இந்தியாவும் தமிழீழ விடுதலைக்கான போராட்டமும்
துணைப்படைகளுக்கான ஆட்சேர்ப்பினை இந்தியாவில் மேற்கொண்டுவரும் இந்திய புலநாய்வுத்துறை றோ
காலம் : ஆனி 2006
மூலம் : தமிழ்நேசன் மற்றும் தமிழ்நெட்
"நாடுகளுக்கிடையேயான உறவுகள் தார்மீக அடிப்படையில் உருவாவதில்லை, மாறாக, தார்மீகத்தினை எதிர்த்தே உருவாக்கப்பட்டு தொடரப்பட்டு வருகின்றன" - ஜோதிந்திரா நாத் டிக்ஸீத், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் 1985 - 1989, வெளியுறவுச் செயலாளர் 1991 - 1994, இந்தியப் பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2004 - 2005.
இந்தியாவின் முன்னணிச் செய்திச் சேவைகளில் ஒன்று இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பொன்றில் இலங்கை ராணுவத்தின் துணைப்படையாக இயங்கும் கருணா குழு தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடையே தமக்கான புதிய உறுப்பினர்களைத் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. பெருந்தொகைப் பணத்தினை மாதாந்தக் கொடுப்பனவாக வழங்குவதாகக் கூறியே இந்த ஆட்சேர்ப்பில் கருணா குழு ஈடுபட்டு வருகிறது.
இலங்கையில் ராணுவத் துணைப்படையான கருணா குழுவின் கீழ் இயங்கிவரும் ஈழ ஜனநாயகத் தேசிய விடுதலை முன்னணி எனப்படும் அமைப்பே கருணா குழு சார்பாக தமிழகத்தில் ஈழத்தமிழர் அகதிமுகாம்களில் இருந்தும் அநாதை விடுதிகளில் இருந்தும் கருணா குழுவுக்கான உறுப்பினர்களைச் சேர்க்க முயன்றுவருவதாக உள்ளூர் செய்தியாளர்களை மேற்கோள் காட்டி இந்த செய்திச்சேவை செய்திவெளியிட்டிருக்கிறது.
இலங்கை ராணுவத் துணைக்குழுவினருக்கான இந்த ஆட்சேர்ப்பு இந்திய வெளியக புலநாய்வுத்துறையான றோவின் அனுசரணையுடனும், ஆசீர்வாதத்துடனுமே நடைபெற்றுவருவதாக இந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஈ என் டி எல் எப் அமைப்பின் தலைவரான பரந்த ராஜனை பயன்படுத்தி தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களிலிருந்து கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பினை றோ மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
கருணா குழுவில் இணைபவர்களுக்கு உடனடிக் கொடுப்பனவாக 10,000 ரூபாய்களும், அவர்கள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் பரந்தன் ராஜன் எனும் துணை ராணுவக் குழுவின் தலைவர் தனது கண்காணிப்பின் கீழ் பெங்களூர் பகுதியில் அநாதை விடுதிகளை நடத்திவருவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது அநாதை விடுதியிலிருந்து சிறுவர்களை இலங்கையில் போர் நடவடிக்கைகளில் பாவித்தார் என்கிற பலமான குற்றச்சாட்டு அவருக்கெதிராகச் சுமத்தப்பட்டிருக்கிறதென்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கெதிரான பல துணைராணுவக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படும் பரந்தன் ராஜன், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டே வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் செயற்பட்டு வந்த பரந்தன் ராஜன், இந்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்றகாலப்பகுதியில்,புளொட்டிலிருந்து வெளியேறி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய துணைராணுவக் குழுக்களின் உதிரிகளை இணைத்துக்கொண்டு "த்ரீ ஸ்டார்" எனும் துணைராணுவப் படையினை உருவாக்கிச் செயற்பட்டு வந்தார்.
1987 ஆம் ஆண்டு, இந்தியப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலப்பகுதியில் இந்திய உளவுத்துறையுடன் நெருங்கிச் செயற்பட்ட பரந்தன் ராஜன், அவர்களின் உதவியுடனேயே தனது துணைராணுவப்படையான ஈ என் டி எல் எப் அமைப்பினை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. 1990 இல் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போது, ராஜனும் அவரது பல துணைராணுவக் குழு உறுப்பினர்களும் இந்தியாவுக்குத் தமது தளத்தினை மாற்றிக்கொண்டார்கள். பின்னாட்களில் பரந்தன் ராஜன் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இந்திய. இலங்கை அரச புலநாய்வுத்துறைகளின் சார்பாகச் செயற்பட்டு வந்தார்.
