மயக்கமுற்று வீழ்ந்திருந்த சிவராமை அருகிலிருந்து சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட கருணா !
தமிழினத்திற்கெதிராக ஒரு மட்டக்களப்புத் தமிழனால் இழைக்கப்பட்ட துரோகம் என்று கருணாவின் செயலை சிவராம் கடுமையாக விமர்சித்து வந்தார். கருணாவுடன் நட்பாக இருந்தகாலத்தில், புலிகளின் கட்டமைப்பிற்குள்ளேயே மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தனியதிகாரங்களை புலிகளின் தலைமையுடன் பேசிப் பெற்றுக்கொள்ளுமாறு சிவராம் ஆலோசனை வழங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளிடமிருந்து கருணா பிரிந்துசென்று தனியாக இயங்குவதைக் கடுமையாக எதிர்த்துவந்த சிவராம், புலிகளின் பிளவானது தமிழ்த்தேசியத்தினைப் பலவீனப்படுத்தும் என்று அஞ்சினார். சிவராம், புலிகள் ஒரு அமைப்பாக இருப்பதையே விரும்பியிருந்தார். அதனாலேயே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று இயங்குவதாகக் தெரிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதானாலேயே, கருணாவுக்கு எதிராகவும், புலிகளின் தலைமையினை ஆதரித்தும் தன்னை வெளிப்படுத்திவந்தார் சிவராம்.
கருணாவை எதிர்த்து நின்ற சிவராம்
கருணாவின் பிரிவின்போது பெரும்பாலான கிழக்குவாசிகள் அவரை நியாயப்படுத்தியபோது, சிவராம் தனியாளாக கருணாவின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார். தனது பிரிவிற்குக் காரணமாக பிரதேசவாதத்தினைக் கருணா கையிலெடுத்தபோது, கிழக்கின் மகனான சிவராம் கருணாவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், பிரதேசவாதம் என்பது கருணா தனது துரோகத்தினை நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் என்று நிறுவியதுடன், அதனைப் பொய்யென்றும் நிரூபித்தார்.
அத்துடன், புலிகளிடமிருந்து பிரிந்து தனித்துச் செயற்படுவதாகக் கருணா அறிவித்து 5 நாட்களில் கருணா தனது மனைவியின் பெயரிலும், மாமனாரின் பெயரிலும் சுமார் 25 மில்லியன்களை முதலீடாக வைத்து வியாபாரம் ஒன்றினை பங்குனி 8 ஆம் திகதி ஆரம்பித்ததை சிவராம் முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். மக்களிடமிருந்து போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தினை கருணா தனது சொந்த நலனுக்காக கையாடியதை சிவராம் வெளிப்படுத்தியபோது கருணாவினால் அதனை சகித்துக்கொள்ளமுடியவில்லை.
புலிகளின் நடவடிக்கையினையடுத்து, தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபோது, "போர்க்களத்தை விட்டோடிய ராவணன்" என்று சிவராம் கருணாவைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், "வாழைச்சேனையிலிருந்து துறைநீலாவணைக்கு என்னால் சுதந்திரமாகச் சென்றுவரமுடியும், எனக்கொரு பயமும் இல்லை " என்று கருணாவின் ஆதிக்கத்தை அவர் பொருட்படுத்தாமல் கருத்து வெளியிட்டு வந்தார். கருணாவினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று வந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்துவந்த சிவராம், "நான் கிழக்கைச் சார்ந்தவன், என்னை எவரும் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது, நான் இங்கேதான் இருப்பேன், கருணாவால் முடிந்தால் வந்து பார்க்கட்டும்" என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். மேலும், கொட்டாவைப் பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையின் பாதுகாப்பு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் எண்மரைப் புலிகளின் உளவாளிகள் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியதை பொலீஸார் அறிந்துகொள்ளுமுன்னமே சிவராம் புலிகளை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டது கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.
