில் ஆட்டத்திற்கே முக்கியம் கொடுக்கப்படுகிறது. இதனால் கப்புகனார் சிலம்பு சலங்கைகளை அணிந்து கொள்ளுவார். இவ் ஆட்டத்தின் போது கொட்டு எனும் மேளம் அடிக்கப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி கொட்டடி முறையும் ஆட்டமுறையும் காணப்படுகின்றன.

• குறித்த தெய்வங்களுக்குரிய ஆயுதங்களை கையிலேந்தி நடித்தும், அபிநயித்தும் கப்புகானர் பக்தர்களை கவருவார்.

• ஏனைய சடங்குகள் போல ஒவ்வொரு ஆட்டத்தின் பொதும் கட்டுச்சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

என்பனவாகும்.

மௌனகுரு அவர்கள் தளவாய் குமார கோவில் கள ஆய்வில் கண்டறிந்து தந்துள்ள தகவல்களுடன் மகேஸ்வரலிங்கம் தரும் தகவல்களும் பெருமளவு ஒத்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. தெய்வங்களின் பெயர்களில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. சடங்கு கதிர்காமத்தில் தீர்த்தம் நடக்கும் அன்று தொடங்கும் என மௌனகுரு அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கொட்டு என்பதை மேளம் என மகேஸ்வரலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் மௌனகுரு அவர்கள் பறை எனக்குறிப்பிடுகிறார். மௌனகுரு அவர்கள் சடங்கில் வேடபாசையில் பாடல்கள் பாடப்படும் எனக்குறிப்பிடுகிறார். தளவாயில் நடைபெறுவது போன்ற இறுதிநாள் சடங்கு பற்றிய விபரிப்பினை மகேஸ்வரலிங்கம் குறிப்பிடவில்லை.

க.மகேஸ்வரலிங்கம் அவர்கள், இக்குமார வழிபாட்டு முறையானது(ஆதிக்குடிகள் வழிபாட்டு முறைகள்) பூசாரி முறை வழிபாட்டு முறை, கட்டாடிமார் வழிபாட்டு முறை, கப்புகனார் வழிபாட்டு முறை என்பவற்றிலிருந்து வேறுபட்டது எனக்குறிப்பிடுகிறார். ஆனால் அவருடய விபரிப்புக்களிலே குமார

வழிபாட்டில் இவ்வழிபாட்டு முறைகளும் கலந்திருப்பதனை அறியமுடிகிறது. குமார சடங்கினை நிகழ்த்தும் பூசாரி கப்புகன் என அழைக்கப்பட்டாலும், கப்புகன் வழிபாட்டு முறை என்பது மௌன வழிபாட்டு முறையாகும் என்பது கவனிப்பிற்குரியது. குமார தெய்வத்திற்கும், இவ்வழிபாட்டு முறைகளுக்கும் இடையே பிரதேச நிலையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கிராமிய மக்களிடையே வாய்மொழி மரபாக நீண்டகாலம் இம்மரபுகள் பின்பற்றப்பட்டு வந்தமையாலும், ஏனைய தெய்வ வழிபாடுகள் சில பாரம்பரிய முறையில் அமைந்திருப்பதனாலும் (அம்மன் வழிபாடு) இவ்வாறான ஒரு கலப்பு ஏற்பட்டிருக்கலாம்.

குமார தெய்வம், குமார தெய்வ வழிபாட்டு முறைகள் தொடர்பான தற்கால நிலைமைகளை அவதானிக்கிற போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியும் விடயமாகும். முக்கியமான மாற்றங்கள்,

தற்காலிக வழிபாட்டிடங்கள் நிரந்தர கோயில்களாக மாற்றப்பட்டுள்ளமை.

தளவாய்க் கோவிலும், ஜெயந்தி புரம் கோவிலும் கிரான் குமார ஆலயமும் நிரந்தர கட்டடங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் ஏனைய தெய்வங்களிற்கும் கல்லினால் நிரந்தரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வருடாந்தச் சடங்கின் போது கொத்துப் பந்தல் போடுவதும் பின்பற்றப்படுகிறது.

