"தோற்றிடேல், மீறித்
தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"
-நன்னிச் சோழன்
எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!
எல்லா(hello)...
வணக்கம் நண்பர்களே!
மேற்கண்ட கேள்விக்கான விடை ஆம் என்பதே.. ஈழத்தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ஓம்.
இன்று நாம் பார்க்கப்போவது புலிகளால் சமர்க்களங்களில் அணியப்பட்ட சடாய்மாக்கள்(Ghillie suit) பற்றியே. இந்த சடாய்மா என்பது களத்தில் வீரர்களை உருமறைப்பு செய்துகொள்ள உதவும். புலிகள் இதை வெவ்வேறு வடிவங்களில் வைத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாக்குத் தொப்பி - Gunny cap
முதலில் அவர்கள் உருமறைப்பிற்காகப் பயன்படுத்திய சாக்குத் தொப்பி என்னும் ஒருவகையான தொப்பி பற்றிப் பார்ப்போம். இதை ஈழ விடுதலைப் போர்க்காலத்தில் சாக்குக் தொப்பி என்று அழைத்தார்கள்.
இது கோணிப்பையில் இருந்து உருவான ஓர் தொப்பியாகும். கோணிப்பை(த.நா.வழ.) என்ற சாக்கு(ஈழ.வழ.) எந்நிறத்தில் உள்ளதோ அந்நிறத்தில் தான் இதுவும் இருக்கும். உதாரணத்திற்கு, கோணிப்பை வெளிறின கபில(brown) நிறமாயிருப்பின் இதுவும் வெளிறின கபில நிறத்தில் இருக்கும்; சாக்கு கடுங்கபில(dark brown) நிறமாயிருப்பின் இதுவும் கடுங்கபில நிறத்தில் இருக்கும். அந்தச் சாக்கினை பச்சை வண்ணத்தில் தோய்ப்பதால் தொப்பிக்கு பச்சை வண்ணம் கிடைக்கும். சில வேளையில் கபில & பச்சை நிறம் கலந்ததாகவும் இருக்கும்.
இத்தொப்பியானது எந்தவொரு படையணிக்கும் உரித்தானது அல்ல; அனைவருக்கும் பொதுவானது. சமரில் மட்டுமே அணியப்படுவது. சமர்க்களத்தில் இது தலையில் இருக்கின்ற வரைக்கும் எதிரி இவர்களிற்கு இலக்கு; இது இல்லையென்றால் எதிரிக்கு இவர்கள் இலக்கு.
இதில் குழைகள் செருகுவதற்கென்று குதைகள்(loop) இருக்கும் (மேலே படத்தில் காண்க). இது கன்னம் மற்றும் பிடரியினை முழுமையாகக் கவரும் (அகப்படுத்தி மறைக்கும்); ஆனால் முகத்தினைக் கவராது. இதை அணிந்தபின் இதன் விளிம்புக் கயிற்றால்(மேலே படத்தில் காண்க) இழுத்து நாடியின் கீழ்ப்பகுதியில் முடிச்சுப் போடுதல் வேண்டும். அப்பொழுதுதான் கீழே கழன்று விழாமல் இருக்கும்.
இது தலைப்பகுதிக்கான சிறந்த உருமறைப்பாக திகழ்ந்தாலும் இதற்கு சன்னத்தை(bullet) தகைக்கும்(proof) வலிமை(power) இல்லை
சில சாக்குத் தொப்பிகளில் கஞ்சல் போன்றவை எல்லாம் ஆயத்தமாக தைக்கப்பட்டே இருக்கும்.
சில சாக்குத் தொப்பிகளில் சிறு கண்ணுள்ள வலை போன்றவை எல்லாம் ஆயத்தமாக தைக்கப்பட்டே இருக்கும். இவ்வலைகளில் அவர்கட்குத் தேவையான குழைகளை செருகிக்கொள்ளலாம்.
'பச்சை நிறத்தில் தலை உருமறைப்பு வலை தெரிவதை நோக்கவும். இவ்வலையின் கண்கள் பெரிதாக உள்ளன.'
