துரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2010
துணை ராணுவக் குழுக்கள் மற்றும் இலங்கை ராணுவத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க கொமிஷனிடம் முறையிட்ட மட்டக்களப்பு மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் கொலைக்குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு போன்றவை இம்மாவட்டத்தில் மேற்கொண்டுவரும் ஆட்கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் என்பன பற்றி பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட கண்துடைப்பு அமைப்பான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க கொமிஷனிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மட்டுமே குறைந்தது 490 கடத்தல்கள் , காணாமற்போதல்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய முறைப்பாட்டினை இந்தக் கொமிஷனிடம் செங்கலடியில் வைத்து மக்கள் கையளித்தனர்.
இதேவேளை இந்த விசாரணைகளை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் மட்டுமே தம்மால் விசாரிக்கமுடியும் என்று இந்த கண்துடைப்பு அமைப்பு பிடிவாதமாக மறுத்துவருவதென்பது, இனக்கொலையொன்றினைத் திட்டமிட்டு மறைக்கும் செயலே என்று காணமலாக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர்.
துணைராணுவக் குழுக்களின் உதயத்தின்பிறகு மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் பற்றியும், காணாமற்போதல்கள் பற்றியும் விசாரிக்க மறுக்கும் இந்த குழு, பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ராணுவத்தின் தேவைக்காக கருணாவும், பிள்ளையானும் கடத்திச் சென்றதைப் பற்றி விசாரிக்க மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இக்குழுவின் முன்னால் சாட்சியமளித்த சாட்சிகள், தம்மை ராணுவப் புல்நாய்வுப்பிரிவு என்று அடையாளம் காட்டிக்கொண்டு ஆட்களைக் கைதுசெய்யும் நபர்கள் கைதுசெய்யப்பட்டவர்களை அருகிலிருக்கும் பொலீஸ் நிலையத்திற்குக் கொண்டுசென்று விடுதலை செய்தபின்னர், துணைராணுவக்குழுக்கள் அன்றிரவே வந்து அதே இளைஞர்களைக் கடத்திச் செல்வதாக சாட்சியமளித்தனர்.
வேறொரு சாட்சி இதுபற்றிக் கூறுகையில் ராணுவப் புலநாய்வுத்துறை என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள் பல லட்சம் ரூபாய்களைத் தந்தால் உங்களது பிள்ளைகளை விடுவிப்போம் என்றோ அல்லது கடத்தியவர்கள் பற்றிய தகவல்களைத் தருவோம் என்றோ கூறி மக்களிடம் கப்பம் அறவிடுவதாகவும் தெரிவித்தனர்.
துணைராணுவக் குழுக்களான கருணாவும் பிள்ளையானும் கிரான், வாழைச்சேனை, வந்தாறுமூலை மற்றும் வாகரை பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளைக் கடத்திச் சென்றுள்ளதாகவும், இவ்வாறு கடத்திசெல்;ல்ப்படுபவர்கள் பற்றி முறைப்பாடு செய்தால் குடும்பத்தில் மீதமுள்ளோரையும் கடத்துவோம் என்று மிரட்டியதாகவும் சாட்சி சொல்லப்பட்டிருக்கிரது.
ராணுவப் புலநாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் கருணா மற்றும் பிள்ளையான் கொலைக் குழுக்களினால் மயிலந்தனை, புல்லுமலை, தோணித்தாட்டமடு, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, வாகரை ஆகிய மட்டக்களப்பு மாவட்ட கிராமங்களில் இருந்தும், திராய்க்கேணி, உடும்பன்குளம், சின்னவத்தை, கண்ணபுரம் கொலனி 35, கரவாக்கு, வீரமுனை மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய அம்பாறை மாவட்டக் கிராமங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் இனவழிப்பு அரசாங்கத்தின் கட்டளையின்படி கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.