தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், கருணாவின் நெருங்கிய அரசியல் ஆலோசகராகவும் இருக்கும் வீ ஆனந்தசங்கரி இத்தாக்குதல் குறித்துப் பேசும்போது, இது நிச்சயமாகப் புலிகளால் மமேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் என்று தான் உறுதியாகக் கூறியிருந்தார். அத்துடன், அரசும் ராணுவமும் கூறுவதுபோல, இது தமிழ் மக்கள் மீது சிங்களவர்களைக் கோபம் கொண்டு இனரீதியிலான வன்முறைகளைத் தூண்டிவிட்டு, சர்வதேச அனுதாபத்தினை உருவாக்கி தமது தனிநாட்டுக் கனவை நிறைவாக்க புலிகள் முயல்வதாகக் கடுமையாகச் சாடியிருந்தார். மேலும், 1983 ஆம் ஆண்டு தமிழர் மீது அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையினையும், இப்பேரூந்து மீதான தாக்குதலையும் ஒன்றாகக் கணிப்பிட்டு, 83' கலவரத்திற்கும் புலிகளே காரணம் என்றும், சர்வதேச அனுதாபத்தினைப் பெறுவதற்கே அப்பாவிச் சிங்கள ராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறியிருந்தார். ஆகவே, 83 ஆம் ஆண்டு, ஜே ஆர் ஜெயவர்த்தனாவினாலும், அவரது அமைச்சர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட தமிழர் மீதான படுகொலைகளை புலிகளே ஆரம்பித்துவைத்தார்கள் என்று கூறும் எவருக்கும், நாட்டில் நடக்கும் எந்த இனரீதியிலான வன்முறைக்கும் புலிகளே காரணம் என்று கூறுவது அவ்வளவு கடிணமாக இருக்கப்போவதில்லை. இன்று ஆனந்தசங்கரி செய்வதும் அதைத்தான்.
ஆகவே, இங்கு ஒரு இனரீதியிலான பழிவாங்கும் வன்முறைகளை நடக்கின்றனவோ இல்லையோ, இலங்கை அரசாங்கமே இந்த சம்பவத்தின்மூலம் பாரிய நலன்களைச் சம்பாதித்திருக்கிறது. ஏனென்றால், இவர்கள் கூறுவது போல தமிழர் மீதான இனரீதியிலான வன்முறைகள் நிகழ்ந்திருந்தால், அதற்குப் புலிகளே முழு பொறுப்பாக இருக்கவேண்டும். அப்படி வன்முறைகள் நடக்கவில்லையென்றால்க்கூட, அதனைத் தடுத்து சமாதானத்தினை நிலைநாட்டிய பெருமை அரசுக்கே சேரும். அதுமட்டுமல்லாமல், புலிகளின் வெறுப்பேற்றும் பேரூந்து மீதான தாக்குதலின்பின்னரும் கூட, நாட்டில் அமைதியினை நிலைநாட்டிய அரசு மீது சர்வதேசத்தில் நம்பிக்கை ஏற்படுவதோடு, அப்படியான அரசின் கீழ் தமிழர்கள் அமைதியாகவும், பிரிவினை கோராமலும் வாழ முடியும் என்னும் நிலைப்பாட்டிற்கு சர்வதேசம் வரும் சந்தர்ப்பமும் இருக்கிறது.
சரி, இலங்கை அரசோ, தெற்கின் இனவாதிகளோ, அமெரிக்கர்களோ அல்லது தமிழர் விரோதப் போக்கினைக் கொண்ட ஆனந்த சங்கரி போன்றவர்களோ கூறுவதுபோல இத்தாக்குதல் புலிகளால் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாகவும், இதன்மூலம் சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர் மீதான வன்முறைகளை ஏவிவிடும் நோக்கிலும் இருந்திருக்குமானால், நிச்சயமாக அவர்களின் நோக்கம் ஈடேறப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல் இவை அனைத்திலுமே அரசுதான் பாரிய நண்மைகளை அடைந்திருக்கிறது.
அப்படியானால், புலிகள் இத்தாக்குதலைச் செய்யவேண்டிய தேவை என்ன?
அரசால் புலிகளை இத்தாக்குதலுடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட ஐந்து காரணங்களையும் தொகுத்துப் பார்க்கும்போது, இத்தாக்குதலின் மூலம் புலிகள் பாரிய தோல்வியினையும், அரசு பாரிய பிரச்சார வெற்றியினையும், அனுதாபத்தினையும் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.
சிலவேளை, புலிகளின் உண்மையான நோக்கம் என்னவென்பது பற்றி அரசுக்கு தெளிவான புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். அரசு புலிகளே இதனைச் செய்தார்கள் என்று கூறும் காரணங்களைக் காட்டிலும் இன்னும் வேறு காரணங்களும் இத்தாக்குதலின் பின்னால் இருக்கலாம், அக்காரணங்கள் உண்மையாக புலிகளுக்குச் சாதகமாகவும், அரசுக்குப் பாரிய நெருக்கடியினையும் ஏற்படுத்துவதாக இருக்கலாம், அல்லது அரசு இந்தக் காரணங்கள் பற்றி பேச விரும்பாமல்க் கூட இருக்கலாம் !