பியரையும் ஓட்டத்தையும் பற்றி ஏதோ அரிய தகவல்கள் எழுதப் போவதாக எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி விட்டேன் போல இருக்கு, எனவே எதிர்பார்ப்பு பலூன் பெரிதாகிப் புஸ்ஸென்று காற்றுப் போக முதல்🤣 இதை முடித்து விடுகிறேன்: இவை என் அனுபவமும், சில தரவுகளும் இணைந்தது:
பொறுப்புத் துறப்பு: பியர் - அல்கஹோல் அளவு பொதுவாகக் குறைவாக இருந்தாலும் - ஒரு மதுபானமே. அல்கஹோல் உடல்நலத்திற்குக் கேடு, தவிர்ப்பது ஐடியல், குடிக்காதோர் இதைப் பார்த்துக் குடிக்க ஆரம்பிக்காதீர்கள்!
நெடுந்தூர ஓட்டம் - பியர் தொடர்பு:
அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பின் வழி எடுத்த ஆய்வொன்றில், அனேக நெடுந்தூர ஓட்டப் பிரியர்கள் பியர் பிரியர்களாகவும் இருப்பதாகக் கணித்திருந்தார்கள். என்ன காரணமாக இருக்கும்? நெடுந்தூர ஓட்டம் செய்வோர் அனேகமாக தங்கள் உடல் நலத்தில் அக்கறையுடையோராக இருப்பதால், அதிக அல்கஹோல் கொண்ட ஏனைய மதுபானங்களை விட பியரை நாடுகின்றனர் என்பது ஒரு விளக்கம்.
இன்னொரு விளக்கம் கொஞ்சம் நரம்பியல் தொடர்பானது: நெடுந்தூர ஓட்ட ஆர்வலர்களாக இருப்போர், அவ்வாறு நெடுந்தூரம் ஓடுவதற்கு அவர்களது உடலில் உற்சாகத்தைத் தூண்டும் எண்டோர்பின்கள் (endorphins) சுரப்பு ஒவ்வொரு ஓட்டத்தின் பின்னும் அதிகரிப்பது பிரதான காரணமாக இருக்கிறது (இது தான் ஓட்டத்திற்கு அடிமையாக addiction வருவதற்கும் காரணம்!). பல்வேறு மதுபானங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், பியர் குடிக்கும் போது மட்டும் தான் மூளையில் எண்டோர்பின்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள் (இதனால் தான் எப்போதுமே ஒருவர் ஒரு பியரோடு நிறுத்துவதில்லை - பியர் குடிப்போருக்கு 1 beer = 2 beers 😎; இதன் காரணம் எங்கள் மூளை வெளிப்படுத்தும் reward signal).
இதற்கு பியரில் இருக்கும் திரட்சியான, சிக்கலான சுவை (complex taste) காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் - சுவை மட்டுமன்றி அரோமா எனப்படும் வாசனை, கிளாசில் இருந்தால் அதன் வர்ணம் என்பனவும் காரணமாக இருக்கலாம்!
என் அனுபவம்: பியர் எனக்கு வெகுமதி போன்றது. ஒரு வாரத்தில் போதியளவு ஓடவில்லையானால் அந்த வெள்ளிக்கிழமை பியர் கட்! அதே போல ஒரு வெள்ளிக்கிழமை இரண்டு பியர் எடுத்தால் அடுத்த நாள் ஒரு மைல் கூடுதல் ஓட்டம்! இப்படி வெகுமதி - தண்டனை (reward-punishment) என்ற சக்கரம் தான் என் அனுபவம். ஏனையோருக்கும் இப்படி இருக்கலாம்!
இனி சசியரின் ஒரிஜினல் பதிவு: உடற்பயிற்சி செய்ய பியரோடு வருகின்றனர்!
இதில் ஆரோக்கியப் பிரச்சினை இருக்கிறதா?
இதற்கு என் அபிப்பிரயம் பக்கச் சார்பாகத் தான் இருக்கும், ஆனாலும் தரவுகளோடு தருகிறேன்: ஒரு பியரில் அடிப்படையில் இருப்பவை: கார்ப்-carb (இது தான் கலோரி) , புரதம், அல்கஹோல், விற்றமின்கள், antioxidants எனப்படும் உடலுக்கு நன்மை தரும் பொருட்கள் (இந்த நன்மை தரும் பொருட்களும், விற்றமின்களும் ஏனைய மதுபானங்களில் இருப்பதில்லை என்பதைக் கவனிக்க! - சிவப்பு வைனில் மட்டும் இந்த antioxidants சிறிதளவு உண்டு). கலோரியின் அளவையும், அல்கஹோலின் அளவையும் குறைவாகக் கொண்ட பியர் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானது எனலாம்.
லைற் பியர் வகைக்குள் அடங்கும் லாகர், வியன்னா லாகர், பில்ஸ்னர் ஆகியவை அனேகமாக 5% இலும் குறைந்த அல்கஹோல், கலோரி 100 முதல் 150 இருக்கும் (ஒரு 12 அவுன்ஸ் போத்தலில்) -ஒப்பீட்டிற்குப் பார்த்தால் ஒரு நடுத்தர சைஸ் வாழைப்பழத்தில் 110 கலோரிகள் இருக்கின்றன.
இதுவும் உங்கள் உணவுக்கட்டுப் பாட்டுடன் ஒத்து வரவில்லையென்றால், விசேடமாக டயற்றில் இருப்போருக்கென இப்போது சில 90 கலோரி பியர்களும் இருக்கின்றன.சில கம்பனிகள் ஒரு படி மேலே போய் நெடுந்தூர ஓட்டப் பிரியர்களுக்கென கனியுப்புகள் (electrolytes) நிறைந்த பியர்களையும் உற்பத்தி செய்கின்றனர். எனவே, இவற்றை கடின உடல் உழைப்பின் பின்னர் எடுத்துக் கொள்வது பாரிய ஆரோக்கியக் குறைவைத் தராது!
பியர் வகைகளில் அதிகம் பேர் விரும்புவது (நான் உட்பட) IPA (India Pale Ale) எனப்படும் கசப்பு அதிகமான பியர். ஆனால், இந்த பியரில் கலோரியின் அளவு 200 வரை இருக்கும், அல்கஹோல் அனேகமாக 6% முதல் 8 % வரை இருக்கும்! எனவே IPA டயற்றோடு அவ்வளவு ஒத்து வராது - ஆனால் IPA பியர் வகையின் சுவையை வேறெந்த பியரும் வெல்ல முடியாது!
இன்னும் மேலே போனால், Double IPA, Triple IPA, Belgian Tripel எனப்படும் வகைகள் இன்னும் அதிக கலோரி, அல்கஹோல் கொண்டவை. இது சுவைக்காக அல்லாமல் வெறிக்காக குடிக்கும் வெறிக்குட்டிகள் குடிப்பது!😜
Stout வகையைச் சேர்ந்த கின்னஸ் போன்றவை, அதிக அல்கஹோல் இல்லா விட்டாலும், 300 கலோரிகள் வரை ஒரு 12 அவுன்ஸ் போத்தலில் கொண்டவை - எனவே இவ்வகையை எடுப்பதானால் உடல் எடை கூடுவதைப் பற்றிய கவலையை விட்டு விட வேண்டும்!