குட்டிமணி
1973 ஆம் ஆண்டு அவர் பயணித்த படகிலிருந்து டெட்டனேட்டர்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதையடுத்து குட்டிமணி தமிழ்நாட்டில் கைதானார். இந்தியாவின் வெடிபொருள் மற்றும் கடவுச்சீட்டு சட்டங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இலங்கையில் அரசுக்கெதிரான பழிவாங்கும் தாக்குதல்களை குட்டிமணி திட்டமிட்டிருந்தார் என்கிற இலங்கையரசின் அறிவிப்பினை ஏற்றுக்கொண்ட அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சரான திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், முத்துவேல் கருனாநிதி, இலங்கை அரசு கேட்டுக்கொண்டதன்படி குட்டிமணியை இலங்கைக்கு நாடுகடத்த ஒப்புக்கொண்டார். இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட குட்டிமணி சிலகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வந்திறங்கிய தங்கத்துரை தனது இயக்கத்தின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தார்.
1975 ஆம் தைமாதம், மூன்றாவது அமைப்பொன்று உருவாக்கப்பட்டது. லண்டன் நகரில், தொடர்மாடிக் குடியிருப்பில் இடம்பெற்ற பல சம்பாஷணைகளின் விளைவாக இளையதம்பி இரத்திணசபாபதி மற்றும் அருளர் எனப்படும் அருட்பிரகாசம் ஆகியோர் இணைந்து இந்த மூன்றாவது அமைப்பினை உருவாக்கினர். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது தமிழரின் பிரச்சினையை உலகறியச் செய்வதுதான். இவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் 1975 ஆம் உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற நகரங்களான இங்கிலாந்தின் ஓவல் மைதானம் மற்றும் மஞ்செஸ்ட்டர் மைதானம் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், ஒருசிலர் இலங்கையில் சிங்கள அரசு தமிழர் மேல் புரிந்துவரும் அட்டூழியங்களை பதாதைகளில் எழுதி, அவற்றினைக் கைகளில் உயரப்பிடித்தவாறு மைதானத்தின் குறுக்கே ஓடினர். இவ்வமைப்பின் கிளையொன்று யாழ்ப்பாணத்திலும் திறக்கப்பட்டதோடு, 1976 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் வவுனியா கண்ணட்டி பகுதியில் இவ்வமைப்பின் இராணுவப் பயிற்சி முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
இன்னுமொரு ஆயுத அமைப்பொன்று 1975 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு, சுமார் 40 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பினர்களுக்கு பலவிதமான அரசியல்க் கொள்கைகள் இருப்பினும், ஒரு அமைப்பாக அமிர்தலிங்கத்தின் கீழ் இவர்கள் செயற்பட்டனர். இந்த அமைப்பில் இருந்த இடதுசாரி கொள்கையுடைய பல உறுப்பினர்கள் தமிழர் ஐக்கிய முன்னணியினரிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக்கொள்வதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப்பொறுத்தவரை தமிழ் அரசியல்வாதிகள் உதட்டளவில் மட்டுமே தமிழர் நலன்குறித்துப் பேசுபவர்களாகவும், பாராளுமன்ற பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் அரசியல் செய்பவர்களாகவுமே தெரிந்தனர். ஆகவே, தமிழ் இளைஞர் பேரவை என்பது, இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை விலத்தி, செயற்றிறன் மிக்க, சமூக மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அத்துடன் தமிழர் ஐக்கிய முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட சாதி ஒழிப்புக் கோஷம் பொய்யானது என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த வாதப் பிரதிவாதங்களின் விளைவாக தமிழ் இளைஞர் பேரவை 1975 ஆம் ஆண்டு ஆனி மாதம் இரு பிரிவுகளாக உடைந்தது. அதன்படி மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் ஆகியோர் தலைமையில் ஒரு பிரிவு தொடர்ந்தும் தமிழர் ஐக்கிய முன்னணியோடு செயற்பட, முத்துக்குமாரசாமி மற்றும் வரதராஜப்பெருமாள் தலைமையிலான மற்றைய பிரிவு பிரிந்துசென்று ஈழம் விடுதலை இயக்கம் எனும் அமைப்பினை உருவாக்கியது.
