துரோகத்தின் நாட்காட்டி : நாள் 21 கார்த்திகை 2006
திங்கட்கிழமைக்கு முன்னர் உங்கள் பாராளுமன்ற பதவிகளை ராஜினாமாச் செய்யுங்கள், இல்லையென்றால் கொல்லப்படுவீர்கள் - கிழக்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா பகிரங்க கொலை எச்சரிக்கை
கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தர் குணானன் எனபவர் கிழக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள நேரடி கொலை அச்சுருத்தலில், திங்கட்கிழமைக்கு முன்னதாக தமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவோம் என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு நகரில் ராணுவத்தினருடன் சேர்ந்து செயற்படும் இவர் வெளிப்படையாகவே அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள், செயற்பாட்டாளர்களுக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரம் காட்டிவருவதுடன் வெளிப்படையான அச்சுருத்தல்களையும் விடுத்து வருகிறார்.
இவரது அச்சுருத்தலினையடுத்து இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகருக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றினை எழுதியுள்ள கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதுபற்றி மேலதிகத் தகவல்களை வழங்கியிருக்கிறார்கள். திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தில் தமக்கு கருணாவினால் விடுக்கப்பட்டிருக்கும் பகிரங்க கொலை அச்சுருத்தல்பற்றி தெரிவிக்கும்போது, கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னதாக தாம் பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால், இதுவரை கொல்லப்பட்ட குறைந்தது 7 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் போல் நீங்கள் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அச்சுருத்தப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
கடிதத்தின் தமிழாக்கம் கீழே,
கெளரவ சபாநாயகர் அவர்களுக்கு,
கிழக்கின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணாவால் விடுக்கப்பட்டிருக்கும் கொலைப்பயமுருத்தல்
கடந்த ஞாயிறு, கார்த்திகை 19 அன்று மட்டக்களப்பு அம்பாறை, திருமலை மாவட்டங்களின் தமிழரசுக் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு கருணா துணைப்படையின் முக்கியஸ்த்தரான குனானன் என்பவரிடமிருந்து தொலைபேசிமூலமான கொலைப்பயமுருத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் நாம் எமது பதவிகளை ராஜினாமாச் செய்யவில்லையென்றால் நிச்சயம் கொல்லப்படுவீர்கள் என்று அவர் எமக்கு தெரிவித்திருக்கிறார்.
தன்னை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் மட்டக்களப்பு அரசியல்த்துறைப் பணியகத்திலிருந்து பேசும் குணானன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் கார்த்திகை 27 ஆம் திகதிக்கு முன்னர் பதவி விலகவில்லையென்றால், இறந்துபோன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் "மாமனிதர்" விருதிற்கு உரித்துடையவர்கள் ஆவீர்கள் என்று மிரட்டினார். எமது தலைவரான கருணா அம்மாணின் கட்டளையின்பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் எம்மிடம் கூறினார்.
இதுவரை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட கொலைகளை அடிப்படியாகக் கொண்டு, எம்மீது தற்போது விடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கொலை எச்சரிக்கையினை நீங்கள் மிகுந்த கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசேப் பராரசிங்கமும், நடராஜா ரவிராஜும் இதே குழுவினரால் எம்மைப்போன்றே கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நாட்களில் கொல்லப்பட்டார்கள் என்பதனையும் தங்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவருகிறோம்.
எம்மீதான இந்த கொலை எச்சரிக்கைகள் எமது மக்களுக்கான சேவையினை நாம் திறம்படச் செய்வதைத் தடுத்துக்கும் நோக்கிலேயே விடுக்கப்படுகின்றன என்பதனை தாங்கள் அறிவீர்கள். ஆகவே இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் நலனில் அக்கறையும், பொறுப்பும் கொண்ட நீங்கள் எம்மீது விடுக்கப்பட்டிருக்கும் இக்கொலை எச்சரிக்கையினை கடந்து எமது மக்களுக்கு நாம் சேவை செய்வதற்கு ஏதுவாக உங்கள் அதிகாரத்தினைப் பாவித்து எமக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தித் தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
நன்றி.
த. கனகசபை (மட்டக்களப்பு), தங்கேஸ்வரி கதிரமன் (மட்டக்களப்பு), ச. ஜெயநந்தமூர்த்தி (மட்டக்களப்பு), ப. அரியநேந்திரன் (மட்டக்களப்பு), க. பத்மநாதன் (அம்பாறை), ச. சந்திரநேரு (தேசியப்பட்டியல்).