குமாரர் ஆலயங்கள் முருகன் ஆலயங்களாக மாற்றப்பட்டுள்ளமை.

தளவாய்க் கோவிலும், ஜெயந்தி புரம் கோவிலும் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. ஜெயந்தி புரம் கோவிலில் முன்னர் குமாரர் இருந்து இடத்தில் தற்போது முருகன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் இருந்த குமாரர் மாற்றப்பட்டு பாலமுருகன் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளார். குமாரருக்கு தனிக்கோவில் அருகில் அமைக்கப்பட்டு, அதில் குமார் வைக்கப்பட்டுள்ளார்.

வருடாந்த சடங்கினை விட வேறு வழிபாட்டு முறைகளும் காணப்படுகின்றமை.

ஜெயந்தி புரம் கோவிலில் குமாரருக்கும் ஆகம முறைப்படி பூசை நடைபெறுகிறது. குமாரர் சுப்பிரமணியர் எனக் கருதப்படுகிறார். தளவாய்க் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் பூசாரியினால் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. கிரான் குமார ஆலயத்தில் விசேட வழிபாடுகள் பூசாரியினால் மேற்கொள்ளப்படுகிறது. (ஆயினும் இவ்வாறு வழிபாடு நடத்தப்படுவது குறித்து முரண்பாடுகள் நிலவுகிறது.) அயினும் வருடாந்த சடங்கு வழமை போல் முக்கியத்துமுடையன. அச்சடங்கில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதனை அறிய வேண்டும்.

கவனிக்க வேண்டிய விடயம், ஜெயந்தி புரம் கோவில் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதுவாகும். இக்கோவில் மட்டக்களப்பு நகரில் இருப்பதுவும் கவனிப்பிற்குரியது. இக்கோவில் (குமாரர்) என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மைக்காலம் வரை இக்கோவில் வருடாந்த திருவிழா, குமார சடங்குடனேயே ஆரம்பிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ள. அச்சடங்கினை வேடர்கள் வழிவந்தேர் பாரம்பரிய முறையில் செய்துவருகின்றனர். கடந்த வருடம் ‘வெளியிடத்திலிருந்து வேடர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பாரம்பரிய முறையில் சடங்கினை செய்வதற்கு பல தடைகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சித்தாண்டி குமாரர் ஆலயம், சித்தாண்டி முருகன் கோவிலின் பின் வீதியில் தனியாக அமைந்திருக்கிறது. அதற்கென தனிப்பட வேடர்கள் வழிவந்தோரால் பாரம்பரிய முறையிலமைந்த சடங்கு நடைபெற்று வருகிறது. கிரான் குமார ஆலய சடங்கும் பெருமளவு பாரம்பரிய முறையில் நிகழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை விட கிரான், சித்தாண்டி குமாரர் தெய்வம் லாவானை எனும் இடத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. லாவானை எனுமிடத்தில் தற்போது மேடு ஒன்றில் குமார தெய்வச் சடங்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனைவிட மேலும் சில இடங்கள் குமார தெயவச் சடங்கு நடைபெறும் இடங்காக இனங்காட்டப்படுகின்றன.

மற்றொரு முக்கியமான விடயம், முறுத்தானை, கானந்தனை, அக்குறாணி ஆகிய இடங்களில் அண்மைக்காலத்தில் குடியேறி ஒரு சமூகமாக வாழும் “தமிழர்களாகி” விட்ட வேடர்கள் மத்தியில் குமார தெய்வச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது எனினும், அது அவர்கள் மத்தியில் முக்கியமானதொன்றாக இல்லை. அவர்களுடைய தெய்வங்கள் வேறு.

