பார்வை ஒன்றே போதுமே..... ( 4).
உறவினரா என்று சோமு கேட்க ஒரு வினாடி சுதாகரித்த முத்து, ம்....அப்பா வழியில் சொந்தம் என்று சொல்லி விட்டு அவரை தன்னோடு அழைத்துச்சென்று தான் வேலை செய்யும் இடத்தில் இருத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று சூடாக பால்தேனீரும் வடையும் வாங்கி வந்து அவருக்கும் குடுத்து தானும் சாப்பிட்டான். பின் வாடிக்கையாளர்கள் வர வர முத்துவும் வேலையில் மூழ்கி விட்டான். அவன் வேலை செய்யும் வேகத்தையும் லாவகத்தையும் பணம் வாங்குவதும் மிகுதியை குடுப்பதுமாக அவனது சுறு சுறுப்பைப் பார்த்த சாமிநாதனுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது.தன்னையறியாமல் அவனுக்கு கூடமாட எல்லா உதவிகளையும் செய்கிறார். மத்தியானம் அவருக்கும் சேர்த்து முத்து சாப்பாடு வாங்கி வர இருவரும் சாப்பிடுகின்றனர். இரவு இருவரும் ஒன்றாக வீட்டுக்கு வருவதைக் கண்ட மகேஸ்வரி ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்கிறாள்.அப்போது முத்து காலையில் இருந்து நடந்ததை தாயிடம் சொல்கிறான்.
நாட்கள் மாதங்களாக உருண்டோடுகின்றன.சாமிநாதனும் இப்போது அவர்களில் ஒருவராகி விட்டார். அவரும் செருப்பு தைக்கும் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு விட்டார். அதனால் முத்துவும் இவரை அங்கே விட்டு விட்டு தான் வீடுகளுக்கு பேப்பர் போடுதல், டிப்போவில் இருந்து பால் வீடுகளுக்கு மற்றும் கடைகளுக்கு எடுத்து சென்று குடுத்தல் போன்று வேறு சில வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். சாமிநாதனின் வழிகாட்டலில் அந்தக் குடும்பம் மாணிக்கம் பட்ட கடன்களை அடைத்துக் கொண்டே வந்தது. முத்து சாமிநாதனுக்கு பணம் தர முற்பட்டபோதும் அவர் வாங்கவில்லை.மறுத்து விட்டார். ஆயினும் மகேஸ்வரி அவருக்கென்று ஒரு சிறு தொகையை தனியாக சேமித்துக்கொண்டு வருகிறாள். அவரது ஊர் மற்றும் குடும்பம் பற்றி எதுவும் தெரியாததால் நாளைக்கு ஒரு பிரச்சினை மனக் கசப்பு வரக்கூடாது என்று அந்தச் சேமிப்பு. அதில் அவள் உறுதியாய் இருக்கிறாள். சித்ராவும் பரீடசைகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி இருந்தாள். இப்போது அவர்களின் கையில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பணமும் சேர்ந்து கொண்டிருந்தது. கூடவே மகேஸ்வரியையும் சாமிநாதனையும் இணைத்து வதந்திகள் அக்கம் பக்கம் எல்லாம் பரவி எல்லோரும் கதைத்து மகிழ்ந்து அலுத்து அது அப்படியே புஷ்வாணமாகிப்போய் அந்தக் குடும்பத்துக்கென்று ஒரு கௌரவமும் மதிப்பும் உண்டாகியிருந்தது.
சாமிநாதன் வீட்டுக்கு வெளியே திண்ணையில் இருக்கும் கட்டிலில் படுத்தபடி வானத்தைப் பார்க்கிறார். நல்ல நிலா வெளிச்சமாக இருக்கிறது. நினைவுகள் பின்னோக்கி நகர தான் வீட்டை விட்டு கிளம்பிய அன்றும் இப்படித்தான் நிலவு எறித்துக் கொண்டிருந்தது. அன்று மாலை தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார்.அங்கு அவர் மனைவி ரேகா இல்லை. கைபேசியில் அழைத்தும் அழைப்பில் இல்லை. வேலைக்காரியிடம் கேட்ட பொழுது அம்மா வெளிக்கிட்டுக்கொண்டு கிளப்புக்கு சென்றிருப்பதாக சொன்னாள். காத்திருந்தார் வரவில்லை.நேரம் நள்ளிரவாகிக் கொண்டிருந்தது. காரை எடுத்துக் கொண்டு அவள் வழக்கமாகப் போகும் கிளப்புக்கு போனார்.ஹோலில் இருந்த கூட்டத்தில் ரேகா இல்லை.எங்கு போயிருப்பாள் என்று யோசித்துக் கொண்டு மதுவுக்கு ஓடர் குடுத்து விட்டு காத்திருக்கும் பொழுது அவள் ஆடைகள் விலகிய நிலையில் ஓர் அந்நிய ஆணின் அணைப்பில் போதையில் தள்ளாடியபடி மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். சாமிநாதனுக்கு கோபத்தில் கண்கள் எல்லாம் சிவந்து அங்கேயே அந்த இடத்திலேயே அவர்கள் இருவரையும் கொன்று விடலாம் போலத் தோன்றியது. எதுக்கும் வீட்டுக்கு வரட்டும் என்று நினைத்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். உள்ளே கோபம் தணலாக எரிந்து கொண்டிருந்தது. மேசை லாச்சியைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்து அதில் ரவைகளைப் போட்டு தயார் நிலையில் வைத்துவிட்டு "குட்டி போட்ட பூனைபோல்" அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்......!
பார்ப்போம் இனி.........! ✍️