உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிப்பு : நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உத்தரவு!
Published By: DIGITAL DESK 2 01 APR, 2025 | 03:37 PM
(டானியல் மாக்ரட் மேரி )
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (1) இந்த மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முகமது லஃபார் தாஹீர் மற்றும் கே.பி.பிராணந்து ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சட்டத்தரணி அஜிரா அஸ்வர் தெரிவிக்கையில்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தூய தேசத்திற்கான கட்சிக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், புத்தளம் மாநகர சபை மற்றும் கல்பிட்டி பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்குரிய மேன்முறையீடாக கடந்த 25 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை (01) குறித்த வழக்கு பரிசீலிக்கப்பட்டு அதனடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கான தற்காலிக தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.நாளை புதன்கிழமை (02) ஆம் திகதி வரை எந்த வித தேர்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் லஃபார் தாஹீர் தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் எஸ். எம் .இஷாம் மரிக்கார் தெரிவிக்கையில்,
புத்தளம் மாநகர சபை, கல்பிட்டி பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும் ஏனைய சபைகளிலும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் தீர்வு எடுக்கும் வரைக்கும் தேர்தலுக்குரிய அனைத்து விடயங்களையும் நிறுத்தி வைக்குமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூய தேசத்திற்கான கட்சி புத்தளம் மாநகர சபையிலும், கல்பிட்டி பிரதேச சபையிலும் இரட்டைக் கொடி சின்னத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. அவற்றை நிராகரித்தமைக்காக நாங்கள் அதனை மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வழக்குத் தாக்கல் செய்திருந்தோம். அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (1) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்காக எடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஒரு நியாயம் உள்ளதை மிகத் தெளிவாக கூறி இருக்கிறார்கள். நாளை இது சம்பந்தமான தெளிவான முடிவொன்று எடுக்கப்படும். அதுவரைக்கும் புத்தளம் மாநகர சபை, கல்பிட்டி பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும் ஏனைய சபைகளிலும் இந்த பிரச்சினை சம்பந்தமான தீர்வு எடுக்கும் வரைக்கும் தேர்தலுக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு தற்காலிக தடை உத்தரவொன்றை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
ஆகவே இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். நாட்டில் இன்னும் நீதி சாகவில்லை. நீதி இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. அதே நேரம் இளைஞர்கள் அரசியலுக்குள் வர வேண்டும் என்பதற்காக போடப்பட்ட சட்டமூலத்தை வைத்தே இளைஞர்களை நிராகரித்திருக்கிறார்கள்.
ஆகவே, நிராகரிக்கப்பட்ட வேட்பு மனு தாக்கல்களுக்கு எதிராக எமக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என எமது நாட்டின் சட்டத்தை நம்பி நாங்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று வெற்றியாக அமைந்திருக்கிறது.
ஒரு நாள் இந்த நாட்டின் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்தி இருக்கிறார்கள் என்றால், நீதிக்கு ஆதரவாக அநீதிக்கு எதிராக செய்கின்ற போராட்டத்திற்கு வெற்றியை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்திய விடயமாகும். இதனால் நாங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்றோம் .புதன்கிழமை (02) எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். ஆகவே எங்களுடைய ஆதரவாளர்கள், ஏக்கத்தோடு இருக்காமல் எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
https://www.virakesari.lk/article/210842
By
ஏராளன் · பதியப்பட்டது
Archived
This topic is now archived and is closed to further replies.