கருணாவைப் பாவித்து ஊடகவியலாளர்களுக்குக் கொலைப்பயமுறுத்தல் விடுத்த கோத்தா
விக்கிலீக்ஸில் வெளிவந்த செய்தி : செய்தி அனுப்பப்பட்ட நாள், மே 18, 2007. அனுப்பியவர் அமெரிக்கத் தூதர் ரொபேட் ஓ பிளேக்
"கருணாவுக்கு தாம் ஆதரவளிக்கவில்லையென்று அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும் கூட, கடந்தமாதம் 16 ஆம் திகதி அஸோஸியேட்டட் பிரஸ் அமைப்பின் தென்னாசிய நிருபர் மத்தியூ ரொசென்பேர்க்கிற்கு அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தா வழங்கிய செவ்வியின் ஒலிவடிவம் கிடைக்கப்பெற்றது. அச்செவ்வியில் கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று ராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை வானளாவப் புகழ்ந்த கோத்தாபய, கருணாவின் உதவியின் மூலம் ராணுவத்திற்குக் கிடைத்த நண்மைகள் , வெற்றிகள் பற்றிப் பெருமையாகப் பேசினார்" என்று வோஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில் ரொபேட் பிளேக் குறிப்பிட்டிருக்கிறார்.
கோத்தாவும் கருணாவும்
விக்கிலீக்ஸில் வெளிவந்த இந்தச் செய்திக்குறிப்பை கொழும்பு டெலிகிராப் வெளியிட்டிருக்கின்றது. "உச்ச பட்ச ரகசியம்" என்று குறிப்பிடப்பட்டு வெளிவந்திருக்கும் இந்த செய்திக்குறிப்பில் கருணா தலைமையிலான துணைராணுவக் கொலைக்குவின் நடவடிக்கைகள் பற்றி அது விளக்குகிறது. இச்செய்திக் குறிப்பு அன்றைய தூதுவர் ரொபேட் பிளேக்கினால் மே மாதம் 18 ஆம் திகதி, 2007 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
அதேவேளை, கடந்த சித்திரை மாதம் 16 ஆம் திகதி டெயிலி மிரர் பத்திரிக்கையின் ஆசிரியர் சம்பிக்க லியனாராச்சி அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, வாகரையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் முகம்கொடுத்துவரும் இன்னல்கள் பற்றிய எழுதியதற்காக அவரையும், அச்செய்தியைச் சேகரித்து வழங்கிய நிருபரையும் (விபச்சாரி என்று விழித்து) "கருணாவைக் கொண்டு கொல்வேன்" என்று மிரட்டியிருக்கிறார்.
இதனையடுத்து சம்பிக்க லியனராச்சி கருணாவைத் தொடர்புகொண்டு இதுபற்றிப் பேசியபோது, "நீங்கள் கவலைப்படவேண்டாம், நான் உங்களைக் கொல்லப்போவதில்லை, கோத்தா சும்மாதான் சொல்கிறார்" என்று பதிலளித்திருக்கிறார்.
ரொபேட் பிளேக்கினால் வோஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட முழுச் செய்திக்குறிப்பின் விபரம் கீழே:
"அரசாங்கத்தின் உதவியுடன் கருணா துணைராணுவக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் கடந்தவருடத்தில் மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. கருணாவைக் கொண்டும், டக்கிளஸைக் கொண்டும் புலிகளுக்கு ஆதரவானவர்களையும், அனுதாபிகளையும் கொன்றுவரும் அரச ராணுவம் பழியினை இலகுவாக இக்கொலைக் குழுக்கள் மீது போட்டுவிட்டுத் தப்பிவிடுகிறது".
"இந்த துணைராணுவக் கொலைக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பில்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் அரசாங்கம் கண்துடைப்பிற்காக கடத்தல்களையும் காணாமற்போதல்களையும் விசாரிக்க தனிநபர் விசாரணைக் கமிஷன் ஒன்றினையும் நிறுவப்போவதாகக் கூறிவருகிறது. ஆனால், இந்த முயற்சிகள் எல்லாம், வெளிநாட்டில் சரிந்திருக்கும் தனது பெயரினை மீள கட்டியெழுப்பவே அது செய்கிறதென்பதும், உள்நாட்டில் உண்மையாகவே மனிதவுரிமை மீறல்களை அடக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லையென்பதும் தெளிவானது".
"கொழும்பிற்கு வெளியே இந்த துணைராணுவக் குழுக்களால் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல்கள், பிள்ளைகளைக் கடத்துதல், சிறுவர்களைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கப்பம் அறவிடுதல் ஆகிய விடயங்கள் அரசின் ஆசீர்வாதத்துடன் தொடர்ச்சியாக நடைபெற்றே வருகின்றன".
"பெரும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் ராஜபக்ஷேவின் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட துணைராணுவக் குழுக்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை முற்றாக நிறுத்தியிருப்பதோடு, கருணா மற்றும் டக்கிளஸ் ஆகிய துணைராணுவக் குழுக்கள் நேரடியாகவே மக்களைக் கடத்திச் சென்று கப்பம் அறவிடுவதை ஊக்குவித்து வருவது தெரிகிறது".
"இந்த துணைராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான நெருக்கம் பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு உள்ளூர் தொடர்புகள் மூலம் மேலும் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.