எனக்குப் பிடித்த சோகப் பாடல்களில் இதுவும் ஒன்று.
இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனது மனதில் வருவது நாதன்.
1989 என்று நினைக்கிறேன். இந்திய ராணுவம் எமது தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலம். நான் மட்டக்களப்பில் தங்கியிருந்த மாணவர் விடுதியில், சமையல் வேலைக்கு இருந்த அம்மா விற்கு கூட ஒத்தாசை புரிவதற்கென்று நாதன் எனும் இளைஞர் ஒருவரும் தங்கியிருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எப்போதும் அவர் முகத்தில் ஒரு புன்முறுவல் பூத்திருக்கும். சிறியதாக நாங்கள் விடும் பகிடிக்கும் சேட்டைகளுக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார். இதனாலேயே, அனைவருக்கும் அவர் நாதன் அண்ணாவாகிப் போனார்.
மட்டக்களப்புச் சந்தைக்குப் போய் விடுதிக்கும் மரக்கறி, மீன் இறைச்சி வாங்குவதிலிருந்து, விடுதி முகாமையாளருக்கு வீரகேசரி வாங்குவதுவரை நாதனே எல்லாம். இப்படி அடிக்கடி கடைகளுக்குப் போய்வந்துகொண்டிருந்த நாதனுக்கும் காதல் மலர்ந்தது. எமது விடுதிக்கு அருகில் இருந்த "தயா" கடை எனும் ஒரு சிறிய பலசரக்குக் கடைக்கு அடிக்கடி போக ஆரம்பித்திருந்தார். இவரை அடிக்கடி அந்தக் கடைப் பக்கம் கண்ட விடுதி மாணவர்கள் இதுபற்றிக் கேட்டபோது சிரித்தே சமாளித்து விடுவார்.
எமது விடுதியின் ஒரு ஓரத்தில் நாதனின் அறை இருந்தது. பத்திரிக்கை படிக்க, கதைப்புத்தகம் வாசிக்க, பாட்டுக் கேட்கவென்று எப்போதாவது அவரது அறைக்குப் போய்வருவேன். பழைய, பொத்தல் விழுந்த மரக் கட்டில். ஓட்டைப் பாய், பழைய அழுக்கேறிய தலையணை, கயிற்றுக் கொடியில் தொங்கும் நாதன் அண்ணாவின் இரு பழைய சேர்ட்டுக்களும், காற்சட்டைகளும். ஓரத்தில் இருந்த காகிதத்திலான சூட்கேஸ்..இவைதான் அவரது சொத்துக்கள். அமைதியும், ஏழ்மையும் குடிகொண்டிருந்த அவரது அறைக்குப் போகும்போதே மனதில் ஒருவித சோகம் சேர்ந்துவிடும்.
அப்படியொருநாள் நான் அங்கே சென்றபோது, நாதன் அழுதுகொண்டிருந்தார். ஏனென்று புரியவில்லை. சிறிது நேரம் அவரருகில் இருந்துவிட்டு எழுந்துவர எத்தனிக்கும்போது, அவரது காதல் பற்றிச் சொன்னார். தயா கடை உரிமையாளரின் மகள் மீதான தனது ஒருதலைக் காதல் பற்றியும், தனது காதலை தனது ஏழ்மையைக் காரணம் காட்டி நிராகரித்தது பற்றியும் சொன்னார். அவரருகிலிருந்த ரேடியோவில் ஒரு பாட்டு....முதலாவது முறை கேட்டபோதே நெஞ்சை அள்ளிக் கொன்றுவிட்ட அந்தப்பாட்டு....
"ஆள்கடலில் தத்தளித்து நான் எடுத்த முத்து ஒன்றை விதியவன் பறித்தது ஏன்....."
பாடலைக் கேட்டவுடன் நாதன் அண்ணாவுக்காக அழவேண்டும் போல இருந்தது. எதுவும் பேசத் தோன்றாமல் எழுந்துவந்துவிட்டேன்.
சில மாதங்களில் இந்திய ராணுவத்தின் கூலிப்படைகளான த்ரீ ஸ்டார் காரர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் நாதன் அண்ணாவை மட்டக்களப்பு சந்தையில் வைத்துப் பிடித்துச் சென்றார்கள். அதன்பின் அவரை நான் காணவில்லை. 1990 இல் ஒருநாள் எங்களைப் பார்க்க விடுதிக்கு வந்திருந்தார். நன்றாக உடுத்தி, மினுங்கும் சப்பாத்துடன் அவரைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய ராணுவ முகாமிலிருந்து அனுமதி கேட்டு வந்ததாகச் சொன்னார். "தயா கடைக்குப் போய் இன்று அவளைப் பார்த்துக் கேட்கப் போகிறேன், இன்று என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம்" என்றுவிட்டுப் போய்விட்டார். அதன்பிறகு அவரை நிரந்தரமாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
சிறிது நாட்களில் அவரது காதலிக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்தது.
இந்திய ராணுவம் வெளியேறத்தொடங்கியிருக்க, தமிழ்த் தேசிய ராணுவம் மீதான தாக்குதல்களைப் புலிகள் தொடங்கியிருந்தனர். அம்பாறை எல்லையிலிருந்த தமிழ்த் தேசிய ராணுவத்தின் முகாமைப் புலிகள் தாக்கிக் கைப்பற்றியதாகச் செய்திகள் படித்தேன், அப்போதுதான் நாதன் அண்ணாவும் அங்கேயிருப்பது நினைவிற்கு வந்தது. அவர் என்ன ஆனார் என்பதுபற்றி அன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
இன்றும் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாதன் அண்ணாவின் அந்தச் சிரித்த முகம் மனதில் வந்துபோகும். காதலில் தோற்றவர்களுக்கும், ஒருதலையாகவே காதலித்து வாழ்பவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம், நாதன் அண்ணா உற்பட !