பரந்தன் ராஜன் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி எனும் துணைராணுவக் குழுவினை அமைத்துக்கொண்டபோது, இந்திய உளவுத்துறையின் பெரிதும் விரும்பப்பட்ட ஈழத்தமிழராக மாறினார். கருணா குழுவின் ஆதரவாளர்களின் கருத்துப்படி, கருணாவையும் பரந்த ராஜனையும் ஒன்றாக இயங்கும்படி பணித்தது இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பே என்று கூறியிருக்கிறார்கள்.
பரந்தன் ராஜன் துணை ராணுவக் குழுவொன்றை வழிநடத்தியவாறே இந்தியாவில் நெடுநாள் தங்கியிருப்பதும், தங்குதடையின்றி இந்தியாவின் எப்பகுதிக்கும் சென்றுவருவதும், புலிகளுக்கெதிராகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதும் கூறும் ஒருவிடயம் அவர் இந்திய உளவுத்துறையினரால் இயக்கப்படும் ஒரு ஆயுததாரி என்பதுதான் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது. 2004 இல் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை ஜெயலலிதா தேடித் தேடி வேட்டையாடியபோது பரந்தன் ராஜனும் தவறுதலாக கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், கைதுசெய்யப்பட்ட சில மணிநேரத்திற்குள்ளேயே றோ வின் தலையீட்டினால் பரந்தன் ராஜன் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று அச்செய்தி மேலும் குறிப்பிடுகிறது.
2005 இல் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பரந்தன் ராஜன் மீளவும் இந்தியாவில் செயற்படுவதற்கும், அலுவலகங்களை அமைத்து இயங்குவதற்கும், ஆட்களைச் சேர்ப்பதற்கும் அவருக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை பெங்களூரிலிருந்து செயற்பட்ட ராஜன், 2006 இல் தி மு க அவின் ஆட்சியின் பின்னர் தமிழக அரசின் ஆதரவுடனும்,இந்திய புலநாய்வுத்துறையின் ஆசீருடனும் மீண்டும் சென்னையிலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார். தமிழகத்தில் பரந்தன் ராஜனின் இருப்பிடம் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரிக்கும் தமிழகக் காவல்த்துறை "அவர் ஒரிஸாவில் எங்காவது இருக்கலாம்" என்று மழுப்பலாகப் பதிலளிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ஆனால், தன்னை அடையாளம் காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தமிழக காவல்த்துறை அதிகாரியொருவர், "ராஜன் தற்போது கருணாவுடன் மட்டக்களப்பில் தங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறியிருக்கிறார்.
மட்டக்களப்பு தீவுச்சேனைப்பகுதியில் அமைந்திருந்த கருணா - ஈ என் டி எல் எப் அமைப்பின் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின்போது
ஈ என் டி எல் எப் அமைப்பினை புலிகளுக்கெதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக றோ பாவிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ராஜனின் செயற்பாடுகளை வழிநடத்திவரும் றோ, அவரையும் கருணாவையும் இணைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கு இருக்கும் ஆதரவினைக் குறைத்துவிட முயல்வதாக இச்செய்தி மேலும் கூறுகிறது.
சித்திரை 2004 இல், கருணாவின் ராணுவப் பலம் புலிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து பெருமளவு தமிழ் துணை ராணுவக் குழு உறுப்பினர்களை இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை ராணுவம் வரவழைத்திருக்கிறது. புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தவென தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈ என் டி எல் எப் கூலிகளை ஒருவருட நுழைவு அனுமதியுடன் சுழற்சி முறையில் அழைத்துவரும் இலங்கை அரசு, புலிகளுக்கும் தமிழருக்கும் எதிரான நாசகார நடவடிக்கைகளில் வடக்குக் கிழக்கில் ஈடுபடுத்தி வருகிறது.
இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே ஆரம்பித்திருக்கும் சிறியளவிலான இப்போர் நடவடிக்கைகளால் குறைந்தது 3000 தமிழர்கள் தமிழகத்தில் தற்போது தஞ்சமடைந்திருப்பதாகவும் இச்செய்து கூறுகிறது.