இவற்றினை புலிகள், அவர்களின் சுற்றுக்காவல் தொப்பி(patrol cap) மீதும் அணிவார்கள்.
4-ம் ஈழப்போரில், புலிகளால், பச்சை வரி அச்சிடப்பட்ட சாக்கு தொப்பிகள் அணியப்பட்டன. நன்கு உத்துப் பார்த்தீங்களானால் சாக்கு சிலும்பியிருப்பது தெரியும்.
'இவர் தன் கழுத்தில் சுத்தியிருப்பது பீ.கே தொடர் சன்னம் (7.62 x 54மி.மீ) '
சடாய்மா முக்காடு - Ghillie Hood
சடாய்மா - Ghillie
சடாய் = செழித்தல், அடர்ந்து கிளைத்தல்.
மா - துணி
சடாய்மா - அடர்ந்து கிளைத்த துணி
இது விடுதலைப்புலிகளின் பச்சை வரி நிறத்திலே ஆக்கப்பட்டது ஆகும். இது கன்னங்கள் இரண்டினையும் நன்கு கவரும். ஆனால் முகத்தினைக் கவராது; அது வெளிப்படும். இதை சாக்குத் தொப்பியை நாடியில் இழுத்து முடிச்சுப் போடுவது போலல்லாமல் பிணையொட்டி(velcro) கொண்டு ஒட்ட வேண்டும். இதை சமர்க்களத்தில் குறிசூட்டுநர்(sniper) மட்டுமல்லாமல் எல்லோரும் பொதுவாக அணிவார்கள்.
மேலே நான் கூறியிருந்த பிணையொட்டி(Velcro).
புலிகளின் சடாய்மா முக்காட்டில் 4 வகை உண்டு:
இலைமய சடாய்மா முக்காடு - Leafy ghillie hood
சிவையிலை சடாய்மா முக்காடு - Emblic leaf ghillie hood
ஊளான் சடாய்மா முக்காடு - Jackal ghillie hood
செத்தை சடாய்மா முக்காடு - Dry (grass, leaves) like ghillie hood
.
இலைமய சடாய்மா முக்காடு - Leafy Ghillie Hood
இது இலை வடிவில் இருக்கும்.
'மேலே இரண்டாம் படத்தில் இருப்பவர்கள் 'RPG Commando' என்று அழைக்கப்படும் விக்ரர் கவச எதிர்ப்பு படையினர்( Victor Anti-Armour troops) ஆவர்.'
கிட்டப் பார்வை:
2. சிவையிலை சடாய்மா முக்காடு - Emblic leaf ghillie hood
இது சிவை மர இலையின் வடிவுடையதாக இருக்கும்.
3. ஊளான் சடாய்மா முக்காடு - Jackal ghillie hood
இது ஊளானின் மயிர் போல இருக்கும்.
4. செத்தை சடாய்மா முக்காடு - Dry bush like ghillie hood
இது ஒரு செத்தையைப் போல மங்கிய நிறத்தில் கொச்சைகொச்சையாக இருக்கும்.
மேற்கண்ட படத்தில் பிணையொட்டிகள் மிகத் தெளிவாகத் தெரிவதைக் காணவும். மேலும், மேற்கண்ட படத்திலிருந்து நாமறிவது யாதெனில் பிணையொட்டிகள் கொண்ட துணியானது கிருதாவிலும் காதுமடலிற்கு பின்பக்கத்திலுமாக வந்து தாடையில் ஒட்டிக்கொள்ளும்படியாக முடிவடைகிறது என்பதாகும்.
குறிசூட்டுநர் உருமறைப்பு - Sniper Camouflage
'புலிகளின் தொடக்க கால சடாய்மா' | வீரன் குறிவைக்கப் பயன்படுத்துவது வின்செஸ்ரர் 70 குறிசூட்டுத் துமுக்கி'
இவர்கள் இருவரினதும் உடையினை நன்கு உத்து பார்க்கவும். அவர்களின் உடையிலே தோரணம் போலத் தொங்கத் தக்கதாக, உருமறைப்பிற்கு ஏற்ற துண்டுத் துணிகள் தைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதே நேரம் அருகில் இருக்கும் பொட்டுநரின்(Spotter) சாக்குத் தொப்பினையும் உற்றுப் பார்க்கவும். அதிலும் தோரணம் போலத் தொங்கத் தக்கதாக, உருமறைப்பிற்கு ஏற்ற துண்டுத் துணிகள் தைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதுவே புலிகளின் தொடக்க கால குறிசூட்டுநர் உருமறைப்பு ஆகும்.