கிழக்கில் கருணாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, சிவராமை கருணா தனது ஜென்ம விரோதியாகவே பார்க்கத் தொடங்கியிருந்தான். சிவராமை தானே தனது கைகளால் கொல்வேன் என்றும் அவன் சபதமெடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கு அவன் விடுத்த கட்டளையின்படி, "அவனை கிழக்கில் வைத்து எதையும் செய்யவேண்டாம், அவன் என் கையால சாக வேணும்" என்று கூறப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வெளிநாடொன்றில் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, கருணா நாடு திரும்பியிருந்தான். தெற்கில் அரசாங்கத்தின் முற்றான பாதுகாப்பில் இருந்துகொண்டே கிழக்கில் தனது கொலைக்குழுவின் மூலம் நாசகார செயற்பாடுகளை அவன் தொடர்ந்துவந்தான். கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசு தொடர்ச்சியாக அறிவித்து வந்தபோதும், கருணாவின் நலன்களைக் கவனிக்கவென்று ராணுவ புலநாய்வுத்துறையிற்குள் சிறப்புப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டது.
சிவராமைக் கொழும்பில் கொல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு தனது எஜமானர்களான ராணுவப் புலநாய்வுத்துறையினரை கருணா தொடர்ச்சியாக நச்சரித்து வந்தபோதும், அவர்கள் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொழும்பில் சுதந்திரமாக, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சிவராம் நடமாடியபொழுது, அவரைக் கொல்வதற்கான பல சந்தர்ப்பங்களை கருணா இதனால் இழக்கவேண்டி வந்தது. ஆனால், கருணாவால் தான் கொல்லப்படலாம் என்பதை சிவராம் அறிந்தே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சிவராமைக் கொல்வதற்குக் கருணா காத்திருந்த சந்தர்ப்பம் பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்ணத்தின் கடத்தலோடு வந்து சேர்ந்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் ஜெயரட்ணம் மற்றும் இன்னும் சில அரச புலநாய்வாளர்களின் இழப்பு அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக ஜே வி பி யின் விமல் வீரவன்ச மற்றும் இனவாதப் பிக்குகள் இதுதொடர்பாக அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்தத் தொடங்கியிருந்தனர்.
ஆகவே, தமது புலநாய்வு உத்தியோகத்தர்கள் கடத்தப்படுவதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் சிங்கள இனவாதிகளால் புலியென்று முத்திரை குத்தப்பட்ட, புலிகளுக்குச் சார்பானபத்திரிக்கையாளரான சிவராமைக் கடத்திக் கொல்வதென்று அரச ராணுவப் புலநாய்வுத்துறை முடிவெடுத்தது. இப்படுகொலையில் தமது உறுப்பினர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை விரும்பாத ராணுவப் புலநாய்வுத்துறை, கருணாவை இக்கொலைக்குப் பொறுப்பாக நியமித்ததுடன், இக்கொலைக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளை அரச ராணுவப் புலநாய்வுத்துறையூடாக வழங்குவதென்று உறுதிவழங்கியது.
இத்தருணத்திற்காகக் காத்திருந்த கருணா, அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அதாவது, சிவராம் உயிருடன் தனக்குக் கிடைக்கவேண்டும் , தனது கையாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்பதே அது. அதனை ஏற்றுக்கொண்ட புலநாய்வுத்துறை, இனியபாரதி, பெளசர் அடங்கலாக இன்னும் இரு சிங்கள உத்தியோகத்தர்களைக் கடத்தல் நடவடிக்கைக்குப் பாவித்தது.
அதன்படி, தமிழில் பேசிக்கொண்டு பம்பலப்பிட்டியில் நடமாடிய ஆயுததாரிகள் இனியபாரதியும், பெளசரும் என்பது நிரூபணமாகிறது. இரு ராணுவப் புலநாய்வுத்துறை உறுப்பினர்களின் உதவியுடன் சிவராமை அன்றிரவு கடத்திச் சென்ற இனியபாரதியும், பெளசரும் அவரை கருணா கொழும்பில் ஒளிந்திருந்த இடத்திற்கு இழுத்துச்செல்ல, அங்கே கருணா சிவராமை அருகில் நின்று சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான்.