மட்டக்களப்பு நகரிலிருந்து அதன் வடபகுதி வாகரை-கதிரவெளி வரையான பிரதேசத்தில் இவ்வாறு குமார தெய்வத்திற்கான வழிபாட்டு முறைகள் மாற்றமுற்றும், பாரம்பரியங்களின் எச்சங்களைக் கொண்டும் தற்காலத்திலும் நிலவுகிறது. ஆனால் இவ்வழிபாட்டு முறை மட்டக்களப்பின் ஏனைய பிரதேசங்களிலும் தற்போதும் நிலவுகிறது என்பதனை அறிய முடிகிறது. இவ்வகையில் கெளரி புண்ணியமூர்த்தி, “கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள்” (www. Battinews.com) எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்களும் கவனத்திற்குரியன. அவர்,

மண்டூர் முருகன் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வேடர் வணக்க முறைப்படி சிறிய குமாரத்தன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பூசை வேளையில் திரை மூடிப் பூசை நடைபெறும். துணியினால் வாய் மூடிஇ கப்புகனார் பூசை செய்வார். கதிர்காமம் போன்று வேடர் பூசையும் மரக்கறிஇ மான் இறைச்சி சேர்ந்த அவிபாகமும் குமாரத்தன் கோயிலில் வைக்கும் பூசையும் நடைபெறுகின்றது.

திருக்கோயில் சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் – ஆதியான முருக வழிபாட்டின் அம்சமான வேல் வழிபாட்டைக் கொண்ட இவ்வாலயம் ஆதிக்குடிகளான வேடுவரின் வழிபாட்டிலேயே தொடங்கப்பட்டது

வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் ஆதி காலத்தில் இப்பகுதிகளில் வாழ்ந்த வேடுவர்களால் இவ்விடத்தில் வழிபாடு நிகழ்த்தப்பட்டதாக மரபு வழிக் கதைகள் கூறுகின்றன. போன்ற விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இதனால், மட்டக்களப்பின் வடபகுதியில் மட்டுமன்றி

தென் பகுதியிலும், பிற பிரதேசங்களிலும் திருப்படைக் கோவில்கள் எனப்படுகிற மட்டக்களப்பின் பண்டைய முருகன் கோவில்களிலும் குமார தெய்வத் தொடர்பும் வேடர் தொடர்பும் காணப்படுகின்றமையை அறிய முடிகிறது. எனவே வேடர் அவர்களுடைய குமார தெய்வம் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் மட்டக்களப்பில் பெரும்பாலான பிரதேசங்களில் பின்பற்றப்பட்டிருந்ததனை அறிய முடிகிறது.

மட்டக்களப்பில் காணப்படும் குமார தெயவம், அத்தெய்வத்திற்கான வழிபாட்டு முறைகள் தனித்துவமானவை. எனினும் இக்குமார தெய்வம் முருகனையே குறிக்கும் என்பது ஆய்வாளர்களினதும் மக்களினதும் கருத்தாகும். மேலே விபரிக்கப்பட்டவாறு மட்டக்களப்பிலுள்ள பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுடன் வேடர்களுக்குத் தொடர்பு காணப்படுகின்றமையும், பல முருகன் ஆலயங்களில் பாரம்பரிய முறையிலான வழிபாட்டு முறைகள் நிகழ்ந்து வருகின்றமையும், குமார ஆலயங்கள் முருகன் ஆலயங்களாக மாற்றம் பெற்றுள்ளமையும், முருகன் ஆலயங்களுடன் குமாரர் தொடர்பு பட்டுள்ளமையும் இக்கருத்தினை மேலும் வலுவுடையதாக்குகிறது.

வேடர்-குமாரர்-முருகன் தொடர்பு குறித்து ஆராய்வதற்கு முருக வழிபாடு பற்றி அறிய வேண்டியுள்ளது. இந்நோக்கத்தில் முருக வழிபாடு குறித்து ஆராயும் போது,

தற்கால முருகன் மற்றும் முருக வழிபாடு

புராதான கால முருகன் மற்றும் முருக வழிபாடு

மட்டக்களப்பு முருகன் கோவில் மற்றும் முருக வழிபாடு

என்பன குறித்து கவனம் செலுத்த வேண்டியள்ளது. ஏனெனில் இம்மூன்று விடயங்களும் இக்கட்டுரையின் ஆய்வுப் பொருளில் வேறுபாடான தகவல்களைத் தரக்கூடியனவாக இருக்கின்றன.

