துரோகத்தின் நாட்காட்டி : நாள் 10, புரட்டாதி 2008
மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த பிள்ளையான் கொலைக்குழு
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்புப் பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த இரு பாடசாலை மாணவர்கள் மீது தமது அலுவலகத்தின் முன்னால் நின்று பிள்ளையான் கொலைக்குழுவினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருமாணவர் அவ்விடத்திலேயே உயிரிழக்க, மற்றையவர் கடுமையான காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கொல்லப்பட்ட மாணவரின் பெயர் முருகப்பு கேதீஸ் என்பதுடன் காயப்பட்டவரின் பெயர் அல்லிராஜ் கமல்ராஜ் என்றும் தெரியவந்திருக்கிறது.
கேதீஸ் சாதாரண தரப் பரீட்சையில் தேற்றிவிட்டு மேசனாக தொழில்பார்த்துவந்தார் என்றும், மற்றையவர் இவ்வருடம் அப்பரீட்சைக்குத் தயார்ப்படுத்திவந்தார் என்றும் உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆலையடிவேம்பு முருகன் கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே இம்மாணவர்கள்மீது பிள்ளையான் கொலைக்குழு தாக்குதலினை நடத்தியிருக்கிறதென்று தெரியவருகிறது