பார்வை ஒன்றே போதுமே..........( 6 ).
சாப்பிட்டுவிட்டு எழுந்த சாமிநாதன் கை கழுவிவிட்டு தான் படுக்கும் கட்டிலின் கீழேயிருந்த பெட்டியை எடுத்து அதனுள் இருந்து ஒரு கைபேசியை எடுத்து சித்ராவிடம் கொடுக்கிறார். இதைப் பார் சித்ரா இது உனக்கு உபயோகப்படுமா என்று. இது விலை கூடிய ஆப்பிள் போன் ஐயா. இப்போதைக்கு என்னால் நினைத்தும் பார்க்க முடியாது. என்கூட படிப்பவர்களில் ஓரிருவர் வசதியானவர்கள் மட்டும் வைத்திருக்கினம். இதில் எல்லா வேலைகளையும் செய்யலாம் என்கிறாள்.
அப்படியா சரி அதை நீயே வைத்துக்கொள்.
அப்போ உங்களுக்கு ....எனக்கு முத்து வைத்திருக்கும் அந்த போனே போதும். அது ஒருமுறை சார்ஜ் போட்டால் ஒருவாரத்துக்கு மேல் சார்ஜ் இருக்குமாம்.யாரோ சொன்னார்கள். அவனும் புதிதாக நல்லதாக ஒன்று வாங்கிக் கொள்ளட்டும் என்கிறார். சித்ராவும் முத்துவும் ஓடிப்போய் அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள மகேஸ்வரியின் கண்களில் நட்பையும் மீறிய ஒரு சுடர் தெரிகின்றது.
பிள்ளைகள் சும்மா பகிடியை விட்டுட்டு ஐயா சொல்லுறதை கவனமாக கேளுங்கோ. எனக்கும் முன்னம் இப்படி ஒரு யோசனை வரவில்லை. முத்து வீட்டு செலவுகள் பற்றி நீ யோசிக்காத. என்னிடமும் கொஞ்சப் பணம் இருக்கு. எங்கட வயலும் நல்லா விளைஞ்சிருக்கு, அறுவடை செய்து வித்தால் அதிலும் காசு வரும் சமாளிக்கலாம் என்று மகேஸ்வரி சொல்லிவிட்டு என்கூடப் படித்த பார்வதிதான் இப்ப கல்லூரி உப அதிபராக இருக்கிறா அவவிடம் சொன்னால் ஏதாவது செய்வா என்கிறாள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமன்றோ" முத்துவும் அரை மனதுடன் படிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறான். இந்த விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்கியதும் அவன் சேர்ந்து விடுவான்.
காலம் எதற்காகவும் காத்திருப்பதில்லை. சித்ரா வக்கீல் படிப்பை எடுத்துக் கொண்டு படிக்க, முத்து பிஸினஸ் மேனேஜ்மண்ட் பற்றி படித்துக் கொண்டு வருகிறான். ஒருவர் பின் ஒருவராக இருவரும் தங்களது படிப்புகளை முடித்து பட்டங்கள், சான்றிதழ்களுடன் வெளியே வருகின்றார்கள். சித்ராவுக்கு சாமிநாதன் சங்கிலியையும், முத்துவுக்கு தனது கைக்கடிகாரத்தையும் பரிசாகக் கொடுக்கிறார்.அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் அவர் வற்புறுத்தி அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்.
அன்று நடந்தது, கோபத்தில் சாமிநாதன் அந்த கிளப்பை விட்டு சென்றபின் ரேகா தள்ளாடியபடி ஒரு இளைஞனின் அணைப்பில் கவுண்டருக்கு வருகிறாள். அவளிடம் விடுதி மானேஜர் வந்து ரேகாம்மா சற்று முன்புதான் உங்கள் கணவர் இங்கு வந்து உங்களை விசாரித்து விட்டு சென்றார் என்று சொல்ல,அதைக் கேட்டதும் ரேகாவுக்கு போதை சட்டென்று குறைந்து விட்டது. இப்போ அவர் எங்கே எனக் கேட்டாள். அவர் உள்ளேதான் எங்காவது இருப்பார் என நினைக்கிறேன் என்று அந்த மானேஜர் சொன்னார்.ரேகாவும் ஒவ்வொரு மேசையாக அவரைப் போய்த் தேடியும் அவரைக் காணவில்லை. அப்போது அவளுடன் பொழுதைக் கழித்த அந்த வாலிபன் இன்னொரு நடுத்தரவயசுப் பெண்ணை அணைத்தபடி வந்து என்ன ரேகாம்மா பதட்டமாய் இருக்கிறீங்கள் ஏதாவது பிரச்சினையா என்று கேட்க ....ம் .....பிரச்சினை போலத்தான் இருக்கு. சற்று முன் எனது கணவர் இங்கு வந்திருக்கிறார் போல, என்னை உன்னுடன் சேர்த்து பார்த்திருப்பாரோ என்று சந்தேகமாய் இருக்கு. எதுக்கும் நீயும் கவனமாய் இருந்துகொள்.
அவனோ சந்தேகமே வேண்டாம் மேடம். நாங்கள் மாடியில் இருந்து இறங்கி வரும்போதே அவரை நான் பார்த்தேன். அவரும் எங்களைப் பார்த்தார். அதன்பின் அவர் கோபமாக எழுந்து சென்றதையும் நான் பார்த்தேன்.
ஓ...ஷிட் .....என்று புறுபுறுத்தவள், ஏன் நீ இதை எனக்கு முதலே சொல்லவில்லை என்று கடிந்து விட்டு வெளியே ஓடிவந்து ட்ரைவர் சுந்தரத்தை அழைக்க அவனும் பிடித்துக் கொண்டிருந்த சிகரட்டை கீழே போட்டு மிதித்து விட்டு ஓடிவந்து என்னம்மா என்றான்.
முட்டாள் உனக்கு எத்தனைதரம் சொல்வது சிகரெட் பிடித்து விட்டு என்முன்னே வராதே என்று, கொஞ்ச நேரத்துக்கு முன் ஐயாவைப் பார்த்தாயா, அவர் இங்கு வந்திருந்தாரா என்று கேட்டாள்.
அவர் வந்திருக்க வேண்டும். அவரது கார் அங்கு நின்றதைப் பார்த்தேன் ஆனால் அவரைக் காணவில்லை.
சரி ....கெதியா வண்டியை எடு வீட்டுக்கு போகலாம் என்றாள்.
வீட்டுக்குள் ஓடிச்சென்றவள் அவசரமாக தங்களது அறைக்கு சென்று பார்த்தாள்.அங்கே சாமிநாதன் இல்லை.கட்டிலில் அவர் கந்தோருக்கு கொண்டுசெல்லும் கணனிக் கைப்பை கிடந்தது...........!
பார்ப்போம் இனி........! ✍️
( அன்புள்ளங்கள் நீங்கள் தரும் ஊக்கத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்).