தற்கால முருகன் மற்றும் முருக வழிபாடு எனும் போது, ஆகம முறையிலமைந்த முருகன் கோவில்களையும் ஆகம முறையிலமைந்த வழிபாட்டு முறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக தென்னிந்திய மற்றும் யாழ்ப்பாண முருகன் கோவில்களைக் குறிப்பிடலாம். இம்முறைகளிற்கும் மட்டக்களப்பிலுள்ள குமாரர் மற்றும் சடங்கு வழிபாட்டு முறைக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கருதமுடியவில்லை. எனினும் “ஜெயந்திபுரம் குமாரர்(முருகன்)முருகன்” கோவில் இவ்வாறு ஆகம முறைக்கமைய மாற்றப்பட்டுள்ளது. ஆயினும் அங்கு குமாரருக்கு தனிக்கோவில் உண்டு என்பதுவும், வருடாந்த திருவிழா குமாரர் ஆலயச் சடங்கின் பின்னரே நடைபெற்று வருகிறது என்பதுவும் குமார வழிபாட்டு முறை முருக வழிபாட்டு முறையினின்று வேறுபட்டது என்பதை தெளிவாக்குகிறது.

புராதான கால முருகன் மற்றும் முருக வழிபாடு எனும் போது, 2000 வருடங்களிற்கு தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய முருகன் மற்றும் முருக வழிபாட்டு முறைகளைக் குறிக்கிறது. இவ்விடயம் குறித்த தகவல்கள் தமிழப் பண்டைய இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளன. இவ்விடயமும், மட்டக்களப்பு முருகன் கோவில் மற்றும் முருக வழிபாடு எனும் விடயமும் ஓரளவு குமாரர் வழிபாட்டுன் தொடர்புபட்டுக் காணப்படுகின்றன. ஆனால், இதில் கவனித்திற்குரிய அம்சம், முருக தெய்வமும் முருக வழிபாடும் புராதான கால மக்களுடைய வழிபாடாக இருந்து பின் வளர்ச்சியடைந்தமையால் அவற்றிலும் பழமையான அம்சங்கள் பல காணப்படுகின்றமையேயாகும். இதனால் குமார தெய்வத்துடனும் குமார தெய்வ வழிபாட்டுடன் தொடர்பு உள்ளதாக கருதவேண்டியுள்ளது. ஆனால் அடிப்படையில் இரண்டும் வேறுபட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளன.

குமார தெய்வத்திற்கும் அத்தெய்வத்திற்கான வழிபாட்டு முறைகளும் பண்டைய தற்கால முருகன் முருக வழிபாட்டிலிருந்தும் வேறுபடுவது மட்டுமன்றி, தற்காலத்தில் சமூகமாக வாழந்து வரும் வேடர் தெய்வங்களிற்கும் அவர்கள் வழிபாட்டிற்கும் இடையில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. எனவே, இவற்றிலிருந்து வேறுபட்டதொன்றாக தனித்ததுவமானதாக குமார தெய்வத்தினையும் குமார வழிபாட்டு முறைகளையும் கருதவேண்டியுள்ளது.

இவ்விடயம் விரிவாகவும் கவனமாகவும் ஆராயப்பட வேண்டியதாகும். ஏனெனில் மட்டக்களப்பு வரலாற்றின் தொல்குடியினர் பற்றியும், தொல் வரலாறு பற்றியதுமான பல தகவல்கள் இவ்விடயத்தினை மையமாகக் கொண்டுள்ளது போல் தெரிகிறது. அது மட்டுமன்றி மட்டக்களப்பு வரலாற்றில் முக்கியமாக பேசப்படுகின்ற சில விடயங்கள் இக்குமார வழிபாட்டு முறைகளை மேலும் ஆராய்வதினூடாகப் புரிந்து கொள்ளப்படலாம் போல் தெரிகிறது. இவ்விடயம் விரிவானது. எனவே அடுத்த கட்டுரையில், புராதான கால முருகன் மற்றும் முருக வழிபாடு பற்றியும் அவற்றுடன் மட்டக்களப்பின் குமார வழிபாடு வேறுபட்டும் ஒற்றுமைப்பட்டும் நிற்கும் தன்மை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்து கொள்ளமுனைவேன்.

http://inioru.com/?p=26631

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.