ஒருவிதமான உருமறைப்பு
'படத்தை அண்மையாக்கிப் பார்க்கவும்'
இப்படிமத்தில் உந்துகணையினை தாணிப்பவரின்(Load) கையினையும் செலுத்துபவரின் முழங்காலினையும் கவனிக்கவும். அதில் சிறுவட்ட வடிவிலான சங்கிலியால் செய்யப்பட்ட வலை போன்ற ஓர் உடையினை அவரது ஆடைக்கு மேல் உடுத்துள்ளதைக் காணலாம். அதில் தோரணம் போலத் தொங்கத் தக்கதாக, உருமறைப்பிற்கு ஏற்ற துண்டுத் துணிகள் கொளுவப்பட்டிருப்பதைக் காணவும். இதுவும் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான உருமறைப்பே!
குறிசூட்டுநர் உருமறைப்பு வலை - Sniper Camouflage net
குறிசூட்டுநர் சடாய்மா - Sniper Ghillie
இவர்களின் சடாய்மாவின் நிறம் பச்சை வரியே. இதன் போர்க்கப்பட்டிருக்கும் துணி எதனால் ஆனது என்றால், பச்சை & கபில(brown) நிற சாக்கினால் ஆனது ஆகும். அதன் மேலே உருமறைப்பு வலை போர்க்கப்பட்டிருக்கும். அந்த வலையில் கண்ணிகளில் சருகுகள் தைக்கப்பட்டிருக்கும். இவை கழுத்தில் இருந்து பாதம் வரை கவரும். இவர்கள் தலைக்கு இலைமய தலைக்கவர்(leafy head cover) அணிந்திருப்பார்கள். இது முக்காட்டினைப் போலல்லாமல் முகப்பகுதிக்கு தோரணம் போல தொங்கும் துணிகள் வைத்து தைக்கப்பட்டிருக்கும். இவை மூச்சுவிட ஏதுவாக இருப்பதோடு சிறந்த உருமறைப்பையும் கொடுக்கின்றன. ஆனால் முக்காட்டினைப் போல முதுகெல்லாம் கவர் செய்யும். மேலும் இவர்கள் முகத்திற்கு கரி அல்லது பச்சை நிறத்தினைப் பூசியிருப்பார்கள்.
அதே போலவே அவர்களின் குறிசூட்டுத் துமுக்கியிலும்(Sniper Rifle) உருமறைப்பு வலை அணிவிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் கீழே உள்ள படங்கள் மற்றும் நிகழ்படத்தில் காணலாம்... என்னிடம் உள்ள குறிசுடுநர் படங்கள் இராப்பார்வையில் எடுக்கப்பட்டவை. ஆகையால் வண்ணப் படங்கள் இல்லை.
இலைமய தலைக்கவர்:
கிட்டப் பார்வை:
தூரப் பார்வை:
அவரின் உடல் மேல் போர்த்திருக்கும் உருமறைப்பு வலை(camouflage net)
குறிசூட்டுத் துமுக்கி - Sniper Rifle
இங்கேயுள்ள துமுக்கியின் பெயர்: திராகுனோவு(Dragunov).
அதற்கு உருமறைப்பு வலை அணிவிக்கப்பட்டுள்ளதை கீழ்க்கண்ட படத்தில் காண்க:
குறிசூட்டுநர் குறிவைக்கும் காட்சி
முழு உருவம்
தூரப் பார்வை:
கிட்டப் பார்வை:
வாசகர்களே, மேலே நான் கூறியிருந்தேன் அல்லவா, புலிகளின் குறிசூட்டுநர் ஓர் சாக்கினை தன்னைச் சுற்றி அணிந்திருப்பார் என்று.. இதோ அந்தச் சாக்கு இப்படித்தான் இருக்கும்.
