சரணடைந்த ஞானதீபன் மற்றும் புகழ்தேவனின் கருத்துப்படி, கருணா குழுவினரின் முகாம்கள் தீவுச்சேனையிலும் திருகோணமடுவிலும் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. புகழ்தேவன் மேலும் கூறுகையில் தானும் இன்னும் 22 உறுப்பினர்களும், தீவுச்சேனையிலிருந்து ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான அம்பாறை, மாந்தோட்டம் பகுதிக்கு ராணுவப் பாதுகாப்பு நிலையம் ஒன்றிற்கு மாற்றப்பட்டதாகவும், அங்கிருந்தே முஸ்லீம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை தமிழ்மக்கள் எனும் போர்வையில் நடத்தும்படி பணிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஆரம்பத்தில் தமது இருப்பினை எதிர்த்த அப்பகுதிச் சிங்களக் குடியேற்றவாசிகள், ஒரு பெளத்த பிக்குவும் ராணுவ அதிகாரியொருவரும் தலையிட்டதையடுத்து, இன்னொரு பாதுகாப்பான வீடொன்றிற்குள் தாம் முகாம் அமைத்துக்கொள்ள இணங்கியதாக புகழ்தேவன் மேலும் கூறினார். மேலும் அமைச்சர் அதாவுள்ளாவின் நெருங்கிய தோழரான பெளஸர் என்பவர் இனியபாரதியுடன் தொடர்ச்சியாக செயற்பட்டுவந்ததாகவும், அவர்மூலமாகவே அக்கரைப்பற்று பச்சிலைப்பள்ளிப் பகுதியில் தமக்கான ரகசிய முகாமொன்று அமைக்கப்பட்டதாகவும், தாம் தொடர்ச்சியாக அமைச்சர் அதாவுள்ளவுடனும் இனியபாரதியுடனும் தொடர்பிலிருக்க பெளஸரே தொலைபேசி பரிவர்த்தனையினை ஒழுங்குசெய்து கொடுத்திருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
"முஸ்லீம்களுக்கும் புலிகளுக்கும் இடையே பாரிய பிளவினையும், அதன்மூலம் எதிர்ப்பினையும் உருவாக்குவதிலேயே கருணா குழுவின் இருப்புத் தங்கியிருக்கின்றது" என்று இனியபாரதி தொடர்ச்சியாகத் தம்மிடம் கூறிவந்ததாகவும், அதன் அடிப்படியிலேயே தாம் இயக்கப்பட்டதாகவும் ஞானதீபன் கூறினார். டக்கிளஸ் தேவானந்தாவுடன் மிக நெருங்கிச் செயற்பட்டுவந்த இனியபாரதி, அவரிடமிருந்து மடிக் கணிணி ஒன்றையும் பரிசாகப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
சரணடைந்த கருணா குழு உறுப்பினர்கள் மேலும் கூறுகையில் மட்டக்களப்புப் பத்திரிக்கையாளர் நடேசனை இனியபாரதியே சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தனர். அண்மையில் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் தீவுச்சேனையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், கருணா குழுவின் மங்களன் மாஸ்ட்டருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தீவுச்சேனைப் பகுதியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலும் கருணா குழு செயற்படுவதென்று இதன்போது முடிவெடுக்கப்பட்டதாகவும் மேலும் கூறினர்.
கருணா குழுவில் இணைந்து செயற்பட்டு வந்த இவ்விருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், சிறிது காலத்தின்பின்னர் தமது செய்கைகள் குறித்து மனம் வருந்தி, கருணா குழுவினரை விட்டு வெளியேறுவதற்குச் சந்தர்ப்பம் பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. "நாம் தப்பியோடுவதென்று முடிவெடுத்திருந்தோம், அதற்கான தக்க தருணத்திற்காகப் பார்த்திருந்த வேளை, கடந்த திங்கட்கிழமை எம்மையும் இன்னும் சிலரையும் இனியபாரதி யுத்த சூனியப் பிரதேசம் ஒன்றிற்கு நடவடிக்கை ஒன்றிற்காக அனுப்பிவைத்தவேளை, எம்முடன் வந்திருந்தவர்களைக் கொன்றுவிட்டு நாம் தப்பி வந்தோம்" என்று கூறினர்.
அவர்கள் தொடர்ந்தும் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், கடந்த ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி வவுணதீவுப்பகுதியில் புலிகள் மீது தாக்குதல நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு பற்பொடி ராணுவ முகாமிற்கு பவள் கவச வாகனங்களில் கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் புலிகளின் எல்லைப் பகுதிகளுக்கு அண்மையாக இறக்கிவிடப்பட்டதாகவும் கூறினர். தமது இயற்பெயர்கள் துரைசிங்கம் சந்திரகுமார் (புகழ்தேவன்) மற்றும் சாமித்தம்பி அருண்குமார் (ஞானதீபன்) என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
புலிகளிடம் சரணடைந்தமைக்கான தண்டனையாக சந்திரகுமாரின் இரு சகோதரிகளை கருணா குழு கடந்த புதன்கிழமையன்று சுட்டுக் கொன்றது குறிப்பிடத் தக்கது.
கொல்லப்பட்ட இந்த இரு சகோதரிகளுக்கும் "தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எனும் கெளரவம் புலிகளால் வழங்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.