கேள்வி : புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
கே பி : முதலாவது, அவர்கள் இங்கிருக்கும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு அவர்கள் "எமக்குப் பால் வேண்டும் " என்று அழுதால் நாம், "சற்றுப்பொறுங்கள், ஐ நா வரும், தீர்வு வரும், அதன் பின்னர் நாம் பால் தருகிறோம்" என்று கூறமுடியாது. நாம் அப்படி பார்த்திருந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள். அவர்கள் தமக்கு இப்போது உணவுவேண்டும் என்றுதான் அழுகிறார்கள். ஆகவே புலம்பெயர் தமிழர்கள் இம்மக்களுக்கான பசியினைப் போக்க உழைக்க வேண்டும். தாயக மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு மீண்டபின்னர் அவர்களுக்கு என்ன தேவையென்று பின்னர் நாம் கேட்கலாம். அதை விடுத்து நீங்கள் வன்னிக்குப் போய் அவர்களிடம் 13 ஆம் திருத்தச்சட்டம் உங்களுக்கு வேண்டுமா என்று கேட்டால், அவர்கள் உங்களை விசனத்துடன் தான் பார்ப்பார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அரிசியும் பாணும் மட்டும் இருந்தால் போதும். புலம்பெயர் தமிழர்களுக்குக் கள யாதார்த்தம் புரியவில்லை. தாயக மக்கள் தமது சொந்தக் காலில் முதலில் நிற்கட்டும், பிறகு மற்றையவை பற்றி யோசிக்கலாம்.
கேள்வி : ஆக, உங்களைப்பொறுத்தவரை பல புலம்பெயர்ந்த நாடுகளில் குடியுரிமை கொண்டவர்களாக, செல்வச் செழிப்போடும், உயர் பதவிகளிலும் இருந்துகொண்டு, இலங்கைக்கு ஒருபோதுமே வர விரும்பாமல், ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட மட்டுமே தமது பணத்தினை வாரியிறைத்த இத் தமிழர்கள், தற்போதாவது தாயக மக்களின் விடயங்களில் தலையிடுவதைலிருந்து விலகி, தாயக மக்களின் மீட்சிக்காக உழைக்க வேண்டும் என்பதுதானே? ?
கே பி : சரியாகச் சொன்னீர்கள். நான் சொல்ல வருவது என்னவென்றால், யுத்தம் முடிந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. எமக்கு முன்னாலிருப்பது ஒற்றை வழிதான். இருப்பதும் ஒரு சந்தர்ப்பம் தான். அதுவே சமாதானத்திற்கான வழியும், சந்தர்ப்பமும். சிங்களவர்களோடு ஒற்றுமையாக இணங்கிச் செல்லும் சமாதானமான வழியே அது.
பல நம்பிக்கயீனங்கள் இருபக்கமும் நிகழ்ந்துள்ளன, எமக்கிடையே நூற்றாண்டுகளாக கசப்புணர்வுகள் இருக்கலாம். அரச நிர்வாகம் என்பது பொதுவாகவே குறைந்த வேகத்துடன் தீர்வுகளைத் தருவது. எமக்கான சில தீர்வுகள் கிடைக்க காலம் எடுக்கலாம். ஆனால், எமக்கு வேறு வழியில்லை. அமைதியாகவும் பொறுமையாகவும் நாம் பயணிக்கும்போதுதான் எமக்கான தீர்வுகளை நாம் பெறமுடியும். உங்களுக்கு முன்னாள் அமைச்சர் தொண்டைமானைத் தெரிந்திருக்கும். அவர் அமைதியாகவும், பொறுமையாகவும் பல்லாண்டுகள் காத்திருந்துதான் தனது மக்களில் ஒரு லட்சம் பேருக்கு வாக்குறிமையினைப் பெற்றுக்கொடுத்தார். அதுபோல நாமும் பொறுமையுடனும், அமைதியாகவும் காத்திருக்க வேண்டும்.
தொண்டைமானுடன் பேசுவத்ற்கு எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் என்னிடம் கூறும்போது, "உங்கள் மக்கள் எல்லோருமே நன்றாகப் படித்தவர்கள். ஆனால், உங்களிடம் நல்ல தலைவர்கள் இல்லை. உங்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய தலைவர்களில்லை" என்று கூறினார். எமக்கு விட்டுக்கொடுத்துச் செல்லக்கூடிய, நெகிழ்ச்சியான தன்மையுடைய, சமரசம் செய்யக்கூடிய தலைவர்கள் வேண்டும். ஆனால், அப்படியான தலைவர்கள் இல்லாமலிருப்பதே எமக்குப் பெரும் பிரச்சினையாக தொடர்ந்து வருகிறது..
எதிர்மறையான உணர்வுகள் ஒருபோதுமே எமக்கு நண்மை பயக்கப்போவதில்லை. ஆம், எமக்கு ஒரு போர் நடந்ததுதான், மக்கள் கொல்லப்பட்டார்கள்தான். ஆனால் அது ஒரு 100 வருடகாலப் பிரச்சினை. ஆகவே அதனைத் தீர்ப்பதற்கு எமக்கு நியாயமான காலம் தேவை.
நான் புலம்பெயர் தமிழர்களின் விடயத்திற்கு மீண்டும் வருகிறேன். நான் அவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வருகிறேன். 90 வீதமான புலம்பெயர் தமிழர்கள் மிகவும் நல்லவர்கள். பலர் இங்கே பிறந்தவர்கள், சிலர் புலம்பெயர் நாடுகளில் பிறந்திருக்கலாம். ஆனால், இங்கிருக்கும் தமது உறவுகள் குறித்து அவர்கள் அதீத கரிசணை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த மக்களுக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.
எனக்கு முன்னாலிருக்கும் பிரச்சினை என்னவென்றால், இன்னமும் தீவிரவாத எண்ணம் கொண்டு அலையும் அந்த 10 வீதத் தமிழர்கள் தான். அவர்களே தாயகத் தமிழர்களுக்கு பாரிய நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார்கள்.