'மயூரன் குறிசூட்டுப் பிரிவைச் சேர்ந்த ஒரு குறிசூட்டுநர் ஊடுருவி சுடும் காட்சி '
இவை மட்டுமல்லாது அவர்கள் போர்க்களத்தில் இலை குழைகளை ஒடித்து உருமறைப்பிற்காக தங்கள் சட்டையினுள்ளும் செருகிக் கொள்வார்கள்.
பிற்சேர்க்கை (30-1-2021)
சடாய்மா உடுப்பு(Ghillie suit) :-
இது புலிகளால் அணியப்பட்ட ஓர் முழுமையான 'சடாய்மா உடுப்பு' ஆகும். ஓர் சி.ம.ப(RGB)(46,45,43) என்னும் நிறம் உடைய ஓர் ஆடை(முழுக்காற் சட்டை, முழுக்கைச் சட்டை) மீது சடாய்மாவினை அணிந்துள்ளார். அச்சடாய்மாவானது அந்த ஆடையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு பாலை சடாய்மா உடுப்பு (Desert ghillie suit) போல இருக்கிறது. இந்த சடாய்மா சாக்கினாலும் சணல் போன்ற ஒன்றாலும் ஆனது ஆகும். துமுக்கிக்கும் அதே சி.ம.ப.(RGB) நிறமுடைய துணி சுற்றப்பட்டுள்ளதையும் காண்க.
குறிசூட்டுத் துமுக்கி(Sniper Rifle):-
இதுவும் குறிசூட்டுநர் போலவே மிகவும் உருமறைப்பு செய்யப்பட்டிருந்தது. மேலே உள்ள சுடுகலத்தை நோகினால் அது துணியால் சுற்றப்பட்டு சாதாரண உருமறைப்புச் செய்ப்பட்டுள்ளதை காணலாம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டிருப்பது முற்றிலுமாக உருமறைக்கப்பட்டிருப்பதை நோக்கவும்.
இத்துமுக்கியானது உருமறைப்பு வலைகளாலும், வலையின் கண்களில் பொருத்தப்பட்ட வரித்துணிகளாலும் உருமறைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
பிற்சேர்க்கை (23–6-2021)
இதுதான் புலிகளின் சடாய்மாக்களின் இறுதி வடிவம் ஆகும். இது நான்காம் ஈழப்போரின்போது மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதை நன்கு கவனிக்குக. இதன் சடாய்மாவானது இலைமய சடாய்மாவாகும். இதை உடல் மேல் ஒரு தொடுத்த ஆடைபோன்று அணியலாம். அதாவது மேற்சட்டையும் காற்சட்டையும் ஒன்றாக இணைந்திருப்பது போன்ற உடை இதுவாகும்.
இதன் கால் பகுதியில், காலினை நன்கு விரிப்பதற்கு ஏதுவாக இவ்வுடையின் கீழ்ப்பகுதியில் வெட்டுகள் உண்டு. இதனால் காலினை நன்கு விரிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. கைப்பகுதிக்கு தனியாக கை தைக்கப்பட்டுள்ளது. உட்புறம் கபில நிறத்தில் தெரிகிறது. எனவே சடாய்மாவானது ஒரு துணிமேல் தைக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.
'இம்ரான் பாண்டியன் படையணியின் புலிமகனொருவன் சடாய்மா உடையணிந்து கோல்ற் எம்16ஏ2 துமுக்கியுடன் பாய்கிறார்'
உசாத்துணை:
செ.சொ.பே.மு.
புலிகளால் வெளியிடப்பட்ட குறும் படம் மற்றும் நிழற்படங்கள்
10 Best Ghillie Suits For Hunting In 2019
படிமப்புரவு
Photography Unit of Liberation Tigers
Gettyimages.com - images Resources and Information.
நிதர்சனம்
rupabaakini
Vimeo | The world's only all-in-one video solution
YouTube
எரிமலை இதழ்
நிகழ்படம்
YouTube
ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்