துரோகிகளை அழித்தல்
சிவாகுமாரனினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட, சிறிமாவின் தமிழ் முகவர்களான துரோகிகளைக் கொல்லும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க பிரபாகரன் முடிவெடுத்தார். 1975 ஆம் ஆண்டு, தமிழ் மக்கள் தனிநாட்டிற்கான ஆணையினை தந்தை செல்வாவிற்கு வழங்கிய அதே காலப்பகுதியிலேயே தமிழினத்தின் துரோகிகளை கொல்லும் முடிவினை பிரபாகரன் எடுத்திருந்ததாக அந்நாட்களில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பிலிருந்த உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனது அமைப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பிரபாகரன் தனது முடிவிற்கான காரணம்பற்றி தெளிவாக விளக்கியிருந்ததாகவும் கூறினார்.
இந்தக் கலந்துரையாடல்களில் இலங்கைத் தமிழரின் சரித்திரப் பெருமைபற்றி பிரபாகரன் பரவசத்துடன் பேசியிருக்கிறார். குறிப்பாக யாழ்ப்பாண ராஜ்ஜியம் பற்றியும், போர்த்துக்கேயரிடம் அது வீழ்ச்சியுற்றது பற்றியும், பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தமிழ்த் தலைவர்களின் அசமந்தத்தினால் தமிழரின் இறையாண்மை சிங்களவரிடம் அடகுவைக்கப்பட்டதுபற்றியும் உணர்வுபொங்க அவர் பேசியிருக்கிறார். மேலும், காங்கேசந்துறை இடைத்தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை தமிழ் மக்கள் வழங்கியது குறித்துப் பேசிய பிரபாகரன், மக்கள் ஆணையின்படி இழக்கப்பட்ட தமிழரின் இறையாண்மையினை மீளப்பெற்றே தீருவோம் என்று முழங்கியதாகவும் கூறுகிறார்.
"இந்த உன்னதமான கடமை எமது தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இலகுவான காரியமல்ல. மிகவும் கடுமையானதாகவும் நீண்டதாகவும் இது இருக்கப்போகிறது. ஆனால், நாங்கள் இதனை செய்துமுடிப்போம்" என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்.
பிரபாகரனுக்கு அப்போது 20 வயதே ஆகியிருந்தது. அவரது வழிநடத்துதலின் கீழ் 30 போராளிகள் செயற்பட்டுவந்தனர். அவரிடமிருந்த ஆயுதங்கள் இரு கைத்துப்பாக்கிகள் மட்டுமே. ஒன்று வெளிநாட்டில் செய்யப்பட்டது, மற்றையது உள்நாட்டுத் தயாரிப்பு. வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் தனது பயிற்சிமுகாமினை அமைத்திருந்த பிரபாகரன் தனது தோழர்களுக்கு துப்பாக்கியை நேராகச் சுடும் பயிற்சியை வழங்கிவந்தார்.
தமது நள்ளிரவு கலந்துரையாடல்களில் தமது முதலாவது ராணுவ நடவடிக்கையின் இலக்கினை தெரிவுசெய்தார்கள். அவர்தான் யாழ் மேயர் அல்பிரெட் துரையப்பா.
அது அமைப்பின் உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவு. தமது இலக்கு யாரென்பதைத் தெரிவித்த பிரபாகரன், அதற்கான காரணத்தையும் உறுப்பினர்களுக்கு விளக்கினார். அதில் முதலாவது குற்றச்சாட்டு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழர் மாநாட்டில் நடந்த படுகொலைகளில் துரையப்பா ஆற்றிய பங்கு. இரண்டாவது குற்றச்சாட்டு, தமிழாராய்ச்சி மாநாட்டின் படுகொலைகள் முடிந்த கையோடு, யாழ்ப்பாணத்தில் சிறிமாவுக்கு வரவேற்பளிக்க மக்களை பலவந்தமாகத் திரட்ட அவர் எடுத்த முயற்சிகள். மூன்றாவது குற்றச்சாட்டு, சிறிமாவின் அரசுக்கு ஆதரவான தளம் ஒன்றினை தமிழர்களிடையே ஏற்படுத்துவதற்கு துரையப்பா செய்துவந்த நடவடிக்கைகள்.
வரதராஜப் பெருமாள் கோயில், பொன்னாலை யாழ்ப்பாணம்